தளிர் : 13
மூங்கில் மரங்கள் இரு புறமும் வளர்ந்திருந்த வில்லா வாசலில் காரை நிறுத்தி ராதிகாவை இறக்கி விட, அவளுக்காக வாசலில் காத்திருந்த வேணுவை பார்த்தவள் மனமோ கொஞ்சம் அமைதியானது.
அவள் இருக்கும் பிரச்சனைக்கு நடுவே முன் பின் தெரியாத எவனோ ஒருவன் காரில் அள்ளி போட்டு கடத்தி வந்தால்? அவளும் என்ன தான் செய்வாள்? எத்தனை தான் தாங்குவாள்?
உலகையே வெறுக்க தோன்றியது. கண்ணில் விழும் ஆட்களை எல்லாம் கொன்று போடும் அளவிற்கு கோபம் தான் வந்தது. ஆனால் அவள் நிலை மெளனமாக இருக்க வைத்தது.
அவள் இறங்கியதும் "வாங்க மேடம்" என்று வேணு அவளை உள்ளே அழைத்து செல்ல,
"வேணு என்னை எதுக்கு ஆள் விட்டு தூக்கிட்டு வந்தீங்க?" என்று கேட்டுக் கொண்டே அவனுடன் நடந்தாள்.
“சொல்றேன் மேடம்” என்றவன் அவள் கேள்விக்கு பதில் அளிக்கவே இல்லை.
ஹாலை தாண்டி உள்ளே வர, இயற்கையோடு ஒன்றி வாழ் என்று தொட்டியில் வளர்க்கப் பட்டிருந்த வாசனை செடிகள் நிறைந்த, வீட்டின் நடுவே இருந்த முற்றத்தில் சிறிய மேஜையை சுற்றியிருந்த நாற்காலி ஒன்றில் கம்பீரமாக கால் மேல் கால் போட்டு தோரணையாக அமர்ந்திருந்தவனை கண்டு கோபம் தான் வந்தது ராதிகாவுக்கு.
வேறு யார்? எப்போதும் அவளுக்கு எமனாக நிற்கும் அவள் அசுரன் அருணன் சம்ரித்தே தான். அவன் கெஸ்ட் ஹவுஸ் தான் இது. கூரிய விழிகளோடு, அடிப்பட்ட சிங்கம் வேட்டையாட காத்திருப்பது போல் அமர்ந்திருந்தான்.
'இவனால் தானே எல்லா பிரச்சனையும். என் பிள்ளைகள், ஓய்வில்லா வேலைனு நிற்க கூட நேரமில்லாமல் நல்லா தானே என் வாழ்க்கை போய்கிட்டு இருந்துச்சு. நடுவுல இந்த விதி ஏன் இவரை என் வாழ்க்கைகுள்ள புகுத்தி கும்மியடிக்குது?' என்று வெறுப்பாக அவனை பார்த்துக் கொண்டே உள்ளே வந்தாள்.
வக்கில் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தவன் பார்வை அவள் மீது பதிய, அவனை திட்டிய மனமோ கப்பென்று வாயை மூடிக் கொள்ள, பாவை அவளோ அவனை எதிர் கொள்ள முடியாது தலையை தாழ்த்தி கொண்டாள்.
அத்தனை கலவரத்திலும் அவன் மனம் அவள் மீது குற்றம் சுமத்தவில்லை. இதை யார் செய்திருப்பார்கள் என்று ஒரு சந்தேகம் இருக்கிறது தான். என்றும் இல்லாத திருநாளாக நேற்று கோசலை அவன் வேலை பார்க்கும் இடத்திற்கு சுவாதியுடன் வந்த போதே சிறு நெருடல். ஆனால் இந்த அளவிற்கு இறங்கி வேலை பார்ப்பார் என்று அவனும் நினைக்கவில்லை.
அவர் வீட்டுக்குள் இருக்கும் எலி, எப்போது வேண்டுமானாலும் பிடித்து கண்டம் செய்து விடலாம்.
இப்போது அவனுக்கு இருக்கும் பெரிய தலைவலி தர குறைவாக அவன் ஒழுக்கத்தை விமர்சித்த அந்த செய்தி சேனல்கள் தான். அதை சரி செய்யவே திட்டம் ஒன்றை போட்டு, செயல்படுத்த ராதிகாவை அள்ளிக் கொண்டு வர சொன்னான்.
