தளிர் : 14
அருணனின் அமைதியான மிரட்டலில் பத்திரிக்கையாளர்கள் அனைவரும் வாயடைத்து தான் போனார்கள்.
அதிலும் கொஞ்சமும் சந்தேகம் இல்லாது மூன்று மாதம் முன்னமே திருமணம் நடந்தது போல் அனைத்தும் பக்காவாக வக்கீல் தயார் செய்து காட்ட, தலை சுற்றியது அவர்களுக்கு.
"எங்களுக்கு தகவல் வந்தது சார் அதான் வந்தோம்" என்று அப்ருவராக மாறி சமாதானம் செய்ய முயல, அவன் எங்கே அதையெல்லாம் கேட்டான்.
"தப்பி தவறி ஒருத்தன் சிக்கினா அவனை வச்சே ஒரு மாசத்துக்கு ஊறுகா போட வேண்டியது!" என்று திட்டிக் கொண்டே,
"இந்த விளக்கம் எல்லாம் கோர்ட்ல சொல்லுங்க. என்னோட பெர்சனல் லைஃப் அன்ட் பிரைவேட் ஸ்பேஸ்ஸ காட்சி பொருளா மாத்தினா யாரையும் சும்மா விட மாட்டேன்" என்று சாதுவான முகத்துடன், கண்களால் மிரட்டியவன், ராதிகாவை இழுத்துக் கொண்டே வெளியேறினான்.
"சாரி சார்… நாங்க போட்ட நியூஸ் தப்புனு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு செய்தி வெளியிடுறோம். கேஸ் எதுவும் வேண்டாம். பிளீஸ் சார்… எங்க லைஃப் மொத்தமும் போயிடும்" என்று அவன் பின்னால் ஓடி வந்தவர்களை திரும்பி ஒரு நொடி பார்த்தவன்,
"என்னையும் என் வைஃபையும் போட்டோ எடுத்து டெலிகாஸ்ட் பண்ணும் போது நீங்க யோசிச்சீங்களா?" என்ற கேள்வியில் அனைவர் தலையும் கவிழ்ந்து கொள்ள,
கூட்டத்தில் ஒருவன் "புளுர் பண்ணி தானே டெலிகாஸ்ட் பண்ணோம்" அரை குறை அங்கம் மறைத்து வெளியிட்டதை அவன் மெல்லிய குரலில் சொல்ல,
எட்டி தலையை தூக்கி அவனை பார்த்த அருணன், "நான் யாரையும் புளூர் பண்ண போறது இல்ல… டோண்ட் வேஸ்ட் மை டைம். கோர்ட்ல பார்க்கலாம்" என்ற வார்த்தைகளை கடித்து துப்பியவன், திரும்பிய அடித்த கணம் தலு தலுத்த பெண் கரம் ஒன்று அவன் கன்னத்தில் அறைந்திருந்தது.
கண்கள் சிவக்க கோபமாக நிமிர்ந்தவன், முகமோ சட்டென்று சுருங்கி போக, வேதனையாக தான் அவரை பார்த்தான்.
"பாவி… என் பொண்ண கூட்டிட்டு போய் கொன்னு போட்டுட்டு, நீ மட்டும் சந்தோசமா இருக்கியே! அவ உனக்கு என்ன பாவம் பண்ணா? குடும்பத்தோட கொன்னுடிங்களே!" என்று அவன் நெஞ்சில் அடித்தபடியே மடங்கி விழுந்தார் ருக்ஷாவின் தாயார். கல் தூணாக நின்றிருந்தவன் கண்களில் சிறு துளி நீர் கோர்க்க, கண்களை மூடி ஆழ்ந்த மூச்செடுத்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டான்.
அவன் கண்ணசைவில் வேணு ஓடி வந்து ருக்ஷாவின் தாயாரை தூக்கி, "பிளீஸ் வாங்க மேடம்" என்று அவரை வேறு காரில் வீட்டிற்கு அழைத்து செல்ல, போகும் போது கூட, "நீ நல்லாவே இருக்க மாட்ட டா…. நாசமா தான் போவ" என்று மண்ணை அள்ளி வீசியபடியே தான் கண்ணீரோடு சென்றார்.
