அரன் 2

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 6 months ago
Messages: 207
Thread starter  

ஆருயிர் 2

 

சொக்கலிங்கம் விஸ்வநாதனும் வாலிப நண்பர்கள். இருவரும் ஒன்றாகத்தான் கல்லூரி படிப்பை முடித்தனர். சொக்கலிங்கம் அதன்பின் ஆசிரியர் பணியை தொடர.. விஸ்வநாதன் தன் அப்பா செய்துவந்த பிரிண்டிங் தொழிலை கை எடுத்தார். அதில் அவருக்கு ஓரளவு வருமானமும் பெருகியது. 

 

அவர்கள் இருந்த வீட்டை சற்று விரிவாக்கி கட்டினார் விஸ்வநாதன். அதாவது அவர்கள் அப்பா காலத்தில் இருந்த ஓட்டு வீட்டை, ஒற்றை அடுக்கு மாடி வீடாக கட்டினார். ஆனால் சொக்கலிங்கத்திற்கோ ஏற்கனவே அவர்கள் அப்பா காலத்திலேயே அதை மாடி வீடாக கட்டி இருந்தனர்.

 

சொக்கலிங்கம் மல்லிகா தம்பதியினருக்கு சுப்பிரமணி, சங்கமித்ர யாழினி என்ற இரு பிள்ளைகள்.

 

 

விசுவநாதன் கோதாவரி தம்பதியருக்கு அரவிந்த் பிரபாகரன் என்ற ஒற்றை மகன் மட்டுமே..

 

 

சுப்பிரமணியனும் அரவிந்தும் ஒரே வயது ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படித்தாலும் பெரிதாக இருவரிடமும் ஆழ்ந்த நட்பெல்லாம் கிடையாது. ஒன்றாக செல்வார்கள் வருவார்கள் அதோடு சரி. யாழினியோடு அரவிந்துக்கு அப்படி ஒரு நட்பு சிறுவயதிலிருந்தே!!

 

 

அந்த சிறு வயதில் அவனுக்கு ழகரம் சரியாக வராத காரணத்தினால் மித்ராவை சுருக்கி மித்து மித்து என்று தான் கூப்பிடுவான்.

 

 

தூங்கும் நேரம் தவிர மற்ற அனைத்து நேரங்களிலும் இவர்கள் மூவரும் ஒன்று விஸ்வநாதன் வீட்டிலோ இல்லை சொக்கலிங்கம் வீட்டில்தான் இருப்பார்கள். அதிலும் விஸ்வநாதனுக்கு வேலைப்பளு அதிகம் என்பதால் இரவு வர நேரம் ஆகிடும். அதனால் அரவிந்த் படிப்பு முழுவதும் இங்கே சொக்கலிங்கம் மேற்பார்வையில் தான்.

 

 

ஒரு வயதுக்குப் பின் பிள்ளைகள் பெரியவர் ஆனாலும் இவர்களது நட்பு என்றும் குறையாமல் நீடித்தது. சங்கமித்ர யாழினி பெரியவளானதும் அவளுக்கென்று மாடியில் இருந்த அறையை எடுத்துக் கொண்டாள். மொட்டை மாடியில் தனித்திருக்கும் அந்த அறைக்கு வீட்டு உள்ளிருந்தும் வரும்படி படிகள் அமைக்கப்பட்டு இருந்தது. பெரிதாக அப்பொழுது பயம் எல்லாம் இல்லாததால், சில சமயம் மல்லிகா திட்டுவதை கூட பொருட்படுத்தாமல் அவள் தனியாகவே அந்த அறையில் தூங்குவாள்.

 

 

அவள் அந்த அறையில் இருக்கிறாள் என்று தெரிந்தால் பக்கத்து வீட்டில் இருக்கும் அரவிந்த் அவர்கள் வீட்டு மொட்டை மாடியில் இருந்து இவர்கள் வீட்டுக்கு பலகை வைத்து தாண்டி வந்து விடுவான்.

 

 

நிலவொளியில் அமர்ந்து விடுவர் இருவரும். அவள் பள்ளி கதையிலிருந்து அவளுக்கு வந்த காதல் கடிதம் வரை அனைத்தையும் ஒன்றுவிடாமல் அரவிந்தனிடம் பகிர்ந்து கொள்வாள். அவனும் அப்படித்தான் ஆதி முதல் அந்தம் வரை அவளிடம் ஒப்பித்தால் தான் அன்றிரவு அவனுக்கு தூக்கமே வரும்!!

