மயக்கம் 2
தன் எதிரே அமர்ந்து தன்னை வாரிக் கொண்டிருக்கும் தம்பி தணிகைவேலனையும் அவனது நண்பன் குணாவையும் தான் கோபமாக புசுபுசுவென மூச்சை விட்டுக் கொண்டு முறைத்து பார்த்துக்கொண்டு இருந்தாள் கிருத்திலயா..!!
“பாவிகளா.. பாவிகளா.. 11 உயிரை காவு வாங்கிட்டீங்களே ஒரு கப்புக்காக..!!” இது வேலன்..!
“ஆமா டா வேலா.. உயிரை காவு வாங்கியேனும் அப்படிப்பட்ட கப்பு தேவையாடா?” இது குணா..!
“இதுவே நம்ம டீப்பா இருந்தா.. அப்படிப்பட்ட கப்பே தேவையில்லைனு திருப்பி கொடுத்திருப்பாங்க.. ஏன்னா நம்ம மானமுள்ளவங்க ரோஷமுள்ளவங்க… அத விட பாசமுள்ளவங்க.. பண்பானவங்க..”
“டேய் போதும்டா.. நிறுத்துங்கடா..! நீங்க ரெண்டு பேரும் என் கோபத்தை ஏத்துறீங்க டா..!” என்று பல்லை கடித்துக் கொண்டு சீறினாள் கிருத்தி..!
“ஏய்.. இது போங்கு டி.. ஆரம்பத்துல நீ என்ன சொன்ன? நாங்க என்ன சொன்னாலும் உனக்கு கோவம் வராதுனல்ல..! இப்ப மட்டும் என்னத்துக்குடி உனக்கு கோவம் வருது? அமைதியா ஆல் இஸ் வெல் சொல்லிக்கிட்டு உட்கார்ந்திரு” என்றதும் கண்களில் கனல் கக்க தம்பியை முறைத்தாள் கிருத்திலயா..!
அன்று சனிக்கிழமை தணிகைவேலனுக்கும் குணாவுக்கும் பள்ளி விடுமுறை. இருவரும் காலையிலிருந்து குணா வீட்டில்தான் படித்துக் கொண்டிருந்தனர். அவ்வப்போது மதிய உணவை இருவரும் மாற்றி மாற்றி நண்பர்கள் வீட்டில் உண்பது வழக்கம்..!
அன்று உணவை குணா வீட்டில் உண்டு விட்டு “சிறிது நேரம் விளையாடலாம்டா?” என்றபடி தணிகைவேலன் வீட்டுக்கு இருவரும் வர.. அந்நேரம் பார்த்து தான் காலையில் செய்ய மறந்த தியானத்தை செய்கிறேன் என்ற பெயரில் உணவை நன்றாக உண்டு விட்டு கண்கள் சொக்க அமர்ந்திருந்தாள் கிருத்திலயா.
சிவகாமி கண்டிப்பாக மதியம் உண்டதும் உறங்கக்கூடாது என்று கட்டளையிட்டிருந்தார்.
இவளோ “உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு. எனக்கு இருக்காதா ஆத்தா.. ப்ளீஸ் ஃபர்கிவ் மீ..” என்பது போல அம்மாவை பாவமாக பார்த்தும் அவளின் எந்த ராஜதந்திரமும் எடுபடாமல் போக.. வேறு வழியின்றி ஹால் சோபாவில் அமர்ந்து தியானம் செய்வது போல தூங்கி வழிந்து கொண்டிருந்தாள் கிருத்தி.
தம்பியும் தம்பியின் நண்பனும் வரும் பொழுது இவள் தூங்கி வழிந்து கொண்டிருந்ததை கண்டுவிட்டு அவள் பிடறியிலேயே ஒன்றுவிட்ட தணிகைவேலன் “அம்மா இவள தியானம் செய்ய சொன்னா இங்க பாருங்க.. உட்கார்ந்து தூங்கிட்டு இருக்கா..” என்று உரக்க உள்ளே அன்னையை பார்த்து குரல் கொடுக்க..
“கிருத்தி..!” என்ற சிவகாமியின் கர்ஜனையில்..
“ம்மா.. அவன் பொய் சொல்றான் நான் கண்ண மூடி தியானம் பண்ணிட்டு இருக்கும் போது என் பிடறியிலேயே அடிச்சிட்டான் மா..” என்று இவள் பதிலுக்கு புகார் கூறினாள்.
