20
வினய் வர்த்தினி வந்த விமானம் சென்னை வந்தடைய.. படபடக்கும் மனதோடு தன்னவனின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு சென்னையில் கால் பதித்தாள் வர்த்தினி.
முன்னமே இவள் வரும் விமானத்தின் பெயர் நேரம் முதற்கொண்டு அனைத்தையும் பெற்றோரிடம் கூறியிருக்க.. இவளை அழைக்க சுப்பு மீனாட்சி ஹரிப்ரியா மூவருமே சென்னை வந்திருந்தனர்.
முழுதாக மூன்று மாதங்கள் கடந்து பெண்ணை பார்க்க போகிறோம் என்ற சந்தோசத்தில் பெற்றவர்களும் சகோதரியும் காத்திருக்க.. தன்னவனை பிரிய முடியாமல் அதே சமயம் பெற்றவர்களை பார்க்க மனது துடிக்க.. தவிப்புடன் வினய்யை பார்த்தாள் வர்த்தினி..
"என்ன மாமீமீ.. அம்மா அப்பா பார்த்த உடனே என்னை கழட்டி விடலாம்னு நினைச்சிண்டு இருக்கேளா?" என்று அவன் கேலியாக கேட்க..
அவனின் அந்த கேள்வியில் பதறிப்போய் கண்கள் கலங்க வினய்யை அவள் பார்க்க.. சிறு கேலிக்கு கூட தாங்காத மலர் போன்ற மென்மை மனம் உடைய மலரினியின் கண்களை பார்த்த வினய்க்கு அது ஏர்போர்ட் என்பதெல்லாம் மறந்து, அவளை இறுக்க அணைக்க துடித்தன அவனது கைகள்.. சூழ்நிலையை கருதி சுற்றுப்புறத்தை கருத்தில் கொண்டு தோளோடு அணைத்தவன் "சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் மாமீமீ.. இதுக்கு போய் பெருசா ஃபீல் பண்ணாத ஈஸியா விடு" என்றவன் அவர்களுக்கான லக்கேஜை எடுக்கச் சென்றான்.
இருவர் லக்கேஜையும் தனித்தனியாக ட்ராலியில் வைத்து எடுத்து வந்தவன், அவளுடையதை கொடுத்து "எனக்கு சென்னையில் பிரெண்ட் ஒருத்தன பார்க்க வேண்டி இருக்கு.. நீ இப்போ உன் பேரன்ட்ஸ் கூட ஊருக்கு போ.. ரெண்டு நாள் அவங்க கூட சந்தோஷமா இரு. அதுக்கப்புறம் நான் பின்னாடியே வந்து விடுவேன்.. அம்மா அப்பாவும்" என்று அவளுக்கு ஆறுதல் கூறி.. மென்மையாக நெற்றியில் முட்டி சிறு முத்தம் பதித்து விலகினான்.
கண்களில் கூலர் அணிந்து இவன் பின்னே வர, முன்னால் வர்த்தினி சென்றாள். உள்ளுக்குள் பெற்றோர் தன் காதலை எவ்வாறு ஏற்றுக் கொள்வார்கள் என்று வருந்தினாலும், அவர்களை எதிர் கொண்ட நேரம் அவற்றைப் புறந்தள்ளி மகிழ்ச்சியோடு தந்தையை கட்டிக்கொண்டாள்.
எப்பவுமே மகள் அதிகாரத்தில் தாயைவிட தந்தை ஒரு படி மேல்தான்!!
பின் தன் தாயையும் தங்கையையும் இருபுறமாக கட்டிக் கொண்டு சிறிது நேரம் வளவளத்தவள், பின்பு அவர்கள் ஏற்பாடு செய்து இருந்த கார் வந்து விட, பெண்கள் மூவரும் பின்னால் அமர சுப்பு டிரைவரோடு முன்னால் அமர்ந்து கொண்டார்.
அவள் பெற்றோரை பார்த்தது முதல் காரில் ஏறியவரை விமான நிலையத்தில் இருந்த படியே அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் வினய்.
அவள் காரில் ஏறியதும் ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்க சிறு புன்னகையுடன் கையசைத்தான் வினய். பதிலுக்கு தலையாட்டி விடைபெற்றாள் வர்த்தினி.
