அரன் 14

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 6 months ago
Messages: 207
Thread starter  

ஆருயிர் 14

அடியாட்களில் ஒருவன் "அண்ணாதே.. அவனுக்கு நாஸ்தா தரவா?" என்று‌ கேட்டான்.

 

தலைவனோ "அடிங்க கொய்யாலே… அவனுக்கு தண்ணிய தான்டி ஒன்னியும் கொடுக்க கூடாதுனு சாரு சொல்லியிருக்காரு டா கசுமாலம்!" என்று அவன் கத்த…

 

"அப்ப அந்த பேமானி அவ்ளோ தான்! நாளைக்கு வந்து பாடிய கலேக்ட் பண்ணிக்க சொல்லு அண்ணாதே அந்த சார!" என்று அவனும் கத்த..

 

"டேய்.. மெதுவா பேசுங்கடா… தூக்கம் டிஸ்டர்ப் ஆகுதுல" என்று அவனுங்களுக்கு மேல் கத்தியது வேற யாருமில்லை அர்விந்த் தான்.

 

தலை உட்பட அத்தனை தலையும் அப்படியே அவன் புறம் திரும்பியது.

 

மெல்ல எழுந்தவன் இரு கைகளையும் கோர்த்து மேலே உயர்த்தி நெட்டி முறித்தான். என்னமோ அசந்து வேலை பார்த்தவன் போல… "இங்க என்ன கரிகாலன் மேஜிக் ஷாவா நடக்குது?" என்றான்.

 

அந்த தலையின் கண்கள் அனிச்சையாக அங்கு இவனை அடித்து உடைந்து கிடந்த பிரம்பு கட்டையின் மேல் பதிந்தது. சிரிப்போடு அவனை பார்த்த அர்விந்தோ "ஹா ஹா.. இத எல்லாம் எனக்கு ஜூஜூபி!! அண்ணாத்த சிகரெட் கீது?" என்று அலட்சியமாக கேட்டவனிடம் ஒருவன் வந்து நீட்ட… அதனை வாங்கி ஒரு இழு இழுத்து புகையை மூக்கு மற்றும் வாயினால் வெளியிட்டவன் "ஸ்ஸ்ஸ்…" என்று மீண்டும் அந்த நிக்கோட்டின் புகையினை உள்ளிழுத்து உள்ளே கனன்று கொண்டிருந்த நெஞ்சினை இன்னும் கனன்ற வைத்தான்.

 

முழுதாக குடித்து முடித்தவன் "நீங்க அடிச்சது எல்லாம் ஒரு அடியா? உங்களுக்கு இன்னும் வேகம் பத்தல.." என்று எழுந்தவன், சட்டையை கழட்டி உதறி தோளில் போட்டுக் கொண்டவன், "பாத்ரூம் எங்க இருக்கு?" என்று‌ கேட்க.. ஒருவன் கை காட்ட.. ஏதோ விருந்தாளி போல விருந்தாடி கொண்டிருந்தான் அர்விந்த்.

 

வெளியே வந்தவன் அந்த தலைவன் எதிரே அமர்ந்து "இந்த மாதிரி பிரம்பால் எல்லாம் சின்னதிலே அடிவாங்கி வாங்கி நம்ம உடம்பு சும்மா கிண்ணனு இருக்கு. நீ எங்க நைனா கிட்ட ட்ரெயினிங் போ அண்ணாதே.. மனுஷன் அடிச்சாருன்னா அப்படி பின்னி பெடலெடுத்துடுவாரு" என்று அவன் சிறு வயதில் செய்த சேட்டைகளை சொல்ல சொல்ல… எட்டி நின்ற அல்லக்கைகளும் அருகே வந்து சிரித்தப்படி சுற்றி அமர்ந்து கொண்டு கதை கேட்க ஆரம்பிக்க… 

 

அந்த தலைவனோ முதலில் தப்பிக்க நினைத்து நம்மை டைவர்ட் செய்கிறானோ என்று நினைத்தவன் பின் அவனும் சுவாரஸ்யமாக கதை கேட்டுக் கொண்டு தண்ணியடிக்க… அர்விந்த் அவனுக்கும் ஒரு கோப்பை நீட்ட.. அவனுக்கும் ஊத்திக் கொடுத்தான் அவன்!!

