4
மனம் ஒரு ஊஞ்சல் எப்பொழுதும் ஒரே பக்கத்திலேயே நிலை கொண்டு நிற்காது. ஒருபுறம் ஆடும்போது பின்னூட்டமாக மறுபுறமும் செல்லத்தான் வேண்டும்!
அதேபோலத்தான் மனிதர்களின் மனமும்!! ஒருகாலத்தில் சண்டை கோபம் ஒரு பக்கம் இழுத்து பிடித்து நின்றாலும்.. காலங்கள் மாறும் பொழுது அதே மனது பக்குவம் அடைந்து துவேஷத்தை எல்லாம் விடுத்து பகைமையை தவிர்த்து அன்பை பாராட்டும்!!
ஆனால் ஒரு சிலர் மட்டுமே ஊஞ்சலை துவேஷ பக்கமே நங்கூரம் போல நச்சென்று பிடித்து வைத்துக் கொண்டு இருப்பார்கள்.
அவர்களுக்கு என்று ஒரு காலம் வரும்! சிலருக்கு சில மாதங்கள்.. சிலருக்கு சில வருடங்கள்.. இன்னும் சிலருக்கு இறக்கும் வரை அந்தப் பக்குவமே வராது!!
அப்படித்தான் வந்தனாவின் மனதிலும் ஆடலரசியின்பால் ஏற்பட்ட அந்த கோபம், வன்மமாக மாறி.. வருடங்கள் போகப்போக பல்கி பெருகியதே தவிர, ஒரு நாளும் குறையவேயில்லை. அவரைப் போல தானே தானும் ஒரு அண்ணனுக்கு தங்கை.. ஒரு பெற்றோருக்கு மகள் என்பதை புரிந்து கொள்ளவும் இல்லை!!
ஆடலரசியின் குடும்பம் கல்யாண மண்டபத்தில் நுழைந்ததுமே அங்கங்கே இருந்த உறவினர்களின் மொத்த கண்களும் அவரையே நோக்கின. கால்கள் தானாக அவரிடம் செல்ல.. கண்களும் சந்தோஷத்தில் விரிய.. முகமும் புன்னகையை தத்தெடுத்துக் கொண்டது.
"அரசி கண்ணு நல்லா இருக்கியா இப்படி ஒரே மட்டா வராம இருந்துட்டியே கண்ணு" என்று அவரது அன்னை தழுவிக்கொண்டு அழுக.. இவரும் பதிலுக்கு கண்ணீர் சிந்த.. பார்த்துக்கொண்டிருந்த தாரிகாவுக்கும் கதிரேசனுக்கும் 'இவங்க டிராமா எப்போ முடியும்?' என்ற கேள்வி கண்களில்..
அடுத்தடுத்து உறவினர்கள் ஆடலரசியின் கைகளைப் பற்றி குசலம் விசாரித்து மெல்லமெல்ல தங்களுக்குள் இணைத்துக்கொண்டனர்.
அகிலன் அன்னைக்கு தகுந்த பிள்ளை. அவனும் உறவினர்களோடு ஒட்டிக் கொள்ள.. அப்பாவும் மகளுமே தனியே அமர்ந்து கொண்டனர்.
தங்கை குடும்பத்தை கண்டதும் மணமேடையில் இருந்து இறங்கி, கூடவே மனைவியையும் கண்களால் எச்சரித்து அழைத்து வந்தார் அன்புச்செழியன்.
"திருமணம் முடியும் வரை மச்சானை கோபப்படுத்தாதே!!" என்று ஆயிரம் முறை காளிங்கன் அறிவுரை கூறி இருக்க.. அதெல்லாம் மனதில் ஒருபுறமிருந்தாலும் ஆடலரசியின் அமைதியான புன்னகை தவழ்ந்த முகத்தை பார்த்ததும் ஆங்காரம் தான் வந்தது வந்தனாவுக்கு. ஆனால் அதை வெளியில் காட்டாமல் பட்டும் படாமல் அனைவரையும் வாங்க என்று அழைத்து உள்ளே சென்றுவிட்டார், தனக்கு நிறைய வேலைகள் இருக்கிறது என்று..
கல்யாண மண்டபம் என்பதால் பெரிதாக யாரும் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அரசிக்குத்தான் அண்ணியின் குணம் தெரியுமே!! அவரும் ஒரு கசந்த முறுவலோடு அன்னையின் அருகிலேயே அமர்ந்து கொண்டார். அருகே மகனையும் நிறுத்திக்கொண்டார். தனக்குப் பின் தன் பிறந்த விட்டு சொந்தம் தன் பிள்ளைக்காவது தொடர வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில்..