 

 

பள்ளிக்காலம் முதல் கல்லூரி வரை அவரது நாட்கள் இப்படியே சென்று கொண்டிருக்க.. யாழினியும் படிப்பை முடித்து ஆசிரியர் பணிக்கு சேர்ந்து விட்டாள். ஏதேனும் சொந்த தொழில் தான் செய்வேன் என்று அவனது கற்பனை கோட்டைகளை எல்லாம் நண்பியிடம் பகிர்ந்து கொள்வான் அந்த மொட்டைமாடி நிலவொளியில் அர்விந்த் பிரபாகரன்!

 

 

அதன்பின் கிராமத்தில் இருக்கும் விஸ்வநாதனின் தங்கை வசுந்தரா தனது ஒரே மகள் ஜானகியை அரவிந்துக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று நெருக்கினார் அன்னை.

 

 

"அவன் படிப்பை மட்டும்தான் முடித்திருக்கிறான். இன்னும் சொந்தமா தொழில் தொடங்கவோ இல்லை வேலைக்கு செல்லவோ இல்லாமல் ஊரை சுத்துறான். அவனுக்குன்னு ஒரு வேளை வரட்டும். அதுக்கப்புறம் கல்யாணம் பண்ணி வைக்கலாம்" என்று விசு எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் பிடிவாதமாக இருந்தார்.

 

 

இதை நேரடியாக அரவிந்தை வைத்துக்கொண்டு ஒரு நாள் கேட்க அவனோ.. "நான் வேலைக்கு போகிறேன் போகல அது இப்போ பிரச்சினை கிடையாது. நம்ம ஜானுவை போய் என்னை கல்யாணம் பண்ணிக்கச் சொல்றீங்க? நான் அப்படி எல்லாம் அவளை நினைத்து பார்த்தது கூட கிடையாது. இந்த பேச்சை இதோட விடுங்க.." என்று அவன் முடித்துவிட.. ஆனால் அவன் அத்தையோ "அந்த பக்கத்து வீட்டு சிறுக்கி பெயரென்ன யாழினியோ மாலினியோ அவள தான நினைச்சுக்கிட்டு என் பொண்ண வேண்டாம்னு சொல்ற?" என்று சண்டையிட்டார்.

 

 

"அத்தை தேவையில்லாம பேசாதீங்க! அவ என்னோட ஃப்ரெண்ட் மட்டும்தான். அதுக்குமேல அவளுக்கும் எனக்கும் எந்த உறவும் கிடையாது. இப்படி எல்லாம் அடுத்த வீட்டு பொண்ண பத்தி பேசாதீங்க!! நீங்களும் ஒரு பொண்ணு வச்சிருக்கீங்க. ஞாபகம் இருக்கட்டும்!" என்று தன் தோழியை தவறாக பேசுகிறார் என்று இவன் கண்டிப்புடன் கூற..

 

அதில் இன்னும் ரோசம் பொங்கிவிட்டது வசுந்தராவுக்கு. "அம்மாடி அம்மா!! ஒரு வார்த்தை சொல்ல விடமாட்டேங்கிறானே அந்த சிறுக்கிய பத்தி.. ஆனா அந்த பொண்ணு இவனுக்கு ஒன்னுமில்லனு சொல்றான். ஒருபுறம் அந்த பொண்ண கூட்டிட்டு சுத்துறான்.. நைட்ல மொட்டை மாடியில் விடிய விடிய பேசுறான். ஆனால் இரண்டு பேருக்குள்ளேயும் ஒண்ணுமே இல்லையாம்.. இத நாங்க நம்பனுமா? அதுக்கு எவளாவது கேண சிறுக்கி காதுல பூ வச்சு இருப்பா அவ கிட்ட போய் சொல்லு.. இந்த காலத்தில் உள்ள பிள்ளைங்க எல்லாம் நல்ல விவரமா தான் இருக்கு. எல்லாத்தையும் செஞ்சுட்டு ஒன்னும் இல்ல.. ஒன்னும் இல்லன்னு.. சொல்லி கிட்டு திரியுதுங்க! என்னத்த ஆத்தா அப்பன் வளர்த்து வச்சிருக்காகளோ அந்த பொண்ண" என்று இன்னும் வாய்க்கு வந்தபடியெல்லாம் அவர் பேச பொங்கி விட்டான் அரவிந்த்.

