அத்தியாயம்-1
“அப்பா மேகதூதம்னா என்னப்பா..”என்றது அந்த அழகிய மழலை குரல்.
“ம்ம் மேகதூதம்னாவா..”அந்த அப்பா என்ற பெரிய உறவுக்கு பெயர் போனவரின் இதழ்களோ புன்னகையில் அழகாக விரிந்தது. பின்னே தான் குளத்திலும், வயல்களிலும், கோவில்களிலும் கூறும் மேகதூதத்தில் வரும் தூதுக்களை பார்த்து தானே தன் அருமை மகள் இந்த கேள்வியை எழுப்புகின்றாள்.
“ம்ம்.. சொல்லுங்கோப்பா.. மேகதூதம்னா என்ன..”என்று குழைவான குரலில் கேட்ட மேகமலரை பார்த்து அழகாக புன்னகைத்த சுவாமிநாதனோ..
“சொல்றேன் பட்டு..”என்றவரோ.. “அது ஒரு தூதுவிடும் காவியம்டா கண்ணா..”என்றவரை அந்த நான்கு வயது சின்ன மொட்டோ புரியாமல் பார்த்தது.
அந்த மொட்டின் இந்த பாவனை அவருக்கு அளவலாவிய சிரிப்பை கொடுக்க.. “புரியலையா என் செல்லத்துக்கு..”என்றவரோ தன் அழகிய கொழுகொழு கன்னங்களை உடைய மகளை தூக்கி தன் மடியில் வைத்துக்கொண்டவர்.. “மேகதூதம்ன்றது அந்த காலத்துல காளிதாசன்ற ஒரு கவிஞரால எழுதப்பட்ட பாட்டுடா கண்ணா.. அந்த புத்தகத்துல நிறைய தூது அனுப்பற பாடல்கள் இருக்கும். அப்டினா.. ம்ம் இப்போ அப்பா உன் அம்மாவ ரொம்ப மிஸ் பண்றேன்ல. அதுக்கு அப்பா என்ன செய்றேன்..”என்றார் தன் மகளை பார்த்து ஆர்வமாக.
“ம்ம்ம்...”என்று தன் கன்னத்தில் விரல் தட்டி அழகாக யோசித்த குட்டியோ.. “ஹான் எப்போதும் அம்மாவ நினைச்சிண்டு அதோ வானத்துல தெரிற மேகத்த பாத்துண்டு அம்மா பேரையே ஜெபிப்பேளே, ம்ம் அப்புறம் நம்ம வீட்டுக்கு பின்னாடி இருக்கற கிணத்து பக்கத்துல உக்காந்துட்டு அம்மாவ நெனச்சிண்டு பேசுவேளே, ம்ம் அப்புறம் நம்ம தாத்தா வீட்டுக்கு போனா சாமி அறைய பாத்து ஏதோ பாடுவேளே..”என்று அவளோ அடிக்கிக்கொண்டே போக.
“ஹாஹா..”என்று தன் மகளின் அறிவாற்றலை கண்டு சிரித்த சுவாமிநாதனோ.. “அதே தான்.. அம்மா நினைவுல அப்பா அவாள நெனச்சி பாடுறேன்ல. அதாவது அம்மா நெனைவா இருக்குற ஒவ்வொரு இடத்தையும் பாத்து அவா நெனைப்புல அவாக்கிட்ட போய் நா அவள ரொம்ப மிஸ் பண்றேன்னு போய் சொல்லு கிணறே, மேகமே, குளமே, சாமி அறையேன்னு தூது அனுப்பறேன்ல அதுக்கு அர்த்தம் தான் இந்த மேகதூதம்.”என்றவர்.
“அதாவது அந்த காலத்துல ஒரு யட்சன் எனும் குபேரனின் பணியாளுக்கு குபேரன் தண்டனையா அவன் நாடு மறந்து, காதலி மறந்து, தொழில் மறந்து விரட்டும்போது ஆடிமாத மேகம் இமயமலை பக்கம் போறத பார்த்து தனிமையில இருக்குற தன் காதலிக்கு தன் அன்பை, தன் காதலை, தான் பிரிவுல வாடுறத இப்படி தன்னோட ஒவ்வொரு வருத்தத்தையும் மேகத்துக்கிட்ட சொல்லி அனுப்புனாறாம்.. அதுதான் மேகதூது. அப்பா அம்மாவ பிரிஞ்சி மிஸ் பண்ற மாதிரி தான் இதுவும்.. புரிதா என் பட்டுக்கு..”என்றார் தன் முகத்தையே ஆர்வமாக பார்த்துக்கொண்டிருக்கும் மகளை பார்த்து.
