8
அடி என்று இரு கைகளையும் விரித்து பல்லவ சிற்பம்போல் விற்பவனை பார்த்தவளுக்கு கொஞ்சமும் மனதில்லை அவனை அடிக்க..
"இப்படி ஒரு தர்மசங்கடத்தில என்னைய மாட்டி விட்டானே.. டேய் கீசா.. நானு எப்படிடா அவனை அடிப்பேன், அவன் செய்யாத தப்புக்கு.. உன்னைய வெளுத்து வாங்கணுமடா.. இந்த ஆட்டத்தை நிப்பாட்டு போதும் என்னால முடியல" என்று நீலாம்பரி கீசாவிடம் மனதுக்குள் புலம்ப..
கீசாவோ நாட்டாமைகாரர் நாராயணன் தோள் மீது அமர்ந்து இரு கைகளாலும் தனது கன்னங்களை தாங்கி அவள் என்னமோ கதை சொல்வது போல தலையாட்டி தலையாட்டி கேட்டுக் கொண்டிருந்தது. அது பாவனையை பார்த்தவளுக்கு சட்டென்று சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது இந்த ரணகளத்திலும் குதுகலமாய்..
'நீலா கொஞ்சமா சிரிச்ச, மொத்தமா போச்சு.. இப்ப தோளு மேல தான் ஏறி உட்கார்ந்து ஆட்டம் போடுறான்.. அடுத்து உன்ற தலை மேலே ஏறி உட்கார்ந்துகுவானாக்கும்' என்று மனதை கட்டுப்படுத்திக்கொண்டு அமைதியாக கையில் சவுக்கை பிடித்தபடி நின்று கொண்டிருந்தாள்.
கீசாவின் கைப்பொம்மையாக ஆடி கொண்டிருப்பவன் எல்லை மீறி நடந்து கொள்வானோ என்ற சிறு பயமும் அவளுக்கு இருக்கத்தான் செய்தது. எக்குத் தப்பாக நடந்து கொண்டால் நாளை பின் கீசாவின் பிடியிலிருந்து அவன் முழுமையாக விடுப்படும் போது, கண்டிப்பாக அவனின் மனநிலை நீலாம்பரியை ஏற்கவே மாட்டான். அதையெல்லாம் விட அவளை நம்பி வேணியும் மருதுவும் இருக்கிறார்கள். அவர்களை எப்படி தனியே தவிக்க விட்டு செல்வது என்று அவள் மனம் எண்ண துவங்க..
'இவ்வளவு தூரம் அலசி ஆராயுறனா? அப்போ அவனை கல்யாணம் கட்டிக் கொள்ள உனக்கு சம்மதமா?' என்று அறிவு கேட்க..
'அப்படியெல்லாம் இல்ல' என்று அவசரமாக சொல்லிக் கொண்டாள். 'கண்ணாலம் என்பதே என்ற வாழ்க்கையில கிடையாது. என்ற தங்கைய நல்ல இடத்தில் கட்டிக் கொடுக்க வேணும்.. மருதுவை நல்லா படிக்க வைச்சு பெரிய உத்தியோகத்தில் அமர வைக்க வேணும்.. இதுவே இப்போதைக்கு என்ற நினைப்பு.. மற்றதுக்கு சிறிதும் இடமில்ல என்ற மனசுல' என்று மனதை திடப்படுத்தி அவள் நிமிர்ந்து நேராக கீசாவை முறைக்க..
"நீலு குட்டி பேக் டூ பார்ம்" என்று நினைத்த கீசா.. இன்னும் என்ன செய்யலாமென்று ஏக்கு போக்காக யோசிக்க ஆரம்பித்தது.
அதே சமயம் எங்கே தன் மகனை நீலாம்பரி அடித்து விடுவாளோ என்று பயந்து இருந்த நாச்சியின் கைகளை இறுகப் பற்றிக்கொண்ட சொர்ணம் கண்களை மூடி கவலைப்படாதே நான் இருக்கிறேன் என்பதாய்!!
