தளிர் : 16
அருணன் கதவை தட்ட, திறந்தது என்னவோ ராதிகா தான். பிள்ளையுடன் ஏதோ பேசி சிரித்த படியே வந்து கதவை திறந்தவள், அருணனை கண்டதும் கப்பென்று வாயை மூடிக் கொண்டு தலையை குனிந்து கொள்ள,
"சொகுசா இருக்கலாம் நினைச்சியா?" என்றுக் கேட்டுக் கொண்டே நாலைந்து பைல்களை அவள் கையில் திணித்தவன், அவளை தள்ளி கொண்டே, வேலையை சாக்கு வைத்து அறைக்குள் நுழைந்திருந்தான்.
கையில் பைலுடன் பே'வென ராதிகா வாசலில் நின்றிருக்க, கையில் பொம்மையுடன் அதே நிலையில் தான் சனாவும் கட்டிலில் அமர்ந்திருந்தாள்.
அவன் வருகையால் பெண்கள் இருவரும் அசெளகரியமாக இருக்க, அவனோ இருவரையும் கண்டுக்காது சோபாவில் அமர்ந்து லாப்டாப்பில் தன் வேலையை தொடர்ந்தான்.
ராதிகா இன்னும் கதவையும் வாயையும் திறந்து வைத்துக் கொண்டு அவனையே பார்த்துக் கொண்டிருக்க, "அங்க நின்னே நேரத்த கடத்த போறியா?" லாப்டாப்பில் இருந்து பார்வையை அகற்றாது அதிகார தொனியில் ஒலித்த அவன் குரலில் வேகமாக வந்து மெத்தையில் கிடந்த பொம்மைகள் அருகே ஃபைல்களையும் போட்டு விட்டு சுதர்சனா அருகே அமர,
சனாவும் தகப்பனை பார்த்து மிரண்டு போய் அவளை இன்னும் நெருங்கி ராதிகாவின் ஒரு கையை கட்டிக் கொண்டே அமர்ந்திருந்தாள்.
சட்டென்று அவன் விழி உயர்த்தி இருவரையும் பார்க்க, சனா மடியில் இருந்த கரடி பொம்மைக்கு பேன் பார்க்க ஆரம்பித்திருக்க, ராதிகாவோ கோப்புகளில் சட்டென்று பார்வையை பதித்து கொண்டாள்.
வேலையை சாக்கு வைத்து பிள்ளையை பார்க்க வந்தானா?
இல்லை பிள்ளையை சாக்கு வைத்து அவளை பார்க்கிறானா? அவனே அறியா ஒன்று தான் அது.
இருவர் மீதும் அவர்கள் அறியா நேரம் கண்கள் அலைப்பாய்ந்தது.
சுதர்சனா மீது வாஞ்சையாக பதியும் விழிகள், தோளை விட்டு நழுவி போகும் பட்டம்மா ஜாக்கெட்டை அட்ஜஸ்ட் செய்து கொண்டே வேலையில் கண்ணாக இருக்கும் மனைவி மீது குதர்கமாக தன் பதிந்து மீண்டது.
நழுவிய உடையின் தயவில், முந்தைய நாள் இரவு அவன் இதழ்கள் உறிஞ்சி எடுத்த அவள் கழுத்து நரம்புகள் இன்னமும் கன்றி சிவந்து தாபம் கூட்ட, பார்க்காதே என்றாலும் அவள் மீது பதியும் கண்களை அவனாலும் கட்டுப்படுத்த முடியவில்லை.
சிறிது நேரத்தில் ராதிகா மடியிலேயே சனா தூங்கி போக, ராதிகா ஒரு கரமோ பிள்ளை தலையை வருடியபடி இருந்தது.
ருக்ஷாவோடு தன் வாழ்க்கை முடிந்தது என்று சந்நியாசி வாழ்க்கை வாழ்ந்தவன் மனமோ இந்த நொடி மனைவி, பிள்ளை என்று சம்சாரி வாழ்க்கை பற்றி யோசிக்க தான் செய்தது.
இதற்கு மேல் இருந்தால் சரி வராது என்று எழுந்தவன், "நாளைக்கு பார்த்துக்கலாம்" என்று அவள் பார்த்துக் கொண்டிருந்த கோப்புகளை வாங்கும் சாக்கில், அவள் மடியில் கிடந்த பிள்ளை தலையை வருடிக் கொண்டே எல்லாம் எடுத்து மேஜையில் வைத்து விட்டு செல்ல, ராதிகாவும் சனாவை மெத்தையில் கிடத்தி விட்டு கதவை அடைத்து வர அவன் பின்னால் சென்றாள்.