மற்றைய நேரமாக இருந்தால் இந்த தூற்றுதலுக்கே கண் காது மூக்கு வைத்து கதை கட்டியிருக்கும் பத்திரிக்கையாளர்கள் கூட்டமோ, இப்போது வீணாக வேறு வம்பை விலைகொடுத்து வாங்க பயந்து வேடிக்கை மட்டும் தான் பார்த்தது.
ருக்ஷாவின் தாயார் அருணனை அறைந்ததில் வாயடைத்து நின்ற ராதிகாவுக்கோ என்ன உணர்வென்றே தெரியவில்லை. அவர் தூற்றும் அளவிற்கு அவனை தீயவனாக எண்ணவும் முடியவில்லை. பெண்ணை இழந்தவரின் கண்ணீர் என்று நன்றாகவே புரிந்தது.
பிடித்தவர்களை இழக்கும் வலி அவளுக்கும் புரியும் தானே. ஆனால் அதற்காக உயிரோடு இருப்பவர்களை வாழ விடாது சாபம் கொடுப்பது எல்லாம் எந்த வகையில் நியாயம்.
அவன் இறந்த காலம் அறியாது இறந்தவளின் வேதனையும் புரியாதே. அவள் இப்போது இருக்கும் நிலையில் அதை பற்றி தெரிந்து கொள்ளும் எண்ணமெல்லாம் சிறிதும் இல்லை.
அதை தெரிந்து நான் என்ன செய்ய போகிறேன்? என்ற மன நிலை தான் அவளுக்கு.
ஆனால் அவர் அடித்தும் கல் தூண் போல் நிற்கும் அவனை பார்க்கவும் ஆச்சர்யம் தான். எதிர்த்து பேசினால் கூட, ஓட விடுபவன். அவர் அவ்வளவு சபித்தும் அசையாது நின்றிருக்க, 'இவர் மேல தான் தவறு இருக்குமோ!' என்றும் ஒரு மனம் குதர்க்கமாக யோசிக்க தான் செய்தது.
தன்னையே விழியகற்றாது பார்த்துக் கொண்டிருந்த ராதிகாவை காருக்குள் தள்ளி, மின்னல் வேகத்தில் அங்கிருந்து கிளம்பி இருந்தான் அருணன் சம்ரித்.
அவன் சென்றதும் இங்கே கூட்டத்தில் "எல்லாம் அந்த அம்மாவால வந்தது. பணத்துக்கு ஆசைப்பட்டு இப்போ இருக்கிற வேலையும் போய், கோர்ட் கேஸ்னு அழைஞ்சு, நஷ்ட ஈடு கெட்ட வேண்டி வரும் போலவே!" என்று புலம்பிக் கொண்டே வக்கீல் காலில் விழ ஆரம்பித்து விட்டார்கள்.
அவரும் கொஞ்சமும் அசைந்த பாடில்லை. அருணன் பேச்சை மீறி செயல்பட்டால் அவருக்கும் ஆப்பு வைத்து விடுவானே என்ற பயம் அவருக்கு.
பயணம் முழுவதும் அருணன், ராதிகா நடுவே மெளனமே ஆட்சி செய்ய, வீட்டிற்கு தான் கொண்டு போய் விடுவான் என்று நம்பி ஏறி அமர்ந்திருந்த ராதியாவுக்கோ, செல்லும் வழியில் கவனமில்லை.
இவனின் இந்த மூனு மாத முன்னமே திருமணம் நடந்து விட்டது என்ற பொய்யை வீட்டில் என்ன சொல்லி சமாளிப்பது என்று தான் யோசித்துக் கொண்டிருந்தாள்.
திருமணம் முடிந்து விட்டது என்றால், 'எங்களுக்கு தெரியாமல் எப்படி இப்படி ஒரு காரியம் செய்யலாம்? மூனு பிள்ளைகளை வச்சிட்டு உனக்கு புருஷன் தேடுதோ?' என்று குத்தி குத்தியே சாகடிப்பார்கள்.
இல்லை காலை வெளியான செய்திக்காக நிகழ்த்திய நாடகம் என்று சொன்னால், அது அதை விட கேவலம்.
