9
சாத்திரம் பேசுகிறாய், - கண்ணம்மா!
சாத்திர மேதுக் கடீ!
ஆத்திரங் கொண்டவர்க்கே, - கண்ணம்மா!
சாத்திர முண்டோ டீ!
தன் எதிரே நின்று பாடிக் கொண்டிருந்தவளை தான் கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் வினய் விஸ்வேஸ்வரன்.
இதமும், மென்மையும், இனிமையுமிக்க மெல்லிசை குரலால் மனம் லயிக்கவைத்து, அதனூடே, ராகங்களின் இனிமையை ரசிக்க வைத்ததுடன், அதன் விளைபயனால் செவிக்கும் இசையை ரசிக்கும் உள்நுழைவு படியையும் அமைத்து பாடுவதில் வர்த்தினி திறனை மெச்சவே வேண்டும். அவ்வளவு சுருதி சுத்தம் அவளுக்கு.. தேன் குரல் அவளுக்கு.
பாரதியின் பாடலை பாட வேண்டுமென தன் அன்னை மஞ்சுளா சொன்னதால் அவரிடமே என்னென்ன பாடல்களை தெரிவு செய்து பாட சொல்லலாம் என்று கேட்டான் வினய்.
அவருக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. இவ்வளவு நாட்களாக தொழிலில் அவரிடம் சிறு அபிப்ராயம் கூட தந்தையும் மகனும் கேட்டதே கிடையாது. ஆனால் குடும்பம் என்று அச்சாணி அவரை சுற்றியே சுழலும். இன்று முதன்முதலாக தன்னிடம் மகன் கேட்க அதுவும் தனக்கு பிடித்த பாரதியார் பாடல்கள் தனக்கு பிடித்து குரலின் வழியாக கேட்கும் போது இனிமை இனிமை தான் அவருக்கு..
"ஒரு நாள் எனக்கு பயம் கொடு வினய். நான் ஒரு லிஸ்ட் போட்டு தருகிறேன் எனக்கு பிடித்த பாடல்களை வரிசையாக.." என்று அவர் கூற..
"அதெல்லாம் முடியவே முடியாது. அந்த பொண்ணு கொஞ்ச நாள் மட்டும் தான் இங்க இருக்க முடியும். அதுக்குள்ள நான் எல்லாம் ரெக்கார்ட் பண்ணி ஆகணும். நீங்க இன்னிக்கு ஈவ்னிங் வரைக்கும் டைம் எடுத்துக்கோங்க.. அதற்கு பிறகு எனக்கு சொல்லுங்க" என்று போனை வைத்துவிட்டு அவன் திரும்பவும் வர்த்தினியை காண சிஸ்டத்தை பார்க்க... அங்கே வர்த்தினியோ அனைத்தையும் மறந்து ஏகாந்த கனவில் மிதந்து கொண்டிருந்தாள் தன்னவனுடன்.
கண்கள் இரண்டும் மூடியிருக்க..
முகமோ மென்மையை தத்தெடுக்க..
கன்னங்கள் இரண்டும் சிவந்திருக்க..
இதழ்களும் எச்சிலில் பளபளப்பத்துயிருக்க..
உடலோ கனவில் லயித்திருக்க..
அந்தக் கனவிலே சிக்கி கொண்டு இருந்தாள் பெண்ணவள்.
சிறுது நேரம் கூர்மையாக அவளை அவதானித்தவன் எளிதாக கண்டுபிடித்து விட்டான் அன்று போல் இன்றும் கனவு காண்கிறாள் என்று!!
"அடியே மாமி.. என்னை தொடாத.. கிஸ் பண்ணாத அப்படின்னு சொல்லிட்டு, நீதான் இதெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்க.. அதுவும் எனக்கே தெரியாம எனக்கு! கள்ளத்தனமா!! சரியான கள்ளி மாமி டி நீ" என்று சிஸ்டத்தில் தெரிந்த அவளது உருவத்தை பெரிதுபடுத்தி ரசனையாக பார்த்தவாரே ரசித்து சொல்லிக் கொண்டிருந்தான்.