 

"என்னா சரக்கு.. சும்மா சுர்ருன்னு ஏறுது அண்ணாதே.. செம செம.." என்று அவனை பாராட்டியப்படி குடிக்க… 

 

"இது எங்க சொந்த மேனிபாக்சரிங் தம்பி.. நல்லா இருக்கா?" என்று விழி விரிய கேட்டான் தலை.

 

"அடி பொழி! வேற‌ லெவல்" என்று அந்த சுண்டக்கஞ்சியை ருசித்துக் குடித்தான்.

 

"உன்னிய பார்த்தா நல்லவனா கீது.. அப்பால ஏன் அந்த சாரு கையல வச்சிக்கின?" என்று அவன் கேட்க…

 

"ஏன் சோக கதைய கேளு அல்லக்கைகளே… 

கேட்டாக்கா அழுக வரும் உங்க நெஞ்சமே!

ஒரு பொண்ணால என் வாழ்க்கை நந்தனவனமாச்சு.. 

இன்னொரு அரக்கியால நொந்தவனமாச்சு கேளுங்க டே..!" என்று பாடியப்படி அவன் அந்த டேபிளில் ஏறி கையில் இருந்த டம்ப்ளரை தலையில் வைத்து அவன் ஆட.. கூட சேர்ந்து அந்த ஆட்களும் ஆட… அந்த இடமே களை கட்டியது.

 

ஆடி பாடி சோர்ந்து அவன் அமர… அவனை சுற்றியும் தலைவனும் அல்லக்கைகள் அமர… "என்னாச்சு தம்பி.. லவ்வு பெயிலியரா? பெரிய இடத்து பொண்ணா? அதான் அந்த சாரு உன்னிய நைய புடைக்க சொல்லிகினாரா?" என்று கேட்க..

 

அவன் முன் இருந்த பாட்டிலை கைப்பற்றியவன் முழுதாக வாயில் சரித்து "ஆமா அண்ணாதே.. செம லவ்வுஸ்.. அவ தான் என் பின்னால சுத்திகினு.. ஏழையா நடிச்சிகினு.. என்னான்ட வேலைக்கு சேர்ந்திகினு.. கடைசியா நான் கண்டுபிடிச்ச சாஃப்ட்வேரை களவாடிகினு போய்ட்டா…" என்று அவன் கூற..

 

அவர்களுக்கு அந்த சாப்ட்வேர் பத்தி எல்லாம் புரியவில்லை. காதல் என்று நடித்தால் என்றதுமே அதிர்ந்தது அந்த கூட்டம்.

 

"என்னாது நடிச்சிகினாளா? அப்போ உண்மையா லவ்வுஸ் பண்ணலையா?" என்று தலை கேட்க..

 

"அக்கான் அண்ணாதே! உண்மையா லவ்வுஸ் பண்ணல.. ஏமாத்திட்டா.. இந்த பொண்ணுங்களே இப்படி தான் அண்ணாத்த!” என்று மூக்கை உறிஞ்சினான் அர்விந்த்.

 

"நீ ஒன்னியும் கவலபப்டாத நைனா.. நம்ம கையல எவ்வளோ புள்ளிங்கோ இருக்கானுங்க பாரு… அந்த பொண்ண அலேக்கா தூக்கினு வந்து ஒன்னியாண்ட ஒப்படைச்சிடுறோம். நீ அத்த கண்ணாலம் கட்டிகினு எங்கனா அவன் அண்ணன் கண்ணுக்கு தெரியாம போய்டு!" என்று அதிரதனிடம் பணத்தை வாங்கியவன், அதனை மறந்து அர்விந்துக்கு ஐடியா கொடுத்துக் கொண்டிருந்தான்.

