தளிர் 3

 

Sunitha Bharathi
(@sunitha-bharathi)
Member Moderator
Joined: 4 months ago
Messages: 26
Thread starter  

தளிர் : 3

 

அதிகாலை அலாரம் அடித்துக் கொண்டே இருக்க, "அம்மா… போன் அடிக்குது…" என்று ராதிகா மேலே ஏறி படுத்திருந்த குட்டியான் தூக்க கலக்கத்தில் சொல்ல, "ஹ்ம்ம்" என்ற முனங்கல் மட்டும் தான் அவளிடம்.

 

"அம்மா… ஆஃப் பண்ணு" என்று சொன்ன படியே தன்ஷி அவள் மேல் காலை தூக்கி போட, அதற்கும் ஹ்ம்ம் தான். "அம்மாஆஆஆ" என்று தள்ளி படுத்திருந்த மன்ஷிகா கூட கத்த, "ஹாங்…" முனங்கல் ஒலி மாறி வந்ததே தவிர அவள் எழுந்தப்பாடில்லை.

 

குடித்து விட்டு மட்டையானவன் போல் தூக்கத்தில் பிணாத்தி கொண்டிருந்தவளோ, "ஏய் ராதிகா… போனை ஆப் பண்றியா? இல்ல தூக்கி போட்டு உடைக்கவா?" என்று சகுந்தலா எரிச்சல் தாங்காது திட்டிய பிறகே… "என்ன அத்தை" என்று அடித்து பிடித்து எழுந்தாள். 

 

அதிகாலை 4 மணி. 'கொஞ்ச நேரம் தூங்கிறேனே!' உடலும், மனமும் கிடந்து தவிக்க, அவளுக்கு ஓய்வு கொடுக்க தான் ஆள் இல்லையே.

 

மேலே கிடந்த பிள்ளைகளுக்கு கட்டிப்பிடிக்க தலையணை வைத்து விட்டு எழுந்து சென்றாள். 

 

'இன்னும் எவ்வளவு நாள் தான் இந்த ராக்கோழி கூட கிடந்து மாரடிக்கனும் தெரிலையே! இந்த ஆட் ஷூட் முடிஞ்சதும் ஒரு மாசம் லீவ் போட்டு நல்லா வீட்ல இருந்து தூங்கனும்' என்று எண்ணிக் கொண்டவள் இதே எண்ணத்தில் பல விளம்பரப் படங்களை கடந்து விட்டாள். ஆனால் இன்னும் அவள் கேட்ட விடுமுறை நாள் தான் வந்து சேரவில்லை.

 

ஒரு மாதம் எதற்கு? இரத்தத்தை உறிஞ்சும் அந்த அட்டை தான் அரை நாள் கூட லீவ் கொடுக்க மாட்டனே. லீவ் என்று போய் நின்றால், மொத்தமாக ரிலிவ் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி விடுகிறேன். நல்லா ரெஸ்ட் எடு என்று சத்தமில்லாமல் அவள் வாழ்வாதாரத்திற்கு உலை வைப்பான்.

 

நம்ம ஆள் யோசிக்கிறதோட சரி, அவன் கிட்ட போய் பேச அல்லு விடும். அதான் வாயை மூடிக் கொண்டு வேற்றுக்கிரகவாசி போல் ஃபார்ம் ஆகிக் கொண்டிருப்பவனிடம் மண்புழுவாக உருண்டுக் கொண்டிருக்கிறாள்.

 

காலை 6 மணிக்கு ஷூட். இவள் ஐந்து மணிக்கே சென்று அனைத்தையும் சரி செய்தாக வேண்டும். வேம்புலி டான்னு 5.50க்கு 'ஷாட் ரெடியா?' என்று வந்து நிற்பான். அந்த நேரம் கிடந்து எதையாவது உருட்டிக் கொண்டிருந்தா, முருங்கை மரமே இல்லாமல் வேதாளமாக மாறி அவள் கழுத்தில் ஏறி அமர்ந்து டிரில் எடுக்க ஆரம்பித்து விடுவான். 