"என்ன புள்ள ரொம்ப நேரமா அதையே உத்து உத்துப் பாத்துட்டு இருக்க.. உன்னால அடிக்க முடியலனா சொல்லு.. தனியா ஆளுங்க இருக்காங்க அவுகள வெச்சு அடிக்க சொல்றேன்" என்று திடீர் நாட்டாமை நாலு ஊர் கேட்கும்படி கத்தி கூற..
நீலாம்பரியின் தவிப்போ அதிகமானது.
"ஒருவேளை அவளுக்கும் இஷ்டமா தான் இருக்கும் போல.."
"பெரிய வீட்டு பையனை மயக்கி வெச்சா தம்பி தங்கச்சி கரை ஏத்தலாம்ன்னு நினைக்கிறா போல.."
"நாட்டாமைகார மகனை கட்டிக்கிட்டா நாலு தலைமுறைக்கு உட்கார்ந்து திங்கலாம் இல்லையா.."
"பத்தாததுக்கு அவ தங்கச்சியும் நல்லா பெரிய குடும்பத்துல கட்டிக் கொடுத்திடலாம்ல.."
என்று நாக்கில் நரம்பில்லாத அந்த நாலு பேர் எப்போதும் போல அவளை சுத்தி பேசிக்கொண்டிருக்க.. இதுவரை ஒரு சொல் இல்லாமல் தம்பி தங்கையை தன் சொந்த முயற்சியில் அது வாய்ஜாலமோ.. வாய் தந்திரமோ.. மாய மந்திரமோ தானே தான் பார்த்து வந்திருக்கிறாள், இன்று மற்றவர் தன்னை கேலி பேசும் நிலைக்கு உள்ளாக்கிய கீசா மீது கோபம் வர அந்த கோபத்தினை, காரணகர்த்தாவான ஸ்ரீராமன் மீது காட்டினாள்.
சட்டென்று சவுக்யை எடுத்து ஒரு விளாசு விளாச.. ஸ்ரீராமின் வெற்றுடம்பில் அது சுரீரென்று பட்டு சுள்ளென்று சத்தத்தை ஏற்படுத்த.. அந்த சத்தத்தில் சுற்றியிருந்தவர்கள் உச்சுக் கொட்ட.. ஆனால் அவனோ கைகளை தூக்கியப்படி அவளை பார்த்து இருந்தானே ஒழிய சிறிதும் வழியில் முகம் சுணக்கமோ, கோபமா எதுவுமே இல்லாமல் அந்த அடியை வாங்கினான்.
பார்த்துக்கொண்டிருந்த நாச்சிக்கு நெஞ்சம் பதற, அருகில் இருந்த தன் அத்தையின் தோள் பகுதியில் முகம் சாய்த்துக் கொண்டார் மகன் அடி வாங்குவதை காண சகிக்காமல்.. சொர்ணமும் இவள் அடிக்க மாட்டாள் என்று நம்பியிருக்க.. சட்டென்று அடித்தவுடன் அவரும் ஸ்தம்பித்து விட்டார்.
கீசாவோ "பரவாயில்லையே நீலுக்குட்டி மயக்கத்திலிருந்து வெளியே வந்துடுச்சு போல.. என்னா அடி!!" என்று அதன் குட்டி கண்களை பெரிதாக விரித்து அவளை பார்த்துக் கொண்டிருந்தது. அடுத்த அடி அடிக்க கைகள் நடுங்க மற்ற கையால் நடுங்கும் கரத்தை இறுகப் பற்றிக் கொண்டு மீண்டும் ஒரு அடி வைக்க.. இம்முறையும் அதே சிரிப்புடனும் அவளையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் ஸ்ரீராமன். அவனுக்கு ஏன் வலிக்க போகுது அந்த அடியெல்லாம் தான் கீசா வாங்கி, அவனின் வலியை அது தாங்கிக் கொண்டது.
மூன்றாவது அடியும் கண்களை மூடிக்கொண்டு சற்றே வேகத்தை குறைத்து அடித்துவிட்டாள் நீலாம்பரி. அதையும் பூமாரி பொழிவது போல கைகளை மேலே தூக்கி ஆனந்தமாக வாங்கி நின்று கொண்டிருந்தான் ஸ்ரீராமன்.
நீயேன் ராசா நிக்க மாட்ட..
அடி எல்லாம்தான் கீசா கிட்ட..
