மயக்கம் 3
“அம்மா இந்த ஃபுல்
கவுன் ஒரு மாதிரி நசநசனு இருக்குமா? இதை போட்டுட்டு எப்படிமா கோயிலுக்கு வர்றது? அங்க ஒரே கூட்டமா இருக்கும் மா? கொஞ்ச நேரத்துல வேர்வை வழியும் மா?” என்று புலம்பி தள்ளிக் கொண்டு இருந்தாள் கிருத்திலயா..!
சிவகாமியோ அவள் புலம்பவில்லை எல்லாம் கண்டுகொள்ளாமல் தன் பாட்டில் தலைவாரிக் கொண்டிருந்தார்.
“எம்மோவ்.. ஆத்தா சிவகாமி.. நான் இங்க ஒருத்தி புலம்பிகிட்டு இருக்கேன்.. தொண்ட கிழிய கத்திட்டு இருக்கேன்.. கொஞ்சம் கூட கண்டுக்காம நீ பாட்டுக்கு தல சீவிட்டு இருக்க?” என்று அந்த கவுனை இரு கைகளாலும் தூக்கி பிடித்துக் கொண்டு வந்து அம்மா முன்னே முறைப்போடு நின்று இருந்தாள்.
அவளைப் பார்த்து சன்னமாக சிரித்தவர் “என் பொண்ணு அழகு..!’ என்று இரு கைகளாலும் திருஷ்டி எடுத்து நெட்டியில் முறிக்க..
“போ.. போ.. உடனை இப்படி சொல்லி என்னை ஆஃப் பண்ணு..!” என்றவள்,
அந்த கவுனை இன்னும் நன்றாக தூக்கிப் பிடித்துக் கொண்டு வாத்து போல் நடந்து போய் சோபாவில் அமர்ந்து கொண்டாள்.
அவள் நடந்து போவதை பார்த்துக் கொண்டே தணிகைவேலன் அப்பொழுதுதான் அறையிலிருந்து வந்தவன் “ஏய் என்னடி.. குள்ள வாத்து.. அச்சு அசல் வாத்து மாதிரியே நடக்கிற?” என்று அவளை சீண்டினான்.
“போடா நெட்டு கொக்கு..! ஏதோ என்னோட ரெண்டு இன்ச் கூட வளர்ந்துட்ட.. அதுக்குன்னு ஓவரா திமிரு எடுத்து ஆடாதடா..!” என்று தம்பியை திட்டியவள், பின்பு “பாருடா இந்த அம்மாவ.. கோயிலுக்கு புடவை கட்டிட்டுவான்னு சொன்னாங்க.. என்னால் எல்லாம் புடவை கட்ட முடியாதுன்னு சொன்னதுக்கு அவங்க புடவைய இப்படி ஃபுல் கவுனா தைச்சு.. அப்ப இத மாட்டிகிட்டு வான்னு இதுக்குள்ளார என்னை பஞ்ச திணிக்கிற போல திணிச்சு வச்சுட்டாங்கடா.. இப்படி வேகமா மூச்சு கூட விட்டு முடிலடா அப்படி இறுக்கமாக இருக்குடா..!” என்று தம்பியிடம் சிணுங்கினாள்.
அவள் சொல்ல சொல்ல அவனுக்கும் பாவமாகத்தான் இருந்தது. அவன் இலகுவாக ஒரு சட்டையும் வேஷ்டியும் கட்டி வந்திருக்க.. பெண்கள் மட்டும் ஏன் இத்தனை முழம் சுற்றிக்கொண்டு இவ்வளவு வெயிட்டாக அணிகிறார்கள் என்பது போல ஒரு எண்ணம் உண்டு அவனுக்கு.
