தேன்மழை💞 (11)

 

(@priyadinesh)
Member Moderator
Joined: 2 months ago
Messages: 23
Thread starter  

வேதகி அவர்களுக்கு ஆப்ரேஷன் என சேதி தெரிந்ததுமே, கௌதமன் அவரை நேரில் சென்று காண வேண்டுமென தாம்தூமென குதித்தார். மகளும், மனைவியும் தாங்கள் மட்டும் செல்கிறோம் நீங்கள் வேலையை பாருங்கள் என்று தட்டிக் கழித்தனர்.

 

இது ஒன்று போதாதா அவர் வாய் திறவ? சாமியாட்டம் ஆடி விட்டார். கட்டிய மனைவி முதல் மகள் வரை யாரும் தன் பேச்சை கேட்பதில்லை, தான் ஏன் சம்பாதிக்க வேண்டுமென வரிசையாக அவர் அடுக்கிக் கொண்டிருந்ததில் ஆத்திரமடைந்தது என்னவோ பிருந்தா தான்.

 

"அப்பா கிளம்புங்க. ஆனால், ராசிகா கிட்ட எது நீங்க பேச நினைச்சாலும் வீட்டுல தான் பேசணும். அதை விட்டுட்டு, பொது இடத்துல எதுவும் பேசக்கூடாது." என அவள் நிபந்தனை விதிக்க, அவரும் சரி என தலையசைத்தார் வன்மமான எண்ணத்தில்.

 

உண்மையில் அவரது நோக்கமே ராசிகாவை அடித்து திருத்த வேண்டும் என்னும் எண்ணம் தான். "அடியாத மாடு படியாது" என்று அவரது தாத்தா சிறு வயது முதல் அவரை கூறி அடித்து வளத்தது நினைவுக்கு வர, மகளை சினிமா பக்கம் தலை வைத்து படுக்க முடியாதப்படி ஏதாவது செய்ய வேண்டுமென தீர்மானித்து விட்டார்.

 

அன்று இரவு எல்லோரும் பாலக்காடு வந்து சேர்ந்தனர். அன்றைய தினம் ராசிகாவிற்கு நல்ல நேரம் போலும் அத்தையோடு ஹாஸ்ப்பிட்டலில் தங்கி விட்டாள்.

 

இரவு12.47மணி

கருமை பூசியிருந்த அவ்வறையில் நிம்மதியான உறக்கத்தை தழுவியிருந்த ஆடவன் விழிகள் பட்டென திறந்தது. தனியே இருந்தும் அருகில் யாரோ இருப்பது போன்ற ஓர் உணர்வு. இதை பிரமை என தான் முதலில் நினைத்தவன், ஒருக்களித்து திரும்பி படுத்தான்.

 

அதன் பின் நடந்த நிகழ்வு தான் அவனை வாயே திறவாதப்படி நெஞ்சடைக்க வைத்தது.

 

எதுவும் எங்கும் நெருப்பு பற்றி எரியவில்லை. ஆனால், அவ்வறை முழுவதும் கருமேகம் போல் கரும்புகை பரவத் தொடங்கியது. சுழலும் விசிறி காற்றில், புகை அவனது நாசியில் நெடியேற, பலத்த இருமலோடு எழுந்து அமர்ந்தான்.

 

நெஞ்சைடைக்கும் அளவிற்கு திடீரென வந்த இருமல் குமட்டலை உண்டாக்கியது. அடிவயிற்றில் கை வைத்துக் கொண்டு இருமியப்படி குளியலறை நோக்கி ஓடினான். இரவு உண்ட உணவு பாதி ஜீரணம் ஆகியும், ஆகாமலும் வாந்தியாக வந்தது.

அவன் அந்நேரம் யூகித்தது, சப்பாத்தி லேட்டாக சாப்பிட்டது சேரவில்லை போலும் என நினைத்தான்.

 

ஒருபுறம் வாந்தி, இருமல் என அவன் நெஞ்சே புண்ணாய் போனது தான் மிச்சம். வாயை சுத்தம் செய்து விட்டு, வெளியே வந்தவன் அறையின் விளக்கை உயிர்ப்பித்தான். கனவில் கூட நினைத்து பார்த்திடாத காட்சியை கண்டு திகிலடைந்து நின்றான்.

 

விளக்கை உயிர்ப்பிக்கவும், கரிய புகை அவ்விடம் விட்டு மேகம் போல் நகர்வதை கண்டவன் வெலவெலத்து போனான். அப்புகை கலைந்து செல்லும் நேரம், அறையே இருள் பூசியது போல மாறியது.

