Share:
Notifications
Clear all

என் குழலின் பூங்காற்றே-2

 

(@karpagam-subramanya)
Member Moderator
Joined: 2 months ago
Messages: 3
Thread starter  

 அரசு மருத்துவமனையில் இருந்த மருந்தகத்தின் முன் வரிசை கட்டி நின்ற மனிதர்களோடு தானும் நின்றிருந்தாள் ராதா.இந்த வருடம் தான் இருபதாம் பிராயத்தை தொட்டிருந்தாள்.சாதாரண சிறிது சாயம் போன சுடிதாரும்,கழுத்து காதுகளில் பல்லிளித்து போன கவரிங் ஆபரணங்கள் மட்டுமே அவளது அலங்காரம்.ஆனால் வாழ்வில் ஏழ்மையை கொடுத்திருந்தாலும் அழகை கொட்டிக் கொடுத்து அதை நிவர்த்தி செய்துவிட்டிருந்தார் கடவுள்.

 

 மாநிறம் தான் அவள்.ஆனால் துறுதுறுவென சுழலும் கண்களும்,பிறை நெற்றியும்,கடிக்க தூண்டும் மாம்பழ கன்னங்களும்,உயிரை திருக்கட்டுமா என்று கேட்கும் இயற்கையான ரோஜா நிறம் கொண்ட சிப்பி இதழ்களும், சந்தனத்தில் குழைத்து எடுத்தாற் போன்ற வாளிப்பான உடலும் அவளை தேவதையாக்கி காட்டும். ஆனால் அதையெல்லாம் நினைத்து பார்க்க கூட அவளுக்கு ஏது நேரம்.

 

 உழைத்து உழைத்து ஓடாகி போன் பெற்றோர், பள்ளி செல்லும் இரு உடன்பிறப்புகள்,தந்தையை பெற்ற வயது முதிர்ந்த பாட்டி என்று தன் உறவுகளை பற்றியே என்னேரமும் ஓடும் அவளின் சிந்தனைகள்.இப்போதும் ஓயாத இருமலில் வாடும் தந்தைக்கு மருந்து வாங்கவே அவள் மருத்துவமனை வந்தது.மருத்துவர் எழுதிக் கொடுத்த சீட்டை அவள் வாங்கிக் கொண்டு வந்தப் போது கவுன்டரை மூடிக் கொண்டு உணவுக்கு சென்றுவிட்டார் அலுவலர்.பின் என்ன அவளை போல காத்திருப்போர் வரிசை நீண்டு வராண்டாவின் திருப்பம் வரை ஆகிப் போனது.உணவு நேரம் என்னவோ மதியம் ஒரு மணியிலிருந்து இரண்டு மணி வரைக்கும் தான் ஆனால் மணி இரண்டரை ஆகியும் கவுன்டர் திறக்கப்படவில்லை.

 

வெளியே அடிக்கும் வெயில் ஜன்னல் வழியாக அனலை உள்ளே அனுப்ப உயர்த்தில் மாட்டியிருந்த காத்தாடி கொடகொடவென வெறும் சத்தத்தை மட்டுமே போட வியர்வை ஆறாக பெருகியது.அவள் அணிந்திருந்த சுடிதாரின் நைய்ந்துப் போன துப்பாட்டாவிலேயே முகத்தையும் கழுத்தையும் துடைத்துக் கொண்டாள் ராதா.காலையில் குடித்துவிட்டு வந்த கம்பங்கஞ்சியும் எப்போதோ சீரணம் ஆகியிருக்க வயிறு வேறு ஏதேனும் கொஞ்சத்தை போடேன் என்று கூப்பாடு போட்டது.

 

"அடச்சே இந்த மனுசன் எந்திரிச்சு போய் எம்புட்டு நேரமாச்சு!ஒரு டப்பா சோத்த ஒரு மணி நேரம் தின்னுமா முடியல! ஆத்தி இவரு சோத்தத்தான் திங்கறாரா இல்ல ஆஸ்பத்திரி பின்னாடி இருக்கற மலையத்தான் முழுங்குறாரா தெரியலயே!"என்று ராதா சத்தமாகவே முணுமுணுக்க அங்கிருந்த சிலர் சிரிக்க சிலர் அதானே என்று தாங்களும் திட்டினர்.

