Share:
Notifications
Clear all

சுந்தரியே 2

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 11 months ago
Messages: 232
Thread starter  

 

 

நீலாம்பரி...

 

பரம்பரை பரம்பரையாக குறிசொல்லும் குடும்பத்தை சார்ந்தவள்...

அந்த மாசாணி அம்மனின் அருளைப் பூரணமாகப் பெற்றவள்..

தெய்வ கடாக்ஷம் கொண்ட மஞ்சள் பூசிய அழகிய முகம்.. அதில் அழகாக சற்றே பெரிய குங்குமப் பொட்டு..

அர்ஜுனன் காண்டீபமென வளைந்த இரு புருவங்கள்.. அதற்கு கீழே காண்போரை பக்தியுடனும் பயத்துடனும் பார்க்கச் செய்யும் அஞ்சன விழிகள்.. 

பீடத்தில் அமர்ந்து கோலை எடுத்து சுழற்றி கண்களை மூடி மந்திரங்களை உச்சாடனம் செய்தால்.. அந்த ஆத்தாவே அவள் மீது இறங்கி மக்களுக்கு குறி கூறுவது போலவே இருக்கும்..

அவ்வளவு தெய்வ நம்பிக்கை.. தேஜஸ் கொண்டவள்.

 

 

இப்படியெல்லாம் சொல்லத்தான் எனக்கும் ஆசை... ஆனால் உண்மை அப்படி இல்லையே!!

 

இவர்கள் மூதாதையர்கள் யாரோ ஒருவர் உண்மையாலுமே அந்த மாசாணி அம்மன் அருள் பெற்று குறி பார்த்து வந்தார். அதற்குப் பின் வந்தவர்கள் அவரைப்போல அந்தளவிற்கு குறிசொல்லும் திறமையும் அருளும் பெறவில்லை..

 

ஆனாலும் குடும்பத் தொழில் அதையே பின்பற்றி மக்களின் மூட நம்பிக்கையையும் பயத்தையும் அவர்களின் தவறுகளையும் பயன்படுத்தி அதை தங்களுக்கு சாதகமாக்கி அதில் பிழைப்பு நடத்திக் கொண்டு வருகிறார்கள். ஆனாலும் யாரும் அறியா ரகசியம் ஒன்று இருக்கிறது நம்ம நீலாம்பரியிடம்.. அது என்னான்ன.. எபி கடைசியில்... 

 

நீலாம்பரிக்கு ஒரு தங்கை நீலவேணி.. தம்பி நல்லமருது.. தம்பி அருகிலுள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறான். நீலவேணி அக்காவைப் போல 12-ம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டாள்.. நிறுத்திவிட்டு என்ன அதற்கு மேல் படிப்பு ஏறாமல் வீட்டையும் அக்காவிடம் குறி கேட்டு வரும் பக்தர்களை பார்த்துக் கொள்வதே அவளது பிரதான வேலை..

 

நீலாம்பரிக்கு படிப்பு நன்றாக வரும் ஆனால் அவர்களது நிலை படிப்பு பக்கம் அவளை செல்ல விடவில்லை. நீலவேணிக்கோ படிப்பு ஏறவில்லை. அதனால் அவள் அடிக்கடி மருதுவிடம் சொல்வது "நீயாவது இந்த தொழிலை விட்டு வேறு நல்ல வேலைக்கு செல்ல வேண்டும்" என்பதே.. 

 

அவர்களது அன்னை மருது பிறந்த மூன்று வருடத்திலேயே போய் சேர்ந்து விட்டார். அவர்களுடைய அப்பத்தா தான் இதுவரை அவர்களை வளர்த்து வந்தது எல்லாம்.. இப்போது அவரும் வயது முதிர்ந்த காலத்தில் தளர்ந்து போக, காது கேட்காமல் அவர்கள் வீட்டு வாசலில் கிடக்கும் கட்டில்தான் அவரது இருப்பிடம்..

தந்தை இங்கேதான் எங்கேயோ இருக்கிறார் பெரும்பாலும் குடித்துவிட்டு சுற்றுபவர். 

 

"நீலா.." என்று வேணி கத்த..

