தளிர் : 5
செல்போன் திரையில் ராதிகா பெயரை பார்த்தவன், "ப்ச்ச்" என்று சலித்தபடியே போனை எடுத்து "ஹலோ" என்றான்.
"சார்… செட் ரெடி, கேமரா ரெடி, மாடல் ரெடி, எல்லாம் ரெடி. நீங்க வந்ததும் ஷூட் போயிடலாம்" என்று கடகடவென சொல்லி விட்டு அவன் பதிலுக்காக காத்திருக்க, ஒவ்வொரு வினாடியையும் பணமாக மாற்ற திட்டமிடும் அவன் மூளையோ இன்று சோர்ந்து தான் போனது.
"எல்லாம் கேன்சல் பண்ணு." என்று வலுவிழந்த குரலில் சொல்லிவிட்டு போனை வைத்து விட்டான்.
"எத கேன்சல் பண்ணனுமா? அந்த வெங்காயத்தை நேத்து நைட்டே சொல்லியிருந்தா? இத்தனை பேர் வேலை மெனக்கெட்டு இருக்க மாட்டோமே!" என்று தொடர்பிழந்த போனை பார்த்து பேசிக் கொண்டிருந்தவள், அருகே வந்த பணியாளர் ஒருவர், "என்ன மேடம். சார் எப்போ வருவாங்க?" என்று உதடுகள் கேட்டாலும், வரவில்லை என்றாலும் நிம்மதி என்று அவன் கண்களில் சிறு ஆசை மின்னியது.
"வந்துட்டு இருக்கார். நீங்க போய் லைட்டிங் செக் பண்ணுங்க" என்று அவருக்கு வேலை சொல்லி அனுப்பி வைத்தவள், தனியாக சென்று மீண்டும் அருணனிற்கு போன் அடித்தாள்.
குறித்த நேரத்தில் வேலைகள் எல்லாம் முடித்து கொடுக்க வேண்டும் என்பது அவள் எண்ணம். யார் உழைப்பையும் வீணாக்க கூடாது. உடல் வலிக்க உழைப்பவர்களுக்கு தானே அதன் அருமை தெரியும்.
நெல்லை விளைய செய்யும் விவசாயி என்றும் சாதத்தை வீணடிக்க மாட்டான். அவன் அறிவான் ஒவ்வொரு அரிசியின் மகத்துவம்.
6 மணிக்கு ஷூட் என்றால் டெக்னீசியன் எல்லாம் நான்கு மணிக்கே வந்து செட் அமைக்க வேண்டும். ஒரு வார்த்தையில் எல்லாவற்றையும் ரத்து செய் என்றால், அத்தனை பேரின் அன்றைய உழைப்பும் வீண் தானே.
அதற்கு தான் அவனை வர வைத்து, திட்டமிட்டபடி விளம்பர படம் எடுக்க எண்ணினாள்.
மீண்டும் அவள் எண்ணை பார்த்தவனுக்கு மன சோர்வு நீங்கி கோபம் தான் வந்தது.
"என்ன?" வல்லுநாயாக விழுந்தான்.
"கொரியன் கம்பெனி கூட மீட்டிங் இருக்கு சார்"
"கேன்சல் பண்ணு…"
"சவுத் ஆப்ரிக்கா டீலர்ஸ்…" என்று அவள் ஆரம்பிக்கும் முன்னமே,
"என்ன சட்டிக்குள்ள கவுந்துட்டானா?" என்று அவன் எரிந்து விழ,
ங்ஙே' என்று விழியை சுருக்கி தலையை பின்னுக்கு இழுத்து விழித்துக் கொண்டே நின்றிருந்தாள் ராதிகா.
'வேலைனு வந்துட்டா வெள்ளகாரணுக்கே டஃப் கொடுப்பாரே நம்ம ஆளு. இன்னைக்கு ஏன் எதுவும் வேணாம் சொல்றார்?' என்று யோசித்தவள் அந்த நிமிடமாவது அதை அப்படியே விட்டு சென்றிருக்கலாம்.
