பிருந்தா வீட்டினரும் அதே மனநிலையில் தான் இருந்தனர். படித்து என்ன பிரயோஜனம், இங்கீதம் என்பது துளியும் இல்லை என ராணி கறுவினார். அக்கம் பக்கத்தினர் வேறு, முகம் சுளித்து பேசி சென்றனர் மாப்பிளையின் நடவடிக்கை பற்றி.
வீட்டில் யாரும் நிம்மதியாக இல்லை. தாம் ஒன்று நினைத்து இப்படியாகி விட்டதே என நொந்தவர்கள், பிருந்தாவிற்கு அவ்வப்போது தனி தனியே சென்று ஆறுதல் கூறிட அவளோ கடிந்து விட்டாள்.
"இது சாதாரண விஷயம்ன்னு நானே என் மனசை மாத்திக்க ட்ரை பண்ணுறேன். வந்து வந்து சும்மா அதை பத்தி பேசி யாரும் நியாபகப்படுத்தாதீங்க. இது நான் எக்ஸ்பெக்ட் பண்ணுன ஒன்னு தான்.
மூணு மாசம் சொல்லிருக்கார்ல, வந்தா பாப்போம். அதுவரை உங்களுக்கு என்ன செய்யணும் தோணுதோ அதை பண்ணுங்க. அதை விட்டுட்டு ஆறுதல்ன்னு என்னை டென்சன் பண்ணாதீங்க." என்றவள் எல்லோர் முன்பும் கூடத்தில் திடமாக பேசி சென்றாலும், லேசாக மனம் வலிக்க தான் செய்தது.
அவன் பிடி கொடுக்காமல் பேசி சென்ற பதில் தான். 'தேவையில்லாத ஆசை அதீத வலியையும், துன்பத்தையும் சேர்த்தே தரும்' என அடிக்கடி அவள் தங்கை கூறியது நினைவுக்கு வந்தது. தங்கை வேறு யாருமல்ல ராசிகா தான்.
கௌதமன், "என்ன இருந்தாலும் எனக்கு மனசுக்கு சங்கடமா இருக்கு. 25வயசு ஆகுது. கல்யாணம் பண்ணி வச்சுட்டா நாம அடுத்த பொண்ணுக்கும் சீக்கிரம் ஏதோ ஒன்னை செய்யலாம்." என அவர் மனதில் பட்டதை கூறும் போது, "யாருக்கு அடுத்து கல்யாணம் அப்பா?" என இயல்பாக கேட்டு கொண்டே உள்ளே நுழைந்தாள்.
அவளை கண்டதும் கௌதமன் முகத்தை திருப்பிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தார். பெண்ணவள் மலர் முகமோ வாட்டம் கொண்டது.
ஓடி வந்த அன்னை, "அவர் அப்படி தான் ராசிகா, சீக்கிரம் சரி ஆகிடுவார். நீ அதெல்லாம் கண்டுக்காதே. உனக்காக அல்வா பண்ணிருக்கேன் சாப்பிடு." என்று மகளை சமன் செய்ய, அவரும் ஏதேதோ கூறி தான் பார்த்தார்.
"இப்படியே பொய் சொல்லி சமாளிக்காதீங்க மா. நான் இருக்கிறது தான் அவருக்கு பிரச்சனை. பேசாம எனக்கு முதல கல்யாணம் பண்ணுங்க." என்றவள் குரல் சற்று ஓங்கி ஒளித்ததில் சுகர் மாத்திரை போட எடுத்த கவரை தூக்கி வீசி விட்டு, கடுங்கோவமாக வெளியே வந்தார் கௌதமன்.
வந்தவர், மகளை பளாரென அறைந்தும் விட்டார்.
"ஏங்க என்ன இது? வயசுக்கு வந்த பிள்ளையை இப்படி தான் அடிக்கிறதா?" என ராணி பதறியபடி வந்தவர், அவருக்கும் மகளுக்கும் குறுக்கே நின்றார்.
