அரன் 18

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 6 months ago
Messages: 207
Thread starter  

ஆருயிர் 18

“இந்த வயசுல சலனப்படுறதும் பிற பாலினத்தால ஈர்க்கப்படுறதும் காதலில் விழுகிறது எல்லாம் சகஜம் மா. ஆனால் அந்த பையன் உனக்கானவனா? நீ நீயாக இருக்க அனுமதிப்பவனா அதை முதல்ல பார்த்துக்கோ..!!” என்ற தந்தையின் வார்த்தைகள் திரும்ப திரும்ப யாழினியின் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

 

“சரிதான்.. இத்தனை நாள் அனுபவத்தில் அவருக்கு தெரியாததா??” அதிரதனின் வார்த்தைகளும் அவனின் நடவடிக்கைகளும் ஒன்றுக்கொன்று கொஞ்சமும் பொருந்தாதது அவளுக்கு அனைத்தையும் உணர்த்தியது. எதுக்காக அரவிந்தை கடத்தினேன் என்பதை கடைசி வரை அவன் கூறவில்லை.

 

ஆனால் யாழினியின் அனுமானம் அவன் தங்கைக்காகத்தான் கடத்தியிருக்கிறான். அதையும் தான்டி எங்கள் இரண்டு பேருக்கும் இடையே உள்ள நட்பு அவனை பாதித்திருக்கிறது என்று புரிந்தது. 

 

“அப்போ.. இன்று அர்வி நட்பாக இருக்கிறான் என்று அரவிந்தை தூக்கியவன்.. நாளைக்கு என் தந்தை பாசமாக இருக்கிறார் என்று அவரை தூக்குவானா? என்ன லாஜிக் இது??” என்று புரியவில்லை அவளுக்கு.

 

ஒரு வேளை யாழினியும் மனதால் அவனை காதலித்திருந்தால் அந்த காதல் சொல்லிருக்கும் அவளுக்கு யாரும் முக்கியம் என்று?? அதை அவளும் உணர்ந்து இருப்பாள்.. அவனுக்கு உணர்த்தி இருப்பாள்!! ஆனால் இங்கு இவளிடம் காதல் என்ற ஒன்று இல்லவே இல்லையே பின் எதை? எப்படி? யாரிடம் புரிய வைக்க??

 

“வேண்டவே.. வேண்டாம்!! ஒவ்வொரு விஷயத்திலும் அந்தஸ்து பேதமும்.. தான் என்ற ஆணவமும்.. தனக்குப் பின் தான் மற்றவர்களும் என்ற இவனின் இந்த கொள்கைகள் கொஞ்சம் கூட நமக்கு ஒத்து வராது” என்று தெளிவாக முடிவு எடுத்தவள் அதன்பின் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு பள்ளியிலிருந்து நேராக வீட்டுக்கு வந்து விட்டாள்.

 

அன்னையிடம் “எனக்கு அங்க செட் ஆகல மா.. பாண்டிங் இருக்க சொல்றாங்க.. ரெண்டு வருஷம் மூணு வருஷம் இருக்கணுமாம். இதைவிட வேற ஏதாவது நல்ல ஆப்பர்சூனிட்டி கிடைச்சாலும் போக முடியாது. இன்னைக்கு இத பத்தி கொஞ்சம் பேசிட்டு இருந்தாரு கர்ஸ்பாண்டன்ட்.. அதுக்கு நான் மறுப்பு தெரிவிச்சேன். கொஞ்சம் எனக்கும் அவருக்கும் வாக்குவாதம். நான் வேலை வேண்டாம் என்று வந்துட்டேன்” என்று மல்லிகாவிடம் கூற மல்லிகாவோ அதிர்ச்சியோடு அவளை பார்த்தவர் “வரவர உனக்கு வாய் ரொம்ப ஜாஸ்தி ஆயிட்டு யாழினி! கொஞ்சம் அதை கட்டுப்படுத்து.. உனக்கு புடிக்கலைன்னா அங்கே நீ இருக்க நாங்க நிர்பந்திக்க மாட்டோம் தான். ஆனால் அதை இவ்வளவு சூடாக சண்டை போட்டுட்டு சொல்லணும்னு அவசியம் இல்லை.. தண்மையாக சொல்லிட்டு வந்திருக்கலாம். வார்த்தைகள் நம் வாயில் இருக்கும் வரை தான் நாம் அதற்கு எஜமான்!! அப்படி அது வெளியே வந்துவிட்டால் நாம் சொன்ன வார்த்தைகள் தான் நமக்கு எஜமான். புரியுதா உனக்கு?” என்றதும் அவள் அன்னையை பாவமாக பார்க்க..

