11
ஸ்ரீராமை பிரிந்து வந்த நீலாம்பரி அழுதது என்னவோ அந்த ஒரு இரவு மட்டுமே!! என்ன தான் இந்த கீசாவினால் அவளது திருமண பந்தம் ஏற்பட்டு இருந்தாலும் மனதின் ஒரு மூலையில் அவன் மீது இருந்த அந்த ஈர்ப்பு, திருமணமான பின்பு வழக்கமான மஞ்சள் கயிறு மேஜிக்கினால் "இனி அவனே வாழ்க்கை" என்று முடிவு எடுத்து ஸ்ரீராமனை தன்னவனாகவே நினைக்க தொடங்கினாள்.
அதுவும் திகட்டத் திகட்ட அவன் காதல் செய்யும் போது, கீசாவின் கட்டினால் என்றாலும் அந்த தருணம்.. நீலாம்பரியின் இள மனதில் அவனின் அந்த கனிந்த முகமும், காதல் பொங்கும் கண்களும், ஆசை பொங்கும் வார்த்தைகளும் கண் முன் மின்னி மின்னி மறைந்தன..
முதல் இரண்டு மாதங்கள் அவள் கண்களில் இருந்து கண்ணீரே வரவில்லை என்றாலும் மனது ரணமாக வலித்தது. அடுத்து என்ன? என்ன? என்று புரியாமல் மனம் முழுவதும் ஒரே குழப்பம்.. அவளால் முன்னைப்போல் பூஜை குறி என்று எதுவுமே பார்க்க முடியவில்லை. குறி சொல்வதில் பல தில்லுமுல்லுகளை ஜாலங்களை அவள் செய்தாலும்.. பூஜை செய்யும் போது அந்த அம்மனை நினைத்து மனதார பூஜை செய்வாள். இப்போதெல்லாம் அவளின் குலதெய்வம் பத்ரகாளியம்மன் முன் கண்ணை மூடி அமர்ந்தால், முறுக்கு மீசையுடன் வேட்டியை கையில் பிடித்தபடி உலா வரும் அவளின் கிராமத்து காளையே வந்து கண்ணடித்தான். அதற்குப் பின் எங்கிருந்து பூஜையில் மனம் செல்ல..
அந்த இரண்டு மாதங்களும் நீலாம்பரியை நீலவேணி பார்த்துக்கொண்டாள் என்றால், அவர்கள் ஒட்டுமொத்த குடும்பத்தையும் பார்த்துக் கொண்டது மருதுவே.. பள்ளி விடுமுறை விட்டுயிருக்க முழு நேரமும் மாவு மில்லுலேயே பழியாக வேலை செய்தான். அக்காவை காணும்போதெல்லாம் எப்படி மிடுக்குடன் இருந்தவள் இன்று ஓய்ந்துபோய் இருப்பதைக் கண்டு அவனுக்கு உள்ளுக்குள் அவ்வளவு வலித்தது.
தந்தை சரியில்லை என்றால் அக்குடும்பத்தில் உள்ள பிள்ளைகளின் தலைகளில் தான் மொத்த பாரமும்!! இவ்வளவு நாட்களாக நீலாம்பரியின் உழைப்பால் இவர்கள் இருவரும் எந்த வலியும் தெரியாமல் இருந்து விட.. இந்த இரண்டு மாதமும் நீலாம்பரி சம்பாத்தியம் இல்லாததால் முற்று முழுதாக புரிந்தது அக்காவின் அருமை!!
இரண்டு மாதங்களுக்கே நமக்கு இவ்வளவு கஷ்டமாக இருக்கிறதே? நமக்கு விவரம் தெரிந்த நாள் முதல் நீலாம்பரி தானே குடும்பத்தை தாங்கினாள் என்று நினைத்தவர்களுக்கு மனதில் இன்னும் வலிமை ஏறியது.
வலி!! வலி!! அந்த வலியே வலிமையாக மாறியது அவனுக்கு.. கூடவே நம்மை கேவலப்படுத்தி அனுப்பிய அந்த குடும்பத்தின் முன் தலைநிமிர்ந்து வாழவேண்டும் என்ற வைராக்கியமும்!!
அதில் இரண்டு மாதங்கள் அக்காவை அவள் போக்கில் விட்டவர்கள் அதற்குப் பின் அவளை தேற்ற முயற்சி செய்தார்கள்.