சென்னையில் ஒரு மாலுக்கு வந்திருந்தனர். தங்கை விருப்பப்பட்ட பொருட்களை அவள் வாங்கித்தர, மீனாட்சியும் பார்த்து பார்த்து வர்த்தினிக்கு புடவைகளை தேர்வு செய்து கொண்டிருந்தார். எப்போதும் இது வழக்கம்தான் பெரும்பாலும் மீனாட்சி அவளுக்கு புடவையை தான் தேர்வு செய்வார். அதனால் எதையும் யோசிக்காமல் அக்காவும் தங்கையும் அந்த ஷாப்பிங் மாலில் ஒவ்வொன்றாக பார்த்து பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் தேவையானதை வாங்கிக் கொண்டிருந்தார்கள்.
இரவு தான் அவர்களுக்கான ரயில்.. சென்னையிலிருந்து தஞ்சாவூருக்கு செல்லும் ரயிலில் முதல் வகுப்பில் இவர்களுக்காக முன்பதிவு செய்யப்பட்டிருக்க.. ரயிலிலும் தங்கையுடன் வளவளத்துக்கொண்டே வந்தாள் வர்த்தினி.
பிரியாவுக்கும் அக்காவிடம் சொல்ல நிறைய கதைகள் இருக்க,
"ப்ரீ.. ப்ரீ" என்று கூறியப்படி லண்டன் கதைகளை வர்த்தினி அளக்க..
"வரு.. வரு" என்றவாறு மூன்று மாத காலேஜ் கதைகளை இவள் கூற..
"இந்த பொண்ணுங்களுக்கு வாயே வலிக்காதா? சலசலன்னு பேசிண்டே இருக்கா" என்று மீனாட்சி சலித்து கொள்ள..
சுப்பு தன் தேவதை பெண் இருவரையும் வாஞ்சையோடு பார்த்தார். "விடு மீனு இவ்ளோ நாளா பிரியா குட்டியும் ஒத்தையா தானா சுத்திண்டு இருந்தா, இப்போ வர்த்தினி வந்ததும் அவளாண்ட பேசிண்டு இருக்கா.. எவ்ளோ நாளைக்கு இப்படி பேசிண்டே இருக்க போறா? புக்ககம் போற வரைக்கும் தானே.. அப்புறம் ஆத்துக்காரன்.. அவங்க ஆத்து மனுஷானு அதை பார்க்க தான் அவாளுக்கு நேரம் சரியா இருக்கும்" என்று கூற அதை ஆமோதித்தார் மீனாட்சி.
சகோதரிகள் இருவரும் தங்களுக்குள் பேச்சில் முழுகி விட.. நேற்று இரவு பெண்ணை பார்க்கும் சந்தோசத்தில் சரியாக தூங்காமல் வந்திருந்த சுப்புவும் மீனாட்சியும் கீழ் பெர்த்தில் படுத்ததும் உறங்கி விட, மேல் பெர்த்தில் சகோதரிகள் இருவரும் படுத்திருந்தனர்.
சிறிது நேரத்தில் பிரியாவும் உறங்கி விட..
வர்த்தினிக்கு தான் தூக்கம் தொலைதூரம் போனது.. வினய்யின் நினைவு ஒரு புறம்.. தன் காதலை எவ்வாறு பெற்றோரிடம் சொல்லுவது என்ற பதைபதைப்பு ஒரு புறம்.. வினய்யின் பெற்றோர் வந்தால் அவர்களை எப்படி தங்கள் பெற்றொர் நடத்துவர் என்ற கலக்கம் ஒரு புறம் என்று கண்களில் தூக்கம் வருவேனா என்று அடம் பிடிக்க.. எழுந்து அமர்ந்தவள் ஓடும் ரயிலில் ஜன்னலை வெறித்தவாறு இருந்தாள்.
இயற்கை உபாதைக்கு கழிவறை நோக்கி செல்ல.. சட்டென்று அவள் வாயை முரட்டு கை ஒன்று மூட.. அர்த்தராத்திரியில் தன்னந் தனியாக செல்லும் பெண்ணிடம் ஒருவன் அத்துமீறுவது பற்றி நினைத்தவளின், எண்ணத்தில் பத்திரிகைகள் படித்த பல செய்திகள் எல்லாம் அவள் கண் முன்னே அந்த ஷணத்தில் வந்து போக.. தன் குதிக்காலில் போட்டிருந்த ஹீல்ஸ் உதவியுடன் அவன் கால்களில் வேகமாக உதைத்து தன்னை அவனிடம் இருந்து விடுவித்து கொண்டு ஓட முயன்றாள்.
