மோகங்களில்… 6
"இந்தா ராசாத்தி.. எலும்பு சூப்பு, உடம்புக்கு வலு.. குடி!" என்று முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு தன்னிடம் சூப் பவுலை நீட்டும் சாவித்தரி அம்மாவை சுவாரசியமாக பார்த்த அனுப்ரியா, கையைக் கட்டிக் கொண்டு பவுலை வாங்காமல் அவரையே பார்த்தாள்.
சாவித்திரி அம்மாள் இங்கே வந்து செட்டில் ஆகி ஒரு வாரம் ஆகப்போகிறது.
ஆனாலும் ஏனோ அவருக்கு, இப்படி வாடகைத்தாயாயாக இருக்கும் அனுப்ரியாவின் வாழ்க்கை முறையை.. அவரது வயதிற்கும் அவர் வாழ்ந்த வாழ்க்கை முறைக்கும் ஒத்துக் கொள்ளவே முடியவில்லை.
ஆனாலும் பொறுப்பு ஏற்று வந்து விட்டார். அதுவும் யாருமற்ற பெண்! இங்கே தனியாக இருக்கிறாள்.. இயற்கையாகவே தாய் உள்ளம் அவள் மீது அன்பு காட்ட, கூடவே துருவ் சம்பளமாக கொடுப்பதாக சொன்ன இருபதாயிரம் ரூபாயும் இங்கே அவரைப் பிடித்து வைத்தது.
திரும்பவும் மகன் வீடு சென்றால் இடிச்சோறு உடன்… இங்கே அவர் வருவதற்கு முன் அங்கே அவர் செய்த அலப்பறையில் மருமகள் காண்டாக இருந்தவள்.. இப்போது உடனே திரும்பி சென்றால் காண்டாமிருகமாகி விடுவாள் என்ற பயத்தில் தான் இங்கேயே டேராவை போட்டுவிட்டார்.
"இப்படி மூஞ்சிய தூக்கி வச்சுக்கிட்டு நீங்க சூப்பெல்லாம் எனக்கு கொடுக்க வேண்டாம்! எனக்கு இந்த சூப் வேணாம். நான் இப்பவே வேற ஆள மாத்த சொல்றேன்" என்றவள்,
"அண்ணா சார்…" என்று இவள் கத்த அடுத்த நிமிடம் ஜீனி பூதம் போல் அங்கே ஆஜரானான் சுகன் "என்ன வேணும் மேடம்?" என்ற கேள்வியோடு…
"இந்த சாவித்ரி அம்மாவா பாருங்க… மூஞ்சை இப்படி தூக்கி வச்சுக்கிட்டு என்கிட்ட சூப்ப கொடுக்குறாங்க! இப்படி கொடுத்தா இந்த சூப்ப நான் எப்படி சாப்பிட? இந்த சத்து உள்ள பிள்ளைகளுக்கு எப்படி போய் சேரும்.. அண்ணா சார்" என்றாள் வேண்டுமென்றே முகத்தை பாவம் போல வைத்து அனுப்ரியா.
கண்களில் கண்டனத்துடன் சுகன் இப்போது சாவித்ரி அம்மாளை பார்க்க..
"போட்டு கொடுத்துட்டாளே போக்கிரி பொண்ணு!" என்று நினைத்தவர் வாயை காது வரை இழுத்து வைத்துக் கொண்டு "ராசாத்தி இந்த சூப்ப குடிச்சிடு ராசாத்தி" பாசமாக அழைத்து கொடுக்க..
அவளோ "கேட்கல.. சாவி மா" என்றாள் வம்பு பண்ணும் நோக்கில்…
"பாரேன். இவ பண்ற அலும்ப" என்று நினைத்துக் கொண்டாலும் மீண்டும் "ராசாத்தி இந்த நல்லி எலும்பு சூப்ப குடிச்சிட்டு தங்கம். அப்பதான் வயித்துல உள்ள பிள்ளைகளுக்கு நல்ல சத்து சேரும்" என்று சிரித்த முகமாக சத்தமாக சொல்லிக் கொண்டே அவர் கொடுக்க..