“அம்மா.. அவ தான் இது பிடிக்கலைன்னு சொல்றா இல்ல சாதாரண சல்வார்ல வர சொன்னா என்னமா?” என்று அக்காவுக்கு ஆதரவு கொடி பிடித்தான்,
அறையிலிருந்து வெளிவந்த சிவகாமி “முதல்ல அந்த புடவைய அழகா சல்வாரா தான் தச்சு தரேன்னு சொன்னேன் டா. இவ தான் கேட்க மாட்டேன்னு சொன்னா.. அதெல்லாம் ஓல்டு ஃபேஷன் சொன்னா.. அதுதான் இப்ப நியூ ட்ரென்டா ஃபுல் கவுனா தைச்சு கொடுத்து இருக்கேன். நல்லா இருக்குல்ல?” என்று அவளை எழுந்து நிற்க வைத்து தான் தைத்த டிசைன் பற்றி சிலாகித்து மகனிடம் அவர் கூறி பெருமைப்பட,
பொம்மை போல தன்னை நிற்க வைத்து அம்மாவும் மகனும் பேசுவதை கடுப்போடு பார்த்து இருந்தாள் கிருத்தி.
சிவகாமி வீட்டிலேயே துணிகள் தைத்துக் கொடுக்கும் டைலர் வேலையை பல வருடங்களாக செய்து வருகிறார்.
அதுவும் இப்பொழுது எல்லாம் பெண்கள் எங்கே பாவாடை தாவணி புடவை அணிகிறார்கள்? முக்கால்வாசி இதேபோல புடவையில் அழகாக கவுனாக தைத்து அணிந்துக் கொள்வதை கண்டவர், தன் பழைய கட்டாத அழகிய புடவைகளை எல்லாம் இப்படி மகளுக்கு இன்னும் அழகாக தைத்து போட்டு அழகு பார்ப்பார்.
“அம்மா மனசாட்சியை தொட்டு சொல்லு நிஜமாவே இது நீ எனக்கு அழகா இருக்குன்னு தைச்சியா? இல்ல இத நான் போட்டுக்கிட்டு வந்தா நாலு பேரு இத பார்த்து கேப்பாங்க.. உனக்கு கஷ்டமர்ஸ் வருவாங்கன்னு என்ன வச்சு நீ மார்க்கெட்டிங் பண்றியா?” என்றவளை பார்த்த தணிகைவேலன் அப்படியும் இருக்குமோ என்று அன்னையைப் பார்க்க..
“அஃப்கோர்ஸ் மகளே..!” என்று தோளைக் குலுக்கிய சிவகாமி “டூ இன் ஒன்..! உனக்கு அழகாக தைச்சி போட்டது போலவும் ஆச்சு.. என்னோட திறமைக்கு ஒரு மார்க்கெட்டிங் செய்தது போலும் ஆச்சு..! இதுக்காக நான் மாடலிங்க்கு வெளியில் இருந்து ஆள இழுத்துட்டு வர முடியும்? இப்படி உனக்கு போட்டு பக்கத்துல இருக்குற கோயில் கல்யாணம் இப்படியெல்லாம் போனா.. உன்ன பார்த்து கேக்குறவங்க கண்டிப்பா இதை நான் தைத்ததுன்னு தெரிஞ்சு என்ன அப்ரோச் பண்ணுவாங்க..! எப்படி அம்மாவின் திறமை?” என்றதும் இரு பிள்ளைகளும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு தலையாட்டி கொண்டனர்.
“சரி சரி கிளம்புங்க கிளம்புங்க நேரம் ஆயிடுச்சு..” என்று அன்று கிருத்திகைக்கு அருகில் உள்ள முருகன் கோயிலுக்கு பிள்ளைகளோடு சென்றார்.
சிவகாமி பெரும் முருகன் பக்தர். அதனால்தான் பிள்ளைகளுக்கும் முருகன் பெயர் கொண்டு பெயரையும் தேர்ந்தெடுத்து வைத்தார். கிருத்திகை சஷ்டி என்று தவறாமல் விரதம் இருப்பவர், மறக்காமல் பிள்ளைகளையும் கோவிலுக்கு அழைத்து சென்று நற்பழக்க வழக்கங்களையும் விரத முறைகளையும் சிறுவயதிலிருந்தே போதிப்பார்.