கர்சிப்பினால் தன் முகத்தை மூடியிருந்த அந்த திருடனும் அவள் ஓட முடியாமல் வழியை மறைக்க.. சுற்றும் முற்றும் பார்த்தவள், அருகில் ஒன்றும் கிடைக்காமல் தன் காலே தனக்கு உதவி என்று அவன் நெருங்கும்போது முட்டியால் மர்ம தேசத்தை உதைக்க எண்ணி அவள் காலை தூக்க.. அந்த திருடனும் இரண்டடி பின்னால் நகர்ந்து தன் சந்ததியினரை காப்பாற்றிக் கொண்டான்.
வர்த்தினியோ மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க.. கண்கள் பயத்திலும் கோபத்திலும் சிவக்க.. ஒரு மினி காளியாய் நின்றவளை பார்த்தவனுக்கு சற்றே பயம் சூழ.. ஆனால் பயந்தால் காரியம் ஆகாது என்று எண்ணியவன்.. மீண்டும் அவளை நெருங்க.. மேலும் இரண்டடி பின்னால் சென்றவள்..
"கிட்ட நெருங்கினே கத்தி எல்லாரையும் கூப்பிடுவேன்" என்று ஒற்றை விரல் நீட்டி அவனை எச்சரித்தாள்.
அதெல்லாம் எங்கே அவன் காதில் கேட்டான். அலட்சியமான பாவனையுடன் மேலும் மேலும் அவளை நெருங்கியவன்.. இரு கைகளால் அவளை சிறை செய்ய.. தன்னை நெருங்கி வந்தவனின் கண்களை கூர்ந்து பார்த்த வர்த்தினிக்கு அந்த திருடன் யார் என்று புரிய.. அதுவரை இருந்த அனைத்து பயமும் பறந்தோட.. திருடனின் நாடகம் புரிந்து உள்ளுக்குள் சிரித்தாலும் வெளியே அதை காட்டிக்கொள்ளாமல் அவனை முறைத்தவாறே நின்று.. "ஒழுங்கா தள்ளிப்போ.. இல்ல நான் கத்தி எல்லாரையும் கூப்பிட்டுவேன்.. அப்புறம் தர்ம அடிதான் நோக்கு கிடைக்கும்" என்று சிரிப்பை அடக்கியவாறு அவள் கூற..
"கூப்பிடு" என்று கரகரத்த குரலில் கூறியவன்..
"உன் வாயை எப்படி அடக்குறதுன்னு எனக்கு தெரியும்.. அதேபோல உன்னை அடக்கி ஆளவும் எனக்கு தெரியும்" என்று முரட்டுக் குரலில் கூறி அவளை நெருங்க..
சற்றும் பயமில்லாமல் அவனை பார்த்தவள்.. "நீ என்னடா என் வாயை அடைக்கிறது.. உன் வாயை நான் எப்படி அடிக்கிறேன்னு பாரு" என்றவள் அடுத்த கணம் அவன் சட்டை காலரை பிடித்து தன் முகத்தின் அருகே இழுத்தவள், அந்த திருடனின் முரட்டு இதழ்களை முரட்டுத்தனமாக கவ்வி இருந்தாள்.
ஏற்கனவே அவளின் காதல் அதிரடியில் மயங்கி இருந்தவன்.. இன்று அவள் முத்த அதிரடியில் மொத்தமாகவே வீழ்ந்தான் அந்த திருட்டு காதலன் வினய் விஸ்வேஸ்வரன்.
அவளை உதடுகளை விலக்காமலே ரயில் பெட்டியில் சுவரோடு சேர்த்து அழுத்தினான் வினய். உடலோடு உடல் ஒட்டி உரச.. உதடுகள் இரண்டும் ஒன்றுடன் ஒன்று பிணைந்து, லயித்து இருக்க.. இன்னும் இன்னும் என்று அவளின் தேன் மதுர அதரங்களில் முழுவதுமாக தேன் அருந்திய பின்னே விடுவித்தான். உதடுகள் பிரிந்தாலும் உடல்கள் மட்டும் ஒன்றோடொன்று உரசி கொண்டு நின்றது.
"மாமீமீமீ..." என்று அவன் கிசுகிசுப்பாக அழைக்க..