 

விளக்கானது டப் டப்பென பலமுறை மின்னி எரிந்ததில், பிரதீஷால் என்ன நிகழ்கிறது என்பதை புரிந்து கொள்ளவே சில நிமிடங்கள் தேவைப்பட்டது.

 

மிக கரகரப்பான ஒரு குரல் ஒன்று, "யாரு வாழனும்.. சாவணும்ன்னு.. நான் முடிவு பண்ணனும்.. இன்னும் 58 நாள் தான் இருக்கு.." என கர்ஜனையாக கூறிய நேரம், எரிகின்ற பிணத்தின் துர்நாற்றம் அவன் நாசியை துளைத்தது. 

 

இதை பார்த்தவன் விழிகள் மிரட்சியோடு விரிய, இதயம் ஏகத்துக்கும் துடித்துக் கொண்டதில், இரத்த ஓட்டமும் தாறு மாறாக ஓடிட தலை சுற்றி கீழே விழுந்தான்.

 

(யார் இந்த அபாயக் குரல்? உண்மையில் நாயகன் இதற்கு காரணமாக இருப்பானா? பார்ப்பதோ மருத்துவ தொழில். அவனால் எப்படி ஒரு உயிர் மடிய காரணமாக முடியும்? அப்படிருக்கையில் அவனை பழி வாங்க துடிக்கும் ஆவி யாருடையதாக இருக்கும்?)

 

வெகு நேரத்திற்கு பின் விழித்து எழுந்தவன் குரல்வளையில் மட்டும் அதீத வலி. ஆனால், நிகழ்வுகள் ஒவ்வொன்றும் முற்றிலும் காணாமல் போயிருந்தது. மின்விளக்கு ஒருபுறம் எரிய இப்படி தரையில் விழுந்து கிடைக்கிறோமே, என யோசித்தவனுக்கு தான் ஒன்றுமே விளங்கவில்லை.

 

தலை வேறு வின்னு வின்னு என வலியை தர, தட்டு தடுமாறி எழுந்து நடந்தவன் மெத்தையில் ஆயாசமாக அமர்ந்தான். எப்படி கீழே படுத்தோம்? என்ன நடத்திருக்கும் என்பதை யோசித்து பார்த்தவனுக்கு, எதுவும் நினைவுக்கு வரவில்லை.

 

வெகு நேரமாக நினைவுக்கு கொண்டு வர போராடி பார்த்தவன், ஏதோ ஒன்று மட்டும் தன்னை சுற்றி மர்மமாக நிகழ்கிறது என யூகித்தான்.

 

வாய் விட்டு பேச நினைத்தவன் குரல் வெளியே வரவில்லை. தொண்டை கம்முவது போன்றும், ஏதோ அடைப்பது போன்று இருந்தது. விரைவில் இதற்கு ஒரு தீர்வு காண வேண்டுமென நினைத்தவன், தனது பீரோவை திறந்தான்.

 

அவன் கைகளும், விழிகளும் பரபரப்பாக ஒன்றை தேடியது. துணிகளை எல்லாம் கலைத்து விட்டு, அவதி அவதியாக தேடியவன் கையில் அது மட்டுப்பட, அதை கையில் பற்றிய பின்பு தான் உயிரே வந்தது பிரதீஷிற்கு. அதன் பின்பு தான் அவன் நிம்மதியாக உறங்கினான்.

 

காலை 11.40மணி

அந்த ஹாஸ்ப்பிட்டலில் வழக்கம் போல் தனது பணியில் மூழ்கியிருந்தவன், சீஃப் டாக்டர் அழைத்த அழைப்பில் அவர் அறை நோக்கி சென்றான். அவன் வேலையை விட்டு விலகவுள்ளதாக, அனஸ்தீசியா டாக்டர் கூறியது பற்றி வினவ தான் அவனை அழைத்திருந்தார் பீஜ்ஜு மோன்.

 

இதுவரை அவன் வேலை பார்த்த நாட்களில் அவன் மீது எந்த ஒரு குறை கூறும் அளவிற்கு எத்தவறும் இல்லை. சில நேரங்களில் தாமதமாக வருவான். அது ஒன்றால் தான் அவ்வப்போது சீஃப் டாக்டரிடம் வசவு வாங்க வேண்டிய சூழல் வரும். இன்று அவர் கேள்விப்பட்ட சேதி உண்மையா? இல்லையா? என அறிந்து கொள்ள தான் அழைத்திருந்தார்.

