ஆருயிர் 13
"அரவிந்தை நீ காதலிச்சியா?" என்று இறந்த காலத்தில் கேட்ட அண்ணனை பார்த்து சற்று அதிர்ச்சியானாலும் அதை முகத்தில் லேசாக பிரதிபதித்தாலும் உடனே தனது முகத்தை மாற்றிக் கொண்டு "அப்படின்னு யாரு உன்கிட்ட கதை சொன்னது? யாரோ சொன்னதை நம்பி என்கிட்ட வந்து கேள்வி கேட்கிற?" என்று சற்று திமிராகவே கேட்டாள் ஆராத்யா.
"ஆரா..??" என்று பல்லைக் கடித்துக் கொண்டு அதிரதன் அவளை முறைக்க…
"இங்க பாரு ப்ரதர்.. அவன் கிட்ட பேசினது பழகுனது உண்மைதான்! ஆனால் அதை லவ்வுனு நீ டிக்ளெர் பண்ணுவியா? ஹி இஸ் அ ஜஸ்ட் வேஸ்ட் ஆப் பீஸ்!! சும்மா அவன் பேர என் பெயரோட சேர்த்து என்னோட ஸ்டேட்டஸ் ஐ குறைக்காதே! காட் இட்!!" பணக்காரி என்ற கர்வத்தோடு பேசினாள் ஆராத்யா.
சாதுவான ஆர்த்திக்கும் இந்த திமிரெடுத்த ஆராத்யாவுக்கும் தான் எத்தனை எத்தனை வித்தியாசங்கள்!!
"நான் கேட்டது ஒரு டைரக்ட் கொஸ்டின்! அதுக்கு நீ சிம்பிளா எஸ் ஆர் நோ ஆன்சர் பண்ணா போதும்! எதுக்கு தேவையில்லாமல் ஸ்டேட்டஸ் அது இதுன்னு பேசுற ஆரா?" என்று அழுத்தமாக கேட்டான் அதிரதன்.
"ஆமா.. அவனும் நானும் பேசி பழகுனோம் தான். அதை தான்டி எனக்கும் அவனுக்கும் வேற ஒன்னும் இல்ல.. நான் எக்ஸ்பீரியன்ஸ்காக போட்டோ வேஷத்தை சரியாக செய்ய ஒரு வேலை வேணும்னு யாழினிக்கிட்ட கேட்டேன். அவ அரவிந்த கைய காமிச்சா.. அங்கே போய் நான் ஜாயின் பண்ணுனேன் தட்ஸ் ஆல்!" என்று தோளை குலுக்கியவள், "ரொம்ப நேரம் சிகரெட் பிடிக்காதே ப்ரதர்.. உடம்புக்கு நல்லது இல்லை!" என்று அண்ணனுக்கு அறிவுரை கூறிக்கொண்டே தனது அறைக்குள் புகுந்து கொண்டாள்.
மனம் முழுவதும் ஏகப்பட்ட குழப்பம் ஆரத்தியாவுக்கு! எப்படி அண்ணனுக்கு தெரிந்தது என்று! அவள் கணித்த வகையில் அரவிந்தன் சற்று திமிர் பிடித்தவன், ரோஷக்காரன், அழுத்தக்காரன் கண்டிப்பாக அவனது வாயிலிருந்து தான் ஒரு பெண்ணால் ஏமாற்றப்பட்டேன் என்று வந்திருக்கவே வந்திருக்காது என்று அவளுக்கு நிச்சயம்.
"கண்டிப்பாக கோபத்தில் சென்றவனை அண்ணன் சந்திக்க வாய்ப்பே இருந்திருக்காது. அப்போ அவன் சொல்லலைன்னா.. அவனுடைய ஆருயிர் தோழி.. தோழி தானா அவ.. யாருக்கு தெரியும்? அவதான் சொல்லி இருப்பா அண்ணன் கிட்ட.. நல்ல வேலை அந்த சாப்ட்வேர் விஷயம் அண்ணனுக்கு இன்னும் தெரியவில்லை. அது தெரிந்தால்… அவ்ளோ தான்! எல்லாம் அந்த யாழினியால் தான். அவளை.." என்று பற்களை கடித்தாள். "இல்லையில்லை அதற்கான நேரம் இது இல்லை.." என்று மீண்டும் இந்த குள்ளநரி, ஹைனா பதுங்க தொடங்கியது.