 

அலங்கி நலுங்கிய நைட்டியை கைலியை போல் மடக்கி கட்டிக்கொண்டு.. கூந்தலை அள்ளி கொண்டையாக்கி.. அவர்கள் வீட்டு பின்பக்கம் இருந்த ஒற்று குடிசையில் மூன்று ஆடுகள் கத்திக் கொண்டிருக்க.. அவற்றுக்கு தான் புல்லை அறுத்துக் கொண்டிருந்தாள் அவள்.

 

வேணியும் திரும்பவும் "நீலா.. நீலா.." என்று கத்த..

 

"இருடி வரேன்.. புல்லு அறுத்துக்கிட்டு இருக்கேனுல" என்று அங்கிருந்து கத்தியவள்.. அறுத்த புல்லை எடுத்துக்கொண்டு வந்து ஆடுகளுக்கு போட்டுவிட்டு.. "ஏலே மருது.. மருது" என்று தன் தம்பியை அழைத்தாள்.

படித்துக் கொண்டிருந்தவன் "என்ன பெரிய அக்கா" என்று வர..

 

"ஏலே... அங்கன அந்த மூனு ஆட்டை கட்டிவைத்து இருக்கேம்ல.. அதுக்கு அந்த புல்லை கொண்டுபோய் போடு.. கத்தி கத்தி காட்டிக் கொடுத்திட போதுக.. அப்பப்போ புல்லையும் தண்ணியையும் மாத்தி மாத்தி வை சரியா" என்றுவிட்டு அவள் உள்ளே செல்ல முனைய..

 

"பெரிய கா.. ஏது இந்த மூனு ஆடும் காலைல நம்ம வூட்ல நான் பார்க்கவே இல்லையே" என்று புல்லுக்கட்டை எடுத்துக் கொண்டு வந்து குடிசையில் இருந்த ஆட்டுக்கு போட்டுக்கொண்டிருந்தான் மருது..

 

"அதான்டா.. ரங்கா வீட்டு ஆடுங்க" என்றாள் கைகால்களை கழுவிக்கொண்டு..

 

"எந்த ரங்கா? நாலு தெரு தள்ளி இருக்கானே? அவனா? நேத்து கூட உன்றகிட்ட ஆடு எங்கன்னு கேட்டு குறி கேட்டான் தானே?" என்றான்.

 

"அவனே தான் டா.." என்றாள்.

 

"எனக்கு தெரியாம எப்போ அந்த ஆட்டையெல்லாம் புடிச்சு வச்ச? பொதுவா நான் தானே இந்த வேலையெல்லாம் பண்ணி வைப்பேன்" என்று அவன் கேட்க..

 

"நேத்திக்கு நம்ம வூட்டுப் பக்கம் வந்து நின்னுக்கிட்டு இருந்துச்சு.. புடிச்சி வச்சு எவனாது கேட்டானா அவனுக கிட்ட காசு கறக்கலாம்னு பார்த்தேன்.. ஆனா அந்த ஆட்டுக்காரனே என்ற கிட்ட குறி கேட்க வந்துட்டான்.. விடுவாவேனா என்ன? அதான் இரண்டு நாளுல கண்டு பிடிச்சு கொடுக்கிறேனு சொல்லி இருக்கேன். நீ வழக்கம்போல நாளைக்கு நைட்டு அவக வூட்டு வாசல்ல கொண்டு இதுகல விட்டுட்டு வந்துரு" என்று கைகால்களை துடைத்துக்கொண்டே அவள் உள்ளே நுழைய, வேணியும் கோபமாக "எவ்ளோ நேரமா உன்னை கூப்பிட்டு இருக்கேன்.. என்ன பண்ணிக்கிட்டு இருக்கே" என்று கத்தினாள்.

 

"எவடி இவ.. புல்லறுக்க போறேன்னு சொல்லிட்டு தானே போனேன். சும்மா சும்மா கத்திக்கிட்டு இருந்தா.. போ போ போய் டீ போட்டுக் கொண்டா" மாலை நேரத்திற்கு யாராவது குறி கேட்டு வருவார்கள் என்று தன் ஒப்பனையை போடச் சென்றாள் நீலாம்பரி.

