கோகிலமே 13

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 6 months ago
Messages: 207
Thread starter  

 

 13

 

கனவில் கண்ட காதலில் விதர்விதிர்த்து அரண்டு புரண்டு எழுந்தாள் வர்த்தினி.

தேகமெல்லாம் வியர்வையில் நனைந்திருக்க.. எகிறி குதிக்கும் இதயத்தை தன் கையால் பிடித்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள் வர்த்தினி. இன்னமும் தான் கண்டது கனவு என்று அவளால் சிறிதும் நம்பவே முடியவில்லை. அவ்வளவு உரிமையாக தன்னை நெருங்கி சரசம் செய்யும் தைரியம் அந்த கள்வன்றி யாருக்கு உள்ளது என்று உள்ளமது அவனிடம் சண்டை கொண்டது.

 

இம்முறை.. குளிக்கவா வேண்டாமா என்று பெரும் யோசனையில் அவள் மூழ்க.. கனவு தானே என்று வேண்டாம் வேண்டாம் என்று தனக்குத்தானே சமாதானம் செய்து கொண்டு, "பெருமாளே!! பெருமாளே!! இந்த கனவு பலிக்க கூடாது" என்று அவருக்கு வரிசையாக அவள் நைய்வேத்யத்தை பட்டியலிட்டு முடிக்க.. மணி சரியாக ஐந்து அடித்தது அவளது மொபைலில்..

 

இது பலிக்கிறதுக்கு அடிக்குதா? பலிக்காம இருக்குறதுக்கு அடிக்குதா? ஒன்றும் புரியாமல் மீண்டும் தூக்கத்தை தொடர்ந்தாள் வர்த்தினி.

 

காலையில் குளித்து முடித்து.. ஒற்றை டவலை சுற்றிக் கொண்டு, கண்ணாடி முன் நின்றிருந்தவளுக்கு பெரும் யோசனை.

ஒரு பக்கம் புடவையும்.. மறு பக்கம் சுடிதாரும் வைத்து கொண்டு எதை அணிய? என்று தான் பார்த்து கொண்டிருக்க..

 

அப்போது பின்னிருந்து அவளை அணைத்தாற் போல நின்று அவளது வெற்று தோளில் தாடையை பதித்த வண்ணம் அவளை தான் ரசித்துக் கொண்டிருந்தான் வினய் விஸ்வேஸ்வரன்.

 

"மாமி.. புடவையை விட இந்த காஸ்டியூமில் அசத்தலா இருக்கே அம்சா மாமி" என்று கிறக்கமாக கூறியவனை தள்ளிவிட்டு திரும்பி பார்க்க.. அங்கே யாருமில்லை.

 

"இவனால நான் சீக்கிரம் கிறுக்கு பிடிச்சு சுத்த போறேன்" என்று தலையில் அடித்து கொண்டாள். 'சும்மாவே அவன் ஆடுவான் இப்போது நாம அவன் சொல்லை மீறி புடவையை கட்டிக்கொண்டு சென்றால்.. வேண்டாம்.. வேண்டாம் நாம ஒதுங்கியே இருப்போம்' என்று நினைத்தவள், புடவையை தூக்கி தூர போட்டு சுடிதாரையே அணிந்தாள்.

 

கருநீல டாப்ஸும், பிங்க் நிற பாட்டம் அதே நிற ஷாலை அணிந்தவாறு தயாராகி அவள் செல்ல.. பத்மாவோ தன் கண்ணாடி வழியே அவளை உற்று நோக்கி, "ஏண்டிம்மா பெயருக்கு ஏத்த மாதிரி அம்சமா புடவையை கட்டிண்டு போனவ, இப்போ சுடிக்கு மாறி இருக்க.. என்ன விஷயம்?" என்று விவஸ்தையே இல்லாம அவர் ஆஜர் ஆக..

 

இவங்க வேற என்று நினைத்தவள், "ஒன்னுமில்ல மாமி.. ஜஸ்ட் சேன்ஞ்க்காக தான் இன்னைக்கு மாத்திண்டேன்" என்று கூறி விடைபெற..

 

"என்னவோடிமா.. சேன்ஞ் டிரஸோட மட்டும் இருக்கட்டும். அது தான் நம்மவாளுக்கு சரி" என்று ஒரு இக்கை குத்தியே அனுப்பி வைத்தார். இங்க வந்த பத்து நாட்களில் என்னவோ பல வருடங்கள் இவருடன் வாழ்ந்தது போல சலிப்பு வந்தது வர்த்தினிக்கு.

