8
முதலில் என்ன நடக்கிறது என்று புரியவில்லை ஆடலரசிக்கு. அண்ணன் மகன் யாரோ பெண்ணிடம் தப்பாக நடந்து இருக்கிறான் என்று அனைவரும் குற்றம் சாட்டுகின்றனர் என்று புரிந்தது.
'அண்ணனின் வளர்ப்பு அப்படியெல்லாம் செய்யாதே!!' என்று யோசனையோடு தயாளனை பார்த்துக்கொண்டே நின்றவரின் கண்கள் எதேர்ச்சையாக கட்டிலின் மேல் செல்ல.. அதில் கிடந்த புடவையை பார்த்தவுடன் அதிர்ந்தே போய்விட்டார்.
அவர் பார்த்து பார்த்து எடுத்த பட்டுப்புடவை.. காலையில் மகளுக்கு கட்டாயப்படுத்தி கட்டிவிட்ட நினைவு வர "ஐயையோ!!! என் பொண்ணு!!" என்றவாறு கட்டிலின் அடுத்தபக்கம் கேட்ட விசும்பலில் அங்கே ஓடினார் அரசி.
ஆடலரசியின் குரலில் கதிரேசனும் அகிலனும் எந்த அளவுக்கு அதிர்ந்தார்களோ.. அதே அளவு அன்புச்செழியனும் அதிர்ந்தே போனார்.
"என்னது தாராவா?" என்று அதிர்ந்த அகிலன் தயாளனை குற்றம் சாட்டும் பார்வை பார்க்க..
'போச்சுடா!! யாராவது தெரியாத பொண்ணா இருந்தாலும் ஏதேனும் சொல்லி சமாதானப்படுத்தலாம். ஆனால் இவள் அரசி அத்தையின்பொண்ணா? ஏற்கனவே வெட்டும் குத்துமாக இருந்த குடும்பம்.. ஐயோ ஆண்டவா!! ஏன் இப்படி சிக்கலுக்கு மேல் சிக்கல் கொடுக்கிறாய்?' என்று அண்ணார்ந்து பார்த்து கண்களை மூடினான் தயாளன்.
அன்னையைக் கண்டதும் அம்மா என்று தாவி அணைத்துக் கொண்டாள் தாரிகா.
"ஒன்னுமில்ல ஒன்னுமில்ல டா பாப்பா.. ஒன்னுமில்ல டா" என்று மகளை சமாதானப்படுத்தி," மதனி அந்த புடவையை எடுங்க" என்று இதுவரை இல்லாத அதிகாரத் தொனியில் வந்து விழுந்தது ஆடலரசியின் வார்த்தைகள்.
அதை மகள் மீது போர்த்தி விட்டு மெல்ல அவளை எழுப்பி அருகில் இருந்த குளியல் அறைக்கு அழைத்துச் சென்றார்.
"அதானே பார்த்தேன்!! என் மகன்தான் சொக்கத் தங்கமாச்சே.. என் மருமகளை தவிர வேறு யாரையும் இதுவரை திரும்பி பார்த்தது கூட இல்லை. இப்பதான் புரியுது எதுக்கு இந்த நாடகம்னு? குடும்பத்தோடு உள்ளவரும் போதே நினைச்சேன்.. இந்தா பொண்ண அனுப்பி வச்சுட்டா இல்ல.." என்று வார்த்தைகளை கனல் கங்குகளாக கொட்டினார் வந்தனா.
"கரட்டு மா!! நான் கூட ஒரு நிமிஷம் ஆடி போய்ட்டேன். நம்ப மருமக பிள்ளை இப்படி எல்லாம் செய்யாதேனு.. இப்பதான் புரியுது? இத்தனை வருஷம் கழிச்சு வந்தாலும் பக்கா பிளான் வந்திருக்காங்க!" என்று தன் பங்கிற்கு பேசினார் காளிங்கன்.
அதுவரை மகளை அந்த நிலையில் கண்ட எந்த ஒரு தகப்பனுக்கும் உண்டான அதிர்ச்சியில் இருந்தார் கதிரேசன்.
"மூடுடா வாய!! யார் பொண்ணை பற்றி யார் பேசுவது? ரூமுக்குள் போன் பேச வந்த பெண்ணை பின்னாடி வந்து அவ கிட்ட தப்பா நடந்தது யாரு? பையன ஒழுங்கா வளர்க்க துப்புல்ல.. இதில் நீ என் பொண்ணை பேசுவியா? அதுவும் கல்யாண மேடையில பொண்ண வச்சுக்கிட்டு இப்படி நடந்திருக்கிறானே.. இவனெல்லாம் நாளைக்கு என்ன எல்லாம் செய்ய மாட்டான்?" என்று கதிரேசனும் தன் பங்குக்கு விடாமல் பேசினார்.