 

செல்லும் அக்காவின் கையை பிடித்து நிறுத்தி "இங்கன ஒருத்தி கோவமா இருக்கேன் ஏன்னு கேட்க மாட்டியா?" என்று மீண்டும் கத்த..

 

"என்ன வேணி.. நேரம் ஆச்சுல்ல குறிக்கிட்டு ஆராவது ரெண்டு மூணு பேரு வருவாக.. நானு இந்த கலைந்த தலையும் கசங்கிய நைட்டியுமா இருக்க முடியுமா? சொல்றது சுருக்கா சொல்லிட்டு போ" என்று நீலாம்பரி சொல்ல..

 

அதுவரை கோபமாக வெடித்தவள் உதடு பிதுங்கி அழத்தொடங்கினாள்.

 

வழக்கமான அக்கா தங்கை போல சண்டை போட்டுக்கொண்டாலும் அன்னை இல்லாத அவர்கள் இருவருக்கும் அந்த ஸ்தானத்திலிருந்து அனைத்தும் செய்து வருபவள் அவள்தான்.. தந்தையின் பொறுப்பற்ற தன்மையை உணர்ந்ததிலிருந்து.. 

 

"அடியே சொல்லிட்டு அழுடி" என்று கூற..

 

"நீதான சொன்ன.. குறி கேட்கும் வரவுக கொடுக்கிற பணத்துல கொஞ்சம் தனியாக சேர்த்து வெச்சு எனக்கு அடைப்பா வெள்ளி கொலுசு வாங்கி தரேன்.. அத அந்த கடுகு டப்பால போல தான் போட்டு வச்சேன். இப்ப அதைக் காணோம்" என்றாள் அழுதுகொண்டே..

 

தங்கையிடம் வாய் பேசிக்கொண்டு இருந்தாலும் அதற்குள் கண்டாங்கி புடவை கட்டி, மேலாக தூக்கி கொண்டை போட்டு முடித்து அடுத்து பொட்டு வைத்துக் கொண்டிருந்தாள். "என்னடி சொல்ற.. பணம் எங்கே போச்சு?" என்று தனது பணியை முடித்துக் கொண்டு அவளை திரும்பிப் பார்த்து பதற..

 

அதற்குள் ஆட்டுக்கு புல்லை போட்டுவிட்டு வந்த மருது "பணம் என்ன கால் கையா முளைச்சு பறந்து போயிருக்கும்.. எல்லாம் அந்த பரந்தாமன் தான் எடுத்து போயிருப்பாரு" என்று அலுத்துக் கொண்டே சொன்னவன் தன் புத்தகத்தை எடுத்து பாடம் படிக்க அமர்ந்தான். அவன் பாசத்தோடு அழைத்த பரந்தாமன் வேறு யாரும் இல்லை அவர்களின் தந்தையே!!

 

"இந்த வருஷமாவது கொஞ்சம் பெருசா கொலுசு வாங்கி போடலாம்னு நினைச்சேன்..

 போச்சு போச்சு எல்லாம் போச்சு" என்று வேணி அழ..

 

"வரட்டும் அந்த ஆள் இன்னைக்கு இருக்கு அவருக்கு" என்று பரந்தாமனை பந்தாட ரெடியானாள் நீலாம்பரி..

 

எங்கேயாவது டாஸ்மாக் பக்கம் பார்த்தீங்கன்னா அவரை நீலாம்பரி தேடிட்டு வரான்னு சொல்லுங்க... தப்பியோட கொஞ்சம் சான்ஸ் கொடுப்போம்..

 

விரட்டு விரட்டு என்று வேகமாக அருகில் இருந்த டாஸ்மாக் நோக்கி இவள் செல்ல..

போகிற இடத்திலெல்லாம் தன் தந்தை எங்கேயாவது தெரிகிறாரா என்று பார்த்துக்கொண்டே சென்றாள் அவள்..