தணிகை வேலன் அப்படியே சிவகாமியை போல.. என்னதான் நண்பர்கள் வற்புறுத்தினாலும் விரத நாட்களில் அசைவ உணவுகளை உண்ண மாட்டான்.
ஆனால் கிருத்தியோ அப்படி கிடையாது..! அவளுக்கு பெரும் பக்தியும் கிடையாது, அதே நேரத்தில் கடவுள் இல்லை என்ற கோஸ்டியும் கிடையாது..!
இரண்டுக்கும் இடையில் இடைப்பட்ட கேஸ்..!
கடவுள் அவள் கண்களுக்கு முக்கியமாக தெரிவதே பரிட்சை நேரத்தில் தான்..!
மற்ற நேரத்தில் சாமியறை முன்பு நின்று அவருக்கு பிளையிங் கிஸ் கொடுத்து சென்று விடுபவள், பரீட்சையின் போது மட்டும் அரை மணி நேரம் கடவுளுக்கே வினாத்தாள் எப்படி வரவேண்டும் என்று வகுப்பெடுத்து விட்டு தான் பரீட்சைக்கே செல்லுவாள்..!
அதிலும் விரதம் நாட்கள் எல்லாம் அவளுக்கு ஞாபகமே இருக்காது. சிவகாமி ஞாபகப்படுத்தினால் கூட “அம்மா நான் செஃப்.. அங்க என்னோட இன்ஸ்ட்ராக்டர் சொல்றத நான் கேக்கணும். இதெல்லாம் பாத்துட்டு இருக்க முடியாது மா” என்று தப்பித்துக் கொள்வாள்..!
ஆள் பாதி ஆடை பாதி என்பது போல வெளியில் செல்லும்போது கண்டிப்பாக ஆடைகளில் அத்தனை கவனம் எடுத்து தான் அழைத்துச் செல்வார் மக்கள் இருவரையும் சிவகாமி.
யாரும் ஒரு குறை பேசும் அளவுக்கு கூட நடந்து கொள்ள மாட்டார். அத்தனை நேர்த்தியாக இருக்கும். அதிலும் அவர் டைலர் என்பதால் மகளுக்கு விதவிதமாகத் தான் தன் கற்பனைகளை கொட்டி தீர்த்து அழகாக தைத்து அழகு பார்ப்பார்.
கிருத்திக்கு அனைத்தும் கனகச்சிதமாக பொருந்தும். பார்ப்பவர்களே “எங்கே வாங்கினீர்கள்? எங்கே தைத்தீர்கள்?” என்று கேட்டு இவர் தான் தைத்தார் என்றால் இவரிடம் ஆர்டர் கொடுக்கவும் செய்வார்கள்.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல மகளுக்கு அழகாகவும் தைத்து அணிவித்து அதன் மூலம் தன் திறமையையும் காட்டி வியாபாரத்தையும் பெருக்கிக் கொள்வார்..!
இப்படி மூவரும் அடிக்கடி வெளியே செல்லுமிடம் கோவில்.. அவ்வப்போது பீச்..! மூவரூம் குடும்பமாய் கழிக்கும், களிக்கும் பொழுதை மிகவும் விரும்புவார் சிவகாமி.
அன்றும் அப்படித்தான் கோவில் சென்று விட்டு திரும்புகையில், அவர் தெருவில் வசிக்கும் விஜயா பெண்மணி இவரைக் கண்டு பதுங்கி பதுங்கி செல்வதை கண்டு “ஏன் இப்படி பதுங்கி பதுங்கி போறாங்க இந்த அக்கா?” என்று யோசித்தவர், மகள் மகனிடம்..