 

"நான் என்ன கோழையா அண்ணாதே! நம்மலாண்ட அவன மாதிரி பணம் காசு சொத்து இல்ல தான். அதனால.. சுளுவா என்ன? நான் ஆம்பள!! ஓடி ஒளிய மாட்டேன்!

அவன் முன்னு கெத்தா வாழ்ந்து காட்டுவேன்!" இன்னும் அவன் மனதொரத்தில் ஆர்த்தியாய் ஆரத்தியா இருந்தாள்.

 

"சபாஷ்.. சபாஷ்!" வீரமாக முழங்கியவனை கட்டிக் கொண்டான் அந்த அண்ணாதே!

 

"உனக்கு என்னான்ட என்ன ஹெல்பும் வேணுமோ கேளு நைனா.. நான் செய்றேன் உனக்கு?"

 

அவனை தயங்கி தயங்கி அர்விந்த் பார்க்க… "சும்மா கேளு.. வெட்கப்படாத!"

 

"அது.. அது.. எனக்கு பிரியாணி வேணும் அண்ணாதே! செமையா பசிக்குது.. காது கொய்ங்குது.. கண்ணுல பூச்சி பறக்குது.. என் மித்து இருந்தா என்னை இப்படி பட்டினி போட்டு இருக்க மாட்டா…" என்று அவன் கண்கள் லேசாக கலங்க கூற.. அந்த தலையோ உடனடியாக அவனுக்கு உணவை வரவழைத்து கொடுத்தான்.

 

அவன் அள்ளித் தின்ற விதமே அவனின் பசியைக் கூற.. அந்த தலைக்கு கண்கள் கலங்கியது.

 

எப்பவோ அவனை காதலித்து ஏமாற்றி சென்ற பெண்ணை நினைத்து.. அதன் பின் அவன் வாழ்க்கை தடம் புரண்டதை நினைத்து.. இப்போது தன்னைப் போல ஒருவன் என்று அர்விந்தை நினைத்து!!

 

சாப்பிட்டு முடித்தவனை பார்த்த தலை "நீ கிளம்பு நைனா நான் அந்த சார பாத்துக்குறேன்!" என்றதும் "இல்லை இல்லை வேணாம் அண்ணாதே! என்னால உங்களோட தொழிலுக்கு எந்தவித கெட்ட பெரும் வேணாம். அவன் சொல்ற வரைக்கும் நான் இங்கே இருக்கேன்" என்றான் அர்விந்த். 

 

அவனின் இந்த நல்ல உள்ளத்தை கண்ட தலையோ "என்ன ரொம்ப பீல் பண்ண வைக்கிறான்டா இவன்!" என்று கண்கள் கலங்க அல்லக்கைகளிடம் கூற.. அங்கே அனைவருக்கும் செல்ல பிள்ளையானான் அர்விந்த்!!

 

அப்புறம் என்ன… 

 

அதிரதன் போன் பண்ணி "அவனை என்ன செய்தீர்கள்? என்ன செய்து கொண்டிருக்கிறான் அவன்?" என்று கேட்கும் போதெல்லாம் "ரெண்டு நாளா கொலை பட்டினியா போட்டுட்டோம் சாரே.. வெறும் தண்ணி மட்டும்தான்" என்று அந்த தலை கூறிக் கொண்டிருக்கும் போதே, இங்கே லெக் பீஸை கடித்து தின்று கொண்டு இருந்தான் அர்விந்த்.

 

இரவு போல திரும்பவும் ஃபோன் செய்தவன் "அந்த அரவிந்த் என்ன செய்து கொண்டிருக்கிறான்?" என்று கடுகடுப்போடு அதையே தான் கேட்டான். ஏனென்றால் இன்னும் யாழினி அவனை திரும்பி கூட பார்க்கவில்லை. 