 

ஒரு வழியாக மூன்று மணிக்கு கவுன்டர் திறக்கப்பட அப்பாடி என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டனர் அனைவரும். ராதாவின் பின்னே நின்ற வயதான பெண்மணி தடுமாற,

 

"ஐயோ பாட்டியம்மா!பாத்து பாத்து!"என்று அவரை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.அவர் உடம்பு சுட நடுங்கிக் கொண்டிருந்தார் அவர்.

 

"இம்புட்டு முடியாத்தோட எதுக்கு பாட்டி தனியா வந்தீங்க!வீட்டில யாரையாச்சும் அழைச்சிட்டு வந்திருக்கலாம் இல்ல?"என்று ராதா கனிவும் அக்கறையுமாக கேட்க,

 

"ஹும் யார் இருந்து என்ன பிரயோசனம்! நமக்கு நாம மட்டும் தான் கண்ணு!முடியலன்னதும் ஆட்டோ காச கொடுத்து போனுட்டாங்க மவனும் மருமவளும்!என்னத்த செய்ய?என்னை கட்டுன மவராசன் போன போதே நானும் போயிருக்கனும்!சீ பாடு நாய் படுறேன் தினமும் "என்று அவர் கண் கலங்க கூற மென்மையான உள்ளம் கொண்ட ராதாவின் மனம் நெகிழ கலங்கியது அவள் கண்கள். கஷ்டத்தில் இருப்பவரை கண்டால் அவளால் தாள முடியாது.அவர்களுக்கு அவளால் முடிந்த உதவியை செய்யும் வரை ஓய மாட்டாள்.

 

"பாட்டியம்மா நீங்க முன்னாடி வந்து நில்லுங்க எனக்கு ஒன்னும் அவசரமில்ல!"என்று அவரை முன்னே விட்டு தான் பின்னே நின்றுக் கொண்டாள்.

 

"கண்ணு நீயும்தானே ரொம்ப நேரமா நிக்குற!"

 

"அதெல்லாம் பரவாயில்லை குமரி புள்ள நான் கொஞ்சம் நின்னா தேஞ்சுற மாட்டேன் நீங்க வயசானவுங்க அதுலையும் உடம்பு வேற சரியில்லை... இன்னும் அஞ்சு பேருதான் இருக்காங்க கொஞ்சம் பொறுத்துக்குங்க"என்று அவள் பேச்சில்,

 

"உன் நல்ல மனசுக்கு நீ நல்லா இருப்ப கண்ணு!ராசா மாதிரி புருஷன் கிடைச்சு உன்னை உள்ளங்கையில் வெச்சு தாங்குவான் பாரேன் இந்த கிழவி வாக்கு பலிக்கும்"என்று அவர் அசீர்வதிக்க அது போன்ற எந்த கனவையும் காணாத ராதா வெறும் வெற்று புன்னகை புரிந்தாள்.இன்னும் அவர்களுக்கு முன் இருவர் தான் என அவர்கள் நிம்மதி அடையும் நேரம் திடிரென மருத்துவர் சிகிச்சை செய்யும் பிரிவிலிருந்து வந்த ஒருவன் அனைவரையும் முந்திக் கொண்டு கவுன்டர் அருகே செல்ல முயல,

 

"யோவ் என்னய்யா இது?நாங்க இத்தன பேரு இவ்ளோ நேரம் காத்துகிடக்கறோம் நீ இப்ப வந்திட்டு முன்ன போக பாக்குறியா!வரிசைல பாவம் வயசாவனவுக பிள்ளைதாச்சிங்க கை குழந்தை வெச்சுருக்கவங்க உடம்புக்கு முடியாதவங்க எல்லாரும் இருக்காங்க!குண்டுகல்லு மாதிரி இருக்க! உனக்கென்ன அவசரம்? உனக்கு என்ன இடக்கு இருந்தா பெரிய ராசா வூட்டு துரை கணக்கா முன்னாடி போவ!போயா பின்னாடி போயி வரிசைல வா!"என்று ராதா அவனை சரமாரியாக திட்ட மற்றவர்களும் அவனை விரட்டினர். நல்லவருக்கு மட்டும் தான் ராதா நல்லவள் கெட்டவருக்கு பேச்சால் மட்டுமல்லாது செயலாலும் ஒருவழி செய்துவிடுவாள்.

