தளிர் : 8
பாஸ்கரிடம் பேசி விட்டு கோசலை அடுத்து பார்க்க வந்தது என்னவோ ராதிகாவை தான். தீயதை செய்ய ஆள் செட் செய்தது போல், நல்லதை தெரிந்துக் கொள்ளவும் ஒரு ஆளை தயார் செய்து தான் வைத்திருந்தார்.
கோக்கு மாக்கான வேலைகளை பாஸ்கரிடம் தள்ளி விடுபவர், ஏதாவது தெளிவு வேண்டும் என்றால் வந்து நிற்பது ராதிகாவிடம் தான்.
அவரை போலவே கணவனை இழந்த பெண் என்பதே அவள் மீது கழிவிரக்கத்தை ஏற்படுத்தியது. அதனால் அவளை பிடிக்கும். ஆனால் தன் மகள் என்று வரும் போது இந்த இரக்கமெல்லாம் எதிர் பார்க்க முடியாதே!
ராதிகாவுக்கு சதா அருணனை பற்றி கேட்டு நச்சரிக்கும் அவர் மீது எரிச்சல் தான் மிஞ்சியது. ஆனால் வெளிக்காட்ட முடியா சூழ்நிலை.
இப்போதும் ரசிஹா அருணனிற்கு ரூட் விடுவது அவர் காதிற்கு சென்றிருக்க, மூக்கு வியர்த்து ஓடி வந்து விட்டார்.
அவரை பார்த்த ராதிகாவோ, 'ஐயோ இந்த அம்மா வா? இது எப்ப வந்துச்சு?' என்று அலுத்துக் கொண்டபடி "வாங்க மேடம். எப்போ வந்தீங்க?" என்று விசாரிக்க, அவரோ "நான் வந்ததெல்லாம் இருக்கட்டும், இப்போ புதுசா ஒரு பொண்ணு நடிக்க வந்திருக்காமே!" என்று கேட்க,
"விளம்பர கம்பெனினா ஒரு பொண்ணு இல்ல நிறைய பொண்ணுங்க நடிக்க வருவாங்க தானே" என்று எப்போதும் போல் வாயை விட,
"ஹ்ம்ம்…. வர வர ரொம்ப வாய் நீளுது உனக்கு" என்று முறைத்தவர், "புது பொண்ணுக்கு அருண் மேல கண்ணுனு கேள்வி பட்டேன்" என்று கேட்க,
"அதெல்லாம் பெரிசா எதுவும் இல்ல மேடம். சின்ன பொண்ணுல, ஒரு ஆர்வ கோளாறுல கொஞ்சம் சிலிப் ஆகிடுச்சு. அதெல்லாம் நான் தெளிவா சொல்லி புரிய வச்சிட்டேன், இனி சார் பக்கம் வராது". இந்தம்மா அந்த பொண்ண ஏதும் செய்திட கூடாது என்ற நல்லெண்ணத்தில் தான் சமாளித்து வைத்தாள்.
அவளையே குறு குறுவென இரு நொடி பார்த்த கோசலையோ "உன்னை நம்பி தான் போறேன்" என்றவர் மகளை தேட, அவளோ இருக்கும் இடம் தெரியாமல் ஒரு மூலையில் அமர்ந்து, போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தாள்.
"சுவாதி" என்று சத்தமாக அழைத்துப் பார்த்தார். அவள் கவனம் இங்கே இருந்தாள் தானே அவர் அழைப்பு காதில் கேட்கும்.
"கூப்பிட்டுட்டே இருக்கேன். காது கேட்குதா பாரு. இவளை வச்சி ஒன்னும் பண்ண முடியாது" என்று புலம்பியப்படி, "நீயும் வா" என்று ராதிகாவையும் அழைத்துக் கொண்டே சுவாதி அருகே சென்றார்.
"ஏய் சுவாதி" என்று எரிந்து விழுந்த படி அவள் கையில் இருந்த போனை பிடுங்க, "அம்மா… அம்மா…” என்று போனை தான் வாங்க முயன்றாள் அவர் மகள் தடை பட்ட விளையாட்டை தொடர.
"அம்மா லெவல் ஃபினிஷ்ட் ஆக போகுது. கொஞ்சம் குடுங்க" என்ற மகளை வெட்டவா குத்தவா என்னும் ரேஞ்சில் பார்த்த கோசலை,
"அங்க உன் வாழ்கையே பினிஷ் ஆகிடும் போல, நீ இப்படி விளையாட்டு தனமாவே இரு. அங்க ஒருத்தி உன் மாமனை கொத்திட்டு போய்டுவா போல" என்று கடுகாக பொரிய,
அவர் கவலை எங்கே அவளுக்கு புரிந்தது, போன் கிடைக்குமா? கிடைக்காதா? அடுத்த லெவல் போவோமா? இல்லையா? என்ற எண்ணம் மட்டும் தான் அவளுக்கு.
