2
அன்று சுப்ரமணியம் வீட்டில் அருகிலுள்ள கனகம் மாமி வீட்டில் பூஜை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொதுவாக பூஜை ஹோமம் என்று வந்தால் அந்தப் பகுதியில் உள்ளவர்கள் சுப்பிரமணியத்தை அழைப்பது வழக்கம். அன்றும் சுப்பிரமணியத்தை அழைக்க வந்தவர்களின் கண்கள் ஹம்சவர்த்தினியின் மீது விழ உடனே அந்த வீட்டு கனகா மாமி..
"ஏன்டி அம்சா.. பூஜை முடிந்ததும், நீ வந்து ஒரு பாட்டு பாடப்படாதோ" என்று கேட்டார்.
பெண்ணின் குரல் வளத்தைப் பற்றி ஏகப்பட்ட பெருமை என்றும் உண்டு மீனாட்சிக்கு. பொதுவாக நவராத்திரி தினங்களில் இவர்கள் வீட்டிலும் சரி.. மற்றவர்கள் வீடுகளுக்கு இவர்கள் செல்லும் போதும் சரி.. கண்டிப்பாக ஹம்சவர்தினி கீர்த்தனைகளும் பாடல்களும் இல்லாமல் இருக்கவே இருக்காது. தன்னால் இயலாத ஒன்றை, தன் மகள் வழி நிறைவேற்றிக் கொள்ளும் ஆசை உண்டு மீனாட்சிக்கு.
அதற்கு தோதாக யார் வந்து கேட்டாலும் எந்த
மறுப்பும் இல்லாமல் உடனே ஒப்புக் கொள்வார் மீனாட்சி. தாய் சொல்லை தட்டாமல் செய்யும் பெண்தான் ஹம்சவர்த்தினி.
அதுவும் கனகம் மாமி வீட்டு நாராயணன் மாமா அந்த பகுதியில் மிக செல்வாக்கு உள்ளவர். அதனால் கனகம் மாமி என்றாலே ஒரு மதிப்பும் மரியாதையும் உண்டு அப்பகுதியில் உள்ளவர்களுக்கு. இன்று அவரே வலிய வந்து தன் வீட்டு படியேறி தன் மகளின் குரல் வளத்தை புகழ்ந்து கூறி, பாட்டு பாடுமாறு என்று கேட்க.. சிறகில்லாமல் பறந்தார் மீனாட்சி. அவ்வளவு சீக்கிரம் அந்த கனகம் மாமியின் வாயில் இருந்து ஒரு பாராட்டைப் பெற்றுவிட முடியாது. இன்று அது பெரும் வாய்ப்பாகவே கருதி மகளுக்கும் சேர்த்து இவரே சம்மதம் சொல்லி அவர்களை அனுப்பி வைத்தார்.
இதோ பெண்ணுக்கு அலங்காரம் செய்து கொண்டிருக்கிறார் அவர்கள் வீட்டிற்கு அழைத்து செல்ல.. எப்பவுமே ஆள்பாதி ஆடைபாதி என்பதில் மிக கவனத்துடன் இருப்பார் மீனாட்சி. அதையேதான் தன் பெண்களுக்கும் போதித்து வளர்த்திருக்கிறார்.
மெல்லிய ஆழ்ந்த நீல நிற காட்டன் பட்டில் பொன்னிற குட்டை கை வைத்த ரவிக்கை அணிந்து.. அவளது ஒவ்வொரு தலை அசைவுக்கும் வர்ண ஜாலங்களை வாரி இறைக்கும் கல் பதித்த ஜிமிக்கியும் அவள் சிரிப்போடு போட்டியிடும் ஒற்றைக் கல் மூக்குத்தியும் அவள் அழகுக்கு அழகு சேர்க்க.. இருபக்கம் வழியும் மல்லிகை சரத்துடன்.. தேவதை என நிற்கும் தன் பெண்ணுக்கு திருஷ்டி கழித்து விட்டு அழைத்து சென்றார் அவர் வீட்டிற்கு மீனாட்சி.