 

 

வினய் காரை பார்த்து இவள் ஏறி அமர போக, முன் பக்க கதவை அவன் கைகள் காட்ட.. இதுக்கு என்னைக்கு அந்த மாமி கண்ணுல மாட்ட போகிறோமா என்ற யோசனையோடு அமர்ந்தாள் வர்த்தினி.

அமர்ந்தவளை தான் மெச்சுதலாக பார்த்தான் வினய். அதுவும் அவன் சொன்னதற்காக சுடியில் அவள் வந்திருக்க, ஒன்றும் கூறாமல் சன்னமாக விசிலடித்தப்படியே காரை இயக்கி கொண்டிருந்தான். அப்பாடி இன்னைக்கு இதோடு போய்டிச்சு என்று நினைவில் அவளும் அமைதி காத்தாள்.

 

 

காற்று வெளியிடைக் கண்ணம்மா -- நின்றன்

காதலை யெண்ணிக் களிக்கின்றேன்;

 

என்று சிவரஞ்சனி ராகத்தில் பாடிக் கொண்டிருந்தவளை தன் அறையில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் பார்த்து கொண்டிந்தான் வினய். தாடையில் கை ஊன்றி, அமர்ந்திருக்கும் இருக்கையை அரை வட்டம் அடித்தவாரே ரசித்துக் கொண்டிருந்தான், அவளையும் அவள் பாடிய சொற்களையும்..

 

இந்தியா முழுமைக்கும் பொதுவான ராகமாகவும் கருதப்படும் ராகங்களில் சிவரஞ்சனி ஒன்று. அகில இந்திய வானொலியில் அதிகாலையில் நிகழ்ச்சிகள் ஆரம்பமாவதற்கு முன்னர் ஒலிபரப்பாகும் வயலின் வாத்திய இசை சிவரஞ்சனி ராகத்தில் அமைந்ததே.. 

 

 

தலைவியை நினைத்து தலைவன் பாடுவது போல பாடிக் கொண்டிருந்தாள் வர்த்தினி.

ஆழ்மனத்தின் காதல் இன்பமாகவும் அதே வேளை துன்பமாகவும் வெளிப்படுத்தும் வண்ணம் இருந்தது அப்பாடல்.. ஏனோ அந்த பாடல் வினய்யை எதுவோ செய்தது. என்னவென்று புரியாமல் மீண்டும் மீண்டும் தன் இதயத்தினை நாடினான் அந்த பிசினஸ் மேக்ணட்.. 

 

அன்று வினய் விஸ்வேஸ்வரனை பேட்டி எடுப்பதற்காக பத்திரிக்கை குழுவொன்று வில்லியம்சை தொடர்பு கொண்டிருந்தது.

பத்திரிக்கை பேட்டி என்றாலே வில்லியம்சை மாட்டி விட்டு காத தூரம் ஓடி விடுவான் வினய். அவர்களின் தேவையில்லாத மூக்கு நுழைப்பு.. அது தொழில் ஆகட்டும், பர்சனல் ஆகட்டும் அவனுக்கு பிடிக்காத விஷயம். பெரும்பாலும் தவிர்த்து விடுவான். இன்னும் சில நேரங்களில் ஏதேனும் கூட்டத்திலோ இல்லை வெளியில் இவன் சென்றாலோ அப்போது எதிர்ப்படும் செய்தியாளர்களை சின்ன சிரிப்புடன் எதிர் கொண்டு இரண்டு வார்த்தைகளில் முடித்து விட்டு தன் காரில் பறந்து விடுவான்.

 

 

ஆனால் இன்று அவன் செய்து கொண்டிருக்கும் இந்த பாடல் ஆல்பம் பற்றிய துணுக்கு வெளியில் கசிந்து விட.. அதுவும் லண்டன் மேக் பிசினஸ் மேக்ணட் தமிழ் பாடலுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து அதை ஆல்பமாக வெளியிட போகிறார் என்று அந்த ஒரு தகவலே போதுமானதாக இருக்க படை எடுத்துவிட்டது செய்தியாளர் குழுமம் வினய்யின் அலுவலகத்தை நோக்கி..

 

 

முதல் நாள் மாலையிலேயே வில்லியம்ஸ் இதைப்பற்றி வினய்க்கு தெரிவித்திருந்தான்.