அவனது அழைப்பில் பதில் பேச முடியாமல் வெட்கம் மேவிட அவன் கைக்குள்ளேயே தன்னை புதைத்துக்கொண்டாள். அவளை தாங்கிக் கொண்ட அவன் கைகள், இன்னும் அவளை தன்னோடு இறுக்க.. உதடுகளோ அவள் கன்னத்தில் ஊர்வலம் போக.. அவளின் முரட்டுத்தனத்தை தனதாக்கியவன், அவள் உதடுகளுக்குள் தன் உதடுகளைப் புதைத்தான்.
வன்மையுள் மென்மை காட்டினான்..
அந்த மென்மை உள்ளே தாபத்தை ஊட்டினான்..
தாபத்தின் மூலம் மோகத்தை தூண்டினான்..
ஒற்றை முத்தத்தில் பல வித்தைகளை அவன் காட்ட..
அவனின் இதழ்கள் களியாட்டத்தில், ஆழ்கடலின் சுழலில் மாட்டிக் கொண்டதை போல உணர்ந்தாள் வர்த்தினி.
நீண்ட நெடிய முத்தத்திற்கு பிறகு அவளை விட்டவன் செங்காந்தள் என செம்மை பூத்திருந்த அவளது முகத்தை தன் ஒற்றை விரலால் வருடினான். அவளோ அதில் கிறங்கி மூச்சு முட்ட கண்களை மூடி சுகித்திருந்தாள்.
"மாமனோட ஒத்த முத்தத்தை தாங்க உன்கிட்ட ஸ்டன்த்து இல்லையே வனி.. ஃபர்ஸ்ட் நைட்ல நீ என்ன பண்ண போற" என்று அதிமுக்கியமான கேள்வியை அவன் யோசனை முக பாவனையோடு கேட்க..
அவனின் கேள்வியில் லஜ்ஜையுற்றவள், அவன் சட்டை காலரை கொத்தாக பிடித்து தன்னை நோக்கி இழுத்தாள். அவளின் இழப்புக்கு தன் போல போனவன்..
ஒற்றை புருவத்தை உயர்த்தி "ட்ரேய்லர் வேணா பார்ப்போமா?" என்று அவள் கண்ணடிக்க..
"அடிப்பாவி.. கொஞ்சமாவது உனக்கு பயம் இருக்கா? நட்ட நடு ட்ரெயின்ல கேட்குற" என்று ஆச்சரியத்தில் வாயை பிளந்தவன் சுற்றும் முற்றும் பார்த்தவாறு கேட்க..
"நேக்கு ஏன் பயம் வரனும்.. அதுவும் உங்க கிட்ட" என்றவள் அவன் கழுத்தை இன்னும் தன்னருகே இழுத்து மூக்கோடு மூக்கு உரச..
"சரியான வசியகாரி டி நீ" என்று தன்னை வசியம் செய்யும் அவளது பெருத்த மேல் உதட்டையும் அதன் மேல் இருக்கும் ஒற்றை மச்சத்தையும் மெல்ல வருடினான்..
"சரி நேரமாச்சு.. நான் தூங்க போகனும்" என்று அவள் அவனை தள்ளி விட்டு கிளம்ப எத்தனிக்க..
"இங்க ஒருத்தன் உன்னால தூங்காம இருக்கேன். கொஞ்சமாவது அதை நினைச்சு பார்த்தியா?" என்று அவன் முறுக்கிக் கொள்ள..
"அதுக்கு? உங்க கூடவே வந்து உங்க கூபேயில உங்களை என் மடியில் படுக்க வைத்து.. தலைகோதி தாலாட்டு பாடி தூங்க வைக்கவா முடியும்?" என்று அவள் உதட்டை சுழிக்க..
இவனோ "மாமி இது கூட நல்லாதான் இருக்குடி.. அப்படியே நம்ம கூபேக்கு போயிடலாம்.. நானும் நீயும் மட்டும் தான்" என்று அவன் கண்ணடித்து உதட்டை மடித்து சிரிப்பை மீசைக்குள் அடக்கியவாறு கூற..
"கொழப்ப பாரு கொழுப்ப" என்று நறுக்கென்று அவன் கையில் கிள்ளினாள் வர்த்தினி.
அவனோ கடகடவென்று சிரிக்க ஆரம்பிக்க சட்டென்று இரு கைகளாலும் அவனது வாயை பொத்தி..
