தேன்மழை💞 (2)

 

(@priyadinesh)
Member Moderator
Joined: 2 months ago
Messages: 23
Thread starter  

இரவு10.30 மணி

அந்த பிரதான சாலையில் வேலை முடிந்து பயணித்துக் கொண்டிருந்தான் பிரதீஷ். மாலை நேரம் இருந்த இறுக்கம் தளர்ந்து போயிருந்தது. அதன் முழு காரணம் நண்பன் யாதவின் அழைப்பு தான். அவனுக்கு அடுத்த வாரம் கோயம்புத்தூரில் திருமணம்.

 

அவனது அழைப்பிற்கு பின் மனம் அமைதி கொண்டாலும், ஏனோ ஊருக்கு செல்ல இரு மனதாகவே இருந்தது. குழம்பியப்படியே வீடும் வந்து சேர்ந்தான். அவனது பாட்டி சாவித்திரி தான், அவனின் வரவை எதிர்பார்த்து உண்ணாமல் உறங்காமல் நிலைப்படியில் அமர்ந்திருந்தார்.

 

காரை விட்டு இறங்கியவன் அவரிடம் கூட பேசாது, எந்தவொரு சலனமற்று நடந்து செல்பவனை கண்டு பழியாக கோவம் வந்தது. அது கணவர் சண்முகம் மீதான உச்சபட்ச கோவம். அவன் சில நேரங்களில் மனம் விட்டு பேசுவது அவனது பாட்டியிடம் தான். சொந்தபந்தம் ஏன் தாய் முதற்கொண்டு அனைவரையும் தூரம் தள்ளி வைத்து விட்டு ஒன்றரை ஆண்டுகளாக இங்கிருக்கிறான்.

 

அழைத்தாலும், அழுது குரலிட்டாலும் காது கேளாதவன் போல் உணர்ச்சியற்றபடி கடந்து சென்று விடுவான். இப்போதும் அதே தான் நேர்ந்து விட்டது சண்முகம் அவரால். அதிலும் பெண்பார்க்கும் விடயம் அவன் செவிக்கு இதுவரை வந்து சேராத ஒன்று.

 

வேலை நேரம் தவிர அறையில் டிவி பார்ப்பது, உறங்குவது, தோட்டத்தை பராமரிப்பது இது தான் அவனது பொழுது போக்கு. மனம் கேளாத பாட்டியோ, மெதுவாக கதவை தட்டிட எவ்வித பதில் அளிக்காது கதவை திறந்தான்.

 

"பிரதீஷ்.. கொஞ்சம் சாப்பிடு பா. வயித்தை காயப்போடாதே. சொன்னா கேளுபா.." என அவர் அழாத குறையாக கெஞ்ச, அவனோ பாதி திறந்த கதவின் வழியே வேண்டாமென தலையை மட்டும் அசைத்து விட்டு படாரென அறைந்து விட்டான். அறையில் தூங்கி கொண்டிருந்த சண்முகம் தாத்தாவோ அந்த சத்தத்தில் வாரிச்சுருட்டி எழுந்து கொண்டார்.

 

"இவனை என்ன சொல்லண்ணே தெரியல. ஆட்டம் ஆடலாம். அதுக்குன்னு இப்படியா? அரைவயிறு சோறு சாப்பிடும் போதே இவனுக்கு இவ்வளவு திமிருன்னா, முழுசா சாப்பிட்டா எந்த ஊரு வந்து பாருன்னு மல்லுக்கு நிப்பான்" என அவரோ மெத்தையில் ஒருக்களித்து படுத்துக் கொண்டு கறுவி கொட்ட, அறை நோக்கி வந்த சாவித்திரி பாட்டி காதில் நன்றாகவே விழுந்தது.

 

"அவன் மட்டும் இப்போ எதுவும் சாப்பிடல. அவ்வளவு தான் மரியாதை உங்களுக்கு. மனுஷியா இருக்க மாட்டேன்."

