5
அகிலனுடன் பேசிக் கொண்டே தயாரானான் தயாளன். இருவருக்கும் ஒரே வயது நெருங்கிய சொந்தம் தான்.. ஆனால் நெருக்கமாக பேசிய ஞாபகங்கள் இல்லை.
'பரவாயில்லை.. அம்மா சொன்னது போல இவங்க குடும்பத்தில் எல்லோருமே கெட்டவர்கள் இல்லை.. திமிர் பிடித்தவர்களும் இல்லை தான். இவன் அத்தையை போல் இருக்கிறான் போல!' என்று மனதுக்குள் அகிலனை நினைத்தவாறு தயாராகிக் கொண்டிருந்தான் தயாளன்.
"மாப்பிள்ளை இன்னும் தயாராகவில்லையா?" என்றவாறு உள்ளே நுழைந்த காளிங்கன் அங்கே அமர்ந்திருந்த அகிலனை ஒரு மாதிரியாக பார்த்தார், 'இவன் ஏன் இங்கு வந்தான்?' என்று.
காளிங்கனின் பார்வை பரிமாற்றத்தை புரிந்தாலும் கொஞ்சமும் அசைந்து கொடுக்காமல் அவரையும் நேர் பார்வை பார்த்தான் அகிலன். இம்மாதிரி நபர்களுக்கு யாரேனும் நேர் பார்வையாக பார்த்தால் அதை சந்திக்கும் தைரியம் சிறிதும் கிடையாது. காளிங்கனும் அதில் விதிவிலக்கு அல்ல!!
"இதோ ரெடி ஆயிட்டேன் மாமா" என்றவாறு தன் சிகையை வாரிக் கொண்டிருந்தான் தயாளன்.
"அப்புறம் அகிலன் உங்க கல்யாணம் எப்போ?" என்று பேச்சு கொடுக்க..
"எனக்கு என்ன அவசரம் தயா.. தங்கை இருக்கா இல்லையா.. அவளுக்கு முடிச்சிட்டு தான் அடுத்து எனக்கு" என்று அகிலன் சாதாரணமாக சொன்னது சுருக்கென்று தைத்தது தயாளனுக்கு. சிகையை வாரிக் கொண்டு இருந்த கை ஒரு சில நொடிகள் அப்படியே நின்று பின் அதன் வேலையை செய்தது.
'உண்மைதானே!! இவனுக்கும் என் வயது தான். ஓரிரு மாதங்கள் மூப்பாக இருக்கலாம். ஆனாலும் எவ்வளவு பொறுப்பாக தங்கையின் திருமணம் முடித்து தான் தன் திருமணம் என்கிறான். ஆனால் அம்மாவுக்கு ஏன் அந்த யோசனை வரவில்லை? எதற்கு இந்த அவசர திருமணம்? அப்படி என்ன வயதாகிவிட்டது எனக்கு? இருபத்தி ஆறு எல்லாம் ஒரு வயதா?' என அடுக்கடுக்காக கேள்விகள் அவனை ஆட்கொண்டது. திருமணம் பேசியதிலிருந்து அவனை தொடரும் இக்கேள்விகள்..
இன்னும் அரை மணி நேரத்தில் திருமணமே முடிந்து விடும் இப்போது எதற்கு இந்த சிந்தனை என்று அவன் எண்ண போக்கிற்கு ஒரு எண்ட் கார்டு போட்டு, சிரித்த முகத்தோடு "ரெடி மாமா.. போகலாம்" என்றவாறு மணமேடையை நோக்கி சென்றான்.
மணமேடையில் அமரும் முன் அவனுக்கு மெட்டி போட்டு விட மச்சானை தேடினார்கள். அவன் வருங்கால மனைவி கூடப் பிறந்த சகோதரர்கள் யாரும் இல்லை என்பதால் சொந்த பந்தத்தில் ஒருவனை தேட, அவனோ அந்த நேரம் காணாமல் போக.. அவனைக் கூப்பிடு இவனை கூப்பிடு என்று அங்கே ஒரே குழப்பம்..
"மாப்பிள்ளைத் தோழனாக அருகில் நிற்கும் அகிலனே அவனுக்கு மச்சான் முறைதானே.. அவனே போடட்டும்!" என்று அங்கு வந்த அன்பு கூற, மெட்டி அவன் கையில் தரப்பட்டு தயாளனுக்கு போடப்பட்டது. இதை பார்த்து கொண்டிருந்த வந்தனாவுக்கும் காளிங்கனுக்கும் பொச பொசவென்று கோபம்தான் பெருகியது.
