ஆருயிர் 3
அரவிந்தை பார்த்த நொடி.. முகத்தில் புன்னகை தவழ வந்தவளை பார்த்தவனுக்கு அவள் முகத்தின் அதிக சோர்வை கண்கள் குறித்துக் கொண்டது.
'என்ன ரொம்ப டயர்டா தெரியுறா? ஒருவேளை பசங்களுக்கு எக்ஸ்ட்ரா கிளாஸ் எதும் எடுத்தாளோ?' என்று யோசித்த வண்ணமே அவளது ஸ்கூட்டியில் தான் அமர்ந்திருந்தான்.
"நீ வந்து லேட் ஆயிடுச்சா டா?" என்று கேட்டபடி தனது லஞ்ச் பேக்கை வண்டியின் லேடிஸ் ஹாண்டில் மாட்டிவிட்டு "என் வண்டி அமுங்கிட போகுது டா.. எழுந்திரு எரும!" என்று பாசமாக அவனை எழுப்பி விட்டாள். அவனும் ஒன்றும் சொல்லாமல் வண்டியை விட்டு எழுந்து நிற்க, தனது ஹேண்ட் பேக்கை வண்டி பாக்ஸூகுள் வைத்தாள்.
வண்டியை எடுக்க போனவளிடமிருந்து சாவியை பறித்தவன் "நீ வாத்து கணக்கா இத்துனூண்டு இருக்க.. ஒரு பொண்ணு பின்னால இப்படி ஒரு ஹான்ட்ஸம்மா ஒருத்தன் உட்கார்ந்துட்டு வந்தா.. பாக்குற மாதிரி இந்த ஊர்ல உள்ள பத்து பொண்ணுங்கள ஒன்னு கூட என்னை திரும்பிப் பார்க்காது. சைட் அடிக்காது. அதனால வண்டிய நானே ஓட்டுறேன்" என்று வண்டி ஓட்ட முன்னால் அமர்ந்தான்.
"ஆமா!! அய்யாவை பார்த்த உடனே ரோட்ல போற பொண்ணுங்க எல்லாம் அப்படியே மயங்கி மயங்கி தொப்பு தொப்புனு விழுந்திட போறாளுங்க?? போடா டேய்!! வாய் பேசாம ஒழுங்கா நேரா ரோட்டை பார்த்து வண்டிய ஓட்டு. ஏதாவது ஃபிகரை பார்த்து எங்கேயாவது விட்டுட போற.. என் வண்டி புதுசு!" என்றவள் அவன் பின்னே அமர்ந்து சோர்வுடன் அவன் முதுகிலே சாய்ந்து கொண்டாள்.
'என்ன மித்து ரொம்ப டயர்டா தெரியற? தள்ளு தள்ளு நானே வண்டியை ஓட்டுறேன். நீ பின்னால உட்காரு!' என்று சொன்னால் அவன் அரவிந்த் இல்லை!!
அதேபோல் அவன் வண்டி ஓட்டுவது இவளுக்காக தான் என்று தெரிந்தும் அதை வெளிக் காட்டிக் கொண்டால், அவள் யாழினியும் இல்லை!!
இரண்டு பேருக்குமே ஒருத்தர் மீது ஒருத்தர் அன்பும் பாசமும் இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி சீண்டலும் நக்கலும் தான் ஜாஸ்தி இருக்கும்!!
இப்படி தன் நண்பன் அரவிந்தன் தோளில் கைவைத்து சாய்ந்த வண்ணம் சென்று கொண்டிருந்த யாழினியை தான் தன் அலுவலக அறையில் இருந்து வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான் அதிரதன்!!
அப்படி என்ன அவன் கண்களில்?
தனக்கு சொந்தமான ஒரு உடைமையை பறித்துக் கொள்ளும் போது ஏற்படும் கோபமா?? இல்லை பொறாமையா??
அவளை வீட்டில் கொண்டு விட்டவன் மல்லிகா கொடுத்த காபியை அருந்தி விட்டு தான் தன் வீட்டுக்கு சென்றான்.
அவன் மனதில் வரும் வழியில் எல்லாம் யாழினி சொன்ன விஷயங்களையே யோசித்துக் கொண்டிருந்தான். இப்போது உலகம் முழுவதுமே இதே மாதிரி டிஜிட்டல் வேல்ர்ட் ஆக மாறிக்கொண்டிருக்கிறது.