 

"அவன் கூட கூட்டு வச்சா யாரு மனுஷ ஜென்மமா இருப்பாங்க." என ஒருக்களித்து படுத்து முதுகை காட்டிக்கொண்டு நக்கலாக கூற, "என் பேரன் வரலைன்னா, நானும் ஊருக்கு வர மாட்டேன்!" என அவர் அடுத்தொரு இடியை இறக்கி விட்டு சென்றார்.

 

அவன் வராவிட்டாலே சமாளிக்க முடியாது. இவள் வரவில்லை என்றால் மகன்களிடம் என்ன கூறுவேன் என நினைத்தவருக்கு தூக்கம் போனது தான் மிச்சம்.

 

ஓடமுடியாமல் தடுமாறியப்படி வேகமாக நடந்தவர் மனைவியின் பெயரைக் கூறி அழைத்த போதும் அவர் வேறொரு அறையில் நுழைந்து கொண்டு கதவை சாற்றி விட்டார்.

 

மெத்தையில் சரிந்தவன், உறங்க நினைத்த நேரம் அலைபேசி அலறியது. தொடு திரையில் வந்த பெயரைக் கண்டதுமே, ப்ச் என்றவன் சலிப்பாக அழைப்பை ஏற்றான்.

 

"ம்ம் சொல்லு ஷாமிலி எப்படிருக்க?"

 

"நீ இருக்கயா பிரதீஷ்? ஏன் டா ஏன் இப்படி விலகி.." என அவள் பேச்செடுக்கும் நேரம், "ஷாமிலி ப்ளீஸ்.. வேற ஏதாவது பேசு!" என்றான் அவள் பேச்சினை தொடராதபடி.

 

"சரி எப்போ கிளம்புற? யாதவ் மேரேஜ்க்கு நாங்க எல்லாரும் நாளைக்கி ஈவினிங் ஊருக்கு வரோம்."

 

"கிளம்பனும். கிளம்பும் போது டெக்ஸ்ட் பண்ணுறேன்." என்றவன் அவளின் பேச்சிற்கே முற்றுப்புள்ளி வைக்க நினைக்க, கல்லூரி தோழியோ தலையில் அடித்துக் கொண்டு போனை வைத்தாள்.

 

இரண்டு நாட்கள் கடந்திருந்தது. வழக்கம் போல் அவனது வேலைக்கு கிளம்பியவன், அவனது பாட்டியிடம் விடைபெறுவதை கூறி விட்டு நாளை காலை ஊருக்கு செல்லலாம் என்றான். அவன் கூறிய நொடியே கடந்திருக்க, பாட்டி தான் இன்ப வெள்ளத்தில் திகைத்து போனார்.

 

கோயம்புத்தூர் தான் பிரதீஷிற்கு சொந்த ஊர். அங்கு அவன் சித்தி வசிக்கும் துடியலூர்க்கு தான் சென்று கொண்டிருக்கின்றனர். ஊருக்கு செல்வது நண்பன் திருமணத்திற்கு தான் தவிர, இவர்கள் விருப்பத்திற்கிணங்கி அல்ல. ஆனால், வீட்டாட்கள் அவனின் வரவை தான் ஆவலோடு எதிர்பார்த்தனர்.

 

அப்பா - சதாசிவம், அம்மா - கல்யாணி

தங்கை - ருத்ரா, கணவன் - ஹரீஸ், குட்டி - குஷி அண்ணன் - தேவா, அண்ணி - கார்த்திகா

 

இவர்களோடு தெய்வானை குடும்பத்தினரும் அங்கிருக்கின்றனர். வீடே பரபரப்பிற்கு பஞ்சமின்று இருந்தது பிரதீஷ் வரவை எதிர்கொண்டு.