ஆறாவது விரலாய் சிகரெட்டை பாவித்து புகைத்துக் கொண்டிருந்தவன், சிகரெட்டை முடிய முடிய குடித்துக் கொண்டே இருந்தான். அவன் உள் மனதில் எல்லாம் அரவிந்த் பேசிய பேச்சுக்களே மீண்டும் மீண்டும் ரீங்காரம் இட்டுக் கொண்டிருந்தது. இன்னும் அவனின் குழப்பமும் கோபமும் அதிகரித்தே ஒழிய குறையவில்லை.
சட்டென்று ஃபோனை எடுத்தவன் யாருக்கோ அழைத்தான்.
"டேய்.. அவன் என்ன பண்ணுறான்?"
"சாரே.. போட்ட இடத்துல போட்டப்படியே தான் கீறான் சாரே..
எதுனா பண்ணனுமா அவன சாரே?" என்று சென்னை பாஷையில் பேசியவனிடம்… "ம்ம்ம்… ஒன்னும் பண்ண வேண்டாம்! சாப்பாடு தண்ணி இல்லாம போடு!"
"சாரே.. இரண்டு நாளா அப்படிதான் போட்டு வைச்சிருக்கோம். இன்னும்னா உசுரு போச்சுனா பரவாயில்லையா சாரே.. இரண்டு தபா அடி பிண்ணிட்டோம் வேற.. அதான்.. ஒரே ரோசையா கீது" என்றான் அந்த அல்லக்கை!
"அப்போ… தண்ணீர் மட்டும் கொடு. உடல்ல உயிர் மட்டும் இருக்கட்டும். உயிர் மட்டும் தான் இருக்கணும்!" என்று பற்களை நறநறவென கடித்தான் அதிரதன்.
எத்தனை கோபப்பட்டாலும் எத்தனை புகைத்து தள்ளினாலும்… மனதை ஆற்றினாலும் அரவிந்த் சொன்ன வார்த்தைகள் அவன் காதில் ரீங்காரம் இட்டுக் கொண்டே இருந்தது.
"சொந்த தங்கச்சியே அனுப்பி ப்ராஜெக்ட் களவாடிய த பிக் பிஸ்னஸ்மேன்! இந்த தொழிலுக்கு பேர் என்ன தெரியுமா.. மாமே?" என்று நக்கலாக சிரித்த அந்த குரல் இன்னும் அதிரதன் காதில் எதிரொலித்துக் கொண்டே தான் இருந்தது.
"மாமே.. மாமே.. நீ செஞ்ச இந்த அல்பமான இல்லையில்லை அசிங்கமான இந்த வேலை மித்துவுக்கு தெரிஞ்சுதுனு மட்டும் வச்சுக்கோயேன்… ஜென்மத்துக்கும் உன் மூஞ்சில முழிக்க மாட்டா.. என் மித்து!" என்று கூறிய அரவிந்தன் வார்த்தைகள் இன்னும் இன்னும் அரவிந்தன் மேல் அதிரதனுக்கு காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்தியது.
'எப்படி அவள் என்னை மறுக்க முடியும்? சான்ஸே இல்லை..!! உன் மித்துவா.. இல்லை இல்லை அவள் என் யாழ்.. அவள் எனக்கு தான்! எனக்கு மட்டும்தான்!!" என்று தனக்குத்தானே வேகமாக கத்தி கூறிக் கொண்டிருந்தான்.
அன்று இரவு யாழினியை இறக்கிவிட்டு அரவிந்த் நேராக சென்றது ஏனோ டாஸ்மாக்குக்கு தான் அவன் பட்ஜட்டுக்கு ஏற்றப்படி!!
