19
மறுநாள் காலை அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு அதிகாலையிலேயே கிளம்பி விட்டனர் வினய்யும் வர்த்தினியும் லண்டனை நோக்கி..
விடிந்தும் விடியாத அதிகாலை பொழுது வினய் கார் ஓட்டிக் கொண்டிருக்க, அவன் தோள்களில் சாய்ந்து இருந்த வர்த்தினியை மெல்ல மெல்ல தூக்கம் ஆட்கொள்ள.. உறங்கியவளை தன் கை வளைவிலேயே வைத்துக் கொண்டு காரை மெதுவாக ஓடிக்கொண்டிருந்தான். இதுவரை அவன் விரும்பாத வேகம் இது.. தன்னவளுக்காக என்கிறபோது விரும்பியே காரை செலுத்திக் கொண்டிருந்தான்.
காதலன் கை சேர்ந்துவிட்ட நிம்மதியில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள் வர்த்தினி, எதிர்காலத்தைப் பற்றி எவ்வித பயமுமின்றி, யாவையும் அவன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில்...
கார் விஷ்வா'ஸ் நிவாஸ் முன் வந்து நிற்க.. தன் கைவளைவில் தூங்கியவளின் முகத்தை நிமிர்த்தி மென்மையாக நெற்றியில் முத்தமிட்டவன், அவள் காதில் "மாமி வீடு வந்துருச்சுடி முழிச்சுக்கோ" என்று மெதுவாக கன்னம் தட்ட..
மெல்ல முழித்தவள் தன் முகத்தருகே தெரிந்த வினய்யின் முகத்தைப் பார்த்து "லவ் யூ வினு" என்று புன்னகை புரிந்தவள் மீண்டும் தூக்கத்திற்கு செல்ல..
தூக்க கலக்கத்தில் கூட தன் மீது காதலை பொழியும் தேவதை பெண்ணை மெல்ல அணைத்து கொள்ள.. அவளும் காலைப் பொழுதின் மென் சாரலுக்கு அவனின் கதகதப்பு இதமாக இருக்க இன்னும் அவனுள் புதைந்து கொண்டாள்.
வந்து ரொம்ப நேரம் ஆகிவிட்டதை உணர்ந்தவன் அவளை பிடித்து மீண்டும் "மாமி வீடு வந்துருச்சுடி எழுந்துக்கோ" என்று உலுக்க.. பத்மா மாமி வீடு என்று நினைத்தவள் "அச்சச்சோ.. மாமி வேற மேலிருந்து கண்ணை ஜூம் பண்ணி உத்து உத்து பாப்பாளே" என்றவாறு அவசரமாக தனது சிலுப்பிய தலை நலுங்கிய உடைய எல்லாம் சீர்செய்தவள் "என் லக்கேஜை எடுத்து கொடுங்கோ" என்று கேட்க "பின் சீட்டில் இருக்கு" என்றான் சிரித்தபடியே...
"சரி நானே எடுத்துக்கிறேன்" என்றவள் அவசரமாக கதவை திறந்து முன்னே இருந்த வீட்டை எல்லாம் பார்க்காமல், பின் சீட்டில் இருந்து லக்கேஜை எடுத்து திரும்பியவள் திகைத்துதான் போனாள்.
விழி விரித்து அந்த வீட்டின் பிரம்மாண்டத்தை பார்த்தவாறு அசையாமல் அவள் நின்றிருக்க.. அவளருகே வந்தவன் அவளை தோளோடு அணைத்து "என்ன மாமி புக்ககம் பிடித்து இருக்கா?" என்றான்.
அதிர்ச்சி விலகாமல் மெல்ல அவனை திரும்பிப் பார்த்தவள் வார்த்தை வெளிவராமல் சைகை செய்து உங்கள் வீடா என்று கேட்க..
இல்லை என்று தலையாட்டினான். அவள் புரியாமல் விழிக்க நம்ம வீடு என்றான் இருவரையும் விரல்களால் காட்டி அவளைப் போல சைகையிலேயே..