 

"கல்யாணி அக்கா டிஃபன் எடுத்து வைக்கிறேன். மாமாக்கு எடுத்து வைங்க. நேரமாகிட்டே இருக்கு. இப்போ முடிச்சா தான் சீக்கிரம் மதியத்துக்கு சமைச்சுட்டு, கோவிலுக்கு கிளம்பனும்." அவரோ பரபரப்பாய் பேசிட, கல்யாணியோ அவரைக்காயை நறுக்கியப்படி மகனின் சிந்தையில் மூழ்கியிருந்தார்.

 

தெய்வானை அவர்கள், அவர் மகன் ராஜீவ்விடம் கண்ணசைக்க "பெரியம்மா! பெரியம்மா!" என அருகே சென்று அழைத்து தோளை தட்டிய பின்பு தான் திடுக்கிட்டு பார்த்தார்.

 

"அக்கா என்ன யோசனை? பிரதீஷ் நிச்சயம் மனசு மாறிருப்பான்." என தெய்வானை அவர்கள் அக்காவின் மனதை தேற்றிட முயற்சித்தும், உள்ளுணர்வோ ஒரு ஓரம் அதற்கு வாய்ப்பில்லை என குரலிட்டது.

 

"அம்மா.. சித்தி.. அண்ணன் வந்தாச்சு.." என ருத்ரா குரல் கொடுக்க, நறுக்கிய அவரைக்காயை தூக்கி வீசி விட்டு வாசலை நோக்கி ஓடினார் கல்யாணி. எல்லோரும் அதீத களிப்பில் அவர்களை வரவேற்க, பிரதீஷ் துளியும் சலனமற்று நின்றிருந்தான். ஏன் உடன்பிறப்புகள் முதற்கொண்டு கூட அவனை வம்பிழுத்தும், "தலை வலிக்குது ருத்ரா. சீ யூ லேட்டர்." என கூறி கடந்தான்.

 

அவனது உணர்ச்சி துடைத்த முகமும், இந்த அமைதியும் எல்லோரும் அறிந்த ஒன்று தான். அதனால் யாரும் அதனை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. அவர்களை எல்லாம் வெறுத்து ஒதுக்கியவன், தங்கை மகள் மூன்றரை வயது குஷி குட்டியை மட்டும் தூக்கிக் கொண்டு கன்னத்தில் மாறி மாறி முத்தமிட்டான்.

 

அவளும் மாமா என்று பிரியமாக ஒட்டிக்கொண்டாள். அவளுடன் மட்டும் வீடியோ காலில் அடிக்கடி பேசிக்கொள்வான். அவள் மீது அவனுக்கு அதீத பாசம்.

 

"ஸ்கூல் போறயா பப்பி?"

 

"நீ பேசாதே மாமா. ஏன் இவ்வளவு லேட்டா வர?"

 

"கொஞ்சம் வேலை டா." என்றவன் அவள் மூக்கை பிடித்து ஆட்ட, அவளோ அவனது விரலை நறுக்கென கடித்து விட்டாள்.

 

"அய்யோ.. வலிக்குது பாப்பா.. யாரு உனக்கு இதெல்லாம் செய்ய சொல்லி தந்தது?"

 

"ம்ம்ம்.. சின்ன பாட்டி.." என ஓடியப்படி கூறி நகர்ந்தாலும், அப்படியொரு கனல் அவனுக்குள் எழுந்து அமிழ்ந்தது.

 

அந்நிமிடமே ராஜீவ் அறை நோக்கி சென்றான். இருவருக்கும் இரண்டு மாதமே வித்தியாசம். பிரதீஷ் தான் மூத்தவன். லக்கேஜை ஒரு ஓரம் வைத்து விட்டு, ஆசுவாசமாக கட்டிலில் படுத்தவன் உறங்கியும் போனான்.

 

எல்லோர் மத்தியிலும் பிரதீஷ் நடவடிக்கை பற்றிய பேச்சு தான் ஓடிக்கொண்டிருந்தது. தாய் கல்யாணி மனம் தான் தனது ஆற்றாமையை யாரிடம் கூறி அழுவது என தெரியாது, கசங்கிய முகத்தோடு கண்ணீரை துடைத்துக் கொண்டு நகர்ந்தார்.