"அடிங்க.. அடிச்சு கொன்னுடுங்க.. நீங்க தானே பெத்தீங்க நீங்களே கொன்னுடுங்க.. செத்துட்டா நாளைக்கியே பாலை ஊத்திட்டு சந்தோஷமா இருங்க.." என ராசிகாவும் சற்று கோவமாக பேசி விட, அவரோ ராணி அவர்களின் பிடியில் இருந்து திமிறிக் கொண்டு மேலும் அடிக்க பாய்ந்தார்.
"அவ என்ன பேசுறா பாரு? சாகுறாளாம்.. என்ன திமிரு இவளுக்கு? அவ சொன்ன மாதிரி இவளுக்கு தான் இனி மாப்பிள்ளை பாக்க போறேன். பொண்ணா பிறக்கும்ன்னு பாத்தா வளர வளர அப்பனுக்கு எமனா வந்து பிறந்துருக்கு." என்று அவரும் வார்த்தையை அமிலமாக உமிழ, பிருந்தாவும் வேதகி அவர்களும் அப்போது தான் அறையில் இருந்து வந்தவர்கள் இவ்வார்த்தை கேட்டு திடுக்கிட்டு நின்றனர்.
"அப்பா என்ன பேச்சு இதெல்லாம்? நீங்க முதல அவ மேல தேவையில்லாம கோவப்படுறதை விடுங்க. எதுக்கு இப்போ இப்படியொரு வார்த்தை பேசுனீங்க?" என பிருந்தா கேள்வி கேக்க,
"அவ என்ன சொன்னா தெரியுமா பிருந்தா? சாகுறாளாம்.. உனக்கு முன்னாடி இவளுக்கு மாப்பிளை பாக்கணுமா..
எந்த வீட்டுலயாவது, இப்படி பேசுற பிள்ளையை பாத்துருக்கீங்களா? ஆனா, இங்க ஒன்னு அடங்காம இருக்கு.." என அவர் வெகுவாக காய, "ராசிகா உள்ளே போ. ஏன் முறைச்சுட்டு நிக்கிற?" என வேதகி அவர் குரல் கொடுக்கவும், தலை கவிழ்ந்துத்தப்படி அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.
"தம்பி இப்படிலாம் பேசாதீங்க. அவ சின்ன பொண்ணு. என்ன அவ பெரிய தப்பு பண்ணிட்டா. ஏதோ ஒரு விளம்பரத்துல நடிச்சிருக்கா, அவ்வளவு தான். இதுக்கு ஏன் இப்படி பேசுறீங்க?" என வேதகி அவர்கள் நியாயம் கேட்டிட,
"இது தப்பிலையா? வயசு பிள்ளை நாலு பேரு பாக்குற மாதிரி டிவில ஆடுறது நல்லாவா இருக்கு? என்னை கேக்காம அவளா இதுல முடிவு எடுக்கிறா?" என மேலும் அவர் கோவத்தில் எகிறியதில், பிருந்தா அத்தை கையை இறுக பற்றி விட்டாள். அதனை புரிந்து கொண்டவர், மேலும் எதுவும் பேசாமல் மௌனமாகினார்.
"அவ கிட்ட நான் சொல்லி புரிய வைக்கிறேன். இனி அவளா எதுவும் இஷ்டத்துக்கு எதுவும் செய்ய மாட்டா." என ராணி அவர்களோ சமாளிக்க..
"இந்த சமாளிப்பு என்கிட்டே வேணாம். அவளை இதோட அடக்கமா வீட்டுல இருக்க சொல்லு. பிருந்தா மட்டும் வேலைக்கு போனா போதும். அவ வீட்டுலயே இருக்கட்டும். இவ சமபாரிச்சு தான் நான் கோட்டை கட்ட போறதில்ல." என்றார் சீற்றமாக.
பிருந்தா அவளின் அம்மாவை உள்ளே செல்ல கண்ணசைக்க, அவரும் வேலை இருக்கு வரேன் என கூறி நகர்ந்து விட்டார். எல்லோரும் சென்ற பின்பு, கௌதமன் தனியே புலம்புவது போல் மகளை கரித்துக் கொட்டினார்.
