10
ஸ்ரீராமனின் கோபமே பரவாயில்லை என்பதாக இருந்தது அவனது தீரா முடியா மோகம்!! திகட்டத் திகட்ட கீசாவின் கணைகள் அவனில் பாய்ந்து வன்காதலை நீலாம்பரியிடம் காட்ட.. துவண்டு கசங்கி கிறங்கி போனாள் நீலாம்பரி.. அவளும் ஒவ்வொரு நாள் மோகினி வசியத்தில் இருப்பாள்.. அன்று உடல் தாங்கும் .. இல்லாத அன்று பெறும் இன்பம் தாண்டி பயமே கூடும்..
இப்படியாக ஒரு மாதம் நார்மல் பகல் இரவு கீசாவின் கட்டு என்று வினோதமாய் சண்டையும் பின் கொஞ்சிக் குலாவலாக போனது..
இப்போது சங்கரபாண்டியன் குடும்பம் இவர்களது இந்த முரண் வாழ்க்கை முறைக்கு ஓரளவு பழகிவிட்டனர்...
எப்படியோ தன் மகன் கல்யாணம் செய்து குடியும் குடித்தனமாக இருந்தால் சரிதான் என்று நாச்சி வழிவிட்டு ஒதுங்கிக் கொள்ள.. சங்கரபாண்டியன் வெறும் பார்வையாளராக இருந்தார்... அவருக்கு இந்த ஏற்றத்தாழ்வு திருமணம் பிடித்தமில்லாதிருந்தது.. அவரின் தனிப்பட்ட மனோரதம்..
இரணகள ஸ்ரீராமனிடம் மாட்டி அவதிப்படும் மற்றொரு ஆள் நம்ம சொர்ணம் அப்பத்தா தான்!! கட்டை விட்டு வெளியே வரும்போது அனலாக மாறி சுட்டு எறித்து விடுவான் அவரை!!
"எல்லாம் உன்னால தான்!! நீ தான் என்னமோ பண்ணி எனக்கு அவளை கட்டி வச்சுட்ட.. பாரு பாரு அவ கழுத்துல கூட உன்ற தாலி தான் கடக்கு.. சரியான வில்லி கிழவி, எப்படி இருந்த ஒரு ஆஞ்சநேயர் பக்தனை இப்படி ஆகிட்ட இல்ல நீ???" என்று அப்பத்தாவை திட்டி கொண்டிருக்கும்போதே கட்டுக்குள் வந்து விட்டான் என்றால், "நீலுக்குட்டி!! நீலுக்குட்டி!!" நீலாவை தேடி மாடி பாய்ந்து ஏறுவான்.
சொர்ணம் அப்பத்தாவுக்கு கிறுக்கு பிடிக்காதது ஒன்றுதான் குறை.. மற்றபடி இவனால் அந்த குடும்பமே கீழ்ப்பாக்கம் கமிங் சூன் என்ற நிலைதான்..
மருதுவுக்கு நீலாம்பரியின் புகுந்த வீட்டில் இருப்பதற்கு சுத்தமும் பிரியமில்லை. ஆனாலும் வேறுவழியின்றி யாரிடமும் பேசாமல் தானுண்டு தனது பள்ளிப்படிப்ப உண்டு என்று இருக்கிற இடம் தெரியாமல் இருந்து கொள்வான்... பார்ட் டயமாய் ஒரு தனியார் மாவுமில்லில் வேலைக்கும் சேர்ந்துகொண்டான் பொறுப்பாய்.. நாட்கள் இப்படியாக செல்ல.. விடிய விடிய நீலாம்பரியுடன் ஆட்டம் போட்டவன் காலையில் அவளை காய்ச்சி எடுத்தான்..
