பரபரப்பான லண்டன் நகரை விட்டு தொலைதூரத்தில் இருந்த அந்த கிராமத்தின் நடுநாயகமாக கம்பீரத்தோடு நின்றிருந்தது அந்த கோட்டை.முன்னூறு ஆண்டுகள் பழமையான கோட்டை தற்காலத்தில் லார்ட் ஆஃப் வேல்ஸ் என்ற பட்டம் கொண்ட வில்சன் ஹன்டரின் கீழ் இருந்தது.
அவ்வளவு பெரிய இடத்தை நிர்வகிக்கவே எழுபதிற்கும் மேற்பட்ட ஆட்கள் இருந்தனர்.அந்த காலை நேரத்தில் கீரிஸ் தடவிய எந்திரம் போல அவரவர் வேலையை கனகச்சிதமாக செய்தனர். பரம்பரை பரம்பரையாக ஹன்டர் குடும்பத்தின் மேல் விசுவாசம் கொண்டவர்கள் அவர்கள். அத்தோடு அவர்களை கறாரும் கனிவும் கொண்டு நிர்வகிக்கும் மனிதன் மேல் கொண்ட அபிமானம் வேறு அவர்களை சிறு தவறு கூட இல்லாமல் வேலை செய்ய தூண்ட முக்கிய காரணம்.
பல ஏக்கரை விழுங்கி பரந்து விரிந்திருந்த அந்த கோட்டையும் அதை சுற்றி இருந்த தோட்டத்தையும் சுற்றி பார்க்க நமக்கு பத்து நாட்களாவது தேவைப்படும் அதனால் அதை மெதுவாக செய்துக் கொள்ளலாம் என்று அதை தள்ளி வைத்துவிட்டு நாம் கோட்டையின் கிழக்கு சாரியில் அமைந்திருந்த ஆபிஸ் அறைக்கு செல்லலாம்.
அங்கே அகலமான மேசையில் பல கோப்புகள் நிரம்பிய வழிய அதன் பின் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தான் இருபத்தியெட்டு வயது இளைஞன்.அவன் ஸ்ரீவத்சா!அந்த கோட்டையின் நிர்வாக அலுவலர்.அத்தோடு முடியவில்லை அவன் வேலைகள்.வில்சனின் மனைவி துளசி அங்கிருந்த பெண்களுக்காக உருவாக்கிய மகளிர் குழுவை மேற்பார்வையிடுவது ஸ்ரீ தான்.வில்சனின் வலது கை அவன்தான் என்பதை தனியாக கூற வேண்டியதில்லை.வில்சனின் அன்னை எலிசபெத்திற்கும் அனைத்திற்கும் அவன்தான் வேண்டும்.அவருக்கு மருந்து கொண்டு வந்து கொடுப்பது, ஷாப்பிங் அழைத்து செல்வது,சுற்றிலும் எங்கு பார்ட்டிகள் நடந்தாலும் அவரின் பார்ட்னர் அவன்தான்.வயதானவரோடா என்று அலுத்துக் கொள்ளாமல் புன்னகையோடு நடனம் கூட ஆடுவான் அவரோடு.மொத்ததில் அந்த கோட்டையின் அச்சாணியாக இருந்தான் அவன்.
ஜன்னல் வழியாக நுழைந்த தென்றல் காற்று அவன் நெற்றியில் புரண்ட கூந்தலோடு விளையாட கூர் கண்கள் கோப்பில் கவனமாக அங்குமிங்கும் உருண்டது.சிறிது புரியாத இடத்தை ஆராயும் போது தானாக உதட்டோரத்தின் பின் பகுதியை கடித்துக் கொண்டான் வழமை போல.சட்டை பேண்ட் என்று ஃபார்மல் உடையில் தான் இருந்தான்.சட்டையின் கை முழங்கை வரை மேலேறி இருக்க மேலிருந்து இரண்டு பட்டன்கள் போடாததால் திண்ணென்ற மார்பின் வலிமையை வெளிச்சம் போட்டுக் காட்டியது நமக்கு.
புருவங்கள் முடிச்சிட அவன் எழுதிக் கொண்டிருந்த நேரம் அறை கதவு தட்டப்பட,
"எஸ் கமீன்!"என்ற அவனின் ஆளுமை மிகுந்த குரலில் கதவை திறந்துக் கொண்டு அங்கே வந்தான் ஜார்ஜ். எஸ்டேட்டை சேர்ந்த விளை நிலங்களை பார்த்துக் கொள்பவன்.
