1
அழகான இளங்காலைப் பொழுது பச்சை பசேலென்று வயல்வெளிகள்.. காலை வேளையில் ராகங்கள் பாடும் புள்ளினங்கள்.. அவைகளோடு ஜதி பாடும் கால்நடைகளின் கழுத்து மணி ஓசைகள்.. இடையிடையே எழுப்பப்படும் பக்கவாத்தியங்கள் போல ஆநிரைகளின் அம்மா என்று அழைப்புகள்.. வாசல் தெளித்து கோலம் போடுவதில் கூட நளினத்தோடு லயமும் கலந்த பெண்கள்.. அதில் இன்னிசை ஸ்வரங்களாக பெண்ணகளின் கால் கொலுசு சத்தங்கள்.. என்று என்றும் பழமை மாறாத திருவையாறு.
தியாகராஜ பாகவதர் சமாதி ஸ்தலம்!!
பின்னே ஜதிக்கும் ஸ்வரங்களுக்கும் என்ன குறைபாடு!!
அக்கால சங்கீத மும்மூர்த்திகளும்..
இக்கால கர்நாடக ஜாம்பவான்களும்..
தியாகராஜர் ஆராதனை விழாவில் ஆலாபனை நடத்தும் இடம்!!
ஐயாறப்பராய், சிவன் அப்பருக்கு கைலாய தரிசனத்தை தந்த ஸ்தலம்!!
பக்தியையும்.. பக்தி பாடல்களையும் போற்றி வளர்க்கும் இடம்!!
பாய்ந்தோடும் காவிரியை கொண்டு பாசிப்பருப்பு மற்றும் கோதுமையில் தயாரிக்கும் அசோகா அல்வா.. சங்கீதத்திற்கு பிறகு திருவையாற்றின் மற்றொரு சிறப்பு!!
அந்த திருவையாற்றின் ஐயாறப்பர் கோவிலில் பூஜை செய்யும் பட்டர் சுப்பிரமணியனின் வீடு.
மார்கழி மாத அதிகாலை வேளை.. ஆண்டாளின் அழகான கீர்த்தனைகளான திருப்பாவையை அந்த ஆண்டாள் ஆகவே மாறி, இனிமையான குரலில் இசைத்துக் கொண்டிருந்ததாள் ஒரு நங்கை!!
அந்த குரலில் தான் என்ன ஒரு லயம்..
கேட்க கேட்க கேட்பவரின் மனதை கொள்ளை கொள்ளச் செய்தது அவ்வசீகர குரல்!!
குரல் மட்டுமா வசீகரம்.. சற்றே நாம் உள்ளே நுழைந்து இசை வந்த திசையில் பயணித்து இசையினை மீட்டும் அரசியை பார்த்தால் வியந்து தான் போனது நமது கண்கள்!!
நம் கண் முன்னே இருப்பது பெண்ணா? தேவதையா? யட்சினியா? என்று!!
மஞ்சளில் பொன்னை அரைத்து குழைத்த நிறம்.. வில்லென வளைந்து இரு புருவங்களுக்கு மத்தியில் அழகிய சிறிய பொட்டு.. அதன்மீது குங்கும தீற்றல்.. கூரிய நாசியில் ஒளிர்விடும் ஒற்றைக் கல் மூக்குத்தி.. மெத்து மெத்தென்று கன்னங்கள்.. சிவந்த மெல்லிய உதடு ஆனால் மேலுதடு சற்றே கீழுதட்டை காட்டிலும் தடித்து இருக்க அதுவே அவளுக்கு ஒரு கவர்ச்சியை கொடுத்தது.. அதன் மீது இருக்கும் ஒற்றை மச்சம் பார்ப்பவர்களை சுண்டியிழுக்கும். அடர் கூந்தல் அலையென சுருண்டு சுருண்டு அவள் இடை தாண்டி பரவியிருக்க.. கீழே ஒரு கோடாலி முடிச்சிட்டு கட்டி இருந்தாள்.