பாவம் ராசிகாவோ அறையில் கேவி அழுது கொண்டிருந்தாள். கிடைத்த வாய்ப்பை ஏன் நிராகரிக்க வேண்டுமென எண்ணி ஒரு விளம்பரத்தில் தான் நடித்தாள். அது விஸ்வரூபமாக உருவெடுத்து விட்டது, அவள் வீட்டில் கூறிய நாளில் இருந்து.
அன்றைய தினம் முதல் அவள், கௌதமனுக்கு ஆகாத மகளாகி போனாள். அதிலிருந்து அவளை பார்க்கும் நேரம் பேசிட பபுறக்கணிப்பது, உதாசீனம் செய்வது என அவளது மனதை நோகடித்துக் கொண்டிருக்கிறார்.
அவளின் அழுகுரல் கேட்டு வேதகி அவர்கள் கதவை தட்ட, வேகமாக கண்ணீரை துடைத்துக் கொண்டு கதவை திறந்தாள். நீர் வழியா விட்டாலும், அழுத விழிகளை அவர் கண்டு கொண்டார்.
"அழுதயா ராசி மா?"
"இல்.. லை.." என்றாள் விசும்பலாக.
"சரி விடு அவர் அப்படி தான் கண்டுக்காதே. கொஞ்ச நாள் அத்தை கூட கேரளா வந்திரு. அப்போ உன்மேல தன்னால பாசம் வரும்" என்றவர் ஆதூரமாக அவள் தலை கோதி கூற, அவளோ எங்கும் வரவில்லை என்றாள் பிடிவாதமாக.
"சொன்னா கேழு ராசிகா. நைட் நான் கிளம்புறேன். நீயும் என்கூடவே கிளம்பு. தனியா ஒன்னும் வர வேணாம்." என அவர் கூறும் போது தான், நேற்றைய நள்ளிரவு நிகழ்வு அவள் கண் முன் வந்து அச்சுறுத்தியது.
அவள் விடிந்ததில் இருந்து எல்லோரிடமும் சகஜமாக பேசிக் கொண்டிருந்தாலும், உள்ளுணர்வில் ஒருவித நடுக்கமும் பயமும் இன்னும் அவளிடமிருந்து மாறவில்லை.
எங்கேனும் அவர்கள் விரட்டி வந்து விடுவார்களோ என்னும் பயம் அவள் இயல்பை சோதித்துக் கொண்டு தான் உள்ளது.
"சரி அத்தை போலாம்.." என்றாள் மூக்கினை உறிஞ்சிக் கொண்டு, "என் சமத்து பிள்ளை. டிரஸ் எடுத்து வச்சு கிளம்பு!" என்றார்.
"அத்தை, நான் இனி இங்க வர மாட்டேன். அங்க தான் இருப்பேன்." என்றவளை பார்த்து அவரோ முதலில் திகைத்து விட்டு, "அப்படி சொல்லாதே டா. என்ன இருந்தாலும் உன் அப்பா, ஏதோ கோவத்துல பேசலாம். அதுக்காக வெறுக்காதே மா.." என்றார் அவள் உள்ளங்கை பற்றி.
அவளோ, "இல்லை அத்தை நான் நிஜமா தான் சொல்லுறேன். நான் உங்க கூடவே இருந்துக்கிறேன்" என்றவளை ஆழ்ந்து பார்த்தவர் அவளின் பிடிவாதத்தை புரிந்து கொண்டு, "சரி மா கிளம்பு. நானா உன்னை போக சொல்ல மாட்டேன். நீ எவ்வளவு நாள் வேணாலும் அங்கேயே இரு" என்றார் புன்னகை நிறைய.
கண்ணீரை துடைத்துக் கொண்டு, "தாங்க்ஸ் அத்தை. நான் இப்போவே பேக் பண்ணுறேன்." என்றவள் கிளம்பிட ஆயத்தமானாள்.
