தோகை 10

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 6 months ago
Messages: 207
Thread starter  

அத்தியாயம் 10

 

மகதி பேசிய பேச்சால் கோபம் கொண்டவன் வழக்கம் போல சாரியை மறக்காமல் சொல்லிவிட்டே வந்தான்!! இதழ்களால் இதழ்களில்…

 

வந்தவனுக்கு இருப்பு கொள்ளவேயில்லை. "டாடியோட லிட்டில் பிரின்சஸூக்கு வரவர வாய் அதிகமா போச்சு.. அந்த வாயை.." என்றவனின் நினைவுகள் மீண்டும் அவளது சிவந்த தேன் சிந்தும் இதழ்களில் சென்று நிலைக்க.. உதடு மடித்து சிரித்துக்கொண்டவன் கையில் இருந்த ரிப்போர்ட்ஸை பார்த்தான்.

 

"தெளிவுதான் சில்வண்டு நீ!! எங்கே அடுத்த முறை அவளிடம் ஆதினியை பற்றி கேட்பேனோனு விவரமா ரிப்போர்ட்டாக கொடுத்திருக்கா.. மற்ற விஷயத்தில் எப்படியோ வேலையில ஆள் கில்லி தான்!!" என்று சிரித்துக் கொண்டு டேபிளில் ரிப்போர்ட்ஸை வைத்தவன், குளித்து வந்து இலகுவான ஆடையில் இருக்கையில் சாய்ந்தவாறு அந்த ரிப்போர்ட்ஸை படிக்கலானான்.

 

அவளிடம் ஆதினி பேசிய உரையாடலை தொகுத்து.. அதன் பின் அவளின் ஏக்கத்தை அதில் கூறி.. அதற்காக அவளது அறிவுறுத்தல்கள்.. என்று எழுதி இருந்ததை நீண்ட நேரம் படித்தான்!! திரும்பத் திரும்ப படித்தான்!!

 

மகளின் ஏக்கத்தை படிக்க படிக்க மனம் கனமானது ருத்ரனுக்கு!!

 

என்னதான் கேர்டேக்கர் பார்த்துக் கொண்டாலும், அதிக நேரம் எடுத்து தந்தை பார்த்துக் கொண்டாலும், ஒரு தாய் இயல்பான அன்பு.. பாசம்.. அரவணைப்பு.. அரட்டல்.. அதிகாரம் இவை அனைத்துமே ஒரு குழந்தைகளுக்கு மிக தேவை!! அக்குழந்தை நல்ல குழந்தையாய் வளர…

 

அதற்காக அன்னையில்லாமல் தந்தையின் வளர்ப்பில் இல்லை தாத்தா பாட்டிகளின் நிழலில் வளரும் குழந்தைகள் எல்லாம் நல்ல குழந்தைகள் அல்ல என்று அர்த்தம் கிடையாது!! இது சாதாரண குழந்தைகளுக்கு கிடைக்கும் வரம். கிடைக்க வேண்டிய வரம்!! அந்த வரம் கிடைக்காத குழந்தைகள் எல்லாம் தெய்வங்களுக்கு சமம்!! ஆம் தெய்வத்திற்கு தானே அன்னை இல்லை!! 

 

இருக்கையில் சாய்ந்தவாறு கண்களை மூடி இருந்தவன், கண்களை திறக்க அவன் முன்னே சிரித்த முகத்தோடு நந்தினி!!

 

"ருத்ரா... என்னை முடிந்தால் பிடி!! உன்னால் முடியாது டா.. தடிமாடு மாதிரி உடம்பை வைத்து இருந்தால் மட்டும் பத்தாது" என்று சொல்லி சிட்டாக அவன் தலையில் கொட்டி விட்டு ஓடுபவளை பின் தொடர்ந்து ஓடி வளைத்து பிடிப்பான் ருத்ரன். அப்பொழுதும் அவன் பிடிக்கு சிக்காமல் அவன் கையை பற்களால் பதம் பார்த்து விட்டு தப்பி ஓடுவாள் கிங்கிணியாய் சிரித்தபடி நந்தினி!!