 

இந்த இரண்டு வருடத்தில் எத்தனை அனுபவம் கடந்திருப்பாள் அவனிடம். வேலை கரக்டா இருந்தா ஆளு பனி கரடி, கொஞ்சம் பிசகுனாலும் கொரில்லாவாக மாறி கையில் கிடைக்கும் ஆளை எல்லாம் தலை மேல் தூக்கி சுத்தி கண் காணா தூரம் வீசி விடுவான்.

 

அவனால் தூக்கம் மட்டுமல்ல, அவள் துக்கம் கூட அப்பாய்ன்மென்ட் கிடைக்காமல் வெளியே நிற்கிறதே. 

 

பாலாவின் இறப்பு கொடுத்த வலியை மறந்து புது வழி அமைத்து பயணிக்கும் பாதையில் இனி அவனால் தான் தினம் தினம் வலிகளை சுமக்க போகிறாள் என்று அறியாது எந்நாளும் போல் தன் வேலைகளை எல்லாம் முடித்து, குளித்து வந்தவள், சேலைக்கு உண்டான மதிப்பையே கெடுக்கும் அளவிற்கு, ஒரு இன்ச் கூட இடை, வேறு அங்கம் தெரியாது, இழுத்து பிடித்து சேஃப்டி பின் குத்திக் கொண்டாள்.

 

சுடிதாரில் உல்லாசமாக வலம் வந்தவள் சாக்கு பொதி போல சேலையை சுத்திக் கொண்டு ஓட கூட அவன் தான் காரணம். அவள் அரக்கன், அருணன் சம்ரித்.

 

ஒருநாள் ஷூட்டிங்கில் அவன் ஆக்சன் என்று சொல்லி கொண்டே ரெக்காடர் முன் அமர்ந்து ஷாட்டை பார்த்துக் கொண்டிருக்க, கேமரா முன் எக்ஸ்ட்ரா பிட்டிங் போல மெல்லிய சிவப்பு துணி ஒன்று வந்து வந்து போக, கடுப்பாகி விட்டான். 

 

"எவன் டா அது?" என்று கத்திக் கொண்டே இருக்கையை பின்னே தள்ளி வேகமாக எழுந்து வந்தவன்,பெண்ணென்றும் பாராது, சுற்றி நின்றிருக்கும் ஆடவர்களை கூட கருத்தில் கொள்ளாது, அவன் படம் எடுக்க இடையூறாக இருந்த துணியை உருவ, அதுவோ ராதிகாவின் துப்பட்டா.

 

கேமரா அருகே ஒதுங்கி நின்றிருந்த ராதிகாவோ, தன் துப்பட்டாவை எவ்வளவு தான் அடக்கி பிடித்தும் அடங்காமல் அன்று அடித்த அதிமதுர காற்றில் கேமராவிற்கு சாமரம் வீச, விருமாண்டி ஆகிவிட்டான் அருணன். 

 

ஷாட் நல்லா போய்கிட்டு இருக்கும் போது குறுக்க குறுக்க வந்து விழுந்து ஷாட்டை கெடுத்தால் அவனும் கடுப்பாக தானே செய்வான். ஆனால் அவனுக்கு கோபம் வந்துவிட்டால் ஆண், பெண் பாரபட்சம் பார்க்காது நடந்து கொள்வான். அதில் பழியாவது என்னவோ இப்போதெல்லாம் ராதிகா தான்.

