தளிர் : 17
கோசலையும் பார்வதியும் இணைந்து சுவாதியை அருணனுக்கு கட்டிவைக்க பாடுபடுவதை ருக்ஷாவும் அறிவாள். சுவாதி சிறு பெண், பெரியவர்களின் ஆசைக்காக அவள் வாழ்க்கையை பாழாக்க விரும்பாது, தன்னையே எண்ணி உருகும் தன்னவன் வாழ்வு சிறக்க, அவள் கைகோர்த்து கொண்டவன் தான் பாலா.
இவ்வுலகில் நிஜ மனிதர்கள் மட்டுமின்றி சில நிழல் மனிதர்களும் தங்கள் வாழ்க்கை முடிந்த பின்பும் தங்களுக்காக வாடும் அன்பானவர்களுக்காக முக்தியின்றி அலைந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
அவள் இறந்ததில் இருந்து பாலாவை பார்க்கிறாள். உயிரற்ற நிழல்கள் பலரை கடந்து வந்தாலும், பாலாவும் அவளும் மட்டும் அடிக்கடி சந்தித்து கொள்ளும் வாய்ப்பு அமைந்திருக்க, “நாம சேர்ந்திருக்க ஏதாவது காரணம் இருக்கும்” என்று சொல்லி பாலா தன் மனைவிக்காக வருந்த, அதே நிலை தானே ருக்ஷாவுக்கும்.
நிழல்கள் இரண்டும் கைகள் இணைத்து நிஜங்களை இணைக்க முயன்று கொண்டிருக்கிறார்கள்.
உன்னத அன்பு உயிர் பிரிந்த பின்பும் தன் உயிரானவர்களுக்காக வாழ்ந்து கொண்டு தான் இருக்கும்.
வேறு கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ராதிகாவை, அருணன் ஏஜென்சியில் “வேகன்சி இருக்கு, நல்ல சம்பளம் கிடைக்கும்” என்று நேர்காணலுக்கு அனுப்பி வைத்ததே பாலா தான்.
அருணனுக்கும், கணவனை இழந்து மூன்று குழந்தைகளுடன் கஷ்டப்படும் அவள் மீது கழிவிரக்கம் தோன்றி தான் வேலை செய்வதை பார்த்து தொடர்ந்து வேலையில் வைத்துக் கொள்ளலாமா? வேண்டாமானு? முடிவு செய்யலாம் என்று எண்ணி வேலையும் கொடுத்தான்.
நம்ம ஆளு தான் சின்சியர் சிகாமணி ஆயிற்றே, அவன் கண்ணசைவுக்கே எல்லா வேலைகளையும் பறந்து பறந்து செய்யும் அவளை பிடித்து தான் போனது. அவளின்றி அவன் எந்த வேலையும் ஓடாது என்ற நிலைக்கு இரண்டு வருடத்தில் கொண்டு வந்து விட்டாள்.
வெளியே எரிந்து விழுந்தாலும், உள்ளே அவள் மீது இப்போதும் கழிவிரக்கம் இருக்க தான் செய்கிறது. அவளை பொறுத்தவரை, அவன் பாஸ் மட்டுமே. செய்யும் வேலையை சிறப்பாக செய்துக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவளுக்கு.
இருவரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் இருவருக்கும் இருந்ததில்லை. ஆனால் தனக்கு கீழ் வேலை பார்க்கும் பெண்ணை பற்றி ஓரளவுக்கு அவன் அறிந்து தான் வைத்திருந்தான். அதே போல் எனக்கு தேவையே இல்லை என்று ஒதுங்கி சென்றாலும், கோசலை மூலம் அருணன் மனைவி இழந்து நிற்கும் சிங்கில் பாதர் என்று மட்டும் அவளுக்கும் தெரியும்.
சம்பவத்தன்று அருணன் அலுவலகத்தில் கோசலையை பார்த்த ருக்ஷா சந்தேகம் கொண்டே அவரை பின் தொடர்ந்து அவரின் திட்டம் அனைத்தையும் தெரிந்துக் கொண்டாள்.
பாலாவிடம் சொன்னால் நீதி, நேர்மை என்று இருவரையும் காப்பாற்றும் வழியை தான் யோசிப்பான். கோசலை வழியிலே போய் தங்கள் இலக்கை அடைய எண்ணியவள், டிரான்ஸ்பார்மர் மீது மர கிளையை ஒடிந்து விழ வைத்து, மின்தடையை ஏற்படுத்தி இருந்தாள்.