 

"நம்ம புள்ளிங்க அவன போட்டு செமையா கவனிக்கிறாங்க சாரே.." என்று அவன் கூற இங்கே மற்றவர்களோடு இவன் "கபடி.. கபடி.." என்று விளையாட்டுக் கொண்டிருந்தான்.

 

மேலும் இரண்டு நாள் ஆனது. அர்விந்த் காணாமல் போய் இதோடு நான்கு நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் அவனைப் பற்றிய சிறு துப்பும் சிறு துரும்பும் யாருக்கும் கிடைக்கவில்லை. 

 

யாழினி பள்ளியில் அவள் கண்களில் படும் அதிரதனிடம் அரவிந்தை பற்றி கேட்கலாம் என்று எண்ணம் இந்த இரண்டு நாட்களாக தோன்றுகிறது.

 

ஆனால்.. "நான் தான் கொண்டு போய் அடைத்து வைத்திருக்கிறேன்!" என்று ஏதேனும் அவன் சொல்லிவிட்டால் இருக்கும் கொஞ்ச நஞ்சம் அந்த பிடிப்பும் சுத்தமாய் போய்விடும் அல்லவா? என்று பயத்துடனே அவனிடம் கேட்காமல் இருந்தாள்.

 

"அவனது அதிகாரத்தையும் ஆளுமையும் வைத்து கண்டுபிடித்து விடலாம். எதுக்கும் கேளு யாழினி.. கேளு.." என்று உள் மனசு அரவிந்துக்காக அலற… அவனிடம் இன்று கேட்டுவிட வேண்டும் என்று நினைப்போடு தான் வகுப்பறைக்குள் நுழைந்தாள்.

 

வகுப்பறையிலும் அதே யோசனை தான் அவளுக்கு. "மிஸ் உடம்பு சரி இல்லையா?" என்று வெகு தயக்கத்தோடு தன்னை பார்த்து கேட்க மாணவனை பார்த்ததும் "ஏன் கண்ணா?" என்று இவள் கேட்க..

 

"இல்ல மிஸ் த்ரீ டேஸ் நீங்க சரியாவே இல்ல. எங்க கிட்ட எல்லாம் பேசுறது கூட இல்ல.. க்ளாஸூம் நடத்துவதில்லை. ஒரு மாதிரி டல்லா இருக்கீங்க.. அதான் உடம்பு சரி இல்லையானு கேட்டேன்'" என்றதும் இவள் வகுப்பறையை சுற்றி கண்களை சுழட்டி மற்ற மாணவர்களை பார்க்க அனைவரும் முகத்திலும் அதே கேள்விதான்.

 

மெல்ல புன்னகைத்தவளின் புன்னகை இதழ்களில் விரித்தாலும் கண்களை எட்டவில்லை. "கொஞ்சம் உடம்பு சரியில்லை கண்ணா.. அதான் வேற ஒன்னும் இல்லை!" என்றாள். 

 

"நீங்க வேணா ரெஸ்ட் எடுங்க மிஸ்! நாங்கள் இதுவரைக்கும் நடத்தின பாடத்தை ரிவிஷன் பார்க்கிறோம்" என்று புரிதலோடு பேசும் பதின்ம வயது சிறுவனின் தலையில் கை வைத்து ஆட்டி சிரித்தவள், "பெரிய மனுஷனாகிட்ட.. ம்ம்ம்?" என்று சிரித்தாள்.

 

விருப்பு வெறுப்புகளை தொழிலில் வேலை செய்யும் இடத்தில் கொண்டு வரக்கூடாது என்று தனக்குத்தானே மானசீகமாக தலையில் கொட்டிக் கொண்டவள், அன்றைய தினம் அவர்களுக்கு பாடம் நடத்தினாள். பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போது அடுத்த வகுப்புக்கான மணி அடிக்க.. அனைவரிடம் ஒரு புன்னகையோடு கடந்து ஆசிரியருக்கான ஓய்வறைக்கு அவள் சென்று கொண்டிருக்கும் நேரத்தில்… எதிரே வந்த நின்றாள் ஆராத்யா!!