 

ருத்ரா, "யார் போய் பொண்ணு பாக்குற விஷயத்தை அண்ணா கிட்ட சொல்லுறது?" என அவள் முக்கியமான கேள்வியை முன் வைக்க, அதற்கு மௌனமே ஒருசிலரிடம் பதிலாக கிடைத்தது.

 

அப்பா சதாசிவமோ, "இப்படியே விட்டா இவன் இன்னும் அடங்காம தான் இருப்பான். எல்லாம் என் அம்மாவை சொல்லணும்!" என்றவர் சாவித்திரி பாட்டியை முறைப்பாக பார்க்க, சண்முகம் தாத்தாவோ எரிகின்ற நெருப்பில் நெய் ஊற்றுவது போல் ஆம் என்றார்.

 

சாவித்திரி பாட்டியோ, "நான் நைட்குள்ள பேசி அவனை ஒத்துக்க வைக்கிறேன்." என மகனை சமாளிக்கும் விதமாக அப்போது கூற நினைக்க, தாத்தாவோ "ஆமா நீ கேட்டு கிழிச்ச. மயிலே மயிலே இறகு போடுன்னு அவனை மடில படுக்க தலையை நீவி குடுத்துட்டு இருப்ப." என கடுகடுத்தார்.

 

குஷி குட்டியோ, "யாரும் மாமா பத்தி பேசக்கூடாது. நானே அப்பறமா கேக்குறேன்." என அவள் மழலை மொழியில் கூறிட, ஒருநொடி அவள் பேச்சுத்திறமை கண்டு எல்லோரும் நெகிழ்ந்தாலும் அதை விளையாட்டாக தான் நினைத்தனர்.

 

சதாசிவமோ, "எல்லாம் கோவிலுக்கு கிளம்புற வேலையை பாருங்க. இவன் பேச்சை ஊரை கூட்டி பஞ்சாயத்து வச்சாலும் விடை கிடைக்காத ஒன்னு." என காய்ந்தவர் விழிகளோ தனது அம்மாவை தனலாக காண தவறவில்லை.

 

மாலை 5மணி போல் எல்லோரும் கிளம்பி கோவிலுக்கு செல்ல தயாராக இருந்தனர். ஆள் அரவமே இல்லாதது கண்டு உறங்கி எழுந்தவன், உண்ண நினைத்து கீழே இறங்கி வந்தான். இது தான் காலை உணவு இன்றைய தினம். ஊருக்கு செல்வதை நினைத்தே கடுப்புற்றவன் பட்டினியாகி விட்டான் காலையில் இருந்து.

 

மகன் இலை தேடி எடுத்துக் கொண்டிருப்பதை கண்டு, கல்யாணி ஆசையாக அடுக்களை நோக்கி சென்று உணவு எடுத்து வந்து விரிப்பில் அமர்ந்திருந்தவன் அருகே வைத்தார். அவரோ பரிமாற முற்பட அக்கணமே எழுந்து விட்டான்.

 

"பாட்டி சாப்பாடு எடுத்து வைங்க." என்றிட அன்னையின் மனமோ நஞ்சு கொண்டு குத்தியது போல் இருந்தது. கண்ணீரை அடக்கிக்கொண்டு, அங்கிருந்து நகர்ந்தவரை சதாசிவம் கூரிய விழியால் பார்த்தார்.

 

அண்ணி கார்த்திகாவும் பரிமாற முன்னுக்கு வர, அவளையும் கணவன் தேவா வேண்டாம் என்பது போலே பார்த்தான். 

 

சாவித்திரி பாட்டி இலையில் வரிசையாக பொரியல், கூட்டு, ஊறுகாய், அப்பளம் என வைக்க..