அவள் நடத்தை விமர்சிக்கப் படும். 'ஆம்பள சுகம் கேட்குதா? இவன் ஒருத்தன் தானா? இல்ல இன்னும் இருக்காங்களா?' என்று அவளை உயிரோடு எரிக்கும் வார்த்தைகளை கேட்க வேண்டி வரும்.
எப்படி? எதை? சொல்லி அனைவர் வாயையும் அடைப்பது என்ற யோசனையில் உழன்று கொண்டிருந்தவள், இறுதியாக கார் நின்ற பிறகே வந்த இடத்தை கவனித்தாள்.
பிரமாண்டமான வீட்டின் வெளிப்புற தோற்றமே அவளை மிரட்ட, "இது யார் வீடு?" என்று கேட்டுக் கொண்டே இறங்கினாள்.
"என் வீடு தான்" என்றவன் முன்னால் நடக்க,
"சரி நான் என் வீட்டுக்கு போறேன்" என்று திரும்பி நடந்தவளை அடுத்த கணம், கைகளை பிடித்து பின்னால் வளைத்து காரில் சாய்த்து நிறுத்தியிருந்தான் அருணன்.
"நீ எங்கேயும் போக கூடாது" என்று உத்தரவிட்டவன், குரலும் செயலும் அவளை மேலும் வதைக்க,
அதிர்ந்து கண்களை விரித்தவள், "அதான் நீங்க நினைச்சது போல மீட்டிங் முடிஞ்சதே! என்னை விடுங்க. நான் வீட்டுக்கு போகணும், என் குழந்தைகளை பார்க்கணும்" என்றவள் குரலில் வலிகளை தாண்டி கோபம் துளிர் விட்டது.
"பார்த்தல்ல எல்லாரும் ஏக கடுப்புல இருக்காங்க. அவங்க மேல தப்பு இல்லனு புரூப் பண்ண, கண்கொத்தி பாம்பா வாட்ச் பண்ணுவாங்க. ஒரு சின்ன துரும்பு கிடைச்சா கூட போதும் அவங்க ஜெயிச்சுடுவாங்க. அப்படி ஒரு சான்ஸ் நான் யாருக்கும் கொடுக்க போறது இல்ல" என்று வீம்பாக அவளையும் அமுக்கி பிடித்து தன் திட்டத்தில் நுழைத்து விட்டிருக்க, 'அய்யோ சாமி என்ன விடு' என்று தான் கதற தோன்றியது ராதிகாவுக்கு.
"இந்த கல்யாணத்தை ஏத்துக்கிட்டு இந்த வீட்லயே இருக்க சொல்றீங்களா?" என்று கண்ணில் குளம் கட்டிய நீரை உள்ளிழுத்து அவள் கேட்க,
பெண்ணின் மெல்லிய உணர்வுகள் ஆடவனுக்கு எங்கே புரிய போகிறது, தன்னை எதிர்க்க நினைத்த கூட்டத்தை கதற விட வேண்டும் என்பது மட்டும் தான் அவன் குறிக்கோளாக இருந்தது.
ஈகோவை சீண்டினாலே கோபம் வரும். இதில் தன்மானத்தை கேலி பொருளாக்கி வேடிக்கை பார்த்தால்… அத்தனை பேர் இரத்தத்தையும் உறிஞ்சி வேட்டையாடும் வெறியே வந்தது.
கோபத்தில் பேசினால் சிக்கல் தான் பெரிதாகும், சில விரோதிகளை கோபத்தால் அல்ல சமயோஜித புத்தியால் தான் பழி வாங்க வேண்டும்.
அதற்கு அவள் வேண்டுமே!
"ஒரு ரெண்டு நாள் இரு போதும். அதுக்குள்ள மேக்சிமம் எல்லா பிராப்ளமும் சரி பண்றேன்." என்றவனை, அனலாக முறைத்தாள் வேலையாகாது என்று
"என் குழந்தைகளையாவது பார்க்க விடுங்க" என்று தான் கேட்டாள் கெஞ்சல் குரலில்.