பெரிதாக அவனுக்கு நண்பர்கள் இருந்ததில்லை. இருக்கும் நண்பர்கள் எல்லாம் யாழினி இவனது நண்பியா காதலியா என்று கேட்டால்.. இவனின் டெரர் லுக்கில் பயந்து ப்ரண்ட்ஷிப்பை கலைத்து விடுவார்கள்.
இன்னும் சிலர் 'அவள் உன் தோழியாகவே இருக்கட்டும்.. ஆனால் எனக்கு காதலியாகவும் இருக்கட்டுமே!' என்று இவன் மூலமாகவே லவ் லெட்டரை கொடுத்தால்… இவன் அவர்கள் மூக்கை உடைத்து லவ் லெட்டரை கையில் கொடுத்து திருப்பி அனுப்பி விடுவான் அப்படி இருக்க.. எங்கே இவனுக்கு நட்பு கிட்ட?
அதனால் இன்று வாங்கிய பெரும் ஏமாற்றத்தையும் வலியையும் மித்துவிடம் கூட சொல்ல முடியவில்லையே என்று ஆற்றாமையில் குடிக்க வந்து விட்டான்.
ஆண்களுக்கு இது ஒரு பழக்கம் சோகமாகிவிட்டால் சோம பானத்தை தேடுவது!!
அப்படி குடித்தவன் தட்டு தடுமாறி வண்டியை உருட்டிக்கொண்டு சென்று கொண்டு இருந்தான். அவன் நேரமோ இல்லை அதிரதன் நேரமோ மீண்டும் இருவரும் ஒருவருக்கொருவர் முட்டிக் கொள்ளும் சந்தர்ப்பம்!!
பார்ட்டிக்கு வந்த ஒரு பெரிய தலையை அனுப்பி வைத்துவிட்டு கடைசியாக தான் கிளம்பினான் அதிரதன். யாழினியை மனதில் வறுத்து எடுத்துக்கொண்டு அவள் சொல்லாமல் கொள்ளாமல் போனதுக்கு காரணமாக இருந்த அரவிந்தையும் அவர்கள் பாண்டிங்கையும் நல்ல ஆங்கிலத்தில் கொச்சை வார்த்தைகளாக திட்டுக் கொண்டே வண்டி ஓட்டிக் கொண்டிருந்தவன் எதிரே வந்து மோதி விட்டான் நம் அர்வி…
"யூ இடியட்! ஸ்டுபிட்..! எவ்வளவு காஸ்ட்லியான கார் தெரியுமாடா இது? இப்படி ராங் ரூட்ல வந்து ஹிட் பண்ணிட்டு?" என்று கோபத்தோடு கதவை திறந்து வெளியே வந்த அதிரதனுக்கு அதிர்ச்சி அரவிந்தை பார்த்து!!
"இவனா….?? சாத்தானை நினைத்தால் உடனே வருமாம்! அதுபோல தான்டா நீ!" என்று திட்டியவன் அரவிந்தை இளக்காரமாக பார்த்தபடி நிற்க..
தட்டு தடுமாறி எழுந்த அரவிந்த் தன் முன் கோட் சூட்டில் கம்பீரமாய் நின்ற அதிரதனை பார்த்து முதலில் காண்டானாலும் பிறகு காமெடி பீஸாக கருதி அப்படி சிரித்தான்.
ஏன் சிரிக்கிறான் என்று புரியாமல் அவனை முறைத்தான் அதிரதன்.
"ஏன்டா சிரிக்கிற.. யூ ஸ்டுப்பிட்?" என்று வார்த்தைகளை கடித்து அதிரதன் துப்ப..
"நான் கூட நீ பெரிய அப்பாடக்கரு பணக்காரன் பெரிய பெரிய காரிலெல்லாம் வர.. அப்படின்னு நினைச்சு உன்னை பெரிய கைனு நினைச்சுட்டேன் டா! கடைசில பார்த்த நீ.. சுத்த கேட்மாரியா இருக்கியே?" என்று சிரித்தான்.