“இல்லம்மா பொய் சொல்றா..!” என்று தணிகைவேலன் கூற..
“நான் பொய் சொல்றனாடா? நீ தாண்டா பொய் சொல்ற. பொய் புலுவி டா நீ..” என்று அவள் திரும்ப கத்த.. அங்கே ஒரு குட்டி கார்கில் யுத்தமே நடந்து கொண்டிருந்தது.
“இரண்டு பேரும் சண்டை போடாதிங்க.. அப்புறம் நான் பேசமாட்டேன் விசிறி மட்டை தான் பேசும்” என்ற சிவகாமியின் குரலில் இருவரும் அமைதியாகினர்.
“சரி சரி.. எக்கோவ்.. நீ தியானம்தான் பண்றேன்னு நாங்க ஒத்துக்குறோம். ஆமா எதுக்கு இந்த தியானம் பண்ற இப்ப நீ?” என்று வேலன் கேட்க..
இருவரையும் முறைத்து பார்த்தவள் பல்லை கடித்தப்படி “மன அமைதிக்கு..! எந்த குரங்கு வந்து குரங்கு சேட்டை பண்ணாலும் மனச தாக்க விடாம.. அதுக்கு மேல கோபப்படாம.. ஜென் நிலையில் இருப்பதற்கு..!” என்று தம்பியையும் அவன் நண்பனையும் குரங்கு என்று விட்டதில் அவளுக்கு உள்ளுக்குள் ஒரு மகிழ்ச்சி..!
“ஓஓஓ எக்கோவ்.. அப்போ உங்களுக்கு நாங்க என்ன பேசினாலும் கோபமே வராதா?” என்று அப்பாவியாய் கேட்ட குணா தணிகைவேலனுக்கு கண்ணை காட்ட..
“நீ என்னடா நெனச்சிகிட்ட என் அக்காவை பத்தி..! அவ ராமன் போல ஒரு வில்.. ஒரு சொல்.. ஒரு இல்..! என்ன க்கிருத்தித்இஇ?” என்று அவன் இழுக்க..
“ஆமா டா.. பகோடாஸ்..!” என்று பல்லை கடித்துக் கொண்டு கூறினாள் அவள்.
“அப்ப வாடா வேலா அக்கா கோபப்படுகிறாங்களா இல்லையான்னு நாம
ஒரு டெஸ்ட் பண்ணி பார்த்துடலாம்” என்று இருவரும் ஜம்பமாக அவள் முன்னே அமர்ந்தனர்.
இருவரும் முதலில் வேற ஏதோ பேச பேச.. அவளோ கோபம் கொள்ளாமல் அமைதியாகவே பதில் கூறிக் கொண்டிருந்தாள்.
தணிகைவேலன் குணாவிடம் “இவளிடம் இப்படி எல்லாம் பேசினா ஆகாது. இப்ப பாரு நான் பேசுறேன்.. எப்படி மூக்கை விடைச்சுக்கிட்டு கோபம் வருதுன்னு மட்டும் பாரு..” என்று ரகசியமாக பேசியவன் அவளிடம்,
“ஆமா கிருத்தி.. கடைசியா 18 வருஷம் கழிச்சு எப்படியோ ஆர்சிபி கப் அடிச்சிட்டீங்க போல.. குருசாமி ஆகல போல..” என்று அவருடைய வீக்பாய்ண்ட்டை அவன் டச் செய்ய கண்களை உருட்டி அவனை முறைத்தவள்,
“டேய் எதை வேண்டுமானாலும் பேசு.. ஆனா என் டீமை பத்தி மட்டும் பேசாதே..!” என்று பல்லை கடித்தாள்.
“பாத்தியா?” என்று குணாவிடம் கண்ணை காட்டியவன்,
“அதெல்லாம் நீ ஏன் சொல்ற? அத சொல்லக்கூடாது..! நீ என்ன சொன்ன? நான் கோபப்பட மாட்டேன் நாங்க என்ன சொன்னாலும்னு சொன்ன.. அதனால அமைதி அமைதி அமைதியோ அமைதி..! என்றவன், அதன் பிறகு வைத்து செய்தான் அவளுக்கு பிடித்த ஆர்சிபி டீமையையும் அதில் விளையாடும் அவளுக்கு பிடித்த விளையாட்டு வீரர்களையும் குறிப்பாக விராட் கோலியை..!