"சத்தம் பத்தல!" என்று வேண்டுமென்றே அவள் உதடு பிதுக்க…
"இவள.. !" என்று அவள் தலையில் கொட்ட வந்த கைகளை அடக்கி வைத்துக் கொண்டு அவள் காதருகே "ராசாத்திஇஇ… சூப்ப குடி" என்று அவர் சிரித்த முகமாய் கத்த…
அவளோ கோபப்படாது "சிறப்பு! மிகச்சிறப்பு!.. சூப் சூப்பர்" அவரின் இந்த இயல்பான குணத்திற்கு தானே அவளும் இப்படி செய்தாள்.
"இனிமே எப்போதும் இதே மாதிரி சிரிச்ச முகத்தோடு.. உங்க வாயில் இருக்குற இருபது பல்லும் தெரிய என்கிட்ட காமிச்சுகிட்டே தான் சாப்பிட குடுக்குறிங்க.. சரியா?" என்று அனுப்பி வைத்தாள்.
என்னதான் சாவித்திரி அம்மாள் வந்து பார்த்துக் கொண்டாலும் சுகனையும் அங்கேயே வைத்திருந்தான் துருவ்.
ஏனென்றால் கடந்த இரண்டு வாரமாக அவன் இந்தியாவிலேயே இல்லை. வெளிநாட்டில் நடக்கும் ஒரு முக்கிய கான்ஃபரன்ஸ் கம் எக்சிபிஷனுக்காக சென்றிருந்தான். அவனுடைய தொழில் விரிவாக்கத்திற்கான வேலைகளே மிக மும்முரமாக இருந்ததால்.. இவளை கண்டிப்பாக பார்க்க முடியாது என்று தெரிந்து எப்பொழுதும் அவனுக்கு துணையாக வரும் சுகனை இங்கே அனுப்பி, அவளுக்கு பாதுகாப்பிற்கு வைத்து விட்டு அவன் வேறு பவுன்சர்களோடு சென்றான்.
சுகன் சற்று கேள்வியோடு பார்க்கவும் "இங்க பாரு மேன்.. நான் சொன்ன வேலையை செய்ய யார வேணாலும் கூட்டுட்டு போக முடியும். ஆனால் அங்க அந்த பொண்ணை உன்னை தவிர வேற யாரையும் நம்பி விட்டுட்டு போக முடியாதுனு நான் நினைக்கிறேன்.." என்றதும் சுகனும் தலையாட்டிக் கொண்டான்.
அதனால் அவள் "அண்ணா சார்.." என்று அழைத்தால்.. ஜீனி பூதமாய் அவள் முன் தோன்றிடுவான். அவள் குறையை நீக்கிடுவான். தேவையை பூர்த்தி செய்திடுவான்!!
சாவித்ரி இங்கே வந்த இரண்டாம் நாளே கணவனை இழந்து ஒற்றைப் பிள்ளையான சங்கரனை எப்படி போற்றி போற்றி வளர்த்தார்… பின் திருமணம் செய்து வைத்தவுடன் மருமகளாக வந்தவளும் இவரும் மாறி மாறி சண்டை போடுவது வரை.. அனைத்தையுமே புட்டு புட்டு வைத்து விட்டார் சாவித்ரி அம்மாள்.
அதேபோல் இவளும் மேலோட்டமாக வாடகைத்தாய் என்பதோடு முடித்து இருந்தாள். வேறு எதுவும் உள்ளே சொல்லவில்லை.
அதை கொஞ்சம் கூட சாவித்ரி அம்மாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. 'ஒரு கல்யாணம் ஆகாத கன்னிப்பெண்.. அதுவும் தாம்பத்தியம் என்றால் என்னவென்றே தெரியாத கன்னி பெண்ணவள்.. வயிற்றுக்குள் கரு? இது எப்படி ஏற்றுக்கொள்ள ஆண்டவா? இந்த உலகம் எதை நோக்கி செல்கின்றது?' என்று குழம்பி புலம்பி தள்ளிவிட்டார், அன்றைய நாள் முழுதும்.. அதன் பின் அவ்வப்போது அதைப்பற்றிய முணுமுணு பேச்சு அவர் வாயில் இருந்து வராமல் இருந்ததே இல்லை.
"உங்களுக்கு தான் இங்கே இருக்க பிடிக்கலையே.. அப்புறம் எதுக்கு இங்க இருக்கீங்க பொட்டிய கட்டுங்க.." என்று இவளும் சலிக்காமல் வாயாடுவாள் அவரிடம்.
