தளிர் 10

 

Sunitha Bharathi
(@sunitha-bharathi)
Member Moderator
Joined: 4 months ago
Messages: 26
Thread starter  

தளிர் 10

இனி உறக்கமெல்லம் காணா தூரம் என்று அறியா ராதிகாவோ மருந்தின் தாக்கத்தில் ஆழ்ந்த நித்திரையில் இருந்தவள், மெல்ல சுயத்திற்கு திரும்ப, உடல் முழுவதும் இரண்டு மூன்று யானைகள் ஏறி உழுதது போன்ற வலி.

 

உடலை நெளிக்க முயல, முடிந்தால் தானே! ஒரு இஞ்ச் கூட  அசைக்க முடியவில்லை. பிள்ளைகள் நினைவில் "தர்ஷு அம்மாவ விடு" என்று தூக்க கலக்கத்தில் சொல்லிக் கொண்டே, எப்போதும் மேலே படுக்கும் மகனை கீழே கிடத்துவது போல எண்ணி, அவனை தூக்க முயல, ஒரே ஒரு கரம் தான் அவளை வளைத்து பிடித்திருந்தது. அதுவும் அவள் விலக்க முயன்றதில் "ப்ச்ச்…" என்று சலிப்பு குரலில் மேலும் இறுக்க, 

தன் பிள்ளை இல்லை என்பதை அவள் மூளை கிரகித்த நொடி சட்டென்று கண்களை திறக்க, வெண்ணிற மார்பில் தான் அவள் இதழ்கள் தாராளமாக உரசிக் கொண்டிருந்தது.

அதிர்ந்து போனவள், அவன் பிடியில் இருந்து விலக முயன்று, அவன் மார்பில் கைவைத்து தள்ளிய படியே தலையை உயர்த்தி பார்க்க,

"என்னடி?" என்று எரிச்சலாக கேட்டவனும் அப்போது தான் கண்களை திறந்து புழுவாக நெளிந்து கொண்டிருந்தவளை குனிந்து பார்த்தான்.

' அய்யயோ! நான் எப்படி இங்க?' என்ற கேள்வி மண்டைக்குள் ஓட, "விடுங்க சார்" என்று கடுமையான குரலில் சொன்னவளை அவனும் சட்டென்று விட்டிருக்க,

 

அடுத்த நொடி பொத்தென்று தரையில் தான் கிடந்தாள் ராதிகா.

 

இருவருக்கும் ஒற்றை நீள் சோபா எப்படி பத்தும். மருந்தின் தாக்கத்தில் அத்தனை நேரம் அவளை தன்னோடு அணைத்து பிடித்திருந்தவன், சுயம் அடைந்ததும் உதறி தள்ளியிருந்தான்.

 

"அம்மாஆஆ" என்று அலறிக் கொண்டே அவள் எழவும், "நீ எப்படி இங்க வந்த?" என்று கோபமாக கேட்டுக் கொண்டே அருணன் அவளை நெருங்கிய சமயம் கதவை திறந்து கொண்டு, "பளிச்…. பளிச்…" என்று மின்னல் ஒளியை வீசிய படி ஒரு கூட்டமே உள்ளே நுழைந்திருந்தது.

 

அனுமதியின்றி தன்னறையில் நுழைந்து இருவரையும் கண்டமேனிக்கு ஃபோட்டோ எடுத்து தள்ளியவர்களை தீயாய் முறைத்தவன், 

"யார் டா நீங்கலாம்? ஸ்டாப் இட்… வெளிய போங்க" என்று எரிச்சலாகி  கேமராவை பிடுங்க முயன்றான் அருணன்.

 

"பிரஸ் சார்"

 

"மீடியா சார்…" என்று பல குரல்கள் பதிலளித்தது.

 

"பிரஸ் மீடியானா எங்க வேணா நுழைஞ்சுடுவீங்களா? வெளிய போ எல்லாம்" என்று கடுமையாக திட்டிக் கொண்டே முன்னால் வந்து போட்டோ எடுக்க முயன்றவன் கேமராவை பிடுங்கி ஒரே ஏறி, 

 

"அய்யோ என் கேமரா!" என்று அவன் பதறி பிடிக்க போகும் முன், சுவரில் முட்டி மோதி அந்த கேமரா தன் உயிரை விட்டிருந்தது.

 

"என்ன சார் உங்க கள்ள தொடர்பு அம்பலம் ஆகிடுச்சுனு கோபம் வருதோ? ஊருக்கு உத்தமர் பண்ற வேலை இன்னும் கொஞ்ச நேரத்துல எல்லாருக்கும் தெரிய போகுது."