"கடோத்கஜன் மாதிரி சிரிக்காதேள்.. காப்பாண்ட்மெண்ட்ல உள்ளவா எல்லாம் முழிச்சிக்க போறா" என்று விழிகளை உருட்டி தன்னை மிரட்டும் இந்த அழகு பாவையை கொள்ளை கொள்ள அவனது மனம் துடித்தது.
"எங்க அப்பா அம்மா நம்மளை இப்படி பார்த்தான்னா.. அச்சோ.. பெருமாளே!! விடுங்கோ சாமி" என்று அவனை சுற்றிக் கொண்டு செல்ல முயன்றவளின் கையை பற்றியவன், அவள் கண்களை ஆழ்ந்து பார்த்து, "வேணும்னா இப்பவே தாலி கட்டிட வா மாமி?" என்றான். அந்த கேள்வியில் அவள் கழுத்தில் தாலி இப்போதே கட்டிக் விடுவானோ என்று நினைத்து பார்த்தவளுக்கு பக்கென்று ஆனது.
அவனின் அதிரடியை தான் அவள் அறிந்தவள் ஆயிற்றே!!
"என் பேரண்ட்ஸ் சம்மதிக்க வேணாமா?" என்று அவள் மென்மையாக கேட்க..
"உன் பேரண்ட்ஸ் சம்மதிக்கலைன்னா நம்ம மேரேஜ்.....?" அவன் கேள்வியை பாதியில் விட்டு விட்டு அவள் முகத்தை குறிப்பாக பார்க்க.. வர்த்தனிக்கு அவன் கேள்வியின் அர்த்தம் புரிந்தானிருந்தது.
வர்த்தினிக்கு வினய்யோ அவளின் மறுபாதி ஆனால் அவளின் பெற்றவர்களுக்கு??
கேள்வியே??
சுப்பிரமணியனும் மீனாட்சியும் எப்பொழுதும் பணத்திற்கு மதிப்பு கொடுப்பவர்கள் அல்ல..
குணம்.. குடும்பம்.. ஆச்சாரம் என்று பார்ப்பவர்கள். அவனின் உயரத்தையும் தொழில் ஆளுமையும் எண்ணிலடங்கா சொத்துக்களையும் கண்டு மகளை தாரைவார்க்கும் குறு சிந்தனையுடைய பெற்றோர்கள் அல்ல அவர்கள்..
ஆனால் அதே சமயம் பெண்ணின் விருப்பத்திற்கு மதிப்பு கொடுப்பவர்கள். பெண்ணின் மீது அளவுகடந்த பாசத்தை பொழிவர்கள் தான் அவர்கள், அதேவேளை அதில் கண்டிப்பும் கலந்து இருக்கும்.
"கண்டிப்பாக சம்மதிப்பார்கள்!!" என்றாள் வர்த்தினி. அந்த வார்த்தைகள் அவளுக்கு அவளே சமாதானம் சொல்லிக் கொள்வதைப் போலவே இருந்தது. அவர்களின் ஆச்சாரம் அனுஷ்டானம் எல்லாம் தெரிந்தவள் ஆயிற்றே வர்த்தினி..
ஆனால் வினய்யோ அவள் முகத்தை கூர்ந்து பார்த்தான், அதில் தெரிந்த சஞ்சலமும் பதட்டமும் கண்டு அவன் மனம் அவளுக்காக வருந்தியது.
அவன் செல்வத்தில் உயரம் தான். ஆனால் அதே நேரம் தன்னவள் இல்லாத வாழ்க்கை அதலபாதாளம் போன்றது அவனுக்கு.
அவனது தேவதை பெண்ணின் காதல் காணக் கிடைக்காதது.. அவளை இழந்துவிட்டால் தொழில் துறையிலும் மற்றவற்றிலும் அவன் எவ்வளவு வெற்றி பெற்றாலும் அவன் ஏதும் இல்லாதவனாகத்தான் இருப்பான்!!
அவனின் சந்தோஷம்.. பலம்.. ஐஸ்வர்யம்.. சக்தி.. மனோவலிமை அனைத்தும் ஹம்சவர்தினி!! அதேபோல் அவனது பலவீனமும் அவள் மட்டுமே!!
ஆனால் இதற்காக தன்னவள் கலங்குவதா?
தன்னவளை கலங்க விட்டேன் என்றால் நான் என்ன ஆண்மகன்?? என்ற எண்ணம் ஓட..