நாமும் கண்டிப்பாக நமது வேலையை தாமதப்படுத்தாமல் தொடங்க வேண்டும்.
இல்லையென்றால் பிந்தி வந்தவர்கள் எல்லாம் முந்தி சென்று விடுவர்!!
ஆனால் அவற்றுக்கெல்லாம் மூலதனம்??
இவ்வளவு நாட்களாக அவன் தன் ப்ராஜெக்ட்டுக்கு செய்ய வேண்டிய வேலைகள்.. செய்த வேலைகள் என்று அனைத்தையும் ஒரு சேர மனதில் ஓட்டிப் பார்த்தவன், இன்று எப்படியாவது தந்தையிடம் பேசி மூலதனத்துக்கு பணத்தை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தான்.
அதேபோல் இரவு வேலையை முடித்து விட்டு ஓய்வுக்கு கெஞ்சிய கால்களை வேகமாக எடுத்து வைக்க முடியாமல் மெதுவாக வீட்டுக்குள் நுழைந்தார் விசுவநாதன். காலேஜ் முடித்த நாட்களிலிருந்து இன்னமும் ஓடிக் கொண்டுதான் இருக்கிறார் மனுஷன். ஆனாலும் ஓட்டம் ஓய்ந்தபாடில்லை!!
தன்னை போல மகனும் அப்பா பார்த்த தொழிலைத்தான் பார்க்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் அவருக்கு இல்லை. ஏதோ தன்னை பொருளாதார ரீதியாக காத்துக் கொண்டு, அவனும் ஒரு நல்ல பதவியில் இருந்தால் அதுதானே பெற்றவர்களுக்கு பெருமை நிம்மதி சந்தோஷம் எல்லாம்!!
"ம்ஹூம்.. அந்தப் பெருமை எல்லாம் எங்கே நமக்கு கிடைக்கப் போகிறது இந்த எருமையை வைத்துக்கொண்டு??" என்று பெருமூச்சோடு உள்ளே நுழைந்தவரின் கண்களில் அமைதியாக ஏதோ காற்றில் விரல்களால் வரைந்து கொண்டிருந்த மகனே பட்டான்.
அவருக்கு என்ன தெரியும்? அரவிந்த் இது போல் அமைதியான வேலைகளில் தன் கற்பனை சிறகை பறக்கவிட்டு.. கைகள் என்னும் தூரிகை கொண்டு.. அவனுடைய கணினி உலகில் சஞ்சரித்துக் கொண்டு இருப்பான் என்பதை!!
அவன் எதுவும் தன் போல் பேசிக் கொண்டிருக்கிறான் என்றுதான் நினைத்து வருத்தம் கொண்டார் விஸ்வநாதன்.
விசு மட்டுமில்லை பெரும்பாலான தந்தைமார்களும் அப்படித்தான்!! மகன்களின் அந்த கனவை நினைவாக்க பெரிதாக உதவமாட்டார்கள். அதற்காக பெற்ற பிள்ளைகள் மீது பாசம் என்பது இல்லை என்று கூறிவிட முடியாது. எங்கே மகன் தோற்று விடுவானோ? தோற்றால் அதிலேயே விழுந்து விடுவானோ? விழுந்தால் ஒட்டுமொத்தமாக இந்த சமுதாயம் அவளை ஒதுக்கி விடுமோ? என்ற பயம் தான்!! ஆம் பாச பயமே தான்!!
பிள்ளைகளின் வாழ்க்கையை பெற்றவர்களாக நோக்காமல் சமுதாயம் என்று கண்ணாடியை போட்டுக்கொண்டு அவர்கள் பார்ப்பதால் தான் வந்த பயம்!!
நூற்றில் பத்து அப்பாக்கள் மட்டுமே, மகனை அவனது கனவில் உலவவிட்டு ஜெயிப்பதற்கு உறுதுணையாக இருப்பார்கள். அப்பா மட்டுமல்ல மொத்த குடும்பமும்!!