 

“மூஞ்ச மட்டும் இப்படி வச்சுக்க புரிஞ்ச மாதிரி.. ஆனா புரிஞ்சுதா இல்லையான்னு எனக்கு தெரியல! உன்னை எல்லாம் நாளைக்கு எவன் கையில கட்டி கொடுத்து என்ன பண்ண போறேன்னா?? போ..!” என்று புலம்பியப்படி அவர் சென்று விட்டார்.

 

சொக்கலிங்கம் ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும் அருகில் இருக்கும் டுடோரியல் சென்டர் டியூஷன் சென்டர் போன்றவர்களுக்கு அவ்வப்போது சென்று மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருவார். இன்றும் அதுபோல ஒரு டுடோரியல் சென்று இருந்தவர், மதியம் போல வரும் பொழுது வீட்டு வாயிலில் மகளின் டூவீலரை பார்த்துக் கொண்டு யோசனையோடு உள்ளே வந்தவரிடம் மல்லிகா அனைத்தையும் போட்டு உடைக்க.. யோசனையோடு தொலைக்காட்சியில் பாடலை ரசித்து கொண்டிருந்த மகளை பார்த்தார்.

 

“சரி விடு மல்லிகா.. எப்படியும் நாம அவளுக்கு கல்யாணம் பண்ணா அந்த ஊருக்கு போகும்போது இங்கு வேலையை விட தானே வேணும்! அப்படி நினைச்சுப்போம்!! அவளுக்கு வயசாகுதுல மாப்பிள்ளை பார்ப்போம் விடு” என்றதும் இந்திய சராசரி பெற்ற அன்னைக்கு இதைவிட பெரு மகிழ்ச்சி என்ன? மகளை நல்ல இடத்தில் ஒப்படைக்க வேண்டும் என்பதை தவிர..

 

“இவ்வளவு நாட்களாக அப்பாவும் பொண்ணும் தான் இழுத்துக் கொண்டு இருந்திங்க..” இன்று கணவனே கூறியவுடன் “அதை சொல்லுங்க.. நான் நல்ல நாள் பார்த்து அவ ஜாதகத்தை எடுத்து வைக்கிறேன்” என்று அவர் கேலண்டரை தேடி சென்றதும் மெல்ல மகளின் அருகே அமர்ந்தார் சொக்கலிங்கம்.

 

“என்னாச்சு யாழினி? என்ன நடந்தது?” என்றதும் தான் அம்மாவிடம் சொன்னதை அப்பா நம்பவில்லை என்று புரிந்தவள், சிறுசிறுப்புடன் “ஏம்பா அங்க நடந்ததை தான் சொன்னேனே அம்மா சொன்னதை நீங்க நம்பலையா?” என சிரிப்புடன் கேட்டாள்.

 

“எனக்கு என் பொண்ணை பத்தி தெரியும்!! என்ன நடந்ததுனு சொல்லு? நான் என்ன உங்க அம்மாவா? நீ சொன்ன எல்லாத்தையும் நம்புவதற்கு?” என்று மகளை அறிந்தவராக சொல்ல..

“அதுதான் அப்பா!” என்று செல்லமாக அவர் புஜத்தில் தலை சாய்த்துக் கொண்டவள் வெகு நேரம் அமைதியை கடைப்பிடிக்க ‘ஏதோ பெருசாக வரப்போகிறது!’ என்பதை அனுமானித்த சொக்கலிங்கம் வாஞ்சையாக அவள் தலையை வருடிவிட்டார்.

