தேன்மழை 💞 (10)

 

(@priyadinesh)
Member Moderator
Joined: 2 months ago
Messages: 23
Thread starter  

ராசிகா தான் கோயம்புத்தூர் வந்திருப்பதை அன்னைக்கு தவிர வேறு யாருக்கும் தெரியப்படுத்தவில்லை. அவள் அப்பா, வெறுக்கின்ற காரணம் அறிந்தே ஏன் கூற வேண்டும் என நினைத்தாள். அதனால், அவள் அம்மா ராணியை மட்டும் பஸ் ஸ்டாண்ட் வர சொல்லி போன் செய்து விட்டு, பாலக்காடு செல்ல பேருந்திற்கு காத்திருந்தாள்.

 

அவரும் மகளை காண ஆசையாக வந்தார். பேருந்து நிலையத்தில் தனிமரமான நிலையில் அமர்ந்திருக்கும் மகளை கண்டு, கண்களில் வழிந்த நீரை துடைத்தபடி வேக எட்டுகளில் அவளை ஆரத்தழுவினார்.

 

"ராசிகா! என்ன மா இது இப்படி யாரோ ஒருத்தி மாதிரி பஸ் ஸ்டாண்ட்ல வந்து ஒக்காந்துருக்க. வீட்டுக்கு வா மா." என கண்ணீர் மல்க அழைத்தவரை கண்டு அவளுக்கும் நீர் கரித்தது.

 

"எனக்கு வரணும் ஆசை தான். நான் வந்தா தான் அப்பாக்கு பிடிக்க மாட்டேங்குது. எதுக்கு மா நான் வேற வந்து, அவரை டென்சன் பண்ணனும்? அதான் பேசாம இப்படியே போலாம்ன்னு நினைச்சேன்." என விசும்பலாக பேசியவளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு, வாஞ்சையாக நுதல் முத்தமிட்டார்.

 

"மா.. நான் என்ன பண்ணேன் அப்பா இப்படி வெறுக்குறார்? ஒரே ஒரு ஆட்ல நடிச்சேன் அவ்வளவு தான். அதையும் அவர்கிட்ட சொல்லிட்டு தானே பண்ணேன். முன்னாடியே வேணாம்ன்னு சொல்லிருந்தா நான் விலகியிருப்பேன்.

 

இப்போ ரெண்டு ஆட் நான் நடிச்சாகனும். அதுக்கு அப்பறம் நான் எதுலயும் நடிக்க மாட்டேன். என்னை நீயாவது நம்பு மா." என மகள் கண்ணீர் மல்க பேசியது கண்டு, பதிலேதும் பேசாமல் அணைத்துக் கொண்டார்.

 

"மாஆ.. நீங்க என்னை நம்புறீங்களா? இல்லையா?" என அவரின் அணைப்பை சட்டென விலக்கி கேட்க, தலையசைப்பை மட்டும் பதிலாக அளித்தார்.

 

"நான் கிளம்புறேன் மா. உங்களை பாக்கணும்ன்னு தோணுச்சு அதான் போன் பண்ணேன்." என்றவள் இயலாமையோடு அங்கிருந்து நகர, அன்னைக்கோ பெரும் வேதனையாக இருந்தது. பெற்ற மகள் இவ்வளவு தூரம் வந்து விட்டு வீடு வராமல் செல்கிறாளே என நொந்தவர், "ஒரு எட்டு சாப்பிட்டு போ மா ராசி" என்றார் கெஞ்சலாக..

 

"நான் வரல மா ப்ளீஸ்.. என்னை கட்டாயப்படுத்தாதே.. நான் கிளம்புறேன்.." என்றவள் அன்னையின் பிடியிலிருந்த கையை விலக்க, அவருக்கோ கத்தி அழவேண்டும் போல் இருந்தது. இப்படி எவளோ ஒருத்தி போல் வீட்டிற்கு வராமல் செல்லும் மகளை, அவள் ஏறிய பேருந்து பார்வையில் இருந்து மறையும் வரை தவிப்போடு பார்த்தார்.