"ராதிகா… சுவாதி ரெண்டு நாள் இங்க தான் இன்டெர்ன்சிப்க்கு வருவா. கொஞ்சம் பார்த்துக்க" என்று மகளை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை அவளிடம் கொடுத்தவர்,
ராதிகாவை அனுப்பி விட்டு மகளுக்கு தன் திட்டத்தை மேலோட்டமாக சொல்ல தனியே அழைத்து சென்றார்.
இங்கே பாஸ்கர், பொடியை எப்படி? எதில்? கலக்கி கொடுப்பது என்று தீவிர யோசனையில் இருந்தான். இவன் சென்று கொடுத்தால் ராதிகா அவன் செவிலிலே ஒன்று போட்டு அனுப்புவாள்.
மாலை நேர காபியில் கலந்து ஆபீஸ் பாயிடம் கொடுத்து அனுப்பலாம். ஆனால் 'ஒருவேளை ரெண்டு பேரும் குடிக்கலனா?' என்று அந்த திட்டத்தை கை விட்டவன், வேறு திட்டம் ஒன்றை தயார் செய்து, உடனே அதை நிறைவேற்ற ஓடி விட்டான்.
அருணனுக்கு வசிய பொடியை கொடுப்பதை விட, ராதிகாவுக்கு கொடுத்து தன் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளவே பேரவா அவனுக்கு.
மாலை ஆறு மணிக்கு அனைவரும் வேலை முடிந்து ஒவ்வொருவராக கிளம்ப, 'அடுத்த விளம்பரத்திற்கு டிசைன் வேலை பாக்கி இருக்கு' என்று அலுவலகத்திலே இருந்த பாஸ்கர் கண்ணெல்லாம் ராதிகா மீது தான்.
எப்படியும் அருணன் ஏதாவது ஒரு நேரம் டீ, காபி கேட்டே தீருவான் என்று யோசித்த பாஸ்கரோ, டப்பா நிறைய இருந்த சர்க்கரையை ஃபைல் லீப் ஒன்றில் தட்டி, பொட்டலம் கட்டி தன் பேக்கில் மறைத்து வைத்துக் கொண்டவன், இரண்டு காபிக்கு மட்டும் போதுமான அளவு சக்கரையை டப்பாவில் மீதம் வைத்தவன், அதில் தான் பொடியை கலந்து வைத்தான்.
"கடவுளே எப்படியாவது ரெண்டு பேரையும் இது கலந்த காபியை குடிக்க வச்சிரு" என்று தவறு செய்பவனும் அவரை தான் துணைக்கு அழைத்தால், பாவம் அவரும் என்ன தான் செய்வார்.
எலிக்கு மருந்து வைத்து விட்டு விடியும் வரை காத்திருப்பது போல அவன் காத்திருக்க, அவன் வேண்டுதலை விரைவாகவே நிறைவேற்றி வைத்தார் கடவுள். (இது தான் கெட்டவனுக்கு அள்ளி அள்ளி கொடுப்பது போல)
ராதிகா அவளுக்காகவும், அருணனிற்காகவும் காபி தயாரித்து எடுத்து செல்ல, பாஸ்கர் ஆர்வமாக அவர்களை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
கண்ணாடி அறை, திரை சீலை மூட படாததால் உள்ளே அவர்கள் சம்பாஷைகள் அனைத்தும் வெளியே நின்றிருந்த பாஸ்கருக்கு தெளிவாகவே தெரிந்தது.
கோப்புகளை பார்த்துக் கொண்டே அருணன் குடித்து முடித்திருக்க, ராதிகாவும் குடித்து முடித்து, சில நிமிடத்தில் அருணன் அறையில் இருந்து காபி டிரேயுடன் வெளியே வந்தாள்.
வெற்றி களிப்பில் அவளை பின் தொடர்ந்து வந்த பாஸ்கரோ, "ராதிகா" என்று அழைத்தவன், அவள் நின்றதும், "நீ ரொம்ப அழகு ராது. இந்த அழகெல்லாம் வீணா போறத நினைச்சா எனக்கு தான் மனசு வலிக்குது. உன்ன ஆராதிக்க எனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க மாட்டியா?" என்று தேனொழுக சொல்லிக் கொண்டே அவளை நெருங்கி கன்னத்தை வருட முயல,
அடுத்த நொடி அவன் கன்னத்தை பொத்திய படி அரண்டு தான் அவளை பார்த்தான்.