வாசல் அருகே சென்றவன், ஏதோ யோசனையில் சட்டென்று திரும்பி பின்னால் வந்து நின்ற ராதிகா தாடையை ஒரு கையால் அழுந்த பற்றி அவள் இதழ்களில் இதழ் பதித்திருக்க,
எதிர்பாரா அவன் அதிரடி செயலில் அதிர்ந்து நின்றது என்னவோ ராதிகா தான். மறுநொடியே அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளி, ஓங்கி அவன் கன்னத்தில் அறைந்திருந்தாள்.
அந்தரங்கம் பழகிய பின்னும் அந்நியவாசி தானே இருவரும்.
மூக்கு விடைக்க, கோப மூச்சுகளில் அனல் பார்வை ராதிகா வீசிக் கொண்டிருக்க, அவள் அறைந்ததை கூட பொருட்படுத்தாது யோசனையாக அவளை பார்த்துக் கொண்டிருந்தவன், "நீ என்னை எப்போவாது ரித்துனு மென்ஷன் பண்ணிருக்கியா?" என்று தான் கேட்டான்.
அவன் கேள்வியில் "ஹாங்… " என்று புரியாமல் விழி சுருக்கியவள் முக பாவணையே அவனுக்கு விடையளிக்க, "ஓகே லீவ்இட்" என்று எதுவும் நடவாதது போல அவன் வெளியேறிட, "என்னாச்சு இவருக்கு?" என்று தான் ராதிகா யோசித்தாள்.
தன் அறைக்கு சென்று கொண்டிருந்த அருணனுக்கோ, ஏக குழப்பம். சிந்தை முழுதும் நேற்று தீண்டிய ராதிகாவையும், இப்போது முத்தமிட்ட ராதிகாவையும் தான் ஒப்பிட்டு பார்த்துக் கொண்டிருந்தது.
நேற்றைய அவளின் அழைப்பும், தீண்டல்களும், அணுகுமுறைகளும் அவனுக்கு ஒருத்தியை தான் இப்போது வரை நியாபகப்படுத்தி கொண்டே இருக்கிறது, ருக்ஷா…
மனைவி எண்ணத்தில் அவளை தொட்டானா? அவளை தொட்டதிற்கு மனைவி இழப்பை காரணம் காட்டி பூசி மொழுக நினைக்கிறானா?
அவன் மனமே குற்றம் சாட்ட, முத்த சோதனை நடத்தியவனுக்கு அவன் உணர்வுகளில் இருக்கும் வித்தியாசம் புரிந்தது.
அவ இவ இல்ல… இவ அவ இல்ல என்ற ஃபீலிங். பட் ஹவ் இட்ஸ் பாஸிபில் என்று மண்டையை பிய்த்துக் கொண்டே மெத்தையில் விழுந்து கண்களை மூடிட, மூடிய விழி நடுவே நின்று அவன் தூக்கம் கெடுத்தது என்னவோ ராதிகா தான்.
அருணனுக்கோ விடியா இரவுகள் வினையாக மாறிட, இங்கே வீதியில் ஒற்றை மின் கம்ப திடலில் சோர்ந்து போய் அமர்ந்திருந்தான் பாலா.
தன்னை நம்பி இருந்தவளை கைவிட்டு கையாள தனமாக நின்றிருந்த உணர்வே அவனை வதைத்து கொண்டிருந்தது. எந்நேரமும் மாமா மாமா என்று அவனை அழைக்கும் இதழ்கள் அந்த பெயரையே மறந்து தான் போனதுவோ, இன்று ஒருமுறை கூட அவனை அழைக்கவில்லை. ஏன் மனதார அவனை காண வேண்டும் என்று நினைக்க கூடவில்லை.
அவன் மீது இருக்கும் கோபத்தால் அவனை விலக்குகிறாள் என்று தெளிவாகவே புரிந்தது. அவள் மனதை அவன் அறியாது இருப்பானோ! என்னை வெறுத்து விட்டாளோ? என்ற கவலையில் அவன் சோர்ந்திருக்க,
அவன் பின்னால் இருந்து அவன் முகத்தை உற்று பார்த்தபடியே முன்னால் வந்தாள் ருக்ஷா.