 

என்று கேமராவை பறி கொடுத்தவன், ஓரமாக கிழிந்து கிடந்த ராதிகா சேலையை எள்ளலாக பார்த்துக் கொண்டே இன்னொருவனுக்கு கண் காட்டி அதை படம் பிடிக்க சொன்னவன், மூச்சை பிடித்து கத்திக் கொண்டிருக்க, அவன் ஒற்றை வார்த்தையில் இம்மை மறந்து சிலையாகியிருந்தாள் ராதிகா.

 

'என்ன உலருகிறான் இவன்? கள்ள தொடர்பா?' அந்த வார்த்தைகளை ஏற்கவே உடல் கூசி போனது. 

 

நடப்பவை எதுவும் விளங்காது அதிர்ந்து நின்றவளை ஒருவன் போட்டோ எடுக்க, அப்போது தான் அவள் நின்றிருக்கும் கோலத்தை பார்த்தான் அருணன். 

 

அவனுடைய ஒயிட் ஷர்ட் மற்றும் இன்ஸ்கர்ட் அணிந்து நின்றிருந்தாள். கருமேக கூந்தலோ கலைந்து விரிந்து கிடக்க, தோகையில்லா பெண் மயிலின் உணர்ச்சி பிழம்பின் சாட்சிகளாக நக கீறல்கள் அவன் தேகத்தில்.

எதுவும் உணரா நிலையில் விழி சுருக்கி அனைவரையும் பார்த்துக் கொண்டு நின்றிருந்தவள் கோபுர அழகு சிலர் கண்களுக்கு விருந்தாக, அங்கிருந்த ஆண் நிருபர்களின் பார்வையோ அவள் மீது தான் வஞ்சகமாகவும், ஏளனமாகவும் பதிந்தது. 

 

ஆடவர் பார்வை உணர்ந்தவன், அவள் முன்னே சென்று அவளை மறைத்த படி நிற்க, அவள் இருந்த பதட்டத்தில் அவன் வெற்று மேனியோ இன்னும் அவளுக்கு மூச்சடைக்க வைத்தது.

 

அவளை காப்பாற்றுவதாக எண்ணி, என்னை பார் என் ஆர்ம்சை பார் என்று இவன் பாடி பில்டர் போல் அவள் முன்னே நின்று தன் உடற்கட்டுகளை இலவச போட்டோ ஷூட் நடத்த, விடுவார்களா கிசு கிசு பார்டிக்கள், சிக்கியது சிங்கம் என்று அந்த நிலையிலே இருவரையும் இணைத்து பல படங்கள் எடுத்துக் கொண்டனர், விவரமாக தள்ளியே நின்று.

 

"ஸ்டாப் இட்… இப்போ ஸ்டாப் பண்ணல, மூஞ்சி மோகரையெல்லாம் பேத்துறுவேன்" என்று எதிரே நின்றவன் மீது கை ஓங்க, அதையும் ஹாட் நியூஸாக மாற்றி இருந்தார்கள் பத்திரிக்கைகாரர்கள்.

 

"எவ்வளவு நாள் இந்த தொடர்பு? உங்க ஆசை நாயகி இவங்க மட்டும் தானா? இல்ல பல பெண்கள் இருக்காங்களா?" என்று ஒருவர் வாய் இருக்கு என்று இஷ்டத்துக்கு பேசிக்கொண்டே போக,

 

"செக்கியுரிட்டி" என்று அழைத்தப்படி அந்த கூட்டத்தை வெளியே தள்ள முயன்றவன், தன் பின்னால் நின்றிருந்த ராதிகா கரத்தை பற்றிய படி அந்த கூட்டத்தை விலக்கி கொண்டு வெளியேற, அவன் காவலாளிகளும் ஓடி வந்து கேள்விக் கேட்டுக் கொண்டே பின்னால் ஓடி வந்த கூட்டத்தை தடுத்து நிறுத்தினர்.

அருணன், ராதிகா கையை பிடித்து தர தரவென்று இழுத்துக் கொண்டே பார்க்கிங்கில் தன் கார் அருகே வந்து சேர, ஏற்கனவே இருவரையும் இணைத்து தவறாக சித்தரிக்கும் கூட்டம் நடுவே பெண்ணவள் கைப்பிடித்து ஆடவன் இழுத்து வந்தது அப்போது தான் அவள் சிந்தையில் பதிந்தது.

 

அவன் பற்றியிருந்த கரத்தை "விடுங்க சார்…" என்று வெடுக்கென்று உதறியவள் தீயாய் அவனை முறைத்து, "தொடுற வேலையெல்லாம் வச்சிக்காதீங்க" என்று அவன் கை பிடித்ததுக்கே அவள் காளி அவதாரம் எடுக்க,

 

இடையில் கையை குற்றியபடி சலிப்பாக தலையை திருப்பிய அருணன் "ஷர்ட்டை கழட்டி கொடுத்துட்டு போ" என்றதும் தான் தன்னிலை புரிந்தது தாரகைக்கு.