"அதுவா… தெரிந்த பேய்க்கு.. தெரியாத இந்த பிசாசே பரவாயில்லைனு இங்கேயே இருக்கேன்" என்று சொல்பவரிடம்
"இல்லையே சாவி மா.. இது அப்படி வராதே! தெரியாத தேவதைக்கு தெரிந்த பேயே பரவாயில்லனு தானே வரும்?" என்று அந்த பழமொழியை திருத்தியவள், அதற்குப் பின் தான் அவள் மண்டையில் பல்ப் எரிந்து அவள் தான் பிசாசு என்றது புரிய.. "யார பாத்து பிசாசுனு சொன்னிங்க? நீங்கதான் பிசாசு.. அதுவும் சாதாரண பிசாசு இல்ல நெருப்பு கக்கும் கொல்லி வாய் பிசாசு!" என்று அவளும் பதிலுக்கு திட்ட.. அங்கே ஒரு சின்ன மாமியார் மருமகள் சண்டை சத்தமே இல்லாமல் அரங்கேறிக் கொண்டிருந்தது நித்தமும்.
சிங்கப்பூரில் நடக்கும் கார்மெண்ட்ஸ் தொழிலதிபர்களுக்கான மாநாட்டில் தான் கலந்து கொள்ள சென்றான் துருவ் வல்லப்! அவனுடைய பேச்சுக்கு அங்கே மிகுந்த வரவேற்பு. அது இளம் தொழிலாளர் நன்முறையில் முன்னேறி வருகிறான் என்றால்.. ஆச்சரியப்பட மாட்டார்களா என்ன?
அதையும் தாண்டி அவனது தோற்றமும் பொலிவும் கூடவே அவனின் அறிவார்ந்த பேச்சும் என்று அன்றைய நாயகன் அங்கு துருவ் வல்லப் தான். அதோடு கூடிய எக்ஸிபிஷனில் அவன் தனது உற்பத்தியில் தயாரிக்கப்பட்ட உடைகளை அங்கே பார்வைக்கு வைத்திருக்க.. அனைத்துமே பெரும் பாராட்ட பட, அவனின் புகழ் கூடிக் கொண்டே இருந்தது.
ஒரு பெரிய கூட்டத்தில் இரண்டு பேர் நம்மை பாராட்டுகிறார் என்றால்… இரண்டு பேர் அமைதியாக கடக்கிறார்கள் என்றால்.. நான்கு பேர் அங்கே நமக்கான அடுத்த குழியை தோன்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பது பொருள்! கலிக்காலத்தில் அது நிதர்சனமும் கூட!!!
அப்படித்தான் துருவின் இந்த அதீத வெற்றியும் கூடவே அவனின் ஆளுமையான தோற்றம்.. வசீகர மார்கெட்டிங் பேச்சு.. இப்படி அனைவரையும் தன்னை நோக்கி ஈர்த்துக் கொள்ளும் திறன் என்று
அன்றைய நாளில் ஆதர்ஷ நட்சத்திரமாக திகழ்ந்த துருவ் வல்லப்பை சுற்றி வலைகள் பின்னப்பட்டன..
அவனின் கடந்த காலம் எல்லாம் ஆராயப்பட்டது. பிரிந்து போன இல்லை இல்லை அவனால் பிரித்து விடப்பட்ட.. அவனது மனைவியை பற்றிய விபரங்களும் சேகரிக்கப்பட்டது. இது எது பற்றியும் கவலை கொள்ளாமல் தான் உண்டு! தனது தொழில் உண்டு!! என்று அதிலேயே தன் முழு கவனத்தை வைத்திருந்தான் துருவ் வல்லப்.. இரண்டு நாட்கள் கான்பரன்ஸூம் அவனுக்கு திருப்திகரமாகவே முடிந்தது. உடனே ஊருக்கு செல்லவும் அவனுக்கு விருப்பமில்லை.
ஊருக்கு சென்றால் தேவையில்லாத பாரமாக அதாவது விக்கிரமாதித்தன் கழுத்தில் தொங்கும் வேதாளமாக அனுப்ரியா அவனுக்கு தோன்றினாள்.