"வாட்.. கேப்மாரி?" என்று இந்த வெளிநாட்டில் பயின்ற தமிழனோ இத்தமிழ் வார்த்தைக்கு அர்த்தம் புரியாது தவித்தான்.
"ஹான்.. மொள்ளமாரி ஓட கோ பிரதரு கேப்மாரி.." என்று வகையாக வாரிக் கொண்டு இருந்தான் அதிரதனை.
ஏதோ லோக்கல் பாஷையில் திட்டுகிறான் என்று புரிந்ததுடன் "யூ.. பிளடி ராஸ்கல்! ஆஃப்ட்ரால் நீ ஒரு லோக்கல்! நீ என்னை பேசுறியா?" என்று அர்வியின் சட்டையை கொத்தாக பற்றிட..
அதுவரை போதையில் தள்ளாடியபடி நின்றிருந்த அரவிந்த் இப்போது அதிரதனது சட்டையை கொத்தாக பிடித்து.. "நான் லோக்கலா இருந்தாலும்.. ஜெனியூனா சுத்தமா இருக்கிறேன்டா டுபுக்கு! உன்ன மாதிரி ஹைஃபை ஹைபிரிட் கலப்படம் கிடையாது!" என்று கோபம் கொந்தளிக்க கூறினான்.
"என்ன ஹைபிரிட்?" என்று அதிரதனுக்கு அப்போதும் புரியவில்லை.
"வேற என்ன.. நீ பண்ண முடிச்சவிக்கி தனம் தான்! விழா போட்டு கொண்டாடினியே.. அதெல்லாம் நான் மறக்க மாட்டேன் டா! மித்துக்காக மட்டும் தான்.. உன்னை நான் விட்டுட்டு வந்தேன். இல்லன்னா அந்த இடமே அதிரிபுதிரி அந்தர் பண்ணி இருப்பேன்" என்று சீறினான் அரவிந்த்.
"லோக்கல் நீ.. என்னோட பார்ட்டில பிரச்சனை பண்ணி இருப்பியா? பண்ணி இருந்தா அப்பவே உன்னை தூக்கி உள்ள தள்ளி இருப்பேன்! இந்த விஷயத்தில் யாழ் சொன்னா கூட நான் உன்னை விட்டு இருக்க மாட்டேன். தெரியுமா? தப்பிச்சிட்ட…!
எனக்கு என் பிசினஸ் என்னுடைய டிக்னிட்டி அவ்வளவு முக்கியம்" என்றான் குரலில் கர்வத்தோடு.
"என்னாது கிட்னியா.. ஓஹ் டிக்னிட்டியா?" என்று வாய் விட்டு சிரித்தான் அவன், பற்றியிருந்த அதிரதனின் சட்டையை விடுத்து.
"ஆனா பிசினஸ்னு சொன்ன பாரு.. அது கரெக்ட்! பக்கா பிசினஸ்மேன்டா நீ!!" என்று மீண்டும் அவன் ஏகத்தாளமாக சிரிக்க.. கண்கள் இடுங்க அவனை முறைத்துப் பார்த்தான் அதிரதன்.
"நல்லா பிசினஸ் பண்ற மாமே நீ.. மாமே.. பிசினஸூக்காக சொந்த தங்கச்சிய அனுப்பி ப்ராஜெக்ட் களவாடிட்டு வர சொல்லுற பாரு.. பக்கா பிசினஸ் மேன் மாமே.. செம செம மாமே!" என்று இன்னும் லோக்கலாக இறங்கி இவன் பேச…
குடும்பம் ஸ்டேட்டஸ் என்று கர்வம் பிடித்த ரத்தம் ஓடிக்கொண்டிருந்த அதிரதனுக்கு அவையெல்லாம் முறுக்கிக் கொண்டு வந்து "என்னடா என்ன பேச்சு பேசுற? அடுத்து பேச பல் இருக்காது பார்த்துக்கோ?" என்று இன்னும் அரவிந்த் சட்டையை இறுக்கி அவன் கழுத்தை நெருக்க..