 

பெரும்பாலும் இவர்கள் குடும்பத்திற்கு குறி பார்க்கிறவர் என்ற மரியாதையை விட சாபம் கொடுத்தால் எங்கே பலித்துவிடுமோ என்றும் பயப்படுவார்கள் தான் ஜாஸ்தி. அதனால் இரண்டு பெண் பிள்ளைகள் தனியாக இருந்தும் அவர்களிடம் யாரும் அவ்வளவு சீக்கிரம் வாளாட்ட மாட்டார்கள் அதுவும் நீலாம்பரியிடம்.. கிட்ட நெருங்கவே அஞ்சி ஓடி விடுவார்கள் அந்த ஊர் காளைகள்..

 

டாஸ்மாக்கில் குடித்து விட்டு டேபிள் மீது கவுந்து கிடந்த தன் தந்தையை பார்த்தவளுக்கு கோபம் பற்றிக்கொண்டு வர அவரை இழுத்துக் கொண்டு வாயில் நல்ல நல்ல வார்த்தைகளால் அவரை அர்ச்சித்துக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தாள்.

 

"ஏப்புள்ள நீலா.. இன்னைக்கு என்ன ஆச்சு அப்பன போட்டு திட்டிக்கிட்டே போறவ" என்று தெரிந்தவர் ஒருவர் கேட்க.. 

 

"வேணி ஆசையா வெள்ளி சலங்கை கொலுசுக்கு சேர்த்து வைத்திருந்த காசை ஆட்டைய போட்டு குடிக்க போயிட்டாரு மாமா" என்று அப்பனை திட்டியவள் "ஒரு நா இல்ல ஒரு நா இந்த கருமம்புடிச்ச டாஸ்மாக் கடைக்கு நான் சூனியம் வைக்க போறானா இல்லையான்னு மட்டும் பாருக" என்று கூறி கொண்டே போக...

 

போதையில் இருந்த குடிமக்களோ அலறி ஓட முடியாமல் தட்டு தடுமாறி தவழ்ந்து ஓட.. "என்னது.. சூனிலமா வைக்க போழியா.. வை வை ராடாத்தி.. இவனுக போழியா சர்ரக்க கொடுத்து ஏமாத்துழானுக.. போதையே ஏழ மாட்டேங்குது.. நீனு வைக்கிற சூனியலத்துல அவனுங்க நழ்ழா ஒரிஜின்னல் சர்ரக்கா கொடுக்கனும்" என்று போதையில் உளறிக் கொட்டினார்‌ பரந்தாமன்.

 

"உன்னையெல்லாம் திருத்தவே முடியாது" என்று விட்டு தன் தந்தையை இழுத்துக்கொண்டு சென்றவள், அவர் பாக்கெட்டில் மிச்சம் மீதி இருந்து பணத்தை எடுத்து தன் தங்கையிடம் கொடுத்தாள்.

 

"வேணி.. அஞ்சறைப்பெட்டி.. அரிசி டப்பா கடுகுடப்பானு பணத்தை வைக்காம, பணத்தை கொண்டு போய் பக்கத்துல இருக்க போஸ்ட் ஆபீஸ்ல போட்டுட்டு வா.. அப்போதேன் நாலு காசு சேர்க்க முடியுமடி" என்று விட்டு வழக்கமாக தான் பூஜை செய்யும் இடத்தில் போய் அமர்ந்து கொண்டாள்.

 

அப்போது தான் அவளை தேடி வந்தான் முருகன். வழக்கம்போல நீலாம்பரி தேடி வருபவர்களை முதலில் விசாரித்து அதற்கு பிறகு உள்ளே அனுப்புவாள் வேணி..

 

"சொல்லுக அண்ணா.. என்ன விஷயமா வந்தியிருக்கீக?" என்று அவனிடம் விஷயத்தை கறக்க...

 

"எனக்கு ஒன்னும் இல்ல அம்மணி.. நம்ம நாட்டாமைகாரங்க தான் நீலா ஆத்தாவ கூட்டிட்டு வரச் சொன்னாக" என்று கூறினான் அவன்.

 

"செத்த இருங்க அண்ணா.. ஆத்தா பூஜைல உட்கார்ந்து இருக்காக.. நானு போய் சொல்லிட்டு வரேன்" என்று உள்ளே சென்றாள் வேணி.