மனைவியோடு அவனிருந்த காலத்தில் கூட அழகிய மனைவியோடு தேனிலவோ இன்ப சுற்றுலாவோ சென்றது கிடையாது துருவ். அவனுக்கு தேவை எல்லாம் அவனுக்கு தொழில் வட்டாரத்தில் பெருமையாக காட்டிக்கொள்ள அழகிய மனைவி ஒருத்தி.. நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசும் அழகு பதுமை.. கூடவே இன்னார் மகள் என்று கூறிக்கொள்ள அவளுக்கென்று ஒரு வசதியான பேக்ரவுண்ட்.. அவ்வளவுதான்!! அதுவும் சில சமயம் தொழில் முறை பார்ட்டிகளுக்கு மட்டுமே அழைத்து செல்பவன்.. மீது நேரமெல்லாம் ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு என்பது போல மதுக்கிண்ணங்களோடு தனியாக அவனது சுற்றுலாவும் அவனது நண்பர்களோடு மட்டுமே அமைந்திருக்கும்.
கணக்கில் அடங்கா பணம்.. கேள்வி கேட்க யாருக்கும் தைரியம் கிடையாது அப்படி இருந்தாலும் மற்ற பெண்களை அவனை என்றும் நாடியது கிடையாது. அவன் மீது வந்து பழகும் பெண்களையே ஏதோ அற்ப புழுவை போலவே தள்ளி வைப்பான். மனைவியையே அப்படித்தான் தள்ளி வைத்திருந்தான்.. வந்து ஒட்டிக் கொள்பவர்களையா இவன் அப்பிக் கொள்வான்??
சிங்கப்பூர் ஒன்றும் அவனுக்கு புதிதல்ல, ஆனாலும் மன மாறுதலுக்காக தனியாக போட்டு எடுத்து ஒரு நாள் முழுக்க நடுக்கடலிலேயே மது கோப்பைகளோடு இருந்தான். மறுநாள் சிங்கப்பூரின் அழகை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தவனின் கண்களில் விழுந்தாள் அப்சரா. அதுவும் தனியாக எல்லாம் இல்லை நண்பனோடு.
அப்சரா அழகி தான்! அதே நேரம் செல்வ குடும்பத்தின் செல்ல மகளும் கூட.. உடைகள் எப்போதும் பகட்டாகவே தான் இருக்கும். ஆனால் இன்று அந்த பகட்டுகள் காணாமல் போய் சற்று கவர்ச்சியாய் தெரிய.. நண்பன் என்ற ஒருவனோடு உலா வந்து கொண்டிருந்தாள் சிங்கப்பூர் மாலில்…
எதிரெதிர் துருவம் இருவரும் பார்த்துக் கொண்டனர். தன்னை ஒரு ஆணோடு பார்த்ததில் துருவ் கண்களில் ஏதேனும் பொறாமை தென்படுகிறதா? கோபம் ஏதேனும் காணப்படுகிறதா? என்றுதான் முதலில் பார்த்தாள் அப்சரா!
என்ன இருந்தாலும் மூன்று ஆண்டுகளுக்கு மேல் அவனுடன் மனைவியாக வாழ்ந்தவள் என்று கொஞ்சமாச்சும் உரிமை உணர்வு இருக்கிறதா என்று அவன் கண்களை கூர்ந்து பார்த்து ஆராய அங்கே ஒரு உணர்வும் இல்லவே இல்லை! ஏதோ நண்பர்களை பார்ப்பது போன்ற சாதாரண பார்வை!
அவளை பார்த்து சிரிப்போடு வாழ்த்து சொன்னவன் "தாங்க் காட்.. அட் லாஸ்ட் உன்னோட டெஸ்டினேஷன் அடைஞ்சுட்ட போல! கான்க்ராட்ஸ்.. அப்சரா" என்று அருகில் இருந்த அவளது நண்பனை பார்வையால் சுட்டிக்காட்டினான் துருவ்.
அப்சராவின் நண்பனாக அருகில் இருந்தவனுக்கு அப்சராவை திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் எல்லாம் இல்லை. ஆனால் பிரண்ட்ஸ் வித பெனிஃப்ட்ஸ் என்ற பெயரில் அவளோடு சுற்றிக் கொண்டிருந்தான்.
இப்படிப்பட்ட இன்றைய இளைஞர்கள் எந்த உறவுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதோ.. அதற்கான உண்மையாகவோ இருப்பதில்லை!
நண்பர்கள் என்று சொல்லுபவர்களோ அந்த நட்புக்கும் உண்மையாக இல்லாமல், ப்ரண்ட்ஸ் வித் பெனிஃப்ட்ஸ் என்று தங்களுக்குள்ளேயே எல்லையை வகுத்து கொண்டு தங்கள் இச்சைகளை தீர்க்க மட்டுமே!! அது போல ஒருவன் தான் அந்த திலீப்.
