13
முகத்தில் பயம் இல்லை.. உடல்மொழியில் படபடப்பு இல்லை.. வியர்வை வழிந்து ஊற்றவில்லை.. கண்களில் வலியில்லை.. மொத்தத்தில் அவர் நடிக்கிறார் என்று புரிந்தது ராசாமணிக்கும் அன்புச்செழியனுக்கும்.
"ஏன்தான் இப்படி இருக்கிறாளோ?" என்று கோபப்பட்டாலும் அவரிடம் நேரடியாக ஏன் நடிக்கிறாய் என்று கேட்காமல் "கிளம்பிப் போகலாம் ஆஸ்பத்திரிக்கு" என்றார் அன்பு.
"அதெல்லாம் முடியாது.. முதலில் என் பையனை பாக்கணும்.. போற என் உசுரு என் பையன் மடியிலேயே போகட்டும். அனாமத்தா ஆஸ்பத்திரில எல்லாம் போக வேண்டாம். முதல்ல என் பையனும் கூப்பிடுங்க" என்று மறுபடியும் அவர் அலற..
"டேய் அன்பு . உன் பொண்டாட்டிக்கு நெஜமாவே உடம்பு முடியல போலடா.. ஏற்கனவே உடம்பு முடியாம தான் தயாவுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணனும்னு நெனச்சா.. இப்ப பாரு ரொம்ப நெஞ்சு வலிக்குது போல" என்று ராசாமணி அழுகுரலில் கூறவும், தன் நடிப்பை நம்பி விட்டார்கள் என்று நெஞ்சை இன்னும் அழுத்திப் பிடித்துக் கொண்டார் வந்தனா.
"ஆமா அத்த.. என் நினைப்பு பூரா என் புள்ளை மேல தான் இருக்கு. அவனை கொஞ்சம் வர சொல்றீங்களா!" என்று மீண்டும் மகனை அந்த அறையிலிருந்து வரவழைப்பதே குறி என்று கூறினார்.
"நானும் அதை தான் வந்தனா சொல்றேன். பாவம் இந்த வயசுலேயே உனக்கு நெஞ்சுவலி.. இப்பவோ அப்பவோனு இருக்க.. நேர காலத்துல ஒரு பேரப்பிள்ளை பார்த்தேனா உன் கட்டையும் நிம்மதியா வேகும் இல்லையா?" என்று முந்தானையில் ராசாமணி மூக்கை சிந்த.. மாமியாரின் பேச்சில் உள்ளுக்குள் புறப்பட்ட ஆத்திரத்தை பல்லைக் கடித்துப் பொறுத்தார் வந்தனா.
"அதான் சொல்றேன்.. இப்ப போயா அவங்களை தொந்தரவு பண்ண முடியும்? இந்நேரத்துக்கு எப்படி இருக்காங்களோ?" என்று முகத்தை மூடி வெட்கப்பட்டவரை காண காண பக்கத்தில் இருக்கும் கட்டையைத் தூக்கி போட்டால் என்ன என்று ஆத்திரம் பொங்கியது வந்தனாவிற்கு.
"அதெல்லாம் எனக்கு தெரியாது இப்போ எந்த கணம் என் பிள்ளை இங்கே வரணும்.. ஐயோ என் நெஞ்சு வலிக்குதே.. என்னால தாங்க முடியலையே.. ராசா உன்ன பாக்காமலே நான் போயிடுவேனோ? ஏ.. தயா… தயா" என்று அவர் கூப்பாடு போட..
இதற்கு மேலும் இவர் நடிப்பை நம்புவது போல் இருந்தால் இவரது அட்டகாசம் தாங்காது என்பதை உணர்ந்த ராசாமணி..
"உன் பொண்டாட்டிக்கு ஒழுங்கா நடிக்க கூட தெரியல டா அன்பு!!" என்று சத்தமாகவே முணுமுணுத்தார் ராசாமணி.