ஒரு நாள் சாப்பிடாமல் மோட்டு வளையை பார்த்து கொண்டு அமர்ந்து இருந்தவளை கண்ட இருவருக்கும் மனது வலிக்க.. கையிலிருந்த சட்டியை அவள் முன்னால் போட்டு உடைத்தான் மருது!! அவள் அதிரந்து நிமிர்ந்து பார்க்க..
"ஏன்கா.. ஏன் இப்படி இருக்க.. தில்லா கர்வமா நிமிர்வா இருந்த என்ற அக்கா நீலாம்ரியா நீயு? நீயு இப்படி இருக்கிறத பாக்க எங்களுக்கு மனசு வலிக்குதுகா. நீயு பழையபடி மாறனும். அந்த ஆளோட வாழ்க்கை முடிஞ்சு போகல.. அதை தாண்டியும் இருக்கு. உனக்கு நானும் வேணியும் இருக்கோம். நீயு இப்படியே இருந்து உன்ன நெனச்சி நாங்களும் சாப்பிடாம கொள்ளாமல் இருப்போம் பரவாயில்லையா? இதற்காகத்தான் இத்தனை வருஷமா நாம கஷ்டப்பட்டோமா?" என்று அவன் கேட்க..
அவன் சொன்னவுடன், அப்போதுதான் புரிந்தது நீலாபரிக்கு. இரண்டு மாதங்களாக அதனுள்ளேயே உழன்றவள் அதையெல்லாம் விடுத்து தன் தம்பி தங்கைகளுக்காக பழைய நீலாம்பரியாக நிமிர்வோடு எழுந்தாள்.
"இரு வரேன்" என்றவள், முதலில் போய் குளித்து தன்னை சீர்படுத்திக் கொண்டாள்.
மனதில் ஏற்படும் அழுத்தம் அவள் உடம்பையும் தோற்றத்தையும் மாற்றி இருக்க அதை முதலில் மாற்றினாள்.
பழைய நீலாம்பரியாக உடையில் தெரிந்தாலும் கண்களில் அந்த பழைய உயிர்ப்பில்லை..
நிமிர்வு இருந்தாலும் முன்னே இருந்த அந்த அலட்சியம் இல்லை..
தம்பி தங்கை அழைத்தவள்,"இனி நாம எந்த ஊர்ல இருக்க வேணாம். இந்த தொழில நான் இனிமேல் செய்யப் போறது இல்ல.. முதல்ல வேற ஊருக்கு போவோம்" என்றாள் ஒரு முடிவோடு..
அதற்குப் பின் அவர்கள் பொள்ளாச்சி பக்கத்திலேயே இல்லை.. எந்தவித தொடர்பும் யாரிடமும் இல்லாமல் குடியிருந்த வீட்டை விற்று விட்டு இரவோடு இரவாக தேனி அருகே ஒரு கிராமத்துக்கு வந்து குடிபெயர்ந்தனர். குடித்து மட்டையாகி இருந்த அப்பாவையும் பொருட்களோடு பொருட்களை லாரியில் தூக்கி போட்டுக்கொண்டு, படுக்கையில் இருந்த அப்பத்தாயையும் அழைத்துக் கொண்டு மூவரும் யாருமற்ற அநாதைகளாக தங்கள் தன்னம்பிக்கையே ஆயுதமாக வைத்துக்கொண்டு வந்தனர்.
முதலில் என்ன தொழில் செய்யலாம் என்று யாருக்கும் ஒன்றும் பிடிபடவில்லை. காசு வைத்திருந்ததை பார்த்தால் கண்டிப்பாக அவர்களின் அப்பா எடுத்து இங்கேயும் குடித்துவிடுவார் என்று நினைத்தவள், என்ன செய்யலாம் என்று மருதுவை கேட்க.. அப்போது மருது "நீயு யோசி அதுவரைக்கும் பக்கத்துல எதாவது மாவுமில் இருந்தா நான் வேலைக்கு போகிறேன்" என்று அவன் சொல்ல..
அவனோடு நீலாவும் போக, "அக்கா நீயு வேணாம்" என்றவனை "இல்ல மருது!! நானே இந்த வேலையை பார்க்கோனும்" என்று விடாப்பிடியாக அவனோடு ஆறு மாதமும் அந்த வேலைக்கு சென்றாள்.