"அச்சச்சோ.. பயமா இருக்கு மாமே..!"
என்று மீண்டும் சிரித்தான் அரவிந்த்.
"யூ.. ப்ளடி! ராஸ்கல்!" என்று அரவிந்த் கன்னத்திலேயே ஓங்கி அறைந்தான் அதிரதன்.
அதில் தள்ளாடி விழ முயன்றவன் தன்னை சுதார்த்தி நின்று "பின்ன நீ பண்ண வேலைக்கு உன்னை மாமேன்னு சொல்லாம என்ன சொல்ல சொல்ற மாமே.." என்று நக்கலோடு கேட்டவன் தன் உதட்டு அருகே வழிந்த ரத்தத்தை லேசாக துடைத்து "ப்ளடி ஸ்வீட்!" என்று அதனை நாவால் நக்கி கண்ணடித்தான்.
"இதுக்கு வட்டியோட கொடுக்கிறேன் மாமே.. உனக்கு!" என்று கர்ஜித்தான் அரவிந்த்.
"வேலை வெட்டி இல்லாம குடிச்சிட்டு உளற.. நான் ஒன்னும் உன்ன மாதிரி லோக்கல் இல்ல! ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு வேலியபுள்!" என்று அழுத்தமாக திரும்பி நடக்க..
"ஆமா.. மாமே! பிசினஸ் முக்கியம்!
உன்னை விட பிராத்தல் தொழில் பண்றவன் எவ்வளவோ மேல் டா! அவனாவது வேற ஏதோ ஒரு பொம்பளைய தான் அனுப்புவான்! ஆனா நீ சொந்த தங்கச்சியே.. த்தூ…" என்று காறி உழிழ்ந்தான் அரவிந்த்.
அதிரதனுக்கு இன்னும் விஷயம் புரியவில்லை. புருவங்கள் நெருங்க நெற்றி சுருங்க அவனை கேள்வியோடு பார்த்தான்.
"இப்படி ஒரு அசிங்கமான கேவலமான விஷயத்தை நீ செஞ்சேன்னு மட்டும் தெரிஞ்சுதுன்னு வச்சுக்கோயேன்.. மித்து உன்னை திரும்பி கூட பார்க்க மாட்டா.. ஏன்னா என் மித்து அவ்வளவு நேர்மையானவ!" என்று சொன்ன அரவிந்தை இன்னும் அவன் அடிக்க.. குடிபோதையில் இருந்தாலும் ஓரளவு சமாளித்து தள்ளாடியபடி நின்று தடுத்தான் அரவிந்த்.
"உன்னை எல்லாம் இப்படி விடவே கூடாதுடா!" என்றவன் தனக்கு தெரிந்த ஆட்களை கூப்பிட்டு "இவனை தூக்கிட்டு போய் நல்லா மிதி மிதினு மிதிங்கடா" என்று அனுப்பி வைத்தான்.
தூக்கி சென்றவர்களும் அரவிந்தை நைய புடைத்து போட்டுவிட்டு இருக்க..
'அரவிந்தை காணாமல் யாழினி தேடி என்னிடம் வருவாள். அவனை கண்டுபிடிக்க சொல்லி உதவி கேட்டு கெஞ்சுவாள். அப்பொழுது இருக்கு அவளுக்கு.. இவனை கண்டுபிடிப்பது போல கண்டுபிடித்து கொடுத்து, இனி உன் வாழ்வில் இவனுடைய பக்கமே இருக்கக் கூடாது முழுவதாக எல்லாத்தையும் அழித்துவிட வேண்டும் என்று நிபந்தனை இட வேண்டும்!' பெரும் கோட்டை கட்டி வைத்திருந்தான் அதிரதன்.
அவன் கோட்டை எல்லாத்தையும் தரைமட்டமாக்கி தனியாகவே அரவிந்தை தேடிக் கொண்டிருந்தாள் யாழினி இவன் பக்கமே திரும்பாது.