ஏற்கனவே எங்கே தங்கையின் மகளை கொண்டு வந்து விடுவாரோ என்ற பயத்தில் தான் மகனுக்கு அவசர அவசரமாக திருமணம் ஏற்பாடு செய்தது. இதில் அவர் மகளாளேயே பிரச்சினை ஏற்பட்டு திருமணம் நின்று விடுமோ? பயம் பிடித்துக்கொண்டது வந்தனாவுக்கு.
பயம் கோபம் இரண்டும் நிதானத்தை இழக்க வைக்கும். வந்தனாவும் அந்த நிலையில் தான் இருந்தார்.
"யாரு? என் பையன் ஒழுக்கம் கெட்டவனா? உன் பொண்ணு தான் ஒழுக்கம் கெட்டவ? இப்படி எத்தனை பேருக்கு முன்னாடி அரையும் குறையுமா…" என்று அவர் முடிக்கும் முன் அன்புசெழியனின் முரட்டு கரங்கள் அவர் கன்னத்தில் வெகு அழுத்தமாக பதிந்தது.
தயாளன்.. தன்னை நம்பாமல் பேசும் அன்னையையும் உறவினர்களையும் கண்டு ஆத்திரமாக வந்தது. யாரேனும் ஒருவராவது இங்கு என்ன நடந்தது என்று கேட்கிறார்களா? அல்லது என்னை தான் பேச விடுகிறார்களா? அவர்களாகவே யூகம் செய்து கொள்கிறார்கள் என்று வெறுப்பாக நினைத்தவன், "எல்லோரும் நிறுத்திறிங்களா?" என்று சத்தமாக கத்தினான்.
"நீங்க நினைக்கிறது போல இங்கு எதுவும் நடக்கல.. நான் பாத்ரூம்ல இருந்தது தெரியாமல், அந்த பொண்ணும் கலைந்த புடவையை கட்டிகிட்டு இருந்துச்சு.. வெளியில வந்த என்னை பார்த்ததும் அதிர்ச்சியில் கத்த ஆரம்பிச்சிடுச்சு.. அதுக்குள்ள கல்யாணத்துக்கு நேரமாயிற்றுனு மாமா கதவை தட்டினார். அதுல அந்த பொண்ணும் இன்னும் பயந்து அழுக ஆரம்பிக்க.. நான் அந்த பொண்ணோட பேசி சமாதானப்படுத்துறதுக்குள்ள நீங்க எல்லாம் கதவ உடைச்சிட்டு உள்ளே வந்துட்டீங்க.. இது தான் நடந்தது! அந்தப் பொண்ணு அரசி அத்தை பொண்ணு எப்போ தான் எனக்கே தெரியும்!!" என்று அவன் பேச அங்கிருந்தவர்கள் நம்ப பார்வை பார்த்தனர்.
சாதாரணமாக ஒரு அறையில் ஆணும் பெண்ணும் தனியாக இருந்தாலே.. பல நூறு கதை களை கட்டும் சமூகம் இது!! அதுவும் இந்த நிலையில் இருவரையும் பார்த்து பின்னும் சும்மாவா இருக்கும்?!
அதற்குள் பெண்ணுக்கு புடவை கட்டிக்கொண்டு வெளியே அழைத்து வந்த ஆடலரசி "என் பொண்ண பத்தி என்ன சொன்ன? இன்னொரு முறை என் பொண்ணை பத்தி பேசுன அண்ணினு கூட பார்க்காம அறைந்திடுவேன் பாத்துக்கோ!!" இதுநாள் வரை வந்தனா எது செய்தாலும் அமைதியாக பொருத்து போனவருக்கு, தன் மகளை சொன்னவுடன் அப்படி ஒரு ஆவேசம் வந்தது.
சாதாரண ஒரு வேலியை கூட தாண்ட முடியாத கோழி தன் குஞ்சுக்கு ஒரு ஆபத்து என்றால் உயரே பிறக்கும் பருந்தையும் பறந்து சென்று கொத்தும் விந்தை தாய்மைக்கு மட்டுமே உரித்தானது!!
"பொல்லாத பொண்ண பெத்துட்டு இப்போ பொறுப்பா பேச வந்துட்டா.. என் பையன மயக்கதானடி எல்லாரும் பிளான் பண்ணி வந்தீங்க.. அது எப்படிடி மானம் மரியாதை கூட பாக்காம எல்லாத்தையும் உதிர்த்து இப்படி நடக்குறிங்க.. த்தூ.. இந்த பொழப்புக்கு.." என்று அவர் முடிக்கும் முன் இம்முறை மீண்டும் ஒரு பலத்த அடி விழுந்தது வந்தனாவுக்கு அன்புச்செழியன் இடமிருந்து.
சட்டென்று தாரிகா பக்கம் சென்றவர் அழுதழுது சிவந்து போய் இருந்த மருமகளை பார்த்தார். அவளை எல்லோருக்கும் முன் நிறுத்தி "இவதான் என் வீட்டு மருமக.. இவளுக்கு தான் என் பையன் தாலி
கட்டுவான்!!" என்றார் உரத்த குரலில்..
தொடரும்..