ஜப்பான்ல ஜாக்கிஜான் கூப்பிடுறாக, அமெரிக்கால மைக்கில் ஜாக்சன் கூப்பிடுறாக என்று படம் ஓட்டி, "நீங்க வரலைன்னா பனிரெண்டு கோடி லாஸ் ஆகிடும்" என்று சொல்ல,
"எத்தனை கோடி லாஸாகி, நான் தெருகோடில நின்னாலும் பரவாயில்ல, இன்னைக்கு எந்த மீட்டிங்கும் கிடையாது" என்று கத்தி விட்டு போனை வைத்து விட்டான்.
'உங்களுக்கு இருக்க சொத்துக்கு நீங்க ஏன் தெருகோடில நிக்க போறீங்க? உங்களை நம்பியிருக்க நாங்க தான் வேலை இல்லாம தெருவுல நிக்கணும்' என்று புலம்பிக் கொண்டே மீண்டும் அழைக்க,
ருத்ர மூர்த்தியாக மாறி விட்டான். கொஞ்ச நேரமாவது மனுஷன ஃபீல் பண்ண விடுறாளா? சும்மா நொய்யி நொய்யினு போன் போட்டுட்டு இருந்தா கோபம் வரும் தானே.
அதிலும் அருணனுக்கு மூக்கு நுனியில் தான் கோபம் இருக்கும். அவனே பொண்டாட்டி நினைப்புல ஒடுங்கிப் போய் அடைஞ்சி கிடந்தா, இவ தேர இழுத்து தெருவுல விடாம அடங்க மாட்டேன்னு கங்கணம் கட்டி தொல்ல பண்ண,
"என்ன டி உன் பிரச்சனை? இன்னைக்கு நான் எங்கேயும் வர முடியாது. இன்னொரு முறை போன் பண்ண? கழுத்த நெரிச்சு கொன்னுப் போட்டுருவேன்" என்று மிரட்டி விட்டு வைத்துவிட்டான்.
"ச்ச…" என்று எரிச்சலாக போனை தூக்கி போட்டு விட்டு, இரு கைகளாலும் தலையை அழுந்த கோதிய படியே தன் கோபத்தை கட்டுப் படுத்த முயன்று கொண்டிருந்தான்.
இந்த மாதிரி தானே இவன் தினமும் மற்றவர்கள் மண்டையை காய விடுவான். இன்று அவள் அவனை வாட்டி வதைத்தாள்.
இன்னும் முடியல ராசா… உன்ன நிம்மதியா சோக கீதம் பட விடமாட்டேன் என்று மீண்டும் நானே வருவேன் என்று ராதிகா அழைக்க,
'இவள?' என்று நர நரவென பல்லை கடித்தவன், போனை அட்டன்ட் பண்ண, மவனே உனக்கு ஹலோ சொல்ல நேரம் கொடுத்தா தானே கேப்பே இல்லாம திட்டுவ என்று இந்த முறை அவள் முந்திக் கொண்டாள்.
"சார் கண்டிப்பா திட்டுவீங்க தெரியும். நீங்க திட்ட முதல்ல நான் சொல்ல வேண்டியது சொல்லிடுறேன். எவ்வளவு லாஸ் ஆனாலும் உங்களுக்கு அது பிரச்சனை இல்ல தான். ஆனா அந்த டீலர் இன்னைக்குள்ள ஷூட் முடிச்சு கொடுக்கலனா? நம்ம காண்டிராக்ட் கேன்சல் பண்ணிட்டு ஆப்போசிட் ஏஜென்ஸிகிட்ட பேட்ச் அப் பண்றதா சொல்றார். அதுவும் உங்களுக்கு பெரிய விசயம் இல்லை தான். ஆனா அந்த இத்து போன கோண வாயன் உங்களை மட்டம் தட்டி பேசுற நிலை வந்துட கூடாதுனு தான் சொல்றேன். பிளீஸ் வந்து முடிச்சு கொடுங்க சார்" என்று கெஞ்ச,
தன் பொறாமையை தூண்டி காரியத்தை சாதிக்க நினைக்கிறாள் என்பது தெளிவாக புரிந்தது. எல்லை இல்லா கோபம் அவள் மீது இருந்தாலும், ஒரு சாதாரண எம்பிளாயாக இதெல்லாம் எனக்கு தேவை இல்லாத ஆணி என்று ஓபி அடிக்காமல், திட்டுவான் என்று தெரிந்தும், கம்பெனி நலனுக்காக அவள் இவ்வளவு தூரம் முயற்சி செய்ய, அவனாலும் முடங்கி இருக்க முடியவில்லை.