இங்கே கனவு கண்டு இருந்தவள், மெதுவாக கண்களை திறந்து பார்க்க.. கனவின் நாயகனே அவள் முன்னால், இரு கைகளையும் கட்டிக்கொண்டு ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கி உதட்டை மடித்து தனது சிரிப்பை மீசைக்குள் அடக்கியவாறு அவளை பார்த்தான்.
வர்த்தினிக்கு கூச்சமாகி போனது. 'ச்சே.. என்ன மாதிரி கனவு கண்டோம்.. அந்த கனவின் தாக்கத்திலிருந்து வெளிவருவதற்கு முன்பே அவனையே பார்க்க வேண்டிய நிலை வந்து விட்டதே' என்று எண்ணி அவள் தன் உள்ளூர எழுந்த படபடப்பை மறைத்துக் கொண்டு மெதுவாக எழுந்து நின்றாள்.
ஆனால் பளிங்கு கண்ணாடி போல அவள் அகத்தை காட்டும் முகத்தை பார்த்தே அவளின் கனவு கண்டு கொண்டவனல்லவா வினய்!! அன்று அவ்வளவு பேசியவள், இன்று கனவு காண்கிறாள் என்று லட்டு மாதிரி கிடைத்த சான்சை மிஸ் பண்ணுவனா என்ன!!
"என்ன மாமி திரும்பவும் கனவா?" என்று குறும்புடன் அவன் கேட்க..
அவசரமாக "இல்லை.. இல்லை" என்று காதுகளில் இருக்கும் ஜிமிக்கிகள் அவள் கன்னத்தை தொட்டு மீள இரு பக்கமும் தலையசைத்தாள் அவள். அதைக் கூட ஒரு ரசனையாக பார்த்தான் வினய்.
"பொய் பொய்.. இப்படி எல்லாம் பொய் சொல்லாதேள் மாமி.. அப்புறம் போஜனதுக்கு புவா ஏதும் கிடைக்காமல் போய்ட போறது" என்று அவளை மாதிரியே அவன் பேச..
அவளுக்கு சட்டென்று சிவா பட்டாச்சாரியரான அவளது தந்தை சுப்புவின் நினைவு வந்தது. அவரும் இவ்வாறுதான் சொல்லுவார் அவளது சிறுவயதில். எதற்காகவும் பொய் சொல்ல கூடாது என்று.
ஆனால் இவனிடம் தாராளமாக சொல்லலாம். உண்மையை ஒப்புக் கொண்டால் இன்னமும் இவன் வைச்சு செய்வான் என்று உணர்ந்த வர்த்தினி அவனைப்பார்த்து "வள்ளுவர் சொல்லி இருக்கிறாரோனோ..
பொய்மையும் வாய்மை இடத்து" என்று
என்று கூறி மெச்சுதலாக அவனை பார்த்தாள்.
"மாட்டிகிட்டியே மாமி.. மாட்டிக்கிட்டியே.. அப்போ நீ இல்லைன்னு சொன்னது பொய். நான் சொன்னதுதான் உண்மை. என்ன கரெக்டா?" என்று உல்லாச சிரிப்புடன் அவன் கேட்க.. வசமாக இவனிடம் மாட்டிக்கொண்டோமே என்று திருதிருவென விழித்தாள் வர்த்தினி. அவளின் நயனங்களில் தொலைய இருந்த மனதினை அவள் கண்களைத் தவிர்த்து தப்பித்தான்.
சரி வா என்றவன் அதன் பின் அவளை அழைத்து சென்று அவனது இசை ஆல்பத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை குழுவினரிடம் அறிமுகப்படுத்தி வைத்தான். அவ் இசை குழு பல நாட்டினரும் உள்ளடக்கிய ஒரு கதம்ப இசைக் குழுவாக இருந்தது. முதலில் அவர்களை பார்த்து மிரண்ட வர்த்தினி, பின் இதுபோல் ஒரு வாய்ப்பு அவளது வாழ்நாளில் கிடைப்பது அரிது என்று மனமும் அறிவும் சேர்த்து உணர்த்தியதில் சந்தோஷத்துடன் தன் கூட்டில் இருந்து வெளி வந்து அவர்களிடம் சகஜமாக பழகினாள். அன்று மாலை வரை அவர்கள் உடனே தன் நேரத்தை செலவிட்டு ஆல்பம் பற்றிய சிறு சிறு குறிப்புகளை எடுத்துக் கொண்டு இவள் வெளியே வர..
