தளிர் : 15
அருணனின் அழுத்தமான விழிகளை பார்த்து எச்சில் விழுங்கியபடி கதிகலங்கி தான் நின்றிருந்தாள் ராதிகா. எல்லை மீறி உரிமை எடுத்துக் கொண்டதாக எண்ணி திட்டுவானோ? என்ற பயம்.
அவனிடம் திட்டு வாங்குவதெல்லாம் புதிது இல்லை தான். அதற்காக அவள் அரற்றி கொள்ளவில்லை. எந்த விஷயத்திற்காக திட்டு வாங்குகிறோம் என்று இருக்கிறதே!
கோபத்தில் சட்டென்று வார்த்தைகளை விடும் போது தெரியவில்லை. இப்போது ரீவைண்ட் செய்து பார்க்கும் போது தான் தெரிகிறது, எவ்வளவு கேவலமாக நின்று சண்டையிட்டு இருக்கிறாள்.
அவனை கண்ட நொடி பார்வதி, கோசலை ஓடி ஒளிந்தது போல் அவளால் ஓட முடியவில்லையே. விக்கித்து நின்றிருந்தவளை நெருங்கியவன், அவள் விழிகளை அழுத்தமாக பார்த்துக் கொண்டே "வெரி குட்" என்று சொல்ல,
“ஹாங்…..” என்று புரியாமல் விழி விரித்தவளை பார்த்து சிரிப்பு தான் வந்தது அவனுக்கு.
அடங்கி போகாமல் எதிர்த்து நின்றது அவனுக்கும் மகிழ்ச்சி தான்.
ஆனாலும் “இந்த மாதிரி கீழ்தரமா என்னை வச்சி சண்டை போடாத” என்று அடிகுரலில் மிரட்டியும் சென்றான்.
அவன் சென்றதும், “ஸப்பா… பரவாயில்ல, நினைச்ச அளவுக்கு திட்டல” என்று நெஞ்சில் கைவைத்து ஆசுவாசமான நொடி, “ராதிகாஆ ஆ ஆ” என்ற அழைப்பு தூக்கி வாரி போட, திரும்பி பார்த்தாள்.
“வீட்ட விட்டு வெளிய போக நினைச்ச? அப்புறம் நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்” என்று மிரட்ட, ‘இப்போ மட்டும் மனுஷனாவா இருக்கீங்க… போங்க போங்க… போய்ட்டு பொறுமையா வாங்க’ என்று கவுண்டர் கொடுத்துக் கொண்டாள், மனதில் மட்டுமே.
குழந்தைகள் எண்ணங்கள் வாட்ட, ‘நான் ஏன் இங்க இருந்து இதுங்ககிட்ட பேச்சும் திட்டும் வாங்கணும்?’ என்று யோசித்தவளால் அவன் பேச்சை மீறி வெளியேறவும் முடியவில்லை.
‘எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை’ என்று துணிந்து எதுவும் செய்து விட முடியாதே. அவளுக்கு ஏதாவது ஆகி விட்டால், அவளை நம்பி இருக்கும் பிள்ளைகள் அல்லவா வீதியில் நிற்கும். இரண்டு நாள் தானே பொறுத்து போவோம். என்று தனக்கு தானே சமாதானம் செய்துக் கொண்டு, மனதை அடைக்கும் பிள்ளைகள் நினைவுகளில் சோர்ந்து நின்றிருந்தவள் காலை வந்து கட்டிக் கொண்டது பிஞ்சு கரங்கள்.
“அம்மா…” என்ற அழைப்பில் தலை தாழ்த்தி அவள் பார்க்க, தன் பிள்ளை முகம் மாறா சிரிப்பை உதிர்க்கும் அந்த பிள்ளையை விலக்க மனம் வருமா?
அத்தனை வலியிலும் அவள் இதழ்கள் புன்னகைத்தது.