“நீங்க அர்ச்சனை தட்டை அவங்க கொடுத்துட்டு கவரில் மாத்திட்டு வாங்க.. நான் இதோ வந்துடுறேன்” என்று அவர் பின்னே பதுங்கி பதுங்கி சென்றார்.
உண்மையில் ஏதோ அவருக்கு பிரச்சனையோ? என்று தன்னால் முடிந்த உதவி செய்யலாம் என்று தான் அவரை பின்தொடர்ந்து சென்றார்.
ஆனால் அங்கே கோவிலில் அவரது மகளுக்கு அன்று தாலி பெருக்கு போடும் வைபவம் நடந்து கொண்டிருந்தது போல..
“ஏங்கா விஜயக்கா.. உங்க பொண்ணு விசேஷம் இந்தா வெளியில போயிட்டு வரேன்னு இவ்ளோ நேரம் கழிச்சு வரீங்க?” என்று ஒரு பெண்மணி கேட்க..
“அதை ஏன் கேக்குற பானு, அவளிட்ட இருந்து தப்பிச்சி வரேன்?” என்றதும் அவள் முழிக்க..
“அதான் பானு.. நம்ம தெருவுல இருக்காளே சிவகாமி..! அவ என்ன பாத்துட்டா, நான் அவள இந்த ஃபங்ஷனுக்கு கூப்பிடவே இல்லை எங்க பார்த்தா ஏதாவது கேட்டா என்ன சொல்றது? அதுக்கு தான் அவ கண்ணுல படாம பதுங்கி பதுங்கி வரதுக்குள்ள நேரம் ஆயிடுச்சு” என்றார்.
அதைக் கேட்க சிவகாமிக்கு மனம் வேதனை மிகுந்தது.
“புருஷன் இல்லாதவ.. தாலி ராசி இல்லாதவ என் பொண்ணுக்கு விஷேசத்துக்கு எதுக்கு வரணும் சொல்லு? அதுக்கு தான் அவள கூப்பிடல..” என்றார்.
“என்னக்கா சொல்றீங்க? அவங்க புருஷன் இல்லையா? ஆனா அவங்க பூவோடு பொட்டோட தானே சுத்திட்டு இருக்காங்க” மற்றொரு பெண்மணி..!
“அப்போ ஒரு புருஷன் இல்லையா இறந்துட்டாரா? இரண்டு மாத இப்படி அலங்காரமா சுத்திகிட்டு இருக்கா?” என்று பானு மேவாயில் கை வைத்து ஆச்சரியமாக கேட்க..
“இருக்காரு இருக்காரு.. அதெல்லாம் உயிரோட தான் இருக்காரு..! ஆனா இவளுக்கு புருஷனா இல்லாம வேற ஒருத்திக்கு புருஷனா இருக்காரு..!” என்றார் அந்த விஜயா.
“ஓ அப்படியா சங்கதி..! நாங்க இப்பதானே புதுசா குடுத்தனம் வந்தோம். அதனால எங்களுக்கு அவங்களை பத்தின முழு கதையும் தெரியல.. ஒரு நாள் பொறுமையா உட்கார்ந்து சொல்லுங்க.. இப்ப வாங்க நேரம் ஆயிட்டு..” என்றபடி அவர்கள் மூவரும் கோவில் பிரகாரத்தை நோக்கி செல்ல அருகில் தூண் மறைவில் கேட்டுக் கொண்டிருந்த சிவகாமிக்கு மீண்டும் மனம் ரணமானது..!
பொண்டாட்டி குழந்தைகள் இருக்கையிலேயே வேறொரு பெண்ணை காதலித்து சென்றவன் மீது குற்றமல்ல..!
ஆனால்.. அது காதலா..? ஒருத்திக்கு ஒருவனிடம் தோன்றுவது தானே காதல்? மற்றபடி திருமணத்திற்கு பின் வருவது எல்லாம் கள்ளக்காதல் தானே..!