குளித்து முடித்து விட்டு சாப்பிட அமர்ந்தவரிடம் பற்றி பேச தயக்கம் அரவிந்த்துக்கு. அருகில் கோதாவரி பரிமாறிக் கொண்டிருந்தார். அவனுக்கும் தெரியும் அப்பா நிதானமாக சாப்பிடுவது இரவில்தான் என்று!! அதனால் அமைதியாகவே அமர்ந்து தன் கற்பனையை தட்டிவிட்டு டிஜிட்டல் உலகில் அவன் நுழைந்திருக்க மீண்டும் ஒரு பெருமூச்சு விசுவிடம்!!
"என்ன இன்னைக்கு சாரு ரொம்ப சீக்கிரமா வீட்டுக்கு வந்துட்டாரு? உலக அதிசயம் தான்!!" என்று தன் ஆற்றாமையை வார்த்தைகளில் கொட்ட கோபம் வந்தாலும் அதுதானே உண்மை என்று அமைதியாக அப்பாவை பார்த்து இருந்தான் அரவிந்த்.
சாப்பிட்டு முடித்தவர் சோபாவில் அவனுக்கு எதிரில் அமர்ந்து "சொல்லுடா.. எலி அம்மணமாக ஓடும் போதே தெரியும் ஏதோ காரியம் ஆகணும்னு. அதுவும் இவ்வளவு பேசுக்கு அப்புறம் நீ இப்படி அமைதியா இருக்கேனா ஏதோ பெரிய காரியம் என்னால ஆக வேண்டும். என்னான்னு சொல்லு?" என்றார்.
"அப்பா…" என்ற தயங்கியவன் பின் ஒரு மூச்சு எடுத்து "எனக்கு தொழில் தொடங்க பணம் வேணும். உங்களுக்கு அதை நான் ஒரு வருஷத்துல திருப்பிக் கொடுத்து விடுவேன்" என்று தன் கனவு ப்ராஜெக்ட் பற்றி அவன் விவரிக்க விவரிக்க சற்று ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி தான் விஸ்வநாதனுக்கு. மகன் பொறுப்பில்லாமல் சுற்றுகிறான், ஏதோ தன்போக்கில் நடக்கிறான், என்று நினைத்தவர், அவன் பின்னே இப்படி ஒரு அறிவார்ந்த விஷயம் இருப்பதை எதிர்பார்க்கவில்லை. அவருக்கும் தெரியும் தன் மகன் அறிவுள்ளவன் தான் என்று!!
ஆனால் அதை சரியான முறையில் பொறுப்பாக காட்டாமல் வீண் அடிக்கிறானே என்று தான் இந்த ஆதங்கம் கோபம் எல்லாம். ஆனாலும் இப்பொழுது எதை வைத்து அவனுக்கு பணம் கொடுப்பது? வீடு அங்கே கேஸில் இருக்கிறது. இருக்கும் மனைவி நகைகளை அப்போது எடுத்துதான் தொழிலின் யூஸ் பண்ணுகிறார். வேறு எங்கிருந்து எதை கொடுப்பது என்று புரியாமல்.. அதேநேரம் கொடுத்தால் மகன் மீண்டு வருவானா? இல்லை அதில் மூழ்கி விடுவானோ? என்ற பயமும் தொற்றிக் கொள்ள, "அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்!! நீ முதலில் ஒரு வேலைக்கு போ. கொஞ்சம் சம்பளத்தை வாங்கி அதன்பின் உன் கற்பனைக்கு தொழில் வடிவம் கொடு" என்று விட்டதோடு எழுந்து சென்றுவிட்டார்.
அப்பாவின் இந்த பதிலை ஓரளவு எதிர்பார்த்து இருந்தான் தான். ஆனாலும் ஏமாற்றம் தாங்க முடியவில்லை. சடாரென்று கதவை சாத்திவிட்டு இவன் வெளியில் சென்ற வேகமே அவன் கோபத்தை பறைசாற்ற.. பிள்ளைக்கு பேசுவதா? அப்பாவுக்கு பேசுவதா? என்று பரிதவித்து நின்றார் கோதாவரி.
கழுதை கெட்டால் குட்டிச் சுவரு அரவிந்து கோபம் வந்தால் யாழினி வீட்டு மொட்டை மாடி!!
வழக்கம்போல சுவர் ஏறி குதித்தவன் அங்கே அமர்ந்து இருக்க.. அவன் வந்த சத்தத்திலேயே அவனை கண்டு கொண்டவள், ஒன்றும் பேசாமல் அருகில் அமர்ந்துகொண்டு மறுநாள் பாடம் நடத்துவதற்கு தேவையான நோட்ஸ்களை எடுத்துக்கொண்டிருந்தாள்.