 

உடலோடு அவன் ஷர்ட்டை ஒட்டி பிடித்தவள் தலை குனிந்து நிற்க, அவளை பிடித்து காரில் தள்ளியவன், அடுத்த நொடி வேகமாக காரை செலுத்தினான்.

ஷர்ட்யின்றி வெற்று தேகத்தொடு உயர் வேகத்தில் காரை ஓட்டி வந்த அருணன் முகமோ பாறை போல் இறுகி இருக்க, அவனருகே அவன் ஷர்ட்டை அணிந்து இருந்த ராதிகாவோ கண்ணீரில் மூழ்கி தான் போனாள்.

சற்றும் எதிர் பாரா நிகழ்வில் இருவரும் உருகுலைந்து தான் போயினர். 

காலையில் தான் இருந்த நிலையை எண்ணி மனமே அவளை காரி உமிழ்ந்தது. 

தான் மொத்தமும் அவன் உரிமை என்பது போல அல்லவா கட்டி பிணைந்து கிடந்தாள். நினைக்கும் போதே அவன் தீண்டிய தேகம் தீயில் எரியும் உணர்வு.

வேறொரு ஆடவன் அருகே அமர்ந்தாள் கூட விலகி ஓடுபவள், இப்படி கட்டிக் கொண்டு… நினைவில் இருப்பது அவ்வளவு தான். அவள் அறியா விசயங்கள் இதை விட ஏராளம் அல்லவா?

 

எவ்வளவு முயன்றும் முந்தைய நாள் சம்பவம் எதுவும் நினைவுக்கு வரவில்லை. அறைகுறை நினைவாக, அருணன் போ டி என்று பிடித்து தள்ளியதும், இழுத்து அணைத்ததும் மட்டும் தான் நினைவு வருகிறது. 

 

அதற்கு மேல் படம் போட்டு விளக்க வேண்டுமா என்ன? மூன்று குழந்தைகள் பெற்றவள் மனமோ கோடிட்ட இடங்களை தானே நிரப்பிக் கொண்ட நொடி 'இதற்கு மேல் நான் ஏன் உயிருடன் இருக்க வேண்டும்?' என்று தான் யோசித்தாள்.

இன்னும் எத்தனை துயரங்கள் நிகழ்த்தி தன்னை வேதனையில் ஆழ்த்த போகிறார் அந்த கடவுள். அவரை திட்ட கூட உடலிலும், மனதிலும் தெம்பு இல்லை.

மனதறிந்து செய்யவில்லை என்றாலும், குற்றவாளிகள் இருவரும் தானே. ஏன்? எப்படி? என்று ஆயிரம் கேள்விகள் மனதை அரித்தாலும், அதற்கு விடை காண கூட விளைய முடியா அளவிற்கு பிரச்சனைகள் சூழ்ந்து கொள்ள, பாவை அவளும் என்ன தான் செய்வாள்?

உள்ளம் மேலும் கண்ணீர் வடிக்க, ஏற்கனவே கோபத்தில் இருந்த அருணனிற்கோ அவள் கண்ணீர் எரிச்சலை தான் அதிகரித்தது.

"ஸ்டாப் இட்" என்று பல்லை கடித்து கர்ஜித்தான். பெண் மனம் என்ன ஆன் ஆப் பட்டனா? சட்டென்று உணர்வுகளை அணைத்து விட, அவளும் தானே அவன் முன்பு உடைந்து விட கூடாது என்று எவ்வளவோ முயல்கிறாள். 

 

கட்டுப்பாட்டை மீறி கன்னம் நனைக்கும் கண்ணீரை நிறுத்த அவளுக்கும் தெரியவில்லை தான்.

அருகே அவள் அழுது கொண்டிருக்க, நடு ரோட்டில் காரை நிறுத்தியவன், "அவுட்" என்று கத்த, திக்கென்றானது பெண்ணவளுக்கு.

சிறிதும் மனசாட்சி இல்லாமல் அவள் நிலை அறிந்தும் நடு வீதியில் 'நீ எப்படியும் போ… அது உன் பாடு' என்பது போல் இறங்க சொல்ல,

தன்னை ஒருமுறை குனிந்து பார்த்தாள், இன்ஸ்கர்ட், அவன் சட்டையுடன் இருந்தவள், இப்படியே எப்படி வீதியில் நடக்க முடியும். இரக்கமில்லாமல் அவன் இறங்க சொல்ல, அவனிடம் சண்டையிட கூட திராணி இல்லையே.

"பிளீஸ் சார்… இப்படியே எப்படி போக முடியும்?" என்று கண்ணீரோடு கைகூப்பி கேட்டவளை, எரிச்சலாக பார்த்தவன் என்ன நினைத்தானோ முன்பை விட வேகமாகவே அவள் வீட்டின் முன்பு இறக்கி விட்டு, அவள் இறங்கிய நொடி காற்றை கிழித்து கொண்டு பறந்து இருந்தான்.