 

 

ஆனால் அவன் பேச வாய் எடுக்க முன் இம்முறை விசுவநாதன் முந்திக் கொண்டார். "இங்கே பாரு வசுந்திரா!! உன் பொண்ணுக்கு வேற பையனை பாரு! கண்டிப்பா நானே முன்னிருந்து கல்யாணத்தை முடிச்சி வைக்கிறேன். அவன்தான் வேண்டாம்னு சொல்றான். எதுக்கு நீ தேவையில்லாம பக்கத்து விட்டுப் பொண்ணை எல்லாம் இந்த பிரச்சினையில் இழுக்கிற" என்று விஸ்வநாதனும் பேசிவிட...

 

 

நடு வீட்டில் உட்கார்ந்து ஒப்பாரி வைக்க ஆரம்பித்தார் வசுந்தரா. "எங்க அண்ணனா பேசுறது?? அப்பா அம்மா இறந்தவுடன் எனக்கு அப்பாவா தானே இருந்தாரு.. இன்னைக்கு ஏதோ ஒரு சிறுக்கிக்கு வக்காலத்து வாங்கிட்டு வந்து என்னை இப்படி பேசுறாரே.. அந்தச் சீருக்கெட்ட சிறுக்கி இந்த வீட்ல வந்து ஒக்காந்தா நாங்க எல்லாம் இது வீட்டு பக்கமே காலை வைக்க முடியாது போலவே... எனக்கு தாய்வீட்டு சீர் போச்சு" என்று முந்தானையால் மூக்கை உறிஞ்சி உறிஞ்சி அவர் விடாமல் பேசிக் கொண்டிருந்தார்.

 

 

கோதாவரி யாருக்கு சமாதானம் சொல்வது என்று புரியாமல் கையை பிசைந்து கொண்டு நின்றிருந்தார்.

 

 

அரவிந்த் கோபமாக வீட்டை விட்டு வெளியேறி விட்டான். ஆனால் விஸ்வநாதனுக்கு சொந்த தங்கை ஆயிற்றே!! அதனால் கோபம் கொள்ளவும் முடியவில்லை.. அவர் அவதூறாக பேசுபவற்றைக் கேட்டுக் கொண்டு சும்மாயிருக்கவும் முடியவில்லை.

 

 

"வசு இங்கே பாரு!! ஜானுக்கு நாமளே ஒரு நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணி வைப்போம். சரியா?" என்று அவர் சமாதானம் செய்ய, வீறுகொண்டு எழுந்த வசுந்தராவும் "நீங்க என்ன என் பொண்ணுக்கு மாப்பிள்ளை பாக்குறது? ஏதோ அண்ண பையனுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்தா சொத்துக்கு சொத்து சேர்ந்து என் பொண்ணும் நல்லா இருப்பா.. சொந்தம் விட்டு போகாம இருக்கும்னு வந்தா.. ரொம்ப தான் உங்க பையன் அலட்டிக்கிறான். இத்தனைக்கும் இன்னும் ஒத்த ரூபாய் கூட சம்பாதிக்க ஆரம்பிக்கல" என்று அவரது மறு முகம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர விஸ்வநாதனுக்கு ச்சீ என்று ஆனது.

 

 

"என் வீட்டில் நின்று என் புள்ளையை பத்தி நீ தப்பு தப்பா பேசுவியா? இதோட உனக்கும் எனக்கும் ஒன்னும் இல்ல? நீ கிளம்பு.." என்று அவர் பேச்சு தாங்க முடியாமல் விஸ்வநாதன் கூறிவிட.. 

 

"என்னது உன் வீடா? இது அப்பா சம்பாதித்தது எனக்கும் இதுல உரிமை இருக்கு" என்றவர் அதன்பின் வீட்டை விட்டு வெளியேறிய அடுத்த இரண்டாவது நாள் சொத்தில் பங்கு கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

 

 

இவர்களும் சும்மா இராமல் அவருக்கு போட்டதாக சீர் செனத்தி கணக்கு அனைத்தையும் கூறி.. தன்னுடைய சுய சம்பாத்தியத்தில் தான் ஓட்டு வீட்டை இவ்வளவு புதுப்பித்து கட்டி இருக்கிறேன் என்று எதிர்த்து வழக்கு தொடுத்தார். அந்த வழக்கு இன்னும் முடியாமல் வாய்தா வாய்தா வாங்கிக் கொண்டிருக்கிறது மூன்று ஆண்டுகளுக்கு மேல்!!