 

வந்தவள் அக்காவை இறுக்க அணைத்துக் கொண்டு.. "அக்கா கடவுள் ஒரு கதவு அடைத்தால் மறு கதவு திறப்பாரு சொன்னது உண்மைதான் போல" என்று சந்தோஷமாக கூற

.

வேணி அக்கா என்று கூறினால் எதுவும் பெரிய பார்ட்டி மாட்டி இருக்கிறது என்று புரிந்து கொள்வாள் நீலாம்பரி..

 

விஷமமான சிரிப்புடன் "சொல்லுடி யார் மாட்டி இருக்காக?" என்று கேட்க..

 

"நாட்டாமைக்காரக தான் மாட்டி இருக்காவுக அக்கா" என்றாள்.

 

"என்னது நாட்டாமைகார வீடா" என்று நீலாம்பரி அதிர..

 

"ஆமாமா.. ஏதாவது பெருசா தான் விஷயம் இருக்கும்.. சீக்கிரம் சீக்கிரம் கிளம்பு" என்று அக்காவை துரிதப்படுத்தினாள் வேணி..

 

நாட்டமைக்காரைப் பற்றி அவளுக்கு தெரியும். அவ்வளவு சீக்கிரம் குறி எல்லாம் கேட்க வர மாட்டார். "இப்போ எதுக்காக குறி சொல்ல கூப்பிடு இருக்காவுக?" என்று உள்ளுக்குள்ளே யோசித்துக் கொண்டே அருகில் வந்த முருகனிடம் பேச்சுக் கொடுத்தாள் நீலாம்பரி..

 

 

ஓரளவுக்கு விவரங்களை தெரிந்து கொண்டு தான் சங்கரபாண்டியன் நாட்டாமை வீட்டுக்கு சென்றாள் நீலாம்பரி..

 

அவளை பார்த்தவுடனே சொர்ணம்‌ அப்பத்தா

"தாயீ.. வா வா வா.. வந்து என்ற பேரன் பாரு.. ஊருக்குப் போகும்போது கலர் கலரா சொக்கா போட்டு சும்மா ஜம்முன்னு போன புள்ள.. இப்போ காவி கலர் சட்டை மாட்டி சாமியாராட்டம் வந்து நிக்குது.. எப்ப பாத்தாலும் பஜ்ரங்கபலி பஜ்ரங்கபலினு பொண்டாட்டி பேர போல சொல்லிக்கிட்டே இருக்கு.. உனக்கு என்ன வேணான்னா தரேன். என்ற பேரன் அந்த அனுமாரு கிட்டயிருந்து எப்படியாவது பிரிச்சு கொடுத்துடு" என்றார் தன் முந்தானையில் உறிஞ்சிய மூக்கை துடைத்தபடி..

 

காதலிக்கிட்ட இருந்து காதலனை பிரிக்க சொல்றது போலல்லவா இருக்கு என்று மனதுக்குள் சிரித்துக் கொண்டவள்.. 'எவ்வளவோ பண்ணியாச்சு இத பண்ண மாட்டோமா என்ன?' எண்ணியவாறு ஸ்ரீராமன் இருந்த அறைக்குள் நுழைந்தாள்.

 

கண்களில் காஜலோடு கன்னியவளை கண்டவனோ ஜெர்க்காகி அவளை பார்த்தவன், எதற்காக தன்னறைக்கு வந்திருக்கிறாள் என்று யோசித்தவனுக்கு தன்‌ அப்பத்தாவை பற்றி தெரியுமாதலால் "ஜெய் பஜ்ரங்கபலி" என்று உருப்போட்டு கொண்டு துளசி மாலையை வேகவேகமாக உருட்டினான்..

 

 

என்ன செய்தாலும் தான் அசர மாட்டேன் என்று மனதில் நினைத்தவன் தன்னிலையில் இருந்து கிஞ்சித்தும்‌ அசராமல் கண்களை மூடி அமர்ந்திருந்தவனை பார்த்தவளுக்கு சிரிப்பாக இருந்தது.