அவள் வெறுக்கும் அந்த இரக்கமல்லாதவன் தானே பத்திரிக்கையாளர்களிடம் இருந்து அவளை காப்பாற்றி பத்திரமாக கொண்டு சேர்த்திருக்கிறான் என்பதை யோசிக்கும் அளவிற்கு பெண் மனம் தெளிவாக இல்லையே. 

 

அடுத்து தான் எதிர் கொள்ள போகும் பிரச்சனைகளை எண்ணி உடல் தானாகவே நடுங்க ஆரம்பித்தது. எப்படியும் அருணன் காரில் இறக்கி விட்டதிற்கே ஆயிரம் பஞ்சாயத்து இருக்கும், இதில் இந்த கோலத்தில் எத்தனை பேர் பாரத்தார்களோ,

பயந்து கொண்டே வீட்டிற்குள் நுழைந்த ராதிகாவை "நைட்டு ஏன் மா வீட்டுக்கு வரல…" என்று கேட்ட படி பாய்ந்து வந்து பிள்ளைகள் கட்டிக் கொள்ள, அதே கேள்வி தான் சகுந்தLலாவும் கேட்டார்.

யாரிடம்? எப்படி சொல்வாள்? அவள் அறியாமல் நடந்தது என்றா? உலகம் தான் அதை ஏற்குமா? போதும் உத்தமி வேசம் என்று தானே எள்ளி நகையாடும். 

வார்த்தைகள் வரவில்லை. நெஞ்சு விம்மி அழுகை தான் வீறிட்டு வந்தது. வெடித்து அழ தயாராக இருக்கும் உணர்வை உதட்டை அழுந்த கடித்து, அடக்கி பார்த்தாள். முடியும் விசயமா அது.

 

காலை கட்டிக் கொண்டு நின்ற பிள்ளைகளை விலக்கி விட்டு, குளியலறை புகுந்து கதவை அடைத்து கொண்டு, ஆ ஆ ஆ என்று அத்தனை நேரம் அவள் அடக்கிய உணர்வுகள் எல்லாம்  வெடித்து சிதற, அவள் அழும் சத்தத்தில் சகுந்தலாவோ சற்று பதறி தான் போனார்.

 

"ராதிகா என்னாச்சு? கதவை திற முதல்ல" என்று வெளியே நின்று கதவை தட்ட, பதில் சொல்லும் நிலையில் தான் அவள் இல்லையே.

 

இந்த நிமிடம் மரணம் தன்னை தழுவினாள், அது தான் வரம் என்று எண்ணியவள், அந்த நொடி தன் மகவுகளை மறந்து தான் போனாள்.

 

இங்கே மேற்சட்டை இன்றி வீட்டிற்குள் நுழைந்த அருணனை எதிர் கொண்ட பார்வதி, "என்னப்பா கோலம் இது?" என்று கேட்க, எப்போதும் அவருக்கு பதில் அளிக்கும் எண்ணமெல்லாம் அவனுக்கு கிடையாது தான். இப்போதும் பதில் அளிக்காமல், வேக நடையுடன் மாடி ஏற இருந்தவனை சுதர்சனாவின் "ஐ! அப்பா டிவி ல வர்றாங்க" என்ற குதூகல குரல் நிறுத்தியது.

சம்மந்தபட்ட இருவரும் கூறா பதில்களை, மின்னல் வேகத்தில் ஒளிபரப்பி கொண்டிருந்தனர் பத்திரிக்கையாளர்கள்.

தன் குழந்தை காணும் காட்சியா இது? முழு ஆண்மகன் அவன் திடமோ ஆட்டம் கண்டது, வீட்டார்கள் மட்டுமின்றி வேலையாட்கள் கூட அந்த செய்தியை பார்க்க, குறுக்கு விசாரணையே இன்றி அவன் நிற்கும் கோலம் தான் அனைவரையும் நம்ப வைக்குமே.

 

மாடி படிகளில் நின்றிருந்தவன் மீது அனைவர் பார்வையும் அதிர்ச்சியாக பதிய, மேற்கொண்டு அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்க தயாராக இல்லாதவன், வேகமாக தன் அறைக்கு சென்றிருந்தான்.

ஆண் ஒழுக்கத்தை சந்தை பொருளாக்கி லாபம் ஈட்ட நினைக்கும் உலகம், பெண்ணின் உணர்வுகளை எப்படி மதிக்கும். கற்பழிக்கப்பட்ட பெண் என்றாலும், கழிவிரக்கம் தாண்டி ஆடை விலகிய பாகங்களை ஆராயும் வஞ்சகர்கள் நடுவே தன்னை எப்படி நிரூபிப்பாள் ராதையவள்.


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top