சட்டென்று அவளை மென்மையாக அணைத்துக் கொண்டவன், "நீ எதுக்கும் பயப்படாதே வனி.. கண்டிப்பா உங்க அப்பா அம்மாவை சம்மதிக்க வைப்பேன். அவங்களோட சம்மதத்தோட தான் நம்ம கல்யாணம் நடக்கும்" என்று ஆறுதல் மொழி கூற..
அவளது சஞ்சலமான மனது அவனின் இந்த தைரியத்தாலும் ஆறுதல் மொழியானாலும் சமன்ப்பட்டிருக்க.. மெல்ல நிமிர்ந்து தன் மன்னவனை பார்த்தாள் மங்கை..
அதில் தான் எத்தனை எத்தனை விழி மொழிகள்.. வார்த்தைகள் கூறாத பல அர்த்தங்கள்.
வார்த்தைகளாலின்றி அவள் மன உணர்வை உணர முடியுமா? அது மனம் சார்ந்த உணர்வு அல்லவா? ஆனாலும் அவள் மனதின் நாயகனே அதையும் புரிந்து கொண்டு..
"கவலைப்படாத வனி.. உன் அம்மா அப்பா எனக்கும் அதே மாதிரிதான். அதனால் எந்தவித கஷ்டமும் அவங்களை படுத்த மாட்டேன். ஆனா அதே சமயம் உன்னையும் நான் விட்டுக்கொடுக்க மாட்டேன்" என்று அவன் அழுத்தமாக கூறினான்.
முகம் மலர பார்த்தவளை.. "நீ என்னுடையவள்.. அதில் எந்த சந்தேகமும் உனக்கு எள்ளளவும் வேண்டாம். சரி போய் தூங்கு போ நேரம் ஆகுது" என்று அவளை அனுப்பி வைத்தவன் யோசனையுடனே அவளது முதுகை வெறித்தவாறு நின்றிருந்தான்.
ரயிலின் வேகத்தில் அடித்த குளிர்ச்சியான காற்று அவன் கேசத்தைக் கலைத்து செல்ல.. உள் மனதில் இருந்த அவனின் சஞ்சலத்தை அது சற்றும் போக்கவில்லை..
அவள் காரில் ஏறி சென்றதும் தன் நண்பனை பார்க்க தான் முதலில் எண்ணினான் வினய்.
ஆனால் உள் மனதிலும் ஏதோ ஒன்று சரியில்லை என்று அவனுக்கு உறுத்திக்கொண்டே இருந்தது. என்னவென்றும் அவனுக்கு புரியவில்லை. இவ்வாறெல்லாம் முன் பின் அவனுக்கு நிகழ்ந்ததே கிடையாது. இது எதனால்?எதற்கான அறிகுறி? என்று புரியாமல் குழம்பினான். தன்னவளை தனியாக அனுப்பிவிட்டு சென்னையில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் அவனுக்கு ஏதோ பாலைவனத்தில் சுடும் வெயிலில் இருப்பது போல தகித்தது.. இருள் சூழ்ந்த வனத்தில் கொடூர மிருகங்களை இடையே நிற்கும் பயத்தையும் ஒருங்கே கொடுக்க.. அதற்குமேல் தாமதிக்காமல் வாடகை வண்டியை பிடித்தவன் வர்த்தினின் காரை ஃபால்லோ செய்ய ஆரம்பித்தான்.
அவர்கள் மாலில் சுற்றிய போதும் அமைதியாக, வர்த்தினியின் தங்கையுடனான வளவள பேச்சையும் சுற்றுவதையும் இவனும் பார்த்துக் கொண்டேதான் இருந்தான்.
அப்போது வர்த்தினியின் பெற்றோர் மீனாட்சியும் சுப்புவும் தங்களுக்குள் ட்ரையினுக்கு லேட் ஆகுது சீக்கிரம் கிளம்பனும் என்று பேசிக்கொண்டிருக்க.. அதைக் கேட்டவன் எந்த ட்ரையின் என்று தெரியாமல், அப்போது சென்னையிலிருந்து அவர்கள் ஊர் நோக்கிச் செல்லும் ட்ரையினை தேடினான். மூன்று ட்ரையின்கள் காட்ட.. அனைத்திலும் தனக்கும், ஒரு டிராவல் ஏஜென்ட் மூலம் டிக்கெட் பதிவு செய்தான்.