 

“எதா இருந்தாலும் நாம பாத்துக்கலாம் யாழினிமா.. அப்பா இருக்கேன். அம்மா இருக்கா! எல்லாத்துக்கும் மேல அரவிந்தன் இருக்கான்” என்றதும் என்ன தன் முகத்தை அவர் புஜத்தில் அழுத்தமாக முட்டி அழுத்திக் கொண்டிருந்தாள். அதிலேயே அவள் தன் அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறாள் என்று புரிந்தது சொக்கலிங்கத்திற்கு. அதுவும் மல்லிகாவுக்காக தான், இந்த அழுகையை கட்டுப்படுத்தப்படலாம். இல்லை என்றால் அவள் தந்தையிடம் அவளுக்கு என்றுமே தடை இருந்ததில்லை தன் மன உணர்வுகளை கொட்ட…

 

“நாம வேணும்னா கொஞ்சம் வெளியில போயிட்டு வரலாமாடா?” என்றதும் “வேண்டாம் பா! அப்புறம் அம்மாவுக்கு சந்தேகம் வரும்” என்ற அவள் கண்ணீரை உள்ளெடுத்துக் கொண்டு கலங்கிய கண்களை அப்பாவின் சட்டையில் இல்லையே துடைத்து விட..

 

“வாலு குட்டி.. உங்கம்மா கஷ்டப்பட்டு துவைத்தது. பார் கறையாக வைக்கிற.. உன் கண்ணில் உள்ள காஜல் எல்லாம் இதுல தான் ஒட்டி இருக்கு” என்று சொல்ல..

 

“ நல்லா வாங்குங்க திட்டு.. இன்னும் நாலு எக்ஸ்ட்ரா வாங்குங்க” என்றவள் மேலும் மேலும் துடைத்து விட்டவரின் குறும்பை கண்டு ரசித்தார் சொக்கலிங்கம்.

 

“சரி சொல்லு.. என்ன ஆச்சு?” என்றதும் ஒரு பெருமூச்சு விட்டு அப்பாவின் கைகள் விரல்களோடு தன் கை விரல்களை கோர்த்துக் கொண்டவள் “அரவிந்த் எங்கேயும் போகலப்பா.. அவனை கடத்தி இருக்காங்க” என்றதும் “என்னது கடத்திட்டாங்களா? என்ன காரணம்?” என்று அதிர்ச்சி அடைந்தவரின் கையைத் தட்டி “அப்பா..” என்றதும் மனைவியை திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு “என்னடா சொல்ற அர்விய ஏன் கடத்தனும்?” என்று பதட்டத்தோடு கேட்டார்.

 

“அரவிந்தை யார் முதல்ல கடத்தினார்கள் தெரியுமா? என் ஸ்கூல் கரஸ்பாண்டெட் அதிரதன் வர்மா? அதாவது இங்கே ஆர்த்தியா நடிச்சா இல்லையா அவளோட அண்ணன்” என்றதும் மேலும் திகப்படைந்து “அந்த பொண்ணு ஆர்த்தி ஏதாவது போய் அவங்க அண்ணன் கிட்ட தப்பா சொல்லிட்டா டா.. அதனால நான் அரவிந்தன தூக்கிட்டாங்களா? காலையில அவன் குளிச்சிட்டு வரும்போது முதுகு எல்லாம் தடித்து கன்னி போய் இருந்தது. என்னடானு கேட்டதுக்கு ஒன்னும் இல்ல மாமான்னு சொல்லி சிரிக்கிறான்.. முதுகு புஜத்துல எல்லாம் இருந்தது. காலுல இருக்கான்னு எனக்கு தெரியல! என்னமா நடக்குது..?? ஒரே பதட்டமா இருக்கு எனக்கு” என்று மகளை கலவரமாக பார்த்தார் சொக்கலிங்கம்.

 

அவள் மீண்டும் பெருமூச்சு ஒன்று விட்டு அப்பாவை பாவமாக பார்த்தாள். “ஒருவேளை அந்த ஆர்த்தி பொண்ணு எதுவும் தப்பா சொல்லி இருக்குமோ நான் அரவிந்த் பத்தி! அவன் அந்த மாதிரி பிள்ளை இல்லையம்மா” என்றதும் அவள் மறுப்பாக தலை அசைத்தால்.

 

“ஆர்த்தி அவங்க அண்ணன் கிட்ட எதுவுமே சொல்லல பா.. அவங்க அண்ணனுக்கு விஷயம் சொன்னது கூட நான் தான்” என்றதும் ஓ என்ற சொக்கலிங்கம் யோசனையாக மகளை பார்க்க..

 

“அரவிந்தை கடத்த காரணம்…” என்று நிறுத்தி தந்தையின் கண்களை ஆழ்ந்து பார்த்தவள் “நான் தான்.!” என்றாள்.