சுப்ரமணியன் முன்னரே சென்று பூஜைக்கு வேண்டிய ஏற்பாடுகளை அங்கே கவனித்துக் கொண்டிருந்தார். ஹரிப்பிரியா காலேஜ் முடித்து வீடு வருவதற்கு எப்படியும் ஏழு மணி ஆகிவிடும்.. வந்தாலும் இது போன்ற நாட்கள் அவளுக்கு சகஜமே. இவர்கள் பூஜை கோவில் என்று போனாலும் அவளுக்கு தகவல் தெரிவித்துவிட்டு தான் செல்வார்கள்.
சில சமயம் இவளும் சென்று கலந்து கொள்வாள் பெரும்பாலும் தவிர்த்து விட்டு தன் படிப்பை படித்துக்கொண்டு அமர்ந்து விடுவாள்.
கனகம் மாமி வீட்டுக்குள் நுழைய அவ்வீட்டின் பிரமாண்டத்தில் மீனாட்சி அதை சுற்றி பார்த்துக் கொண்டே வந்தார். ஆனால் ஹம்சவர்த்தினியோ அதை கண்டுகொள்ளாமல் அமைதியாகவே உள்ளே நுழைந்தாள்.
அங்கே உள்ளவர்களின் உடைகளும் நகைகளுமே அவர்களது செல்வ நிலையைக் காட்ட.. அம்மா மகள் இருவரும் சற்று ஒதுங்கி நிற்க முயல, இவர்களை கண்டு விட்ட கனகம் மாமி விரைந்து வந்து அழைத்து தன்னுடன் நிறுத்திக்கொண்டார்.
அதில் சற்றே ஆசுவாச மூச்சு வர்த்தினிக்கு.
சுப்ரமணியம் ஏற்கனவே தன் பூஜையை தொடங்கி இருந்தார். பக்தி சிரத்தையுடன் அனைவரும் பூஜையில் கலந்துகொள்ள பூஜை நல்லவிதமாகவே நிறைவுடன் முடிந்தது, சற்று நிம்மதியாக உணர்ந்தனர் நாராயணன் தம்பதி..
பின் அனைவரையும் பார்த்து கனகம் மாமி "இவ எங்க பக்கதாத்து குழந்த நன்னா பாடுவா.. அதுவும் மார்கழி மாசத்துல
இவ பாடுற ஆண்டாள் கீர்த்தனை எல்லாம் கேட்கும் போது நம் கண்ணுக்கு அவள் அந்த ஆண்டாளாவே தெரிவா.. உருகி உருகி அந்த பெருமளை இவ பாடுறதை நாம கேட்கிறச்ச.. நம்மையும் அறியாமல் நம்ம உடம்பெல்லாம் சிலிர்த்து தான் போகும் போங்க.. இன்னைக்கு நீங்க எல்லாம் இவ பாட்ட கண்டிப்பா கேட்டு தான் போகணும்" என்று கூறியவர் வரத்தினியை அழைத்து வந்து நடுவில் அமர வைத்து அவளை பாடுமாறு கேட்டார்.
இதுபோல் பல கூட்டத்திற்கு முன்னாலும் மக்களுக்கும் முன்னாலும் வர்த்தினி சிறு வயது முதலே பாடியிருப்பதால்.. அவளுக்கு இந்த சபை பயம்.. மேடை பயம் எல்லாம் துளியும் கிடையாது. தனக்கு எதிரே இருந்த சுவாமி விக்ரகத்தை வணங்கி விட்டு அவள் கண்களை மூடி தனக்குள் அப்பாடலை தெரிவு செய்து தன் இனிய குரலால் பாட ஆரம்பித்தாள்.