வினய்யின் இந்த உரிமையான பேச்சில் மனதில் அவளுக்கு சாரல் அடித்தாலும் மற்றொருபுறம் திக் திக்கென்று அடித்துக்கொண்டது. அது வினய்யின் பெற்றோர் தம்மை எவ்வாறு ஏற்றுக் கொள்வார்கள்? எவ்வாறு தன்னிடம் நடந்து கொள்வார்கள்? என்ற பயம்.
தன்னவன் அருகில் இருக்க பயம் இல்லை என்று வெளியே அவள் காட்டிக் கொண்டாலும் உள்ளத்தின் ஓரத்தில் இருக்கத்தான் செய்தது.
மெல்ல அவள் கைகளைப் பிடித்து அழுத்தம் கொடுத்தவன் 'நான் இருக்கிறேன்' என்று கண்களை இதமாக மூடி திறக்க.. வலிய வரவழைத்துக் கொண்ட சிரிப்புடன் அவனுடன் நடந்து வந்தாள் வர்த்தினி.
காலை வேளையில் தன்னுடைய உடற்பயிற்சியை மனைவியின் கண்டிப்புடன் செய்து முடித்துவிட்டு வேர்வை வழிய அப்பொழுதுதான் வந்து அமர்ந்திருந்தார் தரணீஸ்வரன்.
அவருக்கு சத்துமாவு கஞ்சி எடுத்துக் கொண்டு சமையல் அறையில் வந்து மஞ்சுளா வினய்யை பார்த்ததும், முகம் மலர சிரித்து அவனை வரவேற்றவர், பின்னால் வந்த வர்த்தினியை பார்த்ததும் மகனை முறைக்கத் தொடங்கினார்.
அதுவும் முகத்தில் பயத்தை தேக்கி மருண்ட விழிகளுடன் சிங்கத்தின் குகைக்கு உள்ளே செல்லும் சிறு மானை போல சுற்றி முற்றி கண்கள் அலைபாய வந்தவளை பார்த்ததும் அவருக்கு உருகிவிட்டது.
தன் பிள்ளை தான் அவளை கட்டாயப்படுத்தி அழைத்து வந்திருக்கிறான் என்று தவறாக யூகித்தவர் கஞ்சியை டங்கென்று டீபாயில் வைத்துவிட்டு வினய்யை நோக்கி சென்றார்.
அவர் வைத்த வேகத்தில் கஞ்சி எல்லாம் டீப்பாய் மீது சிதறி தெறிக்க அதில் சில பல துளிகள் தரணீஸ்வரன் மேல் பட சூடாக பட்டதில் சட்டென்று மனைவியை பார்த்து "என்னடி ஆச்சு உனக்கு.. கோபம்னா எதமா பதமா சொல்லு.. இப்படி அம்மா இல்லாத பிள்ளையை கொடுமைப்படுத்தாத" என்றவாறு தன் மீது உள்ள கஞ்சியை துடைத்தவர் மனைவியை தேட.. அங்கே அவர் இருந்தால் அல்லவா? மறுமொழி கூற..
நிமிர்ந்து பார்த்தவர், மனைவி அவர் எதிரிலில்லை.. கண்களை சுழல விட்டு தேட, பார்வையில் மகனும் அவரை நோக்கி வேகமாக செல்லும் மஞ்சளாவும் பட "எதுக்கு இவ்ளோ வேகமா அவ அவன் கிட்ட போறா?" என்றவாறு அவரும் அவர்களை நோக்கி சென்றார்.
தன் முன்னே கோபமாக வந்த அன்னையை பார்த்தவனுக்கு தங்களின் காதல் தெரியாததால் இவ்வாறு வருகிறார் என்று புரிந்ததும், வழக்கம் போல உதட்டை மடித்து மீசைகள் சிரிப்பை அடக்கியவாறு அமைதியாக நின்றான் வினய்.