அப்போது பிரதீபன் அந்த லீகல் அட்வைசரை பார்த்து வேண்டிய கையொப்பங்களை எல்லாம் பெற்றுக் கொண்டு வந்தான்.
"என்ன வர்த்தினி.. அதுக்குள்ள முடிஞ்சிடுச்சா போலாமா" என்று அவன் அலுப்புடன் கேட்க..
பின்னே வினய் கொடுத்தனுப்பிய ஒப்பந்தங்கள் அவ்வாறு.. இவன் போய் பார்த்த அந்த கத்துக்குட்டி லீகல் அட்வைசரும் தலையை பிடித்துக்கொண்டு அந்த ஒப்பந்தங்களை எல்லாம் படித்து முடிக்கவே அவருக்கு 3 மணி நேரங்களுக்கு மேலானது. அதற்குப்பிறகு அதில் எல்லாம் கையொப்பமிட்டு இவன் அதை பெற்றுக் கொண்டு வர ஒரு வழியாய் தான் போனான்.
அப்போது அங்கு வந்த வில்லியம்ஸ் பிரதீபனை பார்த்து அவன் கையிலிருந்து ஒப்பந்தங்களை பெற்றுக்கொண்டவன் "எவரிதிங் இஸ் ஓகே" என்று அவனிடம் மொழிந்து விட்டு, "நாளையிலிருந்து உங்களை அழைக்க கேப் வந்திடும். நீங்க அதிலேயே வந்துடலாம் மேம்" என்று வர்த்தினியிடம் கூறி சென்றுவிட்டான்.
ஒருவகையில் பிரதீபனுக்கு இது ஒருபுறம் 'அப்பாடா இனி டெய்லி இதுமாதிரி அலைய தேவையில்லை' என்று நிம்மதியாக இருந்தாலும்.. மறுபுறம் அப்படி வரும் தருணத்தில் தன்னை பற்றி நல்லவிதமாக கூறி இவள் மனதில் சலனத்தை உண்டு பண்ண முடியாது என்று வருத்தமும் கொண்டான்.
ஒன்றை இழந்தால்தான் மற்றொன்றை பெற முடியும் இதுதான் பொதுவான விதி!!
ஆனால் எதையும் இழக்காமல் எல்லாத்தையும் பெற வேண்டுமென்றால் எப்படி!!
அன்றிரவு வினய் தன் வீட்டிற்கு செல்லும் போது அவனது அன்னை மஞ்சுளா அவனுக்காகக் காத்திருந்தார். தான் விரும்பிய பாடல்களை ஒரு லிஸ்ட் போட்டு வைத்திருக்க அதை அவனிடம் கொடுத்தார். அதை வாங்கிப் பார்த்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை, ஆனாலும் "சரி மாம்.. இந்த லிஸ்ட்ட அந்த பொண்ணுகிட்ட கொடுத்துடறேன். பாடல் ரெக்கார்ட் ஆனதும் உங்களுக்கு எடுத்து வந்து காட்டுறேன்" என்றுவிட்டு தன் அறையை நோக்கி சென்று விட்டான். மஞ்சுளாவும் மகிழ்ச்சியுடன் உறங்கச் சென்றார்.
மறுநாள் காலை வர்த்தினி அழைக்க கேப் வந்துவிட, அதை பார்த்த முதலில் பத்மாவிற்கு சிறு சுணக்கம் ஏற்பட்டாலும் பின் இவளை அழைத்துச் சென்று விட தன் பையனுக்கும் நேர விரயம், பண விரயம் என்று அதிலும் தனக்கு சாதகமான விஷயத்தை கண்டுபிடித்து தெளிந்து கொண்டார்.
காலையில் தன் முன்னே ரெக்கார்டிங்க் அறையில் நின்று கொண்டிருந்த வார்த்தினியை பார்த்து வினய் தன் கையிலிருந்த லிஸ்டை அவளிடம் கொடுத்தான்.