அப்படி வந்து மனைவி பிள்ளைகளை பிரிந்து வேறு ஒருத்தியோடு குடும்பம் நடத்திக் கொண்டிருப்பவனை எவனும் எந்த கேள்வியும் கேட்பதில்லை.
‘ஆணை சாடாமல்.. அவனால் பாதிக்கப்பட்ட பெண்ணையும் மட்டும் வார்த்தைகளால் வதைப்பது என்ன மாதிரியான சமூகம்?’ என்று கண்ணீர் உகுத்து நின்றவரின் கைகள் அழுத்தமாக பற்றப்பட அதிர்ந்து பார்த்தவரை இழுத்துக் கொண்டு அந்த பெண்மணிகள் முன்னே சென்று நின்றாள் கிருத்திலயா.
விஜயாவை தொடர்ந்து சிவகாமி கோவில் உள்ளே சென்றுவிட,
“வேலா.. பர்ஸ் அம்மாகிட்ட இருக்குடா. நான் போய் வாங்கிட்டு வந்துடறேன் நீ இந்த கடையில் நில்லு..” என்று அன்னையின் பின்னே சென்றவள், அவர்கள் பேசுவதைக் கேட்டு அன்னையின் முகம் வருத்தத்திலும் வலியிலும் சுணங்குவது கண்டவளுக்கு கோபம் மிகுந்தது.
“ஆமா இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்ன சொன்னீங்க எங்க அம்மாவ பத்தி?” என்று கோபமாக கேட்டாள் கிருத்தி.
அந்த விஜயா திடுக்கிட்டு அப்பொழுது தான் சிவகாமியை பார்ப்பது போல “வா சிவகாமி.. கோயிலுக்கு வந்தியா?” என்று கேட்க..
“இல்லை குடும்பத்தோட குத்தாட்டம் போட வந்தோம்” என்று இவள் நக்கலாக திருப்பிக் கொடுத்தாள்.
கோபமாக “என்ன சிவகாமி உன் பொண்ணு இப்படி பேசுறா? ஒழுங்கா வளர்க்கலையா பொண்ண நீனு?” என்று இப்பொழுது அவரை அவரின் வாழ்க்கையை பேசியது பத்தாது என்று பெண்ணையும் பேச அவரோ துடித்து போனார்.
“என்னை பத்தி அப்புறம் பேசலாம்..! ஆமா எங்க அம்மா பத்தி உங்களுக்கு என்ன தெரியும்? எதுக்கு எங்க அம்மா பத்தி அப்படி பேசுறீங்க? எங்க அம்மா ஒழுக்கமா இன்ன வரைக்கும் அந்த ஆள் கட்டின தாலிக்கு உண்மையா தான் இருக்காங்க.. ஆனா அந்த ஆளுதான் எங்க அம்மாவுக்கு துரோகம் பண்ணிட்டு வேற ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிட்டு கூத்தடிக்கிறாரு..! அந்த ஆள போய் கேக்காம எங்க அம்மா வந்து சொல்லுவீங்களா? ஆக மொத்தம் இந்த ஊர்ல ஒழுக்கமா இருக்குறவங்களுக்கு மதிப்பு கிடையாது..! இப்படி ஒழுக்கத்தை மீறி நடக்கிறவங்களுக்கு தான் மதிப்பு அப்படித்தானே?” என்றதும் மூவரும் வாயடைத்து நின்றனர்.
ஆனாலும் ‘ஒரு சிறுப் பெண் என்னை எப்படி பேசலாம்?’ என்று அந்த விஜயா..
“என்ன இருந்தாலும் உங்க அம்மா அவரை பிடித்து வைத்து இருக்கணும் இல்லையா? கட்டுன புருஷன இப்படித்தான் அடுத்தவங்களுக்கு விட்டுக் கொடுத்து இருப்பாங்களா?”என்று பேச எங்கே அவரை கோபம் மிகுதியில் அடித்து விடுவோமோ என்று துடித்த கையை அடக்கிக் கொண்ட கிருத்தி,
“இப்பதானே உங்க பொண்ணுக்கு கல்யாணம் நடந்திருக்கு நாளைக்கு உங்க பொண்ணோட புருஷன் இந்த மாதிரி வேற ஒருத்தவ கூட போனானா.. அவன பேசாம அப்பவும் உங்க பொண்ணு தான் குத்தம் சொல்லுவீங்களா? உனக்கு பிடிச்சு வைக்க தெரியலன்னு..” என்று கேட்டாள்.