சிறிது நேரம் அவள் ஏதாவது கேட்பாள் என்று எதிர்பார்த்து அவள் முகம் பார்ப்பதும், பின்பு திரும்பவதுமாக இருந்தவனை கண்டவளுக்கு சிரிப்பு தான். ஆனாலும் அவனாகவே சொல்லுவான் என்று இவள் தன் வேலையில் கவனமாக இருக்க, சடாரென்று அவள் கையில் இருந்த புத்தகங்களை பிடுங்கி அருகில் போட்டவன் "ஒருத்தன் சோகமாய் இருக்கானே.. என்னனு கேக்கணும் உனக்கு தோணுதடி பிசாசே!!" என்று பற்களை கடித்துக் கொண்டு அவன் கேட்க..
"சொல்றதா இருந்தா நீயே சொல்லுவ டா. அதுக்காக நானும் உன்ன மாதிரியே நல்லா வெறிச்சி வெறிச்சி அந்த நிலாவே பார்த்து உட்கார்ந்து இருக்க முடியுமா? எனக்கு நாளைக்கு ஸ்கூல்ல இம்பார்ட்டன் கிளாஸ்!! அதுவும் ப்ளஸ் டூவுக்கு எடுக்கணும். நீ இப்போ சொல்லனுமா யோசிச்சு சொல்லு" என்றவள் மீண்டும் அந்த புத்தகங்களை எடுக்கப் போக அவள் கையை பிடித்து தன்னுள் பொதித்து கொண்டான் இறுக்கமாக..
அந்த இறுக்கமே சொன்னது அவனது மனதின் வலியை!!
அவ்விறுக்கத்தின் வழியே அவனது உணர்வுகளின் கணத்தை உள்வாங்கிக் கொண்டிருந்தாள் யாழினி. அவளுக்கும் கஷ்டமாக இருந்தது.
"மாமா ஏதாவது சொன்னாங்களா டா? நீ ப்ராஜெக்ட் பற்றி ஏதும் பேசுனியா அவர்கிட்ட?" என்று சரியாக கணித்து கேட்கும் அவளைத்தான் ஆழமாக பார்த்தவன், பின் உதட்டை கடித்து திரும்பிக் கொண்டான்.
அவனிடமிருந்து ஒரு கையை மெல்ல விடுவித்து அவன் முகத்தை தன்னிடம் திருப்பி "சொல்லு அர்வி.. மாமா என்ன சொன்னாங்க?" அவன் முகத்தில் இருந்து ஓரளவு அவளால் யூகிக்க முடிந்த இருந்தது.
"என்னால முடியலடி!! எவ்வளவுதான் போராட.. கொஞ்சம் கூடவே நம்பவே மாட்டேங்குற அந்த மனுஷன்!! திரும்பத்திரும்ப என்னை வேலைக்கு போக சொல்வதிலேயே குறியா இருக்காரு. நானும் எவ்வளவு தான் என்னுடைய கனவுக்காக அவரிடம் போராட.. ரொம்ப கஷ்டமா இருக்குடி!! கொஞ்சம் கூட பின்புலம் இல்லாமல் எப்படி முன்னேறி வருவது. என்னை போல மிடில்கிளாஸ் எல்லாருக்கும் இப்படி கனவுல இருக்கக்கூடாதடி?" என்றான் சட்டென்று அவளது மடியில் படுத்து கொண்டான். அவனது வலிகள் இவளுக்கும் வலித்தது.
சற்று நேரம் அவளும் பேசவில்லை. அவனது சிகையை கோதி கொடுத்தவாறு அமைதியாக இருந்தாள். அவன் கொட்டட்டும்.. மனதில் உள்ள வலிகள்.. ரணங்கள்.. ஆதஙக்ஙகள் அனைத்தையும் கொட்டட்டும்.. அதன் பின்னர்தான் அவள் எது சொன்னாலும் அவனிடம் எடுபடும். அதுவரை சொன்னதையே தான் அவன் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருப்பான். கிளிப்பிள்ளை போல.. 'சரியான கிளிப்பிள்ளை!' என்று அவன் தலையை கோதிக்கொண்டே தோழனை கடிந்து கொண்டாள் செல்லமாக..
கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக தன் மனதில் உள்ளதை எல்லாம் மடைதிறந்த வெள்ளம் போல சொல்லி முடித்தவுடன் அவனுக்குள் ஒரு அமைதி பிறக்க.. உள்ளம் கொண்ட அமைதியிலும்.. மெல்லிய காற்றிலும்.. அவளது மடி தந்த சுகத்திலும்.. தலை கோதும் அவளின் விரல் ஸ்பரிசத்திலும் அப்படியே கண்ணயர்ந்து விட்டான் அரவிந்த் பிரபாகரன்.
அவனின் ஏறி இறங்கிய சுவாசத்தை பார்த்து அவன் ஆழ்ந்து உறங்கி விட்டதை உணர்ந்தவள், மெல்ல அவனிடம் இருந்து எழுந்து தன் அறைக்குள் சென்று தலையணை எடுத்து வந்து அவன் தலைக்கு அடியில் வைத்து போர்வை போர்த்திவிட்டு, தன் அறைக்குள் சென்று இவள் உறங்கிவிட்டாள்.
காலையில் கண் விழித்தவன் பார்த்தது புது மலராக பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்தவள் முகம் தான்!! தன்னை உலுக்கி எழுப்பி கொண்டிருந்தவளை மலர்ந்த புன்னகையோடு பார்த்துக் கொண்டே எழுந்தான்.
"சீக்கிரம் என் ரூம்ல ரெடியாகி வா என்னை கொண்டு வந்து ஸ்கூலில் விட்டுட்டு ஈவ்னிங் ஃபைவ் போல என்னை கூப்பிட வா. சரியா?" என்று இவள் அடுத்தடுத்து அவனுக்கு கட்டளைகளை பிறப்பித்துக் கொண்டே இருக்க..
'நாம் நைட் ஃபீல் பண்ணி எவ்வளவு சொன்னோம். இந்த பக்கி ஒரு வார்த்தை ஆறுதலா சொல்லுச்சா? காலையிலிருந்து நமக்கு வேலைதான் கொடுக்கிறா.. இதுல ஆர்டர் வேற.. பிசாசு!! பிசாசு!!' என்று திட்டிக்கொண்டே இருந்தாலும் அவள் சொன்னவற்றை தட்டாமல் செய்து கொண்டிருந்தான்.
காலையில் உணவின் போது அவனையும் அருகே வைத்து சாப்பிட வைத்தாள். இடையிடையே அவள் அப்பாவிடமும் ஏதோ பேசிக் கொண்டிருந்ததை எல்லாம் அவன் கருத்தில் கொள்ளவே இல்லை. அவனது எண்ணங்கள் எல்லாம் எப்படி தன் கனவை நனவாக்குவது? எங்கிருந்து இதற்கான மூலதனத்தை திரட்டுவது? என்பதிலேயே சுற்றிக் கொண்டிருந்தது.
காலையில் அவளது ஸ்கூட்டிலேயே கொண்டு வந்து அங்கே விட்டவனைப் பார்த்தவள், "எங்க ஊர் சுத்தினாலும் கரெக்டா அஞ்சு மணிக்கு இங்கே வந்துடனும் அர்வி. சரியா?" என்க, நிமிர்ந்து அவளை ஒரு பார்வை பார்த்தன் சரி என்பது போல தலை ஆட்டி விட்டு சென்றான்.
அன்று முழுவதும் அரவிந்த் பணத்துக்காக எவ்வளவு முடியுமோ அவ்வளவு அலைந்தான். ஏற்கனவே பேங்க் எல்லாம் ஏறி பார்த்து வந்தாயிற்று. இவனை நம்பி பர்சனல் லோன், தொழில் லோன் கொடுக்க எவரும் முன்வரவில்லை. அதனையடுத்து அவனுக்கு தெரிந்த நண்பர் வட்டாரத்திலும், ஏன் வட்டிக்கு கூட கேட்டும் கொடுக்க ஆளில்லை.