அவன் பின்னே கைகளில் பேக்கை வைத்துக்கொண்டு பயந்த முகத்துடன் நின்று கொண்டிருந்த வர்த்தினியைப் பார்த்ததும் அவருக்கு கோபம் வர மகனை பார்த்து "உன்கிட்ட நான் படிச்சு படிச்சு சொன்னேனா இல்லையா.. அப்போல்லாம் சரிமா சரின்னு தலையாட்டிட்டு என்னடா பண்ணி வச்சிருக்க?" என்று அவர் கோபமாக கத்த..
தரணீஸ்வரனுக்கு ஒன்றுமே புரியவில்லை. வழக்கமான தந்தை போல, மகனின் தகடுதித்தம் எல்லாம் அன்னைக்கு மட்டுமே அத்துப்படி!! எதற்கு மகனை பார்த்து மஞ்சுளா கத்துகிறார் என்று புரியாமல் தன் தலையை சொறிந்தபடி மகனையும் மனைவியையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தார். மகன் பின்னே நின்றிருந்த வர்த்தினியை அவர் கவனிக்கவில்லை.
சிறுது நேரம் அன்னையிடம் விளையாடிப் பார்க்க துணிந்தான் வினய் குறும்பு கண்ணனாக..
முகத்தை சற்று சீரியஸாக வைத்துக்கொண்டு "எனக்கு புடிச்சி இருந்துச்சு அழைச்சிட்டு வந்திட்டேன்" என்றான் அலட்சியமாக..
"என்னது??? அழைச்சிட்டு வந்திட்டியா? உனக்கு எவ்வளவோ திமிர் இருக்கும். அதுவும் அவ்வளோ பயந்த பொண்ண, பிடிக்காத பொண்ண" என்று அவர் கேட்க.. வினய்யோ தன்னிடம் காதல் சொன்ன அந்த ரவுடி மாமி கண்ணில் வந்து போக.. எழுந்த சிரிப்பை அடக்கி கொண்டான்.
"வினய்.. ஒழுங்கா அந்த பொண்ண அவ தங்கியிருந்த இடத்திலேயே விட்டுடு வா.. இனிமேல் அந்த பொண்ணுக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாதுனு என்கிட்ட சத்தியம் பண்ணு" என்று அவர் சீரியல் அம்மாவாக சிலிர்த்துக்கொண்டு கேட்க..
அம்மாவின் இந்த கோபம் வர்த்தினியின் மீது அவர் கொண்ட அன்பினால் என்று அவனுக்கு புரிந்தது தான் இருந்தது. தன் அம்மாவை இறுக அணைத்து 'இல்லமா நாங்கள் இருவரும் காதலிக்கிறோம்' என்று சொல்லத்தான் அவனுக்கு ஆசை. ஆனால் சற்றுநேரம் விளையாடுவதற்கு எண்ணியே மௌனம் காத்து உள்ளிருந்த மகிழ்ச்சியை முகத்தில் காட்டாமல் விரைப்பாகவே அன்னையை முறைத்துக் கொண்டு நின்றிருந்தான் வினய்.
இவர்கள் 2 பேரும் இங்கே வழக்கடித்துக் கொண்டிருக்க.. தரணியோ ஒன்றும் புரியாமல் முழிக்க, எதை விட்டு விட்டு.. யாரை விட்டுவிட்டு வரச் சொல்கிறாள் தன் மனைவி என்று அவரும் இருவருக்குமிடையில் வராமல் குழம்பியவாறு நின்றிருந்தார்.
ஆனா வர்த்தனிக்கோ தன்னால் தான் தன்னவன் அன்னையிடம் திட்டு வாங்குகிறான் என்று புரிய அவளுக்கு வருத்தம் மேவியது. கூடவே அவரை சமாதானப்படுத்தவும்.. வினய் தன்னை கட்டாயப்படுத்தி கூட்டி வரவில்லை என்று சொல்லவும் அவளுக்கு உள்ளம் பரபரத்தது. ஆனால் அன்னைக்கும் மகனுக்கும் இடையே எவ்வாறு செல்ல என்று மௌனம் காத்து கையை பிசைந்து கொண்டு அவர்களுடைய சம்பாஷணையை பார்த்துக்
கொண்டிருந்தாள்.
