மன ஊஞ்சல் கிளியே
ஜியா ஜானவி
1
சிங்க பெண்ணே..
சிங்க பெண்ணே..
ஆண் இனமே உன்னை வணங்குமே!!
என்ற பாடல் பின்னணியில் இசைக்க மிக கம்பீரமாக படியேறினாள் அந்த மாது!
என்ன ஒரு தீர்க்கமான கண்கள்!!
என்ன ஒரு தேஜஸ் வழியும் முகம்!! தன்னம்பிக்கை சுடர் விட்டு எரிகிறது.. எவ்வளவு அடக்கமான குணம்!! என்று கூட்டத்தில் இருந்து பல பாராட்டுதல் பறந்துவர அனைத்தையும் புன்சிரிப்போடு ஏற்ற அந்த தங்கமகள் மேடை ஏறியதும் கரகோஷம் விண்ணை பிளந்தது.
"தமிழகத்துக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே பெருமை சேர்த்து தந்த நம் தங்கமகள் தாரிகா!!
ஜப்பான் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றவர்!!"
என்று வர்ணனையாளர் பாராட்ட.. பலவித பூங்கொத்துக்களும்.. சால்வைகளும் போற்றப்பட "அனைவருக்கும் நன்றி! நன்றி!!" என நன்றி நவில்தலை செய்து கொண்டிருந்தாள்.
திடீரென்று அவள் முகத்தில் பன்னீர் துளிகள் விழ..
அந்த வாசத்தில் இன்னும் முகத்தை மேலே தூக்கி காட்டியவளின் முகத்தில் ஒரு பாக்கெட் தண்ணீர் தொப்பலாய் இம்முறை உற்றப்பட்டது.
"எரும.. எரும.. கல்யாணம் பண்ணி இருந்தா இந்நேரம் கையில ஒண்ணு இடுப்புல ஒண்ணுனு இருந்திருக்கும். இன்னும் தூங்குது பாரு.. மணி எட்டாகுடி எழுந்து தொலைடி!" என்று காலையிலேயே தனது சுப்ரபாதத்தை ஆரம்பித்தார் ஆடலரசி.
"மா காலையிலேயே எவ்வளவு நல்ல கனவு கண்டுகொண்டிருந்தேன். தண்ணிய ஊத்தி எல்லாத்தையும் கலச்சிட்டியே!!" என்று உக்கிரமாக பார்த்தாள் தாயை தாரிகா.
"எது அந்த தங்க பதக்கம் தானே? இந்த தடவ என்ன ஒலிம்பிகா இல்ல பாராஒலிம்பிக்கா?" என்று நக்கலாக கேட்ட படி அந்த அறையில் அவள் போட்டு வைத்து இருந்த துணிமணிகளை சேகரித்தார் துவைப்பதற்கு என்று.
"என்னை ரொம்ப கிண்டல் பண்ற.. ஒரு நாள் இல்லை ஒரு நாள்.. இந்த தரணியே இந்த தாரிக்காவை தூக்கி வைத்து கொண்டாடும் நாள் வரும்!" என்றாள்.
"நாள் வரலடி நாத்தம் தான் வருது.. எழுந்து போய் முதல்ல பல்ல வெளக்கு. கருமம்! கருமம்!" என்றவாறு அரசி வெளியே செல்ல "அவ்வளவா நாறுது?" என்று தன் உள்ளங்கையில் ஊதிப்பார்த்தவள் "அட! ஆமாம்!!" என்றவாறு குளியல் அறைக்குள் நுழைந்தாள்.
"அம்மா சீக்கிரம் வாம்மா எனக்கு பேங்குக்கு டைம் ஆயிடுச்சு!" என்றபடி சாப்பாட்டு மேசையில் அமர்ந்து கத்தி கொண்டிருந்தான் அகிலன். ஆடலரசி கதிரேசனின் மூத்த புதல்வன். அருகிலிருக்கும் கூட்டுறவு வங்கியில் மேனேஜராக பணியாற்றுகிறார்.
"எனக்கு என்ன பத்து கையடா இருக்கு? ஒத்த பொம்பள எத்தனை வேலைதான் பார்க்கிறது!" என்று அலுத்துக்கொண்டாலும் வேலை என்னவோ தன் பாட்டில் செய்து கொண்டிருந்தது கைகள். சராசரியான இந்திய தாய்! எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் இயந்திரமாக ஓடும் பெண்மணி.