"மை பொட்டு வசியக்காரி!! என்ன மை போட்டு என்னை இப்படி மாத்தி வச்சிருக்க.. இரு ஒரு நாள் இல்ல ஒரு நாள் உன்னைய ஓட ஓட விரட்டல" என்று காலையிலேயே தனது சுப்ரபாதத்தை ஆரம்பித்து வைத்தான் ஸ்ரீராமன். இவ்வளவு நாட்களில் நீலாம்பரிக்கு இது பழகிப் போன ஒன்று என்பதால், அவள் போர்வையை முகம் முழுவதும் இழுத்து மூடி விட்ட தூக்கத்தை தொடர்ந்து கொண்டிருந்தாள்.
அடுத்து அப்பாத்தாவிடம் தான் வருவான் என்று அறிந்து அவரும் தற்போதெல்லாம் உஷாராக அவர் அறையில் படுத்து உறங்குவதே இல்லை!! அருகில் இருக்கும் நீலவேணி இருக்கும் அறைக்கு சென்றுவிடுவார். அங்கே அவர்களின் அம்மாச்சியும் இருக்க.. பழங்கதைகள் பேசிக்கொண்டே இருவரும் உறங்கிவிடுவார்கள்.
கதவை தட்டி பார்த்தவன் "அப்பத்தாவை காணுமே??" என்று அறையை திறந்து பார்க்க, வெற்று அறையே அவனை வரவேற்றது. "வில்லி கிழவி!! தப்பிச்சிடுச்சு!!" என்று சென்றான்.
அதுமுதல் அவனது கடுப்பு திரும்பவும் நீலாம்பரியை தாக்க.. அவளோ அவனை கண்டுகொள்ளாமல் வீட்டு வேலையில் பிஸியாகி விடுவாள். கூடவே தன் வேலையும்!!
"இவளே ஒரு பிராடு!! இவ கிட்ட வராது மொத்தமும் பிராடா தான் இருக்கு" என்றவனைப் பார்த்து, அவள் விழிகளை விரித்து முறைக்க... "போடி போ!!" என்று விட்டு சென்று விடுவான்.
நாளொரு சண்டையும்.. பொழுது ஒரு கொஞ்சலுமாக.. ஸ்ரீராமன் நீலாம்பரியின் வாழ்க்கை தெளிந்த நீரோடையாக இல்லாமல் குழம்பிய குட்டையாகவே சென்றுகொண்டிருந்தது.
பின்னே தெளிந்த நீரோடையாக இருந்தால் இருவரும் முட்டிக் கொள்வார்களே!!
இங்கு ஒரு இல்லறம் கீசா மோகினியால் ஊஞ்சலாட..
மோகினிக்கு கீசா மேல் ஊடல் வந்தது.. மனதின் அன்பை சொல்லாது செல்லாது என்று உணர்ந்து கீஷ் மன்மதனுக்கு எடுத்து சொல்வோம் என்று.. தன் காந்த கண்ணழகனிடம் பேசப்போக..
நீலுவின் மீது கொண்ட அன்பின் பிரேக் அப் தாளாது அது விலக.. விலக.. மோகினியோ நெருங்க.. நெருங்க..
"இந்த மனித இனமே கொடூரமானது.. ஆசை வைத்து மோசம் செய்வது.. இவர்களை விட்டு நாலு லோகம் தள்ளி இருந்தால் மட்டுமே நம்மை போன்ற பேயினங்கள் வாழ முடியும் ப்ளீஸ்!! கீஷ்!! இந்த பொல்லா உறவு வேணாம்.. நார்மல் குட்டி சாத்தான்களா இருப்போம் கீஷ்.. வா ஓடி போலாம்.. உனக்கு நான் எனக்கு நீ.. வாடா கீஷ் கண்ணா!!"
வலிய மனிதரை பற்றிய உண்மையை சொல்லி மோகி அழைக்க..
அதன் கெட்ட நேரம் எதுவும் காதில் நுழையாமல் நீலும் கிடைக்காத ஏக்கத்திலேயே.. கோபித்து தன் பழைய இடத்துக்கே அருவமாய் கீசா ஓடிவிட.. மோகினி தன் உலகங்களில் தேட போய்விட்டது!! அது ஒரு தனி கிளை கதை!! சோக கதை!!