"இங்க பாரு வினய் கடைசியா சொல்றேன் அந்த பொண்ண விட்டுடு.. இனிமே அவ வாழ்க்கைல உன்னோட தலையீடல் எதுவும் இருக்கக்கூடாது.. எனக்கு சத்தியம் பண்ணு" என்று கையை நீட்டி அவர் கேட்க..
அன்னையின் செயலால், அவனின் கடந்த காலத்தை எண்ணி ஆதங்கம் கொண்டவன், விளையாட்டு விபரீதமாக செல்வதை கண்டு முதலில் பயந்தவன், தன் அம்மாவை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்து "மாம்.. நான் சொல்றத கேளுங்க" என்று அவன் ஆரம்பிக்க.. "அதெல்லாம் முடியவே முடியாது எனக்கு சத்தியம் பண்ண முடியுமா? முடியாதா?" என்று அவர் நின்ற நிலையிலேயே கைநீட்டி கேட்க..
அவனோ என்னவளை விட்டு என்னால் எவ்வாறு இருக்க முடியும்? என்று அந்த நினைக்கவே கசக்க.. "முடியாது" என்று இரு கைகளையும் பாக்கெட்டுகள் விட்டு விறைப்பாகவே அவன் கூற..
அதுவரை தன் மகனாக வினய்யை பார்த்தவர், அவனின் இந்த உடல் மொழியில் தொழிலதிபர் வினய் விஸ்வேஸ்வரனாகத்தான் அவர் கண்களுக்கு தெரிந்தான்.
அடுத்த நொடி அவனை நோக்கி அவர் கை அடிக்க உயர்த்த.. பார்த்துக் கொண்டிருந்த வர்த்தினி பாய்ந்து அவ்விருவருக்கும் இடையில் நின்றவள், இருக்கையும் கூப்பி "வேணாம் மாமி.. அவரை அடிக்காதீங்கோ" என்று அழுதவள், அடுத்த கணம் தன்னவனை இறுக்க கட்டிக்கொண்டாள்.
தூக்கி கையை இறக்காத மஞ்சுளாவோ வியப்பின் உச்சிக்கு சென்றார் என்றால்.. அதுவரை வர்த்தினியை பார்க்காமல் இருந்த தரணி இந்த செயலால் தன்முன் நடப்பது கனவா? நனவா? என்று தெரியாமல் தன் கண்களை நன்றாக தேய்த்து விட்டு திரும்ப பார்த்தார்.
அதுவரை அன்னையிடம் இறுக்கமான முகத்துடன் பேசிக் கொண்டிருந்தவன் கலகலத்து சிரித்தவன், குறும்புடன் கண்ணடித்தான் அன்னையை பார்த்து..
"என்னடா நடக்குது இங்க" என்று வடிவேல் பாணியில் என்டர் ஆகிய தரணி மனைவியின் அருகே வந்து மூவரையும் மாற்றி மாற்றி பார்த்தார்.
அதற்குள் வர்த்தினியை தன்னிடமிருந்து பிரித்தவன் அன்னையின் அருகில் தந்தை நிற்க தன்னவளோடு சேர்ந்து அவர்கள் கால் பணிந்தவன், "எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க" என்றான்.
"கல்யாணமே முடிச்சுட்டியா டா?" என்று எழும்பாத குரலில் தன் பையனை பார்த்து மஞ்சுளா கேட்க..
அதுவரை தன்னுடன் ஒட்டிக் கொண்டு நின்ற வர்த்தினியை விலக்கி, கண்களாலேயே அவளுக்கு சமாதானம் செய்து, அன்னையிடம் சென்றவன் அவரை அணைத்துக்கொண்டான்.