“டேய்.. அவர பத்தி பேசாதே.. ஹி இஸ் கிங் ஆஃப் கிரிக்கெட் யூ க்நோ?” என்று ஆத்திரத்தை காட்டாமல் பல்லை கடித்தாள்
ஆனால் அவர்கள் இருவரும் அவளை கோபப்படுத்தி பார்ப்பது என்று முடிவு எடுத்து விட்ட பின், அதிலும் அவளின் வீக்னஸை அறிந்துக் கொண்ட பின்.. விடுவார்களா என்ன? வைத்து செய்தனர்.. அவளையும் அவளுக்கு பிடித்த ஆர்சிபி குழுவையும்..!
“டேய்.. என் டீமை பத்தி பேச உங்களுக்கு எல்லாம் தகுதியே இல்ல டா..!!”
“ஏன் இல்ல? ஏன் இல்ல?? நீங்க இப்ப தான் கப் வாங்கி இருக்கீங்க.. நாங்க ஏற்கனவே அஞ்சு கப் வைச்சிருக்கோம்..!” என்ற குணா, வேலனை பார்த்து கண் சிமிட்ட..
“ஆமா.. ஆமா.. அஞ்சு கப்.. தட் மீன்ஸ் ப்ஃவை கப்ஸ்..!” என்றான் தான் அணிந்திருந்த ஜெர்சியில் இருந்த ஸ்டார் எண்ணிக்கையை சுட்டிக்காட்டி வேலன்.
“போடா.. போடா.. அடுத்த வருஷம் நானும் புது ஜெர்சி வாங்குவேன் அதுல எங்களுக்கும் ஸ்டார் போட்டு இருக்கும்” என்று முகத்தை சுழித்தாள் கிருத்தி..
“ஏன் டா வேலா.. அடுத்த வருஷம் அந்த கப்ப என்னடா பண்ணுவாங்க?” என்று கேட்டதும் இருவரையும் புரியாமல் பார்த்தாள் கிருத்தி.
நண்பன் என்ன சொல்ல வருகிறான் என்று புரியாமல் “என்னடா சொல்ற? எந்த கப்ப என்ன பண்ணுவாங்க?” என்று அவன் கேட்க..
“அதான்டா மத்த ஒன்பது டீமும் பரிதாபப்பட்டு ஆர்சிபிக்கு குடுத்தோமே அந்தக் கப்ப தான்..!” என்றான் குணா..
“டேய் நீங்க எல்லாம் பரிதாபப்பட்டு ஒன்னும் கொடுக்கல டா.. நாங்க கஷ்டப்பட்டு ஜெயிச்சு வாங்குனது டா..!” என்று பல்லை நரநரவென்று கடித்தாள் கிருத்தி.
அக்காவை பார்த்து சிரித்தவன் “அந்த கப்புக்கு என்னடா குணா? என்று கேட்டான்.
“டேய்ஸ்.. அந்த கப் ரோலிங் கப் அடுத்த வருஷம் யார் ஜெயிக்கிறாங்களோ அவங்க கிட்ட போகும். ஆனா அதுல இந்த வருஷத்தோட சாம்பியன்ஸ்னு ஆர்சிபி டீமோட பேரு இருக்கும்” என்று கெத்தாக தன் டீ ஷர்டில் இருந்த காலரை தூக்கி காட்டி கூறினாள் கிருத்தி..!
“அதை தான் டி கேட்கிறோம் நாங்களும்.. 11 பேர் ரத்தக்கரை அந்த கப்புல படிஞ்சிருக்கு. பாவப்பட்ட அந்த கப்ப எப்படி எடுத்துட்டு வருவாங்க?” என்று வேலன் படு சீரியஸாக கேட்க.. கிருத்தியும் “வாட்?” என்று வாயை பிளந்தாள்.
“ஆமா ஆமா.. பாவம் அப்பாவி 11 பேர் இறந்துட்டாங்க உங்க ரேஷிங்ல” என்று அப்போ இறந்தவர்களுக்கு இப்போது தூக்கம் கொண்டாடினான் குணா.
“டேய் வேணாண்டா.. அதெல்லாம் பேசாதீங்க டா..! அதெல்லாம் ஏதோ தவறுதலா நடந்துட்டு..!” என்று இவள் வாதாட..