அடுத்த அடி அவள் சவுக்கை சுழட்ட சட்டென்று தனது இரும்பு கரத்தினால் அதனை பிடித்தான் ஸ்ரீராமன். இதை நீலாம்பரி சற்றும் எதிர்பார்க்காமல் அதிர்ந்து அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவள் மட்டும் என்ன ஊரே இவர்கள் இருவரை தான் கண்ணை கூட சிமிட்டாமல் ஆவென்று பார்த்துக் கொண்டிருந்தது.
சவுக்கை படித்தவன் அதை கண்சிமிட்டும் நேரத்தில் தன்னை நோக்கி இழுக்க.. சவுக்குடன் பாவை அவளும் சுழன்று கொண்டே வந்து கோமகனின் கரங்களுக்குள் அடைக்கலாமானாள்.
"என்ன அம்மணி அப்படிப் பார்க்கிறீக..
நானும் எம்ஜிஆர் போலத்தான் மூன்று அடிதான் வாங்குவேன்.. அது ஏன் தெரியுங்களா?" என்று அவளைப் பார்த்து அவன் கேட்க.. அவளும் அவனின் ஸ்பரிசத்தில் கட்டுண்டு தெரியாது என்பது போல தலையசைத்தாள்.
"முத அடி உன்ற அனுமதி இல்லாமல் உன்ற கை புடிச்சு இழுத்தத்துக்கு..
இரண்டாவது அடி உன்னைய கட்டி புடிச்சதுக்கு..
மூனாவது அடி பஞ்சாயத்துல வச்சு உனக்கு முத்தம் கொடுத்ததற்கு.."
என்று கூறியவன் நிறுத்தி நிதானமாக அவளை பார்க்க!!
நீலாம்பரியோ என்ன சொல்லுகிறான் இவன் என்று அதிர்ச்சியோடு பார்க்க!!
தன் செயலுக்காக அவனே வருந்தி இந்த அடியை வாங்கிக் கொண்டான் என்ற எண்ணமே சங்கரபாண்டியனுக்கு மகன் மீது மதிப்பை ஏற்படுத்தி.. பாசமாக மகனை பார்க்க!!
நாச்சியோ மகனின் இந்த பேச்சில் என்ன இருந்தாலும் என்ற வளர்ப்பு சோட போகல என்று கண்களைத் துடைத்துக் கொண்டு பெருமையுடன் பார்க்க!!
அர்ஜென்ட் நாட்டாமையான நாராயணன் அப்பாடி நம்மையும் நாட்டாமையா மதித்து நாம கொடுத்த தீர்ப்பை ஏத்த மொத ஆள் நீதாண்டா ராசா என்று சந்தோஷமாக பார்க்க!!
திரண்டிருந்த ஊர் ஜனமோ ஒருவழியா இன்னைக்கு பேச்சுக்கு ஒரு விஷயம் கிடைத்துருச்சு. ஆனாலும் அவ்வளவு நல்லவனா டா நீ என்று ஆச்சரியமாக ஸ்ரீராமனை பார்க்க!!
சொர்ணமோ பேரன் முதலில் காதல் வயப்பட்டதையே நம்பமுடியாமல் இருந்தவர் இப்போது பேசும் பேச்சில் இவன் நம்ம பேரன் தானா? இல்லை வேற ஆளு யாராவது வந்துட்டாங்களா? என்று ஆராய்ச்சியாக பார்க்க!!
ஆலமரத்தின் மேலருந்த மோகினி அடுத்து என்ன நடக்கும் என்று சுவாரசியத்துடன் பார்க்க!!
ஆக மொத்தம் பஞ்சாயத்தில் திரண்டு இருந்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையுடன் பார்க்க.. பார்க்க.. கீஷாவும் அவனை பார்க்க..