பின் "எல்லாத்தையும் உங்களுக்கு விவரமா சொல்றேன் மாம்.. வந்து உட்காருங்க" என்று சோபாவில் ஒரு பக்கம் அன்னையையும் மறுபக்கம் வர்த்தினியையும் அமர்த்திக் கொண்டு.. தன்னில் ஏற்பட்ட மாற்றங்கள் முதல்.. அன்னை பேசியது அதனால் அவன் இரண்டு நாட்கள் தனித்தீவில் சுற்றி அலைந்தது.. பின் தன்னவளை கடைசியாக பார்க்க செல்லும்போது அவளின் அதிரடியில் மயங்கியது என்று விவரிக்க.. மஞ்சுளாவோ அவன் சொன்னது எதையும் நம்ப முடியாமல் அவனை மேலும் கீழும் பார்த்தவர், வர்த்தினியை பார்த்து, "இவன் சொல்வதெல்லாம் உண்மையா மா?" என்று ஆச்சர்யம் விலகாமல் கேட்டார்.
அவளுக்கு வெட்கமாகி போனது, தன் அதிரடியை அவர்களிடம் வினய் கூறியதை கேட்டு.. மஞ்சுளாவிடம் மெல்ல தலையை மட்டும் அசைத்து "ஆமாம்" என்றவள் அருகிலிருந்த வினய்யின் கைச்சந்தில் தனது முகத்தைப் புதைத்துக் கொண்டாள் வெட்கத்துடன்.
அதுவரை மகனிடம் கொண்டிருந்த கோபம் மறைய.. டக்கென்று எழுந்தவர், வினய்க்கும் வர்த்தினிகும் இடையில் அமர்ந்து கொண்டார்.
"எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு வர்த்தினி.. உன்னை பார்க்கும்போது எனக்கு ரொம்ப பிடிக்கும்.. உன் குரல் அதைவிட ரொம்ப ரொம்ப பிடிக்கும்.. நீ நம்ம வீட்டுக்கு மருமகள வருவதை நினைக்கும் போது எனக்கு சொல்ல வார்த்தைகளே இல்லை.. அவ்வளவு சந்தோஷமா இருக்கு" என்றார் உணர்ச்சிப்பெருக்கில் கண்கள் கலங்க..
அதுவரை எப்படி தன்னிடம் நடந்து கொள்வார்களோ? தங்களது விஷயத்தை எப்படி எடுத்துக் கொள்வார்களோ? என்ற பயந்து இருந்தவள், மஞ்சுளாவின் பேச்சில் பயம் விலகி அவரது கைகளை ஆதுரமாக பற்றிக்கொண்டாள்.
"அதெல்லாம் சரி.. உங்க வீட்டுல இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்குவாங்களா மா?" என்று அதுவரை அமைதியாக இங்கே நடந்தவற்றை பார்த்துக்கொண்டிருந்த தரணி கேட்க..
பயத்தில் எழுந்தே விட்டாள் வர்த்தினி. இதுவரை தன்னவன் மீதான ஊடல்.. காதல்.. சிணுங்கல்.. கொஞ்சல் என்று இரண்டு நாட்களாக சுற்றிக் கொண்டிருந்த காலத்தில் வீட்டின் ஞாபகமும், தாய் தந்தையர் ஞாபகம் வரவில்லை..
காணும் யாவிலும் வினய்யே வியாபித்திருக்க!! எங்கே அன்னை தந்தை குடும்பம் பற்றியெல்லாம் நினைக்க!!
ஆனால் தற்போது தலையில் யாரோ ஓங்கி அடித்தது போல நிதர்சனம் புரிய கண்கள் கலங்க வினய்யை பார்த்தாள் வர்த்தினி.
வர்த்தினி கண்கள் கலங்கியது பொறுக்கமாட்டாமல் அருகில் சென்றவன், அவளை தோளோடு சேர்த்து "வனி டோண்ட் க்ரை.. கண்டிப்பா ஒத்துக்குவாங்க இல்லன்னா நான் ஒத்துக்க வைப்பேன்" என்று அவளை ஆறுதல் படுத்த..
காதல் என்றாலே கட்டப்பஞ்சாயத்து.. கௌரவ கொலை.. என்று இருக்கும் நம்மூரின் பழக்கவழக்கங்கள் அறியாத தன் மகனைப் பார்த்த மஞ்சுளாவுக்கு வருத்தமாக இருந்தது. அதுவும் ஆச்சாரமான ஐயர் குடும்பத்தில் இருந்து வந்திருக்கும் வர்த்தினியின் குடும்பம் எவ்வாறு இதற்கு சம்மதிப்பார்கள் என்று அவருக்கு கலக்கமாக இருந்தது.