ஜெனரேட்டர் ஆன் பண்ண சென்ற செக்யூரிட்டியை பயமுறுத்தி ஓட வைத்தவள், பாவம் அப்போது தான் போனை சரி செய்துக் கொண்டு லிஃப்ட்டில் வந்துக் கொண்டிருந்த சுவாதியையும் விட்டு வைக்கவில்லை.
லிஃப்ட்டில் அவளை சுற்றி சுற்றி வந்து வாயை குவித்து காற்றை ஊதி அவள் உடலை சில்லிட வைத்து, அருகே அரவம் இருக்கும் எண்ணத்தை உண்டு பண்ண, சிறிது நேரமாக அவளை காணாது தேடி வந்த பாலா கண்ணில் பட்டது என்னவோ, சுவாதி பயந்து அலறி, காலை கட்டி கொண்டு ஒடுங்கி இருக்கும் காட்சியும், ருக்ஷா அவளை பய முறுத்தி விளையாடுவதும் தான்.
“ஏங்க… விடுங்க அவங்கள… பாவம் சின்ன பொண்ணு பயப்படுறாங்க விடுங்க” என்று பாலா அவளை தடுக்க முயல,
ருக்ஷாவோ “அட நல்லா இருக்கு ப்ரோ இந்த விளையாட்டு… நீயும் வேணா கொஞ்சம் விளையாடி பாரு” என்றவள் அவள் காதருகில் “சுவாதிஇஇஇ” என்று மெல்லிய குரலில் அழைக்க, சுவாதிக்கோ பயத்தில் வியர்த்து வடிந்து படப்படப்பே வந்து விட்டது.
“நீங்க இப்போ நிறுத்த போறீங்களா? இல்லையா?” என்று பாலா குரல் உயர்த்தி கண்டித்த பிறகே அவளை விட்டு விலகி போனாள்.
இதற்கு நடுவே ராதிகா பலமுறை “மாமா… மாமா…” என்று அழைத்தது செவியில் விழுந்தாலும், அங்கே அவளுக்கு துணையாக அருணன் இருக்கிறான். இங்கே இந்த சிறு பெண்ணை காக்க எண்ணி அவள் அழைப்பை முதல் முறை அவன் தவிர்த்திருக்க, அதுவே அவனுக்கு பெரிய வினையாகி போனது.
சுவாதியை காப்பாற்றி வெளியேற, "அப்பாஆஆஆ" என்ற மகன் அலறலில் சகலமும் மறந்து வீட்டிற்கு சென்றிருந்தான்.
அங்கே அவன் அறுந்த வாலு புதழ்வனோ, ருக்ஷா சொன்னது போல, "லிட்டில் சிங்கம் மாதிரி பறந்து வந்து சண்டை போட போறேன். பஞ்சா அட்டாக்" என்று மதில் மேல் ஏறி நின்று மன்ஷி மீது குதிக்க முயல, "அய்யோ ஆச்சி!!" என்று அவள் பதறி விலகியதில் குட்டியான் பொத்தென்று கீழே விழுந்ததில் மண்டையில் இருந்து இரத்த பீச்சிட்டு வர,
"அய்யோ என் புள்ளை…" என்று பதறி ஓடி வந்த சகுந்தலா, பெண் பிள்ளைகளை பக்கத்து வீட்டில் விட்டு விட்டு, ஆட்டோ பிடித்து மருத்துவமனைக்கு தூக்கி கொண்டு ஓடி வந்தார்.
சிறுவன் விழுந்ததில் இருந்து பலமுறை ராதிகா எண்ணிற்கு அழைத்து பார்த்தார். முழுதாக அழைப்பு சென்று கட் ஆனது. "ஏதாவது வேலையா இருப்பா" என்று எண்ணி மருத்துவமனையில் காயத்திற்கு கட்டு போட்டு வீடு திரும்பியவர், மூன்று பிள்ளைகளையும் தூங்க வைத்து இரவு முழுவதும் அவள் எண்ணிற்கு அழைத்தே ஓய்ந்து போனார்.
ராதிகா அவர் மருமகளாக இருந்திருந்தால் எப்போதோ அவர் அழைப்பை ஏற்று இருப்பாள் அல்லவா! பாலா சென்ற அடுத்த நொடியே, தன் வேலையை துவங்கி விட்டாள் ருக்ஷா.
பேயாக இருந்தாலும் நேர்மையானவன் பாலா. யாரையும் துன்புறுத்த மாட்டான், பயமுறுத்த மாட்டான், வீணாக எதையும் மாற்றவும் மாட்டான்.