 

பெண்ணவள் தேகமோ ஆணவன் செயலில் கூசி போனது. தன் கரம் கொண்டு உடலை மறைத்துக் கொண்டவள், "சாரி சார்… இனி இப்படி நடக்காது. சால குடுங்க" என்று சட்டென்று துளிர் விட்ட கண்ணீரோடு கேட்க,

 

அதை சுருட்டி தன் பேண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டவனோ, "இனி எந்த டிஸ்டபென்சும் இருக்காது. ஆக்சன்" என்று அவள் விழிகளை அழுத்தமாக பார்த்து சொன்னவன், பழைய இடத்தில் சென்று அமர்ந்து கொண்டான்.

 

இங்கே பல ஆண்கள் மத்தியில் மானம் காக்கும் மெல்லிய ஆடை இழந்து நின்றிருந்த ராதிகாவுக்கோ கண்ணீர் முட்டி கொண்டு வந்தது.

 

அவனிடம் சென்று துப்பட்டாவை கேட்பதும், சுயமாக சிங்கத்தின் வாய்க்குள் தலையை விடுவதும் ஒன்று தான் என்பது இந்த இரண்டு வருட வேலை அனுபவம் கற்றுக் கொடுத்த பாடம் அவளுக்கு.

 

அங்கு நிற்கவே உடல் கூசியது. அங்கிருந்து செல்ல முயன்றவள், "ராதிகா" என்ற உருமலில் அப்படியே நின்றாள்.

 

"ஆர்டிஸ்ட்க்கு டயலொக் சொல்லி கொடு" என்று அருணன் அங்கிருந்தே உத்தரவு பிறப்பிக்க, ஓடி ஒளியவும் முடியாத அவல நிலையில் நின்றிருந்த அபலையோ "ஹ்ம்ம்" என்று மண்டையை ஆட்டிக் கொண்டே விளம்பர படத்தின் வசனங்களை சொல்லி கொடுக்கலானாள்.

 

சுடிதாருக்கு துப்பட்டா போடாதது அங்கு ஒன்றும் பெரிய விஷயமல்ல. அங்கு இருக்கும் அநேக பெண்கள் துப்பட்டா போடுவதில்லை தான். ஆனால் ராதிகாவுக்கோ அத்தனை பேர் முன்னிலையில் உருவியது தர்ம சங்கடமாக இருந்தது. ஏனோ அனைத்து பார்வையும் தன் உடலை மொய்ப்பது போன்ற மாய தோற்றம். ஒவ்வாத உணர்வு. மறையவும் முடியா நிலை. அன்றிலிருந்து சேலை தான். அதிலும் முந்தானையை எடுத்து இடுப்பு பகுதியில் பின் வைத்து குத்தி கொள்வாள். எதுவும் யார் கண்ணையும் உறுத்தாத வகையில்.

 

பக்காவாக ஆடை உடுத்தி, ஈரம் சொட்ட சொட்ட தலையை பின்னலிட்டு கொண்டாள். இதற்கும் ஒரு முன் கதை இருக்கு. துப்பட்டா பறி போனது போல், மங்கையின் நீண்ட கூந்தல் அருணனிற்கு காணிக்கையான கதை.

 

அருணன் சொன்ன வேலைகளை மனதில் குறித்துக் கொண்டு, வேகமாக திரும்பியவள் விரித்து போட்டிருந்த நீண்ட கருங்கூந்தல் அவன் முகத்தில் மோதி இருக்க, நெற்றி கண் திறந்து எரித்தவனோ "எடுடா அந்த கத்திரியை" என்று இழுத்து பிடித்து, பார்த்து பார்த்து அவள் வளர்ந்து வைத்திருந்த கூந்தலை கழுத்து வரை வெட்டி விட்டான்.

 

"வேணா சார்… பிளீஸ்" என்று கெஞ்சியவளை செட்டே அய்யோ பாவம் ரேஞ்சில் பார்த்ததே தவிர ஒரு மனுஷா பக்கத்துல வரல. நர நரவென அவன் வெட்டி விட்டிருந்த முடியை பார்லர் போய் அழகாக வெட்டிக் கொண்டு வீடு வந்து சேர,

 

சகுந்தலா துவக்கம் அவளை காணும் கண்ணெல்லாம் "இந்த வயசுல உனக்கு எதுக்கு பாப் கட்டிங்? இளமை திரும்புதோ? புருஷனை வாரி கொடுத்துட்டு மினுக்கிட்டு திரியுறா" என்று ஆயிரம் வசவுகள். 