அப்சரா அம்மாதிரியான பெண் கிடையாது. இதுவரை அவனோடு வாழ்ந்த வாழ்க்கையில் அவள் உண்மையாகத்தான் இருந்தாள். இங்கே சிங்கப்பூருக்கு சில நண்பர்களோடு சுற்றுலா வந்தவள் மற்றவர்கள் வேறு இடத்திற்கு செல்ல.. சில பொருட்கள் வாங்க என்று இந்த மாலுக்கு திலீப்போடு வந்து இருந்தாள் அவ்வளவே…!!
இத்தனை நாட்களுக்குப் பிறகு பார்க்கிறான் மனைவி என்று உரிமை உணர்வு வரவே இல்லையா?
இத்தனை ஆண்டுகளாக அவனுடன் வாழ்ந்த வாழ்க்கை தான் என்ன?
என்று அவள் சற்று கோபத்தோடு அவனை பார்த்து கொண்டிருக்க..
அந்த நேரத்தில் ஒருத்தி வந்து துருவை அணைத்து "உங்க ஸ்பீச் கான்ஃபரன்ஸ்ல அவ்ளோ சூப்பரா இருந்தது. யூ லுக்கிங் சோ ஹாட்!" என்று ஆங்கிலத்தில் கொஞ்சி கெஞ்சி பேச அப்சராவுக்கு பற்றி கொண்டு வந்தது.
இத்தனை வருடங்களில் கணவனைப் பற்றி அறியாதவள் கிடையாது. ஆனாலும் அந்த நேரத்துக்கு கோபம் ஏனோ அவளை ஆட்டி வைத்தது!
'நான் உனக்கு இத்தனை வருடம் உண்மையாக இருந்து என்ன பயன்? பார்க்கும் இவனோடு நான் சேர்ந்து விட்டதாகவே கூறுகிறானே? நாம் இவனை புரிந்து கொண்ட அளவுக்கு இவன் நம்மை புரிந்து கொள்ளவில்லையே!' என்று அவ்வளவு எரிச்சல் மிக…
"எனக்காவது இப்படி ஒரு டெஸ்டினேஷனா ஒரு ஆள் இருக்கான். பட் பாவம்.. உங்களுக்கு தான் அப்படி யாருமே இல்லையே? பாக்குற இடம் எல்லாம் உங்களுக்கு டெஸ்டினேஷன் தான்!" என்று இகழ்ச்சியாக சிரித்தவள் "வா திலீப் போகலாம்.. இன்னும் நிறைய பர்சேஸ் பண்ண வேண்டியது இருக்கு. டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம்" என்று அவனோடு கைகோர்த்து மற்ற நண்பர்கள் சென்ற பப்புக்கு சென்று விட்டாள்.
செல்லும்பொழுது துருவை ஒரு மாதிரியாக பார்த்து சென்றாள். அந்த பார்வையின் அர்த்தம் அவனுக்கு புரியவே இல்லை. அவனும் பக்கத்தில் நின்ற அந்த தொத்து கிளியோ சற்றும் விலகேன் என்று சிறிது நேரம் பேச.. துருவோ "ஐ ஹேவ் சம் இம்பார்டன்ட் ஒர்க்" என்று நழுவி சென்று விட்டான்.
ஏனோ துருவின் இந்த பாராமுகமும் பேச்சும் மீண்டும் உள்ளுக்குள் எரிய அதை அணைக்க ஆல்கஹாலை நாடினாள் அப்சரா. சில்லென்ற ஆல்கஹால் உள்ளே உள்ள சூட்டை தணிக்க.. கூடவே அதன் போதையில் அருகே இருந்த திலீப்போடு பல செல்பிக்களை எடுத்து இன்ஸ்டால் போட்டுவிட்டாள்.
உலகம் ஒரு குளோபுல் வில்லேஜ் என்று சொல்வது எத்தனை உண்மை!
அப்சரா சிங்கப்பூரில் பதிந்த போட்டோக்கள் அடுத்த நொடியே இன்ஸ்டால் உலாவ துவங்க.. சென்னையிலிருந்து சசிகலாவுக்கும் தெரியவந்தது.
துருவின் அன்னை சசிகலாவிற்கு மருமகள் இன்ஸ்டாவில் பதித்திருந்த போட்டோக்கள் எல்லாம் வாட்ஸ் அப்பில் வந்து குவிந்தது. எல்லாம் நம்மை சுற்றியுள்ள பாசமிகு சொந்த பந்தங்களால் தான்.