சாரீர சுத்தமாக, வசீகர குரலுடன் அவள் பாடிய ஒவ்வொரு பாடல்களிலும் அங்கிருந்த மக்கள் கட்டுண்டு போனார்கள் அதில். கனகம் மாமி வேண்டுகோளுக்கிணங்க ஆண்டாள் கீர்த்தனையும் பாட.. உருகிக் குழைந்து அவள் பாடிய அந்த பாடலை கேட்ட அங்குள்ளவர்கள் அனைவருக்கும் அவள் ஆண்டாளாகவே தெரிந்தாள். தியாகராஜா கீர்த்தனைகளையும் அவள் பாட அங்குள்ளவர்கள் ஒவ்வொருவரும் அதில் லயித்து போயினர் அவள் இனிமையான குரலில்.
அவள் பாடி முடிக்க அந்த வீட்டில் உள்ளவர்களின் கரவோசங்கள் அவ்வீட்டை அதிரச் செய்தது. முதலில் வந்த கனகம் மாமி வர்த்தினிக்கு புடவையுடன் கூடிய தாம்பூல பையை கொடுத்து "நல்ல பாடின டி.. உன் குரலில் ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்குடி. எங்களையெல்லாம் அது கட்டிப்போட்டுடிச்சு நீ நல்லா தீர்க்க சுமங்கலியாக எல்லா சவுபாக்கியங்களும் பெற்று வாழ வேண்டுமடி குழந்த" என்று தன் கையிலிருந்த தாம்பூலத்தை கொடுத்து குங்குமம் வைத்து விட்டார்.
அடுத்து அங்கு உள்ளவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அவளை பாராட்டினர். அதில் ஒரு மாமி "மீனாட்சி உன் பொண்ணு குரல் மட்டும் இல்ல பார்க்கவுமே அந்த ஆண்டாள் போல அவளோ அழகா தான் இருக்கா.. கூடிய சீக்கிரமே அந்த மாயக் கண்ணன் போல ஒருத்தன் வந்து இவளுக்கு ஆம்படையான வந்து, இவளை தூக்கிண்டு போக போறான்" என்று கூறி செல்ல அதில் மீனாட்சிக்கு ஏதோ சந்தோஷம்தான்.
"அதுக்கு என்ன மாமி.. உங்க வாக்கு நன்னா பலிக்கட்டும்" என்று அவர் கூற அந்த மாமியும் வர்த்தினியை பாராட்டி ஆசீர்வதித்து சென்றார்.
அங்குள்ளவர்களுக்கு சாப்பாடு ஏற்பாடு செய்து இருக்க ஒவ்வொருவராக சாப்பாடு நடக்கும் வந்து இடத்தை நோக்கி சென்றனர். இவர்கள் இருவரும் சுப்பிரமணியத்திற்காக காத்துக் கொண்டு அங்கேயே ஓரமாக நின்று இருந்தனர்.
அவர் பூஜைகளை முடித்த உடன் கனகம் மாமியும் நாராயண மாமா இருவரும் சேர்ந்து அவருக்கு கொடுக்க வேண்டிய தட்சணையை தாம்பாலத்தில் வைத்து கொடுக்கும் நேரம் மீனாட்சியையும் கூப்பிட்டு "தம்பதி சமேதராய் வாங்கிக்குங்க" என்று அழைத்தனர்.
வயதில் பெரியவர்கள் என்று மீனாட்சியும் சுப்பிரமணியம் அவர்களை நமஸ்கரித்து விட்டு தாம்பூலத்தை வாங்கிக் கொண்டனர்.
"சுப்பு.. பூஜை ரொம்ப சிறப்பா முடிஞ்சுது. அதைவிட உன் பொண்ணோட கீர்த்தனைகள் தான் பூஜையை வேற லெவலுக்கு கொண்டு போச்சு போ" என்று அவரும் தன் பங்குக்கு பாராட்டினார்.