“பட்டம்மா சொன்னாங்க. நீங்க தான் என் புது அம்மாவாம்.” என்ற வார்த்தைகள் இதயத்தில் முற்களை குத்தும் உணர்வு.
‘போலியான உறவில் பிள்ளை மனம் கூட ஏங்கி தவித்து போகிறதே. அவளுக்கு எப்படி புரிய வைப்பது? நான் உனக்கு வெறும் இரண்டு நாட்களுக்கு மட்டும் தான் அம்மா என்று.' கனத்த இதயத்துடன் அவளை கைகளில் அள்ளிக் கொண்டவள்,
“உங்க பெயர் என்ன?” என்று புதிய உறவில் அறிமுகமாக, அவளை விட்டு நகர மாட்டேன் என்னும் அளவிற்கு சுதர்சனாவிற்கும் ராதிகாவை பிடித்து போனது.
“என் கூட வாங்க” என்று தன் அறைக்கு அழைத்து வந்த சுதர்சனா, தன்னிடம் இருக்கும் பொம்மைகள் எல்லாம் காட்டி, அவளிடம் கதை கதையாக சொல்ல, ராதிகாவும் விழி விரித்து நவரசமும் முகத்தில் போட்டிப் போட்டு கதையளக்கும் சுதர்சனாவை தான் மெல்லிய புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
இப்படி தானே தன் மகவுகளும் வாய் மூடாமல் பேசிக் கொண்டே இருக்கும். தானின்றி என்ன செய்வார்கள்? சாப்பிட்டார்களா? இல்லையா? அவர்கள் எண்ணம் மட்டுமே ஓடிக் கொண்டிருந்தது. எவ்வளவு முயன்றும் விழியோரம் நீர் துளிர்க்க, தன் பிஞ்சு கரம் கொண்டு அதை துடைத்தாள் சுதர்சனா.
"உங்களை அப்பா திட்டுனத நினைச்சு அழுவுறீங்களா? என்னையும் அப்பா இப்படி தான் திட்டுவார். அப்போல்லாம் எனக்கு திட்டாத அப்பா வேணும்னு நான் அம்மா கிட்ட வேண்டிப்பேன். சீக்கிரமே திட்டாத அப்பாவ நமக்கு அனுப்பி வைப்பாங்க… அழதீங்க" என்று தன்னை சமாதானம் செய்யும் புது மகளை குழப்பமாக பார்த்தவள் பார்வை அவள் காட்டிய ருக்ஷா படத்தில் நிலைத்து இருந்தது.
போட்டோவுக்கு கூட சிரிப்பானா? என்று அவள் எண்ணியவன் முகத்தில் அத்தனை நிறைவான புன்னகை மனைவியுடன் இருக்கையில். அதிலிருந்து பார்வையை திருப்பாது "இது தான் உன் அம்மாவா? ரொம்ப அழகா இருக்காங்க" என்று சொல்ல,
சனாவும் "ஆமா… நானும் அவங்க போல அழகா இருக்கேனா?" என்று நெற்றி முடியை ஒதுக்கி இடுப்பில் கை வைத்து நின்று கேட்ட மகளை வாஞ்சையுடன் அள்ளி அணைத்தவள், "நீங்களும் ரொம்ப ரொம்ப அழகா இருக்கீங்க" என்று முத்தம் கொடுக்க, பதில் முத்தம் உடனே வந்தது சனாவிடம் இருந்து.
அப்போது அங்கே தன் நகரும் நாற்காலியில் உள்ளே நுழைந்த பத்மாவதி, "என்ன சொல்றா எங்க வீட்டு இளவரசி" என்று கேட்க,
மெல்லிய புன்னகையுடன் எழுந்து நின்றாள் ராதிகா. காலையில் பார்வதியுடன் சண்டை போட்ட பிறகு அந்த வீட்டில் யாரையும் எதிர் கொள்ளும் தைரியம் இல்லை அவளுக்கு. வந்த முதல் நாளே சரியான பஜாரி என்று எல்லோரும் எண்ணும் அளவிற்கு சம்பவம் நடந்து விட்டதே! என்று அவளுக்கும் வருத்தம் தான்.