 

அந்த அறையில் இருந்த கட்டில் மெத்தையை எதையும் பயன்படுத்தாமல் கீழே ஒரு போர்வையை விரித்து அதில் நான் அமர்ந்து துளசி மாலையை உருட்டிக் கொண்டிருந்தான் ஸ்ரீராம்..

 

இவளோ கண்களால் அவனை கூர்ந்தப்படி கையிலிருந்து கோலை சுழற்றிக் கொண்டே ஜல் ஜல் எனும் கொலுசுகள் சத்தமிட்டபடி அவனை சுற்றி வந்தாள். 

 

கொலுசுகளின் சத்தமும்.. அவள் மேலிருந்து வீசிய கஸ்தூரி மஞ்சள் மணமும்.. ஜாதிமல்லி பூவின் வாசமும் அந்த பிரம்மச்சரிய கடவுளின் பக்தனை சோதனைக்கு உள்ளாக்க தன் கண்களை இருக்க மூடிக்கொண்டு மீண்டும் மீண்டும் மனதுக்குள் ஆஞ்சநேயரை வணங்கிய படியே கண்களை இறுக்க மூடி அமர்ந்திருந்தான் அவன்.

 

சிறுது நேரத்தில் கொலுசு சத்தம் நின்றுவிட "போய் விட்டாளா?" என்று மெதுவாக ஒற்றைக் கண்ணை திறந்து இவன் பார்க்க அவன் முகத்தருகே தன் முகத்தை வைத்து அவள் சிரிக்க..

 

அவ்வளவு அருகில் அவள் முகத்தை பார்த்தவன் அரண்டு இரண்டு எட்டுக்கள் பின்னால் நகர்ந்து.. தன் நெஞ்சின் மேல் கையை வைத்துக்கொண்டு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கினான். அவளோ அவனின் இந்த செய்கையால் கலகலவென சிரித்தாள்.

 

"ஏய்.. எதுக்கு இப்போ சிரிக்கிற.. உன்னை யார் இங்கன உள்ளவிட்டது.. ஒரு கன்னி பையன் இருக்கிற ரூம்க்குள்ள வந்து நீப்பாட்டு நிக்கிற.. நடக்குற.. சிரிக்குற.. இதையெல்லாம் ரொம்ப தப்பும்மா.. போ.. போ" (ஆமாம் அவனுக்கு மனசு டிஸ்டர்ப் ஆகுதுல்ல.. போம்மா அங்குட்டு)

 

"நான் ஆத்தா டா.. யாரு ரூம்குள்ள போகவும் வரவும் எனக்கு தடையே கிடையாது மகனே" என்று அவள் கூற..

 

"நான் பெண் வாசனையே படாத அந்த மாருதி பக்தன்.. ஆத்தாவே இருந்தாலும் அறைக்குள்ள எல்லாம் வரக்கூடாது. போ.. போ.." என்று விரட்ட..

 

"ஓஹ்.. அவ்வளவு வீக்கா நீ?" என்று அவனை மேலும் கீழுமாக பார்த்து நக்கலாக அவள் கேட்ட..

 

"நான்‌ எல்லாம் ரொம்ப ஸ்டார்ங்க்.. வெளிநாட்டுல அரைகுறை அலைஞ்சவங்கிட்டே நானு படு ஸ்டார்ங்கா இருந்தவன்.. போயும் போயும் உன்றகிட்டையா? நானா? போ ஆத்தா.. மத்தவங்க கிட்ட காட்டு உன்‌ற சித்து வேலைய" அவளை விட படு நக்கலாக கூறியவன் திரும்பவும் கண்களை மூடிக்கொண்டு துளசி மாலையை உருட்ட ஆரம்பித்தான்.

 

அவனை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே, "துளசிமாலை உருட்டுற இந்த கையை சீக்கிரம் நல்லி எலும்பு கடிக்க வைக்கிறேன் பாரு" என்று கூறி விட்டு கீழே சென்றாள்.

 

"அபச்சாரம்.. அபச்சாரம்" என்று தன் காதுகளை மூடிக்கொண்டான்‌ அவன்.

 

அவசரமாக நாச்சியும் சொர்ணாவும் அவளருகே வந்து நிற்க "ஆத்தா என் புள்ளைய பார்த்தியா.. அவன சரியாக்கிடுவல" என்று பயபக்தியோடு கேட்க..