 

"ஹாய் யாழினி…" என்று இதழ்களில் மட்டும் புன்னகையை பூட்டி முகத்தில் சற்றே மிடுக்கை தேக்கி உள்ளத்தில் வெறுப்பை உழிந்தவாறு!!

 

ஆராத்யாவிடம் பேச சுத்தமாக யாழினிக்கு விருப்பமே இல்லை. ஆனாலும் அவளிடம் கேட்க வேண்டிய கேள்விகள் நிறைய இருக்கிறதே…!! அவளை அழுத்தமாக பார்த்த யாழினி "ஏன் இப்படி செஞ்ச?" என்று அடிக்குரலில் சீறினாள்.

 

யாழினிக்கு தெரியும் அல்லவா? நண்பனின் மனதை!!

 

காதலிக்கிறேன் என்று அரவிந்த் பின்னால் சுற்றி அவன் மனதை உடைத்து.. இப்போ அவன் எங்கே என்று தெரியாமல் தவிப்பது.. தற்போது இவள் அல்லவா?

 

"நான் என்ன செஞ்சேன்?" என்று ஸ்டைலாக தோலை குலுக்கினாள் ஆராத்யா.

 

"நீ என்ன செஞ்சனு உனக்கு தெரியாது? அதை நம்ப நான் முட்டாள் இல்லை" என்று ஆழ்ந்து அவன் கண்களை கூர்ந்து கேட்டாள் யாழினி. 

 

யாழினியின் கேள்வியில் சற்று உள்ளுக்குள் உதறல்தான் ஆராத்யாவிற்கு. ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. எப்படியும் சாஃப்ட்வேர் விஷயம் இவளுக்கு தெரிந்திருக்காது என்ற நம்பிக்கையில்..

 

ஆனால் அதே சமயம் தான் சொன்ன லவ்வை கண்டிப்பாக அரவிந்த் யாழினி இடம் பகிர்ந்து இருப்பான் என்று அவளுக்கு திண்ணம். லவ் யூ என்பதெல்லாம் அவளது மேல்மட்ட ஹைஃபை வாழ்க்கையில் சர்வ சாதாரணமாக பார்க்கவரிடம் கூட சொல்லும் வெறும் இரண்டு வார்த்தைகள் தான்!!

 

ஆனால் மத்திய குடும்பத்தில் வாழும் ஆண்களோ பெண்களோ தங்கள் மனதை கட்டுப்படுத்தி குடும்பத்திற்காக ஓடிக்கொண்டிருக்கும் அவர்களிடம் அன்பை காட்டி.. காதலை சொன்னால்.. அவர்களுக்குள்ளும் அந்த காதல் சிறு சாரலாக பெய்து மனதில் சலனத்தை உண்டாக்கும். 

 

அதில் சிலரோ அந்த இன்பச் சாரல் மழையாக பொழிய வேண்டும் என்று பெரு ஆவல் கொண்டு அந்த காதலை கைப்பற்ற என்ன வேணாலும் செய்யத் துணிகின்றனர்.

 

பலரோ குடும்பமா காதலா என்று வருகையில்.. குடும்பமே அவர்களது முதல் தேர்வாக அமைந்து முதல் காதலை மனதின் ஓரத்தில் பூட்டி வைத்துக் கொள்கின்றனர் ரகசியமாய்!!