வேதகி அவர்களே விஷயத்தை எல்லோரிடமும் கூறி ராசிகாவை அழைத்து செல்ல அனுமதி பெற, ராணி கண் கலங்கியபடி சரி என்றார் பிரிய மனமின்றி. ஆனால், கௌதமன் அழைத்து செல்லும் முன் ஒரு நிபந்தனை வைத்தார்.
"போறது போற, வரப்போ என் பொண்ணா வா. விளம்பரத்துல ஆடுறேன், டிவில நடிக்கிறேன்னு சீரழிஞ்சு போய் வந்துடாதே!" என அவர் மகள் மீது மிக கடுமையாக கடுகடுக்க, அவளோ வழக்கம் போல் பேச வாயெடுக்க பிருந்தா வேண்டாமென கண்ணசைவில் இறைஞ்சியது கண்டு பொறுமை காத்தாள்.
"அக்கா, இவளை கூட்டிட்டு போய் நீங்க தலைகுனியாம இருக்கணும்ன்னு நான் ஊர் சாமியை கும்பிட்டுக்கிறேன்." என்றவர் மகளை தனலாக பார்க்க, அவளோ பல்லை கடித்துக் கொண்டு நின்றிருந்தாள்.
"ராசிகா, போய் டிரஸ் எடுத்து வை.." என அவர் சூழ்நிலை புரிந்து அவளை அங்கிருந்து நகர வைக்க முயற்சிக்க, அவளோ அன்னையை இயலாமையாக பார்த்து விட்டு நகன்றாள்.
இங்கு தான் இந்த களேபரம் என்றால், பிரதீஷ் ஒரு ஆட்டம் ஆடி விட்டே காரில் பாலக்காடு நோக்கி பயணமாகி கொண்டிருந்தான். திட்டுதிப்பென்று, அறையில் இருந்து பெட்டியோடு இறங்கி வந்தவன் கண்டு எல்லோருக்கும் பேரிடியானது.
கிளம்பியவனை சும்மா விடாத சதாசிவம் அவர்களோ, "வெண்ணை, வெட்டி முறிச்சுட்டாரு ஊருக்கு வந்து. இப்போ கிளம்பி போறாரு. பெரிய தேசிங்கு ராஜான்னு நினைப்பு. இவருக்காக அழகி வயசுக்கு வந்த நாள்ல இருந்து வாசலை பாத்து ஒக்காந்துருக்கா.." என அவர் மகன் மீதுள்ள கோவத்தில் கூடத்தில் பேப்பரை படித்தபடி மெல்ல கூறியது அவன் காதில் நன்கு விழுந்தது.
பிரதீஷ் ஏதோ ஒன்றை கபோர்டில் தேடி கொண்டிருக்க, இவர் வாய் மூடி இருக்காது பேசி விட்டார். இதுநாள் வரை பேசாது பொறுமை காத்தவன், பதில் பேசியதில் அதற்கு மேல் யாரும் பேசவில்லை.
"அழகியை கல்யாணம் பண்ணுறேன். கிழவியை கல்யாணம் பண்ணுறேன். அது என் இஷ்டம். இனிமேல் பொண்ணு பாக்குறேன்னு யாராவது வந்தீங்க.." என்றவன் எல்லோரையும் வன்மமாக பார்த்திட, சதாசிவம் அடிக்க பாய்ந்தார்.
அவனோ அவ்விடத்திலே அடி என்பது போல் நெஞ்சை நிமிர்த்தி நின்றருக்க, கல்யாணி அவர்கள் தான் ஓடி வந்து கணவரை தடுத்து கண்ணீர் மல்க மகனிடம் பேசினார்.
"ஏன் டா பிரதீஷ்? ஏன் இப்படி பேசுற? கொஞ்சமாவது இறங்கி போடா. இப்படி பிடிவாதமா இருக்காதே.." என அவன் முகத்தை நோக்கிய பேசிய அன்னையை பாராது அவனது சித்தி தெய்வானையை அழுத்தமாக பார்த்தான்.