அவளுக்கோ ஆச்சர்யம் தாங்கமுடியவில்லை அதிலிருந்த பாரதியார் பாடல்களை தெரிவு செய்த விதத்தை கண்டு..
'இவனுக்குள் இத்தனை ரசனையா?!' என்று ஆனந்த அதிர்ச்சியாக அவள் பார்க்க..
அவளின் நயன பாஷைகளை புரிந்தவன் "அப்படியெல்லாம் நீ என்ன தப்பா நினைக்காத மாமி.. இதுல இருக்கிற லிஸ்ட் எங்க அம்மா கொடுத்தது. அதனால இதுல உள்ளதை பர்ஸ்ட் நாம ஆல்பம் பண்ண பண்றோம். அதுக்கு அப்புறமா மத்ததை பார்க்கலாம்" என்று விட்டு அவன் செல்ல..
"அதானே இவனுக்காவது இந்த மாதிரி ரசனைகளாவது.. வந்துட்டாலும்" என்று அவள் உதட்டை சுழிக்க..
"ரொம்பவும் உதட்டைச் சுழிக்காத மாமி.. அப்புறம் அன்னைக்கு சொன்னதெல்லாம் விட்டுட்டு பாஞ்சு வந்து அதை கடித்து வைத்து விடுவேன்" என்று அவளை பார்க்காமலே சென்று கொண்டே அவன் கூற.. இவள் தான் அதிர்ந்துபோய் சுற்றுமுற்றும் பார்க்க.. அங்கே தமிழ் தெரிந்தவர்கள் இல்லை என்ற காரணத்தினால் தான் இவ்வாறு பேசி இருக்கிறான் என்று அவளுக்கு புரிந்தது. இவனை என்று அவன் மேல் காட்ட முடியாத கோபத்தை தன் கால்களில் கொண்டு வந்து தரையை ஓங்கி உதைத்து விட்டு இசைக் குழுவினருடன் சென்று கலந்து கொண்டாள்.
அங்கே அவர்களுக்குள் சிறு விவாதம் ஓடிக் கொண்டிருந்தது. அது ஒரே ராகத்தில் ஒவ்வொரு பாடல்களையும் அமைப்பதா? அல்லது பல ராகங்களின் கலவைகளிலா? என்று பேசிக்கொண்டிருக்க தன் இனிமையான குரலினால் அவர்களுக்கு விளக்கம் கொடுக்க ஆரம்பித்தாள் வர்த்தினி.
"ராகங்களின் அடிப்படையை மாற்றாத, அதே சமயம் இலக்கணப் புலமையோடியைந்து புதிய உருவம் பெற்ற இசையை உருவாக்கலாம்" என்று அவள் கூற..
அனைவரும் அவளது கூற்றை கூர்ந்து கவனிக்கிலாயினர்.
"புராதன இசையின் பெருங்கொடையான நமது ராகங்களில் உள்ள சுவையை அதனதன் குணங்களுக்கேற்ப நெஞ்சைத் தழுவும் இசைவார்ப்புகளாக நாம மாற்றலாம். விதம், விதமான ராகங்களை இணைத்து அழகு காட்டியும் பாடலை கேட்பவரை மகிழ்விக்கலாம். ஒரு வட்டத்துக்குள் முடங்கிக் கிடக்காமல், ராகங்களை வெளிக்கொணர்ந்து ராகம் பற்றிய சிந்தனை விரிவையும் நாம கொண்டு வர முடியும்.
வெவ்வேறு ராகங்களை இணைத்து பாடும் முறையை ராகமாலிகை சொல்லுவாங்க.. ராகமாலிகையில் பாடுவது என்பதும் இசையுலகிற்கு எங்கள் தமிழர்கள் வழங்கிய கொடை" என்று கூறும் அவளது வதனத்தில் தான் அத்தனை பெருமிதம் பொங்கி வழிந்தது.
"ராகமாலிகை மீன்ஸ்?" என்று அந்த இசைக் குழுவில் புதிதாக இணைந்த ராபர்ட் கேட்க..
"ராகமாலிகை என்றால் மாலையாகத் தொடுக்கப்பட்ட ராகங்கள் என்று அர்த்தம்.