இதுவரை தன் மகனை எவ்வாறெல்லாம் பார்க்க வேண்டும் என்று நினைத்தாரோ இன்று அப்படியே அவன் மாறி வந்திருக்க அதற்கெல்லாம் காரணம் வர்த்தினி என்ற பெண்!! அவளின் காதல் மட்டுமே!! ஆனால் அது கைகூட வேண்டுமே?
அப்போதே மனதில் அனைத்து தெய்வங்களுக்கும் பிரார்த்தனை செய்தவர்.
"சரி முதல்ல சாப்பிட வாங்க" என்று அனைவரையும் அழைத்துக் கொண்டு உணவு ஹாலுக்கு சென்றவர் அவசரமாக இனிப்பு செய்து மகனுக்கும் மருமகளுக்கும் தன் கரங்களால் பரிமாறினார்.
சாப்பிட்டு முடித்ததும், "வர்த்தினியை கொண்டு போய் அவ தங்கியிருந்த இடத்துல விட்டுட்டு வா வினய்" என்று கூற...
"மாம்..." என்று கண்களால் கெஞ்சினான் வினய், பள்ளிக்குச் செல்லும் பிள்ளையிடமிருந்து பொம்மையை பிடுங்கியது போல அவனை நடவடிக்கைகள் இருக்க.. வர்த்தினியும் மஞ்சளாவும் வாய் விட்டு சிரித்தனர்.
"அவ ஊருக்கு போற வரைக்கும் நம்ம வீட்டுல இருக்கட்டும் மாம்" என்றான் கண்களில் கெஞ்சுதலோடு..
"இட்ஸ் நாட் ஃபேர் வினய்" என்று மஞ்சுளா ஒற்றை விரல் காட்டி பத்திரம் காண்பிக்க..
"ஆல் ஈஸ் ஃபேர் இன் லவ் அண்ட் வார்.. மாம்" என்றான் மகன்.
இவனிடம் பேசி சரிவராது என்று உணர்ந்த மஞ்சுளா, வர்த்தினியை நோக்கி "வரு மா.. நான் முறைப்படி உன்னை நம்ம வீட்டுக்கு கொண்டு வந்தால் தான் நல்லா இருக்கும். இப்போதே நான் தங்க வச்சா அது ஊருக்கு சொல்லுக்கு இடமாகும். அதுவும் அந்த பத்மா ஈர பேனாக்கி பேனைப் பெருமாள் ஆக்குறவ.. அதுவும் உன் விசயத்தில் கேட்கவே வேண்டாம். அதனால் இன்னும் ரெண்டு நாளைக்கு அவங்க வீட்ல இரு. நீ ஊருக்கு போனதும் நாங்களும் பின்னாடியே வந்து உங்க அப்பா அம்மா கிட்ட முறைப்படி வந்து பேசுறோம்" என்று அவளுக்கு உறுதி அளிக்க..
கலங்கும் மனதையும் விழிகளையும் கட்டுப்படுத்திக்கொண்டு சிரித்த முகத்துடன் இருவரிடமும் விடை பெற்று கொண்டு, பத்மா வீட்டை நோக்கி சென்றாள் வர்த்தினி வினய்யுடன்..
பத்மா வீட்டுக்கு சற்று முன்னர் பார்க்கிங் ஏரியாவில் காரை நிறுத்தியவன்..
வர்த்தினியை இழுத்து மடி மீது அமர்த்திக் கொண்டான்.
"உன்னை விட்டு இந்த ரெண்டு நாள் எப்படி இருக்க போறேன் தெரியலடி மாமி" என்றவன் கழுத்து வளைவில் முகம் புதைத்துக் கொள்ள..
"ரெண்டு நாளைக்கு இப்படியா? அடுத்த நாள் நான் ஊருக்கு போயிட்டா?" என்று அவன் முகத்தை கழுத்திலிருந்து முதுகால் தள்ளியவள் அவன் கண்களை பார்த்து கேட்டாள்..