கழுத்தில் தாலியோடு இருந்தவளை ஊரார் கேட்கும் கேள்விக்கெல்லாம் கணவன் வெளிநாட்டில் வேலை பார்ப்பதாக.. துபாய்.. துபாய் குறுக்கு சந்து என்றே பதிலளித்தாள்.
பொதுவாகவே நீலாம்பரிக்கு கற்பூர புத்தி எந்த ஒரு தொழில் அவள் செய்தாலும் அதை நுட்பமாக அறிந்து கொள்ளும் நுண்ணறிவு!! மருது வேலையாக மட்டும் செய்ததை இவள் தொழிலாகவே கற்றுக்கொண்டாள்.
அடுத்த ஆறு மாதமும் அந்த தொழிலின் நெளிவு சுளிவுகளை கற்று தேர்ந்தாள்.
அவர்கள் இருந்த வீட்டின் அருகிலேயே இடத்தை லீசுக்கு எடுத்து புது மாவுமில் ஒன்றை ஆரம்பித்தாள்.
சாதாரண நேரங்களில் மந்தமாக இருக்கும் மூளை, வைராக்கியம் என்ற சாத்தான் புகுந்து விட்டால், பேயாய் உழைக்க ஆரம்பித்து விடும். அது போல தான் நீலாம்பரி தன் உடல்நிலையை எல்லாம் கணக்கில் கொள்ளவில்லை.. வேலை!! வேலை!! வேலை!! உண்ணாமல் உறங்காமல்
ஓய்வு எடுக்காமல் வேலை செய்தாள்.
அவர்கள் மாவுமில்லுலேயே சிறுதானியங்களை அரைத்து சிறு சிறு பாக்கெட்டுகளாக போட்டு அதையும் தனியாக கடை அமைத்து வேணியை அமரவைத்து வியாபாரம் செய்தாள்.
இதற்கிடையில் அவர்களது அப்பத்தாவும் இயற்கை எய்த்து விட அன்று முழு மட்டையாகி இருந்தவரை பிள்ளைகள் காரி உமிழாத குறை தான்..
அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக தனது குடியை குறைத்துக்கொண்டார் முழுவதுமாக நிறுத்தவில்லை. ஆனாலும் அவரை நீலாம்பரி நம்பவில்லை. எப்ப வேணாலும் காசை எடுத்துக்கொண்டு டாஸ்மாக்கில் கரியாகி விடுவார் என்பது தெரிந்ததே!!
இப்படியாக ஒரு வருடம் சென்றுவிட..
நல்லா'ஸ் என்ற பெயரில் இவர்களது சிறுதானிய வகைகள் மிகவும் பிரபலமானது.
மில்லை சற்று விஸ்தாரமாக்கி, அதில் இன்னும் ஆட்களை வேலைக்கு வைத்து அதைப் பார்த்துக் கொண்டார் இப்போது இரவில் மட்டுமே குடிக்கும் இவர்களது தந்தை பரஞ்சோதி.
மருது இப்பொழுது ஸ்கூல் படிப்பை முடித்திருக்க.. ஈவினிங் காலேஜ் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்துகொண்டே அக்காவுக்கு உதவியாகவும் இருந்தான்.
விவசாயிகளிடமிருந்து நேரடியாக சிறு தானியங்களை வாங்கி, அதுவும் ஆர்கானிக் பொருட்களாகவே வாங்கி ஏற்றுமதி செய்ய இப்பொழுது ஆரம்பித்திருந்தார்கள் நல்லா'ஸ் குடும்பம்.
ஒரு வருடத்திற்கு மேலாகியும் கீசா தனது கூட்டிலிருந்து சற்றும் வெளிவரவில்லை. அவர்களுடைய லோகத்திலேயே இருந்தாலும் தனக்குள்ளாகவே கட்டமைத்து அதற்குள்ளாக இறுகி இருந்தது.
மோகினியோ கொஞ்சமும் தன்னுடைய விடா முயற்சியை விடாமல் தொடர்ந்து கீசாவை வெளிவர முயற்சித்துக் கொண்டிருந்தது.
ஒருவழியாக கீசாவின் மனமும் மோகினி பால் ஈர்க்க.. தன் கூட்டை விட்டு வெளியே வந்த கீசா மோகினியை காதலோடு பார்த்தது.