ஒன்றுக்கு ஒன்று நெருக்கமான, ஒரே தன்மைவாய்ந்த ராகங்களில் பாடல்களை அமைப்பதும், அதே போல் வெவ்வேறு குண இயல்புகளைக் கொண்ட ராகங்களை இணைப்பதும் என்பது நமது இசை வகைகளில் முக்கியம் பெறுகின்ற அம்சம்.
எங்கள் தமிழ் பாட்டுகள்ல அதே மாதிரி நிறைய பாட்டுகள் இந்த ராகமாலிகை அமைப்பில் செய்து இருக்காங்க"
"ரியலி.. இட் சோ இன்ட்ரெஸ்டிங்" என்று லீனா கூற..
"ஒன்னு இல்ல ரெண்டு இல்ல நிறைய பாடல்கள் இந்த மாதிரி தொகுத்து வந்து இருக்கு. அதுல எனக்கு ரொம்ப பிடித்த பாடல் ஒன்னு இருக்கு அதை பாடி காட்டவா?" என்று அவள் கேட்க..
அங்கிருந்த அனைவர்களும் குஷியாகி "வர்த்தினி நீ பாடு" என்று என்று கூறினார்.
"வென்றிடுவேன் நாட்டையும் நாதத்தால்" என்ற அகத்தியர் படத்தில் வந்த பாடலை அவள் பாடிக் காட்ட மொத்த குழுவுமே அதில் மெய்மறந்து போயினர்.
ஏனென்றால்.. ராவணனும் அகத்தியரும் போட்டியாகப் பாடும் அமர்க்களப்பாடல். இசைவல்லாளன் ராவணனின் நையாண்டியும் , அகத்தியரின் பதற்றமும் , நிதானமும் பாட்டில் வெளிப்படும் பாடல்.
இனிய ராகங்களின் அழகுகளை மிகப்பெரிய தொகுப்பாக தந்த இசையமைப்பாளர் குன்னக்குடி வைத்தியநாதனின் இசைஞானத்தின் அபார வெள்ளிப்பாடு அந்த பாடல்!!
அவள் பாடி முடித்தவுடன் கரகோஷம் அந்த அறையை நிறைத்தது.
லீனா வர்த்தினியிடம் "மிக அழகாக பாடின.. சிம்ப்ளி சூப்பர்.. அமேசிங்" என்று அவளை கட்டி அணைத்து பாராட்ட.. மற்றவர்களும் அவளுக்கு கைகுலுக்கி பாராட்டு தெரிவித்தனர்.
ராபர்ட் "வர்த்தனி நீ சொன்ன ராகமாலிகை இதிலே இருக்கா?" என்று கேட்க..
"என்ன இப்படி கேட்டுட்ட? இதுல எத்தனை ரகங்கள் இருக்கு தெரியுமா? நாட்டை , பைரவி , தோடி , ஆரபி , சண்முகப்ரியா ,தர்பார் , ஹம்சத்வனி , வசந்தா , மோகனம் போன்ற ராகங்களால் ராகமாலிகையாக வந்த பாடல்" என்று அவள் கூற..
"ஹம்சத்வனி.. உன் பேரில் பாதி இதுல இருக்கு தானே" என்று ஜோன்ஸ் அவளிடம் கேட்க..
ஆமாம் என்று தலையசைத்த வர்த்தினியின் முகத்தில் அவ்வளவு ஒரு கர்வ புன்னகை..
"நான் பாடின பாட்டு மட்டும் கிடையாது என் பேரு கூட ஒரு ராகமாலிகை தான்" என்றாள் அவள்.
"அப்படியா?" என்று அனைவரும் கேட்க..
"ஆமாம் ஹம்சத்வனி.. ராகவர்த்தனி இந்த இரண்டு ராகங்களின் பெயரை சேர்த்து தான் எங்க அம்மா எனக்கு வைத்தாங்க.. ஹம்சவர்த்தினி" என்று அவள் கூறவும் வினய் அவ்வறைக்குள் நுழையவும் சரியாக இருந்தது.
"வாட் கைஸ்.. ஸ்டார்ட் பண்ணலாமா?" என்று அவன் கேட்க அனைவரும் ஓகே பாஸ் என்றவாறு தத்தம் இடத்திற்கு சென்று தயாராயினர்.