அவன் கரங்கள் அவள் கன்னத்தை நெருங்க கூட வாய்ப்பு கொடுக்காது, விட்டாள் ஒரு அறை அவன் செவிப்பறை கிழியும் அளவிற்கு. ஆள் அரண்டு போய் விட்டான். (இது தான் கெட்டவனை கடவுள் கை விடுவது போல)
"நீ திருந்தவே மாட்டியா? இன்னொரு முறை இந்த எண்ணத்தில பக்கத்துல வந்த கை இல்ல… உன்கிட்டலாம் என் செருப்பு தான் பேசும்" என்று திட்டி விட்டு வேக நடையுடன் செல்பவள் முதுகை வெறித்தவன்,
"அப்போ இந்த வசிய பொடி எல்லாம் ஏமாத்து வேலையா? ஆஆ ஆ… அம்மாஆ ஆ… பொண்ணா இவ… கடவா பல்லு கடக்கடனு சத்தம் போடுதே. எவனோ அந்த பொம்பளையை நல்லா அவிச்சிட்டான். அது பேச்சு கேட்டு, பல்லு உடைஞ்சது தான் மிச்சம்" என்று ஆடிய பல்லின் வலி தாங்காது வீட்டிற்கு நடையை கட்டி விட்டான் பாஸ்கர்.
அடி வாங்கிக் கொண்டு அமைதியாக சென்று கொண்டிருந்தவன், எதிரே வந்த கோசலை, "என்ன பாஸ்கர் பிளான் சக்ஸசா?" என்று கட்டை விரலை உயர்த்தி கேட்க,
"ஹ்ம்ம்… அடி பொழி" என்று கன்னத்தில் கை வைத்து சொன்னவன், 'நீங்களும் போய் அடி வாங்குங்க… அவளாவது பல்லை தான் பேர்த்தா, அவரு மூஞ்ச பேர்த்து அனுப்பி வைப்பார். போய் சாவுங்க' என்று அடி வாங்கிய கடுப்பில் உள்ளுக்குள் சபித்துக் கொண்டே இந்த சீனில் நான் இல்லை என்று ஓடியே விட்டான்.
"என்ன மா பிளான்?" நம் அறிவு ஜீவி சுவாதி அன்னையிடம் கேட்க,
"விடிய விடிய ராமாயணம் கேட்டு ராமன் சீதைக்கு சித்தப்பன் சொல்லுவா போலவே!" என்று அரற்றி கொண்டே, "அதான் டி நான் சொன்ன வசிய பொடி" என்று மகளுக்கு நினைவு படுத்த,
"ஓ… " என்று ராகம் இசைத்த சுவாதியோ, "அப்போ வா மா கையோட வேலையை முடிச்சிட்டு ரெண்டு பேரும் சேர்ந்தே வீட்டுக்கு போகலாம்" என்று அன்னையை அழைக்க,
அவரோ, பூமி பிளந்து இவளை உள்ளே தள்ளி விட மாட்டோமா என்ற கோபத்தில் தான் அவளை பார்த்துக் கொண்டிருந்தார்.
"தவமிருந்து பெத்தது இப்படி தலகிறுக்காவா வந்து பொறக்கணும்" என்று புலம்பியவர், மகளுக்கு மண்டையில் நாலு குட்டு வைத்து "ஒழுங்கா வேலையை முடிச்சிட்டு வந்து சேரு" என்று சொல்ல,
"என்ன வேலை?" என்று கேட்டாலே பார்க்கலாம், கோசலை ஜீவ சமாதி ஆகிவிடும் நிலைக்கே சென்று விட்டார்.
இவளுக்கு விளக்கம் சொல்லி மாளவில்லை.
அன்னையின் முறைப்பில் முகத்தை தொங்க போட்டு, "மாமா இன்னைக்கு நான் என்ன செய்ய சொன்னாலும் செய்வார் சொன்ன, ஆனா நான் என்ன செய்ய சொல்லணும்னு நீ எனக்கு சொல்லவே இல்லையே" என்ற மகளை முறைத்து முறைத்து அவரே சோர்ந்து போனார்.
"சரி சரி முறைக்காத ம்மா… நானே ஏதாவது யோசிக்கிறேன்" என்று நாடியை தட்டி யோசித்தவள், "அம்மா…" என்று உற்சாக கூவலில், "தாலி வாங்கி அவர் கையில கொடுத்து என் கழுத்துல கட்ட சொல்லவா?" என்று கண்கள் மின்ன கேட்க,
"நாளைக்கே அறுத்து எரிஞ்சிட்டு போய்கிட்டே இருப்பான்" என்ற கோசலையை "அப்போ நான் என்ன தான் பண்ண?" என்று பாவமாக தான் பார்த்தாள் சுவாதி.