“அவள பத்தி என்ன இப்படி பேசுற நீ?” என்று துடித்துப் போனார்.
“உங்க பொண்ண சொன்ன உடனே உங்களுக்கு குத்துது குடையுது வலிக்குது இல்ல.. ஆனா அடுத்த பொண்ண பத்தி இப்படி உங்களால பேச முடியுது? அந்த ஆளு திமிரெடுத்து பொண்டாட்டி வேணாம்.. பெத்த புள்ளைங்க வேணாம்னு வேறொரு பொம்பள பின்னால போனா.. எங்க அம்மா அந்த காலத்து நளாயிணி மாதிரி போயிட்டு வாங்க ராசா அனுப்பி வைக்கணுமா? நீங்க என்ன பேசிறிங்களோ அதுதான் நாளைக்கு உங்களை திருப்பி வந்து தாக்கும்..! உங்க எல்லாருக்கும் பொண்ணு இருக்கு தானே?” என்று அவர்களை எல்லாம் தீர்க்கமாக பார்த்தவள்,
“வா மா.. இந்த மாதிரி ஜென்மங்கள் கூட பேசுறதே வேஸ்ட்..! என்றவள்,
சட்டென்று திரும்பி வந்து “உங்க பொண்ணு கல்யாணத்துக்கு அந்த டிசைன் வேணும்.. இந்த டிசைன் வேணும்.. நீ தச்சா தான் நல்லா இருக்கும்னு சொல்லி தச்சிட்டு போனீங்களே அத்தனை ப்ளவுஸ்.. அதுல பாக்கி 5000 நிக்குது..! இன்னைக்கு சாயந்திரத்துக்குள்ள அந்த பணம் வரலைன்னா நான் உங்க வீட்டு வாசலுக்கே வந்து நின்னு கேட்பேன்” என்றவள், வேகமாக அன்னையை அழைத்துக் கொண்டு வந்து விட்டாள்.
அன்னையின் முகம் கலங்கி கசந்து இருக்க..அக்காவின் முகமும் கோபத்தில் கொந்தளிக்க.. உள்ளே என்ன நடந்திருக்கும் என்று புரிந்து கொண்டான் தணிகை வேலன்..!
அன்னையையும் அக்காவையும் இரு புறம் தோளோடு அணைத்து கொண்டவன், “வொர்த் இல்லா நபருக்காக நம்ம கோபப்படுவதிலோ.. வருத்தப்படுவதிலோ.. எந்த அர்த்தமும் இல்ல..! அமைதியை வாங்க..!” என்று திரும்பவும் ஆட்டோவில் வீடு வந்து சேர்ந்தனர்.
சிவகாமி வழக்கம் போல சாமியறையில் அர்ச்சனை பொருட்களை வைத்து சிறிது நேரம் கண் மூடி தனது கவலையை கொட்டியவர் தன் அறையில் சென்று படுத்துவிட்டார்.
தணிகைவேலானோ அமைதியாக அமர்ந்திருந்தான். கிருத்திகை தங்கள் அறையில் கோபமாக அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தாள். அவளும் தணிகைவேலனும் ஒரே அறையை தான் பயன்படுத்துவது.
தன் உடுப்பை மாத்தி கேஷுவலாக ஒரு டி-ஷர்ட் த்ரீ போர்த் மாட்டியவள் கையில் ஃபோன் மற்றும் ப்ளூடூத்தோடு விடுவிடு என்று மாடி ஏறி சென்று விட்டாள்.