இதை சற்றும் எதிர்பார்க்காத மோகினி ஆனந்ததில் கண்களில் நீர் வழிய கீசாவையே பார்த்துக் கொண்டிருந்தது. எத்தனை வருட தவம்.. ஒரு மனதாக.. ஒருதலைக் காதலாக.. கீசாயை எண்ணி எண்ணி வாழ்ந்து கொண்டிருந்த மோகினியின் தவத்திற்கு பயனாய் இதோ கீசாவின் கண்களில் காதல்!!
"கீஷ் குட்டி நெஜமாவே இது நீதானா? என்னால் நம்பவே முடியவில்லை!!" என்று வார்த்தை வராமல் திக்கி திணறி மோகினி கேட்க..
"உண்மைதான்.. இப்பத்தான் உன்னுடைய மனதும் எனக்கு புரிஞ்சிருக்கு. இனி நாம ஒன்னாவே வாழலாம்" என்று கீசா மோகினியின் கையை பிடிக்க..
அடுத்த நிமிடம் தன் கூரிய பற்களால் கீசாவின் கழுத்தில் கடித்து வைத்திருந்தது மோகினி. கீசாவோ அலறித் துடித்து "அடிப்பாவி!! பாதகத்தி!! நான் உனக்கு என்னடி பாவம் பண்ணினேன்.. அதான் காதல ஒத்துக்கிட்டேனடி. அதுக்குன்னு இப்படியா கடிச்சி வைப்ப?" என்று தன் கழுத்தில் இருந்து வழிந்த ரத்த சொட்டுக்களை பார்த்தவாறு அது கேட்க..
"என்ன கீஷூ.. ரொம்ப நாள் பூலோகத்திலே இருந்ததுனால நம்மளுடைய வழக்கம் எல்லாம் உனக்கு மறந்து போச்சா?"
என்று கண்கள் விரிய மோகினி கேட்க..
'புதுசு புதுசா என்னமோ பிட்டா போடுறாளே அப்படி என்ன வழக்கமாக இருக்கும்.. நாம நிஜமாவே மறந்து விட்டோமா?' என்று இடையில் கொஞ்சம் பக்கத்தை காணோம் ஹீரோவைப் போல கீசா முழிக்க..
"போச்சு!! போச்சு!! அந்த மேனாமினுக்கி ஞாபகத்துல எல்லாத்தையும் மறந்திட்ட.. நம்ம வழக்கத்தையும் மறந்துட்டு அந்த பாழா போனா மனுசனா மாறிட்டியோன்னு எனக்கு பயமா இருக்கு" என்று நெஞ்சில் கைவைத்து பதறியது மோகினி.
"அப்படி எல்லாம் இல்ல மோஹி குட்டி.. ரொம்ப நாள் நான் அடைந்து கிடந்தேனா? அதுக்கு அப்புறம் நீலவேணி குடும்பத்துல வேலை செஞ்சது.. அங்கேயும் அவர்கள் வாக்கு கட்டுப்பட்டு இருந்துட்டேன். அதனால இது எல்லாம் எனக்கு சுத்தமா ஞாபகத்துல இல்லை" என்று அது கொஞ்சும் குரலில் கூற..
அந்த மோஹி குட்டியில் மொத்தமாக வீழுந்தது மோகினி..
"அதுக்கு என்ன? நான்தான் இருக்கேனே!! எல்லாம் உங்களுக்கு நான் சொல்லி தரேன்" என்று அவனிடமும் தன் கழுத்தை காட்டி கடிக்க சொல்ல..
"என்னதான் நாம குட்டிச்சாத்தான் இருந்தாலும் அடுத்தவன் இரத்தத்தை தான் குடிக்கனும். நம்ம ரத்தத்தை நாமளே ஜூஸ் போட்டு குடிக்க கூடாது மோஹி குட்டி!!" என்று கீசா அறிவுரை வழங்கியது.
"ஐயோ!! ஐயோ!!" என்று தலையிலடித்துக் கொண்ட மோகினி "இதற்குப் பெயர் லவ் பைட்ஸ்.. காதலிக்கிறவங்க தங்களுடைய காதலை இப்படித்தான் நம்ம இனத்துல சொல்லிக்கு வாங்க.. நம்ம ரெண்டு பேரும் இரத்தத்தை எடுத்து அதோ இருக்காரு பாருங்க.. நம்ம கடவுள்!! அவரு கோயில் இருக்கிற கல்லுல விட்டுட்டா.. நாம எப்ப வேணாலும் கல்யாணம் பண்ணிக்கலாம்" என்று வெட்கத்தோடு கூறியது மோகினி.