இப்போது அவள் இருக்கும் மனநிலையில் நிச்சயம் தன்னை பார்க்க வர மாட்டாள். அதனால் தான் அதிரடியாக ஆட்களை அனுப்பி தூக்கி வர வைத்தான்.
அவளும் எவனோ ஒருவன் கடத்தி செல்வதாக எண்ணி பதறி துடித்தவள், அருணன் என்றதும் பயம் நீங்கி தான் உள்ளே வந்தாள்.
இத்தனை நடந்தும் அவனை எதிர்க் கொள்ள தயக்கம் தானே தவிர, அவனை கண்டு சிறிதும் பயம் இல்லை. அந்த அளவிற்கு அவன் மீது நம்பிக்கை கொண்டாளோ தன்னையும் அறியாது!
தவறிழைத்தவர்கள் என்று உலகம் முத்திரை குத்தும் இருவரும் ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லவில்லை.
ராதிகா தங்கள் அருகே வந்ததும் வக்கிலிடம் கண்ணை காட்டி விட்டு அருணன் அமைதியாக இருந்து விட,
அவர் தான் அவளிடம் பேசினார்.
"உட்காருங்க மேடம்…" என்று முதலில் அவளை அமர சொன்னவர், தொண்டையை செருமி கொண்டு பேச துவங்கினார்.
"உங்களையும் சாரையும் இணைச்சு ரொம்ப தவறா சில டாக்ஸ் போய்கிட்டு இருக்கு" என்று ஆரம்பிக்க,
'அத சொல்ல தான் வண்டி கட்டி என்னை அள்ளி போட்டு வந்தீங்களாடா?' என்பது போல் ஒரு லுக் விட்டவள் அமைதியாகவே இருந்தாள்.
மேலும் தொடர்ந்தவரோ, "அந்த நியூஸால, சாரோட ரேபுடேஷன் ரொம்பவே பாதிக்கப்பட்டு இருக்கு. அவருக்கு மட்டுமில்ல உங்களுக்கும் தானே அசிங்கம். சோ அதை சரி பண்ண நாங்க ஒரு பிளான் வச்சிருக்கோம்" என்றவரை 'அப்படி என்ன பிளான் வச்சிருக்காங்க?' என்று கண்களை சுருக்கி அவரை பார்த்தாள் ராதிகா.
அவள் முன் ஒரு பத்திரத்தை நகர்த்தி வைத்தவர், "இதுல ஒரு கையெழுத்து மட்டும் போடுங்க. மத்ததெல்லாம் நான் பார்த்துக்கிறேன்" என்று சொல்ல,
'ஒரே ஒரு கையெழுத்தில எல்லா பிரச்சனையும் சால்வ்டா… இது சாத்தியமா? என்ன டா ஒத்த மாத்திரைல எல்லா வியாதியும் குணமாகும் ரேஞ்சில சொல்ற?' என்று தான் நம்ப முடியாமல் புருவம் சுருக்கி அவரை பார்த்தவிட்டு, பத்திரத்தை எடுத்து பார்த்தவள் அதிர்ந்தே விட்டாள்.
"மேரேஜ் ரெஜிஸ்டர் ஃபார்ம் ஆஹ்?" என்று அதிர்ந்து கேட்டவள், விழிகள் ஒருமுறை அருணன் மீது பதிந்து மீண்டது.
பழியை துடைக்க அவன் கையாளும் முறை என்று தெளிவாக புரிந்தது. 'அதுக்காக கல்யாணம் பண்ணா சரியா போச்சா?' என்று எரிச்சல் தான் வந்தது மூவரின் முகத்தையும் பார்க்கும் போது.
"இல்ல இது சரியா வராது. என்னால முடியாது" என்று உடனடியாக மறுத்தவள் மீது கோபம் தான் வந்தது அருணனுக்கு.
"லுக்… உன்மேல விருப்பப்பட்டு கல்யாணம் பண்ண கேட்கல, முதல்ல இது கல்யாணமே இல்ல. யாரோட கேள்விகளுக்கும் என்னால தலை குனிஞ்சு நிக்க முடியாது. எனக்கு என் கௌரவம் முக்கியம். அதுக்கு களங்கம் வந்திருக்கு. அதுவும் உன்னால?" என்றதும்,
அத்தனை நேரம் அவன் முகத்தை பார்க்க தயக்கம் கொண்டு தலை கவிழ்ந்து நின்ற ராதிகாவோ அவன் வார்த்தைகளில் வெடுக்கென்று நிமிர்ந்து,
"என்னாலயா? நான் என்ன பண்ணேன்? கல்யாணம் பண்ண மாதிரி காட்டுனா உங்க பிராப்ளம் வேணா சால்வ் ஆகலாம். இதுக்கும் சேர்த்து நான் எவ்வளவு பிராப்ளம் ஸ்ஃபேஸ் பண்ணனும் தெரியுமா உங்களுக்கு? என்னால முடியாது" என்று கோபமாக சொல்லி விட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள்.