சிறிது நேரம் கழித்து வந்த சிவகாமி “அக்கா எங்கடா?” என்று தேவனிடம் கேட்க.
அவனோ கண்களால் மாடியை காட்ட ஒரு பெருமூச்சு விட்டபடி இரவு சமையலை பார்க்க சென்றார் சிவகாமி.
இரவு சாப்பாடு உண்ணும் நேரத்தில் மகனை கூப்பிட்டு “அவளை கூட்டிட்டு வா சாப்பிட..!” என்றதும்
“நானா? நான் போன கத்துவாளே மா?” என்று பின்வாங்கினான், இத்தனை வருட அனுபவத்தில்..
“போடா..! உன் அக்கா தானே கத்தினா வாங்கிக்கோ” என்றார். இவன் மெல்ல மாடி ஏறி சென்று பார்க்க அங்கே தண்ணீர் தொட்டியில் முதுகை சாய்த்து அமர்ந்திருந்தாள் கிருத்தி.
கண்களோ மூடியிருக்க காதிலோ ப்ளூடூத்.. ஆக ஏதோ பாடல் கேட்டுக் கொண்டிருக்கிறாள்.. இப்பொழுது கூப்பிட்டாலும் வரமாட்டாள் என்று புரிந்தவன், மெல்ல அவள் தோளை தொட.. தன் அமைதி கலைக்கப்பட்டதில் திரும்பி அவனை ஒரு முறை முறைத்தாள்.
“சாப்பாடு ஹாட்பாக்ல இருக்கு பசிக்கும்போது வந்து சாப்பிடு.. குட் நைட்” என்று கீழே சென்று விட்டான் வேலன்.
நன்றாக இருள் சூழ இரவு உணவை முடித்துவிட்டு வெளியே சென்று உலாவலாம் என்று வந்தான் புவனன் காதல் ப்ளூடூத் கையில் ஃபோனோடு..!!
அவனும் இளையராஜாவின் இசையில் தன்னை மறந்து அங்கே இங்கே என்று நடந்து கொண்டிருந்தவன் சற்றென்று இருளில் ஒரு உருவம் தெரிய திடுக்கிட்டு போனான்.
கிட்டத்தட்ட அவன் இந்த வீட்டிற்கு வந்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிறது. மாடிக்கு பெரும்பாலும் பகல் நேரத்தில் துணி காய போட மிளகாய் வற்றல் இதுபோல் எதுவும் காய போட என்று சிவகாமி வருவார்.
சில சமயம் வேலனும் குணாவும் வந்து பேசிக் கொண்டிருப்பார்கள். இல்லை சில நேரம் விளையாடுவார்கள். எப்போதாவது தான் கிருத்திலயா அங்கே வருவாள். அதிலும் பெரும்பாலும் இவன் பாட்டை அலற வைக்கும் போது வந்து திட்ட என்றே வந்துவிட்டு செல்வாள். மற்றபடி அநேக நேரங்களில் அவன் தனிமையை யாரும் அங்கே கெடுப்பதில்லை..!
இன்று ஒரு உருவம் அமர்ந்திருக்க திடுக்கிட்டவன் மெல்ல எட்டிப் பார்க்க.. அங்கே கிருத்தியை அவன் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை..!
இவ்வளவு நாளில் அவளை இத்தனை ராத்திரியில் தனியாக இங்கே பார்த்ததும் இல்லை..!
“ஏன் இங்க தனியா உட்கார்ந்து இருக்கா? என்ன ஆச்சு இவளுக்கு?” என்றபடி சற்று நேரம் அவளை பார்த்திருந்தவன், வழக்கம் போல அந்த வேப்பமர அருகே உள்ள அந்தத் திண்டில் அமர்ந்து கொண்டான்.
இப்பொழுது இளையராஜாவும் எஸ்பிபியும் அவன் மனதை நிறைக்கவில்லை. கண்மூடி தன்னை மறந்து அமர்ந்திருந்த அவளது உருவமே அவனை இம்சித்தது.