"ஏன் உன் அருமை பொண்ணு என்ன பண்ணுறா? அவள கூப்பிட வேண்டியதுதானே ஹெல்ப்புக்கு!" என்றபடி அம்மா கொடுத்த காலை உணவை சாப்பிட்டான் அகிலன்.
"எங்க இந்த வார்த்தையை உங்க அப்பனுக்கு நேரா நீ சொல்லிடு பார்ப்போம்? ஊருல இல்லாத அதிசய பொண்ண பெத்து வைத்திருக்கிறாராம்.. ஒரு வேலை செய்ய விட மாட்டேன் என்கிறார். இவளால வரப்போற இவ மாமியாகாரி கிட்ட நான் தான் வாங்கிக் கட்ட போறான் போல" என்றவர் மகனுக்கு மதிய சாப்பாட்டை பேக் செய்து கொண்டு வந்து வைத்தார்.
"என்னடி காலங்காத்தால என்னையும் என் பெண்ணையும் போட்டு மெல்லுற?" என்ற படியே பூஜை அறையில் இருந்து வந்தார் கதிரேசன்.
"ஆமா எனக்கு வேற வேலையே இல்ல.. சாப்பிடுவதற்கும் ஒன்னும் இல்ல.. உங்களையும் உங்க பொண்ணை போட்டு மெல்லுறோம்" என்றவர் மகனிடம் கண்களால் பார்த்து 'எங்கே இப்போது பேசு உன் அப்பாகிட்ட?" என்று கேட்க.. அவனும் 'தெய்வமே!!' என்று இரு கைகளையும் உயர்த்தி காட்டியவன் அப்பாவிடம் மிக பவ்யமாக "நான் கிளம்பறேன் பா!" என்று விட்டு அம்மாவிடம் சொல்லிவிட்டு கிளம்பினான்.
"சாப்பாடு எடுத்து வைக்கவா என்று கேட்ட மனைவியிடம்.. "இரு இரு என் பொண்ணு வந்து விடட்டும்!" மகளின் அறையையே அன்னார்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்.
"நல்ல அப்பா நல்ல பொண்ணு.. ஒவ்வொரு வீட்டில் ஆம்பள புள்ள தான் அடங்காம அராத்தா சுத்தும்.. இங்கே என்னடானா அப்படியே தலைகீழா இருக்கு. பையன் அடக்க ஒடுக்கமா காலைல ஆபீஸ் கிளம்பி போறான். இவ 8 மணிக்குதான் எந்திரிச்சு 10 மணிக்கு தான் காலை சாப்பாடு சாப்பிட வரா.. காலேஜ் முடிச்சதும் போதும் வீட்டில் வைத்து சமாளிக்க முடியல.. சீக்கிரமே ஒரு நல்ல மாப்பிள்ளையை பார்த்து இவளை கட்டிக்கொடுக்கனும்" என்றதுதான் தாமதம்..
"அதுக்கு எதுக்கு ஊர்ல மாப்பிள்ளை பார்க்கணும்? என் தங்கச்சி செவ்வந்தியோட மகன் இன்பரசு தான் இருக்கானே! அவனுக்கே கட்டிவைத்து என் பொண்ணை என் கூடவே வச்சிக்குவேன்!" என்று மீசையை முறுக்கி விட்டார் கதிரேசன்.
'இந்த மனுஷன் காலம் புல்லா இவளுக்கு ஆக்கி போட என்ன அடிமையாக வைத்திருக்க பிளான் பண்ணிட்டாரு.. எப்படி நீங்க அவனை இவளுக்கு கட்டி வைக்கிறிங்கனு நானும் பாக்குறேன்?' என்று மனதுக்குள் நினைத்தவர், மேலே மகளின் அறையை பார்த்து "சீக்கிரம் வாடி அப்பாவுக்கு வேற சுகர் மாத்திரை போடணும்!" என்று கத்தினார்.
ஒரு வழியாக தனது அலங்காரங்களை எல்லாம் முடித்து வந்தவள் தந்தையை தோளோடு கட்டி முத்தம் வைத்து "குட் மார்னிங் பா!" என்றதும் வெயில் பட்டவுடன் உருகும் ஜஸ் போல உருகிப் போனார் கதிரேசன்.
தந்தையும் மகளும் தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்கும் போது அவர்களது வீட்டுக்குள் தயங்கித் தயங்கியே காலெடுத்து வைத்தார் அன்புச்செழியன் ஆடலரசியின் அண்ணன்.
அண்ணனை அன்பாக ஆடலரசி பார்க்க.. மச்சானை வெட்டும் எண்ணத்தோடு கோபமாக முறைத்தார் கதிரேசன்.