மீண்டும் அவர்களை ஃபாலோ செய்து, அவர்கள் ட்ரையின் எண்ணை கண்டுபிடித்து விட.. அந்த ட்ரைனில் தனக்கு சீட்டை உறுதி செய்துகொண்டு அதில் ஏறியவன், டி டிஆரை கையில் போட்டுக்கொண்டு தன் பணப்பலத்தால், அவர்கள் இருந்த அதே கம்பார்ட்மெண்டில் தானும் தங்கினான்.
உடல் தான் அவன் அறையில் படுத்திருந்த போதும், கவனமெல்லாம் தன் வனியை சுற்றி தான்.
அதற்கு மேல் தாங்க மாட்டாமல் சற்று நேரம் வெளியே நிற்கலாம் என்று வந்தவன் கண்களில் வர்த்தினி கழிவறை நோக்கிச் செல்வது விழ.. "இந்த நைட் நேரம் தனியாக இப்படி போறா" என்று கடிந்து கொண்டே, அவளுடன் விளையாடி பார்க்க ஆசை கொண்டு, தன் கர்சிப்பினால் முகம் மறைத்து பின்னே வந்தான்.
காலையில் தஞ்சாவூர் வந்து சேர.. அனைவரும் கிளம்ப பின்னால் இவனும் அவர்களுடன் நடந்த படியே வந்தான்.
இவர்களுக்கான வண்டி வந்து காத்திருந்தது திருவையாறு செல்ல..
அவர்கள் காரில் ஏற போகும் சமயம் தற்செயலாக அவர்களை முந்தி முன்னாடி செல்வதைப்போல வர்த்தினியை தன் தோளால் ஒரு இடி இடித்து விட்டு முன்னால் சென்றான். அதில் அவள் அதிர்ந்து பார்க்க அருகில் வந்த ஹரிப்பிரியாவோ அவனை திட்டி தீர்த்தாள்.
"இவனுங்களுக்கு எல்லாம் இதே வேலைதான்" என்று திட்ட.. அவனோ தன் கூலரை தலைக்கு மேல் ஏற்றிவிட்டு, ஹரிபிரியா அருகில் வந்தவன் "சாரி சிஸ்டர்" என்றவாறு வர்த்தினியை நோக்கியவன் ஷனத்தில் அவளை பார்த்து கண்ணடித்து விட்டு சென்றுவிட்டான்.
அக்காவின் மென்மை குணத்தை அறிந்த ஹரிப்பிரியா "இதுக்கு எல்லாம் நீ பீல் பண்ணாத வரு வா வா" என்று அவளை அழைத்து செல்ல.. திருவையாறு நோக்கி சென்றது அவர்களை ஏற்றிய கார்..
வினய் தஞ்சாவூரில் தங்கிவிட.. வர்த்தினி பெற்றோருடன் திருவையாறு வந்தவள், தான் அவர்களுக்கு வாங்கி வைத்திருந்த பொருட்களை எல்லாம் எடுத்து கொடுத்தாள். கூடவே பாடியதற்கு கணிசமான தொகையை வினய் கொடுத்திருந்தையும் கொடுத்தாள். பெற்றவர்கள் பாசத்துடன் வாங்கிக்கொள்ள.. ஹரிப்பிரியா இன்னும் தன் லிஸ்டில் ஒன்று இரண்டு குறைவதாக கூறி அவளிடம் சண்டையிட்டாள்.
"அடுத்த முறை போகிறச்சே நோக்கு வாங்கித் தரேன்டி.. இப்போதைக்கு அக்காவ மன்னிச்சுக்கோ டி ப்ரீ" என்று செல்ல தங்கையின் தாடையை பிடித்து வர்த்தினி கொஞ்ச..
"ஆமாமாம் நீ அடுத்த முறை அப்படியே லண்டனுக்கு போயிட்டாலும்.. ஆனாலும் உன்னை மன்னிச்சிட்டேன் இந்த சாக்லேட்சுக்காக" என்று லண்டன் ஏர்போர்ட்டில் டியூட்டி ப்ரீ என்று இருந்த சாக்லேட்டை ஹரிப்பிரியாக்காகவே வாங்கிக் கொடுத்திருந்தான் வினய்.
தங்கையும் அதை ஆவலுடன் வாங்கிக் கொண்டு போக, தன் மாயவனை கொஞ்சி கொண்டாள் மனதில்.