 

எப்பொழுதும் அவளை சுற்றி ஒரு நல்ல வைப்ரேஷன் இருக்கும்!! அவள் இருக்கும் சூழலில் சந்தோஷம் நிம்மதி மகிழ்வு என்று!! ஆனால் இப்பொழுது…?? அவளைப் பற்றிய நினைவு.. அவள் இல்லாத ஏக்கம் என்று இந்த மூன்று வருடங்களாக பச்சிளம் பிள்ளையை கையில் வைத்து தவியாய் தவித்து தான் போனான் ருத்ரன். ராமஜெயம் மட்டும் அவனுக்கு அப்பொழுது உதவவில்லை என்றால்.. அவனால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை!! ஆதினியை வளர்த்த பெரும் பொறுப்பு ராமஜெயத்திற்கே!!

 

ஆதினி பற்றி மகதி எழுதிய குறிப்புகளை படித்தவன், இனி கண்டிப்பாக மகளோடு காலை வேளையை கழித்தே ஆக வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டான்.

 

அதனோடு இல்லாமல் அவ்வப்போது மகளோடு சிறு சிறு கேளிக்கைகள் விளையாட்டுக்கள் விடுமுறை நாட்களில் பிக்னிக் சிறு சிறு ஊர் சுத்துதல் போன்றவற்றை கட்டாயம் வாரத்துக்கு ஒருமுறை இருக்க வேண்டும் என்று அவளது குறிப்புகளை படித்தவனுக்கு சிரிப்பு வந்தது!!

 

"ஆதினிக்காக செய்ய சொல்லி இருக்காளா.. இல்ல இவளின் ஆசையை சொல்லி இருக்காளா? இவள கட்டுகிறவன் கண்டிப்பாக பாவம்!!" என்று நினைத்தவனுக்கு சரக்கென்று முள் தைத்தது போல ஒரு வலி!!

 

அவளுக்கு திருமணம் அப்படி ஒன்று நடந்தால்‌‌… அப்போது... அவளுக்கு.. நான்.. யார்? புரியவில்லை ருத்ரனுக்கு!! அவள் மீது அவன் காட்டும் இந்த ஈடுபாடு.. தீண்டல் சீண்டல் எல்லாவற்றுக்கும் முடிவு என்ன?? எப்படியும் அவளுக்கு திருமணம் என்று ஒன்று நடக்கத்தான் வேண்டும்!! ஆனால் இவனோடு... அது முடியாது அல்லவா? எப்படி அவளை…? என்று நினைக்க நினைக்க.. தலை கணக்க அப்படியே எதிரே இருந்து டேபிளிலில் தலையை சாய்த்துக் கொண்டான்.

 

"வேண்டாம்!! என் வாழ்க்கை தான் போனது. அவளது வாழ்க்கையாவது நல்லா இருக்கட்டும்!! பாவம்.. அதிக பிரசங்கி தான்.. ஆனால் நல்ல பெண்!! வாய் மூடாமல் வளவளக்கும் வாயாடி தான்.. ஆனாலும் அடுத்தவரை புண்படுத்தி பார்க்காத மனம்!!" என்று அவளுக்காகவே வாதாடிய மனதை கட்டுப்படுத்தி கொண்டான்.

 

அதன்படி மறுநாளில் இருந்து காலை ஆதினியை தயார் படுத்தி பள்ளிக்கு அனுப்புவது அவனது கடமையாகியது. பார்த்திருந்த சொர்ணாமாவிடம் அவனே கூறி விட்டான். அதற்கு பிறகு அவ்வப்போது மாலை நேரங்களில் பள்ளி வேனை அவனது அலுவலகத்திற்கு வரச் செய்தான் அவனுக்கு நேரம் கிடைக்கும்போது. இதற்கு முன் இருந்த சோர்வு சோகம் எல்லாம் பறந்து போய் சந்தோஷத்தில் திளைத்தாள் ஆதினி.

 

அதிலும் அவளது நண்பர்கள் "உங்க அப்பா கலெக்டராக?" என்று கண்களை விரித்து கேட்க.. அதில் ஏக பெருமிதம் அவளுக்கு!! 

 

"ஆமாம்.. என் டாட் கலெக்டர்!!" என்று கர்வத்தோடு சொல்லி அந்த கலெக்டர் ஆபீஸ் முன் இறங்கு மகளை ஆசையோடு பார்த்திருப்பான் ருத்ரன்.