அதுக பண்ணிய கூத்தில் இங்கு நடந்தது பல பல.
அன்று வழக்கம் தென்னந்தோப்புக்கு மேற்பார்வையிட சென்றான் ஸ்ரீராமன்..
எப்பொழுதும் சொர்ணம் அப்பத்தா தான் அதை எல்லாம் பார்த்துக் கொள்வார் இன்று ஏனோ அவனை அனுப்பி வைக்க.. சரி ஒரு மாறுதலாக இருக்கும் என்று அவன் அவற்றையெல்லாம் பார்வையிட்டுக் கொண்டே சென்றவனுக்கு யாரோ இருவர் பேசும் குரல் கேட்டு சட்டென்று நின்று விட்டான்.
"இந்த காலத்துல ஜொள்ளு விடுறவனை கூட நம்பிடலாம்... ஆனா இந்த ஒழுக்கமாய் இருக்கேன் சாமியாரா இருக்கேன்னு சொல்றவனை மட்டும் நம்பவே விடவே கூடாது புள்ள" என்று ஒருத்தி கூற..
"என்ன கருத்தெல்லாம் சொல்ற புள்ள?? அனுபவமோ??" என்று மற்றொருத்தி சிரிக்க..
"உண்மையத்தான் சொன்னேன்!! ஏன் நம்ம வூரு நட்டாமை பையனையே எடுத்துக்க.. ஊர்ல இருந்து வந்து இறங்கும் போது அப்படியே ஆஞ்சநேயர் பக்தனாக இருந்தான். இன்னிக்கு அந்த நீலாம்பரி குடும்பத்தையே வீட்டில் கூட்டி வச்சுருக்கான்... எதுக்கோ தெரிலியே.. !!"
"ஏய் வாய மூடிட்டு வேலையப் பாரு புள்ள, பெரிய எடத்து பொல்லாப்பு எல்லாம் நமக்கு எதுக்கு" என்று இவள் கூற..
"ஆமா ஆமா... இன்னைக்கு நீலாம்பரி!! நாளைக்கு நீலவேணி!! யாரு கண்டா??" என்று அவள் சிரிக்க மற்றவளும் சேர்ந்து சிரித்தாள்.
அதைக் கேட்டுக் கொண்டிருந்த ஸ்ரீராமனுக்கு கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது. 'இப்படி யாரோ ரெண்டு பேர் நம்மை பற்றி புறம் பேசும் அளவிற்கு நம்மை கொண்டு வந்து நிறுத்தி விட்டாளே!!' என்று அந்த மொத்த கோபமும் நீலாம்பரி மேல் திரும்பியது. அதுமட்டுமல்லாமல் நீலவேணியையும் இவனோடு சேர்த்துப் பேச, 'ஒருத்தியை கல்யாணம் பண்ணதே தப்பு நினைக்கிறேன் இதுல அந்தப் பொண்ணையும் நம்ம கூட இணை கூட்டுறாக' என்று அதே கோபத்தோடு வீட்டை நோக்கி வேகமாக நடந்தான் ஸ்ரீராமன்.
இதுவே இந்த இடத்தில் சொர்ணம் இருந்தால் அவர்கள் வாயிலேயே வரப்பு வெட்டி நாற்றை நட்டு விட்டு தான் வந்திருப்பார். பாவம் இதையெல்லாம் அறியாத ஸ்ரீராமன் கோபத்தில் கொதித்தெழுந்து விட்டான்.
உலை வாயை மூட முடியும்!! ஊர் வாயை மூட முடியுமா???