மறுநாளும் சென்று தன் கோபம் தீர அரவிந்தை இவன் அடிக்க "அப்பவும் நீ என்ன வேணாலும் என்னை பண்ணிக்கோ மாமே.. ஏன்னா இப்ப நான் பலவீனமானவன்! பலவீனமான அடிக்கிறது உன் போல பிசினஸ் மேனுக்கு எல்லாம் பழக்கம் தானே மாமே! ஆனால் இந்த நிலையும் மாறும்.. காலச்சக்கரம் எப்பொழுதும் ஒரு போல சுத்தாது மாமே! அப்போது என் கை ஓங்கும்" என்று வாய்க்கிழிந்து ரத்தம் சொட்ட சொட்ட பேசிய அரவிந்தை பார்க்க இன்னும் வெறி ஏறியது அதிரதனுக்கு.
அதிலும் வார்த்தைக்கு வார்த்தை அவன் போடும் மாமே என்ற வார்த்தை அவனது பிபியை எகிர வைத்தது சும்மா சுர்ருன்னு…
அடுத்த நாளும் யாழினியை இவன் எதிர்பார்ப்போடு அவள் வரும் வழியிலேயே எதிர்கொண்டு காத்திருக்க.. அபிசியல் ஆக இவனை பார்த்து ஒரு குட் மார்னிங் வைத்தவள் அவனை கடந்து சென்று விட்டாள்.
அவள் முகம் முழுவதும் இறுக்கமாக இருந்து. அவளிடம் இருந்து அவனால் எதையும் படிக்க முடியவில்லை. கூடவே பாடத்திலும் வகுப்பிலும் கவனம் இல்லாமல் இருந்ததை பார்த்து அப்படியாவது அவளை திட்ட வேண்டும் என்று பியூனை விட்டு வர சொன்னால் அதற்கும் வரவில்லை அவள். முடிந்தால் என்னவோ செய்து கொள் என்று இருந்தவளை.. என்னதான் செய்வது என்று புரியாமல் தவித்தான் அதிரதன்.
'கோபப்பட்டு வேலை விட்டு தூக்கினால்?'... ரொம்ப நல்லது என்று அவள் சென்று விடுவாள். ஆனால் அவளின் பிடி என்னிடம் இருக்க இந்த வேலை அவசியம் அவளுக்கு என்று, அவளை விட்டு பிடிக்க இவன் நினைத்திருக்க.. ஒரேடியாக விட்டு விட்டான் என்று அவனுக்கு தெரியவில்லை.
சொக்கலிங்கம் அன்று இரவு மகளை தேடி வந்தவர் களையிழந்த மகளின் முகத்தைப் பார்த்து ஏதோ சரியில்லை என்று புரிந்து கொண்டார்.
கூடவே விஸ்வநாதன் இரண்டு நாளாக அரவிந்த் வீட்டுக்கு வரவில்லை என்றதும் 'இன்னும் ஏதோ தப்பாக நடந்திருக்கிறது ஆனால் என்னவென்று மகள் தங்களிடம் பகிரவில்லையே? பகிர்வாள்!' என்று அவரும் இரண்டு நாட்களாக காத்திருந்து முடியாமல் தான் மகளிடம் வந்து கேட்டார்.
"யாழினி என்னம்மா ஆச்சு? அரவிந்த் எங்கே?" என்று கேட்டது தான் தாமதம் இரு கண்களில் அருவியாக கண்ணீர் கொட்ட.. இரு கைகளையும் விரித்து சிறு குழந்தை போல தலையாட்டி உதடுகளை பிதுக்கி "எங்கென்னு தெரியலையேப்பா?" என்று தந்தையின் தோளில் முகம் புதைத்து கதறி விட்டாள்.
"என்னமா சொல்ற? அவன் எதோ பேடண்ட் விஷயமாக போய்ருக்கான்னு நீ சொன்னதா சொக்கலிங்கம் சொன்னானே" என்று அதிர்வோடு கேட்டார்.