மஞ்சுளா தெரிவு செய்து கொடுத்திருந்த முதல் பாடல்தான் தற்போது வர்த்தினி பாடிக்கொண்டிருந்தது. செஞ்சுருட்டி ராகத்தில் தொடங்கி மகதி பைரவியில் சென்று கொண்டிருந்தாள் வர்த்தினி.
"கண்ணம்மா என் காதலி!!" என்று பகுதியில் வரும் "சுட்டும் விழிச்சுடர் தான் கண்ணம்மா" என்ற பாடல்..
தன் எட்டு அடுக்கு மாடி அலுவலகத்திலிருந்து ஒரு ஃப்ளோரை இவர்கள் ரெக்கார்டிங்காகவே தனியாக ஒதுக்கி ஆவன செய்தான் விரைவாக.. அவள் கையெழுத்திட்ட மறுநாளே!!
அவனின் அதிரடியில் வர்த்தினி தான் வாய் அடைத்து போனாள். இவள் பாடுவதற்கே இவனின் அதிவேகத்தில் அதிர்ந்தாள் என்றால், அவனின் முழு தொழில் ஆளுமையும் அதில் அவன் காட்டும் வேக விவேகத்தையும் கண்டால் பெண்ணவள் என்ன செய்வாளோ!!
வினய் விஸ்வேஸ்வரன், அந்த மகாதேவனின் பெயர்.. அவரைப்போலவே அடியும் நுனியும் மற்றவர்களால் கண்டுபிடிக்க முடியா அளவில் பெரும் வளர்ச்சியை பெற்று வளர்ந்து கொண்டிருப்பவன்.
கால் மேல் காலிட்டு இருக்கையில் சாய்ந்தவாறு அமர்ந்து கண்ணெடுக்காமல் பாடும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான் வினய். அவனே அறியாமல் அவளை ரசித்துக் கொண்டிருந்தான். அமர்த்தலாக அமர்ந்து தன்னையே பார்த்துக் கொண்டிருப்பவனை பார்க்க பார்க்க.. உள்ளே சிறிது உதறினாலும் அதை எல்லாம் வெளியில் காட்டாமல்.. காட்டாமல் என்ன? வேறு வழியில்லாமல் அவன் பார்வையை தவிர்த்து தன் முன் இருக்கும் பாடல் பற்றிய குறிப்புகளை பார்த்தவாறே தன் பாட்டை தொடர்ந்து கொண்டிருந்தாள் அவள். தப்பித்தவறி இருவரது பார்வைகளும் ஒன்றோடு ஒன்று உரசும் சமயங்களில் கருந்துளை என தன்னை இழுக்கும் அவன் பார்வையில் உறைந்தாள் பெண். ஆனால் அடுத்த கணமே தன்னை சமாளித்துக் கொண்டு பாட்டை அவள் தொடங்கினாள்.
ஆனால் அவன் பார்வையில் இருந்தது என்ன? சத்தியமாக அவளது பாடலை அவன் ரசிக்க வில்லை என்பதை அவள் அறிவாள். அவனை அவளுக்கு பிடிக்கவில்லை. அவன் அகம்பாவத்தை.. ஆணவத்தை.. கர்வத்தை.. அதற்கும் மேலாக அவனது பணத்தை.. ஆனாலும் அவனின் இந்த பார்வையை தவிர்க்க இயலாமல் தவித்துக் கொண்டிருந்தாள். பெரும்பாடுபட்டு அவனது பார்வையை தவிர்த்து அவ்வறையில் உள்ள அனைத்து பொருட்களையும் பார்த்தவாறு பாடிக் கொண்டிருந்தாள்.
மூத்தவர் சம்மதியில் - வதுவை
முறைகள் பின்பு செய்வோம்;
காத்திருப் பேனோ டீ? - இதுபார்,
கன்னத்து முத்த மொன்று!!
அவளின் இந்த வரிகளில் வழக்கம் போல ஒற்றை புருவத்தை தூக்கி அப்படியா?! என்று கேட்க..