அருணனின் ஆசை காதலி, ஆருயிர் மனைவி.
"ஹா… ஹா… ஹா… இப்போ தான் என் பாரமே குறைஞ்ச போல இருக்கு" என்று அவன் வாடிய முகத்தை பார்த்துக் கொண்டே சத்தமாக சிரிக்க, தன் முன்னால் வயிற்றை பிடித்து கொண்டு வெடித்து சிரித்தவளை அனல் தெறிக்க பார்த்த பாலாவோ.
"ஏங்க இப்படி பண்ணீங்க?" என்று தான் அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்டான்.
"நீ மட்டும் உன் பொண்டாட்டி கூட ஜாலியா இருக்க. என்னால மட்டும் ஏன் என் ரித்து கூட பேச முடியல? இந்த கடவுள் ஆள் பார்த்து ஆஃபர் கொடுக்கிறார். ஐ டோண்ட் லைக் இட்… இப்போ உனக்கும் ஊத்திக்கிச்சா?" என்று கேட்டு இன்னும் சத்தமாக சிரிக்க,
"ஏற்கனவே செத்துட்டீங்க… இல்ல வர்ற கோபத்துக்கு நானே உங்களை கழுத்த நெரிச்சு கொன்னுருப்பேன். செத்த பிறகும் ஏன்க இப்படி பொறாமை பிடிச்சு சுத்துறீங்க?" என்று கோபமாக கேட்ட பாலாவிடம்,
"ப்ரோ உனக்கு கோபப்பட தெரியுமா?" என்று ஆச்சர்யமாக எதிர் கேள்வி கேட்ட ருக்ஷாவை முறைத்தவன்,
"கடுப்பேத்தாம இங்க இருந்து போங்க" என்று தான் விரட்டினான்.
"எதுக்கு இப்போ கத்துற? ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு முன்னமே முடிவு பண்ணது தானே"
"ஆனா இப்படி சிக்கல்ல இழுத்து விட்டு கல்யாணம் பண்ண நினைக்கலைங்க"
"ஓவரா பண்ணாத ப்ரோ, இரண்டு வருஷமா உன்னால பண்ண முடியாதத, ஒரு நாள் நைட்ல நான் பண்ணிட்டேன். அதுக்கு போய் கோபப்படுற? இங்க பாரு ப்ரோ… இது தான் இலக்குனு முடிவு பண்ணிட்டா… நேரா தான் போய் முட்டுவேனெல்லாம் அடம்பிடிக்க கூடாது. நமக்கு தோதா அப்படி இப்படி வளைஞ்சு கூட போகலாம்" என்று அசால்ட்டாக தோளை குலுக்கி அவள் சொல்ல,
"எவ்வளவு பெரிய பிராப்ளம் கிரியேட் பண்ணி விட்டிருக்கீங்கனு நிஜமா உங்களுக்கு புரியலயா?" என்று தான் இயலாமை குரலில் கேட்டான் பாலா.
"பிராப்ளம் கிரியேட் ஆனா தான் சொலுயுஷன் கிடைக்கும். இப்போ கல்யாணம் ஆகிடுச்சு தானே! அதை நினைச்சு சந்தோச படுறத விட்டு சும்மா என்னை திட்டுற? ரெண்டு வருஷமா நீ என்ன பண்ண சொல்லு? எப்போ பாரு உன் மொகரைய உன் பொண்டாட்டிக்கு காட்டிட்டே இருந்தா? அவ எப்படி அடுத்த லைஃப் பத்தி யோசிப்பா சொல்லு?"
என்று கேட்டவள் கேள்விக்கு பாலா அமைதியாக முகத்தை திருப்பிக் கொள்ள,
"ப்ரோ… பிராப்ளம் தான் இல்லனு சொல்லல… ஆன சேர்த்து வச்சிட்டோம்ல. அதை நினைச்சு சந்தோச படு" என்றவள் நான்கு வருடம் கழித்து தன்னவனை ஸ்பரிசித்த மகிழ்ச்சியில் முகம் கொள்ளா புன்னகையுடன் முன்னே செல்ல,
"நீங்க தானே என் பையனை கீழ தள்ளி விட்டது?" என்ற பாலாவின் கேள்வியில் சட்டென்று நின்றாள்.