 

ஊருக்கு வந்தவள், சில தினங்களுக்கு பின் அவள் கூறிய இரண்டு ஆட் நடித்து முடித்து இதோடு கும்பிடு போட நினைக்க, மிகப்பெரிய கம்பெனி ஒன்றில் இருந்து புதிதாக ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதிலும் நடித்தாள் நல்ல சம்பளம் கிடைக்கும் என்னும் ஆசையில்.

 

அது ஒரு குழந்தைக்கான ஆடைகள் விளம்பரம் என்பதால், அவளோடு வேறு ஒருவன் கணவனாக நடித்தான். இதை டிவியில் காணாமல் இருந்த வரை கௌதமன் நிம்மதியாக தான் இருந்தார். ஆனால், இதை அவர் காதுக்கு அக்கம் பக்கத்தினர் எழுப்பிய நக்கல் கேள்வி தான் வெளியில் தலை காட்ட முடியாதப்படி மனம் நோக வைத்தது.

 

வீடு வந்தவர் பிருந்தாவிடம், "நான் பெத்த தறுதலை நடிச்ச விளம்பரத்தை எடு பிருந்தா" என்றார் தலை வாரிக் கொண்டிருந்த மகளிடம்.

 

அவளோ, தனது அன்னையை பீதியோடு பார்த்தாள். அவரது விழியிலும் அதே பயம் துளியும் குறையாமல், நிறைந்தே இருந்தது.

 

"ஏங்க இப்போ என்ன ஆச்சு? அவ எதுலயும் நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டா." என்றார் ராணி, மகள் அன்று உரைத்த வார்த்தையை உண்மையென நம்பி.

 

"ஹேய் வாயை மூடு பல்லை பேத்துடுவேன். வெளியே தலை காட்ட முடியல. வீடையே காலி பண்ணிடலாம் போல இருக்கு. என்னெல்லாம் பேசுறாங்க தெரியுமா?" என்றவர் படபடவென பேசிய வேகத்திலும், அவரின் கனலான பார்வையை வைத்தே விஷயம் எத்தகையது என புரிந்து கொண்டனர்.

 

பிருந்தா அந்த வீடியோவை போனில் எடுத்து காட்டிட, அவள் அப்பா முழுதாக கூட பார்த்து முடிக்கவில்லை. அப்படியொரு கோப ஜூவாலை கண்ணில் எரிந்தது. உடனே போன் செய்தார் வேதகி அவர்களுக்கு.

 

அவரோ அழைப்பை ஏற்கவில்லை. வெகுவாக ஆவேசம் கொண்டவர், "நான் குறிக்கிற தேதில ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஒரே முகுர்த்தத்துல.

 

இனி மாப்பிளை பாக்குற சம்பிரதாயம்ல எதுவும் கிடையாது. உன் பொண்ணை கல்யாணத்துக்கு ரெடி ஆக சொல்லு. அவ சம்மதிக்கல, இனி அவ போட்டோக்கு மாலை தான் தொங்கும்" என்றவர் அதற்கு மேல் எதுவும் பேசாமல் வெளியேறி விட்டார்.

 

எத்தவறும் செய்யாத பிருந்தா தான் அழுவதா? புலம்புவதா? என்னும் மன நிலையில் இருந்தாள்.

 

அன்னை அவளை சமன் செய்ய முயற்சிக்க அவள் அருகே செல்ல, "உங்க பொண்ணுனால நானும் அப்பாவோட கோவத்துக்கு ஆளாகுறேன். அவளை அடக்கமா இருக்க சொல்லுங்க. இல்லை நேர்ல போய் கையை காலை உடைச்சு போட்டுருவேன்." என அவளும் கடுகடுக்க பேசி செல்ல..