 

 

வழக்கு நடந்து கொண்டிருப்பதால் அந்த வீட்டை அவர்கள் காலி செய்து சற்று தள்ளி இருக்கும் வேறு ஒரு வீட்டிற்கு வாடகைக்கு வந்தனர்.

 

ஆனாலும் பழைய வீட்டின் அத்தனை வழிகளும் அரவிந்துக்கு அத்துப்படி!! அதன் மூலமாகத்தான் நேற்று அந்த வீட்டிலிருந்து தாண்டி யாழினியை பார்க்க வந்தது.

 

இங்கே விசுவநாதன் அவனை கேள்வியால் போட்டு தொலைத்துக் கொண்டிருக்க.. எதையும் கண்டுகொள்ளாமல் அவன் பாட்டுக்கு தன் அறையில் புகுந்து கொண்டான்.

 

 

"பார்த்தியா யாழினி? பார்த்தியா? இந்த பய செய்யுறதை? இப்படியே சுத்திட்டு இருந்தானா இவன் வாழ்க்கை என்னாகுறது? ஏற்கனவே வீடு வாடகை வீடு!! இதுல கேஸ் நடத்த வேற மாச மாசம் ஒரு அமௌன்ட் அந்த வக்கீலுக்கு பீஸா தண்டத்துக்கு கொடுக்க வேண்டியது இருக்கு. இவன் கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் சுத்துனா நான் என்ன பண்ணுவேன்?" என்று வருத்தமான குரலில் பேச.. 

 

யாருக்கு பரிந்து பேசுவது என்று தவித்த யாழினியை கோதாவரி வந்து காப்பாற்றினார்.

 

 

"நீ வா யாழினி அப்பாவுக்கும் மகனுக்கும் வேற பொழப்பே கிடையாது! இடையில் போனா நம்ப மண்டை தான் காயும். ரொம்ப நாள் கழித்து வந்த பிறகு புள்ளைக்கு ஒரு டீ காபி கொடுக்க விடுராரா?" என்று உள்ளே அவளை அழைத்து சென்றவர், போகும்போது வீட்டில் உள்ளவர்களைப் பற்றி குசலம் விசாரித்துக் கொண்டே..

 

ஒருவழியாக விஸ்வநாதனை சமாளித்து கோதாவரியில் உபசரிப்பை ஏற்றுக் கொண்டு அரவிந்தை தன் கூடவே காப்பாற்றி வெளியே இழுத்து வந்து விட்டாள் யாழினி.

 

 

"ஒழுங்கா ஊர் சுத்தாம.. ஊர்வம்பு வளர்க்காம.. நேரத்தோடு வீட்டுக்கு போடா இன்னைக்காவது.. எனக்கு ஏற்கனவே ஸ்கூலுக்கு டைம் ஆயிற்று" என்று அவசர அவசரமாக தான் வேலை பார்க்கும் பள்ளிக்கு சென்றாள்.

 

 

இவள் பள்ளிக்குள் நுழைந்த போது பள்ளியில் அனைவர் முகத்திலும் ஒரு பரபரப்பும் டென்ஷனும்!! "ஏன் இன்னிக்கு யாராவது இன்ஸ்பெக்ஷனுக்கு வராங்களா என்ன?" என்று அருகில் வந்த ஆசிரியரிடம் இவள் கேட்க..

 

 

"அதெல்லாம் இல்ல யாழினி டீச்சர்! இன்னைக்கு நம்ம ஸ்கூல்ல ஓட டிஜிட்டல் பார்டனர் அதாவது இந்த ஸ்மார்ட் கிளாஸ் எடுக்கிறோம் இல்லையா?? அதுக்கான பார்ட்னர் இங்கே வர போறாராம். இன்னும் ஸ்கூல்ல நிறைய மாற்றங்கள் வரும்னு பேசுகிறாங்க. அதுதான் கரஸ்பாண்டன்ட்டும் பிரின்ஸ்பலும் ஒரே டென்ஷனா இருக்காங்க" என்று அவர் விவரம் கொடுத்துவிட்டு சென்றார்.