"ஐ டோண்ட் கேர் அபோர்ட் யுவர் செல்ஃப். கையெழுத்து போட முடியுமா? முடியாதா?" என்று நர நரவென பல்லை கடிக்க,
"அப்போ நான் மட்டும் எதுக்கு உங்களுக்காக கையெழுத்து போடணும்?" என்றவளும் வீம்பாக நிற்க,
"ராதிகாஆ ஆ ஆ" என்று கர்ஜித்தபடி அமர்ந்திருந்த சேரை பின்னால் தள்ளிக் கொண்டே எழுந்தவன், நொடியில் அந்த சேரையே தூக்கி அவள் மீது ஓங்கி விட்டான். நல்ல வேளை வேணுவும், வக்கீலும் பிடித்து கொண்டனர்.
"அறிவில்ல… பொறுமையா உட்கார்ந்து நிலவரத்தை சொல்லிட்டு இருக்கேன். வீம்பு பிடிச்சிட்டு இருக்க, அடிச்சு சாவடிச்சுடுவேன் டி" என்று கர்ஜித்தவனை கண்டு உள்ளுக்குள் அல்லு விட்டாலும்,
"உங்களுக்கு அறிவில்ல? என்னால தான் முடியாதுனு சொல்றேனே. புரிஞ்சிக்காம கையெழுத்து போடு சொல்றீங்க?" என்றவளும் 'அடி டா பார்க்கலாம்?' என்று தில்லாக தான் நின்றிருந்தாள். ஆனால் உடல் தான் சற்று உதற, மேஜையில் இருந்த பிளவர் வாசை அழுந்த பிடித்தபடி நின்றிருந்தாள்.
அவன் அடிக்க மாட்டான் என்ற நம்பிக்கை. அப்படியும் அடித்தால் நானும் திருப்பி அடிப்பேன் என்று தான் ஃபிளவர் வாஸை பிடித்துக் கொண்டு நின்றிருந்தாள்.
கணவன் வீட்டார் மீது கொண்ட மரியாதை, அத்தனை பேச்சுகள் கேட்டும் அமைதியாக நின்றிருந்தாள். அதற்காக எவன் கை வைத்தாலும் அடங்கி போகும் பெண் நிச்சயம் அவள் இல்லை.
"அய்யோ! மேடம் கொஞ்சம் அமைதியா இருங்க.
சார் அமைதியா இருங்க சார். நான் பேசுறேன்" என்று வக்கீல் அவனை சாந்த படுத்த,
இன் பண்ணியிருந்த சட்டையை வெளியே எடுத்து போட்டபடி அவளை முறைத்துக் கொண்டே அமர்ந்தான் அருணன்.
"மேடம் சொன்னா புரிஞ்சுகோங்க. இதெல்லாம் மீடியா ஆட்களை நம்ப வைக்க ஒரு சின்ன கண் துடைப்பு தான்” என்று அவர் திட்டத்தை விளக்க,
"பிளான் எல்லாம் நல்லா தான் இருக்கு. அதுக்காகலாம் என்னால முடியாது" என்று சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தவளை பார்க்க பார்க்க இன்னும் கோபம் தான் அதிகரித்தது.
"வேணு ஜார்ஜ்க்கு போன் போடு" என்று அருணன் சொல்ல, அவனும் தயக்கமாக ராதிகாவை பார்த்தபடி, வீடியோ கால் போட்டு அருணன் கையில் கொடுத்து விட்டு ஒதுங்கி நின்றான்.
அதை அப்படியே திருப்பி ராதிகாவுக்கு காட்டிட, அவள் மொத்த குடும்பமும் தரையில் பயந்து ஒடுங்கி அமர்ந்து இருக்க, அவர்கள் முன் துப்பாக்கியை கையில் சுழற்றியபடி அமர்ந்திருந்தான் ஜார்ஜ்.
அதை பார்த்தவள் கண்கள் இடுங்க அருணனை பார்த்து முறைக்க,
அனல் விழிகளுடன் அவளை தான் பார்த்து கொண்டிருந்தான் அவனும்.