"உனக்கானது கிடைச்சிட்டா நான் சொல்றத நீ கேட்க மாட்டியே"
"இது நியாயமே இல்ல."
"நியாயம் அநியாயம் பார்க்க நேரமில்லை"
என்று அவளோடு வாக்கு வாதமிட்டப்படி அவள் கையை பிடித்து உள்ளே இழுத்து செல்ல, "என்ன விடுங்க" என்று அவன் கையில் இருந்து தன் கையை உருவ முயன்று கத்திக் கொண்டு வந்தவளை,
"ஏய்…. " என்று அதட்டியவன், "இன்னும் உன் குடும்பம் மொத்தமும் என் கட்டுப்பாடுல தான் இருக்கு. மறந்திடாதே" என்று மிரட்ட,
கண்களை மூடி தன் நிலையை எண்ணி நொந்து கொண்டவள், "இப்போ உங்க வீட்டாளுங்க முன்னாடியும் நான் நடிக்கணுமா?" என்று இயலாமை கலந்த கோபத்தில் கேட்க,
அவனோ "இவ்வளவு நேரம் நீயா பெர்பார்ம் பண்ண? அங்க என்ன பண்ணியோ அதையே பண்ணு" வாயை மூடிட்டு இருந்தா மட்டும் போதும் என்று கையால் செய்கை செய்து அவளை டம் செய்து, அவளை இழுத்துக் கொண்டே உள்ளே சென்றான்
'கழுதைக்கு வாக்கப் பட்டா உதை வாங்கணும்…
குரங்குக்கு வாக்கப்பட்டா மரம் தாவணும்.
இவர்கிட்ட வேலைக்கு சேர்ந்ததுக்கு இத்தனை நாள் மிதி வாங்கியாச்சு. இனி குரங்கு போல எங்க தாவ சொன்னாலும் தாவணும் போல… வொய் காட் வொய்… ஏன் எனக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்குது. என்னை பார்த்தா உனக்கு பாவமாவே இல்லையா?' என்று மனதில் புலம்பிக் கொண்டே அவன் இழுப்பிற்கு வந்தாள். வேறு என்ன செய்ய?
நாடு ஹாலில் அவளுடன் வந்து நின்றவனை ஏன் என்று கேட்க கூட நாதியில்லை. எல்லாம் கல்யாணத்துக்கு ஓகே சொல்லி சிக்கிய மலமாடை பீஃப் பிரியாணி போடுவதில் ஆர்வமாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறது, அவன் செயல் தெரிந்தால் குஸ்கா கூட கிண்ட முடியாதே…
வீட்டில் யாரும் கேட்கலைனா என்ன? நானே கத்தி எல்லாரையும் வர வைக்கிறேன் என்னும் வகையில் "பட்டாம்மா…" என்று அவன் கத்தியதில் அருகில் நின்றிருந்த ராதிகா காது டமார் ஆகியிருக்கும்.
'இவருக்கு சாதாரணமாவே யாரையும் கூப்பிட தெரியாதா?' என்று நினைத்தபடியே ஸ்வெயிங் என்று இரைச்சல் கேட்கும் காதை சுண்டு விரலால் குடைந்து கொண்டிருந்தாள்.
'ஏற்கனவே காலையில் இருந்து சரிவர காது வேற கேட்க மாட்டேங்குது, ஏதோ மூக்கடைச்ச போல என் குரலே ஒரு காதுல மட்டும் தான் கேட்குது. இவர் வேற இருக்கிற காதையும் சுத்தமா கெடுத்து விட்டுருவார் போல’ மனம் அவனை திட்டினாலும், அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு நின்றிருந்தாள்.
அவள் குடும்பத்தையே அவளால் சமாளிக்க முடியாது. இதில் அவன் குடும்ப ஆட்களை எதிர் கொள்ள அவள் கொஞ்சமும் தயாராகவில்லையே.
அதிலும் கோசலையை எண்ணும் போதே நெஞ்சு குழியில் நீர் வற்றியது. ஏதாவது நடிகை அருணனை பார்த்தால் கூட, இவள் தலையை உருட்டுவார். அப்படி இருக்கையில் ராதிகாவே மொத்தமாக அவனை கொத்தி சென்று விட்டால்?