 

“என்ன நீயா??” என்று அவர் அதிர்ச்சியில் வேகமாக கத்தி விட மல்லிகா அங்கிருந்து “என்னங்க என்ன ஆச்சு?” என்றதும் “ஒன்னும் இல்லம்மா.. இங்கே யாழினி கிட்ட ஸ்கூல்ல நடந்தது பத்தி பேசிட்டு இருக்கேன். நீ நல்லா நாள் பா”ரு என்றதும் அவரும் நல்ல நாள் பார்த்துக் கொண்டே கோதாவரிக்கு ஃபோன் செய்து அருகில் இருக்கும் ஜோசியர் பற்றி கேட்க ஆரம்பித்தார்.

 

“ஆமாம்பா.. நான் சொல்லல அந்த நான்.. சலனம்.. அது இந்த அதிரதனை தான்…” இன்னும் திடுக்கிட்டு மகளைப் பார்த்தாள் சொக்கலிங்கம்.

 

“இல்லப்பா.. அது லேசா சலனம் தான்” என்று குற்ற உணர்வோடு அவள் தலை குனிந்து அமர்ந்தாள்.

 

“நான் ஏற்கனவே சொல்லிட்டேன் மா.. இந்த வயசுல இதெல்லாம் சகஜம். ஆனால் இதை கடந்து வரணும். அவன் உனக்கு ஏத்தவனா.. நீ நீயா இருக்குற அனுமதிப்பவனா மட்டும் பாத்துக்கோ! இன்னைக்கு அரவிந்த் பொண்ணுக்கு தோழனா இருப்பதினால் அவனை இப்படி பண்ணாருன்னா.. அடுத்து..” என்று சற்று பயத்தோடு கேட்கவே “இல்லப்பா நான் அன்னைக்கு காலைல தெளிவா பேசிட்டு வந்துட்டேன்! இனிமே அவருக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை. அதுவும் கட் அண்ட் ரைட்டா பேசிட்டு தான் வந்துட்டேன்” என்று காலையில் அவளுக்கும் அதிரதனுக்கும் நடந்த சம்பாஷனை கூறியதும் பெருமூச்சு ஒன்று விட்டவர் “எனக்கு என்னமோ இப்படியே விடுவானு தெரியல” என்று யோசனையோடு கூறினார்.

 

“எதா இருந்தாலும் பாத்துக்கலாம் பா! அவன்கிட்ட பணம் இருக்கு.. நம்ம கிட்ட அறிவு இருக்கு! நிமிர்வு உண்மை இருக்கு.‌ எதையும் எதிர்கொள்ளலாம் பா” என்று சிரிக்கும் மகளின் தோளை தட்டிக் கொடுத்தவர், “எங்கே போனாலும் இனி தனியா போகாதே! அரவிந்தன கூட்டிட்டு போ” என்று கண்டிப்பாக சொன்னார்.

 

அந்த கண்டிப்பின் பின்னே அவரின் பாசமும் பயமும் தெரிய சரி என்று தலை அசைத்துக் கொண்டாள்.

 

‘இங்கே சினிமாவில் கதைகளில் காண்பது போல வேண்டாம் என்ற பெண்ணை அதிரடியாக தூக்கி திருமணம் செய்து கொள்வானோ? அல்லது வேறு ஏதும் செய்து விடுவானோ?’ என்ற பயம் சொக்கலிங்கத்திற்கு அதிகமாக இருந்தது.

 

‘ஒரு முறை பெயர் போனால் போனது தானே! என்னதான் பெண்ணியம் பேசி அதற்கு தக்க பெண்ணை நிமிர்வாக வளர்த்தாலும் அந்த சொல்லோ செயலோ கடைசி வரை அவளை பாதித்துக் கொண்டுதான் இருக்கும் என்று இன்றைய சமூகத்தின் அவல நிலையை நினைத்து ஒரு பெண்ணை பெற்ற தகப்பனாய் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானார் சொக்கலிங்கம்.