"ஒரு அம்மா வா நான் இப்படியெல்லாம் பண்ண கூடாது தான். ஆனா எனக்கு உன் வாழ்க்கை தான் முக்கியம். உலகம் என்னை தப்பா பேசினாலும் பரவா இல்லை. நீ நல்லா இருக்கணும்" என்றவர் மெய் அன்பு அவர் மகளுக்கு மட்டுமே உரித்தானது.
"நல்லதோ, கெட்டதோ இன்னைக்கு நீயும் அருணும் இணைஞ்சிட்டா போதும். அவனால உன் வாழ்க்கை போச்சுனு, அவன் குற்ற உணர்வை தூண்டி அவன் கூட உன்ன சேர்த்து வச்சிடுவேன்" என்று அவர் திட்டத்தை சொல்ல,
"இணையுறது னா?" என்று கேட்ட மகளை பெத்ததிற்கு கொஞ்சம் நேரம் சும்மா இருந்திருக்கலாம் என்று எண்ணும் அளவிற்கு அவர் பொறுமையை சோதித்து கொண்டிருந்தாள் அவர் பெற்ற வைடூரியம்.
"இங்க பாரு இதை விட தெளிவாலாம் அம்மாவாள விளக்க முடியாது. காலேஜ் போறவளுக்கு இது கூட தெரியாதா? இல்லை அம்மாகிட்ட நடிக்கிறியா?" என்று திட்டியபடி, அவள் போனை பிடுங்கி சில பல வீடியோக்களை எடுத்து கொடுத்தவர், "நான் போன பிறகு பாரு டி. நாளைக்கு காலைல நானே உனக்கு போன் பண்ணுவேன். நீ இருக்க இடம் மட்டும் எனக்கு சொன்னா போதும். நான் வந்து கூப்பிடாம அவனை விட்டு வந்த பொண்ணுனு கூட பார்க்காம கழுத்த நெறிச்சு கொண்ணு போட்டுருவேன்" என்றவர் 'கடவுளே இவளுக்கு ஒரு நல்ல வழியை காட்டு' என்று புலம்பிக் கொண்டே சிறிது தூரம் சென்றவர், "ஏய் ஒரு மணி நேரம் கழிச்சு தான் அந்த மருந்து வேலை செய்யும்னு அந்த மந்திரவாதி சொன்னான். அதுக்கு முன்னாடி அவன் கிட்ட போய் வாங்கி கட்டிக்காத" என்று சூட்சமத்தை சொல்லி விட்டே அவர் சென்றார்.
அவர் சென்றதும் தன் கையில் இருந்த போனில் வீடியோவை ஓட விட்ட சுவாதியோ "ச்சீ…" என்று அலறி கையை உதற, கையில் இருந்த போனோ அகல பாதாளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது போல் டாப் டாப்பாக கழண்டு சிதறியது.
"அய்யோ என் போன்!" என்று சுவாதி பதறி துடித்ததெல்லாம் அந்த போனிற்காக மட்டும் தான்.
தரையில் மண்டியிட்டு அமர்ந்து சிதறிய பாகங்களை ஒன்று சேர்த்து ஆன் செய்ய முயன்று கொண்டிருந்தவள் எதிரே அழுத்தமான காலடியுடன் வந்து நின்றான் வேணு.
"என்ன மா? என்னாச்சு" என்று அவன் சிறு பிள்ளையிடம் கேட்பது போல் கேட்க,
"போன் உடைஞ்சு போச்சு அண்ணா" என்று உதட்டை பிதுக்கியவள் கொள்ளை அழகாக தான் அவன் கண்களுக்கு தெரிந்தாள்.
சிறுமி என்று எண்ணி நெருங்கியவளை நொடியில் அவன் மனம் ரசிக்க, அது பிள்ளை அன்பு நிச்சயம் இல்லை.
"சரி குடுங்க. பக்கத்துல தான் சர்வீஸ் சென்டர் இருக்கு, நான் சரி பண்ணி கொண்டு வரேன்" என்று போனை அவளிடம் இருந்து வாங்கி செல்ல,
எதையும் யோசிக்காமல் அவனிடம் போனை கொடுத்தவள், மூளை அதன் பிறகு தான், 'போன் ஆனாகி அன்னை டவுன்லோட் பண்ணி கொடுத்த வீடியோ பிளே ஆனால்? என்னை அல்லவா அவன் தவறாக எண்ணுவான்' என்று பதட்டமாக அவளும் அவன் பின்னே சென்றாள்.
"நீங்க போனை தூக்கிட்டு ஓட்டிட்டா? நானும் உங்க கூட வருவேன்" என்று அவனுடன் வெளியேறியவளை, செல்ல கோபத்துடன் முறைத்து பார்த்தவனுக்கு அவள் அருகாமையில் மேலும் சில நிமிடங்கள் கழிக்க கிடைத்த தருணம் வரமாக தான் இருந்தது.