"அப்படியெல்லாம் சொல்லுவேன்னு நினைச்சியாடி என்ற சண்டி ராணி.. இல்லவே இல்ல.. எதுக்கு இந்த மூன்று அடிங்கள வாங்கினேனா.. நான் செஞ்சது தப்பு தான். உன்னைய கட்டி தூக்கிட்டு போய் கசமுசா பண்ணாம இன்னமும் உன்னை விட்டு வெச்சிருக்கேனுல்ல அதுக்குதான். அதுவும் பஞ்சாயத்தில் இவ்வளவு நடந்த பிறகும் உன்னைய அப்படியே விட்டு வைச்சேன்னா.. நாளைக்கு ஊருலகம் ஸ்ரீராமன் ஒரு பொம்புள புள்ள கையாள பஞ்சாயத்தில் சவுக்கடி வாங்குனான்னு சொல்லும்.. அதுவே உன்னைய பொண்டாட்டி ஆகிட்டா?" என்றவன் அடுத்த நொடி அவளோடு சுற்றி சுழண்டு சொர்ணம் அப்பத்தா தன் இடுப்பு சுருக்குப் பையில் கணவனின் ஞாபகார்த்தமாக எப்பொழுதும் வைத்திருக்கும் அவரின் தாலி கொடியை எடுத்தவன் அடுத்த நிமிடம் அதை நீலாம்பரியின் கழுத்தில் கட்டியிருந்தான்.
"ஆனா இப்போ பொண்டாட்டி கையால தான் அடி வாங்கினானு சொல்லும். அது தான் புருஷ லட்சணம்" என்று ஒற்றை விரலால் அவளது சங்கு கழுத்தை வருடி அவள் மார்பில் தவழ்ந்து கொண்டிருந்த தாலியை தூக்கி காட்டினான்.
நீலாம்பரி சங்கரபாண்டியன் நாச்சி சொர்ணம் நம்ம நாட்டாமை நாராயணன் பஞ்சாயத்தில் உள்ளவர்கள் அனைவரும் எதிர்பார்க்கவேயில்லை இவனின் செயலை..
"என்னடா இவன்.. ஒரே பஞ்சாயத்துல ஒரு படத்தையே ஓட்டுறான்" என்று பஞ்சாயத்தில் ஒருவன் கூற..
"ஏன்டா தாலி கட்டுறதோட விடுவானா? இல்லை ஃபர்ஸ்ட் நைட் சீனையும் இங்கேயே வைச்சுடுவானா?" என்று குறும்பு மின்ன மற்றொருவன் கேட்டான்.
"அந்த சீன் எல்லாம் நானும் என் நீலுக்குட்டி மட்டும் தான்.. பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை மகனே!! அனுமதி இல்லை" என்று அவர்களைப் பார்த்து ஒற்றை விரலை பத்திரம் காட்டி கூறியவன், பின் நாட்டாமையை பார்த்து "அப்புறம் மிஸ்டர் நாட்டாமை.. எப்படியும் கசமுசா கன்ஃபார்ம். இன்னொரு பஞ்சாயத்தைக் கூட்டி.. நண்டு சிண்டு எல்லாத்தையும் மறுபடியும் அசம்பிள் பண்ணி... இவளுக்கு தாலி கட்ட சொல்லி திரும்பவும் ஒரு பக்கத்துக்கு நீங்க டயலாக் பேசுவீக.. எனக்கு அதுக்கெல்லாம் டையமில்லை. அதான் தாலிய கட்டி அப்புறம் பண்ணலாம்னு" என்று கண் சிமிட்டியவன் "படுத்துக்கிட்டு போர்த்திக்கிட்டா என்ன? போர்த்திகிட்டு படுத்திக்கிட்டா என்ன?" என்று தோளை குலுக்கியவனை பார்த்தவள் எதை கொண்டு அடிக்க என்று அருகில் தேட..
"நோ நோ அம்மணி.. இனி எந்த ஆக்சன் இருந்தாலும் நம்ளோட ரூமுக்குள்ள தானுங்க" என்று கூற அவளோ தலையிலடித்துக் கொண்டாள்.
"நானும் எத்தனையோ பஞ்சாயத்த பார்த்திருக்கிறேன் டா.. ஆனா உன்னைய போல ஒருத்தன பார்த்ததேயில்லடா" என்று அதிர்ச்சி அகலாமல் கூறினார் அந்த நாட்டாமை..
பாவம் யாரு பெத்த புள்ளையோ?
இனி நாட்டாமையா போவாரா? என்பது சந்தேகமே!! ஏன்னென்றால் நம்ம கீசா மற்றும் ஸ்ரீராமின் பர்பாமென்ஸ் அப்படி..