 

அடுத்த நாள் அவள் வெளியே செல்ல அனுப்பவே மறுத்துவிட்டார் ‘நீ வீட்டிலேயே இரு!’ என்றதும் மல்லிகா கூட அதிசயமாக கணவனை பார்க்க.. “அது ஒன்னும் இல்லம்மா.. கல்யாணம் பேச போறோம். அதுவரை நம்ம வீட்டுல பார்ப்போம். அதனால்தான் அவளை ரொம்ப வெயில் போக வேணான்னு சொன்னேன்” என்றதும் கணவனை ஒரு மாதிரியாக பார்த்து “என்னடா அதிசயமா இருக்கு.. இதை நான் சொன்னால் பத்தாம் பசிலித்தனம்! அது இதுன்னு பேசுவீங்க.. இப்போ என்ன நீங்களே இப்படி பேசுறீங்க? என்னமோ இருக்கு உங்க கிட்டயும் உங்க பொண்ணு கிட்டயும் ரகசியம்? கண்டுபிடிக்கிறேன்!!” என்று அவர் சற்று இலகுவாக கூறி சென்றாலும் உண்மை இருவருக்கும் சுட்டது.

 

யாழினி பள்ளிக்கூடத்தில் நடந்ததை பற்றி எதையும் அரவிந்திடம் கூறவே இல்லை. ஆனால் சொக்கலிங்கத்தால் அப்படி இருக்க முடியவில்லை. அன்று இரவே அனைத்தையும் அரவிந்துக்கு அழைத்து புட்டு புட்டு வைத்திருக்க மறுநாள் அவனும் வந்து விட்டான். வந்தவன் மல்லிகாவிடம் “அத்தை நல்ல கூலிங்க ஒரு லெமன் ஜூஸ் போடுங்க” என்றவன் யாழினியின் எதிரே கைகட்டி அமர்ந்து கொண்டான். எதுவுமே பேசவில்லை அவளும் அவன் என்னதான் செய்கிறான் என்று பார்க்க…

 

ஜூஸ் கொண்டு வந்து கொடுத்த மல்லிகாவிடம் சிரித்து சிரித்து பேசினான். அருகில் சொக்கலிங்கத்திடம் குசு குசுவென்று ஏதோ பேசி அவரின் தோளை தட்டி தைரியமூட்டினான். ஆனால் ஒரு வார்த்தை கூட யாழினியிடம் பேசவே இல்லை. அவரை முறைத்துக் கொண்டே அமர்ந்திருந்தான்.

 

அவளுக்கும் புரிந்தது. ஆனாலும் அவனாகவே பேசட்டும் என்று அமைதியாக இருக்க.. அன்றைய நாள் அவனுக்கு அவர்கள் வீட்டிலேயே கழிந்தது. அரவிந்த் போகும்போது அவள் தலையில் இரண்டு கொட்டு கொட்டி “பக்கி.. பக்கி.. பேசாதன்னு சொல்லிட்டு தானடி போனேன். உன்னை யாருடைய அவன் கிட்ட பேச சொன்னா? இதுல அவன் கிட்ட பேசுனத என்கிட்ட சொல்லாம மறைச்சிருக்க..” என்று திட்டிவிட்டு சென்றான்.

 

அன்று இரவும் சொக்கலிங்கம் மகளை நினைத்து யோசனையோடு இருக்க.. மறுநாள் யாழினி அரவிந்தை அழைத்து அப்பாவின் நிலையை கூறினாள்.

 

“இதுக்கு தான் பக்கி.. யார்கிட்டயும் இந்த விஷயத்தை சொல்லாதன்னு சொன்னேன். இப்ப பாரு உன்னால..” என்று கடித்தப்படி அவன் வீட்டில் இருந்தே கத்த..

 

“என்னடா என்ன சத்தம்?” என்ற விசுவநாதன் கேட்டார்.

 

“ஒன்னும் இல்லப்பா இந்த மித்து வேலையை விட்டுட்டாளாம். அது ஏதோ மாமா அவளை திட்டிட்டாங்களாம்” என்று இவன் சமாளிக்க “அந்த பொண்ணு ரொம்ப பொறுப்பான பொண்ணாச்சேடா.. அப்படி எல்லாம் பண்ண மாட்டாளே.. கோதாவரி நீ தங்கச்சி கிட்ட போன் பண்ணி பேசுனியா?” என்று மனைவியிடம் கேட்க..

 

“விடுங்க.. நான் நேத்தியே மல்லிகா கிட்ட பேசிட்டேன். அதுக்கு கல்யாண நேரம் வேற நெருங்கி இருக்காம். அதனால ஜாதகத்தை எடுத்து ஜோசியர்ட்ட காட்டி மாப்பிள்ளை பார்க்கலாம்னு சொல்லி இருக்காங்க.. எப்படி இருந்தாலும் கல்யாணம் பண்ணி வேற ஊருக்கு போகும்போது வேலை விட்டு தான் ஆகணும். அதனால ஒன்னும் பிரச்சனை இல்ல…” என்று கோதாவரி சொல்வது விஸ்வநாதனுக்கும் சரி என்று பட தலையாட்டி கொண்டார்.