 

அதுவும் ஓடி வந்து தாவி தந்தையின் கழுத்தை கட்டிக்கொண்டு தன் நண்பர்களை பெருமையாக ஒரு பார்வை பார்த்து… கூடவே சந்தோஷத்தின் அச்சாரமாக தந்தையின் கன்னத்தில் முத்தாரம் ஒன்று இடுவாள் மகள்!! அதற்கே சொக்கி போவான் தந்தை!!

 

ஆக பெரும் இன்பமல்லவா மகளின் இந்த பாசம்!!

 

முன்னை விட இப்பொழுது அதை நன்கு அனுபவித்தவன் மனதார நன்றி கூறினான் மகதிக்கு.

 

இப்போதெல்லாம் ஞாயிற்றுக்கிழமை காலை மகளுக்கு என்று ஒதுக்கி விடுவான். ஏதாவது ஒரு மால் இல்லை அங்கே இருக்கும் விளையாட்டு பகுதிக்கு அழைத்து செல்வது என்று அவளுடன் நேரம் கழிப்பான். 

 

மகளை ஒருநாள் அமர்த்தி பக்குவமாக அனைத்தையும் கூறினான். "பட்டு.. அப்பா கலெக்டர் அப்படின்னு சொல்லி நீ உன் பிரெண்ட்ஸ் கிட்ட எல்லாம் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறாய் அல்லவா?" என்றதும் ஆம் என்று வேகமாக தலையாட்டினாள் ஆதினி.

 

"அப்பாக்கு எப்போ திடீர் திடீர்னு வேலை எல்லாம் வரும் என்று சொல்ல முடியாது. அப்பா மேக்ஸிமம் உன்கூட டைம் ஸ்பென்ட் பண்ணுவேன்.. சண்டே மார்னிங் நமக்கான டைம் சம்டைம்ஸ் வேலை வந்தா நீ அப்செட் ஆக கூடாது!! நான் ஈவினிங் இல்ல நைட்டு உன்னை கூட்டிட்டு போவேன். ஓகேயா??" என்றதும், "ஓகே..!!" என்று சிரித்தாள் ஆதினி.

 

ருத்ரனோட வேலையோடு இவளையும் பழகி அவள் மனதில் இருந்த வருத்தத்தை அனைத்தும் களைத்து மறுபடியும் பட்டாம்பூச்சியாக பறக்கும் மகளை ஆசையோடு பார்த்தான் ருத்ரன்.

இடையில் இரு முறை சொர்ணமாவோடு ஆதினியை மகதியிடம் அனுப்பி வைத்தான். அவளுடைய மாற்றங்களை கண்டும் சொர்ணமாவின் வாயிலாக கேட்டும் நிம்மதி அடைந்தாள் மகதி.

 

இப்பொழுது மகளைப் பற்றிய கவலை அனைத்தும் பறந்து போய் இருக்க.. மீண்டும் களத்தில் குதித்தான் கலெக்டராக!!

 

சென்னையில் நிழல் ரூபமாக தொடரும் இந்த போதை மருந்து ஒழிப்பதுதான் அவனது தலையாய கடமையாக இருந்தது. இங்கே எந்த ரூபத்தில் இருந்து இவை முளைக்கிறது என்று அதன் வேரை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு விரைவில் பரவி இருந்தது இந்த போதையின் தாக்கம்!!

 

இதுபோல அன்று ஞாயிற்றுக்கிழமை காலை.. மகளை அருகில் இருக்கும் ஒரு பார்க்குக்கு இவன் அழைத்து வந்திருந்தான். காலை வேளையில் ஆதினயைப் போல சிறார்கள் நிறைய பேர் அங்கே விளையாண்டு கொண்டிருக்க.. மகளை விளையாட விட்டு தானும் அருகில் நின்று கொண்டான். அங்கே இருந்தவர்கள் பெரும்பாலும் அந்த பகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்க இப்பொழுது ஆதினியும் ருத்ரனும் அவர்களுக்கு பரிச்சியமே!!

 

முதலில் கலெக்டர் கலெக்டர் என்று ஆச்சரியமாக பார்த்தவர்கள், அதன் பின் அவ்வப்போது இவன் வர.. அவனை பார்த்து ஒரு சினேக புன்னகையோடு கடந்து சென்றார்கள். இது கூட அவனுக்கு சற்று நன்றாகத் தான் இருந்தது. 

பொழுதுக்கும் வேலை வேலை என்று ஓடுபவனுக்கு சற்று மனமாறுதல்களாக.. பார்ப்பவர்களின் புன்னகை முகங்கள் இருக்க.. மீண்டும் மகதியின் நினைவுதான்.