'அய்யோ கடவுளே பேசாம என்னை நாடு கடத்திடேன்' என்று தான் கோரிக்கை வைக்க தோன்றியது.
அவன் கத்தலில் பட்டம்மா வந்தாரோ இல்லையோ? அவன் எதிர் பார்த்த அத்தனை டிக்கெட்டும் வந்து விட்டது.
கலவரத்திலும் ஒரு நலவரம். மகன் கல்யாணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்ததும் பார்வதி பறந்து பறந்து மண்டபம் வரை புக் செய்திருக்க, அவனோ பழிக்கு காரணமான பெண்ணுடனே வந்து சேர்ந்தான்.
இருவரையும் ஒருசேர பார்த்த நொடி நெஞ்சடைத்து விட்டது பார்வதிக்கு.
"இந்த பொண்ண ஏன் தம்பி இங்க கூட்டிட்டு வந்த?" அவளை பார்க்கவே வயிறெரிந்தது பார்வதிக்கு.
"காலையில மட்டும் நான் வீடு வந்து சேர முன்னமே நியூஸ் வந்துச்சு. இப்போ வரலையா?" என்று கேட்டவனோ, "பட்டம்மா…" என்று அவரை அழைத்து கண்களால் டிவியை ஆன் செய்ய சொல்ல, அவரும் ஆன் செய்து நியூஸ் சேனலில் வைத்து விட்டு ஒதுங்கி நின்றார்.
வேறென்ன ஓட போகிறது? நம்ம ஆட்கள் தான் ஒரு செய்தி கிடைத்து விட்டால் அதையே திரும்ப திரும்ப போட்டு தேய்த்து விடுவார்கள் அல்லவா!
அப்படி தான் காலையில் செய்தி வெளியிட்ட சேனல்களுக்கு எதிராக இருக்கும் மற்ற சேனல்கள் அருணன் திருமண செய்தி அறிவித்து, டிஆர்பிக்காக தர குறைவான செயல்களில் ஈடுபடும் சேனல்கள் என்று அங்கே சில அரசியல் தந்திரங்களும் அரங்கேறிக் கொண்டிருந்தது.
அதை பார்த்த அருணன் வீட்டார்கள் அனைவருக்கும் ஏக அதிர்ச்சி தான்.
கோசலையோ “கைக்காரி உன்னை போய் நல்லவள்னு நம்பினேனே!” என்று வாய்விட்டே மெதுவாக முனங்கி கொண்டு, விட்டால் அவளை கண்களால் பொசுக்கி விடுவது போல் தான் முறைத்து வைத்தார்.
அருணன் முன்னிலையில் தன் கோபத்தை கூட காட்ட முடியா நிலை அவருக்கு. கிளி தனியாக சிக்குச்சு கசாப் உறுதி. அந்த அளவுக்கு எரிமலையாக வெடித்துக் கொண்டிருந்தார்.
தாமோதரன் மகன் மீது நம்பிக்கை இல்லா பார்வையில் குறு குறுவென பார்த்துக் கொண்டிருக்க, அவர் பக்கம் பார்வையை திருப்பவே இல்லை அவர் மகன்.
பாட்டியும், பெரியப்பாவும் எப்போதும் போல் ஒரு குழப்பமான பார்வையை ஒருவர் மீது ஒருவர் வீசிக் கொண்டு அமைதியாகவே நின்றிருந்தனர்.
சுதர்சனாவோ அருணனை பார்த்து பயந்து பட்டம்மா சேலை பின்னால் ஒளிந்து கொண்டாலும், ராதிகாவை பார்த்துக் கொண்டே, "இவங்க தானே காலைல அப்பா கூட டிவில வந்தது. இவங்க யாரு பட்டம்மா?" என்று மெதுவாக அவர் காதை கடிக்க,
அவரோ அதே மெதுவான குரலில், "நீ அம்மாகிட்ட உனக்கு அம்மா இல்ல, அம்மா வேணும்னு கேட்டல்ல, உன் அம்மா அனுப்பி வச்ச உன்னோட புது அம்மா" என்று உள்ளுக்குள் சந்தோசமாக, மனநிறைவாக தான் சொன்னார்.