பார்த்தவுடன் அழகில் கொள்ளையடிக்கும் அழகி இவள்.. தன் இனிய குரலாலும் அனைவரையும் கொள்ளை அடித்துக் கொண்டிருந்தாள்.. அவள் ஹம்ச வர்த்தினி!!
யார் இவள்.. சாமானிய கோவில் பட்டரான சுப்பிரமணியத்தின் வீட்டில் இருக்கும் இந்த தேவதை யாரோ!!
அவள் அந்த கீர்த்தனையை பாடி முடிப்பதற்குள் நாம் அவர்களைப் பற்றி அறிந்து கொண்டு வருவோமே!!
ஓரளவுக்கு கையை பிடிக்காத வாழ்க்கை முறைதான் சுப்பிரமணியத்தோடது. அன்பான மனைவி மீனாட்சி.. அவர்களின் அன்புக்கு பாத்திரமாகி இரண்டு மகள்கள். பெரியவள் ஹம்ஷ வர்த்தினி... இளையவள் ஹரிப்ரியா..
இரண்டுமே ராகங்களை அடிப்படையாகக் கொண்ட பெயர்கள். மீனாட்சிக்கு சங்கீதம் என்றால் மிகவும் இஷ்டம். சிறுவயதிலிருந்து முறையாக கற்றுக் கொண்டவர். பெரிய சபாவில் பாடவேண்டும்.. மார்கழி உற்சவ காலத்தில் பாட வேண்டும் என்று பலவித கனவு கோட்டைகளை இள வயதில் அவர் கட்டி வர.. நோயாளியான அவரது தந்தை ஒரே மகளான மீனாட்சியை அவருக்குப் பின் யார் பார்த்துக் கொள்வது என்று வெகு அக்கறையான முடிவில் சுப்பிரமணியத்துக்கு கட்டி வைத்துவிட்டார். அதே ஊர் கண்ணுக்குத் தெரிந்து வளர்ந்த பிள்ளை அதுவும் பெரிய கோவிலில் பட்டராக இருக்கிறார் இது போதாதா அந்த ஏழை பிராமணனுக்கு.. சுப்ரமணியத்தையும் சும்மா சொல்லக்கூடாது. அழகான அன்பான மனைவியை இதுநாள் வரையில் தாங்கு தாங்கு என்றுதான் தாங்குகிறார். அதிர்ந்து பேசாத இனிய சுபாவம் உடையவர்.
மீனாட்சியும் முதலில் தன் கனவுகள் உடைந்துபோன வருத்தத்தில் சிறிது காலம் அதிலே உழன்று கொண்டிருந்தவர். பின் நிதர்சனம் புரிந்து தன் கணவனுக்கு ஏற்ற மனைவியாக இல்லறத்தில் நல்லறம் கண்டு வந்தார்.
ஒரு குடும்பம் பல்கிப்பெருகி வளர்வதற்கும் நசுங்கி சுருங்கி போவதற்கும் இல்லாளின் திறமை ஒரு முக்கிய காரணம். சுப்ரமணியத்தின் வருவாயை மட்டும் நம்பியிராமல், இவரும் தனக்கு தெரிந்த சங்கீத ஞானத்தை பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க கணிசமாக அவர்களது குடும்ப செல்வ நிலை உயர்ந்தது. இப்பொழுது ஏற்கனவே இருந்த பழைய வீட்டை புதுப்பித்து அழகாக இரட்டை படுக்கை அறையுடன் கட்டியிருந்தார் சுப்பிரமணியம்.. ஆனால் சூத்திரதாரி என்னவோ மீனாட்சி தான்.
பெண் பிள்ளைகளை சுமையாகக் கருதும் இக்காலத்தில், மகள்களை மகாலட்சுமி என கூறி, அவர்களுக்கு சரஸ்வதி தேவியின் கடாட்சத்தை வழங்கி போற்றி வருபவர் சுப்பிரமணியம்.