 

"இந்த சில்வண்டை நாம மறக்க நினைத்தாலும்.. ஏதாவது ஒரு தருணம் அவளை நினைக்கவே செய்கிறது!! என்னால் முடியவில்லை டி ராட்சசி!! தயவு செய்து என் நினைவுக்குள் வராதே டி!! அப்புறம் நிஜத்தில் கூட பிரியவிடாமல் செய்து விடுவேன் என்று பயமாக இருக்கிறது" என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான்.

 

இவன் மகதியின் நினைவுகளில் சிக்கி சுழன்ற நேரம்.. அவனது போன் அடிக்க.. பார்த்தால் முரளிதரன் தான்!! தயங்காமல் அட்டென்ட் செய்தவன் "சொல்லுங்க சார்.."

 

"குட் மார்னிங் சார்… சண்டே மார்னிங் டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?" என்று அவர் கேட்க..

 

"நோ இஸ்யூஸ்!! நம்ம மாதிரி அதிகாரிகளுக்கு சண்டே ஏது? லீவு ஏது? எல்லாம் ஒன்று தான்!! பாப்பா கூட இங்கே பார்க்கல தான் இருக்கேன். நேரா ஏதாவது மீட்டிங் ஏற்பாடு பண்ணனுமா இல்ல ஃபோன் காலே ஓகேவா?" என்றதும், "ஃபோன் காலே ஓகே சார்!" என்றார் முரளிதரன்.

 

"ஓகே பைன்!!" என்று அவன் பேச ஆரம்பிக்க இருவருக்கும் சம்பாஷனை நீடித்துக் கொண்டே இருந்தது.

 

அப்போது அங்குள்ள பிள்ளைகள் எல்லாம் ஐஸ்கிரீம் வண்டியை பார்த்து சூழ்ந்துகொள்ள ஆதினிக்கும் ஆசை துளிர்க்க ஓடிவந்து அப்பாவின் சட்டையை பிடித்து இழுத்தாள் அவள்.

 

மிக முக்கிய பேச்சுவார்த்தையில் இருந்தவன் மகளை பார்த்து செய்கையில் என்ன என்று கேட்க.‌ அவளோ தூரத்தில் தெரிந்த ஐஸ்கிரீம் வண்டியை காட்ட.. அங்கே சுற்றி இருந்த பிள்ளைகளை பார்த்தவன் "நோ..!!" என்று கண்களை உருட்டி தலையாட்டி வேண்டாம் என்றான் தந்தை!!

 

"இல்லை.. வேண்டும்!!" என்று மூக்கை சுழித்து புருவத்தை சுருக்கி பதிலுக்கு வீம்பாய் நின்றாள் மகள்.

 

பெண்ணின் கோபத்துக்கு முன்னால் அவனின் கோபம் எங்கே செல்லுபடியாக? இவன் கெஞ்சலாய் பார்த்து "வேண்டாமே.. பட்டு!!" என்று வாய் அசைத்தான்.

 

"வேணுமே பா..!!" என்று அவளும் அவனை மாதிரியே வாய் அசைக்க சட்டென்று சிரிப்பு பொங்க அடக்க முடியாமல் அவன் சிரித்து விட.. அது முரளிதரனுக்கும் கேட்டு விட்டது.

 

முரளிதரனுக்கு அதிர்ச்சி!! இதுதான் கரெக்ட் தானே? அதுவும் எப்பொழுதும் முகத்திற்கும் அரை லிட்டர் கஞ்சி போட்டது போல ஸ்டிபாக வைத்திருக்கும் நம் கலெக்டர் தானா? என்று அவர் ஃபோனை ஒரு முறை செக் செய்தார்.

 

"சார்!! ஒன் மினிட்!!" என்றவன் கையில் இருந்து பணத்தை எடுத்து மகளிடம் கொடுத்து சற்று தூரத்தில் இருந்த காவலுக்கென்று வந்திருந்த பிசியை மகளுடன் செல்லுமாறு பணித்தான்.

 

மகளோடு வெளியே சுத்தினாலும் அவனுக்கான பாதுகாவலர் இரண்டு பேர் எப்பொழுதும் இருப்பார்கள். சற்று தள்ளியே என்றும்!! அதுபோல முரளிதரன் முக்கியமாக பேசியதால் அவரை மகளோடு ஐஸ் கிரீம் வாங்கி வர பணித்தான்.