"நல்லா படிச்சுருக்கேன். நல்லா சம்பாரிக்கிறேன். அது தெரிஞ்ச எனக்கு ஒழுக்கம்ன்னா என்னனு தெரியும். அதை விட்டுட்டு தேவையில்லாம இனி எந்த வாயாவது பேசுச்சு.." என சித்தியை ஒருவாறு பார்த்து கூறியவன், "என் பொண்டாட்டி எங்க இருக்கான்னு நானே தேடிக்கிறேன். யாரும் பாக்க வேணாம். என் காசுல அழகிக்கோ, கிழவிக்கோ சாப்பாடு போடுறது என் இஷ்ட்டம்.." என்றதோடு எதுவும் பேசாமல் அங்கிருந்து மின்னலாக வெளியேறி விட்டான்.
ஆனால், அவன் மீது அன்பு கொண்ட ஒரே ஆளான குஷி அழுது கொண்டே அவனை நோக்கி ஓடினாள்.
அவள் அழு குரல் கேட்டு நின்றவன், அவளை தூக்கி கொஞ்சி கண்ணங்களில் முத்தங்களை அடுக்கி விடைபெறுவதை கூறினான்.
அவளோ தேம்பியப்படி, "மாமா.. என்னையும்.. உன்கூட கூட்டிட்டு போ.. இவ.. ங்க யாரையும் பிடி.. க்கல.. மம்மி கூட.. அடிச்சுட்டாங்க.." என்றதும் தனது உடன்பிறப்பை முறைத்தான்.
அவளோ கணவன் பின்னால் ஒளிந்து கொள்ள, "யாரு அடிச்சாலும் மாமாக்கு கால் பண்ணு.." என்று அவன் சமன் செய்ய, குஷியோ பிடிவாதமாக தானும் உடன் வருகிறேன் என அடம் பிடித்தாள்.
அவனும் இயன்ற வரை சமன் செய்ய அவள் சமாதானம் ஆகவில்லை. எல்லோரும் வந்து பேசி பார்த்தாயிற்று. அவள் அம்மா, அப்பா கெஞ்சியும் சகிதம் முடியாது என்று விட்டாள்.
அவள் கேவல் கண்டு மேலும் எல்லோருக்கும் கோவம் தான் வந்தது. ருத்ரா அப்போதும் அடிக்கவே பாய, பிரதீஷ் அவளின் அப்பாவான ஹரீஷிடம் அனுமதி கேட்க, பிஞ்சின் விழிகள் மேலும் கரைவதை விரும்பாதவன் அழைத்து செல்ல அனுமதித்தான்.
அவனே உள்ளே சென்று அவளின் துணியை எடுத்து வைத்துக் கொண்டு, வெளியே வந்தவன் எல்லோரிடமும் பை சொல் என்றான். குஷியோ அவள் அப்பாவிற்கு மட்டும் முத்தம் தந்து விட்டு, அவனது கையை பிடித்துக் கொண்டு போலாம் என இழுத்தாள்.
வீட்டினர் யாருக்கும் குஷி அவனோடு செல்வது பிடிக்கவில்லை, சாவித்திரி பாட்டியை தவிர. எங்கு அவனை போலவே வளரும் பிள்ளை குணநலன் மாறி விடுமோ என்னும் பயம் தான் அவர்களுக்குள். அதனால் தான் அவளை செல்ல விடாமல் தடுக்க முயற்சித்தனர்.
அவனும், ஹரீஷிடம் மட்டும் கூறி விட்டு கிளம்பி விட்டான். ருத்ராவிற்கு தான் குழந்தை மீது அதீத கோவம் உண்டானது. தன் பேச்சை கேளாது, அவன் தரும் செல்லத்திற்காக அவனோடு செல்கிறாளே என வெம்பியவள், அனுமதியளித்த கணவனை நையப்புடைக்க நினைத்தாள்.
தேன்மழை💖