 

 

"யார் வந்து என்ன செய்தால் நமக்கு என்ன? நம் பணி கடமையாற்றுவதே!!" என்று எண்ணிக்கொண்டு ஆசிரியர்கள் அறைக்கு சென்றாள் யாழினி.

 

 

வழக்கம் போல மணியடிக்க இவள் தனது முதல் வகுப்பை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம் நடத்திக் கொண்டிருக்கும்போது பியூன் அவளை அழைத்தான்.

 

 

"இருங்க மணி அண்ணே! இன்னும் ஒரு சம் தான் இருக்கு. முடிச்சிட்டு வரேன்!" அவள் கூற..

 

"எம்மா வாம்மா.. பிரின்ஸி.. கரெஸூ எல்லாம் உன்னைய இத்துகின்னு வர சொன்னாங்க. லேட்டா போனா அந்த சுடுமூஞ்சி எரிஞ்சி விழும்மா யாலினி" என்று அவள் பெயரையும் சேர்த்து கொலை செய்த மணியை பார்த்து, 

 

"அய்யோ அண்ணே! உங்களுக்கு என் பேரு வாயில வரலைன்னா.. தயவுசெய்து மித்ரான்னு கூப்பிடுங்க ணே. இப்படி எல்லாம் கூப்பிட்டு என் பெயரை கொலை செய்யாதீங்க ணே.. ஒரு அஞ்சு நிமிஷம் தான்! நீங்க முன்னாடி ஸ்லோவா போய்க்கிட்டே இருங்க. இந்த சம் முடிச்சிட்டு பாஸ்ட்டா ஓடி வந்து உங்க கூட ஜாயின் பண்ணிக்கிறேன். சரியா?" என்று அவள் அவனிடம் பேசிக்கொண்டே அந்த கணக்கை மாணவர்களுக்கு நடத்திக் கொண்டிருந்தாள்.

 

 

எவ்வளவு மெதுவாக சென்றாலும் ஐந்து நிமிடத்திற்குள் கரஸ்பாண்டன்ட் அறை வந்துவிட.. மேலும் ஒரு நிமிடம் தாமதித்தவன், அதற்கு மேல் நின்றால் இன்று அவனுக்கு பொழுது நன்றாக இருக்காது என்று புரிந்து, மெல்ல கதவை தட்டி உள்ளே சென்றான்.

 

"சார் அந்த பொண்ணு இன்னும் கணக்கு நடத்திகிட்டு இருக்கு. அதை முடிச்சிட்டு சுருக்கா வந்துரேன்னு சொன்னிச்சு" என்று பவ்யமாக கூறி விட்டு வெளியே வந்து நின்று கொண்டான்.

 

கரஸ்பாண்டன்டுக்கும் பிரின்சிபலுக்கும் யாழினி பற்றி தெரியும். ஆனால் புதிதாக வந்திருக்கும் அந்த நெடியவனுக்கு தெரியாதே?? அவனோ கோபத்தை அடக்கி விழிகளில் அதை பறைசாற்றினான்.

 

 

அடுத்த இரண்டாவது நிமிடம் அனுமதி கேட்டுக் கொண்டு உள்ளே நுழைந்தாள் யாழினி!!

 

 

கரஸ்பாண்டன்ட் பிரின்சிபால் இருவருக்கும் வணக்கம் வைத்துவிட்டு மெல்ல திரும்பி, வந்திருக்கும் புதியவனை பார்த்தாள். இவனுக்கு வணக்கம் சொல்வதா? வேண்டாமா? என்று சிறிய குழப்பம்! ஆனாலும் பொதுவாக தலையசைத்து வைத்தாள்.

 

"இதுதான் நீங்க மேனேஜ்மென்ட்க்கும் உங்க சீனியருக்கும் கொடுக்குற மரியாதையா? உங்களை கூப்பிட்டு அனுப்பி கிட்டதிட்ட பதினைந்து நிமிடங்களுக்கு மேல ஆச்சு!! இப்பதான் ஆடி அசைந்து வந்து சேர்ந்திருக்கிறிங்க?"

என்றான் கூர் வார்த்தைகளால்.. 