 

பெருமூச்சு ஒன்று இழுத்து விட்டவள், "பார்த்தேன்.. பார்த்தேன். உன்ற புள்ளையை அந்த ஆஞ்சநேயர் நல்லா புடிச்சி வைச்சிருக்கார்" என்றாள்.

 

"அதுக்கு எதும் பரிகாரம் இருக்கா ஆத்தா?"

என்று பவ்யமாக கேட்க..

 

"ஒரு பூச போட்ட எல்லாம் சரியா போயிடும்" என்றாள் அவள்..

 

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சங்கரபாண்டியனுக்கு கொஞ்சமும் இதில் நம்பிக்கை இல்லை. ஆனால் அம்மாவையும் மனைவியும் எதிர்த்து ஒன்னும் செய்யாத நிலையில் தன் பிள்ளை வைத்திருக்க.. அமைதியுடன் பார்த்துக்கொண்டே இருந்தார். அதில் அவள் பூஜை என்றதுமே "பெருசா எதுக்கோ ஆட்டைய போடுறா?" என்று மனதில் எண்ணிக் கொண்டே அவளை முறைத்துப் பார்க்க..

 

"போயா.. போயா.. இதெல்லாம் என்னை என்ன செய்யும்?" என்றவாறு பதிலுக்கு அவளும் சாந்தமாக அவரைப் பார்த்து கையை கூப்பினாள்.

 

"என்ன பூச ஆத்தா போடணும்.. சொல்லு என்னென்னு.. எல்லா ஏற்பாட்டையும் நான் பண்ணிடுறேன்" என்று சொர்ணாம்பாள் கேட்க.. அருகே நாச்சியும் பயபக்தியோடு அவள் வாயிலிருந்து என்ன வார்த்தை உதிரும் என்பது போல பார்த்துக் கொண்டிருந்தார்.

 

"காளை பூச போடனும்" என்றாள் அவள்..

 

"என்னது??!!" என்று அவர்கள் முழிக்க..

 

"பொண்ணுன்னா கன்னிபூச.. பையன்னா காளபூசத் தான் போட முடியும்.. ஏற்பாடு பண்ணுங்க" என்றுவிட்டு அன்றைக்கு உரிய தட்சனையை வாங்கிக் கொண்டே சென்றாள்.

 

நாட்டாமைகாரர் வீட்டிலிருந்து நடந்து சென்றவள் சுற்றும் முற்றும் பார்த்து யாரும் இல்லை என்று உறுதி செய்து கொண்டு அருகில் இருந்த அந்த கண்ணு தெரியாத உருவத்தின் தலையில் ஒரு கொட்டு குட்டி.. "உன்னை என்ற பின்னாடி வராதேனு தானே சொல்லுயிருக்கேன். எதுக்கு என்ற பின்னாடியே தொடுடுத்துக்கிட்டு வர.. அதுவும் நாட்டாமைகார புள்ள கிட்ட நான் பேசுறேன். அங்கேயே நின்னு வெறிச்சி வெறிச்சி பார்க்குற.. கண்ணை நோண்டிபுடுவேன் நோண்டி" என்றாள்.

 

மூன்றடி உயரத்தில் கரிய நிறத்தில் குட்டியூண்டு கண்களும் சப்பையான மூக்கும் அகன்ற வாயும் அழுத்தமான உதடுகளும் கொண்டுயிருந்த அந்த உருவம் ஈஈஈ என்று இளிக்க மொத்த உருவத்தில் அந்த பற்கள் மட்டுமே வெண்மையாகத் தெரிந்தது..

 

"கீசா சிரிக்காதே" என்று அவள் அதட்ட..

 

அவள் என்னமோ பாராட்டுப் பத்திரம் வாசித்

தது போல மீண்டும் தன் கைகளை வளைத்து உடலை நெளித்து வெட்கத்துடன் சிரித்தது கீசன் என்ற அந்த குட்டி சாத்தான்.

 

நான் சொன்ன ரகசியம்.. கீசன்..

 

சொக்க ரெடியா?


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top