"வர்றேன்" என்று உர்ரென்று சொல்லி விட்டு தயாராக சென்று விட்டான்.
அதன் பிறகே "சப்பா முடில" என்று பெருமூச்சு விட்டாள் ராதிகா. இங்கு வந்தாலும் முதல் பலி ஆடு அவள் தான். இண்டோர் ஷூட்டில் சூரியனை மேகம் மறைத்தால் கூட அவளை தான் முறைப்பான். அது அவளுக்கும் தெரியும் தான் இருந்தும் "விடு பார்த்துக்கலாம்" என்று தனக்கு தானே துணையாக நம்பிக்கை கொடுத்துக் கொண்டு, அவன் குறை சொல்லவே வாய்ப்பு கொடுக்க கூடாது என்று கண்ணாக வேலையை கவனித்துக் கொண்டிருந்தாள்.
அதிக கவனம் எடுக்கும் போது தானே அதிக சொதப்பல் நிகழும். பாவம் பாவையவள் இன்று டைனோசரஸ் வாய்க்குள் வாலிண்ரியாக தலையை கொடுத்த பிறகு, விட்டு வைப்பானா?
பத்து நிமிடத்தில் தயாராகி அறையில் இருந்து அருணன் வெளியே வர, ஆத்தாலும் மகளும் அவன் ரூம்க்கு வெளியே கேமரா ஏதும் வச்சிருக்காங்கலோ என்னவோ? அவன் கதவை திறந்த அடுத்த கணம் டான்னு அவன் முன் வந்து குதித்தாள் சுவாதி.
"என்ன மாமா ஷூட்டிங் போறீங்களா?" இயல்பான பேச்சு வார்த்தை அவள் ஆரம்பிக்க,
"இல்ல சுடுகாட்டுக்கு போறேன். வரியா?" என்று அவள் ஆரம்பிக்கும் முன்னமே முடித்து வைத்தான் அருணன்.
"இல்ல நீங்களே போய்ட்டு வாங்க" என்றவள் பேய் முழி முழித்துக் கொண்டு நிற்க, அவனோ வழமை போல் அவளை வாரி விட்டு கடகடவென படிகளில் இறங்கி சென்று விட்டான்.
அவன் வருவதை பார்த்த அவன் அன்னை பார்வதியோ அவனை நோக்கி ஓடி வந்தார்.
"தம்பி வெளிய கிளம்பிட்டியா ப்பா?" என்று கேட்டுக் கொண்டே வர, சுவாதி அளவுக்கு எடக்கு மடக்கு பேச்சு கூட அன்னையிடம் கிடையாது. ஏன்? நின்று கூட அவருக்கு பதில் சொல்ல மனமில்லாது நகர்ந்தவனை அவன் தந்தையின் குரலே தடுத்தது.
மனைவியை உதாசீனபடுத்தும் மகன் மீது கோபம் தான் வந்தது தாமோதரனுக்கு.
"அருண்… அம்மா உன்கிட்ட தான் பேசிட்டு இருக்காங்க. நிற்காம போனா என்ன அர்த்தம்?" என்று அவர் கோபமாக கேட்க,
"பதில் சொல்ல விரும்பம் இல்லனு அர்த்தம்" என்றவன் கால்கள் தந்தை வார்த்தைகளுக்கு கூட நிற்கவில்லை.
தங்களை மதிக்காது செல்லும் மகனை, விழிகளில் தேங்கிய கோபத்துடன் தாமோதரன் பார்த்துக் கொண்டு நிற்க, "அருண்" என்று கண்டிப்பான குரலில் நின்றது அவன் கால்கள்.
பெற்றவர்களை மதிக்காமல் உதாசீனபடுத்தியவனால் தன் குருவான பெரியப்பாவை உதாசீனபடுத்த முடியாது நடை தடை பட, எங்கோ வெறித்துக் கொண்டு நின்றிருந்தான்.