ஆண்டவா.. இவன் பார்க்கும்போது இப்படிப்பட்ட வார்த்தைகளை எல்லாமா நான் பாடவேண்டும் என்று தனக்கு தானே திட்டிக் கொள்ளத்தான் முடிந்தது அவளால்.
அந்த முண்டாசுக் கவிஞன் தன் செல்லம்மாவை கண்ணம்மாவாக நினைத்து பாடியிருக்க.. அதிலிருந்து சிருங்காய ரசங்களில் மூழ்கி அமிழ்ந்து ரசித்து அவள் பாட.. இங்கே வினய்யோ அவளது ரசனைகளை எல்லாம் அவளிடமே கணைகளாக திருப்பிக்கொண்டிருந்தான்.
இவனை தவிர்க்கவும் இயலாது.. தடுக்கவும் இயலாது.. பின் எவ்வாறு தான் பாடுவது என்று குழம்பி தவித்தாள் அவள். அதுவும் அவளை வம்பு இழுப்பதற்கு என்றே அவன் செய்யும் சேட்டைகள் இன்னும் அவளை நிலைகுலையச் செய்யும். இன்று எவ்வாறாவது அவனிடம் இதைப் பற்றி பேசியே தீரவேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டாள் வர்த்தினி.
அந்தப் பாடல் மிக அருமையாக வர்த்தினியின் இனிய குரலாலும், இசைக் குழுவினரின் ஒட்டுகமொத்த முயற்சியாலும் முடிவுற்று பதியப்பட்டது. அதை தனது அன்னைக்கு போட்டு காட்டவென்று ஒரு காப்பி சிடியில் பெற்று கொண்டு சென்று விட்டான் வினய்.
ஒருவாறு அனைவரும் அடுத்த பாட்டுக்கு ஆயத்தமாகும் முன் சிறு இடைவெளி எடுத்துக் கொள்ளலாம் என்று கூறி, அடுத்து சந்திக்கும் நேரத்தை அறிவித்துவிட்டு கலைந்து சென்றனர். அவர்களுக்கெல்லாம் அவ்வூர் மிக பரிச்சயம். அதனால் இச்சிறிய இடைவெளியை பயன்படுத்தி அருகில் உள்ள இடத்திற்குச் செல்ல வர்த்தினியோ தனித்து விடப்பட்டாள்.
இங்கே நின்று வீண் பொழுது போக்குவதற்கு பதில் வினய் இடம் சென்று பேசிய தீரவேண்டும் என்று அவனது அறைக்கு சென்றாள் வர்த்தினி. அவளது நடவடிக்கைகளை சிசிடிவி கேமராக்கள் உதவி கொண்டு தன் சிஸ்டத்தில் பார்ப்பதே அவனது அலாதியான ஒரு பொழுது போக்கு என்பதை அவள் எங்கே அறிந்திருக்க போகிறாள்!!
இப்பவும் அவள் தன் அறையை நோக்கி வருவதை பார்த்து புருவங்கள் முடிச்சிட "எதற்காக மாமி நம்மை பார்க்க வருகிறா?" என்று யோசித்து முடிக்கும் முன் அறை கதவு தட்டப்பட்டது.
"கம்மிங்" என்ற ஆளுமையான குரலில், கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள் வர்த்தினி. அவளை பார்த்து எதிரில் இருக்கும் இருக்கையை காட்டியவன், நன்றாக நாற்காலியில் சாய்ந்து கொண்டு "சொல்லு மாமி.. என்ன சொல்லனும்?" என்று கேட்டான்.
"அது நீங்க.. என்னை பாக்குறச்சே.. நேக்கு.. என்னால ஒழுங்கா பாட முடியல. இனிமே அந்த மாதிரி எல்லாம் பார்க்காதேள்" என்று தட்டுத்தடுமாறி ஒருவழியாக அவள் கூறிவிட..
"என்னது பார்க்க கூடாதா? அம்சா மாமி அம்சமா இருக்கேள். உங்களை நான் பார்க்க கூடாதுனா எப்படி மாமி? அப்புறம் நான் போட்ட சபதம் எல்லாம் என்ன ஆகிறது" என்று இலகுவாக ஆரம்பித்தவன் ஆழ்ந்த குரலில் கூறி முடிக்க..