"நீ தாலி கட்டிட்டா நானு உன்ற கூட வந்து வாழ்ந்திடுவேன் நினைச்சியா.. போ.. போ.. அதெல்லாம் முடியாது நான் என்ற வீட்டுக்கு போறேன்" என்று நீலாம்பரி அவனிடம் கத்தியவள், திரும்பி சொர்ணத்தை பார்த்து..
"ஏய்ய் அப்பாத்தான் எந்த நேரத்துல இவனுக்கு நீ பூசப்போட சொன்னியோ.. இவன் என்னான்னா என்னைய வச்சு பூசை போட்டுருவான் போல.." என்று அவரிடம் எகிறியவள்..
"ஆள விடுக சாமிகளா.. உங்களுக்கு ஒரு கும்பிடு.. உங்க பஞ்சாயத்துக்கு ஒரு கும்பிடு" என்று பெரிய கும்பிடு போட்டு திரும்பி நடந்தவள் கீசாவையும் முறைக்க தவறவில்லை..
"வீட்டுக்கு வாடா நீ!! உன் எலும்பை உடைச்சு சூப் வைச்சு குடிக்கிறேன்!! மத்ததை பிரியாணி போட்டுர்றேன்!!" என்று கூற..
அதுவோ ஸ்ரீராமன் பின்னால் ஒளிந்தபடி தலையை மட்டும் வெளியே நீட்டி அவளை பார்த்து இளித்து வைத்தது. மோகினியோ தன் காதல் அரம்பனின் சேட்டைகளையும் லீலைகளையும் கண்டு கண்ணில் காதல் பொங்க அவனைப் பார்த்து பறக்கும் முத்தங்களை வீசியது.
சொர்ணத்திற்கு இந்த நிகழ்வை சற்றும் ஒத்துக் கொள்ளவே முடியவில்லை "அதுவும் என்ற வூட்டுக்காரர் கட்டிய என்ற தாலியதேன் எடுத்து எவளோ ஒரு ரோட்டில் போறவளுக்கு கட்டிட்டானே என்ற பேரன்" என்று புலம்பி முந்தானையால் மூக்கை சிந்தியவாறு வீட்டை நோக்கி நடை போட்டார்.
எப்படியோ தன் மகனுக்கு திருமணம் முடிந்த நிம்மதியில் அதை முகத்தில் காட்டாமல் அத்தைக்கு பயந்தபடியே நாச்சியும் சொர்ணத்தை பின்தொடர்ந்தார்.
நம்ம திடீர்னு நாட்டாமை நாராயணனோ சங்கரபாண்டியனின் கையைப்பிடித்து "அப்பா ராசா.. சங்கரா!! இனிமேலு பஞ்சாயத்துனாலும் சரி உன்ற வீட்டு விவகாரம்னாலும் சரி நீயே பார்த்துக்கோ சாமி!! என்னைய ஆள விடு.. இந்த ஜென்மத்துக்கு எனக்கு இந்த ஒத்த பஞ்சாயத்து போதும்!!" என்று நடையை கட்டிவிட்டார் மனுஷன்.
இப்படி ஆளாளுக்கு பதற வைத்து வெற்றிகரமாக பஞ்சாயத்தில் ஸ்ரீராமன் நீலாம்பரி கல்யாணம் இனிதே முடிந்தது.
என்னது இனிதா? நீலாம்பரி என்னானா ஒரு பக்கம் கோபிச்சுக்கிட்டு போயிட்டா.. இந்தப்பக்கம் ஸ்ரீராமன் தன் வீட்டை நோக்கி நடை போட்டுட்டான். இதுங்க ரெண்டும் எப்ப சேரும்? உங்க மைண்ட் வாய்ஸ் கீசாவுக்கு கேட்டிருக்கும்.
வீட்டில் பஞ்சாயத்தில் நடந்த விஷயத்தை கேள்விப்பட்ட வேணி அக்காவை பார்த்து கோபத்தில் கொந்தளித்து "என்ன அக்கா இப்படி பண்ணிட்டான். உனக்கு புடிக்கலைன்னா அவன் கூட எல்லாம் வாழ வேண்டாம். அவனை கழட்டி விட்டுடலாம். சரியா?"என்று அவசர குடுக்கையாக கூற.. கீசாவின் கைகளோ பரபரவென்று துடித்தது அந்த அவசர குடுக்கையின் தலையில் நங்கு நங்கென்று இரண்டு கொட்டு கொட்ட..