"ஆமாம்பா.. அப்படித்தான் மாமா கிட்ட நான் சொல்லி வச்சிருக்கேன். ஆனா நிஜமாவே அவன் எங்க போனான்னு தெரியலையேப்பா" என்று மீண்டும் உதட்டை பிதுக்கிக் கொண்டு சிறு குழந்தையாய் அழும் மகளை வாஞ்சையாக தோளோடு அணைத்துக் கொண்டார் சொக்கலிங்கம்.
"என்னென்ன நடந்ததுன்னு என்கிட்ட முழுசா சொல்லுமா! அப்பா வேறு கோணத்துல யோசிப்பேன் இல்ல" என்றதும் அப்பா சொல்வதும் சரிதான் என்று நினைத்தவள், பெரும் தயக்கம் அதிரதனோடு அவளது ஈர்ப்பை சொல்லியாக வேண்டும் சொல்லாமல் இது சொன்னால் அப்பாவுக்கு புரியாத அல்லவா என்று மெதுவாக அனைத்தையும் கூறினாள்.
அவரிடம் கூறி விட்டு தலை கவிழ்ந்து அமர்ந்திருக்கும் மகளைப் பார்த்தவர், அவள் தலையை மெதுவாக வருடி "இந்த வயசுல சலனப்படுறதும் பிற பாலினத்தால ஈர்க்கப்படுறதும் காதலில் விழுகிறது எல்லாம் சகஜம் மா. ஆனால் அந்த பையன் உனக்கானவனா? நீ நீயாக இருக்க அனுமதிப்பவனா அதை முதல்ல பார்த்துக்கோ.. ஆனால் அந்த ஆர்த்தி பொண்ணு ஏன் அப்படி வந்து நடிச்சது?" என்று கேட்க "எனக்கும் தெரியலப்பா?" என்று தலையை இடவலமாக அசைத்தாள் யாழினி.
"அர்வி அதனால் மட்டும் கோபப்படலைனு தோணுது எனக்கு. என்னமோ அது மட்டும் காரணம் இல்லைனு தோணுது மா! அந்த பொண்ணு காதல் சொல்லி இவன் அதை ஏத்துக்கல.. அவனோட கடின உழைப்பு கவனம் எல்லாம் அவன் செய்த அந்த ப்ராஜெக்ட்ல தான் இருந்ததுன்னு சொல்ற.. இரண்டுக்கும் இடையில் முடிவெடுக்காமல் தெரியாமல் தவிப்பவன் கிடையாது அரவிந்த்! அவன் தெளிவாகத்தான் இருந்திருக்கான்! ஆனா வேற என்னமோ நடந்திருக்கு. அதுதான் என்னன்னு எனக்கும் புரியல" என்றார் யோசனையோடு.
மகளும் அவரை பார்த்து "நானும் இப்படித்தான் யோசிச்சேன் பா. அவனை எனக்கு தெரிஞ்ச எல்லா இடத்திலும் தேடிட்டேன். அவனை கண்டுபிடிக்க முடியலப்பா" என்று தந்தையின் தோள் பற்றி அழுது கொண்டே இருந்தாள்.
அன்று இரவோ இருவருக்கும் ஒவ்வொரு மாதிரி…
ஆராத்தியா எப்படி அண்ணனுக்கு தெரிந்தது என்று ஒருவித பயத்தில் இருக்க…
அதிரதனோ அரவிந்தன் கொடுத்த வார்த்தைகளில் இருந்து மீள முடியாமல் கோபத்தில் கொந்தளித்தபடி இருக்க…
யாழினியோ இன்னும் அர்விந்தை காணாமல் தூக்கம் இல்லாமல் தவித்து கொண்டு இருக்க..
இவர்கள் அனைவரின் தூக்கம் கெட மூல காரணியான அர்விந்தோ.. அதிரதன் அடியாட்களோடு அமர்ந்து தண்ணி (ச
ரக்கு) அடித்துக் கொண்டு இருந்தான் சாவதானமாக..!!
ஆமாம் பாஸ்.. அதிரதன் தண்ணி மட்டும் தானே கொடுக்க சொன்னான்.. அதான் தண்ணி அடிக்கிறான்!!
தொடரும்…