அத்தியாயம் 26
"நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல ருத்ரன்!!" என்று தன்னை நோக்கி ஆங்காரமாக கேட்ட துர்காவை கண்டவன் அப்படி எல்லாம் ஒன்று பயந்து விடவில்லை!! கோபம் கொள்ளவில்லை!!
நிதானமாக வெகு நிதானமாக தான் இருந்தான். காரணம் அவன் கண் வட்டத்திற்குள் அமர்ந்திருந்த அவர்கள் தான்!! மகாதேவனும் ஹர்ஷத்தும் தான்!!
ஆனால் மகதி அதிர்ச்சியோடு அன்னையை பார்த்தாள். சட்டென்று திரும்பி தந்தையையும் ஹர்ஷத்தையும் பார்க்க... இது அவர்கள் வேலைதான் என்று புரிந்தது அவளுக்கு.
மெதுவாக அவர் அணைப்பில் இருந்த மகதியின் புறம் தன் கையை அவன் நீட்ட… அவளும் அந்த சோபையிலும் புன்னகை மிளிர அவனது கைத்தலம் பற்ற... அந்த ஒற்றை நிகழ்வே கூறியது இருவருக்கும் உள்ள அந்நியோனியத்தையும்.. அன்பையும்!! அவர்களிடையேயான பிடித்தத்தையும்!!
ஏற்கனவே மகளின் மனதை அறிந்து தான் வைத்திருந்தாலும் 'வலுக்கட்டாயமாக தாலி கட்டி விட்டான்' என்றதில் சற்றே எமோஷனல் ஆகிவிட்டார் துர்கா. இதை கண்டவுடன் மெல்ல மகளை விட்டு தள்ளி வந்தவர் கணவனை தான் முறைத்தார்.
மகாதேவன் ருத்ரன் தாலி கட்டியதுமே எதிர் கொண்டு சண்டைக்கு போக ஹர்ஷத் தான் "இதை நம்ம சட்ட ரீதியாக ஹாண்டில் பண்ணிக்கலாம் அங்கிள். அவன் மேல கம்ப்ளைன்ட் கொடுத்தாலே அவனுக்கு அது பிளாக் மார்க் ஆயிடும். நம்ம அப்படி போவோம்.. நம்ம மிரட்டலுக்கெல்லாம் அவன் பயப்படுற மாதிரி தெரியல… அதுக்கு நீங்க மட்டும் போனா பத்தாது. ஆன்ட்டியும் முக்கியம்!! அதனால ஆன்ட்டி கிட்ட சொல்லி கூட்டிட்டு போகலாம்" என்று அறிவுறுத்தி அழைத்து வந்தவனே இவன் தான்!! தங்கள் குட்டு வெளிப்பட்டு விட இருவரும் கீழ்கண்களால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தனர்.
ருத்ரன் இருவரையும் பார்த்தவாறு சற்று தள்ளி இருந்த நீள் இருக்கையில் அமர்ந்தான் மனைவியோடு… அதிலும் அவ்வளவு கெத்தாக!! கைவளைவில் மனைவியை வைத்துக் கொண்டு அவன் அமர்ந்திருந்த விதமே 'உங்களால் முடிந்தால் எங்களைப் பிரித்துப் பார்!' என்று சவால் விட்டது அவர்களுக்கு!!
பெருமூச்சு ஒன்றை விட்ட துர்கா மகளை நோக்கி "என்ன நடந்தது மகதி?" என்று கேட்க மகாதேவன் விலுக்கென்று நிமிர்ந்து மனைவியை கண்களால் எரித்தார்.
'ஐந்து மணி நேரமாக ஒருவன் அங்கு என்ன நடந்தது என்று கூற காத்திருக்க.. இங்கு மகளிடம் போய் கேட்கிறாளே? அப்போ நான் என்ன பொய்யா சொல்லி விடுவேன்? என் மேல் நம்பிக்கை இல்லையா?' என்று குற்றம் சாட்டியது அவரது கண்கள்!! 'ஆனால் சற்றுமுன் ஹர்ஷத் கூறியதற்கு நீ அமைதியாக தானே இருந்தாய்!! அது பொய் இல்லையா?' என்று இடித்துரைத்தது அவரது மனம்!!