'இந்த ரூல்ஸ் எல்லாம் எப்படா கண்டு பிடிச்சீங்க!!??' என்று கீசா யோசிக்க..
"இந்த புது ரூல்ஸ்.. லவ் பண்றவங்களுக்காகவே நம்ம குரு ரீகல் ராக்கு கண்டுபிடித்தது.. எப்படி இருக்கு? என்று கேட்க..
'என்னடா பண்ணி வச்சு இருக்கீங்க?' என்று அலறிய கீசா.. வேறு வழியின்றி அதனுடைய கூரிய பற்களை மோகினியின் கழுத்தில் இறங்கி ரத்தம் வர வைத்து, பின் இருவரும் இணைந்து அவர்கள் இரத்தத்தை அந்தக் கல்லில் இட்டு தங்கள் திருமண பந்தத்தை உறுதி செய்தனர்.
அதன்பின் மோகினியோ ரொமான்ஸ் மூடுக்கு தாவி கீசாவை இழுத்து பிடித்து உதடுகளை கடித்து ஒருவழியாக்க.. மோகினியின் இரண்டே லிப் லாக்கில் பயந்து அலறியது கீசா..
"நான் என்னோட முழு காதலையும் உங்ககிட்ட காட்டவே இல்லையே கீஷூக்குட்டி?" என்று கண்ணில் தாபம் பொங்க கேட்ட மோகினியை பார்த்து..
"மொதல்ல நாம ரெண்டு பேரும் பூலோகத்துக்கு போறோம். போய் நீலுக்குட்டி எப்படி இருக்குனு பாக்குறோம். அவகிட்ட நம்மளோட காதலை சொல்லி அவ முன்னால தான் நம்ம கல்யாணம் பண்ணிக்கிறோம்" என்று கீசா திட்டம் போட்டது.
முதலில் மோகினிக்கு கொஞ்சம் பிடிக்காமல் இருந்தாலும், ஆனால் நீலாம்பரி முன்னிலையில் தான் திருமணம் என்று கீசா உறுதியாகக் கூறிவிட, 'கல்யாணம் முடிஞ்சதும் நாம நம்ம உலகத்துக்கு வந்து விடனும். அங்க இருக்கக் கூடாது' என்று கண்டிஷனோடு மோகினியும் சம்மதிக்க இருவரும் அவர்கள் உலகத்திலிருந்து பூலோகத்தை நோக்கி பறந்து வந்தனர்.
நீலாம்பரியை தேடி முதலில் ஸ்ரீராமன் வீட்டிற்கு செல்ல, அங்கேயும் முன் இருந்ததைவிட வீடு இப்பொழுது புதுப்பொலிவுடன் காட்சியளித்தாலும் உள்ளே ஒரு சந்தோஷமான மன நிலையில் யாரும் இல்லை என்பதை உணர்ந்து கொண்டது கீசா..
சொர்ணம் அப்பத்தாவோ நோய்வாய்ப்பட்டு வீல்சேரில் இருந்தார். நாச்சி வீட்டையும் அத்தையையும் நன்றாக கவனித்துக் கொண்டாலும் முகத்தில் பழைய அந்த பிள்ளை தனமான பாவம் இல்லாமல் வருத்தம் மட்டுமே மிதமிஞ்சி இருந்தது.
"ஏன் இப்படி இருக்காங்க இவங்க?" என்று கீசா நினைத்துக்கொண்டு மோகினியை பார்க்க.. அதுவும் தனக்கு ஒன்றும் தெரியவில்லை என்று கையை தூக்கியது. பின் கண்களை மூடி தனது நீலுக்குட்டியை தனது அலைவரிசையில் தேட அதில் நீலாம்பரியின் அலைவரிசை கிடைக்கவே இல்லை.
"என் நீலுக்குட்டி.. இங்கு இல்லை போலவே?" என்ற கீசா அங்குள்ள ஒவ்வொரு அறையாக தேட, நீலாம்பரி இருப்பதற்கான அறிகுறியே இல்லை. கூடவே நல்ல மருதுவும் நீலவேணியும் அங்கே இல்லை.