‘ஒரு பெண் அதுவும் அர்த்த ராத்திரியில் இப்படி வந்து உட்கார்ந்து இருக்கிறாள். ஊரே கெட்டு கிடக்கிறது புரியாமல் என்ன இவ வந்து உட்கார்ந்து இருக்கா? இவங்க அம்மாவும் இவ்வளவு நேரம் இவளை தேடாமல் எப்படி இருக்காங்க?’ என்றபடி சிறிது நேரம் இங்கும் அங்கும் மனம் அலைபாய அமர்ந்திருந்தான்.
நேரம் செல்ல செல்ல அவள் எழுந்து போவதாய் இல்லை. இவனுக்கு ஒரு மாதிரியாக இருந்தது.
‘என்ன இருந்தாலும் ஒரு ஆண்மகன் தனியாக இருக்கும் வீட்டருகே இவள் இரவில் வந்து ஏன் இங்கே உட்கார்ந்து இருக்கிறாள்?’ என்று சற்று கடுப்பாகவும் இருந்தது.
அதற்கு மேல் தாங்காமல் கீழே சென்று அவர்கள் வீட்டு கதவை தட்டினான்.
சிவகாமி வந்து மெல்ல கதவை திறக்க “அது.. அத்தை.. மேல உங்க பொண்ணு..” என்று அதற்கு மேல் பேச முடியாமல் அவன் அமைதியாக நிற்க…
“தெரியும் வாகீஸா.. அவ கொஞ்சம் மூட் அப்செட்ல இருக்கா..! மூட் அப்செட் ஆனா அங்க தான் வந்து உட்கார்ந்திருப்பா.. கொஞ்ச நேரத்துல அவளே கீழே வந்துருவா. நீ ஒன்னும் கவலைப்படாதே..” என்றார்.
“அது இல்ல அத்த.. காலம் கெட்டு கிடக்கு..” என்று இவன் ஆரம்பிக்க..
மெல்ல புன்னகைத்தவர், “யாராலேயும் இவளுக்கு எந்த பிரச்சனையும் வராது. இவளால யாருக்கும் வராமல் இருந்தா சரி..! நீ போய் தூங்கு பா.. நேரம் ஆச்சு.. காலையில வேலைக்கு போகணும் இல்ல” என்றதும் அவனும் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தன் வீட்டிற்கு சென்று விட்டான்.
ஆனாலும் ஜன்னல் வழியே அவளைத்தான் பார்த்திருந்தான்.
நிலவொளி மட்டும் அல்லாமல் அங்கே இங்கே எரிந்த இரவு விளக்கு வெளிச்சத்தில் தெரிந்த அவள் முகத்தை தான் பார்த்திருந்தான். உதடு கடித்து கண்களை இறுக்க மூடி எதையோ மறக்க முயல்வது போல அவளது தோற்றத்தை கண்டவன்,
என்ன நினைத்தானோ.. எதை ஒப்பிட்டானோ, மறு நொடி கதவைத் திறந்தவன் மெல்ல அடியெடுத்து வைத்து அவளுக்கு சற்று தள்ளி அமர்ந்து கொண்டான்.
அருகில் அரவம் கேட்கவும் மெல்ல கண்களை திறந்தவள் முகத்தை திருப்பி பார்க்க.. அங்கே அமர்ந்திருந்த புவனனை அவள் எதிர்பார்க்கவில்லை.
அவனும் அவளை போல கண்களை மூடி அந்த தண்ணீர் தொட்டி
யில் முதுகை சாய்த்து பாடலைக் கேட்டுக் கொண்டிருப்பதை கண்டவள் தோளை குலுக்கி விட்டு மீண்டும் கண்களை மூடிக்கொண்டாள்.
இருவரையும்.. இரவும் நிலவும் அமைதியாக பார்த்திருந்தது..!
தொடரும்..