அப்போது நாராயணனின் ஒன்றுவிட்ட அண்ணன் ஹம்சவர்த்தினியை பார்த்துவிட்டு அங்கே வந்தார். அவர் வெகுகாலமாக லண்டனில் வசிப்பவர். வேலைக்காக சென்றவர் அந்த வேலையில் ஒன்றி விட இப்பொழுது அவரது சொந்த ஊர் திருவையாறு மறந்து லண்டன் என்று ஆனது.
நாராயணன் தன் அண்ணன் வெங்கடேசனை அங்குள்ளவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.
சுப்ரமணியத்தை பார்த்தவர் "உங்க பொண்ணு ரொம்ப அதிர்ஷ்டம் பண்ணவ.. இந்த மாதிரி ஒரு குரல் லயம் சாரீர சுத்தமா யாருக்கும் வராது. அந்த சரஸ்வதி தேவியின் கடாட்சம் உங்க பொண்ணுக்கு நிரம்பவே இருக்கு. அடுத்த மாதம் எங்க ஊர்ல தமிழ் கலாச்சார விழா ஒன்னு நடக்குறது. உங்க பொண்ணு அதுக்கு பாட அனுப்பி வைக்கிறீங்களா?" என்று சுப்பிரமணியத்திடம் கேட்க.. அவரோ லண்டனுக்கு அதுவும் என் பெண்ணை தனியாளாக வா? என்று கண்களில் கலக்கத்துடன் மகளையும் அவரையும் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டிருந்தார் பதில் கூறாமல்..
வாய்ப்பு என்பது ஒரு சிலருக்கு தேடிவரும் போது அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளாவிட்டால்.. மீண்டும் அந்த மாதிரி ஒரு வாய்ப்பு கிடைப்பது என்பது அரிது தான் அதை தன் அனுபவத்தில் நன்றாக உணர்ந்திருந்த மீனாட்சி கணவனின் இந்த செயலை பார்த்து 'சரியான அம்மாஞ்சி' என்று தனக்குள் திட்டிக்கொண்டே.. வெங்கடேசனை பார்த்து "மாமா ரொம்ப சந்தோஷம் என் பொண்ணுக்கு நீங்க இவ்வளவு பெரிய ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பேள்ன்னு நான் கொஞ்சம் கூட நினைக்கல. எங்களுக்கு ரொம்ப சந்தோஷம் எங்க பொண்ணு கடல்கடந்து பாட போறான்னு கேட்கிறச்ச. ஆனால் சின்ன பொண்ணு எப்படி தனியா அவ்வளவு தூரம் நாங்க தனியா அனுப்புவது? என்று பெண்ணைப் பெற்ற அன்னையாக அவர் பயத்துடன் கேட்க..
அவரின் அந்த பயத்தை புரிந்த வெங்கடேசன் சற்று சத்தமாக வாய்விட்டு சிரித்தார்.
"என்ன மாமி நீங்க? நம்மாத்து பொண்ணுங்க எல்லாம் எவ்வளவு தைரியமா எவ்வளவு நாட்டுல ஊர்ல தனியா வேலை பார்க்குறாங்க.. நீங்க எங்க இருக்குற இலண்டனுக்கு அனுப்ப பய்ப்புடுறேள். இங்கே இருந்து சென்னை.. சென்னையில் இருந்து லண்டனுக்கு ஒரே ப்லைட்டு. என்ன அங்க வந்து இறங்குன ஒரே வாரம்தான். கச்சேரி என்னமோ மூன்று நாள் தான் நடக்கும். மீது நாலு நாள் அங்க இங்க சுத்தி பாத்துட்டு அடுத்தபடியாக சென்னைக்கு வந்த இறங்குனானா.. அடுத்த நாள் காலை உங்க வீட்டுக்கு வந்து விட போறா. அது மட்டும் இல்லை மாமி.. சென்னையில் இருந்து இன்னும் மூன்று பேர் வராங்க.. அவங்க கூட சேர்த்து அனுப்பி வைக்கலாமே மாமி" என்று அவர் இந்த வாய்ப்பை விட வேண்டாம் என்று மறைமுகமாக வலியுறுத்திக் கூறினார் மீனாட்சியை பார்த்து.