 

அவனோ அவசர கதியாக மிடுக்கான நடையோடு நடந்து சென்ற நேரமா இப்படியொரு காட்சியை காண வேண்டும்!

 

ஃபர்ஸ்ட் புளோரில் தான் சீஃப் டாக்டர் அறை உள்ளது. மேலே சறுக்கல் போன்ற நடைப்பாதையில் விறுவிறுவென நடந்தவன், பால்கணியில் பெண் ஒருவள் நின்று கொண்டிருப்பதை கண்டான்.

 

முதலில் சரியாக கவனிக்காதவன் அவளை கடந்து சென்ற பின்பு, சட்டென திரும்பி பார்க்க அவளோ ஜன்னல் பிடியை இறுக பிடித்தபடி அழுது கொண்டிருந்தாள்.

 

தன்னை யாரோ கவனிப்பதை கண்டவள் சட்டென இடப்பக்கம் திரும்ப, அவனை கண்டவளுக்கு மேலும் அழுகை முட்டிக்கொண்டு வந்தது. மிக சிரமப்பட்டு விசும்பலை தொண்டைக்குழியில் அடக்க முயல, அவளால் அந்நொடி அதை செய்ய இயலவில்லை.

 

பிரதீஷ், ராசிகா அழுவதை கண்டவன் அதே நேரம் அவளின் வலது புருவத்தின் ஓரம் போடப்பட்டிருந்த பிளாஸ்டரையும் தீவிரமாக பார்த்தான்.

 

அந்நொடி அவனை நேருக்கு நேர் கண்டதும், ஏனோ அவனிடம் சொல்லி அழ வேண்டும் போல் இருந்தது. அவனுக்கும் அதே போல் அவள் எதற்காக அழுகிறாள்? தலையில் என்ன காயம் என கேட்க எத்தனித்த நேரம், "மிஸ்டர் பிரதீஷ், சார் உங்களுக்காக வெயிட்டிங்.." என மற்றொரு டாக்டர் அவனை அழைக்க அவளை கலக்கமாக பார்த்து நகர்ந்தான்.

 

"நீங்க என்ன மனுஷனா? இல்லை மிருகமா? ஒரு வயசுக்கு வந்த பிள்ளையை இப்படியா அடிப்பீங்க? ஏதாவது ஒன்னு கிடக்க ஒன்னு ஆனா என்ன ஆகுறது?" என ராணி கணவரிடம் தழுதழுக்க வினவ, அவரோ கடுமையான ஒரு பார்வை பார்த்து விட்டு முகத்தை திருப்பிக் கொண்டார்.

 

"உங்களை தான் கேக்கிறேன். இதுக்காக தான் திட்டம் போட்டு வந்தீங்களா? அவ முதல சம்மதம் கேட்டப்பவே வேணாம்ன்னு சொல்லிருக்கலாமே. அதை விட்டுட்டு, இப்படி பீரோல பிடிச்சு தள்ளி விடுறீங்க. என்ன மனுஷன் நீங்க.. சே.." என அவரோ சேலை தலைப்பில் மூக்கை உறிஞ்சி கொண்டு அழ, கௌதமனோ மனைவியையும் அடிக்க பாந்தது மிச்சம்.

 

"வாயை மூடு ராணி. அவ அன்னேக்கி கேட்டா உண்மை தான். அதோட நிறுத்தியிருக்கணும். படிச்ச படிப்ப விட்டுட்டு விளம்பரம்ன்னு குதிக்கிறா.

 

விட்டுடு நம்ம குடும்பத்துக்கு ஒத்து வராதுன்னு சொன்னா, அதை கேக்க நீங்க யாருன்னு சொல்லுறா. இவளாம் பொண்ணா? தெரியாம கேக்குறேன். என்னை பிடிச்ச ஏழரை சனியன்." என பொருமியவருக்கு மகள் மீதான கோவம் இன்னும் தனியவில்லை. ஆனால், அவள் தற்காலிகமாக நடிக்க வாய்ப்பில்லை என்பது மட்டும் திண்ணமாக தோன்றியது.

 

நடிக்க இளமையும், அழகும் தானே தேவை. அதிலே காயம் உண்டானால் எப்படி நடிப்பாள்? அவர் நினைத்தது போலவே விடியற்காலை குளிக்க வீட்டிற்கு வந்த மகளிடம், கடுமையான வாக்கு வாதம் புரிந்தார். அவளும் வெகுநேரம் பொறுமையாக இருந்தவள், அவரையே தூக்கி எரிந்து பேசியதில் தான் அடிக்க பாய்ந்தார்.