வீட்டிற்கு வந்தவன் அப்போதுதான் வீட்டு வேலையோடு பண்ணைக்காரங்களுக்கு பெரும்பானை சோறும் வெஞ்சனங்களையும் சமைத்து.. உடலின் மென்மைக்கு மீறி பார்த்த சுமையில் மிகவும் சோர்ந்து பசியில் சாப்பிட அமர்ந்திருந்த நீலாம்பரி கையை பற்றி ஹாலுக்கு இழுத்துவந்து தள்ளி விட்டான்
"என்னடி நினைச்சி கிட்டு இருக்க உன்ற மனசுல.. மந்திரக்காரி! எனக்கு ஏதோ மை போட்டு வசியம் பண்ணி என்ற கையால தாலியை வாங்கி கட்டிக்கிட்டு, ஊரெல்லாம் நான் என்னமோ நல்லவன் வேஷம் போட்டு உன்னைய ஏமாத்திட்ட மாதிரி புரளிய கிளப்பிவிட்டு திரிற" என்று அவன் பாய..
ஏற்கனவே சோர்வாக இருந்தவள், "இந்த பேச்சை நீங்க விடவே மாட்டீகளா?? " சாதாவாய் எடுத்து "போங்க! போய் உங்க வேலையை பாருங்க" என்று நகர.. அந்த அலட்சியம் ஆணின் ஈகோவை தட்டிவிட்டது.
"மூக்கு பிடிக்க மூணு நேரமும் தின்னு சொகுசா அனுபவிக்கிற... போதாக்குறைக்கு உன்ற குடும்பத்துக்கே சேர்த்து சாப்பாடு போடுறோம் தண்டத்துக்கு!! அந்த ஆணவம் பேச வைக்குது.. ஹாங்" என்று நீலாம்பரி பார்த்து எள்ளலாக கேட்டான் ஸ்ரீராமன்.
"என்னது?? நீங்க சாப்பாடு போடுறீகளா என்ற குடும்பத்துக்கு?? இன்ன வரைக்கும் என்ற சேமிப்பு பணத்தில் தான் என்ற குடும்பம் சாப்பிட்டுகிட்டு இருக்கு" என்று இவளுக்கும் பிறவி ரோஷம் முகிழ்க்க .. நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு பதில் கூற..
"ஆமா.. ஆமா.. இந்தம்மா அம்பானி பேமிலி ஓஹோ.. மேடம் நல்லா கேட்டுக்கோங்க.. உன்ற இருநூறு முன்னூறு ரூபால உன்ற வீட்டுல நீ சாப்பிட்டு இருக்கலாம். ஆனால் இங்கு சாப்பிடுற சாப்பாட்டுக்கு நீ மாசம் முழுக்க சம்பாதித்தாலும் ஒரு நாள் சாப்பாட்டுக்கான காசு கூட உன்னால் கொடுக்க முடியாது தெரியுமா??" என்று அவன் மறுபடியும் நக்கலாக கூறினான்.
கீசா இருந்தால் இப்படி அனர்த்தம் நேர்ந்திருக்காது.. ஆனால் இவர்களை பந்தத்தில் இணைத்த விதியோ என்ன வைத்ததோ? காரியம் எல்லை மீறி போனது...
நீலாம்பரி தன் சிறு சக்தியின் மூலம் கீசாவை உணர முயல.. தொடர்பில் அது இல்லை...
தொடர்பு எல்லைக்கு அப்பால்!!
பெருமூச்சுவிட்டு கணவனின் நிஜ முகம் ஏற்றவள்..
இது தான் நிதர்சனம் என்று உணர்ந்து..
தன்னால் தன் குடும்பமும் தண்டசோறு பேர் வாங்கிய அவமானத்தில் கண்ணீர் குளமாய்..
ஏழை என்றால் இளப்பமோ? கீசன் கட்டு ஒரு பக்கம் இருக்கட்டும்.. மனைவியா அவன் ஒரு நாளும் ஏற்கவில்லையா? கழிவிரக்கமும் சேர..
"ஆமாம் உங்க குற்றச்சாட்டு எல்லாம் உண்மைதான் நான் இப்ப என்ன செய்யணும்? உங்க எண்ணம் சொல்லுங்க?"