 

"ஏய் என்ன என்னையே விரட்டுற நான் யாரு தெரியுமா "என்று அவன் எகிற,

 

"நீ எவனா வேணா இருந்துக்க! எனக்கு என்னய்யா!ரூலுன்னா ரூலுதான் போயா பின்னாடி"என்று அவள் கத்த வரிசையில் நின்ற மற்றவரும்,

 

"ஆமா போயா!"

 

"என்ன முறைப்பு போ பின்னாடி!"

 

"போ..!"என்று கூச்சலிட ராதாவை முறைத்தபடி பின்னே சென்று நின்றான் அவன்.

 

மருந்து வாங்கியபின் அந்த வயதான பெண்மணிக்கு ஆட்டோ பிடித்து பத்திரமாக அனுப்பியவள் பேருந்து நிலையத்தை நோக்கி நடந்தாள்.இரண்டு பேருந்துகள் கூட்டம் நிரம்பி வழிய சென்றுவிட ஏமாற்றத்தோடு அவள் நின்ற நேரம்,

 

"நீ கனகம் பொண்ணு ராதா தானே!"என்று ஒரு குரல் கேட்க யார் என்று தலையை திருப்பிய ராதா அங்கே அவள் தாய் கனகத்தின் தூரத்து தங்கை முறை பத்மா நிற்பதை கண்டவள்,

 

"ஓ சின்னம்மா! எப்படி இருக்கீங்க? சென்னைக்கு போயிட்டிங்களாம்னு அம்மா சொன்னாங்க ஆளே அடையாளம் தெரியல அசல் பட்டணத்துக்கார அம்மாவா மாறிட்டிங்க!வாங்க வீட்டுக்கு போகலாம்...அம்மா சந்தோஷப்படுவாங்க!"என்று புன்னகையோடு அவள் அழைக்க,

 

"நான் நாலு நாளைக்கு முன்னே வீட்டுக்கு வந்திருந்தேன் உங்கம்மா சொல்லலையா?"என்று பத்மா கேட்க அம்மா ஏன் கூறவில்லை? என்று குழம்பினாள் ராதா. ராதாவிற்கு விவரம் தெரிந்த வயது வந்தபின் குடும்பத்தின் மூத்த மகளாக கனகம் எல்லாவற்றையும் அவளிடம் கூறிவிடுவார். குழந்தைகளுக்கு குடும்ப கஷ்டம் தெரிய வேண்டும் அவர்களுக்கும் பொறுப்பு வேண்டும் என்று நினைப்பவர் அவர்.அப்படி இருக்கும் போது அவருக்கு பிரியமான தங்கை வீட்டுக்கு வந்து சென்றதை அன்னை கூறாமல் இருந்தது லேசாக உறுத்தியது அவளுக்கு.ஆனால் அதை காட்டிக் கொள்ளாமல்,

 

"அது இப்பல்லாம் வேலை கூட அம்மாக்கு அந்த இதுல சொல்ல மறந்துட்டாங்க போல விடுங்க!இப்ப என்ன நீங்க வாங்க என்னோட! இன்னிக்கி ராதங்கிட்டு நாளைக்கு போலாம்"என்று அவள் உபசரிக்க,

 

"இல்ல ராதா! எனக்கு உன் கூட கொஞ்சம் பேசனும் வா எங்கேயாச்சும் உட்கார்ந்து பேசலாம் "என்று அவர் அழைக்க,

 

"வீட்டுக்கு போனுமே சின்னம்மா! ரெண்டு பஸ்ஸை வேற கூட்டம்னு விட்டுட்டேன்!இப்ப வரத விட்டா இன்னும் அஞ்சு மணிக்கு தான் பஸ்ஸு!"

 

"நான் என் கார்ல உன்னை வீட்ல கொண்டு விடுறேன் நீ இப்ப வா "என்று விடாப்பிடியாக அவளை ஒரு உயர்தர ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று விட்டார் அவர்.உண்டு முடிக்கும் வரை அவர் எதுவும் பேசவில்லை.வெளியே வந்து காரில் அமர்ந்தவர்,

 