 

ராணி அவர்களின் நிலை தான் எதையும் கூறிடும் நிலையில் இல்லை. தலையில் அடித்துக் கொண்டு, ஓவென அழத் துவங்கி விட்டார். கௌதமன் அவர்கள் கூறிய விடயம் ஒவ்வொன்றும், பிருந்தா வாழ்கை தங்கையின் நடிப்பால் கெட்டு விடக்கூடாது என்னும் நோக்கத்தில் தான். 

 

ஆனால், ராசிகா அவள் விருப்பத்திற்கு எடுக்கின்ற முடிவு குடும்பத்தின் நிம்மதியை சிறிது சிறிதாக சிதைத்துக் கொண்டிருக்கிறது என்பதை துளியும் அறியவில்லை.

 

அன்றைய தினம் வழக்கம் போல் தனது வேலையில் இயல்பாக மூழ்கியிருந்தான் பிரதீஷ். மருத்துவமனைக்கு தன்னுடன் அழைத்து வந்திருந்த குஷியை அவ்வறையின் ஸ்கேன் அறைக்கு வெளியே உள்ள ரூமில் பேசன்ட் அமரும் இடத்தில் உட்கார வைத்து விட்டு தனது வேலையை பார்த்துக் கொண்டிருப்பான்.

 

அவளும் அங்குமிங்கும் ஓடினாலும், சமத்தாக மீண்டும் அவளிடத்தில் வந்து அமர்ந்து கொள்வாள். சில மணி நேரம் வேலையில் மூழ்கியிருந்தவன், மதிய நேரம் போல் ரெஃப்ரஷ் ஆக வெளியே வந்தான்.

 

குஷி அவ்விடத்தில் இல்லாததை கண்டு திடுக்கிட்டவன், ரிஷப்ஷன் நர்சிடம் வினவ அவளோ "பாக்கல சார்" என்று விட்டாள். அந்த ஹாஸ்பிட்டல் காரிடோர் முழுவதும் நடந்தும், தேடி பார்த்து விட்டான். அவள் எங்குமில்லை.

 

அவனது மூளையோ ஏதேதோ யோசித்து மிரட்சி கொள்ள வைத்தது. தன்னுடன் அவளை அழைத்து வந்ததே பெரிய தவறு என தலையில் அடித்துக் கொண்டு, சுற்றி முற்றி தேடி பார்த்தவன் கண்களில் அவள் எங்கும் தென்படவில்லை.

 

எதற்கும் மேலே ஆப்ரேஷன் வார்ட் அருகே உள்ள அறைகளுக்கு சென்று பார்ப்போம் என நினைத்தவன், ஒவ்வொரு அறையாக எட்டி பார்த்து நடந்தான்.

 

சிரிப்பு சத்தமும், பேச்சு சத்தமும் ஒரு சேர அவள் குரல் போல் கேட்டதில் பதறியடித்து அவ்விடம் நோக்கி ஓடினான். பால்கணி முன்பு கலகலவென சிரித்து பேசி கொண்டிருக்கும் குஷியை கண்ட பின்பு தான் அவனுக்கு உயிரே வந்தது.

 

ஓடிச்சென்று அள்ளியவன், "குஷி ஏன் சொல்லாம வந்த? எவ்வளவு நேரம் உன்னை காணாம்ன்னு தேடுறது. ஏன் ரூம் விட்டு போன?" என்றவன் மாறி மாறி அவள் கன்னத்தில் முத்தமிட, அவளும் மழலை மொழியில் ஸாரி என்றதில் தூக்கிக் கொண்டு நகன்றான்.

 

"அப்பறம் வரேன்.. பை.. டாடா.." என அவள் பின்புறம் நின்றிருந்த ஒருத்தியிடம் பேசி வருவதை கவனிக்கவே சில நொடிகள் தேவைப்பட்டது அவனிருந்த பதட்டத்தில்.

 

பட்டென திரும்பியவன் அவளை பார்த்து அதிர்ந்து போக, அவளும் அதே அதிர்ச்சியில் தான் உறைந்திருந்தாள்.