 

 “சரி பா.. அங்க போயிட்டு வரேன்” என்று கிளம்பி விட்டான்.

 

அப்பொழுதும் சொக்கலிங்கம் முகம் தெளியாமல் இருக்க “என்ன மாமா அன்னைக்கு அவன் என்னை கட்ததினபோது என்னென்ன நடந்தது தெரியுமா?” என்று அங்கு நடந்தவற்றை கூற மூவருக்குமே சிரிப்பு.. மல்லிகா என்னவென்று பார்த்தவரிடம் “சும்மா அத்த.‌.” என்று அரவிந்த் கண்ணடித்தான்.

 

“நீ வந்த உடனே தான் அவர் முகத்திலேயே சிரிப்பு வருது அர்வி.. இவ்வளவு நேரம் உம்முனு உட்கார்ந்து இருந்தார். பொண்ணுக்கு கல்யாணம் நினைச்சு இப்படி உக்காந்திருக்காரா இல்ல வேலையை விட்டுட்டாளானு தெரியலை.‌. எங்க எங்கிட்ட எல்லாத்தையும் சொல்றாங்க அப்பனும் மகளும் உள்ளுக்குள்ளார எல்லாத்தையும் மறைச்சு வச்சுக்க வேண்டியது” என்று திட்டியபடியே சென்றார்.

 

அதற்கும் இவர்கள் மூவரும் சிரித்துக் கொள்ள அப்போதுதான் சுப்பிரமணியத்திடம் இருந்து போன் வந்தது. பொதுவாக நலம் விசாரித்தவன் அடுத்து சொன்ன செய்தியில் ஒரு நிமிஷம் அமைதியாக இருந்தார் சொக்கலிங்கம். பின் லவுட் ஸ்பீக்கரை ஆன் செய்து மல்லிகாவையும் அழைத்து அருகில் அமர்ந்து கொள்ள…

 

“இப்ப சொல்லுப்பா அம்மாவும் வந்துட்டா..” என்றதும்..

 

“என்னப்பா இப்பதான் சொன்னேன்! திரும்பவுமா?? நீங்களே அம்மாகிட்ட சொல்ல கூடாதா?” என்று அத்தனை சலிப்பு அவன் வார்த்தையில் குரலில்..

 

“அம்மா.. எனக்கு ஒரு புது கம்பெனியில் வேலை கிடைச்சிருக்கு. என்ன போஸ்ட் தெரியுமா? சிஇஓ!” என்றான் அத்தனை உற்சாகமாக!

 

“அது ரொம்ப பெரிய போஸ்டா சுப்பு?” என்று ஆச்சரியமாக கேட்டார் மல்லிகா.

 

“ஆமா மா.. எம்டிக்கு அப்புறம் அங்கு எல்லாமே நான் தான்!” என்றதும் சட்டென்று சிரிப்பு வந்துவிட்ணது அரவிந்துக்கு. ஆனால் மல்லிகை அத்தையின் மனம் நோக கூடாது என்று அமைதியாக இருந்து கொண்டான்.

 

“அதுமட்டுமல்லமா அந்த எம்டி அவர் பொண்ணையும் எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன் சொல்லிட்டாரு.. ரெண்டு நாளுல சிம்பிளா இங்கே எங்கேஜ்மென்ட் வச்சிட்டு சென்னையிலேயே கல்யாணம் வச்சுக்கலாம்னு சொல்றாங்க.. அதுவும் நல்ல கிராண்டா! உங்களுக்கு எங்கேஜ்மென்ட் அன்னைக்கு லிங்க் அனுப்புறேன்.. நீங்க அதுல பாருங்க” என்று முற்றும் முழுதாக அமெரிக்க வாசியைப் போல பேசிய மகனை கண்டதும் அதிர்ச்சியாகிய மல்லிகா..

 

“என்னங்க.. என்ன இவன் இப்படி சொல்றான்?” என்று அதிர்ச்சியோடு கேட்க.. 

 

“எதுவும் பேசாதே!” என்றவர் “சரிப்பா உன் விருப்பம்” என்று சொக்கலிங்கம் முடித்து விட்டார்.