பள்ளி முடித்து வந்த மருது விஷயமறிந்து "வாக்கா.. நாம போய் அந்த ஆள ஒரு வழி பண்ணிட்டு வரலாம். கேட்க யாருமில்லை நினைச்சு அவன் இஷ்டத்துக்கு நடந்துக்கிட்டானா? அப்படியெல்லாம் விட முடியாது. நீ வா போகலாம்" என்று சோர்ந்து அமர்ந்திருந்த அக்காவின் முகத்தை காண பிடிக்காமல் வீறு கொண்டு எழுந்தது அந்த இளஞ்சிங்கம்.
"எது நடந்தாலும் உனக்கு பக்க பலமா நானும் வேணியும் இருப்போம் கா.. நீ எழுந்து வா" என்று அவள் கையை பிடித்து இழுத்து வாசலுக்கு கொண்டு செல்ல.. அதே நேரம் உள்ளே நுழைந்தவனை பார்த்து அதிர்ந்து தான் நின்றனர் மூவரும்.
வேற என்ன புகுந்த வீட்டில் வாழ பெட்டியுடன் அவர்கள் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தான் நம் ஸ்ரீராமன்.
"அடேய் இது என் லிஸ்டிலேயே இல்லையேடா ?" என்று கீசா அவனைப் பார்த்து இவர்கள் மூவரை விட அதிகமாக அதிர்ந்தது.
அடுத்த கணம் மந்திரம் போட்டதுபோல
தன் கையைப் பற்றியிருந்த மருதுவின் கையை உதறிவிட்டு இரண்டே எட்டில் பாய்ந்த நீலாம்பரி.. ஸ்ரீ ராமனிடம் சென்று அவனது கையை பற்றி "வாங்க மாமா.. உள்ள வாங்க" என்று வாய் நிறைய புன்னகையுடன் அழைத்தாள்.
"என்னது மாமா வா?? இது எப்போ?" என்று கீசா நீலாம்பரியை பார்க்க..
வேணியும் மருதுவும் கூட ஒன்றும் புரியாமல் விழித்தனர். கொஞ்ச நேரம் முன்பு வரை கப்பல் மூழ்கி போனதுபோல கன்னத்தை தாங்கிவாறு அமர்ந்திருந்தது என்ன!! இப்போது பாய்ந்து சென்று அவனை வரவேற்பது என்ன!!
அப்போது தான் கீசா சுற்றுமுற்றும் ஏதோ யோசனையுடனே பார்க்க.. மருதுவுக்கு பின்னால் நின்று கொண்டு நமட்டு சிரிப்புடன் கீசாவை பார்த்து கண்ணடித்தது மோகினி.
"எல்லாம் இவ வேலைதானா?" என்று கீசா முறைக்க..
"ஆமாம்" என்றபடி வெட்கத்துடன் மோகினி கீசாவை ரசிக்க..
"ஒழுங்கா போயிரு" கீசா மிரட்ட..
"முடிந்தால் அனுப்பு" மோகினி விரட்ட..
"வேண்டாம்"
"நீ தான் வேணும்"
"கீசனோட மறுபக்கத்த நீ பார்ப்ப"
"அதுக்குத்தான் காத்திருக்கிறேன் கண்ணாளா"
"படுத்தாதே"
"இதுவரைக்கும் கீசாவோட கில்மிஷசம்.. இனிதான் மோகினியின் மோக சதிராட்டம்"
என்று கூறியது மோகினி.
"இருக்கிற பிரச்சனையில இது ஒன்னு புதுசு ஆரம்பிக்குதே" என்று நொந்துபோன கீசா "அச்சச்சோ என் நீலு
க்குட்டி" என்று திரும்பிப் பார்க்க..
அங்கே ஸ்ரீராமனோடு கைகளை கோர்த்து கண்களால் காதல் கவிதை பாடிக் கொண்டிருந்தாள் நீலாம்பரி.
சொக்க ரெடியா?