ஏற்கனவே தன் மகளை இம்மாதிரியான ஒரு நல்ல நிலையில் வைத்துப் பார்க்க வேண்டும் என்று கனவு காணும் மீனாட்சி இதை தவிர விடுவாரா என்ன? இதை அவரும் விருப்பமாகவே பற்றிக்கொண்டார்.
வெங்கடேசன் வர்த்தினியை பார்த்து "என்ன ம்மா உனக்கு ஓகே தானே?" என்று கேட்க அவளோ மென் நகையுடன் "அம்மா அப்பாவுக்கு ஓகேன்னா எனக்கும் ஓகேதான் மாமா" என்று மென்மையாக கூற அவளின் அந்த மென்மை குரல் கூட ஏதோ இன்னிசை வாசிப்பது போலவே அவருக்கு கேட்டது.
"மாமி உங்க பொணுணை ஆத்துல ரொம்ப நன்னா வளர்த்திருக்கேள்.. பேசும்போது கூட இவ்வளவு பவ்யமா மரியாதையா பேசுற இம்மாதிரியான பொண்ணுங்க எல்லாம் இப்போ பார்க்கிறது எலாலாம் ரொம்ப அதிசயமா இருக்கு தெரியுமோ? இவளை பொண்ணா பெத்ததுக்கு நீங்க ரெண்டு பேரும் கொடுத்துதான் வச்சிருக்கணும்" என்று அவர்களைப் பார்த்து கூற..
இதைவிட பெற்றவர்களுக்கு வேறு என்ன சந்தோஷம் நிம்மதி கிடைத்து விட முடியும்!!
முகம் கொள்ளா புன்னகையுடனும் வெங்கடேசனை பார்த்து ரொம்ப நன்றி மாமா என்று சுப்பிரமணியன் கூறினார்.
ஆனால் அதேநேரம் மனதுக்குள் அவருக்கு ஒரு இனம்புரியாத கவலை கூட.. நான்கைந்து பேர் வந்தாலும் கண்காணாத தேசத்தில் அவரின் செல்ல மகள் எப்படி இருப்பாள். தெரிந்த ஆட்கள் என்றாலும் அவருக்கு உள்ளுக்குள் ஏதோ என்று உறுத்தி கொண்டேதான் இருந்தது. ஆனால் அது எதையும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை மனைவியின் மலர்ந்த புன்னகையை பார்த்து.
பின் வெங்கடேசன் துரிதமாக என்னென்ன ஆவணங்கள் எல்லாம் எடுத்துக்கொண்டு வரவேண்டும் என்பதை அவளுக்கு கூறிவிட்டு.. "உன்கிட்ட பாஸ்போர்ட் இருக்கோ?" என்று கேட்டார்.
திருவையாறு தஞ்சாவூர் திருச்சியைத் தாண்டி அவள் எங்கே வெளியே சென்றாள்? மிஞ்சி மிஞ்சி போனால் சென்னை வரைக்கும் போகலாம் என்றுதான் அவளுடைய எண்ணமாக இருக்க.. வெளிநாடு எல்லாம் அவன் நினைத்துப் பார்க்காத ஒன்று. அதனால் பாஸ்போர்ட் எல்லாம் அப்ளை செய்ய வில்லை.
"இல்லையே மாமா" என்று அவள் கூற..
"அதனால் என்னடி மா.. ஒரே வார்த்தையில் தட்கல் ல அப்ளை பண்ணினா பாஸ்போர்ட் கொடுத்துட்டு போறான். இன்னும் இருபது நாள் கிட்டத்தட்ட இருக்கு. நீ அதுக்குள்ள பாஸ்போர்ட் அப்ளை செய்து எனக்கு அதோட காப்பி அனுப்பி வை. நான் உனக்கு அங்க வரதுக்கு தேவையான விசா மத்த ஆவணங்களை எல்லாம் எடுத்து அனுப்புறேன் சரியா?" என்று கூறியவர் அனைவரிடமும் விடைபெற்று உள்ளே சென்று விட்டார்.