"கையெழுத்து போடுவியா? மாட்டியா?" என்று போனை ஆட்டிக் கொண்டே கேட்க,
"என்ன மிரட்டுறீங்களா?" என்று கேட்டவளுக்கு நன்றாகவே தெரியும் அருணன் இப்படியெல்லாம் செய்யும் ஆள் கிடையாது என்று. ஆனால் சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் ஒருவரை மாற்றி விடுகிறதே.
ஊடகங்கள் மத்தியில் அவன் ஒழுக்கம் விமர்சிக்கப்படுவது அவனுக்கு பிடிக்கவில்லை. அதை துடைக்கவே அவன் போராடுகிறான்.
"மேடம் ஒரு கையெழுத்து தானே போடுங்களேன். இந்த விசயத்தாலா உங்க வீட்டாருக்கும் தானே நிம்மதி கெடுது. பிளீஸ் போடுங்க" என்று வேணு கெஞ்ச,
அவன் சொல்வதும் சரி தானே! என்று அவளுக்கும் புரியாமல் இல்லை. ஆனால் விளையாட்டுக்காக கூட பாலா அன்றி வேறு ஒருவனை கணவனாக ஏற்க மனம் இசையவில்லையே.
எப்போதும் முள்ளின் மீது வாழ்க்கை தான். போதும் போதும் என்னும் அளவிற்கு மனதை இரணமாக்கி விட்டது அவள் கொண்ட காதல் வாழ்க்கை. இன்னும் என்னவெல்லாம் பெண் மனம் தாங்க வேண்டுமோ! உள்ளம் கொதிக்க, நீண்ட பெருமூச்சு விட்டவள், கண்களை மூடி திறந்து தன்னை நிலை படுத்திக் கொண்டே வக்கீல் காட்டிய இடங்களில் கையெழுத்து போட்டுக் கொடுத்தாள்.
அத்தோடு விட்டானா அவன், பேண்ட் பாக்கெட்டில் இருந்து தாலி சங்கிலி ஒன்றை எடுத்தவன் வக்கீலிடம் கொடுத்து "இதையும் போட சொல்லு" என்று சொல்ல,
இப்பவோ அப்பாவோ என்று வேலை நிறுத்தம் செய்ய காத்திருந்த இதயம், வெடித்தே விட்டது.
என்ன தான் நினைத்துக் கொண்டு இருக்கிறான்? கல்யாணம், தாலி எல்லாம் விளையாட்டாக போய் விட்டதா அவனுக்கு.
எவ்வளவு மிரட்டினாலும் இதை என்னால் செய்ய முடியாது என்று அவள் கட்டுப் படுத்த முயன்றும் கண்ணீர் ஊற்றெடுக்க,
பாலாவின் இறுதி கிரியை போது அவள் கழுத்தில் இருந்து தாலியை அறுத்த சம்பிராதயம் வேறு அவள் கண் முன் தோன்றி மறைந்து அவளை நிலை குலைய செய்தது.
இவனிடம் பேசி புரிய வைக்க முடியாது என்று புரிந்துக் கொண்ட ராதிகா,
தொண்டையை அடைக்கும் விம்மலுடன் வக்கீலிடம் திரும்பி, "எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு. என் புருஷன் இப்போ உயிரோட இல்ல… என்னால எப்படி தாலி போட்டுக்க முடியும்? உங்களை கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கிறேன் இதை மட்டும் பண்ண சொல்லாதீங்க" என்றவளை பார்க்க அவருக்கே பாவமாக தான் இருந்தது.
ஆனால் பாவம் காட்ட வேண்டியவன் மனமோ பாறையாக இறுகி அல்லவா இருந்தது.
"சும்மா நெஞ்ச நக்குற மாதிரி ஃபீலிங்க புழிஞ்சு ஊத்திட்டு இருந்தேன் வை நான் மனுஷனாவே இருக்க மாட்டேன். ஷூட்டிங்ல எத்தனை பொண்ணுங்க தாலி போட்டு நடிக்கிறாங்க. அவங்க எல்லாம் நல்ல பொண்ணுங்க இல்லையா? இல்ல அவங்களுக்கெல்லாம் ஃபீலிங் இருக்காதா? என்னை கோப படுத்தாத ராதிகா நீயே போட்டுக்க. பிரஸ் மீட் முடிய வரை" என்று கோபத்தை கட்டுப்படுத்தி அவன் பேசியதே பெரிய விசயம்.