 

"சார் நாளைக்கு காலைல உங்களை இண்டர்வியூ பண்ண ரிப்போர்ட்டர்ஸ் கேட்டிருக்காங்க" ஒரு வித பயத்துடன் தான் கேட்டான். வினய்யின் பிரதிபலிப்பு என்னவாக இருக்கும் என்று எப்போதும் கூடவே இருக்கும் வில்லியம்ஸால் கூட சில சமயங்களில் அனுமானிக்க முடியாது. அனுமானத்திற்கு அப்பாற்பட்டவனே இந்த வினய் விஸ்வேஸ்வரன்.

 

தலையை டேப்பிற்குள் வைத்திருந்தவனின் புருவங்கள் சுருங்கி விரிந்தது. அதுதான் அவன் கவனித்தான் என்பதற்கான ருது. 

"ஓகே அரேஞ் இட்.. பட் நோ மோர் பர்சனல்" என்று கூறிவிட்டு மீண்டும் டேபில் அவன் தன்னை நுழைத்துக் கொள்ள...

 

வில்லியம்ஸின் பாடுதான் திண்டாட்டம் ஆனது. பொதுவாக பத்திரிக்கை சுதந்திரம் என்ற பெயரில் பிரபலங்களின் அந்தரங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் தார்மீக கடமை அவர்களுக்கு உள்ளது என்று நினைக்கும் நிருபர்களே அதிகம்.. அதுவும் வெளிநாட்டு வாழ் இந்தியர், தொழில் துறையில் கோலோச்சுபவன் இன்னும் எலிசபிள் பேச்சிலர் போன்ற தகுதிகளை உடைய வினய்யை விட்டு வைப்பார்களா என்ன? எல்லா பக்கமும் பொதுவாக தலையை ஆட்டியபடியே "ஓகே சார்" என்று விட்டு நாளை அவர்களை எப்படி கட்டுப்படுத்துவது என்று தீவிர ஆலோசனையில் இறங்கிவிட்டான் வில்லியம்ஸ்.

 

அன்று வழக்கம் போல் மாலை வர்த்தினியை அழைத்துக்கொண்டு அமைதி உடனே அவளை வீட்டில் விட்டு தன் வீட்டிற்கு சென்றான் வினய். 

 

ஆனால் வர்த்தினிக்கு தான் பெரும் குழப்பம்.. நேற்று தான் கண்ட கனவு இதுவரை பலிக்கவில்லை என்று நிம்மதி ஒருபுறமிருந்தாலும்.. தினமும் தன்னை சீண்டுபவன் இன்று காலையில் இருந்து தான் பாடும்போதும் அருகே வராமல்.. இன்று காரில் செல்லும்போதும் அமைதியாக வந்தது அவளுக்கு சிறு நெருடலை ஏற்படுத்தியது. தன்னை சிசிடிவி மூலம் கண்காணிப்பது என்பது அவள் அறிந்திருக்கவில்லை. இவனின் அமைதிக்குப் பின் இருக்கும் அந்த புயலோ பூகம்பமோ என்னவாக இருக்கும் என்பதே அவளது தற்போதைய பெரும் குழப்பம்.

எதுவாக இருந்தாலும் நம்மை நெருங்காத வரை நமக்கு நிம்மதி என்றவாறே நினைத்துக் கொண்டு அன்றைய பொழுதே அவள் கழித்தாள்.

 

மறுநாள் காலை யார் யாருக்கு என்னென்ன வைத்திருக்கிறதோ!!

 

மறுநாள் வர்த்தினியை அழைக்க வேறு டிரைவருடன் கூடிய கார் வந்து இருந்தது. காரில் ஏறியவளின் கண்கள் அவள் அனுமதியின்றி வினய்யை தான் தேடியது. எப்பொழுதும் குறும்பு புன்னகையுடன் தன்னை வரவேற்கும் அந்த கோகுல கண்ணனை தான் மனது தேடியது. அவனது சீண்டல் மொழிகளும்.. அவனுக்கே உரித்தான வாசமும், ஸ்பரிசமும்.. இதழ்களுக்கு அடியில் துடிக்கும் அவனின் பிரத்யேக சிரிப்பும்.. கண்களில் குடிக்கொண்டிருக்கும் விஷம சிரிப்பும்.. இன்று இல்லாதது என்றுமில்லா ஒரு வித வெறுமையை வர்த்தினிக்கு தோற்றுவிக்க...

அகம் புகுந்தவனை இனம் காண தெரியாமல், தன்னை நிலைபடுத்தி அலுவலகத்திற்கு வந்து விட்டாள். இன்று நடக்கப்போகும் அந்த பத்திரிக்கைகளின் பேட்டியை முன்னிறுத்தியே வர்த்தினியை அவன் அழைக்க போகவில்லை. சிறு துரும்பும் கூட தன்னுடைய பர்சனலை யாருக்கும் தெரிவிக்க வினய் விரும்பவில்லை.