 

அவளை கண்டதும் எந்தவொரு அதிர்வை வெளியே காட்டாதபடி, குஷியோடு பேசி நடக்க முன்னேறியவனை "ஒன் செகண்ட் மிஸ்டர்!" என அழைத்தாள் ராசிகா.

 

விழியாலே என்ன என்பது போல் அவளை பார்த்தான். அவளோ வேகமாக அவன் முன்பு வந்து நின்று, "அன்னேக்கி நைட் என்னை சேஃப் பண்ணுனது நீங்க தான்னு எனக்கு நல்லா தெரியும். நான் இல்லைன்னு பொய் மட்டும் சொல்லாதீங்க. உங்களுக்கு தாங்க்ஸ் சொல்ல நினைச்சா நீங்க இன்சல்ட் பண்ணுறீங்க." என்றவள் படபடவென பேசி விட்டு, அவனையே அவதானித்திருந்தாள்.

 

"ஓஹ்.. ஓகே.." என்றவனின் உணர்ச்சி துடைத்து முகத்தை கண்டு, ராசிகாவிற்கு தான் இவன் என்ன மனுஷன் என்பது போல் இருந்தது.

 

"இனி கீழ தான் இருக்கணும். மேல வரக்கூடாது. இல்லை நாளைல இருந்து வீட்டுல விட்டுட்டு வந்துடுவேன்." என செல்லங்கொஞ்சி பேசி செல்வதை கேட்டு, அவளும் லேசாக புன்னகைத்து விட்டு நகர்ந்தாள்.

 

அவன் இருக்கும் நேரம் எதையும் யோசிக்காதவள், அவன் சென்ற பின்பு வேறொரு ரீதியில் அவனையெண்ணி பெருமிதம் கொண்டாள்.

 

'அவங்க ஒய்ப் எதுவும் கூட வந்திருக்கனால அப்படி சொல்லியிருக்கலாம். அவரை போய் இப்படி தப்பா நினைச்சுட்டோமே. சே.. அவரு சிடுமூஞ்சி போல அதான் யார்ட்டையும் சரியா பேச மாட்டுறாரு..' என தானாக புலம்பியவளுக்கு நேஹாவோடு அவன் ஒன்றாக சாப்பிட்ட நினைவு வரவில்லை. வந்திருந்தால், நிச்சயம் அவனை வசை பாடிருப்பாள்.

 

ஆப்ரேஷன் செய்து படுத்திருக்கும் அத்தையை கவனிக்க சென்று விட்டாள்.

 

நாயகியின் மனம் அமைதி அடைந்திருந்தாலும், அவனுக்கு தான் அவளை பற்றிய சிந்தனை வலுத்தது. மதிய உணவை குஷிக்கு மட்டும் ஊட்டி விட்டு, நர்ஸ் ஒருவரிடம் சிறிது நேரம் பார்த்துக் கொள்ளும்படி கூறினான்.

 

அப்பெண்ணும் அவள் தங்கியிருக்கும் அறைக்கு அழைத்து சென்று விட்டாள். அதன் பின்பு அவனுக்குள் எழுந்த சிந்தனைக்கு தான் அவனாலே தீர்வு காண சிறிது நேரம் தேவைப்பட்டது.

 

எதற்காக அடிக்கடி இவளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை எதிர்பாராது நிகழ்கிறது என யோசித்தவன் விடை தெரியாமல் தவித்தது தான் மிச்சம். அதற்குள், அவனது மூளையோ அவனை கடுமையாக எச்சரித்தது.

 

செய்யாத தவறு ஒன்றிற்கு, வீட்டினரே ஒழுக்கம் கெட்டவன் என பழி சுமத்தியதும், பேசிய சுடு சொல்லும் நியாபகம் வர அவனையும் மீறி அவன் கண்களின் ஓரம் லேசாக கண்ணீர் கசிந்தது. ஆழ மூச்செடுத்து அதை துடைத்துக் கொண்டவன், கேண்டீன் நோக்கி சென்றான்.