திருமணம் ஆகாத பெண்கள், கணவனை இழந்த பெண்கள் கூட நடிப்புக்காக தாலி போட்டு கொள்கிறார்கள் தான். ஆனால் அவள் ஒன்றும் நடிகை அல்லவே, அவன் எழுதிய ஸ்கிரிப்ட்டுக்கு ஏற்ப நடிக்க…
மீடியாகாரர்களை விட இவன் தொல்லை பெரும் தொல்லையாக இருந்தது. இவனுக்கு அவர்களே தேவலாம் போல! என்று தான் சலிப்பாக எண்ணினாள்
"சார் நான் பேசுறேன். நீங்க ஒரு இரண்டு நிமிஷம் வெளிய இருங்க" என்ற வக்கீல் சொல்லுக்கு இணங்க, அவனும் வேணுவோடு அவளுக்கு நேராக வாசல் தாண்டி வெளியே வந்து நின்றான்.
பயங்கரமாக வக்கீல் அவளை மூளை சலவை செய்து தாலியை அவளாகவே போட்டு கொள்ள போராட, பெண்ணவள் மனமோ இந்த செயலுக்கு தலை சாய்க்க கூடாது என்று திடமாக தான் இருந்தது.
அவர் கெஞ்சுவதும், அவள் மிஞ்சுவதுமாக இருக்க, வாசலில் நின்று அவர்களை பார்த்துக் கொண்டிருந்த அருணனுக்கோ அதற்கு மேல் பொறுமை இல்லை.
“இன்னும் எவ்வளவு நேரம் தான் அவகிட்ட கெஞ்சிட்டு இருப்ப?" என்று கேட்டுக் கொண்டே நேராக உள்ளே வந்தவன், வக்கீல் கையில் இருந்த தாலியை பறித்து அவள் கழுத்து வழியே போட்டு விட்டிருந்தான்.
'என்ன? தாலியை போட்டு விட்டானா?'
அவள் மட்டுமல்ல ஆடவர்கள் இருவரும் கூட ஒரு நொடி அதிர்ந்து செயலற்று தான் அவர்களை பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் யாரையும் கண்டுக் கொள்ளாதவன், அதிர்ச்சியில் கண் விழி பிதுங்கி, கண்ணீர் துளிகள் உருண்டோட தயாராக நின்றிருந்தவள் கையை பிடித்து இழுத்துக் கொண்டு வெளியேற, அவன் இழுத்த விசைக்கு அவள் கால்கள் உடன்பட்டாலும், மனமோ எப்போதோ மறித்து தான் போனது.
"உங்க ரெண்டு பேரையும் தனியா கூப்பிடனுமா?" என்று உள்ளே அதிர்ந்து நின்று அருணனையே இமைக் கொட்டாது பார்த்துக் கொண்டிருந்த ஆடவர்கள் இருவரையும் பார்த்து கேட்க,
"வந்துட்டோம் சார்" என்று ஓடி வந்து வேணு காரை ஸ்டார்ட் செய்ய, வக்கீல் அவனருகே ஏறிக் கொண்டார்.
ராதிகாவை பிடித்து பின்னிருகையில் தள்ளியவன் தானும் அவள் அருகே ஏறிக் கொண்டான்.
நடக்கும் யாவும் சிந்தையில் பதிந்தாலும், மூளை அதை ஏற்று செயல்பட நேரம் எடுத்தது ராதிகாவுக்கு.
என்ன செய்து விடுவான்? என்று மிதப்பில் இருந்தவளுக்கு அவன் செயல் பேரிடி தான். இதயம் துடிக்கிறதா? என்பதே சந்தேகம் தான்.
அவள் உணர்வின்றி அதிர்ந்து இருக்க, அது அருணனுக்கு வசதியாகி போனது. இல்லையேல் போகும் வரை அவளுடன் மல்லுக் கட்ட வேண்டி வருமே.
அவர்கள் கார் அவன் ஏற்பாடு செய்திருந்த பிரஸ் மீட் நடக்கும் அவன் அலுவலக வாசலில் நிற்க, ராதிகா கையை பற்றிய படியே அவளுடன் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு சென்றான்.