“எதே? தவறுதலா நடந்ததா? 11 உயிர் உனக்கு தவறுதலா நடந்த ஆக்சிடென்ட்டா? அவ்வா..! அவ்வா..!” என்று வாயில் அடித்துக் கொண்டான் வேலன்.
“ஆமான் டா மச்சான். பாவப்பட்ட கப் அது. அடுத்த வருஷம் நம்ம கப்பு ஜெயிச்சா கூட நம்ம வேண்டாம்னு சொல்லிடலாம் என்ன?” என்று இவர்கள் என்னவோ சிஎஸ்கே டீமின் உரிமையாளர் போல பேசினர்.
“இல்லடா குணா..! அந்தக் கப்ப என்ன பண்ணுவாங்கனா நல்ல ஸ்ப்ரிட்டு போட்டு கழுவி அதில் உள்ள ஈவில் ஸ்பிரிட் எல்லாம் போற மாதிரி இந்தியாவில் உள்ள முக்கியமான கோயில் தர்கா சர்ச் எல்லாம் வச்சு பூஜை பண்ணி அதுக்கப்புறம் தான் டா கொண்டு வருவாங்க.. அப்பதான் அந்த கப்புல உள்ள பாவம் கொஞ்சமாவது போகும்..!” என்று ஞானி போல் பேசியவனை கண்டதும் அதுவரை இழுத்து பிடித்திருந்த நிதானம் எல்லாம் பறந்து போக..
“அடே.. வேலா..!” என்றபடி அருகில் இருந்த கொசுப்பேட்டை தூக்கிக்கொண்டு இருவரையும் துரத்தினாள் கிருத்தி.
இருவரும் வீட்டை சுத்தி சுத்தி ஓட “வீட்ல சத்தம் பண்ணாதீங்க..!” என்று சிவகாமியின் அதட்டல் குரலில் இருவரும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று மாடிக்கு ஓடினர்.
கீழே இரட்டைப் படுக்கறை கொண்ட ஆயிரம் சதுரடி உள்ள வீடு.. மேலோ ஒற்றைப் படுக்கையறை கொண்ட 600 சதுர அடிக்குள் வீட்டைக் கட்டி மீதியுள்ளவற்றை மொட்டை மாடியாக விட்டிருந்தார் சிவகாமி.
அங்கேதான் இருவரும் ஓட பின்னாலேயே இவள் துரத்திக் கொண்டு ஓடினாள்.
அன்று சனிக்கிழமை பாதி வேலை நேரம் முடித்து வந்து நன்றாக தூங்கி எழுந்த திரிபுரபவுனனும் மாலை போல காபி போட்டு எடுத்துக்கொண்டு ஷார்ட்ஸ் மற்றும் கையில்லா பனியனோடு அந்த மாடியில் ஒட்டினாற் போல் உள்ள வேப்பமர நிழலில் நின்று சிப்பு சிப்பாக குடித்துக்கொண்டிருந்தான்.
ஒரு கையிலோ காஃபி கப் இருக்க மறு கையோ அந்த மாடி திண்டை பற்றி இருக்க.. அவனது பார்வையோ வெளியே சாலையை பார்த்திருந்தது.
திடுதிடுவென்ற இருவரும் ஓடிவரும் சத்தத்தில் இவன் திரும்பிப் பார்க்க குணாவும் வேலனும் ஓடி வந்தனர்.
இவனைப் பார்த்து மெல்லமாக ஹாய் என்றபடி இவர்கள் அங்கு இருக்கும் மாடித் திண்டில் அமர்ந்து வெடித்து சிரித்தனர்.
இருவரும் எதற்காக சிரிக்கிறார்கள் என்று தெரியாமல் அவர்களை கண்களை சுருக்கி பார்த்தபடி இருந்தான் வாகீஸ திருபுரபவனன்.
சற்று நேரத்தில் முன்னை விட அதிகமாக சத்தம் கூடவே “டேய் எங்கடா இருக்கீங்க?” என்று கீறிச்சிடும் பெண்ணின் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தவன் இன்னும் கூர்ந்து பார்க்க.. மாடியில் வேகமாக ஓடி வந்தாள் கையில் கொசு பேட்டோடு கிருத்தி.
அவளை கண்ட நொடி சற்றென்று பார்வையை மறுபுறம் திருப்பிக் கொண்டான் பவனன்.