"என்ன உன் மருமக.. இப்படி அரையும் குறையுமாக யாரோ ஒரு ஆணுடன் சுற்றிக் கொண்டிருக்கிறா.
உன் பையன் இதெல்லாம் தண்டிக்க மாட்டானா?"
"நிஜமாவே உன் மருமகள் உன் பையனோடு தான் குடும்பம் நடத்துறால? இல்லை…??"
"கண்டவனோடு பொண்டாட்டியை ஆடவிட்டுட்டு உன் மகன் என்ன செய்கிறான்? நெஜமாவே உன் புள்ள ஆம்பள புள்ள தானா?"
"இப்படிப்பட்ட கூத்தாடி எல்லாம் குடும்பத்துக்குள்ள வைக்கலாமா? ச்சை.. நானா இருந்தா உடனே அத்து விட்டுடுவேன்.."
இப்படி என்று ஏகப்பட்ட கேள்விகளும்.. நக்கல்களும் அவரைச் சுற்றி சுழற்றி அடிக்க.. ஓய்ந்து தான் போனார் அவர்.
சொந்தங்கள் நண்பர்கள் என்று சொல்லிக் கொண்டு அவருக்கு நல்லது பேசுவதாக அவரைக் குத்தி கிழித்தன வல்லூறுகளாய்..!!
அந்த பேச்சுகளை காட்டிலும் மருமகளை இப்படி பார்த்தது அவருக்கு நெஞ்சு திக் என்று ஆனது.
இதுவரை மகன் மருமகளின் வாழ்க்கைக்கு உள்ளே இவர் சென்றதே கிடையாது. ஆனாலும் எப்படியும் சேர்ந்து வாழ்ந்துவார்கள் என்று நினைத்த, அவரின் எண்ணத்தில் மண் விழுந்தது.
மருமகள் சொல்லாமல் கொள்ளாமல் வெளிநாடு சென்றதை முதலில் அவர் பெரிதாக எண்ணவில்லை. ஆனால் நாட்கள் செல்ல செல்ல இவரே இரண்டு முறை அழைத்துப் பார்த்தும் அவள் அழைப்பை எடுக்கவில்லை.
இவர் பதறி மகனிடம் கேட்ட அவனோ "எனக்கு நேரமில்லை அவள் பெற்றோரோடு டூரில் இருக்கிறாள்" என்று வாய்க்கு வந்ததை சொல்லிவிட்டான்.
என்ன இருவரும் ஆளுக்கு ஒரு மூலையில் என்று நினைத்து வருந்தினாலும்.. எப்படியும் திருமணம் அதற்கு உண்டான அன்பும் அவர்களை சேர்த்து விடும் என்று அவர் நம்பி இருக்க..
"இப்பொழுது என்ன நடக்கிறது இருவருக்குள்ளே?" என்று மகன் மருமகள் வாழ்க்கையை நினைத்து மனம் வெகுவாக வெறுத்து போனது அவருக்கு.
அதே நேரம் அவனுக்கான எதிரியையும் அங்கே சம்பாதித்து வைத்ததை தெரியாமல் தான் பெற்ற புகழையும் விரிவடைந்த வியாபாரத்தையும் எண்ணி மகிழ்வோடு ஊருக்கு திரும்பினான் துருவ்.
வீட்டுக்குள் நுழைந்தவனை "அங்கேயே நில்லடா!!" என்று கோபத்தில் வந்த அன்னையின் குரலில் அவன் தேங்கி நிற்க..
"அப்சரா எங்கே?" என்று அவரின் கேள்விக்கு பதில் அளிக்காமல் முகத்தை இறுக்கமாக வைத்து நின்றான் மகன்.
இந்த பிள்ளை ஏன் பொறாம படுது????
அது எல்லாம் அனு பட்டுப்பா🤣🤣🤣🤣
சாவி & அனு😂😂😂😂😂
Oh இவங்களுக்கு இன்னும் தெரியாது இல்ல.....
இந்த அம்மா தான் அன்னிக்கு பகவதி கோவிலா சாப்பாடு தந்தா அனுக்கு?????
@gowri என்ன இருந்தாலும் கொஞ்ச நாள் பொண்டாட்டிய வாழ்ந்தவ இல்லையா அதனால தான் பொறாமை.. அந்த அம்மா வேற அம்மா.. டியர்