 

காலையில் அலைபேசியில் யாரிடமோ பேசிக் கொண்டே, நெடிய காலால் வேக நடையுடன் தனது அலுவலகத்திற்குள் நுழைந்தான் வினய் விஸ்வேஸ்வரன்.

 

அவனின் அந்த வேகத்திற்கு ஈடு கொடுத்தவாறு பின்னால் ஓட்டமும் நடையுமாக வந்த வில்லியம்ஸிடம் "அரேஞ்ச்மெண்ட்ஸ் எல்லாம் ஓகே வா?" என்று கேட்டான்.

 

"எல்லாம் பக்கா சார்" என்றான் வில்லியம்ஸ்.

 

"வில்.. பக்காவா தான் இருக்கணும்" என்று அவன் கண்ணை பார்த்து கூறிய செய்தியை சரியாக படித்த வில்லியம்ஸ் "கண்டிப்பாக சார்" என்று வாக்குறுதி கொடுத்தான்.

 

இவனை பேட்டி எடுக்க என்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹாலுக்குள் நுழைய.. 

அனைவருக்கும் சின்ன தலையசைப்புடன் சன்ன புன்னகையுடன் வரவேற்றவன் தனக்கான இருக்கையை நோக்கி சென்றான். அவனின் நடை உடை பாவனைகள்.. கூடவே அமர்த்தலான நடவடிக்கைகள்.. சிறுவயதிலேயே தொழில் துறையில் முன்னேறிய அவனுடைய ஆளுமை.. அனைத்தும் அங்கிருந்தவர்களின் கவனத்தில் ஒரு பெரும் மதிப்பை காட்டியது.

 

 

இருக்கையில் நன்றாக சாய்ந்து அமர்ந்தவாறு தன் எதிரே இருப்பவர்களை பார்த்து கையசைத்து துவங்கலாம் என்று அவன் கூற.. அதற்கெனவே காத்திருந்தவர் போல அனைவரும் தங்கள் கேள்வி கணைகளை தொடுக்க ஆயினர்.

 

ஒவ்வொரு கேள்விகளையும் அவன் எதிர் கொண்ட முறையும்.. கொஞ்சமும் முகத்தில் கடுமையும், கோபத்தையும் காட்டாமல் அவன் பதிலளித்த விதமும் நிருபர்களை மட்டுமல்லாது இவற்றை நேரடியாக பார்த்துக்கொண்டிருந்த அவன் அலுவலக ஊழியர்களையும் கைத்தட்டி விசிலடிக்க சொன்னது. 

 

அவர்களின் கெடுபிடி கேள்விகளையும் சன்ன சிரிப்புடனே, அதற்குத் தக்கவாறு முகத்தில் அடித்தாற் போல் அவன் கொடுத்த பதில்களும், அங்கிருந்த மற்ற நிருபர்களை அம்மாதிரியான எக்குத்தப்பான கேள்விகளை கேட்க சற்று யோசிக்க வைத்தது.

அப்படியும் ஒரு இளம் நிருபர் எழுந்து.. "எப்ப சார் உங்களோட கல்யாணம்?" என்று கேட்க..

 

கல்யாணம் என்றாலே 'வாட்ஸ் திஸ் சில்லி கொஸ்டின்?' என்று ஆரம்பித்து அரை மணி நேரம் அதற்கு விளக்க உரை கொடுப்பவன், இன்று நிருபர்களுக்கு முன்னால் அக்கேள்வி கேட்ட நிருபரை பார்த்து, "இட்ஸ் அவுட் ஆப் சிலபஸ்" என்று அழுத்தமாக சொல்லி சிரித்தான். கோபமாக, வேகமாக பேசாமல் சிரிப்புடனே எதிராளியை சிதறடிக்க முடியும் என்பதை காட்டிக்கொண்டிருந்தான் வினய்.

 

"நோ சார்.. யூ ஹேவ் டு ஆன்சர் திஸ்" விடாப்பிடியாக அந்த நிருபர் கேட்க வினய்யின் விழிகள் வில்லியம்சை துளைத்தது.

 

அவனும்தான் என்ன செய்வான். காலையில் வந்தவர்களுக்கு, அவர்களுக்கு சிற்றுண்டி கொடுத்து உபசரித்து.. அதைவிட நூறு முறை பர்சனல் கேள்விகள் கேட்கக்கூடாது என்று சொல்லி சொல்லி அவன் கட்டுபடுத்தி வைத்திருக்க.. அதையும் தாண்டி ஆர்வக்கோளாறில் கேட்கும் இம்மாதிரியான நிருபர்களை என்னதான் செய்வது. "இன்னைக்கு பாஸ் ஓட டார்கெட் நாமதான்" என்று மனசுக்குள் அவனால் நொந்து கொள்ள மட்டுமே முடிந்தது.