ஆனாலும் திருமணம் முடியட்டும் அதுவரை ஏதும் வார்த்தை விடக்கூடாது என்று அழுந்த உதடுகளை மூடிக் கொண்டிருந்தார்கள்.
"அகிலா இங்கே வா!!" என்று அரசி கூற தயாளனிடம் சொல்லி விட்டு அன்னையை நோக்கி அகிலன் சென்றுவிட்டான். அப்போது தயாளனுக்கு வயிற்றை புரட்டியது. மாங்கல்ய தானம் ஆன பிறகுதான் உண்ண வேண்டும் என்று விரதம் இருக்கச் சொல்லி இருந்தார்கள். கூடவே நேற்று இரவும் சரியாக சாப்பிடாதது கூடவே மன உளைச்சல் என்று அவனுக்கு தலை வலிக்க.. அதனோடு வயிற்றில் ஒன்றுமில்லாதது சேர்ந்து அவனுக்கு புரட்டிக் கொண்டு வந்தது.
திருமணத்திற்கு என்று ரோஜா இதழ்களால் செய்யப்பட்ட மாலை அங்கே மணமேடையில் இருக்க.. அதை எடுத்து வந்து மணமகன் கழுத்தில் அணிவித்து அதன் பின்னே மச்சான் அழைத்து வரவேண்டும் என்று ஐயர் கூறினார். மீண்டும் ஒரே குழப்பம் கூச்சல் அங்கே.. மச்சான் முறையில் யார் அழைத்தது வருவது என்று!!
அருகில் இருந்தவரிடம் "பாத்ரூம் செல்லுகிறேன், இவர்கள் பேசி ஒரு முடிவுக்கு வரட்டும்" என அருகிலிருந்த ஏதோ ஒரு அறையில் நுழைந்து குளியலறைக்குள் புகுந்து, வாந்தி எடுத்து அப்பொழுதுதான் தயாளன் முடித்திருக்க.. அந்த சமயம்தான் அறைக்குள் நுழைந்து இருந்தாள் நம் நாயகி தாரிகா..
ஒரு வழியாக தன்னை நிதானப்படுத்தி, முகத்தை தண்ணீரால் நன்றாகக் கழுவியவன் குளியலறையை விட்டு வெளியே வரவும், இவள் புடவை கட்ட வரலையே என்று கோபத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் கழண்டு கிடந்த புடவையை மொத்தமாக கழட்டி வீச.. அது தயாளன் முகத்தில் விழ.. என்னவென்று புரியாமல் முகத்தை மறைத்த புடவையை நீக்கியவனின் கண்களில் விழுந்தாள் அரைகுறை உடையுடன் தாரிகா!!
இதில் இவள் யார் என்று அவனுக்கு தெரியாது.. அவன் யாரென்று இவளுக்கும் தெரியாது..
ஆனால் விதி சதி செய்ததில் விழுந்தது இருவருக்குமான அழுத்தமான முடிச்சு!!
அன்பு தன் தங்கை மகன் இருக்க வேறு யாரையும் மச்சானாக மேடை ஏற்ற மாட்டேன் என்று வீர வசனம் பேசி முடிக்க.. வந்தனாவோ மறுக்க.. அங்குள்ள சொந்தங்களும் பந்தங்களும் பேசி பேசி அகிலனே மச்சான் முறை செய்யட்டும் என்று ஒருமனதாக அங்கே தேர்ந்தெடுக்கும் முன்.. இங்கே கல்யாண பெண்ணே மாறிவிட்டிருந்த கோலத்தை என்ன சொல்வது?
கல்யாணம் தன் பெண்ணுடன்தான் இதில் மச்சான் முறை யார் செய்தால் என்ன என்று காளிங்கன் சமாதானமாகி தயாளனைத் தேடி வந்து கதவை தட்ட..
அதுவரை தான் மட்டும் தான் இருக்கிறோம் என்ற தைரியத்தில் புடவையை கழட்டி வீசிய தாரிகாவுக்கு, தன் முன்னே நின்ற ஆடவனைப் பார்த்ததும் பயம் பிடித்துக் கொள்ள.. கைகள் தன்னிச்சையாக தன்னை மறைத்துக் கொண்டு திரும்பி நின்றவள் ஆஆஆ அலற தொடங்கினாள்.
மாப்பிள்ளை போன அறைக்குள் இருந்து பெண்ணின் சத்தம் வர பயந்து போன காளிங்கன் உற்றார்
உறவினர்களை திரட்டினார், கதவை திறக்க..
தொடரும்..