 

'சப்பா முடியல சாமி' என்று சோர்ந்து போனவள் முடியோ இரண்டு வருடங்கள் கழித்து இப்போது தான் முதுகை தொட்டிருந்தது. 'படுப்பாவி பயன் என்ன ஆக்கத்துல வெட்டி விட்டானோ? வளரவே மாட்டேங்குது!' என்று தலை வாரும் போதெல்லாம் அருணனிற்கு தனி அர்ச்சனை நடக்கும். 

 

அவன் கோபத்திற்கு எல்லாம் ரோசம் கொண்டு 'நீயும் வேணாம், உன் வேலையும் வேணாம்' என்று திட்டி விட்டு வர மனம் கிடந்து தவிக்கும். ஆனால் இவனுக்கு முன்பு ஒரு இடத்தில் வேலை பார்த்த அனுபவம் இந்த வேலையை விட்டு செல்ல துணிச்சலில்லை.

 

அருணன் கண் மூடி தனமாக கோபப்படுவான் தான். ஆனால் அவன் வட்டத்தில் அவள் உணரும் பாதுகாப்பு உணர்வை வேறெங்கும் உணரவில்லை. அதுவும் கூட எத்தனை குடைச்சல் கொடுத்தாலும் அவள் இங்கு நிலைத்து இருக்க காரணம்.

 

முகத்திற்கு பவுடர் போட்டு, நெற்றியில் சிறிய கருப்பு போட்டு வைத்துக் கொண்டவள், அவளை பார்த்து சிரித்துக் கொண்டிருந்த பாலாவின் புகைப்படத்தை நிமிர்ந்து பார்க்க, அவள் அருகே சுவரில் சாய்ந்து நின்று கொண்டிருந்தான் பாலா அருவமாக.

 

'எப்படி இருக்கேன் மாமா?' புருவத்தை ஏற்றி இறக்கி அவள் அபிப்ராயம் கேட்க, 

 

"உனக்கென்ன பாப்பா? எப்பவும் நீ அழகி டி" என்று கையால் திருஷ்டி கழித்து அவன் சொல்ல, திருப்திகரமான புன்னகை அவள் இதழ்களில்.

 

"அத்தை போய்ட்டு வரேன்" என்று கைப்பையை தோளில் மாட்டிக் கொண்டு அவள் கிளம்ப, "பத்திரமா, ஓரமா ஒதுங்கி போ" என்று சொன்னவர் தூக்கத்தை தொடர, கதவை சாத்திவிட்டு நடந்தவள் உடன் பாலாவும் நடந்தான்.

 

"மாமா நைட் எங்க போன நீ?" 

 

"ஏன் டி நைட் கூட எனக்கு சுதந்திரம் கிடையாதா? என்னை ரொம்ப கண்ட்ரோல் பண்ற பாப்பா நீ" என்று கோபித்துக் கொண்டான் அவன்.

 

அவளோ அவன் மழுப்பல் பதிலில் நடுவீதியில் நின்று அவன் முகத்தை ஆராய, அவனோ மாட்டிக் கொண்ட ஆடு திருடன் போல் முழித்தான். 

 

"இல்ல ஏதோ தப்பா இருக்கே!" சந்தேக பார்வையை அவன் மீது வீசினாள் அவன் மனைவி.

 

"ஆவிகள் சங்க மீட்டிங் போனேன். என்னை நோண்டாமா ரோட்ட பார்த்து நட பாப்பா. எதிர்த்தாப்புல ஆள் வருது" என்று நடு வீதியில் தனியாக நின்று பேசிக் கொண்டிருப்பதை நினைவு படுத்தினான்.