அவன் மட்டும் ராதிகா கண்ணிற்கு தெரிகிறான், மனைவியுடன் பேசுகிறான், இது எப்படி சாத்தியமாகுகிறது என்று பலமுறை ருக்ஷாவும் "உன்னால மட்டும் எப்படி இது முடியுது?" என்று கேட்டிருக்கிறாள்.
அப்போதெல்லாம் "அதுக்கெல்லாம் நல்ல மனசு வேணும்ங்க" என்பவனை "நாங்களாம் நாறுன மனசோட இருக்கோம். இவர் ஒருத்தர் தான் நல்ல மனசோட இருக்கார்" என்று கேலி செய்பவள்,
"எனக்கும் என் ரித்து கூட பேசணும்னு ஆசையா இருக்கு. ஒரே ஒருமுறை உன் பொண்டாட்டி உடம்புக்குள்ள புகுந்துக்கவா?" என்று கண்கள் மின்ன கேட்பவளிடம் "அதெல்லாம் தப்புங்க…" என்று எப்போதும் அவன் அனுமதித்தது கிடையாது.
இப்போது அந்த வாய்ப்பை எடுத்துக் கொண்டவள், தன்னவனுடன் பேச எண்ணி தான் சென்றாள். ஆனால் நான்கு வருடங்கள் வெறும் ஆத்மாவாக சுத்தி திரிந்தவளுக்கு இப்போது ஒரு உடல் கிடைத்திருக்க, காதல் கொண்ட மனமோ எல்லை மீறி ஆசைக் கொண்டு அவனை நாடியது. ஏற்கனவே அரைகுறை போதையில் இருந்தவர்கள் முழுதாக சித்தம் இழக்கும் நிலையில் தான் ருக்ஷா ராதிகா உடலை முழுமையாக ஆட்சி செய்ய தொடங்கிய நேரம். எதுவும் பேசும் நிலையில் அவளும் இல்லை. எதுவும் கேட்கும் நிலையில் அவனும் இல்லை.
முழுதாக நான்கு வருடங்கள் கழித்து அவனுடன் இருக்கும் வாய்ப்பு கிடைத்திருக்க, ரித்து என்று அத்தனை காதலுடன் அழைத்தவளை, அவனும் ஸ்வீட்டி என்று மனைவி எண்ணத்தில் அணைத்திருந்தான்.
கொள்ளை காதல் அவன் மீது, கழுத்தில் தாலி ஏறும் முன்னமே அவனுள் மூழ்கி போக ஆசை கொண்டவள், முழுதாக காதல் பித்தம் ஏற, தான் பிரவேசித்த உடலை தனக்கு சாதகமாக்கி அவனுள் இரண்டற கலக்க முயன்றாள்.
அவன் ஆடைகள் அவள் கை பட்டு அறுந்து போக, மோகம் கொண்ட காதலன் அவனும் போதை தாக்கத்தில் அவள் உடைகளை கிழித்தெறிய, சேஃப்டி பின் கொஞ்சம் ராதிகா உடலை காத்தது.
கைகளில் குத்திய பின்களின் வலியில் சித்தம் சிறிது தெளிய, மேலாடை நீங்கி, அங்கம் முழுதும் தன் தேகம் உரசி தன்னுள் மூழ்கி கொண்டிருக்கும் பெண்ணவளை உணர்ந்த நொடி, அவள் கன்னத்தில் பளாரென்று அறைந்து விலகி இருந்தான்.
மோகம் கொண்டு உரிமை இல்லா பெண் தேகம் புசிக்கும் அரக்கன் அல்லவே அவன். அவன் தேடல்களும், அங்க தீண்டல்களும் தன் மனைவியிடம் மட்டுமே என்ற குறிக்கோள் கொண்டவன், போதையில் சித்தம் தவறி மாற்றான் மனைவி மீது கை வைத்ததே உள்ளுக்குள் அனலாக அவனை எரித்தது.
அவன் அறைந்ததில், ருக்ஷா ராதிகா உடலை விட்டு வெளியேறி இருக்க, ராதிகாவோ பொத்தென்று சோபாவில் விழுந்தாள். அந்த அடி தான் இப்போது வரை ராதிகா கன்னம் கபகபவென எரிய காரணம். போதையில் இருந்தவனுக்கு போதை தெளிய எல்லாம் நினைவு வர, அவளுக்கு இப்போது வரை எதுவும் நினைவு இல்லை.