"பின்ன நெஞ்சு வலி வந்தவ இந்த கத்தா கத்துவா? நெஞ்சு எந்த பக்கம் புடிச்சிருக்கா பாரு? எல்லாருக்கும் இதயம் இடப்பக்கம் இருக்கும்.. உன் பொண்டாட்டிக்கு மட்டும் புதுசா வலது பக்கத்துல வச்சிட்டார் போல அந்த கடவுள்" என்றவுடன் சட்டென்று வலது புறம் இருந்த கையை இடது புறத்திற்கு மாற்றி அசட்டு முழி முழித்தார் வந்தனா..
"இங்க பாரு வந்தனா நீ ஆடினாலும் சரி.. அழுது புரண்டாலும் சரி.. இப்ப போய் உன் மவன் இருக்கிற அறை கதவை தட்ட முடியாது. அதுவும் என்னை மீறி யாரும் அங்க போகவும் முடியாது. சரியா? உனக்கு உடம்பு முடியலன்னா உன் புருஷனை கூட்டிட்டு ஆஸ்பத்திரி கிளம்பு.. பேத்தியை நான் பாத்துக்குறேன்! என்னோட அன்பு பார்த்துகிட்டே இருக்க.. உன் பொண்டாட்டியை கூட்டிகிட்டு கிளம்பு" என்று கூற வந்த நெஞ்சு வலி மாயமாய் போக.. அவிழ்ந்து கிடந்த கூந்தலை எடுத்துக் கொண்டை போட்டு மாமியாருடன் மல்லுக்கட்ட துவங்கினார் வந்தனா..
"என் பிள்ளைக்கு பிடிக்காத திருமணம் அவன் எப்படி அங்க போய் சந்தோஷமாக இருப்பான்? அதெல்லாம் மாட்டான்! நீங்க போயி அவன வர சொல்லுங்க.. இல்ல நான் போகவா? என் அண்ணன் பொண்ணை தான் அவனுக்கு கட்டி வைப்பேன்.. இந்த வீட்டுக்கு வாரிசுனா.. அது என் அண்ணன் பொண்ணு மூலமா தான் வரும்" என்று அவர் சிலிர்த்துக் கொண்டு சீற..
"வந்தனா!!" என்று அன்பு கர்ஜிக்க…
"அம்மா!!" என்று அபர்ணா அதிர்ந்து அழைக்க..
"பாக்கலாம்.. பாக்கலாம் டி!! இன்னும் எண்ணி பத்தே மாசத்துல என் கொள்ளுப் பேரனைப் பெத்து கொடுப்பா என் பேத்தி பார்க்குறியா?" என்று ராசாமணியும் சவால் விட்டார்.
முகம் கடுகடுப்பை தத்தளிக்க.. உதடுகளோ ஆத்திரத்தில் துடிக்க.. மாமியாரை முறைப்பதைத் தவிர அந்நேரம் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
"இந்தா பாரு டா அன்பு.. இவ்வளவு நாளும் இவ பேசிய பேச்சுக்கும்.. ஆடுன ஆட்டத்துக்கெல்லாம் நான் அமைதியாக இருந்தேனா.. அது உன் குடும்பத்தில் ஏதும் பிரச்சனை வரக்கூடாதுனு ஒரே காரணத்துக்காகத்தான். காலம் போன கடைசியில் இனிமே உங்களுக்கு உள்ள முட்டிக்கிட்டு தனித் தனி ரூம்ல இருந்தா என்ன? ஒரே ரூம்ல இருந்தா என்ன? எல்லாம் ஒன்றுதான்!! ஆனால் என் பேரன் பேத்தி வாழ்க்கையில் இவ ஏதாவது செஞ்சா அதை தெரிஞ்சது அந்நேரமே பொட்டியை கட்டிகிட்டு இவ அம்மா வீட்டுக்கு போக ரெடியா இருக்க சொல்லு" என்று மகனிடம் பாய்ந்தவர் அருகிலிருந்த பேத்தியை இழுத்து தன் அருகில் நிறுத்திக்கொண்டு "நீயும் ஒரு பொண்ணை பெத்து வச்சிருக்க பாத்தியா.. இன்னிக்கு நீ பண்றதெல்லாம் நாளைக்கு இவ தலையில தான் விடியும். ஒழுங்கா பார்த்து நடந்துக்கோ" என்றவர் "உன் அம்மா தனியா படுத்துக்கிட்டும். நீ என் கூட வா" என்று பேத்தியை தன்னுடனே அழைத்து சென்றார். அன்பும் மனைவியை கேவலமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு ஹாலில் சென்று படுத்துவிட்டார்.