அன்னை கேட்டதும் கலக்கத்துடன் ருத்ரனை ஒரு முறை பார்க்க அவனும் கண்களை மூடி ஆறுதல் கூறினான். அதில் பெரும் நம்பிக்கை பெற்ற மகதி, திரும்பி அன்னையை பார்த்தாள் கலங்கிய விழிகளோடு.. ஆனால் அதே நேரம் அவளது கண்கள் தந்தை மீது வெறுப்பை உமிழ... துர்காவிற்கோ மனம் திடுக்கிட்டது.
'எத்தனை செல்லம் கொடுத்து லிட்டில் ப்ரின்ஸசாக வளர்த்த மகள், இப்படி ஒரே நாளில் வெறுக்கும் பார்வையை பார்க்க வைத்து விட்டாரே இந்த மனிதன்? அப்படி என்ன செய்திருப்பார்?' என்று தான் நினைத்தார்!!
ஏனென்றால் ஆரம்பம் முதலில் ஹர்ஷத் அத்தனை குறை கூறியும் அவரால் ருத்ரனை தப்பாகவே காண முடியவில்லை!! அதிலும் இவர்கள் இரண்டு பேரும் எதுவோ செய்து இருக்கிறார்கள் என்று மனம் கணிக்க.. மகளின் அருகில் சென்று அவளது கையை ஆதரவாக பற்றி "சொல்லு டா!!" என்றார்.
இவ்வளவு நாட்களாக மகளை சரியாக கவனிக்கவில்லை.. வளர்க்க முடியவில்லை... அவள் பிஞ்சு வயதில் கூறும் கதைகளை கேட்க முடியவில்லை.. என்று ஒரு குற்ற உணர்வு இருந்தது துர்காவிற்குள். அதனால் தான் மகாதேவனிடம் எதுவும் கேட்டுக் கொள்ளாமல் மகளின் வாயிலாக அறிந்து கொள்ளலாம் என்று காத்திருந்தார்.
அவள் கண்கள் வழியே அன்றைய காலை நடந்த நிகழ்வுகள் விரிய தொடங்கின…
முதல் நாள் இரவு ருத்ரன் பார்க்க வேண்டும் என்று ஏக்கத்துடன் கூறியதும், காதல் கொண்ட காரிகையை கர்வம் கொள்ளச் செய்தது. அந்த கர்வம் அவன் கொண்ட அதீத காதலினால்!!
அதனால் மறுநாள் தானே சென்று அவனைப் பார்ப்பது என்று முடிவு எடுத்தவள், அவன் நினைவிலேயே புடவை உடுத்தி வேகமாக துள்ளலாக கீழிறங்கி சென்றவள், டைனிங் டேபிளில் அமர்ந்திருந்த தந்தையை கவனிக்கவில்லை. காதல் கண்களை மட்டும் அல்ல கருத்தையும் மறைத்திருந்தது!! கூடவே இந்நேரத்திற்கு எல்லாம் இருவரும் மருத்துவமனைக்கு சென்று விட்டு இருப்பார்கள் என்ற யதார்த்தம்!!
புதிதாக கட்டிய புடவையில் முளைத்த நாணம்.. அவன் காதல் கொடுத்த வெட்கச் சிரிப்பு என்று சிறகு முளைத்த தேவதையாய் பறந்து சென்றாள் காதலனை காண...
ராமஜெயத்தை கோயிலுக்கு அனுப்பி வைத்த கையோடு எஸ்பி இடம் பேசி விட்டு வந்து ருத்ரன், கால் முளைத்த தேவதையாய் தன் வீட்டு ஹாலில் நின்று துருத்துரு விழிகளால்.. திருத்திரு என விழித்திக் கொண்டிருந்த அவன் தேவதை பெண்ணை கண்டு ஆனந்த அதிர்ச்சியடைந்தான்.
அவளை பார்க்க வேண்டும் என்று அத்தனை ஏக்கத்தோடு நேற்று கேட்டதற்கு... இன்று காலையிலேயே அவளின் விஜயம்!! அதுவும் அத்துணை அழகாக அவனுக்கென்று பிரத்தியேகமான அலங்காரத்தோடு வந்திருந்தவளை கண்ட ஆணவனின் மனதுக்குள் மெல்லிய சாரல்… காதல் சாரல்!!
காதலை.. அவர்கள் விழிகளாலும் சற்றே இதழ்களாலும் பேசிக் கொண்டிருந்த தருணத்தில் தான் வந்து சேர்ந்தனர் ஹர்ஷத்தும் மகாதேவனும்!!