"போகப் போற இல்ல மாமி.. போக போறோம்" என்று மீண்டும் முதுகில் தன் இதழ்களால் கோலம் போட்டுக்கொண்டே அவன் கூற..
"என்ன நீங்களும் வரேளா?" விழி விரித்து அவள் அதிர்ச்சியோடு கேட்க..
"பின்ன பொண்டாட்டிய விட்டுட்டு நான் மட்டும் இங்கே எப்படி இருக்கிறது" என்றவனின் பேச்சில் அவள், அவனை கட்டிக் கொள்ள..
"மாமி.. இரண்டு நாளு ஆத்துக்காரன் தாங்குற மாதிரி கொஞ்சம் ஸ்ட்ராங்கா கொடுக்கிறது" என்று அவன் கண்கள் சிமிட்டி கேட்க..
அவள் சுற்றும் முற்றும் பார்த்தாள். "என்னடி தேடுற மாமி" என்று அவன் கேட்க..
"அதான் உங்களுக்கு டபுள் ஸ்ட்ராங்கா கொடுக்க பக்கத்துல ஏதாவது உருட்டுக்கட்டை இருக்கான்னு பாக்குறேன்" என்றாள் கேலியாக..
"அடிங்க உன்னை எல்லாம் கேட்க கூடாது டி மாமீமீ" என்றவன் அடுத்து அவளைத் தன்னை நோக்கி இழுத்து அவள் அதரங்களை சுவைக்க ஆரம்பித்திருந்தான்.
அவளது கரங்கள் கொண்டு தன்னை அணைத்தவன்.. இரு இதழ்களும் ஒன்றுடன் ஒன்று லயிக்க.. வன் இதழ்களுக்குள் மென் இதழ்கள் உருகிக் கொண்டிருந்தது. தன் இதழ்களால் அவளின் இதழ் ரசத்தை ஆழ்ந்து பருகிக்கொண்டே.. அவளை கொள்ளையிட்டு கொண்டிருந்தான் இந்த காதல் கள்வன்.
வீட்டுக்கு சென்ற வர்த்தினி அடுத்த இரண்டு நாட்களும் தன்னிலை மறந்த ஒரு மோன நிலையிலேயே பத்மா மாமி வீட்டில் சுற்றிக் கொண்டிருந்தாள்.
முதலில் எல்லாம் சமையலறையில் தனக்கு உதவி செய்பவள் இன்று ஒரு மார்க்கமாக சுற்றிக் கொண்டு இருந்தது பத்மாவின் கூரிய கண்களுக்கு தப்பவில்லை. எதுவோ சரியில்லை என்று மட்டும் அவர் கணித்திருந்தார்.
அதுபோல பிரதீபன் முன்னே எல்லாம் பேசாத வர்த்தினி, பெரும்பாலும் அவனை தவிர்த்து விட்டு செல்வாள். இன்று தன்னவன் நினைவிலேயே அவள் புன்னகையோடு செல்ல அவனோ அது தன்னை நோக்கி என்று தவறாக நினைத்துக் கொண்டான்.
இப்படியாக பிரதீபன் ஒருவித கனவிலும்.. மற்றும் பத்மா வேறு ஒரு திட்டத்திலும்.. வர்த்தனியோ மன்னவன் நினைவிலும்.. என்று இரண்டு நாட்கள் ஓடிப்போக அவள் இந்தியா செல்லும் நாளும் வந்தது.
அவள் செல்லும் நாள் என்று மஞ்சுளா காலையிலேயே போன் செய்து அவளுக்கு நம்பிக்கை கொடுத்து விரைவில் தாங்கள் வருவதாக கூறி வைத்துவிட.. சற்று மன சேர்ந்தவளுக்கு மஞ்சுளாவின் பேச்சு ஆறுதல் அளிக்க மெலிதாக தெளிவடைந்தாள். ஆனால் அவள் நம்பிக்கை வைத்தவனோ இரண்டு நாட்களாக போனில் கூட அவளிடம் பேசுவதில்லை. இன்று இந்தியா செல்கிறாள் என்று தெரிந்தும் காலையிலிருந்து அவன் அழைக்கவில்லை..