"சொல்லுங்க ஜார்ஜ் என்ன விஷயம்?"என்ற ஸ்ரீவத்சாவின் கேள்விக்கு,
"சர்..!வடக்கு பக்கம் பழைய வேலி சுத்தமா போயிடுச்சுங்க !பக்கத்து எஸ்டேட் ஆடு மாடெல்லாம் உள்ள வந்து வெளைச்சலை நாசம் பண்ணுதுங்க! நான் போய் மிஸ்டர் ஸ்டெர்லிங்க்கிட்ட இப்படின்னு சொன்னா நீங்க வேணும்னா உங்க வேலியை சரி பண்ணிக்குங்க என் கால்நடைங்க பத்தி பேசாதேன்னு கண்டபடி திட்டிட்டாரு!"
ஸ்ரீயின் முகத்தில் எந்த பதட்டமும் இல்லை.வில்சனின் பக்கத்து எஸ்டேட்டை வாங்கிய புது பணக்காரனான ஸ்டெர்லிங்கை பற்றி அவனும் கேள்விப்பட்டிருந்தான். கிராமத்தின் அமைதியான வாழ்விற்கு நேர்மாறாக படாடோபமும் ஆணவமும் நிரம்பி வழிந்தது அவனிடத்தில். எஸ்டேட்டை நிர்வகிக்க எந்த முன் அனுபவமும் இல்லாதோடு வேறு ஒருவர் கூறுவதையும் அலட்சியமே செய்தான் அவன்.
ஸ்ரீ தனது பேனாவை வைத்துவிட்டு முன்னோக்கி சாய்ந்தவன்,
"வடக்கு வயல் பத்தி எனக்கு தெரியும் ஜார்ஜ்!" என்றான் ஸ்ரீ. அவன் குரலில் நிதானம் இருந்தது."அந்த வேலி போட்டு எழுபது வருஷம் ஆயிடுச்சு! இதுல உங்க தப்பு எதுவுமில்லை. அதை சரி பண்ண நான் லார்ட் வில்சன் கிட்ட பேசறேன்! அப்புறம் அந்த ஸ்டெர்லிங் "அவன் கண்களில் எக்கின் உறுதி தெரிய,"அவரை நான் டீல் பண்ணிக்கிறேன் இங்க மிஸ்டர் வில்சனுக்குன்னு ஒரு மரியாதை இருக்கு! அதை ஸ்டெர்லிங் மதிக்க கத்துக்கனும் இல்லேன்னா அத்தோட பின் விளைவுகளை அனுபவிக்க வேண்டியதுதான்!"
ஸ்ரீவத்சாவின் பேச்சில் நிம்மதியுற்ற ஜார்ஜ் விடைபெற்று சென்றுவிட்டான்.அவன் சென்ற பின் புதிய வேலிக்கு தேவையான நிதியை பற்றி தேவையான பட்ஜெட்டை எழுதி வைத்தவன் வில்சனின் மருத்துமனை மூத்த மருத்துவரோடு மீட்டிங் இருந்ததால் அவனின் காரில் அங்கே சென்றுவிட்டு அவன் திரும்பிய போது மதியம் மூன்று மணி ஆகியிருந்தது.
அவன் அறைக்கு சென்று முகம் கழுவி அவன் உடை மாற்றி வந்த போது அறை உள்ளே நுழைந்தார் அவனின் அன்னை கமலம்.அவரின் பின்னே அவரின் அபிமான உதவியாள் ரோஸி வர அவள் கையில் உணவு தட்டு இருந்தது.கமலத்தின் ஜாடையில் உணவு தட்டை வைத்துவிட்டு ஸ்ரீயிடம் தலையசைத்து விடைபெற்று சென்று விட்டாள் அவள்.
"நாம எதுக்காக கண்ணா உழைக்கறோம்?"என்று கேட்டார் காட்டமாக! மகனுக்கு கணவரின் பாட்டனாரின் பெயரை வைத்துவிட்டதால் அவனை கண்ணா என்றே அழைப்பார் அவர்.அன்னையின் கேள்வியில் லேசாக புன்னகைத்தவன்,
"கேள்வி கேட்ட உங்களுக்கே அதுக்கு பதிலும் தெரியும்தானே அதை நீங்களே சொல்லிடுங்கம்மா!"என்று பதில் கூறாத மகனை முறைத்தவர்,
"இந்த சான் வயித்த பட்டினி போடாம இருக்கத்தான் உழைக்கறது ஆனா நீ என்னடான்னா அதுக்கே வஞ்சனை பண்ணிட்டு வேலையே கதின்னு இருக்க! இதெல்லாம் சரியில்லை சொல்லிட்டேன்!இனிமே இப்படி சாப்பாடு தூக்கம் விட்டு வேலை செஞ்சா நான் கண்டிப்பா வில்சன் தம்பிக்கிட்ட சொல்லிடுவேன் ஜாக்கிரத!"என்று அவர் பேச்சில் அந்த உழைப்பு தான் அவனை சிறிதளவாவது உயிர்போடு வைத்திருக்கிறது என்று அந்த அன்பு அன்னையிடம் அவன் எப்படி உரைப்பான்?