அவளும் ஆம் என்று வேகமாக தலையாட்டியவளுக்கு என்ன புரிந்ததோ ஆனால் தன் தந்தை தன் இறந்த தாயின் மீது கொண்ட காதலும், அவர் அவரை எவ்வளவு பிரிந்து தவிக்கிறார் என்பதும் அவளுக்கு அப்பட்டமாக புரிந்தது.
“அம்மா உங்களுக்காச்சும் உயிரோட இருந்துருக்கலாம்ப்பா.. பாவம்ப்பா நீங்க..”என்றாள் வருத்தத்துடன்.
அதில் தோன்றிய கசந்த புன்னகையை அடியோடு மறைத்தவர்.. “அப்படி சொல்லப்படாதுடா பட்டு. அம்மா இங்கையே நம்ம பக்கத்துலையே தான் இருக்கா.. அவா நம்மள விட்டு எங்கையும் போகலை இத மட்டும் உன் மனசுல நன்னா பதிய வச்சிக்கோடா கண்ணா..”என்றவர் தன் மகளின் கன்னத்தில் அழகாக முத்தமிட்டார்.
“ம்ம்..”என்று தலையாட்டிய அந்த மழலையோ.. “ஆமா இத யார் எழுதுனதுனு சொன்னேல்ப்பா..”என்றாள் ஆர்வமாக.
“அதுவா காளிதாசன்ற கவிஞர் கண்ணா..”என்றார் தன் மகளின் முகத்தையே பார்த்தவாறே.
“இந்த பேரு நன்னா இருக்குப்பா.. நான் பெரியவளானதும் இந்த பேர்ல இருக்குறவாள எனக்கு விவாகம் பண்ணி தரேளா..”என்றாள் மழலை.
அதில் ஆச்சரியமாக அவளை பார்த்த சுவாமிநாதனோ.. “கண்ணா நோக்கு இப்போ நாலு வயசுதான்டா ஆகுறது. அதுக்குள்ளையே விவாகத்தை பத்தி பேசுறியே கண்ணா..”என்றார் தன் மகளின் கன்னத்தை ஆசையாக வருடியவாறே.
“கூம்… கூம்.. நேக்கு அந்த நேம்ல தான் ஆம்புடையான் வேணும்ப்பா.. கிடைப்பாளா மாட்டாளா..”என்றாள் அடம்பிடிக்கும் தோரணையில்.
தன் மகளின் மனதில் அந்த காளிதாசன் என்ற பெயர் ஆழமாக பதிந்து போனதை கண்டவருக்கோ மனதிற்குள் யோசனைதான். ஆனாலும் சிறிய பிள்ளை தானே ஏதோ அறியாமல் கேட்கின்றாள் என்று அவர் நினைத்தவாறே.. “அதுக்கென்னடா கண்ணா சேமமா பாத்துட்டா போது. என் அழகு கண்ணுக்குட்டிய கையில தாங்காம அவனோட இதயத்துல தாங்குறா போல ஒருத்தன கொண்டு வரேன்டா செல்லம். அவனே உனக்கு வாழ்க்கையோட மொத்த அன்பு, காதல் அத்தனையும் வாரி வழங்குறவனா இருப்பான்.”என்று அவர் அடிக்கிக்கொண்டு போனார்.
அந்த பிள்ளைக்கு என்ன புரிந்ததோ தெரியாது. ஆனால் அவள் மனதிலோ தன் தந்தை காளிதாசன் என்ற பெயரில் தனக்கு மணவாளனை கொண்டு வந்துவிடுவார் என்று நம்பியவளோ.. “ப்பா அம்மாவ கொஞ்சினது போதுப்பா.. நாம புது அம்மாவ பாக்க போலாமா.”என்றாள் பரிவாக.
அதில் அவ்வளவு நேரம் இருந்த இனிமை தன்னை விட்டு விலகிப்போவதாக உணர்ந்த சுவாமிநாதனுக்கோ இன்றைய நாள் தான் தனக்கு இரண்டாவது திருமணம் செய்ய போகிறார்கள் என்பது அப்பட்டமாக முகத்திலடித்தது. அவன் முகம் இறும்பு குண்டை விழுங்கியது போல கடினமுற. அதனை இமைக்காமல் வெறித்த அந்த மழலையோ..
“ஏன்ப்பா ஆங்கிரி பேட் ஆகுறேல்.. உங்களுக்கு துளசி அம்மாவை பிடிக்கலையா..”என்றவளின் கேள்விக்கோ சுவாமிநாதனின் முகம் இன்னும் இறுக்கமாகியது.