கனகம் மாமி அதுவரை நடந்தவற்றை அமைதியாக பார்வையாளராக இருந்து பார்த்தவர் "மீனாட்சி உன் பொண்ணுக்கு நல்ல காலம் பிறந்துச்சிடி.. இதை பத்திரமா பிடிச்சுக்கிட்டு அவளை நல்ல வழியில முன்னுனேத்த பாரு.. என்ன?" என்று அவர் அனுபவம் சரியாக கூற..
"ஆமாம் மாமி எல்லாம் ஆத்துக்கு வந்து நேரம்தான். நீங்க எங்க எங்கள கூப்பிடலேன்னா இப்படி ஒரு வாய்ப்பு என் பொண்ணுக்கு கிடைத்த இருக்கவே இருக்காது. எல்லாம் உங்களால தான்" என்று. இரண்டு மூன்று பிட்டை சற்று அதிகமாகவே போட்டு அவரையும் கொஞ்சம் குளுமையாக்கினார். ஆனாலும் மனம் உணர்ந்து கூறினார்.
கூடவே தன் பெண்ணிடம் கண் ஜாடை செய்ய, அவள் சட்டென்று கனகா மாமி நாராயணன் மாமா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க.. உச்சி குளிர்ந்து போனது கனக மாமிக்கு இவர்களின் பணிவை கண்டு.
அனைவரிடமிருந்தும் விடைப் பெற்றுக் கொண்டு வீட்டிற்கு வந்த மீனாட்சி முதலில் தன் மகளை நடு கூடத்தில் நிற்க வைத்து, அவளுக்கு திருஷ்டி சுற்றி போட்டார்.
"கனகா மாமி ஆத்துக்கு வந்த எல்லாருக்கு கண்ணும் உன் மேல தாண்டி" என்று செல்லமாக அழுத்துக் கொண்டவர், அடுத்து சின்ன மகளை அழைத்து அங்கு நடந்த விவரத்தை அனைத்தும் கூறினார்.
அது ஹரி ப்ரியாவுக்கும் மிகுந்த சந்தோஷமே. அதில் ஒரு சுயநலமும் உண்டு. இப்பொழுது பாட்டுக்காக அக்காவை வெளிநாடு அனுப்ப துணிந்தவர்கள் நாளை என்னுடைய வேலைக்காக நான் வெளிநாடு சென்றாலும் தடுக்க மாட்டார்கள் என்று சிறு சந்தோஷம் அவள் மனதின் மூலையில் மின்னி மின்னி மறைந்தது.
அதன் பின் நாட்கள் ரெக்கைகட்டி செல்ல இதோ பாஸ்போர்ட்டும் அவளுக்கு வந்து விட்டது. அதை நகல் எடுத்து வெங்கடேசனுக்கு அவர்கிட்ட விவரங்களோடு சேர்த்து அனுப்பி வைத்தாள் வர்த்தினி. அடுத்த சில தினங்களில் அவரிடமிருந்து லண்டன் செல்வதற்காக விசா மற்ற ஆவணங்களையும் சேர்த்து அனுப்பினார்.
கூடவே ஒரு குறிப்பிட்ட தொகையை வர்த்தினிக்கு அனுப்பி வைத்தவர்.. "இது அட்வான்ஸ் தான். நல்லபடியாக கச்சேரி எல்லாம் முடிந்தவுடன் நீ லண்டன் விட்டு கிளம்பும்போது மீதியை தருகிறேன்" என்று கூறி போனை வைத்து விட்டார்.