'ஆனா என் மேல எந்த தப்பும் இல்லையே! அந்த அம்மா தானே ஆரம்பிச்சது…' என்று சமாதானமும் செய்து கொண்டிருந்தவளுக்கு சிறிது நேரம் தேவைப்பட்டது, அவருடன் இயல்பாக பேசி பழக.
இங்கே ராதிகா வீட்டில், பெண்கள் எல்லாம் சமையல் அறையில் நின்று வியர்க்க விறு விறுக்க சமைத்துக் கொண்டிருக்க, வெளியே ஆண்களை வைத்து குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தான் ஜார்ஜ்.
மூவர் காலிலும் ரப்பர் பேண்ட்டை மாட்டி விட்டு, ஒருவர் பின் ஒருவரை நிக்க வைத்து, பின்னால் இருப்பவர் முன்னால் நிற்பவரின் காலில் கிடக்கும் ரப்பரை பிடித்து இழுத்து, வலிக்க அடிக்க வேண்டும்.
தொடர்ந்து பத்து அடிகள் வாங்கினால் வின்னர். இல்லையேல் சுழற்சி முறையில் பின்னால் சென்று, மீண்டும் ஆரம்பிக்க வேண்டும்.
அப்படி பத்து அடிகள் வாங்கி வெற்றி பெறுபவர், மற்றவர்களுக்கு 25 அடிகள் கொடுக்க வேண்டும் அதே ரப்பரை இழுத்து அடித்து.
சொன்னதை செய்யவில்லை என்றால், 'எடு டா அந்த பிஸ்டலை, சொருகு டா அவன் வாய்க்குள்ள' என்று ஜார்ஜ் மிரட்டி வைத்திருக்க,
அதன் பிறகு எங்கே அவர்கள் வாய் திறக்க.
சப்ப்பா…. மூவருக்கும் உயிர் போய் வந்த உணர்வில் அரை மணி நேரம் கடந்தும் விளையாட்டு வினையாக தொடர, ஜார்ஜ் மடியில் இருந்த தர்ஷனோ "பெரியப்பா இன்னும் வேகமா இழுங்க, மாமா ஃபோர்ஸ் பத்தலையே!" என்று குதுகலமாக கைத்தட்டி ரசிக்க,
'குட்டி சாத்தான்… இவனுங்க போகட்டும் அப்புறம் இருக்கு உனக்கு' என்று குட்டியான் சேட்டைகளை தான் மனதில் கருவிக் கொண்டிருந்தார்கள்.
எல்லாம் அருணனின் திருவிளையாடலே. பிக்பாஸாக அவன் டாஸ்க் கொடுக்க, அவன் சேவகர்கள் அதை சிறப்பாக நடத்தி கொண்டிருந்தனர்.
ஆண்கள் நிலை இப்படி இருக்க, சமையல் அறையில், தி கிரேட் இந்தியன் செஃப் போட்டியே நடந்துக் கொண்டிருந்தது.
ஆசைப்பட்டு எல்லாம் செய்யவில்லை. அதுவும் அடக்கு முறையில் தான் நடந்துக் கொண்டிருந்தது.
குழந்தைகளிடம் பிடித்த உணவு கேட்டிருக்க, அவர்களோ பர்கர், சவர்மா, கே ஃப் ஜி சிக்கன் என்று லிஸ்ட் போட்டிருந்தார்கள்.
"போங்க எல்லாம் பெர்பெக்ட்டா செஞ்சி கொண்டு வாங்க" என்று விரட்டினான் ஜார்ஜ்.