'ஊரோடு ஒத்து வாழ்' என்பது போல, பெண்கள் படிக்கும் போதோ இல்லை வெளியில் செல்லும் போதோ சுடிதார் அணிந்தாலும், வேறு உடை அணிந்தாலும் வீட்டில் அவருக்கு பெண்கள் புடவை அல்லது பாவாடை தாவணியில் இருக்க வேண்டும் என்ற கொள்கை உடையவர்.
அதற்கு ஏற்ப பெண்களும் தந்தை சொல்லுக்கு கட்டுப்பட்டு வீட்டில் இருக்கும் போது பாவாடை தாவணி தான்..
பெரியவள் ஹம்சவர்த்தினி.. இளங்கலையில் இசை மற்றும் பரதம் பட்டம் பெற்றவள். இளையவள் ஹரிப்ரியா தற்போது பொறியியல் மூன்றாமாண்டு மாணவி..
இரு பெண்களுக்கும் அவர்கள் சிறுவயது முதலேயே மீனாட்சி தன்னோடைய இசை ஞானத்தை கொடுத்து இருக்க.. அப்படியே அன்னையின் வார்ப்பாக அனைத்தையும் கற்றுத் தேர்ந்தாள் ஹம்சவர்த்தினி.. ஹரிபிரியாவுக்கும் அனைத்து ஞானமும் தெரிந்தாலும் அவளுக்குப் பெரிதாக அதில் ஆர்வமில்லை.
அவனுடைய கனவு எல்லாம் கணிப்பொறித் துறையில் தான். பெரிய ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்க வேண்டும்.. வெளிநாடுகளுக்கு ப்ராஜெக்ட் செல்ல வேண்டும்.. நுனி நாக்கு ஆங்கிலமும், அழுக்குப்படாத நகங்களும் ஹைஃபை வாழ்க்கை வாழவேண்டும்.. வரும் கணவன் தன் அப்பாவை போன்றதொரு அம்மாஞ்சியாக இல்லாமல் பெரிய உத்தியோகத்தில் இருக்கவேண்டும் என்ற கனவுகள் அவளுக்கு..
ஹம்ச வர்த்தினியோ அதற்கு நேர் மாறாக.. அவளுக்கு சிறுவயது முதலே மீனாட்சி தன்னுடைய கனவுகள் பற்றி கூறி வந்ததால் அம்மாவின் கனவை தனதாகக் ஏற்று, தானும் பெரிய பாடகியாகி.. பல சபைகளிலும் திரைப்படம் பின்னணியிலும் பாட வேண்டும் என்பது அவளுடைய வெகுநாள் கனவு..
கனவுகள் காண்பது அவரவர் உரிமை.. ஆனால் அதை எத்தனை பேரால் தன்னுடைய வாழ்வாக கொண்டு செல்ல முடிந்திருக்கிறது.
விதியின் பெயரில் பலியை போட்டாலும் சொந்த முயற்சி என்ற ஒன்று உண்டல்லவா!! அதே சமயம் எவ்வளவு விடா முயற்சி செய்தும் சிலருக்கு கனவுகள் எல்லாம் கனவாகவே.. கானல் நீராகவே போகும். அப்பொழுதும் விதியைத்தான் சொல்வார்கள்!!
இவ்விரு தாவணி பெண்களின் கனவுகள் அவர்கள் வாழ்வில் நனவாக போகிறதா இல்லை அது கானல் நீராக போகிறதா என்பதை பார்ப்போமே!!
அவள் பாடல் பாடி முடித்ததும் சுவாமிக்கு தீபாராதனை காட்டிவிட்டு திரும்ப சுப்ரமணியம் தன் மகளைத் தான் ஆதுரமாக பார்த்துக் கொண்டு நின்றிருந்தார். அவர் கண்களில் தான் அத்தனை பாசம் வழிந்தது.
இரு பெண்களுமே அவருக்கு இரு கண்கள் என்றாலும் மூத்தமகள் மீது சற்று கூடுதலான அன்புதான்.