 

ஆசை ஆசையாக வாங்கியவள் மீதி பணத்தை பத்திரமாகக் கொண்டு வந்து தந்தையிடம் கொடுத்துவிட்டு புதிதாக கிடைத்த நண்பர்களோடு சேர்ந்து உருகி வழிந்த ஐஸ்கிரீமை சாப்பிட முடியாமல் வாய் உதடு கன்னம் தாடை என்று வழிய வழிய சாப்பிட்டு கொண்டிருந்தாள் ஆதினி.

 

இதில் பிரண்ட்ஸ்களோடு பேச்சு வேறு!!

 

"‌ஹேய்.. இந்த ஐஸ்கிரீம் சூப்பரா இருக்குல்ல?"

 

"ஆமா.. நாங்க வீக்லி சண்டே இங்கு வரும் போதெல்லாம் கண்டிப்பா ஐஸ் வாங்கி எங்க அப்பா தருவாங்க சூப்பரா இருக்கும்!!" என்றது மற்றொரு வண்டு..

 

"ஆமா.. இந்த சாக்லேட் எவ்வளவு சூப்பர் தெரியுமோ?" என்றது மற்றொன்று.

 

ஆதினியோ "எனக்கு இந்த மேங்கோ பிளேவர் புடிச்சிருக்கு!! நெக்ஸ்ட் டைம் நான் சாக்லேட் ட்ரை பண்றேன்" என்று அவர்களின் சிறிய உலகத்தின் சம்பாசனையும் அவர்களைப் போலவே அலாதியானது!! அழகானது!! 

 

இப்படியாக ஐஸ் கிரீமை காலி செய்து விட்டு அவரவர் பெற்றோரிடம் சென்று கையை துடைத்துக்கொள்ள வேகமாக ஓடி வந்தவள், கர்சீப் கேட்டு கையை நீட்டினாள். ருத்ரனும் முரளிதரனிடம் பேசிக்கொண்டே அருகில் இருந்த பைபில் லேசாக கர்சீப்பை நனைத்து அவள் வாய் எல்லாம் துடைத்தான். அங்கங்கே ஒட்டியிருந்ததையும் ஐஸ்கிரீமை கவனமாக துடைத்தவன், "நீ தின்னா ஐஸ்கிரீம்ல பாதி என் கர்சீப்ல தான் இருக்கு" என்றான் கிண்டலோடு!!"

 

சிறிது நேரம் மகளை விளையாட விட்டு மதியம் நெருங்கும் முன் வீட்டுக்கு அழைத்து வந்து விட்டான்.

 

"சரி பட்டு சமத்தா சொர்ணமா கிட்ட குளிச்சுட்டு டிரஸ் பண்ணிட்டு வருவீங்களாம்.. சுட சுட இன்னிக்கி பிரியாணி பண்ணி இருக்காங்க.. ஒரு வெட்டு வெட்டிட்டு நம்ம கட்டைய நீட்டுவோம்" என்று அவன் சிரிப்போடு செல்ல அப்பாவுக்கு ஹைஃபை கொடுத்து விட்டு சொர்ணமாவை தேடி ஓடினாள் சின்னஞ்சிட்டு.

 

ஆதினி சென்றவுடன் இவனும் ஒரு குளியல் போட்டு வரலாம் என்று குளியலறை கதவை திறக்கவும்… "ஐயா.. ஐயா.. சீக்கிரம் வாங்க…" என்று சொர்ணாமாவின் கணவன் குரலும்.. "தம்பி.. தம்பி சீக்கிரம் வாங்க!!" என்று சொர்ணமாவின் குரலும் பதட்டத்தோடு கேட்க, கையில் எடுத்த துண்டை விசிறி எறிந்துவிட்டு வேகமாக ஓடினான் கீழ் அறையை நோக்கி…

 

"என்னாச்சு.. என்னாச்சு கா..??" என்று இரண்டு இரண்டு படிகளாக தாவி மூச்சு வாங்க நின்றவனை கண்டு சொர்ணமா அழுத விழிகளோடு அறையை காட்ட.. அங்கே ஆதினி மூச்சு பேச்சு என்று கண்கள் சொருக கிடந்தாள்.