 

ராதிகாவும் சாதரணமாக திரும்பி நடக்க, எதிரில் சைக்கிளில் வந்த பால்காரனோ அவளை வித்தியாசமாக பார்த்துக் கொண்டே அஞ்சி தான் சைக்கிளை அவளை விட்டு தள்ளியே ஓட்டி சென்றான்.

 

'ஒருவேளை பைத்தியமா இருந்து மேல பாய்ஞ்சிட்ட, வீட்டுக்கு ஒத்த புள்ள ஆத்தா, இன்னும் கல்யாணம் கூட ஆகல. நீ பாட்டுக்கு மேல விழுந்து கடிச்சு வச்சு குடும்ப வாழ்க்கைக்கு தகுதியில்லாம ஆக்கி விட்டுறாத' என்று பயந்து வேகமாக சைக்கிளை மிதித்து சென்று விட்டான்.

 

அவன் சென்றதும் மீண்டும் அவள் உரையாடல் தன்னவனுடன் தனி உலகில் தொடர்ந்து கொண்டு தான் இருந்தது. 

 

  *****

 

கோல்டன் கலரில் ஜிகு ஜிகுவென கில்ட் தாள் மின்ன, தன் கையில் இருந்த கிஃப்ட் பாக்ஸை அத்தனை ஆனந்தமாக பார்த்துக் கொண்டிருந்தார் பட்டம்மா.

 

சுதர்சனாவிற்கான பிறந்த நாள் பரிசு. அதுவும் அவள் பாசதிற்காக ஏங்கி தவிக்கும் அவள் தந்தையிடம் இருந்து.

 

"இத நீங்களே பாப்பாகிட்ட கொடுத்தா ரொம்ப சந்தோஷம் படுவா ஐயா" என்று அவர் பரிசுத்த மனதுடன் கூற, வெடுக்கென்று அவரிடம் இருந்து கவரை பிடிங்கியிருந்தான் அருணன்.

 

"இல்ல இல்ல நானே குடுக்றேன்" என்று பட்டம்மா அவனிடம் இருந்து மெதுவாக அதை வாங்கிக் கொள்ள, அவரை தீர்க்கமான பார்வை பார்த்தவன், அறையில் தூங்கி கொண்டிருந்த தன் மகள் மீது பார்வையை திருப்பி, "இது…" என்று நிறுத்த, "யாருக்கும் தெரியாதுங்க ஐயா" என்று அவசர அவசரமாக சொன்னார் பட்டம்மா. 

 

"சனாவுக்கு கூட" என்று கடை விழி பார்வையில் அவருக்கு உத்தரவிட… "சரிங்க ஐயா" என்ற பட்டம்மா மட்டும் அறிந்த இந்த அருணின் முகம் யாரும் அறியா ரகசியமே.

 

ஏக்கமாக எட்ட நின்று மகளை பார்த்தவன், கனத்த மனதுடன் அறையை விட்டு வெளியேறினான். இந்த நாள் தன் வாழ்க்கையில் வந்திருக்கவே கூடாது என்று அவன் ஒவ்வொரு நாள் இரவும் தவிக்கும் ஒரு நாள் தான் இது. எப்போதும் காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்து சுறுசுறுப்பாக அடுத்தடுத்த வேலை பின்னே ஓடுபவன் மனமோ இன்று ஓய்ந்து போய் அறையில் முடங்கி கொண்டது.

 

  (அப்போ ஷூட்டிங் போகலையா? ஆளில்லாத கடைக்கு தான் அந்த புள்ளை நாலு மணிக்கே அலாரம் வச்சி எழுந்து ஓடுதா? கிராதகா! ஒரு வார்த்தை சொல்லி இருந்தா அதுவும் ஒரு நாள் நிம்மதியா தூங்கி இருக்குமே… படுபாவி பயன்…)

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top