மீனாட்சிக்கு தான் கால் தரையில் பதியவே இல்லை. ஏற்கனவே மகள் வெளிநாட்டுக்கு சென்று பாடப் போகிறாள் என்ற பெருமை வேறு. தற்போது அவர்களிடமிருந்து சம்பளம் என்று ஒரு குறிப்பிட்ட கணிசமான தொகை வந்ததை பார்த்தவர் சிறகு இல்லாமல் வானத்தில் பறந்து கொண்டிருந்தார். அது பணத்தின் மீதான ஆசை அல்ல.. தன் மகளுக்கு என்று ஒரு அங்கீகாரம்
கிடைத்திருக்கிறது. தனக்கு கிடைக்காத ஒன்று தம் மக்களுக்கு கிடைத்தால் அதில் அதிகமான சந்தோசம் பெற்றவர்களுக்கு தானே உண்டு!!
மறுநாள் அனைவரும் சென்னைக்கு கிளம்பி சென்றனர் வர்த்தினியை வழியனுப்ப..
அங்கே வெங்கடேசன் சொன்னது போல மற்ற மூன்று வித்வான்கள் வந்திருந்தார்கள். ஒருவர் இளம் வயது பாடகர்.. நடுத்தர வயதை சேர்ந்த ஒரு பெண் அவர் வீணைக் கலைஞர்.. 50 வயது மதிக்கத்தக்க மற்றுமொருவர் சொற்பொழிவாற்றுபவர். அவர்கள் மூவரிடமும் தங்கள் பெண்ணை பார்த்து கொள்ளும்படி சுப்புவும் மீனாட்சி மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூற முதல் தடவை அவள் வருவதால் என்பதால் அவர்களும் பொறுமையுடன் அவர்களுக்கு விளக்கி தாங்கள் பார்த்துக்கொள்வதாக கூறி வழியனுப்பி வைத்தனர்.
முதல் முறை விமான பயணம்.. மனதுக்குள் ஏதோ ஒன்று அது சந்தோசமா பயமா என்று பிரித்தறிய முடியாத ஒரு உணர்வு ஒன்று.. வயிற்றுக்கும் தொண்டைக்கும் இடையே மாறி மாறி பயணம் செய்து கொண்டிருந்தது. வீணை கலைஞரான மாதுரி அருகில் அமர்ந்து கொண்டாள் வர்த்தினி. தன் துப்பட்டா துணியை விரலில் சுற்றிவதும் அவிழ்ப்பதுமாக இருக்க.. அவளது நடவடிக்கையைப் பார்த்து சிரித்த அவர் "பயப்படாதம்மா.. ஃபர்ஸ்ட் டைம் கொஞ்சம் டென்சனா தான் இருக்கும். மத்தபடி இதுல பயப்பட ஒண்ணுமே இல்ல. ஃப்லைட் டேக் ஆப் ஆகும் போது மட்டும்தான் கொஞ்சம் வயிற்றை பிசையுற மாதிரி ஒரு உணர்வு வரும். மத்தபடி பஸ்ல ட்ரைன்ல போற அதை கேஷுவலான ஒரு பயணம்தான்" என்று அவள் பயம் உணர்வை போக்க கூறிய அந்த பெண்மணியை வர்த்தனிக்கு மிக பிடித்துவிட்டது
விமானம் புறப்படுவதற்கான அறிவிப்பு வந்ததும் மாதுரியின் உதவியோடு தன் சீட் பெல்ட்டை போட்டு, அவள் கண்களை இறுக்க மூடி.. ஏதோ ஊசிக்கு பயப்படும் சிறுபிள்ளை போல முகத்தை வைத்து உட்கார்ந்து இருக்கும், இவளை பார்த்த மாதுரிக்கு சிரிப்புதான் வந்தது. ஆனாலும் அவள் கை மேல் தன் கைகளை வைத்து அழுத்திக் கொடுத்து பயப்படாதே என்று சொல்ல அவளும் அவர் கைகளை இறுகப் பற்றிக்கொண்டாள்.