 

“அப்பா..” என்று யாழினி கவலையோடு அழைக்க “இதுல நாம பேச ஒன்னுமே இல்ல மல்லிகா.. உன் புள்ள முடிவு எடுத்துட்டு நம்ம கிட்ட விஷயத்தை மட்டும் தான் சொல்றான். இதுக்கு நீ கத்தி கூச்சல் போட்டோ இல்ல அழுது ஆர்ப்பாட்டம் பண்ணியோ என்ன புண்ணியம் சொல்லு? அப்படி செஞ்சு இன்னும் கொஞ்ச நெஞ்சம் ஓட்டிட்டு இருக்குற அந்த நூலிலை பாசமும் விட்டு தான் போகும் அவனுக்கு. அதுக்கு தள்ளி இருந்து ஆசிர்வாதம் பண்ணிட்டு நிம்மதியா இருக்கலாம்” என்றதும் அவரோ முந்தானை வாயில் வைத்துக் கொண்டு அழ ஆரம்பித்தார்.

 

சட்டென்று அரவிந்த் எழுந்து மல்லிகா அருகில் அமர்ந்து “அத்த ப்ளீஸ்.. அழுவாதீங்க..” என்று ஆறுதல் அளிக்க.. சொக்கலிங்கம் அருகில் அமர்ந்து கொண்டு யாழினியும் அவர் கையை இறுக்கமாக பற்றி கொண்டாள்.

 

நிறைய முறை “ஏன் இந்த அரவிந்த் நம்ம சுப்ரமணி மாதிரி வெளிநாட்டுக்கு வேலைக்கு போய் இருக்க கூடாது? கோதாவரி விஸ்வநாதன் அண்ணனும் ஏவ்வளோ கஷ்டப்படுறாங்க இல்ல.. ஊருக்குள்ள உட்கார்ந்துட்டு அவங்களுக்கு தொந்தரவு பண்றான்” என்று கணவனிடம் புலம்பி இருக்கிறார்.

 

ஆனால் இன்று அதெல்லாம் எத்தனை தவறு என்று புரிந்தது!! வெளிநாட்டு மோகத்தில்.. பெற்றவர்களை விட்டு.. தன் சுயநலமே பெரிது என்று வாழும் பிள்ளைகளுக்கு மத்தியில், சொந்த ஊரில் அன்னை தந்தையோடு சொற்ப வருமானமே என்று இருந்தாலும் வாழும் பிள்ளைகள் அவருக்கு இப்போது பெரிதாக தோன்றினர்!!

 

இதில் பெற்றோர்களின் சுயநலம் என்று ஒன்று இல்லை.

எங்கிருந்தாலும் அவர்களுக்கு பிள்ளை மீது இருக்கும் அந்த பாசம் அன்பு குறையவே குறையாது !!

 

ஆனால் பிள்ளைகளோ ஸ்டேட்ஸ் என்று சொல்லி தங்கள் ஸ்டேட்டஸை உயர்த்திக் கொண்டு ஏற்றி விட்ட ஏணியான பெற்றவர்களை கவனிக்காமல்.. வயது முதிர்ந்த பெற்றோரை ஆசிரமத்திலும் ஓல்ட் ஏஜ் ஹோமிலும் சேர்த்து விட்டுட்டு.. இறந்தால் கூட “இங்கிருந்து வர எங்களுக்கு நேரமில்லை! நீங்களே எல்லாத்தையும் பார்த்து முடிச்சிடுங்க.. எவ்வளோ பணமோ அனுப்பிடுறோம்” என்று சொல்வது தான் அதி நாகரீகம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். 

 

இப்படிப்பட்ட ஒரு கும்பலில் சேர்ந்தவன் தான் சுப்பிரமணியம்! தன் வாழ்வு.. தன் லட்சியம் அதுவே முக்கியம் என்று!!

 

இவர்களுக்கெல்லாம் சொல்லி பயனில்லை.. தானாக பட்டு திருந்தினால் தான் உண்டு!!

 

அதற்காக வெளிநாட்டில் வாழும் பிள்ளைகளை எல்லாம் தவறாக சொல்லவில்லை. வீட்டுக் கஷ்டத்திற்காக அங்கே கொத்தடிமைகளாக இருப்பவர்களும் உண்டு தான்!