இத்தனை வருட வாழ்க்கையில் நீலாவுக்கு காசு பணம் இல்லை என்றாலும் தைரியம் நிமிர்வு அதிகமே!! இல்லையென்றால் ஒரு பெண் மட்டுமே ஒரு குடும்பத்தை எவ்வாறு தாங்கி நிறுத்தக் கூடும்?? அதுவும் வயசு பெண்!!
ஒரு கட்டத்தில் அவன் "அவ்வளவு ரோஷம் பார்க்கிறவ எதுக்கு என்ற வீட்ல இருக்க.. வெளியே போடி" என்று அவன் தலை வாசலுக்கு தள்ளி விட.. அந்நேரம் பார்த்து பள்ளி முடிந்து வந்த மருது ஓடிவந்து அக்காவை தாங்கிக் கொண்டான்.
"நான் அப்பவே சொன்னேன்.. இந்த வீட்டுக்கு வந்தா உனக்கு மரியாதை இருக்காதுன்னு நீ கேட்டியா? இப்ப பாரு உன்னை புடிச்சு தள்ளி விடுராரு...இவரு நமக்கு வேணாம் க்கா வா போலாம்.. வா நாம நம்ம வீட்டுக்கு போகலாம்!!" என்று அவளை பிடித்து இழுக்க... நீலவேணிக்கு என்ன நடந்தது எதுவும் தெரியாது அவள் அம்மாச்சியை கவனித்துக்கொண்டு அறையில் இருந்தாள்.
கிட்டத்தட்ட நீலாம்பரிக்குமே மருது சொன்னது தான் சரி என்ற தோன்ற.. அடுத்த நிமிடம் ஸ்ரீராமனை தீர்க்கமாக பார்த்தவள்.. தன் தம்பியிடம் "ஆமாம் மருது போகலாம்" அவ்ளோதான் தன் குடும்பம் மற்றும் தனக்கு சொந்தமான உடமைகளை எடுத்துக் கொண்டு தங்கள் வீடு நோக்கி கிளம்ப ஆயத்தமாக ..
இரக்கமேயில்லாது பார்த்துக்கொண்டிருந்தான் ஸ்ரீராமன்..
நான் சொன்னா போயிருவாளா?! வீம்பு வந்தது..
அந்த சமயம் உள்ளே வந்தார் சங்கர பாண்டியன்.
"இங்க பாரு புள்ள!! இந்த வீட்டுக்கு கல்யாணம் கட்டிட்டு உள்ள வந்துட்டு.. திரும்ப இந்த வீட்டை விட்டு பொறந்த வீட்டுக்கு போறது.. தனியா வாழ்றது.. இதெல்லாம் நடக்கக் கூடாது. எங்க விருப்பம் இல்லாமல் தான் நீங்க கல்யாணம் கட்டிக்கிட்டிங்க.. அதை ஒன்னா வாழ்ந்து காட்டனும்" என்று நாட்டாமையாக அவர் கேள்வி கேட்க..
அவரோடு கூட வந்த நாச்சியும் சொர்ணமும் என்ன? ஏது? என்று புரியாமல் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தனர். ஹாலில் ஸ்ரீராமனும் தந்தையை நோக்கி..
"எனக்கு அவ கூட வாழ கொஞ்சம் கூட இஷ்டம் இல்லை அவளுக்கும் அப்படித்தான்.. அதனால நாங்க பிரிகிறோம்... இதுல நீங்க தலையிடாதீங்க" என்று அவன் அதிகாரமாக கூற...