 

அங்கு அவனை கண்டதும் வேலை செய்பவர்கள் மற்றும் நர்ஸ் உட்பட மதிய வணக்கம் கூறுவதை, சாப்பிட்டுக் கொண்டிருந்த ராசிகா கவனித்து உச்சபட்ச அதிர்ச்சியடைந்தாள். அவளால் இவன் யாரென்று யூகிக்க முடியவில்லை. கடந்து செல்பவனையே யோசனையாக பார்த்தாள்.

 

அங்குள்ள வேலையாள் ஒருவர் அவனிடம் என்ன வேண்டும் என வினவ, "ஒன் ஆரஞ்சு ஜூஸ்" என கூறி விட்டு போனில் இலக்கானான்.

 

அவன் யாரென தெரிந்து கொள்ள நினைத்தவள், ஏதேர்ச்சியாக எதிரே அமர்ந்து உண்ண வந்த நர்சிடம் அவன் யாரென மட்டும் கேட்டாள். அப்பெண்ணோ, ஸ்கேன் டாக்டர் என கூறியதும் மிகையாக அதிர்ந்து விட்டாள் ராசிகா.

 

'டாக்டர்ரா!! நான் ஏதோ பேசன்ட் கூட வந்திருப்பாங்கன்னு நினைச்சேன்..' என்றவள் ஒருநொடி அவனையே உற்று பார்த்து விட்டு, மீண்டும் உணவு உண்ண துவங்கினாள்.

 

'அக்கா வீதில என்ன பேசிக்கிறாங்க தெரியுமா? நம்ம பையனையும், அந்த டைவர்ஸ் ஆன பொண்ணு மாலதியை பத்தி தப்பா பேசுறாங்க. இவனும் ஏன் கா அந்த பொண்ணு கிட்ட வழியுற மாதிரி பேசுறான்?' என அவனது சித்தி, கல்யாணி அவர்களிடம் கூறிய வார்த்தையை மீட்டிப்பார்த்தவனுக்கு ஜூஸ் கூட பருக மனம் வரவில்லை.

 

அப்போது சுமத்திய பழியில் கூனி குறுகியே நின்றான் தவிர பேசவில்லை. இப்போது பேசினால், நிச்சயம் சும்மா விடமாட்டான்.

 

ஜூஸை கீழே ஊற்றினால் பைத்தியமா இவன் என நினைப்பார்கள் என்று யோசித்தவன், விரக்தியாக குடித்து முடித்து விட்டு எழுந்து நடக்கும் நேரம் அவளை ஏதேர்ச்சியாக கண்டான். அவளும் உண்டு முடித்து விட்டு கைக்குட்டையில் கையினை துடைத்தபடி, அவனை தான் பார்த்திருந்தாள்.

 

அந்நொடியே வேறு எங்கோ பார்வையை திருப்பியவன், விறுவிறுவென வெளியேறினான் எவ்வித சலனமின்று.

 

'இவன் என்ன மனுஷனா? ரோபோ மாதிரி இருக்கான். எனக்கு எவ்வளவு பெரிய ஹெல்ப் பண்ணிட்டு, எதுவும் தெரியாத மாதிரி போறான்' என யோசித்தவளோ, தலையில் அடித்து நாக்கை கடித்துக் கொண்டாள்.

 

'இவருக்கு தான் கல்யாணம் ஆகிடுச்சே. நாம ஏன் தேவையில்லாம பாக்கல. பேசலன்னு யோசிக்கணும்! அழகா இருக்குற ஃபிகருக்குலாம் சீக்கிரம் கல்யாணம் ஆகிடுது!' என தானாக புலம்பிக் கொண்டே அறைக்கு வந்து சேர்ந்தாள் ராசிகா..

 

தேன்மழை💖💖

 

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top