"என்ன பா.. புதுசா பாக்குற மாதிரி பார்க்குறேளே"
"ஒவ்வொரு முறையும் பார்க்கிறச்ச என் குழந்தே எனக்கு புதுசா தான் தெரியுறா"என்று சுப்பு கூறிக் கொண்டிருக்கும் போதே அங்கு வந்த மீனாட்சி..
"போதும் போதும் நீங்களே கண்ணு போடாதேள்"
"ஏன்டி மீனு.. நான் கண்ணு போட்டா என் பொண்ணுக்கு ஒன்னும் ஆகாதுடி" என்று கூறிய சுப்பு பாசமாக ஹம்சவர்த்தினி தலையை தடவினார்.
"ஏன்னா பெத்தவா கண்ணு தான் முதல்ல படக்கூடாது. அது நோக்கு தெரியாதா?" என்று அவரிடம் கேட்டவர்.. பின் தன் மகளிடம் திரும்பி "அம்சா.. நீ போய் ரெடியா ஆகுடி. இன்னிக்கு அடுத்தாத்து மாமா வீட்டில் பூஜைக்கு, உன்னை பாட கூட்டு இருக்கா.. அதுக்கு ரெடி ஆகணுமோ இல்லையோ" என்று மகளை அதற்கு கிளம்ப சொன்னவர் அடுத்தது "பிரியா கிளம்பிட்டியா இல்லியா உனக்கு காலேஜ் பஸ் வந்துடும். காலேஜ்க்கு நேரமாயிடுத்து.. சீக்கிரம் சீக்கிரம்" என்று சின்ன மகளை காலேஜ்க்கு கிளப்பினார்.
"இதோ மா குளிச்சிண்டு வந்துடுறேன்" என்று குளியல் அறைக்குள் நுழைந்த ஹரிப்பிரியாவும் அழகில் சற்றும் குறைந்தவள் இல்லை. பெரியவள் ஒருவித அழகு என்றால்.. இளையவள் ஒருவித அழகு..
இன்று கலந்து கொள்ளு போகும் பூஜையில் தான் அவளின் வாழ்க்கையை புரட்டிப் போடுகிற சம்பவங்கள் அனைத்துக்குமான பிள்ளையார் சுழி போட போகிறது என்பதை அறிவாளா ஹம்சவர்தினி!!
லண்டன்.. ஸ்லோன் ஸ்கொயர்.. பல மில்லியனியர்கள் வாழும் பகுதி.. அங்காங்கே மாளிகையைப் போன்றே பல வீடுகள் வீற்றிருக்கும்.
அவற்றில் ஒன்று தான் விஷ்வா'ஸ் நிவாஸ்.. லண்டன் மாளிகையில் தமிழ் பெயர் என்றெல்லாம் யோசிக்க வேண்டாம் அந்த மாளிகையின் உரிமையாளரே தமிழர் தான்.
பல தொழில்களை லண்டனின் செய்து முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் தரணீஸ்வரன் மஞ்சுளா தம்பதியின் சீமந்த புத்திரன் வினய் விஷ்வேஸ்வரன்.. அவன் பெயரில் உள்ளது தான் அந்த மாளிகை.
அன்று சனிக்கிழமை இரவு மணி எட்டு இருக்கும்.. வழக்கம்போல தரணீஸ்வரன் தொழில் தொழில் என்று ஓடிக்கொண்டே இருக்க.. அவருக்கு இணையாக தொழிலில் ஈடு கொடுப்பவன் தான் அவருடைய மகன் வினய்.. தரணீஸ்வரன் எட்டு அடி பாய்ந்தால் இவனோ 32 அடி பாய்வான். தொழில் மட்டுமல்ல அனைத்திலும்..