ருக்ஷா எண்ணம் நிறைவேறவில்லை தான்… ஆனாலும் கண்களில் அத்தனை மகிழ்ச்சி, எந்த நிலையிலும் தன்னை தவிர வேறு பெண்ணை சிந்தையால் கூட தீண்டாத கணவன் கிடைப்பது வரம் அல்லவா! இதை விட ஒரு பெண்ணுக்கு வேறென்ன வேண்டும்.
அவன் மீது இன்னும் காதல் கூடியது அவளுக்கு. இவன் நல்வாழ்க்கை வாழ தன்னையே வேண்டுமானாலும் அந்த கடவுளுக்கு காணிக்கையாக கொடுக்கலாம். அவனுக்கு மனநிறைவான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்காது தான் இந்த மண்ணுலகம் விட்டு செல்ல போவதில்லை என்று மீண்டும் தன் மனதில் சபதம் எடுத்துக் கொண்டாள்.
ஆடை களைந்து அரை மேனியாக மயங்கி கிடந்த ராதிகாவுக்கு தன் ஷர்ட்டை அணிவித்து விட்டது எல்லாம் அருணன் தான். ஒரு கட்டத்திற்கு மேல் செயல்பட முடியாது, ஓய்ந்து அவள் அருகே விழுந்தவனும் இமை மூடிட, அதன் பிறகு தான் ரணகளமே நடந்து முடிந்து விட்டதே.
அன்றைய இரவு முழுதாக தாம்பத்தியம் நடக்கவில்லை என்று அவனுக்கும் தெரியும். ஆனால் அவள் மேனியை தீண்டிய அவன் கைகளையும், அவள் அந்தரங்கத்தை ஸ்பரிசத்தை இதழ்களையும் இல்லை என்று மறுத்திட முடியாதே.
அதுவே அவனை ஒவ்வொரு நொடியும் குற்றம் சாட்டி கொண்டிருக்கிறது.
இப்போதும் மெத்தையில் படுத்து கண் மூடி கிடந்தவன், எண்ணவலையில் ராதிகா மட்டுமே ஆட்சி செய்ய, அவன் தூக்கம் கூட தொலைந்து போனது.
நடு சாமத்தில் எழுந்து பால்கனி வழியே, இருண்டு கிடந்த வானில் ஒன்றையாக நின்று ஒளி கொடுக்கும் வெள்ளி நிலைவை வெறித்தவன் விழிகள், எதெட்சையாக தன் வீட்டு தோட்டத்தில் பதிய, அவனை போலவே தூக்கம் தொலைத்து நின்றுக் கொண்டிருந்தாள் ராதிகா.
தனியாக நின்றிருந்தவள், கண்களில் இருந்து வடிந்த கண்ணீர் துளிகள் நிலவெளியில் வைர கற்களாய் மின்ன, அவன் விழிகளோ சுற்றம் மறந்து அவளை மட்டும் தான் பார்த்துக் கொண்டிருந்தது.
அவன் பார்வையின் குறு குறுப்பு அவளையும் தாக்கியதோ என்னவோ! ஏதோ உந்துதலில் தலை நிமிர்ந்து பார்த்தவள் விழிகளும் அரை நொடி அவன் விழிகளை எதிர் கொண்டது.
சட்டென்று சுயம் பெற்று திரும்பியவள், அவனை ஒரு வெற்று பார்வை பார்த்து விட்டு வீட்டுக்குள் செல்ல, அவள் பார்வையே அவனை குற்றம் சாட்டிய உணர்வு அவனுக்கு.
அருகே இருந்த சுவரில் சாய்ந்து நின்று தலையை இரண்டு முறை சுவரில் முட்டியவன், அடுத்த கணமே வேக நடையுடன் அவளை நோக்கி வந்தான்.
தளர்ந்த நடையுடன் உள்ளே வந்தவள் சுதாகரிக்கும் முன்னமே, எதிரில் மின்னல் வேகத்தில் வந்தவன் அவளை அணைத்திருக்க, விலக்கும் எண்ணமில்லாது மனதளவில் சோர்ந்து போனவளுக்கும் இப்போது ஆறுதலான அணைப்பு தேவைப்பட்டது.
மனதை அழுத்திய உணர்வு விசும்பலாக வெளிப்பட்டு, அவள் கண்ணீர் துளிகள் அவன் மார்பை நனைக்க, அவள் கரங்களும் அவனை அணைத்துக் கொண்டது.