"அம்மா!பட்லர் ஜானுக்கு உடம்பு முடியலேன்னு சொன்னீங்களே இப்ப எப்படி இருக்கார்?"என்று சாமர்த்தியமாக பேச்சை மாற்றிவிட்டான்.
கோட்டையின் நிர்வாகம் ஸ்ரீவத்சாவினுடயது என்றால் அதன் சமையல் தோட்டம் எல்லாம் கமலத்தின் மேற்பார்வையில் தான் சிறிதும் தளர்வில்லாமல் நடந்தது.முதலில் அங்கு வரும்போது ஆங்கில அறிவு சிறிதளவோடு வந்தவர் இன்று ஆங்கிலத்தோடு ஸ்காட்டிஷ் மொழியிலும் சரளமாக பேசி திறமையோடு பணியாட்களை வழி நடத்தினார்.
மகனின் பேச்சை மாற்றிய கள்ளத்தனம் அறியாமல் அவரும் ஜானின் உடல்நலம் பற்றி கூற தொடங்கிவிட்டார்.
கோட்டையின் அழகான பகுதியில் ஒன்றான நூலகத்தில் அமர்ந்திருந்தான் லார்ட் வில்சன் ஹன்டர்.வயது ஐம்பது ஆனாலும் இளமை குன்றாமல் ஆளுமை நிரம்பிய கம்பீரத்தோடு இருப்பவன் இளகும் ஒரே இடம் அவனின் உயிரான மனைவி துளசியை அடுத்து உடன்பிறவா சகோதரி கமலத்தின் மகன் ஸ்ரீவத்சாவிடம் மட்டுமே.ரத்த தொடர்பு இல்லாவிடினும் இருவரும் மாமா மருமகன் என்பதை தாண்டி நெருங்கிய தோழமையோடு பழகினர்.ஒருவர் மனதில் நினைப்பது மற்றொருவருக்கு வாய்விட்டு கூறாமலே புரிந்துவிடும்.
கையில் உயர்தர வைனை வைத்துக் கொண்டு மெல்ல சுவைத்த வில்சன் பிளாக் டீயை ருசித்த ஸ்ரீயை புன்னகையோடு பார்த்து,
"கொஞ்சம் டேஸ்ட் பண்ணித்தான் பாரேன் ஸ்ரீ!இது உங்க அத்தை துள்சியே ஓகே சொன்னது இதுனால ஹெல்த்துக்கு எந்த பாதிப்பும் வராது!"என்று கூற டீ கப்பில் பதிந்திருந்த பார்வையை உயர்த்திய ஸ்ரீ,
"ம்ஹூம் அது நல்லதாவே இருந்தாலும் என்னமோ என் மனசுக்கு ஒத்துவரல! வேண்டா மாமா! அண்ட் ஒன் மோர் திங்க் அத்தை ஒன்டேக்கு டூ ஸ்மால் கிளாஸ் தான் உங்களுக்கு அலோவ் பண்ணியிருக்காங்க ஞாபகம் இருக்கட்டும் "என்று கூற,
"அதை விட அதிகமா இதை குடிக்க முடியாது அவ்ளோ பவர்ஃபுல் இதுன்னு அவளுக்கு தெரியாது"என்று வில்சன் சிரித்த நேரம் அவனின் போன் கிணுகிணுக்க திரையில் மகளின் எண்ணை கண்டு உற்சாகத்தோடு எடுத்தவன்,
"ஹே பேபி!ஹவ் ஆர் யூ டியர்!ஏன் டூ டேஸா போன் பண்ணல?"என்று கேட்க வீடியோ காலில் இருந்த அவனின் செல்ல மகள் எமிலியாவின் குரல்,
"சாரி டேட்!நா பிரண்ட்ஸ் கூட சின்ன டூர் போயிட்டேன் அதான் போன் பண்ணல! அப்புறம் வாட்ஸ்அப் டேட்!கேஸில்ல என்ன விசேஷம்?"என்று பேச இங்க ஒருவனின் உடல் இறுகிப் போனது.ஒரு காலத்தில் அவனை பாகாக உருக்கிய அதே குரல் தான் இப்போது கேட்ட நொடி உடலையும் உள்ளத்தையும் பனி பாறையாக இறுக வைத்தது.