 

இங்கே பிரதானம் எது என்பது தான்?? பணமா? பாசமா??

 

அதுவரை இருந்த சந்தோஷம் மறைய மெல்ல கவலை ஏறிக் கொண்டது மல்லிகாவிற்கு. ஆனால் மறுநாளே ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஜோசியரிடம் காண்பிக்க கோதாவரியோடு சென்று விட்டார்.

 

அவரும் “இந்த பொண்ணுக்கு இப்ப கல்யாண யோகம் கூடி வந்திருக்கு சீக்கிரமே அமைந்துவிடும்” என்று முடிக்க.. கோதாவரி மல்லிகாவும் நிம்மதியோடு வீட்டுக்கு வந்தனர்.

 

அன்று சுப்பிரமணிக்கு திருமண நிச்சயதார்த்தம்! என்னதான் மகன் இப்படி யாருக்கோ சொல்வது போல சொல்லி லைவ் லிங்கை கொடுத்தாலும்.. பெற்ற மனதல்லவா? அதனால் மகளிடம் கெஞ்சி கூத்தாடி “அது போட்டு விடுடி!” என்று கேட்க.. அவளும் அம்மாவை பார்த்து தலையில் அடித்துக் கொண்டே அந்த லைவ் போட்டு காட்டினாள் தன் லேப்டாப்பில்..

 

காலை போல வெளியே கிளம்பிய சொக்கலிங்கம் “அம்மாவும் மகளும் அப்படி என்ன பாக்கறீங்க.. காலையிலேயே?” என்றபடி வந்து அமர்ந்தவருக்கு முதலில் சற்று மனச சுணக்கம். ஆனாலும் சரி என்று அவரும் அமர.. 

 

“ஏதாவது வெள்ளைக்காரியா இருப்பாளோ? ஏன்டி யாழினி அவனும் கிறிஸ்டியனா மாறிடுவானா?” என்று மகளிடம் அத்தனை கேள்வி கேட்டு மல்லிகா ஒரு வழியாகின்னார். 

 

“மா.. சிவனேனு பாருமா! எனக்கு மட்டும் உன் புள்ள டீடைல்ஸ் எல்லாம் சொன்னானா?” என்று திட்டியபடி பெண் யாராக இருக்கும் என்று இவளும் ஒரு வித ஆர்வத்தோடு பார்த்தாள்.

 

முதலில் அங்குள்ளவர்கள் எல்லாம் காட்டிக் கொண்டே வந்த கேமரா சுப்ரமணியத்திடம் நிறுத்தியது. சுத்தமாக மாறி இருந்தான் அவன். அழகும் கவர்ச்சியும் அவனிடம் ஏறி இருந்தது.

 

“சுப்பு.. நல்லா இருக்கான்ல.. வெள்ளகாரன் போல” என்று கணவனிடம் கேட்க அவரோ முறைக்க கப்பென வாயை மூடி கொண்டார் மல்லிகா.

 

அதன் பின் பெண்ணை காட்ட ஆரம்பித்தனர். அதுவும் நேரடியாக இல்லாமல் அவள் நடந்து வருவது.. அந்த பார்ட்டி கவுன் காற்றில் அசைவது.. அவளது காதோர தோடு பின் பக்கம் சுற்றியுள்ள அலங்காரங்கள்.. அவளை வரவேற்க தூவும் பூக்கள்.. என்று ஒவ்வொன்றாய் காட்ட..

 

“என்னடி இவ்வளவு பில்டப்பா இருக்கு! டக்குனு காட்டனா தான் என்ன? ஆனா பார்க்கும்போது வெள்ளக்கார பொண்ணு மாதிரி தெரியல.. அந்த வகையில் சந்தோஷம்” என்று பேசிக்கொண்டே இருந்தார் மல்லிகா.

 

அதில் முழுக்க முழுக்க அவரின் ஆற்றாமையே தெரிய.. அதை புரிந்து கொண்ட சொக்கலிங்கமும் யாழினியும் அமைதி காத்தனர்.

 

அடுத்து

சுப்பிரமணியின் கையை கோர்த்தவளை கண்டு ஸ்தம்பித்து எழுந்தே நின்று விட்டனர் சொக்கலிங்கமும் யாழினியும்..

 

ஆம்!! அவள் ஆரத்தியாய் நடித்த ஆராத்யா!!


   
Azhagi reacted
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top