அடுத்த இரண்டு நாட்களில் இப்படி நகர்ந்தது என்று கேட்டால் வர்த்தினிக்கு தெரியவே தெரியாது. காலையிலே ஒரு கூட்டம் அவளை விசாரிக்க வேண்டி வரும். "லண்டனில் அதை பாத்தியோ? இதை பாத்தியோ?" என்று கேள்விகள் கேட்க.. இன்னொரு கூட்டமோ "ஏண்டிமா நீ என்ன பாடின? எப்படி எல்லாம் பாடின? எப்போ அது ரிலீசாகும்?" என்று குடைய.. "ஏண்டிமா.. லண்டன் போயிட்டு வந்தியே.. நேக்கு எல்லாம் ஏதாவது வாங்கிண்டு வந்தியானோ?" என்று உறவினர்கள் நச்சரிப்பு ஒருபுறம்.. "நீ பாடின பாட்டுக்கு எவ்வளவு பேமென்ட் கொடுத்தா? கேஷா கொடுத்தாளா? செக்கா கொடுத்தாளா?" என்று அவளின் பண வரவுகளை அறிய நச்சிரிக்கும் கூட்டம் ஒருபுறம் என்று சிறிது கூட அவளை வேறு ஏதும் சிந்திக்க விடாமல் வைத்திருந்தனர்.
இரவின் தனிமையில் மட்டும் தன்னைவனின் நினைவோடு தூக்கமும் ஆட்கொள்ள.. காதலிக்கும் முன்கூட அவனோடு கனவில் முத்த சஞ்சாரத்தில் சஞ்சரித்தாள்.. ஆனால் இப்போதெல்லாம் அம்மாதிரியான கனவுகள் அவளுக்கு வருவதே இல்லை..
ஒருவேளை.. கனவின் நாயகனே நிஜத்தில் தருவதால் இருக்குமோ??
மூன்றாம் நாள் காலை.. அன்று வெள்ளிக்கிழமை, காலையிலேயே வீட்டில் எப்பொழுதும் போல இவள் ஆண்டாள் கீர்த்தனையை உருகி பாடிக்கொண்டிருக்க.. அவளின் அந்த பாடலில் தன்னை மறந்து கேட்டுக்கொண்டிருந்தார் சுப்பு. ஆனால் வினாடியும் ஓய்வு இல்லாமல் அன்று சுறுசுறுப்பாக வேலைகளை பார்த்துக்கொண்டே இருந்தார் மீனாட்சி.
தீபாரதனையோடு தன்னிடம் வந்த மகளை வாஞ்சையாக தலையை தடவி, தீபாராதனை ஒற்றிக் கொண்டவர், தானும் திருநீறிட்டு மகளுக்கும் இட்டுவிட்டார்.
"மீனு வந்த தீபாராதனை எடுத்துக்கோ" என்று இவர் குரல் கொடுக்க..
ஓடி வந்தவர், தீபாராதனை கண்ணில் ஒற்றிக்கொண்டு, மகளை பார்த்து "வருமா.. சீக்கிரம் ரெடியாகு நாழியாயிடுத்து.. நான் அன்னைக்கு சென்னையில் எடுத்தேனோ இல்லையோ அந்த வாடாமல்லி கலர் பனாரஸ் பட்டு அதை உடுத்திகோ.. இன்னும் கொஞ்ச நேரத்தில அவா எல்லாம் வந்துடுவா" என்று கூற..
அந்த அவா எவா என்று புரியாமல் இவள் விழிக்க..
மகளை புன்னகையுடன் பார்த்தவர் "உன்னை பெண் பார்த்து பூ வைக்க வரா.. அதுவும் லண்டனிலிருந்து" என்று அவர் சந்தோஷமாக கூறினார்..
"என்னது லண்டனில் இருந்தா?" என்று அதிர்ந்தவள்.. ஒருவேளை தன்னவன் வந்து பேசி விட்டானா? பெற்றவர்களை அழைத்து வருகிறானா? என்று மனதில் ஒருவித சந்தோஷம் துளிர் விட்டாலும்.. நமக்கு தெரியாம நடக்க வாய்ப்பே இல்லையே என்று மறுமனம் அடித்துக் கூற..
மகள் புரியாமல் நிற்பதை பார்
த்து "அதுதான் அந்த பத்மா மாமி இருக்காளான்னோ.. அவா தான் வரா.. அவர் பிள்ளாண்டானுக்கு உன்னை கேட்டு.. இன்னைக்கு பூ வைக்க வரா" என்றார் மகளின் மனதில் பூகம்பத்தை ஏற்படுத்தியதை அறியாமல்..