 

"பட்டு…!!" என்று தாவி சென்று மகளை மடியில் கடத்தி கன்னங்களை தட்டி பார்க்க அவளோ வதங்கிய கொடியாய் அவன் மேலே சரிந்தாள்.

 

"என்னாச்சு... என்னாச்சு.. அக்கா? இப்ப நல்லா தானே உங்க கூட வந்தா?" என்று திரும்பத் திரும்ப பெண்ணின் கன்னத்தை தட்டி அவனுக்கு தெரிந்த எளிய முதல் உதவி எல்லாம் செய்ய எதுவும் பலனிக்காமல் மயங்கிய நிலையிலேயே கிடந்தாள் குழந்தை.

 

"தெரில்லிங்க தம்பி குளிக்கப் போக டிரஸ் எல்லாம் எடுத்துட்டு இருந்தேன்.. பேச்சிட்டே இருந்த குழந்தை சத்தம் கேட்கல… திரும்பி பார்த்தா மயங்கி கிடக்கிறா.. கண்ணெல்லாம் அப்படியே மேலே நட்டுக்கிச்சு.. எனக்கு என்ன செய்றதுனு தெரியவில்லை தம்பி" என்றதும் ஆதினியை அப்படியே இரு கைகளில் அள்ளியவன், "கார்ட்ஸ்…" என்று கூவிக்கொண்டே வர, அதற்குள் சொர்ணமாவின் கணவர் சென்று காரை எடுப்பதற்கு சொல்லி இருக்க.. சைரன் சத்ததோடு வேகமாக மகா மருத்துவமனையை நோக்கி சென்றது, ருத்ரனின் கார் அவனது மகள் ஆதினியை தாங்கி…

 

செல்லும் வழிகள் எல்லாம் அவன் உயிர் அவனது கைகளிலேயே இல்லை... மகள் மடியில் கடத்தப்பட்டு இருக்க... இவன் வாய் பட்டு பட்டு என்று‌ ஜெபம் சொல்ல.. மனதில் அத்தனை பிரார்த்தனை!! அத்தனை சண்டை!! நந்தினியிடம்…

 

ஒரு சமயம் அவளை தெய்வமாக பாவித்து குழந்தையைக் காப்பாற்றி தரும்படி கெஞ்சினான்... அடுத்த கணம் அவளையே திட்டி தீர்த்தான். "எல்லாம் உன்னால தாண்டி!!" என்று!! பாவம் தன் மனதில் உள்ள துக்கத்தை கூட பகிர்ந்து கொள்ள முடியாத நிலையில் அவனும் என்னதான் செய்வான்?

 

ருத்ரனுக்கு மகதியின் நினைவு வர இவன் மருத்துவமனை செல்லும் முன்னே அவளுக்கு அழைத்தான். 'என்ன கலெக்டர் ஞாயிற்றுக்கிழமை கூட கால் பண்றாரே?' என்று அப்பொழுதுதான் பூமிக்கு உதித்த ஒரு மகவை பரிசோதனை செய்து முடித்து வந்தவள், வீட்டுக்கு கிளம்பலாம் என்ற நிலையில் அவனது போனை பார்த்து யோசனையோடு எடுத்தாள்..

 

"மகதி… மகதி…" என்றவனுக்கு அதற்கு மேல் பேச்சே வரவில்லை என்னதான் கலெக்டராக பல அவசர நிலைகளை கையாண்டாலும்.. சங்கடமான சூழ்நிலை கண்டு சமாளித்தாலும்… அதிரடியாக பல காரியங்களை செய்தாலும்.. தன் ரத்தம் என்று வரும்போது தன்னை அறியாமல் நடுங்குவது தந்தையின் இயல்பு தானே!! அதில் ருத்ரன் மட்டும் விதிவிலக்கா என்ன?

 

அவனின் குரல் பதட்டத்தை கண்டு யாருக்கோ ஏதோ என்று யோசித்தவள் "பிரதாப் சார் என்ன ஆச்சு? யாருக்காவது உடம்பு முடியலையா? எமர்ஜென்சியா?" என்று கேட்க..

 

"ஆமா... ஆதினி… ஆதினி.." என்றவுடன் அதற்கு மேல் அவனால் பேச முடியவில்லை..