இருவரும் அவளைப் பார்த்ததும் இன்னும் விழுந்து விழுந்து சிரிக்க..
“ராஸ்கல்ஸ்..! குட்டி ராஸ்கல்ஸ்.. உங்களுக்கு கிரிக்கெட் சொல்லிக் கொடுத்ததே நான் டா..! அரை ட்ரவுசர் போட்டுட்டு சுத்திட்டு இருக்கும்போது பேட் கைல புடிச்சு இப்படி அடிக்குனும்னு சொல்லி கொடுத்ததே உங்களுக்கு நானு.. இன்னிக்கு என்ன வெச்சு ரெண்டு பேரும் வாரீங்களா.. பக்கோடாஸ்.. நமத்துப் போன பக்கோடாஸ்..!” என்று அந்த பேட்டாலேயே அவர்கள் காலில் இரண்டு போட்டாள் கிருத்தி.
“அதுக்காக உன் டீமுக்கு நாங்க கூஜா தூக்க முடியுமா? நீ வேணா தூக்கு.. நாங்க எல்லாம் தூக்க மாட்டோம் பா.. ஆர்சிபி கப்.. லாலிபாப்ப சப்பு..!” என்று மீண்டும் இருவரும் அவளை உசுப்பேற்ற..
“போங்கடா டேய்..! ஒரு மேட்ச் சரியா விளையாடலைனா கூட பிடிச்ச டீம் ஆட்களையே திட்டி தீக்குற ஆட்கள் நாங்க இல்லடா..!”
ஓஹோ… என்றனர் இருவரும் கோரசாக..!
“பின்ன.. 18 வருஷமா பைனல்ஸ்க்கு வந்து தோத்தாலும் இல்ல பைனல்ஸ்கே வராம போனாலும் எங்க டீம நாங்க விட்டுக் கொடுத்தது கிடையாது..! எப்பவும் என் டீமை நான் தரக்குறைவா பேசுனது கிடையாது..! எப்பவுமே ஆர்சிபிக்கு நான் லாயிலா தான் இருப்பேன். இருந்திருக்கிறேன்.. இனியும் இருப்பேன்..! பிகாஸ் ஐ அம் ஆர்சிபியன்ஸ்..!” என்று கெத்தாக கூறி அவர்களுக்கு அருகிலேயே அமர்ந்தவளை கூர்ந்து பார்த்தான் திரிபுரபவனன்.
பவனன் இங்கே பார்ப்பதை கண்ட வேலன் “அண்ணா உங்களுக்கு எந்த டீம் பிடிக்கும்? ஆர்சிபினு மட்டும் சொல்லிடாதீங்க?” என்று அக்காவை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டு அவன் கேட்க..
பொதுவாக யாரிடமும் அதிகம் பழக மாட்டான் திருபுரபவனன். அவன் உண்டு.. அவன் வேலை உண்டு.. அவனது மாலை நேர வேப்பமர நிழல் உண்டு.. அதனோடு ஒரு காபி உண்டு.. என்று ஒரு தனித்த வனத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் அவனிடம் அவ்வப்போது வந்து அவனது கூட்டில் தலையை விட்டு பேசுவது இரண்டு ஆட்கள் தான்.
ஒன்று சிவகாமி அன்பாக.. அனுசரணையாக..! மற்றொரு ஆள் வேறு யார் நம் நாயகி கிருத்திலயால்தான் அவனிடம் சண்டை போட என்று..!
வேலன் பெரும்பாலும் அவனை பார்க்கும் மாத்திரத்தில் ஒரு ஹாய் பாயோடு கடந்து விடுவான். இன்று அவன் தங்களையே பார்த்து இருக்க, சரி பேசுவோமே என்று பேச திருபுரபுவனனோ தலையாட்டி..
“நான் கிரிக்கெட்டெல்லாம் பாக்குறது இல்ல தம்பி.. எனக்கு கிரிக்கெட்ல வர்ற மேட்ச் பிக்ஸிங் புடிக்காது” என்று பதில் அளித்தான்.
“என்ன கிரிக்கெட் பிடிக்காதா?” என்ற மூவருமே அதிர்ந்தனர்..!
“இப்படி கிரிக்கெட் பிடிக்காம சில ஜீவராசிகளும் இந்த பூமியில் வாழ்கிறார்கள் போல..” என்று மெதுவாக முணுமுணுத்தாள் கிருத்தி.