'எதேய்… கிடக்கிற கிடப்பில இதுகளுக்கு இதெல்லாம் வேணுமா?' என்று உள்ளுக்குள் கருவி கொண்டவர்களோ,
"அதெல்லாம் செய்ய தெரியாது" என்று சொல்ல, ஜார்ஜ் அதே மிரட்டல் தான் 'எடு டா பிஸ்டலை' என்று சொன்ன அடுத்த கணம்,
"இந்த போறோம்…" என்றவர்கள் அங்கிருந்து குடுகுடுவென கிச்சனுக்குள் ஓடி வந்திருந்தார்கள்.
'சமைக்க தெரியாது சொல்றோம். அது தான் வேணும்னு அடம் பிடிச்சா? யார் என்ன செய்ய முடியும்? தின்னுட்டு சாவுங்க…' என்று தான் சமைக்க ஆரம்பித்தார்கள்.
தேவையான பொருட்கள் எல்லாம் அவர்கள் காசில் வீட்டுக்கே டோர் டெலிவரி செய்து கொடுத்திருந்தான் ஜார்ஜ்.
இல்லையேல்…ராதிகா இரண்டு நாளில் திரும்பி வந்து அய்யோ அய்யோ என் காசெல்லம் தின்னே தீத்துட்டாங்களே என்று அழுது கரைந்து விடுவாளே.
குழந்தைகளுக்கு அவர்கள் கேட்ட நொடி நல்ல தரமான உணவகத்தில் இருந்து வாங்கி கொடுத்தாச்சு.
இப்போது நாலாதோ அஞ்சாவதோ ரவுண்ட் தான் கிச்சனில் ஓடி கொண்டிருந்தது.
செஃப் தாமு அளவிற்கு குத்தம் கண்டு பிடித்து, அவர்கள் சமைத்ததை அவர்களையே கூட்டத்தோடு உண்ண வைத்து, வாந்தி, பேதியாகியும் விடாது டாஸ்க் கொடுத்து சாகடித்து கொண்டிருந்தான் ஜார்ஜ்.
ராதிகாவை தூக்கி வர ஆட்களை அனுப்பிய அருணன், அவள் வீட்டு நிலவரம் அறிந்து கொள்ள, ஜார்ஜிடம் வீடியோ கால் மூலம் கண்காணித்த போது தான் அவள் குடும்பதார்களின் வண்டவாளம் தெரிந்தது.
என்ன? ஏது? என்று கூட கேட்காது, ஆளாளுக்கு அவளை பேசியிருக்க, அவனுக்கே கோபத்தில் கழுத்து நரம்புகள் புடைத்தது. அவளை மட்டும் தான் தூக்கி வர நினைத்தவன், அதிரடியாக ஆட்களை அனுப்பி மொத்த குடும்பத்தையும் சிறை செய்திருந்தான்.
சகுந்தலா, பிள்ளைகள் மேல் ஒரு துரும்பு கூட படக் கூடாது என்பது அவன் கட்டளை. மற்றவர்களை உன் இஷ்டத்துக்கு வச்சு விளையாடிக்க, அவள் அனுபவித்த வலியில் பாதியாவது திருப்பி கொடுக்காது அங்கிருந்து நகர போவது இல்லை, என்ற எண்ணத்தில் உத்தரவிட்டு அதையும் ஜார்ஜிடம் வீடியோ காலில் அவ்வபோது கண்காணித்து தான் வந்தான்.
வேலை முடிந்து மாலை வீடு வந்து சேர்ந்த அருணனை எப்போதும் போல் வா என்று அழைக்க கூட ஆளில்லை. அதையெல்லாம் அவன் எதிர்பார்ப்பதும் இல்லை.
நேராக தன் அறைக்கு போனவன், ஃப்ரெஷ் ஆகி விட்டு, கட்டிலில் அமர்ந்து கம்பெனி ஃபைல்களை புரட்டி கொண்டிருந்தான். ஒருபக்கம் லாப்டாப்பில் எப்போதும் போல் தன் மகளையும் கண்காணிக்க, அதையும் ஆன் செய்து வைத்திருந்தான்.