‘உன் அம்மாவ தவிர நேக்கு யாரையும், யவரையும் பிடிக்காது கண்ணா… ஆனா பிடிக்க வைக்க எல்லாரும் சேர்ந்து நாடகம் ஆடுறாளே..'என்று யோசித்தவறோ..
“நோக்கு பிடிச்சிருக்காடா துளசிய..”என்றார்
“ஹா… ஓஓஓ ரொம்ப பிடிச்சிருக்கு.. அவா வந்தா நேக்கு குளிக்க, ஸ்கூல் கிளம்ப, அப்புறம் சாப்ட எல்லாம் வசதியா இருக்கும். அதும் இல்லாம இந்த நீள முடிய கட்ட நீங்க எவ்ளோ கஷ்டமா இருக்கு.. ஆனா துளசியம்மா என்ன பாத்த முத நாளே அழகா கட்டிவிட்டாளே.. நீங்க கூட பாத்தேலேப்பா..”என்றாள் ஆர்வமாக.
சுவாமிநாதனுக்கு அது எல்லாம் மண்டையில் ஓடாமல் இல்லை. ஆனாலும் அவர் மனதிலோ தன் அன்புக்கினிய மனைவியான யாமினியை பற்றி நினைத்துப்பார்த்தார். போன வருடம் வரை தன் மனைவி, மகள்,தான் என்று குடும்பமாக சந்தோஷமாக வாழ்ந்தவர்களுக்கோ அடுத்த மாதமே தன் மனைவி யாமினிக்கு மஞ்சள்காமாலை அறிகுறிகள் காட்டாமல் போக கடைசியில் மஞ்சள்காமாலை முற்றி போனதில் யாமினியின் உறுப்புக்கள் ஓட்டை போட்டு செயலிழந்து போனது.
மருத்துவர்கள் அவருக்கு ஒருமணி நேரம் மட்டுமே கெடு கொடுக்க அதனை கொஞ்சமும் சுவாமிநாதன் எதிர்ப்பார்க்கவே இல்லை. அவ்வளவு அன்பு வைத்திருந்தார் தன் மனைவியின் மீது, அவ்வளவு காதல். இத்தனைக்கும் இருவருக்கும் பெரியவர்களால் நிர்ணயிக்கப்பட்ட திருமணம் தான். ஆனால் யாமினியை பார்த்த வேகத்திற்கு சுவாமிநாதனுக்கு மிகவும் பிடித்து போனது.
யாமினியின் குடும்பமாக இருக்கட்டும், சுவாமிநாதனின் குடும்பமாக இருக்கட்டும் இருவருமே நல்ல வசதியுடையவர்கள் தான். யாமினியின் குடும்பம் மசாலா தொழிற்சாலையும், சுவாமிநாதனின் குடும்ப தொழில் சமையலுக்கு தேவையான எண்ணெய் தொழிற்சாலையும் வைத்திருந்தனர். எனவே தொழிலும் தொழிலும் ஒன்றாக சேர முயல ஆனால் அங்கு சேர்ந்ததோ உண்மையான காதல் மனங்கள் தான்.
இருவரின் குடும்பமும் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க நினைக்க சுவாமிநாதனுக்கு தங்க விக்கிரகமாக மின்னும் யாமினியை பார்த்ததும் பிடித்து போனது. யாமினிக்கோ சுவாமிநாதனின் இளகிய மனமும், அவருக்கு கவிதை மற்றும் இலக்கிய அறிவை பார்த்ததும் பிடித்து போனது.
ஏனென்றால் சுவாமிநாதன் என்னதான் தொழிலை வெற்றிகரமாக நடத்தினாலும் அவருக்கு இலக்கியம் சம்பந்தப்பட்ட புத்தகத்தை படிக்கவும் அதனை பற்றி பேசவும் பிடிக்கும். யாமினியும் அப்படிதான். அப்படிதான் இருவரும் ஒரு இலக்கிய கூட்டத்தில் சந்தித்துக்கொள்ள அதுவே தொடர ஆரம்பிக்க இருவருக்குள்ளும் இலக்கியம் போல காதலும் வளர செய்தது.
எனவே இருவரது வீட்டிலும் திருமணம் நல்லபடியாக நடக்க அதன் பின்பு மூன்று வருடம் வண்ணமயமாக போனது அவர்களின் காதல் வாழ்க்கை. அதனை இன்னும் அதிகப்படுத்துவது போல அவர்களின் காதல் பரிசாக மேகமலர் அவர்களின் கையில் கிடைத்தாள்.