"யூ ஆர் எங்.. ஹாண்ட்சம்.. எலிசபிள் பேச்சிலர்.. பல இளம் பெண்களின் ட்ரீம் பாய் நீங்கதான்.. டாக் ஆஃப் த சிட்டியும் நீங்கதான்.. அதனால உங்க மேரேஜ் பற்றிய ஒரு சின்ன தகவல்.. அது வெளிய வந்தாதான் பல இளம் இதயங்கள் நிம்மதியாக தூங்க முடியும்" என்று தான் ஒரு தேர்ந்த பத்திரிகையாளன் என்பதை அவன் தன் வார்த்தைகளால் விளையாடிவிட்டு அமர..

 

 

அதுவரை இலகுவாக இருக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்தவன் தன் டேபிள் முன்னே குனிந்து மேஜையில் வைத்திருந்த கைகளில் தன் தாடையை பதித்தவன்.. நிருபர்களை பார்த்து,

 

"சோ.. என்னோட கல்யாணத்தை பத்தி தெரிஞ்சுக்காமா, அந்த இளம் இதயத்தோடு உங்க இதயமும் தூக்கம் கொள்ளாது. அப்படித்தானே?" என்று அழுத்தமாக அவன் கேட்க.. ஒரு நிமிடம் கேள்வி கேட்ட அந்த நிருபரின் இதயம் அதன் இடத்தில் இருந்து எம்பிக் குதித்தது.

 

 

அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் அந்த குளிரூட்டப்பட்ட அறையிலும் வழிந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டு மெதுவாக ஆமாம் என்று தலையாட்ட...

 

"வெல்.. எனக்கு கல்யாணத்துல அவ்ளோ பெரிய இஷ்டம் கிடையாது. ஜஸ்ட் என்னோட லைஃப்ல அது ஒரு பார்ட். அதுவே என்னோடு டெஸ்டினி கிடையாது. என் லைஃப்ல வர்ற ஒரு சின்ன பார்ட்டு அது. அதற்கு ஏன் இவ்வளவு ஆர்வம் உங்களிடம் எனக்கு தெரியல‌... ஆனாலும் இந்திய பெண்ணை தான் மேரேஜ் பண்ணிப்பேன். எனி மோர் கொஸ்டின்?" என்று அழுத்தமாக அவன் வினவ..

 

"சர்.. ஒன் மோர் கொஸ்டின்" என்று ஒரு பத்திரிக்கையாளர் வினவ.. வினய் அவனை ஆழ்ந்து நோக்கினான்.

 

 

"நாட் பர்சனல் சார்" என்று சொல்லி தன் உயிருக்கு உத்தரவாதத்தை அந்த நிருபர் அளித்துக் கொண்டான்.

 

"உங்க குழுமம் நிறைய துறையில் கால்பதித்து சாதனைகளை படைத்து வர்றீங்க சர். இப்போ புதுசா நீங்க இசைத் துறையிலும் கால் பதித்து இருக்கிறதா எங்களுக்கு ஒரு தகவல்.. அதை பற்றிய உங்களுடைய விளக்கம் சொல்லுங்க சார்" என்று அமைதியாக அவன் கேட்க..

 

இந்த கேள்வியை எதிர்பார்த்து தான் இருந்தான் வினய்.

 

அதே பழைய சன்ன சிரிப்புடன் நிருபர்களை பார்த்து "ஒய் டோண்ட் ஐ பீ இன் மியூசிக்? அதில் உங்களுக்கு ஏதும் பிரச்சனையா?" என்று இடக்காக கேள்வியை திருப்பி போட்டு கேட்க..

 

அந்த நிருபரோ அசட்டு சிரிப்பை உதிர்த்துவிட்டு.. "இல்ல சார்.. நீங்க அந்தத் துறையிலும் ஜெயிக்க எங்களுடைய வாழ்த்துக்கள்" என்றவாறு தன் கேள்விகளை அத்துடன் முடித்துக் கொண்டான்.

 

"அது" என்று வெற்றி பார்வையை அவனை நோக்கி பார்த்தான் வினய்..