 

அவரோ மகளை தள்ளி விட, அவள் மர பீரோ விளிம்பில் மோதி நெற்றியில் காயம் உண்டானது. அவள் அப்பா இன்று பேசிய வார்த்தையிலே விளம்பரம் பக்கம் தலை வைத்து படுக்க கூடாது என தீர்மானித்து விட்டாள்.

 

"என்னங்க இதுல பெரிய பொல்லாத குத்தம் கண்டுபிடிச்சீங்க? ஒரு மூணு நாலு விளம்பரத்துல நடிச்சா. அவ்வளவு தானே? ஊருல என்னெக்கி தான் யாரும் யாரையும் வாயில போட்டு மெல்லாம இருந்துருக்காங்க? அதுக்காக பெத்த பொண்ணை இப்படியா.. கொடுமை படுத்துறது?

 

மனசு வெறுத்து போய் ஏதாவது ஒன்னு பண்ணிட்டா.. என்ன செய்வீங்க? அப்போ உங்களுக்கு சந்தோஷமா இருக்குமா? இல்லை பேசுன வாய் உங்க மகளை திரும்பி குடுத்துடுமா? உங்க ரத்தம்ங்க அவ.. நெத்தில வழியுற ரத்தத்தை பாத்தும் அடிக்க பாய்றீங்கன்னா நீங்க என்ன அப்பா?" என அவர் அழுகைனூடே மகளுக்கு சாதகமாக பேச, கணவரின் தனலான பார்வையை புரிந்து கொண்டு ராணி கூடத்தில் நிற்காது கண்ணீரை துடைத்துக் கொண்டு நகன்றார்.

 

விளம்பர நடிப்பு ஒன்று தான் மகளை வெறுக்க வைத்து விட்டது கௌதமனிற்கு. அவரது கோவம் நியாயம் என்றாலும், அவரது செயலும் பேச்சும் எல்லை மீறிய ஒன்றே!

 

பிரதீஷ் வேலை விட்டு செல்வதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. சம்பளத்தை உயர்த்தி தருகிறேன் என்றும் வாரத்தில் அரை நாள் மட்டும் விடுப்பு என பீஜ்ஜு அவர் நிபந்தனையை முன் வைக்க, வேறு வழியின்றி அவரின் அன்பு கட்டளைக்கு ஏற்றுக் கொண்டான்.

 

அவரிடம் பேசி முடித்து வெளியே வந்தவன் விழிகள், நாலாப்புறம் அவளை தான் தேடியது. எதற்காக அழுதிருப்பாள், என்னவாக இருக்கும் என யோசித்தபடி சுற்றி முற்றி பார்த்தவன் அவள் அங்கில்லை என்பதையறிந்து தோளை குலுக்கி கொண்டு கீழிறங்கினான்.

 

 

விதி அவன் தேடியவளை விடுத்து, பிருந்தாவை கண்ணில் காட்டியது. அவளும் அதே சறுக்கல் படியில் தான் பழங்கள் வாங்கிக் கொண்டு ஏறி வந்தாள்.

 

கடகடவென இறங்கி வந்தவன், யாரோ ஏறி வரும் ஓசை கேட்டு நடையை தளர்த்தினான். அவளும் அதே போல் வேகம் குறைத்து ஏறும் நேரம், எதிரே இறங்கி வந்த பிரதீஷை கண்டாள். இருவருக்குள்ளும் பேரிடி மீண்டும் அவர்கள் சந்திக்கும் சூழல் உருவானதில்.

 

பிருந்தாவை திடீரென கண்டதும் அவனுக்கு என்ன பேசுவதென தெரியவில்லை. அவளை நேருக்கு நேர் பார்த்திட தர்ம சங்கடமாக இருந்தது. வீட்டினரால் நிர்பந்தத்தில் பெண் பார்க்க சென்றவன்  அவளை நோகடித்து விட்டோமோ என யோசித்தான் இந்நொடி, அவளை கண்ட நொடியில்.

 

"நல்லாருக்கீங்களா?" என அவளே முதலில் பேசச்சு குடுக்க, அவனுக்கு தான் அவளை நினைத்து பெருமிதமாக இருந்தது. தான் செய்த செயலுக்கு வேறொருத்தியாக இருந்தால் இன்று இவ்விடத்தில் நின்று கூட பேசியிருக்க மாட்டாள் என நினைத்தவன், "ம்ம்.. நீங்க?" என்றான் அமர்த்தலாக.