 

அவன் வார்த்தைகளும்.. அவன் தோரணையும்.. அவன் விழி பார்வையும் சில்லென்று பயம் முதுகுத்தண்டில் உறைந்தது யாழினிக்கு. அவனின் அந்த கூர் பார்வையைத் தாங்க முடியாமல் சட்டென்று குனிந்து கொண்டாள்.

 

ஆனாலும் நான் என்ன தவறு செய்தேன் என்று நிமிர்வு வந்து ஒட்டிக்கொள்ள நிமிர்ந்து அவனை நேருக்கு நேர் பார்த்தாள்.

 

 

அவனும் தாடையை தடவியவாறு அவளை தான் ஆராய்ந்தான் அணுஅணுவாக!!

 

 

கண்களில் கூர்மை..

உடல்மொழியில் நிமிர்வு.. 

தான் தவறு செய்யவில்லை என்ற துணிவு.. யாழினியை பார்த்தவுடன் ஒரு சுவாரசியம் அவனுக்குள்.

 

 

"நான் ஹாண்டில் பண்ற சப்ஜெக்ட் மேக்ஸ்!! ஒரு சம் நான் ஸ்டுடென்ட்ஸூக்கு சொல்லிக் கொடுக்கும்போது பாதியிலேயே விட்டு வந்தா, அந்த சம்குள்ள திரும்பவும் அவங்கள நான் கொண்டு வருவதற்கு எனக்கு இரண்டு மடங்கு டைம் ஆகும். அதை விட அவங்களோட கான்சென்ட்ரேசனை கொண்டு வருவது இன்னும் கஷ்டம்!! அதுக்கு நான் பத்து நிமிஷம் உங்கள லேட்டா மீட் பண்றதில்ல தப்பு இல்லையே! நம்ம எல்லாரோட உழைப்பும் ஸ்டூடண்ட்ஸோட கிரேடுக்கு தானே!!" என்றவளை மனதுக்குள் மெச்சினாலும் அதை முகத்தில் காட்டாமல் அமைதியாக அவளை பார்த்தான்.

 

 

"சார் யாழினி மேடமுக்கு எப்பவும் ஸ்கூல் அண்ட் ஸ்டுடென்ட்ஸ் மேல டெடிகேஷன் அதிகம்" என்று பிரின்ஸ்பல் அவளுக்கு சாதகமாக பேச.. சட்டென்று கையை உயர்த்தினான். அவ்வளவுதான் கப்பென்று வாயை மூடிக்கொண்டார் பிரின்ஸிபல்.

 

என்னது பிரின்ஸ்பல் வாயை மூடிவிட்டாரா? உலக அதிசயம் தான்!!

 

'எப்பொழுதும் எதிராளிக்கு தன்னிலை விளக்கமோ.. பேசவோ இடம் கொடுக்காது தன்னுடைய கருத்தை மட்டுமே திணிக்கும் பிரின்ஸ்பல் இன்று அடங்கி ஒடுங்கி பவ்வியமாக நிற்பதை பார்த்தவளுக்கு மனதில் ஒரு சிறு சந்தோஷம்!! அதேநேரம் இவரையே இப்படி அடக்கி ஒடுக்கி வைத்து இருக்கிறான் என்றால் இவனுடைய பதவி என்ன? யார் இவன்? என்று குழப்பத்தை தத்தெடுத்தது யாழினியின் மதிமுகம்!! 

 

ஒருவேளை இன்னைக்கு காலையில் பேசிக்கொண்டது போல இவன் அந்த டிஜிட்டல் ஸ்கூலின் பார்ட்னரோ? இவனிடமா வாய் அடித்தோம்? என்று சற்று உள்ளுக்குள் பயந்தாலும், நாம் உண்மையை தானே பேசினோம்! என்று அடுத்த நிமிடம் துணிவும் வந்தது.

 

 

அகத்தின் அழகு அவள் முகத்தில் கண்ணாடி போல பிரதிபலித்தது அவளின் உணர்வுகள் அத்தனையும்!!

 

 

பிரின்ஸ்பாலின் நடவடிக்கையிலிருந்து தன்னை யாரென்று கண்டுகொண்டது வரை அவளது முகத்தை தான் கூர்ந்து அவதானித்துக் கொண்டிருந்தான் இவன்!