 

மற்றொரு நிருபர் எழுந்து "சர்.. உங்க கல்யாணத்திற்கும் இப்போ நீங்க இசை ஆல்பம் தயாரிப்பதற்கு ஏதேனும் சம்பந்தம் இருக்கா சார்?" என்று கேட்க.. அங்கிருந்த மற்றவர்களுக்கும் அப்படியும் இருக்குமோ என்று சந்தேகம் கொண்டு வினய்யை பார்த்தார்கள்.

 

பர்சனல் கேட்கக்கூடாது என்று வந்துவிட்டு இப்படி தன்னுடைய பர்சனலையே குடைந்து குடைந்து கேட்கும் இந்த நபர்களை கண்டு கோபம் தலைக்கேற தனது இடது கையால் தலையை கோதி அதை சமாளித்தான்.

 

"ஆமாம் இந்த ஆல்பம் தயாரிக்கிறத்துக்கும் என்னோட கல்யாணத்திற்கும் சம்பந்தம் உண்டு. அதுல பாடுறதும் ஒரு இந்திய பெண் தான்" என்று பெரிய குண்டை அசால்டாக இவன் தூக்கிப் போட.. அந்த ஹாலே சிறிது நேரம் அமைதியாக இருந்தது.

 

 பின் எழுந்தவன் அனைவரையும் ஒரு முறை பார்த்துவிட்டு "ஸேஷன் பினிஷ்டு கைஸ்" என்றவாறு தன் வேக நடையுடன் அந்த ஹாலை விட்டு வெளியேறினான்.

 

 

இங்கே நடந்த நேர்காணலை வினய் அலுவகத்தில் உள்ள ஒவ்வொரு தளத்திலும் உள்ள அலுவலர்கள் காண்பதற்கு ஏதுவாக வழி செய்யப்பட்டிருக்க.. ரெக்கார்டிங் ரூமில் இருந்த இசைக் குழுவினரும் தங்கள் இசையை சற்று நேரத்திற்கு ஒதுக்கி வைத்துவிட்டு இவனின் பேட்டியை தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

 

அப்போது லீனா கடைசியாக வினய்யின் அந்த பார்வை பார்த்துவிட்டு எழுந்து எம்பி குதித்து ஆர்ப்பாட்டம் செய்து விட்டாள். "என்ன ஒரு இன்னொரு ஆளுமை.. வாட் அ மேன்" என்று அவனின் பெருமைகளை சிலாகித்து கண்கள் மின்ன அவள் கூற பார்த்துக் கொண்டிருந்த வர்த்தினிக்கு தான் அதிர்ச்சியில் ஸ்தம்பித்து போனாள். இவன் எதற்காக இரண்டையும் சேர்த்து சொன்னான் என்று புரியவில்லை அவளுக்கு. லீனிவின் ஆர்ப்பாட்டம் அவளுக்கு எரிச்சலை தான் தந்தது.

 

 

"போதும் போதும்.. லீனா. உன் பாஸ் புராணம். விட்டால் நீ உன் பாய் பிரண்டு கழட்டி விட்டுட்டு இவர் கூட செட்டில் ஆகிவிடவ போலிருக்கே" என்று எரிச்சலாக அவள் கேட்க..

 

"நிச்சயமா.. அப்படி ஒரு சான்ஸ் எனக்கு கிடைத்ததுனா.. பாஸ் மட்டும் என்னை கல்யாணம் கூட வேணாம் ஜஸ்ட் லிவிங் டுகெதர் இருக்கிறதுக்கு ஒத்துக்கிட்டா கூட நான் ரெடிதான்" என்று வெகு சீரியஸாக கூறும் அவளை தான் வினோதமாக பார்த்தாள் வர்த்தினி.

 

"அவ்வளவுதானா உன்னோட காதல்" என்றவாறு அவளது பார்வை இருக்க அதை பார்த்த லீனா கட கட வென சிரித்தாள்.

 

"உனக்கு இது புரியாது வர்த்தினி. ஜேம்ஸ் மேல் எனக்கு இருக்கிறது காதல்.. நம் பாஸ் மேல எனக்கு இருக்கிறது கிரேஷ்.. காதல் வேறு கிரேஷ் வேறு.. என்ன மாதிரி நிறைய பெண்களின் ரகசிய காதலர் நம்ம பாஸ் தான்" என்று கூறி அவள் சிரிக்க.. வர்த்தினியால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதே நேரம் இவளிடம் விதண்டாவாதம் செய்யவும் மனசு வரவில்லை. ஆனால் ஒன்றை மற்றும் அவள் ஒத்துக் கொள்ள வேண்டியிருந்தது வினய் பற்றி..