பின் ஓடுதளத்தில் ஓடிய விமானம் மெல்ல மெல்ல உயிரே பறக்க வர்த்தினியின் வயிற்றுக்குள் ஏதோ ஏதோ ஒரு உணர்வு. ஆனாலும் அதை நிரம்பவே ரசித்தாள் அவள். பின் விமான பணிப்பெண் அனைவரையும் சீட் பெல்ட்டை கழட்டலாம் என்று கூறி சென்றுவிட, ஆசுவாசமாக உணர்ந்தவள் தன் சீட் பெல்ட்டை கழற்றி விட்டு அருகில் இருந்த மாதுரியை பார்த்து அசட்டு சிரிப்பு ஒன்றை சிரித்து வைத்தாள்.
"தூக்கம் வந்தால் தூங்கு வர்தினி" என்று மாதுரி கூற..
"அக்கா.. இப்போ ஒன்னும் தூக்கம் வரல. கொஞ்ச நேரம் இப்படி வேடிக்கை பார்க்கிறேன். அடுத்து தூங்குறேன்" என்று சிறுபிள்ளை போல் கூறியவளை பார்த்தவர் "சரி பாரு.. தூக்கம் வரும்போது தூங்கு" என்று கூறி தனது கண்களில் மூடி இருக்கையில் சாய்ந்து விட்டார்.
அவளுடைய சீட்டில் சாய்ந்தவாறு விமான ஜன்னல்கள் வழியே தெரிந்த வெண் மேக பொதிகளை பார்த்துக் கொண்டே வந்தவள் எப்போது தூங்கினாள் என்று அவளுக்கே தெரியவில்லை.
வெண்ணிற பிரதேசம்.. அவளை சுற்றி சூழ்ந்திருக்க.. இது மேக கூட்டமா? அல்லது பனி மலைச்சாரலா? என்று புரியாமல் வர்தினி கைகளை நீட்டி தன் சுற்றுப்புறம் உணர முற்பட்டாள். அவள் கை சில்லென்று உணர்வும் குளுமையும் உணரத்த.. அவள் இருப்பது பனிபடர்ந்த பிரதேசம் என்று கட்டியம் கூற... மெல்ல தனது கால்களை பனிப்பிரதேசத்தில் வைத்தாள் வர்தினி.
கால்கள் வழியே உடம்பில் ஓடிய அந்த குளுமை அவளுக்குள் ஒரு வித சிலிர்ப்பை ஏற்படுத்த சட்டென்று தன் காலை அந்த பனி குவியலிருந்து பின்னுக்கு இழுத்து எடுத்துக் கொண்டாள்.
"இவ்வளவு குளுருதே" என்று நினைத்தவாறு அவள் நிற்க.. சட்டென்று அவள் குளுமையை போக்கும் வண்ணம் வெம்மையாக பின்னிருந்து அணைத்தது ஒரு ஆண் தேகம்.
வெளியில் உள்ள குளுமைக்கு போட்டியாக.. முரட்டு உடலின் வெம்மை அவளுக்குள் இறங்க.. குளுமையும் வெம்மையும் கலந்து ஒருவித உணர்வை உதித்து உணர்ச்சிகளை அவளுக்குள் தூண்டிவிட...
அவ்வன் தேகமோ மெல்ல அவள் காதுகளில் தன் மீசையை உரசி உரசி...
"முதல் முத்தம் எப்பவும் சிறப்படி
என் கண்ணம்மா..
ஆதலால்.. அது இனிமையாக பாடும்
உன் சிவந்த இதழ்களுக்கே
மிக வன்மையாக.."
என்று கூறிய முரட்டு உதடுகள் பின்னிருந்து
எக்கி அவளின் மெல்லிய உதடுகளை தன்னுள் ஒளித்து.. சுவைத்து.. அதில் லயித்து கொண்டிருந்தது..
கனவா வர்தனி????
அவன் இருக்கற இடத்துக்கே போற....be careless 😂😂😂😂😂