அதில் யாரின் கண்ப்பட்டதோ யாமினி மூன்று வயது மகளையும், தன் அன்பு கணவனையும் விட்டுவிட்டு விண்ணுலகம் செல்ல சுவாமிநாதனுக்கோ முற்றிலும் இருண்டு போனது. அந்த மொத்த இருட்டில் ஒற்றை தீபமாக வந்தவள் தான் அவரின் அன்பு மகள் மேகமலர்.
அவளுக்கு பெயரை தேர்ந்தெடுத்தது கூட யாமினிக்கு மிகவும் மிடித்த மேகதூதில் இருந்து தான்.
இப்போது அதனை எல்லாம் நினைத்த சுவாமிநாதனுக்கோ இப்போது தனக்கு பிடிக்காமல் தன் குடும்பம் மட்டும் அல்லாமல் தன் யாமினியின் குடும்பமும் சேர்ந்து இரண்டாவதாக அவருக்கு திருமணம் செய்து வைக்க முயல ஆனால் அதனை தடுக்கத்தான் அவரால் முடியவில்லை.
ஏனென்றால் தன் பெற்றோர்கள், தன் மாமா, அத்தையை கூட சமாளிக்க முடிந்தவரால் தன் மகளின் அம்மா ஏக்கத்தை சமாளிக்கவே முடியவில்லை.
நாள்தோறும், இல்லை மணிதோறும், இல்லை நொடிதோறும் அம்மா வேண்டும், அம்மா வேண்டும் என்று கேட்டுக்கொண்டே இருப்பவளுக்கு அவரும் ஏகப்பட்ட பதிலையும், சமாதானத்தையும் சொல்லிவிட்டார் தான். ஆனால் அதற்காக அவள் அடங்கிய பாடில்லை.
“நேக்கு அம்மா வேணுப்பா.. கிடைப்பாளா மாட்டாளா..”என்று அதிகார குரலில் கேட்கும் தன் மகளிடம் அச்சு அசலாக தன் மனைவியை பார்த்தார் சுவாமிநாதன். ஏனென்றால் யாமினியும் அப்படித்தான் என்னதான் அவள் இலக்கியம், கவிதை என்று சுற்றினாலும் ஒருபக்கம் தொழிலை வெற்றிகரமாக நடத்தும் முதலாளியாகவும் இருந்தாள்.
தொழில் விடயத்தில் யாரும் அவளிடம் நெருங்க முடியாது. அவ்வளவு திமிர்,நிமிர் அவளிடம். அப்பட்டவளின் ஆளுமையும் சுவாமிநாதனுக்கு மிகவும் பிடித்து போனது. ஆனால் என்ன இருந்தாலும் யாமினி தன் கணவனையும், குடும்பத்தையும், குழந்தையையும் கவனிக்க மறந்ததில்லை.
அப்படிப்பட்டவளின் அதிகாரம், பேச்சு, அழகு, செயல் அனைத்தையும் ஒருங்காக கொண்டவளாக இருக்கின்றாளே தன் மகள் மேகமலர். அப்படி இருக்க அவளை அவரால் அதட்டத்தான் முடியுமா, அல்லது அடக்க முடியுமா.
“அம்மா எதுக்குடா கண்ணா அதான் அப்பா இருக்கேனே..”கெஞ்சலாக கேட்டவரை பார்த்து முறைத்தவளோ..
“அதில்லப்பா.. நேக்கு அம்மா வேணும். என் க்ளாஸ்ல படிக்கிற அபிஷேக்கோட அம்மாவும் தான் இறந்துட்டா.. அதுக்காக அவனுக்கு இன்னொரு அம்மா கிடைக்காமலா போய்ட்டா.. நேக்கு மட்டும் ஏன் இன்னும் இரண்டாவது அம்மா கிடைக்கல..”என்று ஆதங்கமாக கேட்டவளை கண்டு அவருக்கோ என்ன செய்வது என்றே தெரியவில்லை.அதன் பின்பு அடம்பிடித்து சாதித்தவளோ இப்போது திருமணத்திற்கு சிறிது நேரத்திற்கு முன்பு தான் அந்த கோவில் குளக்கரையில் உட்கார்ந்து கதை கேட்டுக்கொண்டிருந்தாள்.
“கண்ணா..”ஏதோ சமாதானம் சொல்ல இழுத்தவரை..
“துளசி அம்மா நமக்காக காத்திருப்பாப்பா.. நாம போலாம்..”என்றவாறே அவரின் கையை பிடித்து அழைத்து போனவளை கண்டவருக்கோ மனதில் பலவித சஞ்சலங்கள் நிறைந்து இருந்தது.
காளிதாசனை காண்பாளா?
(காண்பாளா?..)