"ஏன் அகிலா.. உங்க அப்பாவும் தங்கச்சியும் தான் தாமரை இலை தண்ணீராய் தனியா உட்கார்ந்து இருக்காங்க.. நீயாவது போய் தயாவை பார்த்துட்டு வரலாம் தானே? உனக்கும் அவன் வயசு தாண்டா!" என்றார்.
"மா பாத்துட்டு வான்னு சொன்ன நான் போய் பாத்துட்டு வர போறேன். அதுக்கு இப்படி நீ சீரியல் அம்மா போல மூக்க சித்தி அழுகாத.. கல்யாணத்துக்கு போட்டுட்டு வந்த மேக்கப் கலையுது பாரு" என்று அன்னையிடம் இலகுவாக பேசிவிட்டு மணமகன் அறையை நோக்கி சென்றான் அகிலன்.
தன் அறைக்குள் நுழைந்த அகிலனை யோசனையோடு பார்த்த தயாளனிடம் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டவன் "வாழ்த்துக்கள் மச்சான்!!" என்று கைகுலுக்கினான்.
தந்தையைப் போல தானென்ற அகங்காரம் இல்லாமல் இனிமையாக பழகும் அகிலனை வெகுவாக பிடித்துவிட்டது தயாளனுக்கும்.
தயாளன் அன்பு மற்றும் வந்தனா இருவரின் கலவை! இவனைப் போல் பாசத்தைக் காட்டவும் முடியாது, கோபத்தையும் கொட்டவும் முடியாது. கோபம் வந்தால் ருத்ரனாக ஒரு ஆட்டம் ஆடி விட்டு தான் அடங்குவான். ஆனால் வேலை என்று வந்தால் அனைத்தையும் திறம்பட முடிக்கும் வல்லவன் தான்.
தந்தையோடு அமர்ந்திருந்த தாரிகாவுக்கு ஏனோ விருப்பமில்லாமல் வந்த இந்த திருமண மண்டபம் பிடிக்கவே இல்லை. கூடவே கசகசவென இந்த பட்டுசேலை வேறு என்று பட்டு சேலை கட்டி அழைத்து வந்த அம்மாவை திட்டியவாறு அவளுக்கு வந்த போனை அட்டென்ட் செய்ய தள்ளி சென்றாள்.
போன் பேசிக் கொண்டே இருக்கும்போது.. அங்கே விளையாடிய பிள்ளைகள் இவளை சுற்றி சுற்றியே வந்து விளையாடிக் கொண்டிருந்தன.
"ஏய்.. தள்ளிப்போங்.. தள்ளிப்போங்க.." என்றவளை கண்டுகொள்ளாமல் அவளை பிடித்துக் கொண்டே விளையாண்ட பிள்ளைகள், அவளது சேலையை பிடித்து இழுத்து விட்டு ஓட.. முன்ன இருந்து கொசுவம் அப்படியே கழண்டுவிட்டது.
"ஐயோ!!" என்று அப்படியே அள்ளிக்கொண்டு சுற்றுமுற்றும் பார்க்க.. அங்கே வரிசையாக இருந்த அறை ஒன்றில் இவள் புகுந்து கதவை தாழிட்டு கொசுவத்தை கட்ட முயன்றாள்.
ஆனால் அவளுக்கு கட்ட வரவே இல்லை. மீண்டும் மீண்டும் முயன்று தோற்றவள், அப்படியே அள்ளி மேலே போட்டு கொண்டாள்.
"என்ன செய்வது??" என்று யோசித்தவள் அம்மாவுக்கு அழைக்க முயல லைன் கிடைக்கவே இல்லை.
ஏற்கனவே இருந்த கடுப்பு..
புடவை மேலிருந்த வெறுப்பு..
எல்லாம் சேர, புடவை கழட்டி வீச.. அப்போது குளியலறையிலிருந்து வெளிவந்த தயாளன் மேல விழந்தது. அவன் அதிர்ந்து அவளை பார்
அதே சமயம்..
"மாப்பிள்ளை நேரமாயிடுச்
சு.. வாங்க.." என்று காளிங்கன் வெளியே கதவை தட்ட…
தொடரும்..