முதலாவது காரணம் எதை நம்பி அவர்கள் கொடுப்பார்கள்? வீடுகூட இப்பொழுது கோர்ட் கேஸ் இருக்க.. அவரது தந்தையின் பிரஸ் ஒன்று தான் அவர்களது வருமானம். அதுவும் இப்ப எல்லாம் பெரிய பிரபலமாக இல்லை என்று அனைவரும் கையை விரித்து விட்டனர்.
காலையில் யாழினியோடு சாப்பிட்டவன் தான் அலைந்து திரிந்து சரியாக ஐந்து மணிக்கெல்லாம் இவன் வந்து நின்று விட.. அவளும் அலுத்து சலித்து ஐந்தரை மணி போல் தான் வந்தாள்.
இன்று அதிரதன் இங்கு இல்லை. அவன் தான் அனைத்தையும் ஜூம் மீட்டிங்கில் முடித்துவிடுகிறானே!!
ஆனால் நித்தம் நித்தம் யாழினியை பார்க்கும்போதெல்லாம் கவி பேசும் கருவண்டு கண்களும்.. அறிவாய் பேசும் செர்ரி இதழ்களும்.. அவள் சிரிக்கும் போதெல்லாம் அவள் புன்னகையோடு சேர்ந்து சிரிக்கும் கன்னக்குழியும்.. அடிக்கடி யோசனையின் போது அவள் தொட்டுக்கொள்ளும் அந்த ஒற்றை சிவப்புக் கல் இடது பக்கம் மூக்குத்தியும்.. அவனை அப்படி வசீகரித்தது!!
எவ்வளவு வேலை சொன்னாலும் அதை முடியாது என்று சொல்லாமல் தன்னுடைய முழு உழைப்பையும் போட்டு அவள் முடித்து வந்து காட்டுவதை பெருமிதத்தோடு பார்ப்பான். இப்படி ஆத்மார்த்தமாக வேலை செய்பவர்கள் என்றால் அவனுக்கு அலாதி பிரியம். இப்போ உள்ள தலைமுறைகளில் காணமுடியாத ஒன்று!! விசுவாசமும் ஆத்மார்த்த உழைப்பும்!!
பெரும்பாலும் பணத்திற்காகவே உழைப்பவர்கள் மத்தியில் இவள் ஒரு யுனிக் பீஸ் தான் என்று மனதில் சிலாகித்துக் கொண்டான்.
அப்படி எல்லாம் யாரையும் உடனே பாராட்டி விடுபவன் கிடையாது அதிரதன். அதே நேரம்.. அவனுக்கு பிடித்து விட்டால் அவர்களை எளிதில் விட்டு விடவும் மாட்டான். அது தொழிலாக இருந்தாலும் பர்சனல் வாழ்க்கையாக இருந்தாலும்!!
அதற்காக பணக்காரன் என்பதற்காக பார்க்கும் பெண்களையெல்லாம் படுக்கைக்கு அழைக்கும் கார்ப்பரேட் காமுகனும் அல்ல அவன்!! பக்கத்தில் வந்தால் தனது பதிவிரதை தனம் கெட்டுவிடும் என்று கோபத்தில் கண்களால் எரிக்கும் கொங்கணவரும் அல்ல!!
அனைத்து இச்சைகளும் இருந்தாலும் அவற்றை அடக்கி தன் கண்களால் ரசித்து விட்டு அகன்று விடுவான். 'என்னை நெருங்கி தொடும் அளவுக்கு உனக்கு என்ன கெப்பாசிட்டி இருக்கிறது?' என்பதுதான் அவனது கேள்வியாக இருக்கும். சில சமயம் அவனாக நாடி போகும்போது அந்தக் கேள்விகள் எல்லாம் யார் கேட்பது அவனிடம்? எல்லாம் பணம் மட்டுமே அங்கே பிரதானம்!!
இப்பொழுது அதிரதனின் கண்கள் கருடன் என இந்த புறாக்குஞ்சையே வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. என்று அவளை அலேக்காக தூக்கி செல்ல போகிறானோ?
இரண்டு நாட்களாக அரவிந்தன் எவ்வளவு முயன்றும் அவனால் ஐம்பதாயிரத்திற்கு மேல் ஒரு சிறிதளவு கூட பணத்தைப் புரட்ட முடியவில்லை. நமக்கு கஷ்டம் வரும்போது தான் உண்மையான உறவுகளையும் நண்பர்களையும் காலம் நமக்கு காட்டிக்கொடுக்கும் என்பது அத்துணை உண்மை!!