"ராதா உனக்கே தெரியும் நா கிராமத்துல இருந்த வரைக்கும் எப்படி இருந்தேன்னு என் புள்ளையும் ஒன்னுக்கும் உதவாம படிச்ச படிப்ப வீணாக்கிட்டு சும்மா ஊரை சுத்தி வந்துக்கிட்டு இருந்தான்... நல்லவேளை எங்க மச்சான் இவனுக்கு சென்னைல ஒரு வேலைக்கு ஏற்பாடு பண்ணி கொடுத்து வீடும் பாத்து கொடுத்தாரு!ஏதோ கடவுள் புண்ணியத்துல இப்ப நிம்மதியா இருக்கோம்...இதோ போக வர வாடகை கார் வைக்கற அளவு நல்லாவே இருக்கோம் "என்று அவர் நீளமாக பேச இதையெல்லாம் இவர் எதற்காக தன்னிடம் கூறுகிறார் என்று அவளுக்கு சுத்தமாக புரியவில்லை.ஆனாலும் பேச்சை ஆரம்பித்த அவரே அதையும் சொல்வார் என்று பொறுமை காத்தாள்.

 

"நான் இதெல்லாம் ஏன் உங்கிட்ட சொல்றேன்னு நீ யோசிக்கறேன்னு எனக்கு தெரியுது!பாரு ராதா எம்புள்ள படிச்சவன் அவனுக்கு அதுக்கு தகுந்த வேலை கிடைச்சது ஆனா படிக்காதவங்களுக்கும் சில வேலைகள் இருக்கு!அதுலயும் நல்ல வருமானம் வரும் குடும்ப கஷ்டம் சரியாவும்னு உங்க அம்மாக்கிட்ட சொன்னத்துக்கு தான் மூஞ்சில அடிச்சாப்ல வேணவே வேணானு சொல்லிட்டா!"என்று அவர் நிறுத்த எதை அன்னை வேண்டாம் என்றாள் என்று ஓரளவு ராதாவால் யூகிக்க முடிந்தது.

 

"சின்னம்மா நீங்க சுத்தி வளைக்காம நேராவே சொல்லுங்க யாருக்கு என்ன வேலைக்கு சொன்னீங்க?"என்று ராதா நேரடியாக கேட்டுவிட,

 

"உனக்கு தான் வேலை...லண்டன்ல என் அக்கா பொண்ணு நிர்மலாவ தெரியும் தானே!அவ கல்யாணம் கட்டி அங்கதான் இருக்கா அவளுக்கு குழந்தை பொறந்து இரண்டு மாசம் தான் ஆகுது!பாவம் துணைக்கு யாருமில்லாம புள்ள திண்டாடுது அதுக்கு தான் நீ அங்க போனா அதுக்கு ஒத்தாசையா இருக்கும் உனக்கும் பண கஷ்டம் தீரும்னு சொல்றேன் "என்று அவர் கூறி முடிக்க,

 

'ஏதே லண்டனா அது எந்த குண்டானுக்குள்ள இருக்குன்னு கூட எனக்கு தெரியாதே!நா கூட இவரு இங்க எங்கேயாச்சும் வேலை சொல்லுவாங்கன்னு பாத்தா இவங்க என்ன எங்கயோ பத்திவிட பாக்குறாங்களே...ஆத்தி வீட்டை விட்டு என்னால கண்காணாத ஊருக்கெல்லாம் போக முடியாதுப்பா!ஆனா இதை உடைச்சு சொல்லி வம்பு வளக்காம நாசுக்கா முடிக்கனும்'என்று முடிவெடுத்தவள்,

 

"சின்னம்மா எனக்கு ரெண்டு நாளு டயம் கொடுங்க நான் யோசிச்சிட்டு சொல்றேன்"என்று அவள் கூற முகம் மலர்ந்தவர்,

 

"சரி கண்ணு ரெண்டு நாள் என்ன நீ நாலு நாள் கூட யோசி!ஆனா நம்ம ரெண்டு பேத்துக்கும் சாதகமா ஒரு முடிவ எடுக்கனும் சரியா?"என்று தன் முகவரி அட்டையை கொடுத்தவர்,"இந்தா இதுல இருக்கற நம்பருக்கு கூப்பிட்டு சொல்லு உடனே நீ கெளம்ப எல்லா ஏற்பாட்டையும் கண்ணை மூடி தொறக்கறதுக்குள்ள நான் செஞ்சுடுவேன்"என்று கொடுக்க அதை வாங்கியவள் அவர் முன் தன் அழுக்கான பர்சை எடுக்க விரும்பாமல் அதை கையிலேயே வைத்துக் கொண்டாள். ஒத்துக் கொண்டபடி அவளை வீட்டில் இறக்கி விட்டவர் விடைபெற்று சென்றுவிட்டார்.