 

அவனின் ஆளுமையும்.. தொழில் திறமையும் எதிரிகளை கையாளும் முறையும்.. தன்னிடம் கேள்வி கேட்பவர்களை சன்ன சிரிப்புடன் அழுத்தமான பார்வையுடன் சிதறடிக்கும் அவன் பாங்கு.. அதற்கு தோதான அவனது அமர்த்தலான நடை என்று மொத்தமாக ஆளுமையின் ஐகான் ஆக இருந்தான் வினய் விஸ்வேஸ்வரன். 

 

இந்த ஆளுமை தனக்கு நல்லதா கெட்டதா என்று அவளுக்கு சற்றும் புரியவில்லை. ஆனால் இன்னும் இருக்கும் நாட்களும் இப்படியே அமைதியாக இருந்துவிட்டு ஊரைப் பார்க்க சென்று விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

 

நினைப்பதும் எல்லாம் நிறைவேறுமா என்ன? இல்லை நிறைவேற்ற விடுவானா வினய்?

அன்றிரவு தன் வீட்டிற்கு சென்ற வினய்யை ஹாலியிலேயே வழிமறித்தார் மஞ்சுளா.

"என்ன பண்ணி வச்சிருக்க வினய் நீ?" அவர் கோபமாக கேட்க..

 

அவர் கோபத்தின் காரணம் புரிந்தாலும், சுற்றி சுற்றி வளைத்து தன்னை கேள்வி கேட்ட அந்த நிருபர்களிடம் இருந்து தப்பிக்கத்தான் அவன் அவ்வாறு சொன்னது.

தாயும் புரிந்து கொள்ளாமல் அதை பற்றி கேட்டவுடன் அவனுக்கு சலிப்பு தட்ட கையிலிருந்த டேப்பை கோபத்தில் தூக்கி போட்டான்.

 

"மாம்.. ஐ நோ வாட் ஐ டூயிங். நீங்களும் இந்த மாதிரி ரப்பிஷ்ஷா பேசாதீங்க. அது ஒரு ஃப்லோல வந்தது. அவ்வளவுதான் அதற்கான எந்த விளக்கமும் கிடையாது"என்று அவன் கூற..

 

"வினய்.. நீ வளர்ந்த கல்ச்சர் வேற.. அந்த பொண்ணு வளர்ந்த கல்ச்சர் வேற.. பாடுறதுக்குனு அழைச்சிட்டு வந்துட்டு அந்த பொண்ணு லைஃப்ல விளையாடுவது நல்லது இல்ல. இந்த விஷயத்தை இதோட விட்டுடு" என்று ஒரு பெண்ணாக அவர் மற்றொரு பெண்ணின் வாழ்க்கையை நினைத்து எடுத்து கூற.. 

 

"ஓகே லீவ் இட் மாம்" என்று அன்னையிடம் கூறினாலும், அவன் உள்மனதில் 'அப்படி என்ன பெரிய கல்ச்சர்ல வளர்ந்தவ அவ.. அவளை என் பின்னாடி சுத்த விடாமல் விடமாட்டேன்' என்று அவனது பழைய கோபமும் மெல்ல மேலெழுந்து அதற்கான வேலையை செய்ய வைத்தது. அவனுக்கு தெரியவில்லை.. அவன் தான் தன்னை அறியாமல் அவள் பின்னால் சென்று கொண்டிருக்கிறான் என்று!!

 

 

கிட்டத்தட்ட இதுவரை 15 பாடல்களை முடித்திருந்தனர் வர்த்தினியும் அவளது இசை குழுவும். இதற்கே இரண்டு மாதங்கள் ஓடி இருந்தது. பெரும்பாலான நேரங்கள் காலை மாலை இருவேளையும் வினய் தான் அலுவலகத்திற்கு அழைத்து வருவதும் விடுவதுமாக இருக்க.. அவ்வேளைகளில் எல்லாம் அவளை சீண்டிக் கொண்டே இருக்கவும் அவன் தவறுவதில்லை.

 

அன்று அடுத்த பாடல்களுக்காக அவர்கள் ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்க அவர்களை பார்த்து "ஹாய் காய்ஸ்" என்ற வசீகர சிரிப்புடன் வந்து சேர்ந்தான் வினய்.

அனைவரும் பதிலுக்கு "ஹாய் பாஸ்" "குட்மார்னிங் பாஸ்" என்று கூற, அமைதியாக பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள் வர்த்தினி. வினய்யின் கண்கள் அவளைத் தான் துளைத்துக் கொண்டிருந்தது.