பத்மா வெங்கடேசன் பிரதீபன் புடைசூழ விமான நிலையத்திற்கு வந்தவள், அங்கேயும் தன் கண்களால் துலாவ அவனோ வரவே இல்லை.
பின் பத்மாவின் கண்களுக்கு தப்புவதற்காக சிரித்த முகத்துடன் அவர்களிடம் ஆசி வாங்கிக்கொண்டு பயணிகள் காத்திருப்பு அறைக்கு சென்றாள் வர்த்தினி சோகமாக.. அங்கேயாவது அவன் வந்திருப்பான் என்று நினைத்து பார்க்க அங்கும் அவனை காணவில்லை.
ஒருவேளை எல்லாம் கானல் நீரோ? என்று நினைக்க நினைக்க.. அப்படியெல்லாம் இருக்காது அவனின் காதல் உண்மையானது என்று ஒரு மனது கூற.. அப்போது எங்கே அவன்? என்று மற்றொரு மனம் கேள்வி கேட்க கண்கள் கரித்துக் கொண்டு வந்தது அவளுக்கு..
ஒருவாறு தன்னை சமாளித்துக் கொள்ள அதே நேரம் விமானத்திற்கு அழைப்பு வர.. அவளையும் மீறி விழுந்த இரு துளி கண்ணீரை புறங்கையால் துடைத்தவாறு தன் இருக்கைக்கு சென்று அமர்ந்தாள் வர்த்தினி.
கண்ணீர் தன் போல விழுந்து கொண்டிருக்க.. தலையை குனிந்தவாறு அவள் அமர்ந்திருக்க.. அப்போது தோளை சுற்றி முரட்டு கரங்கள் அணைக்க.. கைகளின் ஸ்பரிசத்தை உணர்ந்து நிமிர்ந்து பார்க்க அங்கே வசீகர சிரிப்புடன் அவள் அருகில் அமர்ந்து இருந்தான் வினய்..
"வினு" என்று கதறலாக அவனை அணைத்துக்கொண்டு அவள் அழ..
"ஓய் மாமி.. என்னது இது சின்னப் புள்ளத்தனமா" அதுவரை இருந்த கோபம் மேலெழ அவன் மார்பில் தன் தளிர் விரல்களால் குத்தினாள்.
"ரெண்டு நாளா என்னாண்ட பேசவே இல்லை.. இப்போ காலையிலிருந்து உங்களை எவ்வளோ எதிர்பார்த்தேன் தெரியுமா? ஏர்போர்ட் வந்தும் உங்களை பார்க்க முடியல.. காலையில் இருந்து நேக்கு எப்படி இருந்தது தெரியுமா? நான் தவித்த தவிப்பு உங்களுக்கு என்ன தெரியும்?" என்று அவள் தன்னிலையை எடுத்துக்கூறி அவனிடமிருந்து விலகி அமர..
அவளை நெருங்கியவன், காதுக்குள் மீசை உரச "நான் வரலனு உனக்கு யார் சொன்னா? உனக்கு முன்னாடியே வந்து உன்னையே தான் பாத்துட்டு இருந்தேன். பக்கத்துல இருந்து உன்னை தான் என் கண்களில் நிரப்பிக் கொண்டிருந்தேன். இரண்டு நாளா ஏன் உன் கிட்ட பேசலைன்னா.. உன் குரலை கேட்டு இருந்தா அதுக்கு மேல என்னால என்னை கட்டுப்படுத்திருக்க முடியாது. அதனால தான்" என்றவன் இரு கைகளையும் விரிக்க.. அதில் தஞ்சம் கொண்டாள் மாது..
அதன்பின் இருவரும் தங்கள் மனக்கிலேசங்களை மறந்து சிரித்து பேசிக்கொண்டிருந்தனர், இந்தியாவில் தங்களுக்கு காத்திருக்கும் அணுகுண்டை பற்றி அறியாமல்...