 

வீட்டின் திண்ணையில் அமர்ந்திருந்த அவளின் அப்பத்தா,

 

"என்னடி ராங்கி எப்ப போன எப்ப வர?நீ ஆஸ்பத்திரில மருந்து வாங்கத்தானே போன இல்ல மருந்தை தயாரிக்க போனியா நானும் அப்பே புடிச்சு காத்துக்கிட்டு இருக்கேன் காணோமேன்னு!"என்று சொர்ணம் அங்கலாய்க்க,

 

"நீ.. எனக்காக.. காத்திருந்த ம்... எனக்கு ஒரு வயசுலயே ஊரை கூட்டி கோயில்ல வச்சு காது குத்திட்டாங்க நீ புதுசா குத்த பாக்கத!நீ எதுக்கு காத்திருந்தேன்னு அரடவுசர் போட்ட அடுத்தவூட்டு புள்ளக்கி கூட தெரியும்!"

 

"தெரியுதுல்ல அப்ப எடுத்து கொடுக்கறது"என்று இருக்கும் எட்டு பல்லை காட்டி அப்பத்தா சிரிக்க,

 

"இதை பாரு அப்பத்தா நீ தலை கீழா நின்னாலும் நான் கண்ணை மூடிக்குவேன் அது வேற கதை நீ கேக்கறத தர முடியாது... புகையிலை எல்லாம் போட்டா புத்துநோயி வருமாம் அப்பத்தா!அங்க ஆஸ்பத்திரில பெரிசா எழுதி ஒட்டியிருக்காங்க"என்று அவர் அருகே அமர்ந்து அவள் கூற,

 

"ம்கூம் நான் சமஞ்சு பதினைஞ்சு வயசுல உங்க தாத்தன கட்டின காலத்துல இருந்தே புகையிலை போடுறேன் இம்புட்டு வருசம் வராத புத்துநோயா இனிமேத்து வர போகுது போடி போடி போக்கத்தவளே வாங்கிட்டு வராம வந்திட்டு அது வரும் இது வரும்னு பயமுறுத்தி பாக்கிறியோ...ம்...என் அக்கா மவ மட்டும் இப்ப இங்க இருந்திருந்தா..."என்று ஆரம்பிக்க,

 

"ஷ்... போதும் போதும் நிறுத்து உன் அக்கா மவ கதைய...காலேசுக்கு படிக்க அனுப்பிச்சா கண்டவனோட காதலு கத்திரிக்கான்னு ஊரை விட்டு எப்பவோ ஓடிடிச்சு அது! இன்னுமும் ஓஹோ என் அக்கா மவ ஆஹா என் அக்கா மவன்னு நீதான் அளந்துகிட்டு இருக்கே கேட்டு கேட்டு சலிச்சு போச்சு எனக்கு!"என்று சொர்ணத்தின் கன்னத்தில் அவள் செல்ல கோபத்தோடு குத்த பள்ளி விட்டு வந்த அவளின் தம்பி வசந்தனும் தங்கை மலர்மதியும்,"அக்கா....!"என்று கூவிக் கொண்டே வேலி படலைத் திறந்துக் கொண்டு உள்ளே வந்தவர்கள் அவளின் இருபுறமும் அவளை கட்டிக் கொண்டு இரண்டு கன்னத்திலும் முத்தம் வைத்தனர்.

 

அப்போது உள்ளே இருந்து வந்த கனகம்,

 

"என்னடி இது மணி என்ன ஆவது!நேரங்கழிச்சு வந்திட்டு இன்னும் வாசல்ல உட்கார்ந்து வளம்பளந்துகிட்டு கிடக்க போயி கை காலை கழுவிவிட்டு வந்து புள்ளங்களுக்கு சோறு போட்டு நீயும் தின்னு போ!"என்று கண்டிக்க அதில் தெரிந்த பாசத்தை உணர்ந்தவள்,

 

'எப்படியோ பொளச்சிக்கலாம்!இவங்களை எல்லாம் விட்டு எங்கேயும் போக மாட்டேன்' என்று மனதிற்குள் தீர்மானித்துக் கொண்டாள் மறுநாளே

பத்மாவை அழைத்து தனக்கு லண்டன் செல்ல தனக்கு சம்மதம் என்று தானே கூறப் போவதை அறியாமல்!

 

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top