அவ்விரவு வேளையில் இலகுவான கருநிற டி-ஷர்ட்.. ஷார்ட்ஸ் சகிதம் மாடியிலிருந்து வெகுவேகமாக நெடிய உருவம் ஒன்று இறங்கி வந்தது. அச்சு பிசகாமல் ஒரு வெளி நாட்டு வாழ் இந்தியரின் தோற்றம் தான் நம் வினய். கூடவே இந்திய மண்ணின் அந்த வசீகர தோற்றம்... ஆறு அடி தாண்டிய அசாத்திய உயரம்.. எப்பவும் முகத்தில் தவழும் ஒரு வசீகரப் புன்னகை.. அதுவும் உதடு கடித்து அவன் சிரிக்கும் வேளையில் அதில் விழாத பெண்களே இல்லையெனலாம்.. அசரடிக்கும் கம்பீரமான அழகன்.. நம் நாட்டில் இருந்திருந்தால் ஒருவேளை திராவிட நிறத்தில் இருந்து இருக்கலாம் அவன்.. ஆனால் மஞ்சுளாவின் ஜீனும், வசதியான வாழ்க்கை முறை.. முழுநேரமும் ஏசி குளிர் என்று சுண்டினால் ரத்தம் வந்துவிடும் அளவு அவனின் நிறம்..
வெகுவேகமாக கீழே இறங்கிக் கொண்டிருந்தான் வினய்..
அந்த வீட்டில் ஒவ்வொரு தளத்திற்கும் பொதுவாக ஒரு லிஃப்டும், தரணீஸ்வரன் மற்றும் விஷ்வேஸ்வரனுக்கு தனித்தனியாக ஒரு லிஃப்ட் இருக்கிறது. ஆனால் வினய்யோ அவன் மூடை பொறுத்து லிஃப்டில் பயணிப்பதும் படியில் பயணிப்பதும்..
இவ்வளவு உல்லாசமாக இலகுவாக அவன் செல்கிறான் என்றால் அவன் செல்ல இருப்பது பப்புக்கு என்று பொருள்.
இருளை விரட்டி அடிக்கும் விளக்குகளும்.. காதை பிளக்கும் ஓசையா இசையா என புரியாத வண்ணம் அந்தப் பிரபலமான பப், ரணகளப்பட்டுக் கொண்டிருந்தது இளவட்டங்களால்..
அங்கே பப்பில் தன் வயதையொத்த பல இளைஞர்கள் கூத்தும் கும்மாளமுமாக இருக்க..
இவனோ தன் முன்னால் இருந்த அந்த பொன் நிற திரவதத்தை உற்றுப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான். அதற்காக இவன் இதையெல்லாம் குடிக்க மாட்டான் என்று பொருள் இல்லை.. அதற்கான வேளை இன்னும் வரவில்லை என்று தான் அர்த்தம்.
சிறிது நேரத்தில் அவனின் நண்பனும் தொழிலில் அவனுக்கு பிஏவாக இருக்கும் வில்லியம்ஸ் அங்கு வந்துவிட..
"என்னாச்சு வில்.. எல்லாம் ஓகே தானே" என்று அவன் கேட்க..
"நீங்க பிளான் போட்டு அது முடியாமல் போகுமா என்ன? எல்லாம் டன்!" என்று அவன் தனது கட்டை விரலை தம்ஸபை போல உயர்த்திக் காட்டினான் அந்த ஆஜானுபாகுவான வெள்ளைக்காரன்.
"சூப்பர்.. என்றவன் மகிழ்ச்சியுடன் அந்த திரவத்தை மிடறு மிடறாக உள்ளே இறக்கினான்.
வினய்க்கு நண்பர்கள் எல்லாம் தொழில் முறையில் மட்டும்தான். அதைத் தாண்டி தன்னுடைய வட்டத்துக்குள் ஒருவனை அனுமதித்திருக்கிறான் என்றால் அது வில்லியம்ஸ் மட்டுமே..