 

"ம்ம் நல்லாருக்கேன். இங்க தான் என் அத்தைக்கு ஹெர்னியா ஆப்ரேஷன் பண்ணி அட்மிட் பண்ணிருக்காங்க. அதான் பாத்துட்டு போலாம்ன்னு வந்தேன்."

 

"ஓகே.. ஓகே.. நானும் இங்க தான் ஒர்க் பண்ணுறேன்.." என அவள் அறியாத ஒன்றை கூறுவது போல் கூற, அவளோ "தெரியும்" என்றாள் லேசான புன்னகையோடு.

 

"ம்ம்ம் ஓகே.. டேக் கேர்.." என்றவன் அங்கிருந்து கிளம்பும் நேரம், "ஒன் செகண்ட் சார்!" என்றாள்.

 

அவளோ தனது ஹேண்ட்பேக்கில் எதையோ ஒன்றை தீவிரமாக தேட, பிரதீஷிற்கு என்னவென புரியவில்லை. தீவிரமாக தேடியவள் அவனது கார்டை எடுத்து அவனிடமே நீட்ட, குழப்பமாக பார்த்தான்.

 

"அப்பா வேற மாப்பிளை பாக்க போறாரு. அதான் உங்க கார்டை.. நீங்களே.." என அவள் தயங்கி தயங்கி கூற, அவனுக்கோ குடுத்ததை கையில் வாங்கிட சங்கடமாக இருந்தது.

 

"ஸாரி அன்னேக்கி நான் உங்களையோ இல்லை உங்க ஃபேமிலியோவோ இன்சல்ட் பண்ண அப்படி பேசல." என்றவன் மேலும் ஏதோ விளக்க வரும் நேரம் குறுக்கிட்டாள்.

 

"எனக்கு தெரியும் சார். நீங்க கட்டாயத்துல தான் பொண்ணு பாக்க வந்துட்டு இதை குடுத்துட்டு போனீங்க. இப்போ அப்பா வேற மாப்பிளை பாக்குறாரு. அதான் நீங்களே வச்சுக்கோங்க.." என்றவள் கார்டை நீட்டியப்படி இருக்க, அவனுக்கு அதை கையில் வாங்கவே மனம் ஏற்கவில்லை.

 

"மாப்பிளை தானே பாக்குறாரு. ஃபிக்ஸ் ஆகலைனா போன் பண்ணுங்க. அன்னேக்கி சொன்னதை தான் இப்பவும் சொல்லுறேன். அது உங்க கிட்டயே இருக்கட்டும்." என்றவன் அவளின் முகத்தை பார்த்து தீர்க்கமாக கூற அவள் தான் வெகுவாக குழம்பினாள்.

 

அதே குழப்பத்தோடு, "இல்லை.. அப்பா ரெண்டு மாசத்துல மாப்பிளை பாத்துடுவாரு. அதுனால.." என கூறியவள் கார்டை வாங்கிக் கொள்ளுங்கள் என்பது போல் விழிகளை சுருக்க, பிரதீஷிற்கு தான் அவள் கூறியதை கூறிக் கொண்டிருக்கிறாள் என்பதில் கடுப்பானது.

 

"நான் யார்ட்டையும் இவ்வளவு நேரம் நின்னு பேச மாட்டேன். உங்க கிட்ட பேசுறேனா அது ஒரு மரியாதை. ஒரு கார்டு வச்சுக்கிறதுல என்ன கஷ்ட்டம் உங்களுக்கு? மீறி உங்கப்பா மாப்பிள்ளை பாத்துட்டா கிழிச்சு.." என்றவன் இறுதி வார்த்தையை முழுவதும் முடிக்காமல் வாய் மூடிக்கொண்டான்.

 

இதுவரை கார்டை நீட்டியிருந்தவள் உள்ளங்கையில் மடக்கிக் கொண்டாள், அவன் கூறாமல் முடித்த வார்த்தையின் அர்த்தம் புரிந்து.

 

"டேக் கேர்.." என்றவன் வேறேதும் பேசாமல் கடந்து செல்ல, அவன் பேசிய வார்த்தைகளின் முகப்பாவனையில் இருந்து அவளால் அவ்விடம் விட்டு நகர சில நொடிகள் தேவைப்பட்டது.

 

தேன்மழை💖💖

 

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top