"பெரிசா விசேஷம் எதுவுமில்ல எமி!நம்ம நார்த் சைட் பழைய ஃபென்ஸ் உடைஞ்சு பக்கத்து எஸ்டேட் கேட்டில்ஸ் எல்லாம் உள்ளே வந்து கிராப்ஸ் எல்லாம் தின்னுடுதுங்க! அதான் ஸ்ரீ கூட என்ன பண்ணலாம் டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தேன் "என்று கூற,
"நான் சொல்றத தான் நீங்க ஒத்துக்க மாட்டீங்களே!நம்ம எஸ்டேட்டுக்கு தகுந்த எஃபிஷியண்ட் மேனேஜரை போட்ருந்தா இப்ப இந்த சில்லி மேட்டர்கெல்லாம் நீங்க இப்படி டென்ஷன் ஆகும்படி ஆகியிருக்குமா?"என்று அவள் குத்தலாக கூற மகளை முறைத்த வில்சன்,
"எமி!வாட்ஸ் இஸ் திஸ்!ஸ்ரீ மாதிரி எஃபிஷியண்ட் யாரும் இல்லை! எல்லா மேனேஜரும் ஒரு வருஷம் பண்ற வேலைய அவன் ஒன் டேல முடிச்சிடுவான் தெரியுமா "என்று வில்சன் மேலே பேசுமுன்,
"வாட் எவர்! டேட் நான் புது கோர்ஸ் சேர்ந்திருக்கேன் இன்னும் கொஞ்ச நாள் என்னால வீட்டுக்கு வர முடியாது அதை சொல்லத்தான் போன் பண்ணேன் ஓகே டேக் கேர் டாட் பை"என்று பதிலுக்கு கூட காத்திராமல் போனை வைத்துவிட்டிருந்தாள் அவள்.
தனது அறையில் இருந்த ஜன்னல் வழியாக பால் பொழியும் நிலவை வெறித்திருந்தான் ஸ்ரீ. எமியின் அலட்சியமும் குத்தல் பேச்சுக்களும் அவனுக்கு ஒன்றும் புதியது இல்லை. கடந்த மூன்று வருடங்களாக பூவினும் மென்மையாக இருந்தவள் புயலாக மாறி அவனை சுழற்றி அடித்தாள்.தேனாக இனித்த பேச்சுகளை விடுத்து தேளாக மாறி கொட்டி அவனை துடிக்க வைப்பதில் அவளுக்கு தான் என்ன ஆனந்தமோ?
அவளின் பெற்றோர்,பாட்டி,கமலா ஏன் வீட்டு வேலையாட்களிடம் கூட புன்னகை முகத்தோடு வலம் வருபவள் அவனிடம் மட்டும் காட்டும் முகம் வேறானது ஏன் என்று இன்றளவும் அவனுக்கு புரியாத புதிர் தான்.தன் நிலையறிந்து ஒதுங்கி இருந்தவனை அன்பு பாசம் காதல் என்று சொர்க்கத்தை காட்டியவள் இன்று ஏழை திறமையற்றவன் தன் கண் முன்பு வர கூட தகுதியற்றவன் என்று வார்த்தைக்கு வார்த்தை வதைத்து நரகத்தை ஒவ்வொரு கணமும் காட்டிக் கொண்டிருந்தாள்.
சில நேரங்களில் அன்னையை அழைத்துக் கொண்டு கண்காணாத இடத்திற்கு சென்றுவிட வேண்டும் என்று அவனுக்கு தோன்றுகிறது தான். ஆனால் திக்கற்று நின்ற அவர்களுக்கு வீட்டில் இடம் கொடுத்து படிக்க வைத்து வேலையும் கொடுத்து ஆதரவு கொடுத்த வில்சனை விட்டு செல்ல அவனுக்கு மனம் வரவில்லை.ஏன் அவன் அன்னை கூட அதற்கு ஒப்ப மாட்டார்!செய் நன்றிக்காக அவன் எமிலியாவின் அநியாய பேச்சைகளையும் செய்கைகளையும் சகித்துக் கொள்ள தான் வேண்டும்.
ஏமாற்றத்தாலும் நிராசையாலும் நொந்திருந்த அவன் மன
தை குளிர்விக்க அவன் வாழ்வில் பூந்தென்றல் வருமா?