 

அவனோ இலையை ஒரு ஓரம் தள்ளி வைத்து விட்டு, "பழைய சாதம், உளுந்து துவையல். ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸ். பால் ஊத்தி ஃபிளாஸ்க்ல வைங்க போதும்!" என்றதில் விதவிதமாக சமைத்த மனமோ மேலும் வேதனையடைய,

 

"மா.. அண்ணா பத்தி தான் தெரியுமே. ஏன் நீ சமைச்ச?" என்றதில் அடக்க சிரமப்பட்ட கண்ணீர் தானாக ஊற்றெடுக்க, இதனை இனியும் காண முடியாது என நினைத்தவர் காரில் ஏறி அமர்ந்து விட்டார். என்ன தான் கோவம் என்றாலும், இப்படியொரு பிடிவாதமா? அதுவும் பெற்ற தாய் மீதே. மணிக்கொரு முறை அம்மா அம்மா என அழைத்து வம்பிழுத்த நா இப்போது அவ்வார்த்தை மறந்து போனது எண்ணி ஓவென அழுதவரை ருத்ரா முடிந்த வரை சமன் செய்ய முற்பட்டாள்.

 

குஷி குட்டி ஓட்டமாக ஓடி வந்தவள், "மாமா.." என்று கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட, அதே முத்தத்தை திருப்பி அவளுக்கு அன்போடு கொடுத்தான்.

 

"மாமா.. மாமா.." என்று அழைத்துக் கொண்டு, மடியில் அமர முற்பட்டவளை தடுக்காது தூக்கி வைத்துக் கொண்டு கஞ்சியை சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

 

"நீ கோவிலுக்கு வரலையா மாமா. சாப்பிட்டு வா போலாம்." என்றவள் அவன் கன்னத்தோடு கன்னம் ஒற்றி கேட்க, "நீங்க போங்க மாமா குளிச்சுட்டு வரேன்." என சிறுகுழந்தைக்கு ஏற்ப சமாளித்தான்.

 

"மாமா.. மாமா.. உனக்கொன்னு தெரியுமா?" என அவள் ரகசிய குரலில் கேட்டதோடு, சுற்றி முற்றி ஒருமுறை பார்த்துக் கொண்டாள்.

 

"என்ன பப்பி? சொன்னா தானே தெரியும்."

 

"உனக்கு பொண்ணு பாக்க போறாங்க. நீ வருவ தானே?" என்றதுமே இனி கஞ்சி உள்ளே செல்லுமா, கையை உதறி எழுந்தவன் நிறையாத வயிரோடு கை கழுவி விட்டான்.

 

இவையனைத்தையும் சாவித்திரி பாட்டி கண்டும் பேசாமல் தான் இருந்தார். அவனோ அவளை ஒருபுறம் தோளில் போட்டு கை கழுவி விட்டு, "மாமா வரேன்னு சொல்லு. நான் சொல்லுறதை அப்படியே ஒன்னு மாறமா எல்லார்ட்டையும் சொல்லணும்!" என பாடம் நடத்த அவளும் ஆர்வமாக தலையசைத்தாள்.

 

அவன் கூறியதை கேட்டு அவள் இறங்கி ஓட, சாவித்திரி பாட்டி ஜூஸ் அடித்து அவனிடம் நீட்டினார். கையில் வாங்கியவன், அதை அருந்தியப்படி அவள் கூறுவதை கேட்டு அடக்கப்பட்ட சிரிப்போடு சோபாவில் காலாட்டிக் கொண்டு அமர்ந்திருந்தான்.

 

"பாட்டி.. மாமா.. தாத்தா.. மாமா பொண்ணு பாக்க வரேன்னு சொன்னாங்க. ரெண்டு பொண்ணு பிடிச்சிருந்தா.. ரெண்டையுமே பொண்ணு வீட்டுல ஓகே சொல்லுவேன்னு சொல்ல சொன்னாங்க.." என அவள் விளையாட்டாக கூறி கடக்க, சதாசிவத்திற்கு தான் அடக்கப்படாத சினம் விஸ்வரூபமாக எட்டி பார்த்தது.

 

 

தேன்மழை 💖💖

 

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top