ஃபைலில் இருந்து அவன் பார்வை எதர்ட்சையாக லாப்டாப்பில் பதிய, அதிர்ந்து விழி விரித்தவன், இதயம் படப்படத்து சட்டென்று அதை மூடியே விட்டான்.
மகள் அறையில் அவள் மட்டுமா இருக்கிறாள்? இப்போது அவன் இன்ஸ்டன்ட் மனைவி கூட அங்கே தானே இருக்கிறாள். ராதிகாவை வீட்டிற்கு அழைத்து வந்ததையே பார்ட்டி மறந்து போச்சு.
இவன் பிள்ளை அறையில் கேமரா வைத்து பார்ப்பான் என்று அவள் என்ன கனவா கண்டாள்?
"அம்மா தான் குளிப்பாட்டி விடணும். பிளீஸ்" என்று கெஞ்சிய பிள்ளையை குளிக்க வைத்ததில் அவளையும் முழுதாக நனைத்து விட்டிருந்தாள் சுதர்சனா.
பாவி பயன் மாற்று உடை கூட இல்லாது அவளை இங்கு கொண்டு விட்டிருக்க, பட்டம்மா தான் பாரி வள்ளலாக தன் சேலையை கொடுத்து உதவினார்.
பாத்ரூம் ஈரமாக இருக்க, அறையில் நின்று உடை மாற்றிக் கொண்டிருந்தவளை தான் ஆள் பார்த்து அதிர்ந்து போனது.
ஜாக்கெட், இன்ஸ்கர்டில் நின்று அவள் முந்தானை மடிப்பு எடுத்துக் கொண்டிருக்க, போதையில் முழுதாக பார்த்த பெண் உடல், அறை குறை காட்சி கண்டே இதயம் படப்படத்தது காளையவனுக்கு.
வேகமாக துடித்துக் கொண்டிருக்கும் இதயத்தில் கைவைத்து ஒருநிமிடம் ஸ்தம்பித்து இருந்தவன், 'இவளை எப்படி மறந்தேன்? முதல்ல சனா ரூம்ல இருந்து கேமராவை எடுக்கணும்' என்று தான் எண்ணிக் கொண்டான்.
(கேமாராவா வைக்கிற கேமரா… நல்லா அனுபவி…)
தலையை உலுக்கி தான் கண்ட காட்சியை அழிக்க முயன்றான். ஆனால் ஆர்பரிக்கும் மூளையோ அவன் ஸ்பரிசித்த அங்கத்தின் எல்லை மீறல்களை தான் மீட்டுக் கொடுத்து அவனை இன்னும் நிலை இழக்க வைத்தது.
"ப்ச்… ஆ ஆ ஆ…" என்று சலித்தபடி தலையை பிடித்துக் கொண்டே, பொறுமையை கட்டி இழுத்து ஃபைல்லில் கவனம் செலுத்த முயல, விழியோ அவன் கட்டுப்பாட்டை மீறி மூடியிருந்த லாப்டாப் மீது தான் பதிந்தது.
"ச்சே… என்ன எண்ணம் இது?" என்று தன்னையே கடிந்து கொண்டவன், வேலையில் கவனம் செலுத்த, மனமோ இன்று நடந்த கலவரங்களில் தன் பிள்ளை முகத்தை கூட சரிவர பார்க்கவில்லையே என்று தான் ஏங்கியது.
லாப்டாப் திறக்கவும் பயம். அவள் என்ன கோலத்தில் இருப்பாள் என்று தெரியாதே?
அதே சமயம், சனா அறைக்கு சென்று பார்க்கவும் அவன் போட்டிருக்கும் முகத்திரை அனுமதி அளிக்கவில்லை.
பத்து நிமிடம் உருண்டு புரண்டு பார்த்தான், பிள்ளை நியாபகமே வர, நேராக வந்து தட்டி விட்டான் சுதர்சனா அறை கதவை.