வீல் சேரில் இருந்த சொர்ணத்திற்கு நாச்சி உணவு ஊட்டிக்கொண்டிருக்க "பேராண்டி சாப்பிட்டானா?" என்று திக்கி திணறி கேட்டார் சொர்ணம். எவ்வளவுதான் பேரன் மீது கோபம் இருந்தாலும் பாசம் கண்களை மறைத்தது. ஒற்றை பேரன் அல்லவா??
நாச்சியோ முகத்தை சுளித்துக் கொண்டு "அவனைப் பத்தி என்ற கிட்ட பேசாதீக அய்த்த.. அவனுக்கு நான் அம்மாவும் இல்ல.. அவன் என்ற பிள்ளையும் இல்லை.. எப்போ என்ற மருமகளை வீட்டை விட்டு தொரத்துனானோ.. அன்னைக்கு எல்லாம் முடிஞ்சு போச்சு. சாப்பாடு எல்லாம் மேசை மேல தான் இருக்கு. வந்த ராசா போட்டு சாப்பிட்டு விட்டு போகட்டும். நீங்க சாப்பிடுக" என்று அவரை கவனித்து விட்டு செல்ல எதிர்க்க வந்த மகனை பார்த்தும் பார்க்காதது போல சென்றார்.
"ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு கோபம் ஆகாது மா.. எவளோ ஒருத்திக்காக பெத்த புள்ளை கூட பேச மாட்டேங்கிறீக.. அவ இப்போ ஊரிலேயே இல்ல.. எங்க போனாளோ இல்ல யாரைக் கல்யாணம் பண்ணிட்டு போனாளோ?" என்று அவன் பேச பேச சமையலறையில் இருந்து ஒவ்வொரு பாத்திரமாக தூக்கி போட்டு எறிந்தார் நாச்சி 'நீ பேசுவது எனக்கு பிடித்தம் இல்லை' என்று அவரது கோபத்தை காண்பிக்க..
சிறுவயதிலிருந்து அதிர்ந்து பேசாத அன்னையை பார்த்தவனுக்கு இப்படி முற்றுமுழுதாக மாறி இருந்த நாச்சியை பார்க்கவும், "எல்லாத்துக்கும் அவ தான் காரணம்.. அந்த மைக்காரி தான் காரணம். அவளால என்ற வாழ்க்கை முறை எல்லாமே மாறிப் போச்சு" என்று தலையிலடித்துக் கொண்டவன் "நான் வெளியிலே போய் சாப்பிட்டுக்குறேன்" என்று தனது அலுவலகத்தை நோக்கி சென்றான்.
சங்கரபாண்டியன் தொழில் முழுவதுமாக மகனிடம் ஒப்படைத்து விட்டு, அரசியலில் இறங்கி விட்டார். இப்பொழுது விவசாயத்தோடு அந்த ஊரில் கிடைக்கும் தென்னையில் இருந்து பகுதி பொருட்களாக கோகோ பித் எனப்படும் செடிகள் வளர்வதற்கான உரத்தைத் தயாரித்து ஏற்றுமதி செய்கிறான் ஸ்ரீராமன்.
கூடவே இளநீரையும் பதப்படுத்தி பாட்டிலில் அடைத்து உலகமெங்கும் ஏற்றுமதி செய்ய இவனுக்கு கீழே அந்த ஊரில் உள்ள அனைவரையுமே இவனை பின்பற்றினர்.
மகன் தொழில் துறையில் எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும் சந்தோசம் கொள்ளும் அன்னையின் மனது, அவன் குடும்ப வாழ்க்கையில் சந்தோஷம் இல்லை என்றால் மனம் நிம்மதி கொள்ளாது. "என்ன சம்பாதிச்சு என்ன பயன்? கட்டிய பொண்டாட்டி பிள்ளை இருக்காகளா என்ன செலவழிக்க?" என்று மனதால் வருத்தப்பட்டுக் கொண்டார் நாச்சி..
இதையெல்லாம் பார்த்த கீசாவுக்கு மனம் நொந்து போனது. தனது நீலுக்குட்டியை பொள்ளாச்சியே சல்லடை போட்டு சலித்து விட்டது. அவள் இருப்பதற்கான அறிகுறியே இல்லை...
எங்கே போயிருப்பா? எங்கே போயிருப்பா? என்று தேடி தேடி விழிகள் பூத்தது கீசாவுக்கு..
தனது நீலுக்குட்டியை கண்டுபிடிக்குமா கீசா? ஸ்ரீராமனோடு அவளது வாழ்வு மலருமா?
சொக்க ரெடியா??