அவன் நின்றதும் மீண்டும் அவன் அருகே ஓடி வந்த பார்வதி, "தம்பி… நேத்து நம்ம ஜோசியர் வந்து இருந்தார்"
"பட்ஜெட்ல ஏதாவது துண்டு விழுந்திருக்கும்." கைக் கடிக்காரத்தின் முட்களை சரி பார்த்தபடியே, தனக்கு நேரமாகிறது என்று சொல்லாமல் சொன்னான்.
"உனக்கு இதுலலாம் நம்பிக்கை இல்லனு தெரியும். ஆனாலும் மறுபடியும் ஏதும் அசம்பாவிதம் நடந்திடுமோனு மனசு கிடந்து அடிச்சுகுது. இன்னும் ஏழு நாளைக்குள்ள உனக்கு கல்யாணம் ஆகலைனா? குடும்பத்துக்கே பெரிய கண்டம் இருக்குனு சொன்னார். உயிர் இழப்பு கூட நேரும்னு சொல்லி இருக்கார் ப்பா. அதனால…" என்றவரை அவன் தீயாய் முறைக்க,
"சுவாதியை கல்யாணம் பண்ணிக்க தம்பி. உன்னை பத்தி எல்லாம் தெரிஞ்ச பொண்ணு. நம்ம வீட்டு பொண்ணு" என்று அவர் சொல்ல சொல்ல, அவர்கள் வட்டத்திற்குள் சுவாதியை இழுத்து விட்டு விட்டு, நகர்ந்து கொண்டார் கோசலை.
அனைவர் பார்வையும் அவன் மீது ஆர்வமாக பதிய, தன்னை அரண்டு பார்த்துக் கொண்டிருந்த சுவாதி மீது தான் அவன் விழிகள் நிலை குத்தி நின்றது.
அவளுக்கோ அவன் பார்வையே உடல் நடுங்க செய்ய, பார்வதி முந்தானையை கைகளில் சுற்றிக் கொண்டே அவர் பின்னே தன்னை மறைத்தபடி நின்றிருந்தாள்.
"ஏய் இங்க வா" அவன் அதிகார தொனியில் அவளை அழைக்க, கரையில் தூக்கி வீசிய மீன் குஞ்சாய் பட படவென இமைகள் அடித்துக் கொள்ள, மிரண்டு போனது பருவ சிட்டு.
"என்னை கல்யாணம் பண்ணிக்கணுமா?" என்று குரலை உயர்த்தி கேட்க, அவன் கேட்ட தினுசிலே உடல் குலுங்கி "ம்ஹிம்" என்று தலையை இடவலமாக ஆட்டியவள் இடையை கோசலை கிள்ளி வைக்க,
டிங் டிங்கென்று மேலும் கீழும் ஆட்டியவள், அவன் முறைத்த முறைப்பில் மீண்டும் இட வலமாக ஆட்டிட.
அன்னை புறம் பார்வையை திருப்பி, எள்ளலாக இதழ் வளைத்தவன், "வேற பொண்ணு இருந்தா சொல்லுங்க" என்று விட்டு வேகமாக சென்று விட்டான்
அவன் வெளியேறிய அடுத்த கணம் "அய்யோ, அம்மா" என்று அலறினாள் சுவாதி, கோசலையின் சிறப்பு கவனிப்பில்.
நங்கு நங்கென்று கோசலை கைகள் சுவாதி தலையை பதம் பார்க்க, "அம்மா வலிக்குது விடு" என்று தலையை தேய்த்து கொண்டே அவள் சரண் புகுந்தது என்னவோ பார்வதியிடம் தான்.
"அண்ணி அவன் மிரட்டினா பிள்ளை என்ன பண்ணும்? விடுங்க" என்று கோசலையை அடக்க, "இதுக்கே இப்படி பயந்தா? ஏன் டி ஆமா மாமா உங்களை தான் கல்யாணம் பண்ணிப்பேன் சொல்றதுல என்ன பயம் உனக்கு?" என்று காதை பிடித்து திருக, "ஆஆஆஆ…" என்று அலறியவளை மற்றைய புறம் பதுக்கி காத்துக் கொண்டார் பார்வதி.