அவனுடைய பொழுது பெரும்பாலும் தொழில் தொழில் தொழில் தான். அதை தவிர்த்து வார இறுதியில் அவன் வருவது வில்லியம்ஸோடு இம்மாதிரியான இலகுவான முறையில் கண்ணுக்கு தெரியும் ஏதோ ஒரு பப்பில் நுழைந்து விடுவான். சிறிது நேரம் அவர்களோடு சேர்ந்து ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என செல்ல அதற்குப்பின்.. வார இறுதியில் கெஸ்ட் ஹவுஸூக்கு சென்று தங்கி விடுவான். சில நாட்கள் தனிமையில்.. சில நாட்கள் ஏதேனும் ஒரு துணையுடன்.. ஆனால் அந்த உறவு எல்லாம் அன்று இரவோடு மட்டுமே.. மறுநாள் அவர்களை நேரில் பார்த்தால் கூட அலட்சியமாகக் கடந்து விடுவான். மனதில் நினைத்து வைத்துக் கொள்ளும் அளவு எவரிடத்திலும் அவனுக்கு எதுவும் இதுவரை தோன்றியதில்லை.. ஞாபகத்திலும் அவர்கள் அவனுக்கு வந்தது இல்லை..
அன்றும் அவ்வாறு ஒரு துணையுடன் தான் கெஸ்ட் ஹவுசுக்கு அவன் சென்றிருந்தான்.
இம்முறை அமெரிக்க பெண்ணுடன்..
"ஹாய்.. பேப்" என்ற வினய் குரலின் கம்பீரத்திலும் இனிமையிலும் விழுந்தது அந்த அமெரிக்க கிளி..
"லண்டன் ஒருவருக்கு அலுத்துவிட்டது என்றால் வாழ்க்கையே அலுத்துவிட்டது என்று பொருள்.. வாழ்க்கையில் ஒருவருக்குத் தேவைப்படும் அனைத்தும் லண்டனில் உண்டு" என்றவன் அவளை அணைத்து விடுவித்து "லண்டன் உன்னை வரவேற்கிறது!” என்று ஆங்கிலத்தில் இலகுவாக அவளை வரவேற்றவன், அவள் இதழ்களை சிறை செய்ய.. வழக்கம் போல் சில நொடிகளில் பிரிந்து விட்டான்.
அவனுக்கு இந்த இதழ் முத்தங்கள் எல்லாம் ஒன்றும் புதிதல்ல.. வெளிநாட்டு கலாச்சார வாழ்வில் அவனுக்கு இதெல்லாம் சகஜமானது. ஆனால் அவனுக்கு புரியாத ஒன்று என்னவென்றால்... இதுவரை யாரிடமும் அவனது இதழ் அணைப்பு சில நொடிகளுக்கு மேல் நீண்டதில்லை. ஒருவித ஒவ்வாமை வந்துவிடும் அவனுக்கு... பின் அவளை தன் கெஸ்ட் ஹவுஸூக்குள் அழைத்துச் சென்றான்.
சுற்றிலும் அந்தகாரமான ஆழ்ந்த இருள் சூழ்ந்திருக்க.. அந்த இருளில் இவர்களின் கூடல். எந்தப் பெண்ணும் அவனை.. எந்த விதத்திலும் இதுவரை ஈர்க்கவில்லை.. இந்த பெண்ணும் கூட. அவனும் ரசிக்கவில்லை அவளை... அவனைப் பொறுத்தவரையில் இது ஒரு ஜஸ்ட் லைக் தட்.. இதில் யாருடனான பிணைப்பும் இல்லை ஈர்ப்புக்கும் வேலையில்லை அவனிடம். எல்லாமே அவனுக்கு விளையாட்டு!!
காதல் என்ற ஒன்றை அவன் அறியாத வரை மட்டுமே இவ்வாறான இவனின் விளையாட்டு.. இவனின் இந்த தீராத விளையாட்டு தீர்த்துவைக்க வரப்போகிற அந்த கன்னி யாரோ?
ஓ நோ....இவன் சரியான பிளே பாய்......
ஹாம்ஸ் பாவம் இல்லையா?????