 

"டென்ஷன் ஆகாதீங்க!! டோண்ட் வொர்ரி.. நான் எமர்ஜென்சிக்கு வெளிய நிக்கிறேன். நீங்க சீக்கிரம் கூட்டிட்டு வாங்க பேபியை" என்றவள் எமர்ஜென்சி வார்டை ரெடி பண்ண செய்து ஸ்டக்ச்சரோடு வெளியில் காத்திருக்க.. ஐந்தாவது நிமிடம் அவனும் வந்து சேர.. பிரதாப்க்கு பேசவே முடியவில்லை. எமர்ஜென்சி வார்டு சென்று ஆதினி வைட்டல்ஸ் எல்லாம் செக் செய்தவள் அதிர்வோடு ருத்ரனை பார்த்தாள்.

 

அருகில் இருந்த செவிலியருக்கு கட்டளை கொடுத்துக் கொண்டே சிகிச்சை அளித்தவள், ருத்ரனிடம் என்ன நடந்தது என்று சுருக்கமாக சொல்லுமாறு கேட்க.. அவனும் தனக்கு தெரிந்தது திக்கி திணறி கூறி முடித்து, துவண்டு கிடக்கும் மகளையே வேதனையோடு பார்த்தான்.

 

அதற்குள் மகாதேவனையும் இவள் அவசரம் என்று அழைத்திருக்க அவரும் வந்து சேர்ந்தார்.

 

தந்தை மட்டுமல்லாது இன்னும் அவளது நட்பில் இருக்கும் இரு மருத்துவர்களை அழைத்தாள். அதுவரை ருத்ரனை வெளியில் அமர்ந்திருக்க சொல்ல.. அவனோ எமர்ஜென்சி வார்டை பார்த்தவாறு அமர்ந்திருந்தான். 

 

'உள்ளே என்ன நடக்கிறது என்று தெரியவில்லை? மகளுக்கு என்ன ஆனது என்றும் புரியவில்லை? இவள் மட்டும் பார்க்காமல் இன்னும் இரு மருத்துவர்களை வேறு அழைத்து இருக்கிறாளே? அப்போ விஷயம் பெரிசா? பட்டு… பட்டு.. என்னடா ஆச்சு உனக்கு?' என்று பரிதவித்து போனான் ருத்ரன்.

 

இந்நிலையில் அவன் ஒரு கலெக்டராக யோசித்து இருந்தால் கண்டிப்பாக அந்த சூழ்நிலைகளை ஆராய்ந்து என்ன பிரச்சனை என்பதை இலகுவாக கண்டுபிடித்து இருப்பான். ஆனால் தந்தை உணர்வுகளோடு அல்லவா தத்தளித்துக் கொண்டிருக்கிறான்!! எங்கனம் கண்டுபிடிக்க…??

 

தவியாய் தவித்து.. தனது இதயத்துடிப்பை வெகுவாக மிகுதியாய் கேட்டு.. அதிலிருந்து கடக்க முடியாமல்.. கடந்த அரை மணி நேரத்தை கடக்க முடியாமல் இவன் கடக்க.. வெளியில் வந்த மகதியின் முகத்தில் பெரும் குழப்பம் கலந்து அதிர்ச்சி!!

 

அமர்ந்திருந்தவன் முன்னால் வந்ததென்று "பிரதாப் சார்…" என்றவுடன் விருட்டென்று எழுந்தவன் "பட்டு.. பட்டு நல்லா இருக்க தானே? ஒன்னும் பிரச்சனை இல்ல தானே?" என்று தவித்தான் தந்தையாய்...

 

"கொஞ்சம் பிரச்சனை தான் சார். எப்படி சொல்றது.. ஹெவி டோஸ் ஆஃப் எம்டிஎம்ஏ… பரவாலான வார்த்தை பரவசம் என்பது!!" என்றதும் அதிர்ச்சியானவன் அப்படியே சமைந்து அமர்ந்து விட்டான்.

 

"காலையில பேபி வெளியே எதுவும் சாப்பிட்டாளா?" என்று கேட்டவளை யோசனையோடு அவள் முகத்தை பார்த்தவன் "ஆம்.. ஐஸ்கிரீம்" என்றான்!!

 

"அப்போ... இவளோடு சாப்பிட்ட மற்ற குழந்தைகளின் நிலை?" என்றவன் தந்தையிலிருந்து கலெக்டராக மாறி உடனடியாக அந்த பார்க்கை நோக்கி விரைந்தான் மகளை மகதியை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு...


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top