அதுவரை ஏதும் இதுபற்றி அவன் பேசாததால் மறந்துவிட்டு இருப்பான் என்று அவள் நினைத்திருக்க இன்று அவனின் பேச்சில் சீட்டுக்கட்டு வீடு போல் அனைத்தும் சரிந்தது உள்ளுக்குள் அவளுக்கு.
சற்று நேரத்திற்கு முன் ராகமாலிகை பற்றி மிக தேர்ந்த இசைக்கலைஞராக அவள் பேசியது என்ன? தற்போது தன் முன்னே சிறு பிள்ளை போல் திருதிருவென்று விழித்துக் கொண்டிருப்பது என்ன? என்று நினைத்தவனுக்கு சுவாரசியம் பிறந்தது அவனுள் அவளை பார்க்க.. பார்க்க..
"ஆமாம் நேத்து என்ன கனவு கண்ட மாமி.. மறைக்காம சொல்லு" என்று அவன் கேட்க..
இன்றும் அவள் ஒன்றும் இல்லை என்று இருபக்கமும் தலையாட்டி கூற..
மெல்ல எழுந்து அவளை அழமாக பார்த்தவாரே அருகே சென்றவன், அவள் அமர்ந்திருக்கும் நாற்காலியின் வெகு அருகே நின்று மேசையின் மேல், நுனியில் அமர்ந்தவாறு அவளை குனிந்து பார்த்தான்.
அவன் எழுந்து வந்ததற்கே அவளுக்கு படபடப்பாக இருக்க.. தற்போது தன் அருகில் அமர்ந்து குனியவும் இன்னும் உள்ளுக்குள் படபடத்தது அவளுக்கு. அதையெல்லாம் அவனிடம் காண்பிக்காமல் தனது புடவை நுனியை வழக்கம் போல் அவளது ஆள்காட்டி விரலில் சுற்றிக் கொண்டிருந்தாள்.
"சொல்லு மாமி" என்று இன்னும் அவளை நெருங்கினான்.
"தள்ளி.. நில்லுங்கோ" என்று அவள் எழ முற்பட அவள் கையைப் பிடித்து இருக்கையில் அமர வைத்தவன், "அவ்வளவு சீக்கிரம் தப்பித்து செல்ல முடியாது மாமி. கேட்டதுக்கு பதில் வரணும்" என்று அவள் காதில் கிசுகிசுக்க அதில் உள்ளுக்குள் அவளுக்கு நடுங்கியது. அவனின் மூச்சுக்காற்றும் மீசை உராய்வும் அவளுள் வெம்மை படர்ந்தது.
"அதான் அப்பவே சொன்னேனே ஒன்னும் இல்லைன்னு" என்று கூறியவள் அவனை தள்ள முயற்ச்சிக்க.. அவளால் சிறிது முடியவில்லை.
"அப்போ நீ சொல்ல மாட்ட.. நீ சொல்லலைன்னா கனவை என் இஷ்டத்துக்கு நான் மாற்றிக் கொள்வேன் மாமி" என்று மீண்டும் அவள் காதருகே அவன் கிசுகிசுக்க.. அதில் விதிர்விதிர்த்து பயந்து அவள் திரும்ப, சரியாக அவனது மீசை மீது அவளது செவ்விதழ்கள் உரசி நிற்க.. செவ்விதழ்களின் மென்மையை அவனது கற்றை மீசை பதம் பார்க்க.. கருவிழிகள் இரண்டும் விரிய அவனைப் பார்த்தவாறே அவள் இருக்க.. உள்ளுக்குள் அவளுக்குள் ஒரு மின்சாரம் ஓடி மறைந்தது.
எவ்வாறு தான் கண்ட கனவு இன்று பலித்தது என்று அவளுக்கு இதுவரை புரியவே இல்லை!!
"கன்னத்து முத்தமொன்று பாடி கேட்டு இருக்கேன் மாமி.. ஆனால் இந்த மீசை முத்தம் கூட புதுசா.. நல்லாத்தான் இருக்கு" என்று அவளின் இதழ்களை விலக்காமலே முணுமுணுத்தான் கிறக்கமாக வினய் விஸ்வேஸ்வரன்.