அவர்களை விசாரித்த வெளியிலிருந்து காவல் அதிகாரியிடம் தன்னை மகதியின் தந்தை டாக்டர் மகாதேவன் என்றே அறிமுகப்படுத்திக் கொள்ள.. ஏற்கனவே ஆதினியை அவர்கள் மருத்துவமனையில் வைத்திருந்தது, பின் அடிக்கடி செக்கப் அழைத்து செல்வது என்று தெரிந்த அந்த காவல் அதிகாரியும் எவ்வித தயக்கமுமின்றி அவர்களை உள்ளே அனுப்பி வைத்தார்.
தான் மண்ணென்று நினைத்தவன் இன்று மலை என்ன வளர்ந்து, அவனை பார்க்க செல்வதற்கு கூட ஒருவரிடம் அனுமதி பெற்று செல்ல வேண்டுமா! என்று கடுப்பின் உச்சியில் இருந்தான் ஹர்ஷத்!! கல்லூரியில் காலத்தில் ருத்ரன் மேல் அவன் கொண்ட வன்மம் இந்நாள் வரை தீரவில்லை!!
"அங்கிள்.. நீங்க போய் கேட்கிற ஒவ்வொரு கேள்வியிலும் அவமானம் தாங்காமல் அந்த ருத்ரன் நாக்க புடுங்கிட்டு சாவுற மாதிரி இருக்கணும். கலெக்டர் என்று இருந்தால் என்ன வேணாலும் செய்யலாமா என்ன? அந்தப் பதவிக்குள்ள மரியாதையை அவன் அழிச்சிட்டான்!! அதனால அவனை பத்தி பயப்படாம ஒரு தந்தையாய் மகதியை அவனிடமிருந்து காப்பது உங்கள் கடமை!! உங்க பேச்சில அவனே வெட்கப்பட்டு மகதி கிட்ட இருந்து பிரிந்து போகணும்" என்று நன்றாக அவருக்கு சாவி கொடுத்து அனுப்பி வைத்தான் ஹர்ஷத்.
ஹர்ஷத் ஆடும் பொம்மலாட்டத்தில் அவனின் கை பாவையாய் தான் மாறியதை அறியாமல்.. அவன் கொடுத்த சாவியின் வீரியம் குறையாமல்.. ருத்ரன் வீட்டு வாயிலில் நின்று ஆட தொடங்கினார் மகாதேவன் தன் ஆட்டத்தை!!
உள்ளே நுழையவும் விளையாட்டுக்காக மகதியை துரத்துக் கொண்டு கலெக்டர் வரவும் சரியாக இருக்க…
"சபாஷ்!! வெளியே கலெக்டர் நல்லவனு வேஷத்தை போடுறது.. உள்ளுக்குள்ள இப்படித்தான் துச்சாதன் வேலையை பாக்குறியா?" என்று ஆரம்பித்தவரின் கடினமான வார்த்தைகளில் தேங்கி நின்ற இருவரும் அவரிடம் புரிய வைக்க முயல… அவரோ அதை எதையும் கேட்கும் நிலையில் இல்லை!!
"இல்ல.. தெரியாமத்தான் கேட்கிறேன்? ஏற்கனவே இப்படித்தானே ஒரு பெண்ணோட வாழ்க்கையில விளையாண்ட... அதுவும் பிரண்டுனு பார்க்காமல் அவ கூட படுத்து பிள்ளை பெத்து… ச்சீ…" என்று அருவருப்பில் முகம் சுளித்த மகாதேவனை, அடித்து நொறுக்கும் வேகம் வந்தாலும், மகதியின் கெஞ்சல் பார்வைக்காக தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு இறுக்கமான முகத்தோடு நின்றான் ருத்ரன்.
அவனின் அமைதியே அவருக்கு ஏதுவாக போக… "ஊர்ல வேற பொண்ணுங்களே கிடைக்கலையா உன் அரிப்பை அடக்க? என் பொண்ணு தான் கிடைத்தாளா?" என்று தன் பெண்ணையும் சேர்த்து தான் அவமானப் படுத்துகிறோம் என்று எண்ணமே இல்லாமல் பேசிக் கொண்டே சென்றார். அவரின் அவ்வார்த்தைகளில் புழுவாய் துடித்து வலித்த மனதை இரு கைகளால் பற்றி கொண்டு வலி மிகுந்த பார்வையை பார்த்தாள் தந்தையை மகதி!! தன் தந்தையா இப்படி பேசுவது என்று!!