அவர்கள் இருவரையும் ஒன்றாக பார்த்த பத்திரிக்கையாளர் கூட்டமோ, சிறு சல சலப்பு அடங்கி,
"இப்போ என்ன சொல்ல போறீங்க சார். காலைல நாங்க பார்த்த காட்சி எதுவும் உண்மை இல்ல, எல்லாரும் ஒரே கனவுல இருந்ததா சொல்ல போறீங்களா?" என்று ஒருவன் நக்கலாக கேட்க,
இடது பக்கமாக இதழை சுழித்து அதே கேலி புன்னகையுடன் அவர்கள் முன்னால் அமர்ந்தவன், "அது எதுவும் பொய்னு நான் சொல்லவே இல்லையே" என்று கூலாக சொல்ல,
"சமுதாயத்துல முக்கியமான இடத்தில இருக்க நீங்க இப்படி கலாச்சார சீரழிவு வேலையை பண்ணலாமா? சும்மாவே மக்கள் மத்தியில மீடியானாலே பொண்ணுங்களை அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண வைக்கிறாங்கனு டாக் இருக்கு. உங்களை போல ஆட்களால அதெல்லாம் 100% உண்மைனு முத்திரை குத்திடுவாங்க போல" என்று மற்றொருவன் வயிதெரிச்சலில் குத்த,
தலையை சரித்து அவனை பார்த்த அருணனோ, "அட்ஜஸ்ட்மென்ட்" என்று இதழ் வளைத்தவன், "நான் யாரையும் அட்ஜஸ்ட்மென்ட் பண்ண வச்சது இல்ல" என்றான்.
"சுத்த பொய்… இப்படி முழு பூசணிக்காயை சோத்துல மறைக்க பார்க்கீங்களே! இன்னைக்கு காலைல அத்தனை பேரும் பார்த்தோமே! அது என்ன?"
"அது சார் சேலையை கழட்டி அவர் அசிஸ்டன்ட் கூட மீட்டிங்ல இருந்து இருப்பார் டா” என்று நக்கலாக கூறி சிரிக்க,
அருணனுக்கோ கழுத்து நரம்புகள் புடைக்க கோபம் வந்தது. பெண் என்றும் பாராது எவ்வளவு கீழ் தரமான பேச்சுகள்? தனக்கே சுர்ரென்று கோபம் வரும் போது அவளுக்கு? என்று திரும்பி ராதிகாவை பார்க்க, அவளோ கண்கள் கலங்க தலை கவிழ்ந்து தான் அமர்ந்திருந்தாள்.
'சவுண்ட் எல்லாம் என்கிட்ட தானா?' என்று மனதில் அவளை திட்டியவன், கூர் விழிகளுடன் பத்திரிக்கையாளர்கள் புறம் திரும்பி,
"என் பொண்டாட்டி கூட நான் எப்படி மீட்டிங்ல இருந்தா உங்களுக்கு என்ன?" என்று கேட்க,
சற்று தடுமாறிய கூட்டமோ, "என்ன சார்? கையும் களவுமா சிக்கினதும் பொண்டாட்டினு கதை விடுறீங்களா?"
"அந்த அவசியம் எனக்கு இல்ல" என்ற அருணனோ வக்கீலை பார்க்க,
அவரோ சற்று முன் ராதிகா கையெழுத்து போட்ட பத்திரத்தை காட்டி, "ரெண்டு பேருக்கும் மூனு மாசம் முன்னாடியே கல்யாணம் ஆகிடிச்சு. லீகலா ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டி" என்று சொல்லி ஆதாரங்கள் அனைத்தும் காட்டா,
மாபெரும் அதிர்ச்சி தான் செய்தியாளர்களுக்கு.
"நானும் என் வைப் ராதிகாவும், வொர்க் டைம் முடிய, என்னோட ஆபீஸ்ல, என்னோட பெர்சனல் ரூம்ல தனியா இருந்த போது, அத்து மீறி உள்ள நுழைந்து, உங்களோட சேனல் டிஆர்பிக்காக எங்களோட பிரைவேட் போட்டோஸ், எங்க அனுமதி இல்லாம எடுத்து லீக் பண்ண குற்றத்துக்காக உங்க எல்லார் மேலயும், உங்க டிவி சேனல் மேலயும் மான நஷ்ட வழக்கு போட போறேன்" என்று பேரிடியை அனைவர் தலையிலும் இறக்க,
ஈ ஆடவில்லை அத்தனை பேர் முகத்திலும்.
மூன்று முடிச்சிடவில்லை…
முழுதாக அவளை தன் மனைவி என்று உலகுக்கு பறை சாற்றினான்.
முடிந்து போன வாழ்க்கை என்று முற்று புள்ளி வைத்து அவள் முடித்து விட்ட காவியத்துக்கு, மேலும் சில புள்ளிகள் வைத்து தொடர்ந்தான் அவள் கவலைகளின் அசுரன்…