அவள் என்னவோ தன்னை பற்றி தான் முணுமுணுக்கிறாள் என்று அவள் இதழ் அசைவில் அவனுக்கு புரிந்தது. அந்த சிவந்த இதழ்களின் முணுமுணுப்பை பார்த்ததும் இவன் இதழ்கள் இறுக்கமாக மூடிக் கொண்டன..!
இறுக்கம் இலகுவாக மாறும் தருணம் வருமோ?
இனிதாக பேசும் காலம் கனியுமோ?
“கிரிக்கெட் மட்டுமே வாழ்க்கை உலகம் எண்டு கிடையாது தம்பி. அதத்தான்டி இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கு.. ஒப்பீனியன் டிஃபர்ஸ்..!” என்று ஸ்டைலாக தோளைக் குலுக்கிக் கொண்டவன் “பை” என்று வேலனிடம் கூறிவிட்டு ஓரப் பார்வையால் கிருத்திலயாவை அளந்து விட்டு தன் வீட்டிற்குள் சென்று கதவடைத்தான்.
“இந்த அண்ணா ஏன் யார்கிட்டயும் நல்லா பேச மாட்டேங்கிறாங்க?” என்று குணாவின் கேள்விக்கு பதில் தான் இருவருக்கும் தெரியவில்லை.
அதே நேரம் தன் அறைக்குள் சென்றவனுக்கு ஜன்னல் வழியே கிருத்திலயா தன் வீட்டையே பார்ப்பதை புரிந்தவன், “கொஞ்ச நேரம் அந்த நிழலில் நிண்டு ரிலாக்ஸ் பண்ண வந்தா இந்த சில்வண்டு என்னை விரட்டி விட்டுட்டு..! இரு உன்னை எப்படி விரட்டுவது எண்டு எனக்கு தெரியும்..!” என்று நினைத்தவன் வேண்டுமென்றே அந்த பாடலை போட்டான்.
அதாங்க.. மலையூர் மம்பட்டியானை..!
//அட மாமோய்ஈஈஈ…// என்று பாடல் வரி ஆரம்பித்ததும் பயந்து அதிர்ந்து வெடுக்கென்று திரிபுரபவனின் வீட்டை பார்த்தாள் கிருத்தி.
ஜன்னல் வழியே உள்புறம் எதுவும் அவளுக்கு தெரியவில்லை. ஆனால் உட்புறத்தில் இருந்த திரிபுரபவனனுக்கு அவள் நன்றாகவே தெரிய..
அவள் முகத்தில் முதலில் தெரிந்த அந்த அதிர்ச்சியும்.. அதன்பின் மெல்ல மெல்ல கோபத்தில் சிவப்பேற.. அவள் முகம் அவனுக்கு கொஞ்சம் சுவாரசியத்தை கொடுக்க.. இன்னும் கொஞ்சம் சத்தத்தை கூட்டி வைத்தவன்,
இப்பொழுது கையை கட்டிக்கொண்டு ஜன்னலில் தோளைச் சாய்ந்து அவளது முகமாக மாற்றத்தை தான் பார்த்தான், கண்கள் சிமிட்டாமல்..!
//டட டட ட டடடடா
மம்பட்டியான் அட மம்பட்டியான்
டட டட ட டடடடா
மம்பட்டியான் அட மம்பட்டியான்..
டட டட ட டடடடா
மம்பட்டியான் அட மம்பட்டியான்
டட டட ட டடடடா
மம்பட்டியான் அட மம்பட்டியான்..//
பாடல் உச்சஸ்தொணியில் ஒலிக்க..
“ஆரம்பிச்சுட்டான். ஆரம்பிச்சுட்டான்.. கொஞ்ச நேரம் நிம்
மதியா இருக்க விட்றானா?” என்று பல்லை கடித்துக் கொண்டு வேகமாக கீழே சென்றவள், அவன் வீட்டைக் கடக்கையில் முறைக்க தவறவில்லை..!
அதை அவன் பார்க்கவும் தவறவில்லை..!!
தொடரும்..
அவ கண்ணில் கோவம் தான் தெரியுது....
ஆன அவளை பார்க்காதது போல இருந்தாலும்.....இவன் கண்களில் கள்ளத்தனம் தெரியுதே.....
பயா விழுந்துட்டான் போலவே😉😉😉😉😉😉