 

 

ராபர்ட்டை நோக்கி கை கொடுத்தவன், "யூ கைஸ் டிட் அ அமேசிங் ஜாப் ராபர்ட்" என்று அவனைப் புகழ்ந்து விட்டு மற்ற அனைவரையும் பார்த்து கைகளை குலுக்கி தனது வாழ்த்தை தெரிவித்தான்.

 

அடுத்து அவன் வர்த்தினியை நோக்கி செல்ல அவளோ எச்சில் விழுங்கியவாறே அவனைத்தான் ஒருவித திகிலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளை நெருங்கியவன் ஏறி இறங்கும் தொண்டைகுழியை ரசித்தவாறு, அவளது கையை பிடித்து குலுக்கி தனது வாழ்த்தை தெரிவித்தான் ஒற்றை கண்ணடித்தலுடன்..

 

"இப்ப நான் எதுக்கு வந்தேன்னா நம்மளோட ஆல்பம் வெறும் ரெக்கார்டிங் ஓட மட்டும் முடியாமல் அடுத்த கட்ட நகர்வை நோக்கி செல்லுது. அதாவது இதுவரை நம்ம ரெக்கார்ட் பண்ண பாடலை ஷூட் பண்ண போறோம். அதுவும் வர்த்தினியோட குரல் வச்சே.. இயற்கையான சூழலில். சோ அடுத்த ஒரு மாதம் நம்ம வெளியூர்ல தான் ஸ்டே பண்ணப்போறோம். உங்க கூட வீடியோ சூட் பண்ற டீமும் சேர்ந்துக்குவாங்க. கெட் ரெடி பார் தட்" என்று கூறியவன், வர்த்தினியை ஒரு அர்த்தம் பார்வை பார்த்து விட்டு சென்றான்.

 

 

"என்னது வெளியூரில் தங்கி சூட்டிங்கா?? அதுவும் இவன் கூடவா??" என்று அதிர்ச்சியில் விழிவிரிய சென்றவனையே பார்த்துக்கொண்டு நின்றாள் வர்த்தினி.

 

 

அலையடிக்கும் கடற்கரை ஓரமாக அவள் நின்றிருக்க.. அவளின் அழகை தான் கண்களாலேயே தின்று கொண்டிருந்தான் வினய். அந்த பார்வை அவளை ஏதோ செய்ய.. உடலெல்லாம் கூசி சிவக்க.. தன் பார்வையை அவள் திருப்பிக் கொள்ள.. அவளருகே நெருங்கியவன், மீசை அவள் காதுகளில் உரச, உடலோடு அவள் உடல் உரச, "மாமீமீமீ..." என்று கிறக்கமாக அழைத்தான்.

உடல் உரசலில் அவன் வெம்மை அவளுக்கு கடத்தப்பட, அவன் கைகள் அவள் இடை பற்றி இழுக்க.. மீண்டும் மயக்கத்துடன் "மாமீமீ"‌ என்று அழைத்தவனின் மயக்கம் அவளுக்கும் தொற்றிக் கொள்ள.. மெல்ல திரும்பியவள் தன் ரோஜா இதழ்களை திறந்து "ம்ம்ம்..." என்று பதிலுரைக்க.. அவள் பூமுகத்தை கையில் ஏந்தினான். அவள் கண்கள் தாமாக மூடிக் கொள்ள... அதற்கு மேல் காலம் தாழ்த்தாமல் மொத்தமாக அள்ளிக் கொண்டான் அவளின் அதரங்களை...

 

தேன் உறிஞ்சும் தேனீயை போல, அம்மகரந்த அதரங்களில் இருந்து வெகு நிதானமாக அவன் சுவைக்க.. ஒற்றை முத்தத்தில் உயிரை உறிஞ்சி எடுக்க முடியுமா என்ன?

ஆம்!! அவளின் மொத்த உயிரையும் ஒற்றை முத்தத்தில் சத்தமில்லாமல் எடுத்துக் கொண்டு இருந்தான் வினய்.. 

 

முத்தத்தை மென்மையாக...

அதில் வன்மையாக.. 

கூடவே காதலாக.. 

அதில் வன் காமமாக..

இணை ஊடலாக.. 

கொஞ்சம் மோகமாக..

அவற்றை தாபமாக..

 

என ஒற்றை முத்தத்தில் பல வர்ண ஜாலங்களை காட்டி..

முத்தத்திலேயே அவளை வீழ்த்தி கொண்டு இருந்தான் மாயவன் நிஜத்தில்... அவன்

வினய் விஸ்வேஸ்வரன்!!


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top