அவரின் பார்வை மகதியின் பக்கம் செல்லவே இல்லை!! சென்றிருந்தால் மகளின் கண்களில் தெரிந்த வலியை புரிந்து கொண்டு தன் நாவை அடக்கி நிதானித்து இருப்பாரோ என்னவோ? ஆனால் முழுக்க முழுக்க காரில் வரும் போது ஹர்ஷத் பலமாக ஏற்று விட்டிருக்க... அவன் வார்த்தைகளுக்கு இவர் வாய் அசைத்தார் உண்மையில்!!
"என் மகளுக்கு ஏற்கனவே நாங்கள் மாப்பிள்ளை பார்த்து விட்டோம்!! அதுவும் எப்படிப்பட்ட மாப்பிள்ளை தெரியுமா? உன்னதமான மாப்பிள்ளை!! உன்னை போல ஊரில் உள்ளவன் பொண்டாட்டியிடம் மேய மாட்டார். அடுத்தவன் பொண்டாட்டிக்கு பிள்ளை கொடுக்க மாட்டார்…." என்று ஹர்ஷத்தை உயர்த்தி பேசுவதாக நினைத்துக்கொண்டு ஒவ்வொரு வார்த்தைகளிலும் ருத்ரனை குத்தி கிழித்தார் மகாதேவன். இவை அனைத்தையும் வாசலுக்கு வெளியே நின்று கொண்டு சந்தோசமாக காது குளிர கேட்டு கண்கள் மூடி ஆனந்தத்தில் திளைத்தான் ஹர்ஷத்!!
"இப்போ இவளையும் அந்த நந்தினி மாதிரி…" என்று அவர் சொல்ல வரும் முன்... இரண்டு ஏட்டில் அவரை நெருங்கியவன் "இன்னும் ஒரு வார்த்தை... ஒரு வார்த்தை நந்தினியை பத்தி பேசக்கூடாது நீங்க?என்ன தெரியும் உங்களுக்கு அவளை பற்றி? என்னைப் பற்றி? கண்டவன் பேசினால் அப்படியே நம்பி விடுவீங்களா? கொன்னுறுவேன்!!" என்று தன் முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்று அவரைப் பார்த்து பேச.. அவனின் அந்த அசாத்திய உயரமும் ஆளுமையும் அவருக்கு திகில் ஊற்ற.. பயத்தில் எச்சில் விழுங்கிக் கொண்டார் மகாதேவன்.
'பில்டிங் ஸ்டாக் பேஸ்மென்ட் வீக்!' என்பது போல வெளியே காட்டிக் கொள்ளாதவர் "அப்புறம் நேத்தி என்னத்துக்குடா என் மகளிடம் அப்படி நடந்து கொண்ட கார்ல? இன்னைக்கு காலையிலேயே அவ உன்ன தேடி வந்திருக்கான்னா.. என்ன அர்த்தம்? அவ உன் பொண்டாட்டி கிடையாது.. பின்ன என்ன உறவு இருவருக்கும்?" என்று ருத்ரனை மட்டம் தட்டுவதாக நினைத்துக்கொண்டு மகளின் கேரக்டரை தான் குழி தோண்டி புதைத்துக் கொண்டே இருந்தார்.
"ப்பா…!!" என்று கண்களில் கண்ணீரை தேக்கி அடிபட்ட பார்வை பார்த்த மகளை அவர் பார்க்கவே இல்லை. முழு கவனமும் ருத்ரன் மேல தான்!!
ஆனால் காதல் கொண்ட ஆண்மகன் அவனின் காதலுக்கும் அவனின் காதலிக்கும் அவதூறான பேச்சுகள் கிடைப்பதை நினைத்து வெறி கொண்டவன், 'எத்தனை விளக்கம் கொடுத்தாலும் இந்த முட்டா பீசுக்கு கண்டிப்பாக புரியப்போவதில்லை! எதுக்கு புரிய வைத்து நேரத்தை கடத்திக்கொண்டு?' என்று நினைத்தவன் விடுவிடு என்று அவர்கள் வீட்டின் பூஜை அறைக்கு சென்றான் வெகு ஆண்டுகள் கழித்து..