 

அரவிந்தோ இந்த இரண்டு வகையிலும் சேரவில்லை. முதலில் அவனது கனவு!! அந்த கனவை அடையும் வரை அவனுக்கு மற்ற உணர்வுகள் இல்லை. ஆனால் தன்னை விழுங்கியவாறு பார்த்துக் கொண்டே வேலை செய்யும் அந்த அழகு பெட்டகத்தை அவனுக்கும் பிடிக்க தான் செய்திருந்தது. அதனை அவளிடம் காட்டிக் கொள்ளாமல் மனதில் ஓரத்தில் பூட்டி வைத்துவிட்டு தன் கனவினை நோக்கி அவன் ஓட.. அந்தக் கனவையே களவாடியிருந்தாள் அவன் மனதின் ஓரம் குடிக்கொண்டவள்.

 

"சீ யாழினி.‌ நானும் இந்த வர்மா குழுமத்தின் ஒன் ஆப் தி ஷேர் பர்சன்! இந்த டிஜிட்டல் ஸ்கூல் ஆரம்பிக்க எங்க அண்ணன் வந்தபோது அவருக்கு உதவத்தான் நானும் வந்தேன். ஆனால் அடிமட்டத்தில் இருந்து கத்துக்கணும்னு அண்ணா சொன்னானா.. நானும் சக ஆசிரியர்களோடு பழக வேண்டும் என்று ஆர்த்தியா வேஷம் போட்டேன்! இதில் என்ன தவறு? நீ கேள்விப்பட்டதில்லையா.. ராஜ குடும்பத்தில் பெரிய பெரிய குடும்பத்தில் பிறந்தவர்கள் எல்லாம் அடிப்படை கற்றுக்கொள்ள இம்மாதிரி தங்களை மறைத்து சாதாரணமாக வேலை செய்வார்கள் என்று? வெளிநாட்டில் எல்லாம் இது பெரிய விஷயமே கிடையாது! நீங்கள் தான் பெரிதாக நினைத்துக் கொண்டு சில்லியாக பிஹேவ் செய்றிங்க…" என்று மீண்டும் அலட்சியமாகவே பதில் அளித்தாள் யாழினிக்கு.

 

"சரி நீ ஆர்த்தியா நடிச்சது ஓகே!! ஆனா அரவிந்த் கிட்ட லவ் பண்றேன்னு சொன்னதெல்லாம்…" என்று இதுக்கும் ஏதேனும் அலட்சியமாக பதில் சொல்லிடுவாளோ.. எப்படி அரவிந்த் மனது இதனை தாங்கிக் கொள்ளும் என்று சற்று பயத்தோடு ஆர்த்தி இல்லை இல்லை ஆரத்தியாவை அவள் பார்க்க..

 

உதட்டை பிதுக்கியவள் "என் ஸ்டேட்டஸ்க்கெல்லாம் அவன் தகுதியே இல்லை. வேலை வெட்டி இல்லாமல் சும்மா ப்ராஜெக்ட்னு எதையோ செஞ்சுட்டு இருக்கான். 

அவனுக்கு வர்மா குழும பெண் கேட்குதோ… அட்ராசியஸ்!" என்று கர்வத்தோடு பேசியவளை ச்சீ என்று பார்த்தாள் யாழினி!!

 

"நீ கவலைப்படாத யாழினி! எங்க அண்ணன் ஒன்னும் ஸ்டேட்டஸ் எல்லாம் பார்த்து உன்னை கை விட்ற மாட்டான். அவனுக்கு ஏனோ உன் மேல…" என்று அவளை மேலிருந்து கீழ் வரை ஒரு முறை பார்த்து "ஏதோ ஒரு இது. எங்க வீட்ல சம்மதம் சொல்லவில்லை என்றாலும் உன்னை கண்டிப்பாக இங்கேயே வைச்சுக்குவான்..!" என்று விஷத்தைக் கக்கி செல்லும் அவளை அதிர்வோடு பார்த்தாள் யாழினி!

 

தொடரும்..


   
Azhagi reacted
Quote
(@gowri)
Member
Joined: 6 months ago
Messages: 48
 

சரியான யக் இந்த பிள்ளை🤮🤮🤮🤮🤮


   
ReplyQuote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top