"அண்ணி விடுங்க" என்று இவர்கள் சங்கதி போய் கொண்டிருக்க, நகரும் நாற்காலியில் அவ்விடம் வந்து சேர்ந்தார் பத்மாவதி பாட்டி.
"அவன் மனசுல என்ன இருக்குனு தெரிஞ்சும் ஏன் அவனை கஷ்டப்படுத்துற பார்வதி?" என்று அவர் பேரனுக்காக கேட்க,
"அதுக்காக அவனை அப்படியே விட முடியுமா? இந்த ஏழு நாளைக்குள்ள எப்பாடு பட்டாவது அவன் கல்யாணம் முடிச்சே தீருவேன்" என்று பார்வதி தீர்மானமாக சொல்ல,
கோசலை முகத்தில் திருப்திகாரமான புன்னகை. "கரெக்ட் அண்ணி… வாங்க நாம அடுத்த கட்ட திட்டம் பத்தி யோசிக்கலாம்" என்று இருவரும் அங்கிருந்து செல்ல,
அப்போது தான் சாப்பிட்டு முடித்து ஓடி வந்த சுதர்சனாவோ பார்வதி மீது மோதி விட்டாள். சட்டென்று அவளை தன்னை விட்டு விலக்கி நிறுத்திய பார்வதி, "கண்ண பிடரில வச்சிட்டா வர்ற?" என்று திட்டியவர், "முதல்ல இந்த சனியனை நாடு கடத்தணும். எப்போ யார் உயிரை எடுப்பாளோ?" என்று முனு முனுத்துக் கொண்டே சென்று விட்டார்.
அவர் கடும் சொல்லில் பிள்ளை முகம் வாடி போக, "சுதர்சனா குட்டி பாட்டிகிட்ட வாங்க" என்று அவளை தன்னருகே அழைத்த பத்மாவதி, அவளை மடியில் தூக்கி வைத்து தன் பெரிய மகனை பார்க்க, அவரோ மெல்லிய புன்னகையோடு பரிசு பெட்டகம் ஒற்றை அவரிடம் கொடுத்தார்.
"பிறந்த நாள் வாழ்த்துக்கள்" என்று சொல்லி அவள் கையில் கொடுக்க, அவளும் பார்வதி பேச்சை மறந்து "ஐ! கிஃப்ட்" என்று கண்களில் ஆசை மின்ன வாங்கி பிரித்தாள்.
அதனுள் மெல்லிய தங்க சங்கிலி மினு மினுக்க, "நல்லா இருக்கா?" அபிப்பிராயம் கேட்டார் பத்மாவதி.
"ஹ்ம்ம் நல்லா இருக்கு. ஆனா இந்த கிஃப்ட் விட, நீங்க வாங்கி கொடுத்த ட்ரெஸ் தான் ரொம்ப பிடிச்சு இருக்கு" என்று அவள் தந்தை வாங்கி கொடுத்த உடையை பற்றி சொல்ல, அவரோ அவள் இப்போது அணிந்திருக்கும் உடையை சொல்வதாக எண்ணி, "என் ராசாத்திக்கு என்ன போட்டாலும் அழகா தான் இருக்கும்" என்று செயினை பிள்ளை கழுத்தில் மாட்டி அவள் தலையை வருடி நெற்றியில் முத்தமிட்டார்.
தாமோதரன் எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாரே தவிர யார் பக்கமும் நிற்கவில்லை. அவர் என்றும் தனி கட்சி தான்.
இங்கே ஷெட்டுக்குள் அருணன் நுழைந்த வேகமே அவன் கோபத்தின் அளவை சொல்ல, இன்னைக்கு சிக்குனவன் எல்லாம் கைமா தான் என்று பதுங்கி கொண்டது அத்தனை கூட்டமும்.
ஆனால், வீட்டில் கதவை அடைத்து கொண்டிருந்த ஓணான கொக்கி போட்டு இழுத்து வீதியில் போட்ட ராதிகாவோ ஓடவும் முடியாமல் ஒளியவும் முடியாமல் இரத்த காட்டேரியிடம் மாட்டிக் கொண்டாள்.