அவருக்கு இருக்கும் அந்த மனநிறைவு அங்கு யாருக்கும் இல்லையே. அனைவரும் வெவ்வேறு மன நிலையில் தான் நின்றிருந்தார்கள்.
அதிலும் சுவாதியோ 20-20 மேட்ச் பார்ப்பது போல் அத்தனை சுவாரஸ்யமாக நின்று பார்த்துக் கொண்டிருக்க, கோசலை மன உளைச்சலில் இருந்ததால் அவள் செயலுக்கு பிரதி பலனும் இல்லாது போனது அவள் நல்ல நேரம் தான்.
"அருண் என்ன இதெல்லாம்?" அமைதியாக நின்றிருந்த அவன் பெரியப்பா முரளிதரன் கூட சட்டென்று கோபப்பட்டு விட,
"பிடிச்சது கல்யாணம் பண்ணிக்கிட்டேன்" முன்பு ருக்ஷாவுடன் வந்த போதும் இதையே தான் சொன்னான்.
"வீட்ல பெரியவங்களை எப்பவும் மதிக்க மாட்டியா அருண்?" என்று அவர் ஆதங்கமாக கேட்டு விட, "அதுக்கான சந்தர்ப்பம் அமையல" என்றவனிடம் என்ன பேசுவது? என்று அவருக்கும் புரியவில்லை.
என்னவோ போட என்று தன் அன்னை சேரை தள்ளிக் கொண்டு உள்ளே சென்று விட்டார்.
"தம்பி உனக்கு ஊர் உலகத்துல வேற பொண்ணே கிடைக்கலையா? எவன் பிள்ளைக்கோ அப்பாவாக நினைக்கிற? நீ சுவாதியை கல்யாணம் பண்ணலைனாலும் பரவாயில்லை. இந்த பொண்ணு வேணாம் டா" என்று ஆதங்கமாக ஆரம்பித்த பார்வதி கெஞ்சுதலாக முடிக்க,
எப்போதும் அவர் கேள்விகளுக்கு பதில் சொல்ல விரும்பாதவன், இன்று நின்று நிதானமாகவே பதில் சொன்னான்.
"நீங்க தானே ஒரு வாரத்துல கல்யாணம் பண்ண சொல்லி கேட்டீங்க… மூனு மாசம் முன்னாடியே கல்யாணம் ஆகிடுச்சு. அதை பத்தி உங்க ஜோசியர் எதுவும் சொல்லலயா? இல்ல மறுபடியும் கல்யாணம் பண்ணனுமா? எதுவா இருந்தாலும் ஓகே. இவ தான் பொண்ணு. என்ன அத்தை நான் சொல்றது சரி தானே!" என்று குத்தலாக கோசலையை பார்த்து கேட்க, அவர் முகமோ வெளரி போனது.
எப்படி? இப்படி ஒரு சம்பவம் நடந்தது? என்று அவனுக்கு கண்டுபிடிப்பது அவ்வளவு கஷ்டமாக ஒன்றும் இருக்கவில்லை.
காலையில் சி சி டி வி கேமரா மூலமே எல்லாம் பார்த்து, பாஸ்கரையும் தூக்கி பெண்டு நிமித்தியாச்சு. பார்ட்டி அடி தாங்காது எல்லாத்தையும் உளறி கோசலையையும் மாட்டி விட்டிருந்தான்.
அவரை தண்டிக்க ஒரு நிமிடம் ஆகாது அவனுக்கு. ஆனால் ஒருத்தருக்கு நாம் கொடுக்கும் மிக பெரிய தண்டனை? அவர் எண்ணிய வாழ்க்கையை அவர் பொறாமை பட்டு வயிறெரிய வாழ்ந்து காட்டுவது தான்.
அவர் மகளுக்காக இத்தனையும் செய்தவர், அவன் மனநிலையும் யோசிக்கவில்லை. இப்போது மாட்டிக் கொண்டு பலியான ராதிகா வாழ்க்கை பற்றியும் யோசிக்கவில்லை. அவள் தான் என் மனைவி என்று அவளோடு கை கோர்த்து அவன் வாழ்வதே அவருக்கு கொடுக்கும் பெரிய தண்டனை தான்.