சொர்ணமா வந்ததிலிருந்து அவர்தான் இங்கே பூஜை செய்வது. ராமஜெயமும் அவ்வப்போது எட்டி பார்த்து விட்டு வருவார். மகளுக்கும் அந்த பழக்கத்தை சொர்ணமா மூலம் பழக்கி விட்டிருந்தவன் இவன் கிஞ்சிற்றும் அந்த பக்கம் எட்டிப் பார்க்க மாட்டான். அங்கு பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்த அவனது அன்னையின் தாலியை எடுத்து மஞ்சள் கயிற்றில் கோர்த்தவன், வெளியே வந்து மகாதேவனை பார்த்து "அவள் என் வப்பாட்டி இல்ல… பொண்டாட்டி!!" என்றவன் மூன்று முடிச்சு இட்டு தன் சரிபாதியாக்கிக் கொண்டான் மகதியை..
ருத்ரனின் இந்த அதிரடியில் ஆறுதலாக உணர்த்தாள் மகதி. பின்னே தந்தையே கேட்கக்கூடாத வார்த்தையை எல்லாம் பேச.. அதற்கு பதிலாக செயலால் விளக்கம் கொடுத்த தன்னவனை காதலாக பார்த்தாள் காரிகை!!
அதன் பின் காவலாளிகளுக்கு "இவர்கள் இருவரையும் இங்கே உள்ளே விடக்கூடாது!!" என்று அவன் கட்டளை பிறப்பிக்க.. காவலர் பார்த்த பாசமான பார்வையில் இரண்டு பேரும் அரண்டு காருக்குள் பாய்ந்து விட்டனர். வெளியே வந்ததும் ஹர்ஷத் தான் மீண்டும் அவரை முறுக்கிவிட்டு துர்காவை பார்க்க அழைத்து வந்தான்.
அனைத்தையும் கேட்டதும் கணவனை பார்த்தவர் "ச்சீ.. நீங்கள் எல்லாம் ஒரு அப்பாவா?" என்று வெளிப்படையாக முகத்தை சுளிக்க அவமானமாகி போனது மகாதேவனுக்கு.
அப்பவும் ருத்ரனால் தான் இந்த அவமானம் என்று நினைத்தாரே ஒழிய.. தன் வார்த்தையின் வீரியத்தை உணர்ந்தார் இல்லை!!
"என்ன ஆன்ட்டி அவனை திட்டாமல் அங்கிளை…." என்று ஹர்ஷத் ஆரம்பிக்க, அவன் முன் கை நீட்டி நிறுத்து என்பது போல செய்தவர் "இது எங்க குடும்ப விஷயம் ஹர்ஷத்!! இதில் தலையிட உனக்கு எந்த உரிமையும் இல்லை" என்றார் முகத்தில் அடித்தாற் போல…
"இவனைப் பற்றி இப்பொழுது புரியாது உங்களுக்கு பட்டு தெரிந்தால் தான் தெரியும்!!" என்று அவனின் எந்த பேச்சுக்கும் பதில் அளிக்காமல் அழுத்தமான பார்வையோடு அமர்ந்திருந்தான் ருத்ரன்.
"வாட்ச் மை வோர்ட்ஸ்…" என்று அவன் திரும்பவும் ஆரம்பிக்கும்போது, "எக்ஸ்கியூஸ் மீ!!" என்றவாறு உள்ளேன் நுழைந்தான் சூரிய பிரகாஷ் அஸிஸ்டெண்ட் கமிஷனர் ஆப் போலீஸ்.
எஸ்பிஐ எதிர்பார்த்து காத்திருந்த ருத்ரன் "வெல்கம் ஏசிபி சார்?" என்று அழைக்க... ஒரு முறை நின்று துடித்தது ஹர்ஷத்தின் இதயம்!! 'எதற்கு போலீசை அழைத்திருக்கிறான்?' என்று!!
"மீட் மை வைஃப் மகதி ஸ்ரீ!!" என்றதும் எஸ்பியின் புருவங்கள் சற்று ஆச்சரியத்தில் உயர்ந்து பின் புரிதலோடு சமனாகியது.
"அவங்க மகதியோட பேரண்ட்ஸ்!!" என்று துர்காவையும் மகாதேவனையும் அறிமுகப்படுத்தி வைத்தான். மெல்லிய தலைவாசல் இருவருக்கும் கொடுத்த சூரிய பிரகாஷிடம் "நம்ம டாக்டர் ஹர்ஷத் கொடுக்கறதுக்கு ஏதாவது வச்சிருக்கீங்களா?" என்று கேட்க... "எஸ் கலெக்டர் சார்!!" என்றவன், ஹர்ஷத் புறம் திரும்பி "உங்கள கைது செய்வதற்கான அரெஸ்ட் வாரண்ட்!!" என்றான்.