விஸ்வநாதன் கூட மகன் தன்னிடம் அதற்குப்பின் பேசவில்லை என்பதால் ஒருவேளை வேலைக்கு முயல்கிறானோ என்று யோசித்துக் கொண்டிருந்தார்.
இரண்டு நாள் சென்று அன்று புதன்கிழமை.. யாழினியிடமிருந்து அவனுக்கு போன் "அர்வி.. அவசரமாக வா.. ஸ்கூலுக்கு!!" என்று.
இவனும் இரண்டு நாட்களாக அவளிடம் சரியாக பேசக்கூட இல்லை. அவள் அழைத்தாலும் ஓரிரு வார்த்தை பேசிவிட்டு அவன் தன் கனவை நனவாக்க தொடர்ந்து ஓட.. இன்று அவளிடம் இருந்து அவசரமாக வா என்று அழைப்பு!! அதிரிபுதிரி என்னவோ ஏதோ என்று உள்ளுக்குள் நடுங்கி இவன் ஸ்கூலுக்கு வர.. அவளும் அப்போதுதான் வேக நடையுடன் வந்தாள்.
அவளை முழுதாக கண்களில ஆராய்ந்தான். அடுத்து கோபம் பெருக "பிசாசு.. பிசாசு.. ஒரு நொடி பயந்திட்டேன் தெரியுமா? இப்படியா சொல்லி தொலைவ!! என்ன ஏதுன்னு சொன்னா தான் என்ன?" என்றவனுக்கு படபடப்பு அடங்கவில்லை. அவளை தோளோடு இறுக அணைத்து கொண்டான்.
"விடு டா எரும.. என்னை கொன்று நிஜம் பிசாசா மாத்திடாதா!!" என்றவளின் தலையில் இரு கொட்டுகளை வலிக்க பார்சல் செய்தான். ஆனாலும் மனது அவனுக்கு ஆறவே இல்லை!!
"ஏண்டி இப்படி கொல்லுற மனுசன!! வான்னு சொன்னா வரமாட்டேனா?? அதுக்கு இப்படி சொன்னா என்னமோ ஏதோன்னு பயந்து வந்தேன் தெரியுமா?" என்றவன் கைகள் நடுங்குவதை பார்த்து சிரிப்புதான் யாழினிக்கு. தன் மீது கொண்ட அவனது அன்பில் மனம் நெகிழ்ந்து "சரி.. சரி வா. செண்டிமெண்ட் பிழியாத!!" என்று அவனை சீண்டிக் கொண்டே அழைத்து சென்றாள்.
அப்போதுதான் பள்ளிக்கு வந்த அதிரதனின் கண்களில் இவர்களின் இந்த அன்னியோன்யம் கருத்தில் பட அவனுக்கு அது காதலா நட்பா என்று பிரித்தறிய முடியவில்லை. அதை பார்க்க முடியாமல் உடனே காரை திருப்பி விட்டான்.
ஆனால் எக்காரணம் கொண்டும் யாழினியை அவன் கையில் கொடுக்கக் கூடாது என்று மட்டும் உறுதி கொண்டது. அடுத்தடுத்து வந்த நிகழ்வுகள்!!
யாழினி அவனை அழைத்து சென்ற வங்கியை இவன் யோசனையோடு பார்க்க.. அவன் நெரித்த புருவங்களை பார்த்தவள் "அட வாங்க தலைவரே.. ரொம்ப யோசிக்காதிங்க!!" என்று அவனை இழுத்து சென்றாள்.
இவனை வெளியில் அமர்த்தி விட்டு உள்ளே மேனேஜரோடு சென்று இவள் பேசி முடித்து விட்டு வெளியே வரும்போது கையில் வைத்திருந்த சின்ன பேக்கை அவனிடம் நீட்டினாள்.
"இதுல ஃபைவ் லேக்ஸ் இருக்கு அர்வி. என்னோட பர்சனல் லோன். உன்னோட கனவுக்கு!!" என்றவளை
கண்கள் கலங்க பார்த்தவன், அடுத்த நொடி இறுக்க அணைத்திருந்தான் சுற்றும் மறந்து!!
ஆனால் அந்த சுற்றத்தில் ஒருத்தனாய் அதிரதனும்!!