இப்படி யோசித்து தான் காய் நகர்த்தினான். ஆனா யோசித்தது போல் எளிதில் மனதையும், வாழ்க்கையையும் மாற்றி விட முடியாதே… அவனுக்கும் அவள் உறவை ஏற்க முடியவில்லை தான். வலுக்கட்டாயமாக மனதை மாற்றிக் கொள்ள நினைத்தான், கோசலையை கலங்க வைக்க மட்டுமே.
'மனுஷன் இவன் கிட்ட பேசுவானா?' என்ற ரேஞ்சில் அவனை பார்த்துக் கொண்டிருந்தவர்களை பொருட்டாக மதிக்காது, அருணன் தன் அறைக்கு சென்று விட,
இங்கே முதலை கூட்டம் நடுவே தனியாக மாட்டிக் கொண்டது ராதிகா தான்.
கோபமாக அவளை நெருங்கிய கோசலையோ, "நல்லவ வேசம் போட்டு எல்லாரையும் நல்லா ஏமாத்திட்ட டி. எவ்வளவு திமிர் இருந்தா எங்க வீட்டு பையனையே வளைச்சு போட்டு இருப்ப? புருஷன இழந்தவனு பாவம் பார்த்தா… நீ காரியகாரியாவுல இருக்க. நல்லா இருப்பியா?" என்று ஒரு புறம் கோசலை திட்ட,
மற்றைய புறம் வந்து நின்ற பார்வதியோ, "அப்பாவி மாதிரி மூஞ்ச வச்சிட்டு… என் புள்ளையையே மடக்கி போட்டுட்டியே சதிகாரி. அப்படி என்னத்த காட்டி என் புள்ளைய மக்குன? வேசகாரி…" என்று அவள் தோளை பிடித்து தன்னை நோக்கி திருப்பி திட்ட,
தன் வீட்டு பெண்களின் அதிகபடி பேச்சை தாமோதரனால் கூட பொறுத்துக் கொள்ள முடியாது, "பார்வதி…" என்று மனைவியை அடக்கி பார்த்தார்.
ஆனால் அவர் மனைவியோ "நாங்க பொம்பளைங்க பேசும் போது குறுக்க பேசாதீங்க. இவளைலாம் ஆரம்பத்திலேயே அடக்கி வைக்கணும்" என்று அவரை அடக்கி வைத்து, சிக்கிய அப்பாவியை தோலை உரித்து தொங்கவிட ஆரம்பித்து விட்டார்கள் அண்ணியாரும், நாத்தனாருமாக சேர்ந்து.
"இல்ல… மேடம்…" என்று நடந்தவைகளை சொல்லிவிட நினைத்தவள் பேச்சை அங்கே யார் கேட்டது?
'அதை ஏன் நீ சொல்ற? அதெல்லாம் நீ சொல்ல கூடாது' கில்லி முத்து பாண்டி ரேஞ்சில் அவளை வாயைவே திறக்க விடாது, கோசலையும் பார்வதியும் மாறி மாறி பந்தாட, பொறுத்து போன கடல் தேவதையோ ஆழி பேரலையாக பொங்கி விட்டாள்.