நாச்சிக்கு எங்க இருந்து தான் அவ்வளவு கோபம் வந்ததோ? பாய்ந்து வந்து மகனின் கன்னத்தில் ஒரு அறை அறைந்திருந்தார். "ஒத்த புள்ளையாச்சேன்னு உன்மேல பாசத்தை கொட்டி வளர்த்த பெத்த அப்பன் கிட்டயே கையை நீட்டி நீட்டி பேசுற குறுக்கே வராத சொல்லுற" என்றவர்
"அன்னைக்கும் கல்யாணத்தின்போது எங்க கிட்ட நீ கேட்கல.. நீயாத் தான் தாலி கட்டிய பெண்டாட்டி ஆக்கிட்ட.. அதுக்கு நாங்க ஒன்னும் சொல்லாம உன்ன ஏத்துக்கிட்டோம்.. இப்ப என்னன்னா வீட்டுக்கு வந்த மருமகள் வீட்டை விட்டு வெளியில் தொரத்துற.. இதெல்லாம் நல்லாவே இல்லை நீ வெளியில் போ.. அவ நிம்மதியா இங்கு இருக்கட்டும்" என்று வாழ்க்கையில் முதல் முறையாக தன் குரலை உயர்த்தி பேசினார்.
ஆனால் அதையெல்லாம் காதில் வாங்கும் நிலையில் ஸ்ரீராமன் இல்லை. கோபம் கண்களை மட்டும் அல்ல அவன் அறிவையும் அப்பொழுது மறைத்திருந்தது...
"அத்தை நீங்க உங்களுக்குள் மனக்கசப்பு வேணாம்.. நான் தான் அக்காவை கூட்டிட்டு போறேன். மாமா மனசு போல இருக்கட்டும்" என்று மருது பெரிய மனுசனாய் சொல்லி அக்கா கையை இறுக்கி பிடித்து நகர.. அவளும் கணவன் மனம் இளகவேயில்லை எல்லாம் முடிந்தது.. இந்த விளையாட்டின் வினை கணவன் அல்ல.. கீசா தான்!! என்பதால் விரக்தியில் கிளம்ப திரும்பவும்..
"ஒரு நிமிஷம்மா" என்று
சங்கரபாண்டியன் தடுத்தார்.
"அவனை விட்டு ஒரேடியா போறதுன்னு முடிவு பண்ணிட்டியா?"
"ஆமாங்க மாமா" பாசம் கண்ணில் வெந்நீரா வழிய..
தன்னறைக்கு சென்று வந்தவர் கையில் முத்திரை தாள்..
"இந்த பத்திரத்தில் கையெழுத்து போட்டுட்டு போ.. பணம் எவ்ளோ வேணும் சொல்லு கொடுத்துடுறேன் "
குரல் தழு தழுக்க "பணம் வேண்டாம் மாமா.." சட்டுன்னு கையெழுத்து போட்டு தந்துவிட..
"இதோ பாரும்மா..நீங்க ரெண்டு பேருமே இந்த கல்யாணத்துனால சந்தோசமா இல்ல.. ரெண்டு குடும்பமும் சந்தோசமா இல்ல.. உனக்கும் சின்ன வயசுதான்!! இதை முறையா பிரிஞ்சிட்டீங்கனு பஞ்சாயத்துல நான் தாக்கல் செய்துடுறேன்.. இனியாவது நல்லாருங்க" என்றார்.
"சரிங்க மாமா" பொங்கிய துக்கம் அடக்கி.. தன் வீட்டை நோக்கி புறப்பட்டாள் நீலாம்பரி.. தன் வீட்டுக்கு சென்றவள் அறைக்குள் சென்று கதவை மூடிகொண்டாள்..
சுய கவுரவம், தன்னம்பிக்கை, ரோஷம், மானம் தாண்டி பாசமனம் தன்னுடைய ஸ்ரீ ராமனை தேடியது!!
இந்திய தீபகற்பம் நீரால் சூழ்ந்தது என்றால் பெண்கள் ரத்தம் பூரா சென்டிமென்ட்ஸ்..
ஆணுக்கு இரும்பு இதயமும் பெண்ணுக்கு பூவிதயமும் தந்த இய
ற்கையின் முரண் ஏன்? ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் பெண்கள் வடித்த கண்ணீர் துளிகள் சேமித்து உப்புக்கடல்கள் கொண்டதோ? காசினி..
சொக்க ரெடியா??