இதுநாள் வரை தான் கிழித்த கோட்டைத் தாண்டாததால் குடும்பம் மொத்தமும் தன் கைக்குள் இருக்கிறது என்று கொஞ்சம் இறுமாப்பாகவே இருந்தார் வந்தனா. போதாகுறைக்கு ஆடலரசி குடும்பத்தோடு ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று ஆகிவிட. தன் அண்ணன் மகளை கொண்டுவந்து வைத்து விட்டால் இனி எல்லாம் தன் ராஜ்யம் என்று இறுமாப்பில் இருந்தவருக்கு மொத்தமாக அடி விழுந்தது.
கீழே நடந்த களேபரம் எதுவும் தெரியாமல் தங்களுக்குள் இந்திய-பாகிஸ்தான் போரை முடித்து, அடுத்து ஆப்கன்-தலிபான் போரை தொடங்கினர் தயா அண்ட் தாரா..
போரில் கூட பல பரிணாம வளர்ச்சிகள் உண்டு. காட்டு வாசியாக இருந்தபோது ஈட்டி அதன்பின் வாள்.. வில்.. அடுத்து துப்பாக்கி அணுகுண்டுகள் முடிந்து இப்போது பயோ வாராக வைரஸ் வரை எவ்வளவோ பரிணாமங்கள்..
அதுபோலத்தான் முதலில் எட்டி எட்டி நின்று விழி மொழியால் சண்டை போட்டவர்கள்.. சற்று நெருங்கி நின்று வாய் மொழியால் சண்டையை தொடர்ந்து.. அடுத்து உடல்கள் உரசி.. கை கலப்பில்.. வளர்ந்து, மூக்கும் மூக்கும் அருகருகே நின்று அடுத்தவர் வெம்மை மூச்சு காற்றை சுவாசிக்கும் அளவு வந்து.. இதயங்கள் தடதடக்க.. நெஞ்சு விம்மி விம்மி ஏறி இறங்க.. கோபமாக வாள் வீசி கொண்டிருந்த இருவர் கண்களும்.. கொஞ்சம் கொஞ்சமாக ராசாமணி அம்மாள் மருந்து உபயோகத்தில் தாபமாக மாறி.. அது இதழ் அணைப்பில் தொடர்ந்து உடல் அணைப்பில் மோகன ராகம் ஆரம்பித்தது.. பல்லவி அனுபல்லவியாக வளர்ந்து சரணத்தில் பல சரசங்களை பாடி.. மங்கலத்தில் முடிந்தது அவர்களது முதல் கூடல்.
மறுநாள் காலை.. மாடியில் மகனின் அறையை பார்த்தவாரே குட்டிப் போட்ட பூனையாக கீழே உலாவிக் கொண்டிருந்தார் வந்தனா..
நமட்டு சிரிப்போடு மருமகளை பார்த்தும் பார்க்காத மாதிரி ஸ்மார்ட்போனில் கொரியன் வெப் சீரியஸை பார்த்துக்கொண்டிருந்தார் ராசாமணி பேத்தி அபர்ணாவோடு.
அவர்கள் இருந்த அறையில் நேற்று மாற்றுத் துணி எதுவும் வைக்கவில்லை ராசாமணி பாட்டி. எப்படியும் குளிக்க கீழே இறங்கி தானே வரவேண்டும் என்று!!
என்ன ஒரு வில்லத்தனம்!!
நேற்று மருந்தின் வீரியத்தில் குழைந்து உருகிய இருவரும்.. காலையில் கண் விழிக்கும் போது அதே போல இருப்பார்களா??
தொடரும்...