பிள்ளைக்கு அடிப்பட்டிருக்க, அவனின் அப்பா என்ற கதறலுக்கு பாலா ஓடோடி அங்கே சென்றிருந்தான். திரும்ப வருவதற்குள் இங்கே ருக்ஷாவோ, இது தான் வாய்ப்பு என்று உள்ளே புகுந்து ஆட்டத்தை களைத்து விட்டிருந்தாள்.
"இங்க பாரு லிஃப்ட்ல கொஞ்சம் ஃபன் பண்ணலாம்னு சுவாதிகிட்ட விளையாடியது நான் தான். உன் பையன் லிட்டில் சிங்கம் மாதிரி பறக்க போறேன் சொல்லி, மதில் மேல இருந்து கீழ குதிச்சு மண்டைல அடிப்பட்டா, அதுக்கும் நான் தான் பொறுப்பா? விட்டா எல்லா கேஸையும் என் மேல போட்டிருவ போல!"
என்றவளை நம்பா பார்வை பாலா பார்த்து வைக்க, "இப்படி பார்க்காத ப்ரோ, நான் பொய் சொல்ல மாட்டேன்னு உனக்கே நல்லா தெரியும்."
"அதே நேரம் உண்மையும் சொல்ல மாட்டீங்களே!"
"அடப்பாவி நான் என்ன உண்மையை சொல்லல"
"அந்த வசிய பொடி உங்களுக்கு முன்னமே தெரிஞ்சு இருக்கு. ஏன் என்கிட்ட சொல்லல?"
"சொன்னா என்ன பண்ணிருப்ப? நீதி நேர்மை நியாயம்னு சொல்லி இரண்டு பேரையும் காப்பாத்தி விட்டு பிரிச்சு வச்சிருப்ப."
"உங்க சுய நலத்துக்காக என் பொண்டாட்டி உடம்ப பயன் படுத்திகிட்டீங்க சொல்லுங்க…"
என்று சட்டென்று அவன் அதி கோபத்தில் சொல்லி விட,
"ஆமா பயன்படுத்திகிட்டேன் தான். நான் அப்படி பண்ணலைனா இன்னும் நூறு வருஷம் ஆனாலும், நீயும் எதுவும் செய்ய மாட்ட, அவங்க லைஃப்ம் மூவ் ஆகி இருக்காது."
"பண்ணது பிராடு வேலை இதுல மகான் மாதிரி பேச்சு வேற."
"ப்ரோ… பி(B) அண்ட் டி(D) தான் லைஃப்… பர்த் அண்ட் டெத்… நாம நினைச்சோமா இப்படி அல்பாய்சுல போய் சேருவோம்னு. அந்த பி டி நடுவுல சி இருக்கு. சூஸ்… வாழ்க்கைல எல்லாமே இருக்கு சந்தோசம், துக்கம், சோகம், துரோகம், ஏமாற்றம், இழப்பு எல்லாம் இருக்கு. அதுல நாம எதை சூஸ் பண்றோம் எங்கிறதுல தான் நம்ம லைஃப்போட மூவிங் இருக்கு. நல்லவனா இருந்து நீ என்ன கிழிச்ச… பிடிச்ச வாழ்க்கையை முழுசா வாழ முடிஞ்சதா உன்னால? எனக்கு எப்பவும் சந்தோசமா இருக்க தான் பிடிக்கும். எல்லா கெட்டதுலயும் ஒரு நல்லது இருக்கும். அதை மட்டும் எடுத்து லைஃப் ரன் பண்ணுவோம். வா வா நமக்கு நிறைய வேலை இருக்கு. ரெண்டு பேரையும் கோர்த்து விட்டாச்சு… இனி ஒருத்தர் ஒருத்தர் ஏத்துக்கிட்டு வாழ வைப்போம்" என்று சென் தத்துவ ஞானி போல பேசிக் கொண்டிருந்தவளை மெல்லிய புன்னகையுடன் பார்த்த பாலாவும் அவளுடன் சென்றான்.
முடிவு என்ற ஒன்று ஏதோ ஒன்றிற்கு ஆரம்பம் தான்.
இவர்கள் முடிவுற்ற வாழ்க்கை, இவர்கள் இணைகளின் ஒருமித்த வாழ்க்கைக்கு ஆரம்பம்…
update pls