 

 

முதலில் தெரிந்த சிறு சந்தோஷம், பின் குழப்பம், பயம் அதன் பின் வந்த துணிவு நிமிர்வு அதையெல்லாம் விட.. 'என்னை என்ன செய்து விடுவாய் நீ?' என்று அவள் கண்கள் கேட்ட அந்தத் திமிர் அனைத்தையுமே பிடித்தது அவனுக்கு!!

 

 

மெல்ல இருபக்கமும் தலையாட்டி புன்னகைத்தவாறு "அட் லாஸ்ட்! நான் யாருன்னு உங்களுக்கு தெரிஞ்சிடுச்சு போலயே மிஸ் யாழினி!!" என்று அவன் கூற..

 

அதற்கு கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் "வெல்கம் டூ அவர் ஸ்கூல் சார்!!" என்று அவனை வரவேற்றாள்.

 

'நீ பெரிய ஆள் என்பதற்காக உனக்கு கூழை கும்பிடு எல்லாம் கும்பிட மாட்டேன்!' என்று அவள் கண்களில் தெரிந்த அந்த நேர்மை அவனுக்கு இன்னும் சுவாரசியத்தை கொடுத்தது அவள் மீது!!

 

"இன்ட்ரஸ்ட்டிங்!!" என்றான் அவளை பார்த்து.

 

 

"வெல்!! உங்களை இங்க கூப்பிட காரணம் இதுவரைக்கும் ஸ்மார்ட் ஸ்கூல் நம்ம ஸ்கூல் அளவில் மட்டும்தான் இருந்தது. அதை இப்போ கொஞ்சம் விரிவுபடுத்தி மொபைல் மூலம் உலகுக்கே கொண்டு போலாம்னு இருக்கோம். தட் விருட்சம் டிஜிட்டல் ஸ்கூல்ஸ் நெக்ஸ்ட் ஸ்டெப் டூ த க்ளோபல்" என்றான் அதிரதன்.. அதிரதன் வைத்யா!!

 

 

"முதல்ல நம்ம ஸ்கூல் டீச்சர்ஸ் வச்சு டென்த் அண்ட் டுவல்த் மேக்ஸ்ல ட்ரெய்லர் ஒன்று பார்க்க போறோம். அதுக்கு அப்புறம் டேரக்ட்டா லான்சிங் தான். டென்துக்கு உங்கள தான் நான் யூஸ் பண்ண இருக்கேன்" என்றான்.

 

 

அவன் சொன்ன அந்த யூஸ்ஸில் சற்று அழுத்தம் இருந்ததோ என்று பெண்ணவள் அவனை பார்க்க.. அவனின் பார்வை மறைத்து கூலர்ஸ் அணிந்திருந்தான்.

 

 

அன்று மாலைவரை அதிரதன் அங்கே இருந்து சசிதரனை பன்னிரண்டாம் வகுப்புக்கும், பத்துக்கு யாழினியையும் வைத்து சில கணக்குகளை அக்கு வேறு ஆணி வேறாக சந்தேகம் கேட்டு துளைத்து விட்டான். "இரண்டு நாளைக்கு அப்புறம் இதையெல்லாம் வீடியோவாக எடுக்க வேண்டும்" என்று சொல்லியிருந்தான்.

 

 

சொன்னவன் அவன் களைத்து போனானோ? இல்லையோ? அவன் கேட்க கேட்க ஒவ்வொன்றையும் இவள் விளக்கி கூறி கூறி சோர்ந்து போனாள். இடையே அரவிந்துக்கு ஒரு மெசேஜ் தட்டி விட்டு வந்து அழைத்துப் போகச் சொன்னாள்.

 

 

என்றைக்காவது அதிகநேரம் பாடம் எடுத்

தால் இவ்வாறு நடப்பது தான். அதனால் அரவிந்தும் வந்து அவளுக்காக காத்திருக்க.. யாழினி வந்தவுடன், அக்கறையுடன் அவளை அழைத்து சென்றவனை வெறித்து பார்த்தான் அதிரதன்!!

 

ஆரூயிர் யார் வசமோ??


   
Azhagi reacted
Quote
(@gowri)
Member
Joined: 6 months ago
Messages: 48
 

பொறாமையா da அதி 😂😂😂😂😂


   
ReplyQuote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top