(டிஸ்கி : அவங்க பண்ணது சரி தவறு தாண்டி வயசுல பெரியவங்களை எதிர்த்து பேசுறது தவறு. குறிப்பா மாமியாரை பேசாதீங்க)
"ஆமா மயக்கி தான் வச்சிருக்கேன். என்ன பண்ணுவீங்க? எத காட்டி மயக்குனேனு உங்க கிட்ட சொல்லணும்னு அவசியம் இல்லையே! நான் மயக்குற அளவுக்கு புள்ளை பெத்து வளர்த்து விட்டது உங்க தப்பு" என்று சட்டென்று கோபத்தில் அவளும் பேசி விட,
"அவ்வ அவ்வா!" என்று வாயில் அடித்துக் கொண்ட பார்வதி, "எப்படி பேசுறா பாருங்க அண்ணி? இதுக்கு அந்த ருக்ஷாவே தேவலாம் போலவே!" என்று கோசலையிடம் புலம்ப,
"இங்க பாருங்க, உங்க புள்ளை ஒன்னும் விரல் சூப்புற சின்ன பப்பா இல்ல, குச்சி மிட்டாய் காட்டி மயக்கி வைக்க"
"பின்ன என்ன இருக்குனு உன்ன போய் கல்யாணம் பண்ணான்? நீ தான் டி ஏதோ சதி பண்ணி என் புள்ளையை உன் பக்கம் இழுத்து வச்சிருக்க"
"ஆமா இழுத்து முந்தானைல முடிஞ்சி இடுப்புல சொருகி வச்சிருக்கேன்…"
வந்த முதல் நாளே இருவரும் மாமியார் மருமகள் சண்டையை துவங்கி இருக்க, இடையில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தாமோதரனும், சுவாதியும் "பார்வதி… அத்தை… அம்மா…" என்று தடுக்க முயல,
அவளை பிடித்து பின்னால் தள்ளி விட்டு சண்டை நிற்காது தொடர்ந்து கொண்டு தான் இருந்தது.
"ஆச அறுபது நாள்… மோகம் முப்பது நாள்… உன் மேல இருக்க பித்து குறைஞ்சதும் கிள்ளி கீரை போல உன்னை தூக்கி எரிய தான் போறான்."
"ஏன் உங்க புருஷன் உங்களை தூக்கி எரிஞ்சாரா? இத்தனை வருஷம் ஆனாலும் உங்க பேச்சுக்கு மரியாதை கொடுக்க தானே செய்றார். அது போல என் புருஷனுக்கு என் மேல இருக்க பித்து குறையாம இருக்க என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும்" என்று சொன்ன கணம், "அத்தை….." என்று கத்தி அழைத்தபடி சுவாதி பார்வதி தோளை சுரண்ட,
"என்ன டி" என்று எரிச்சலாக திரும்பிய பார்வதியும், கோசலையும் மட்டுமல்ல, அங்கே அவர்களேயே அனல் கக்கும் பார்வை பார்த்துக் கொண்டிருந்த அருணனை பார்த்த ராதிகா கூட அதிர்ந்தே விட்டார்கள்.
'ஆத்தி… இவன் எப்போ வந்தான்?' மூன்று பெண்களின் ஒருமித்த எண்ணவோட்டம் இதுவே,
பார்வதிக்கோ அவன் பார்வையே கிலியை பரப்ப, ஏதும் பேசாமல் கோசலையோடு அமைதியாக ஓடியே விட்டார்.
மனைவியின் திருட்டு முழியிலும், செயலிலும் இருபுறமும் தலையாட்டிய தாமோதரனும் அங்கிருந்து சென்று விட,
இந்த முறை சிங்கத்தின் வாய்க்குள் தலையை விட்ட உணர்வில் அதிர்ந்து நின்றிருந்தாள் ராதிகா.
வேண்டுமென்றே அவள் ஒன்றும் சண்டையிடவில்லையே… காற்று நிரப்பிய பலூன் போல, அழுத்தம் கொடுக்க கொடுக்க, ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியாது வெடித்து விட்டாள்.
உரிமையாக அவனை புருஷன் என்றது, பேசிய வார்த்தைகள் யாவும், யோசிக்காது சொன்னவைகள் தானே தவிர நெஞ்சுணர்ந்து எதுவும் சொல்லவில்லையே.
அதை அவனிடம் எப்படி சொல்வது?
அவன் அழுத்தமான விழிகளை, மருண்ட விழிகளில் எதிர் கொண்டிருந்தவளை நெருங்கிய அருணனை பார்த்து உடல் சில்லிட்டு, நெஞ்சு குழியில் நீர் வற்றி போனது ராதிகாவுக்கு.
அவள் தேடல் அவன் இல்லை…
அவன் கனவு அவள் இல்லை…
இருவரையும் இணைத்தது விதியின் சதியா?????
(இல்லை… இல்லை … கோக்கு மாக்கா யோசிக்கிற ஆத்தரோட சதி மட்டுமே… 😉😉😉😉😉)