அத்தியாயம் 1
சென்னை மகா'ஸ் மருத்துவமனை!!
தி ஃபேமஸ் கைனக்காலஜிஸ்ட் துர்கா மகாதேவன் மற்றும் தி ஃபேமஸ் கார்டியாலஜிஸ்ட் மகாதேவன் அவர்களின் உழைப்பில் உருவாகி இன்று உயர்ந்த நிற்கும் ஆறு அடுக்கு கட்டிடம்!! வெறும் கட்டிடம் மட்டுமல்ல அது..
அவர்களின் இருபது வருட கடும் உழைப்பு…. தூக்கமில்லா சேவை….
அவர்களின் கைராசி…. என்று ஏகப்பட்டது சொல்லலாம்!!
இவர்களின் ஆத்மார்த்தமான சேவையின் பின்னே இருப்பது என்னவோ பணமாக இருந்தாலும், அதையும் ஒரு வித மனிதத்தன்மையுடன் செய்து வருகின்றனர்.
'எது ஒற்றை தலைவலி என்று போனால்.. எக்ஸ்ரே பிளட் டெஸ்ட் ஸ்கேன் அது இது என்று லட்சம் லட்சமாக புடுங்குகிறார்களே… அதுவா ஆத்மார்த்த சேவை?
கண்டிப்பாக!! அத்தனையும் எடுத்து நம் தலைக்குள் நம் மூளையும் உடம்பின் மற்ற பாகங்களும் மிக மிக பத்திரமாக இருக்கின்றன என்று உறுதிப்படுத்திக் கொள்கிறோம் அல்லவா? அப்போது ஆத்மார்த்த சேவை தானே!!
என்ன செய்வது? இப்போது உள்ள கலிகாலத்தில் 50% நல்லவனை கண்டாலே நாம் போற்றும் நிலைமையில் தான் உள்ளோம்!!
தனது பாலிய நண்பரும் கோயம்புத்தூரின் பிரபல ஹர்ஷா மருத்துவமனையின் சொந்தக்காரருமான பாஸ்கரனை வாயிலுக்கே வந்து வரவேற்று தன் மருத்துவமனையை சுற்றி காண்பித்துக் கொண்டிருந்தார் மகாதேவன் சற்று பெருமையோடு!!
"பாஸ்கரன்.. தி ஃபேமஸ் நியூராலஜிஸ்ட்!! சென்னையில இந்த அடியனோட ஹாஸ்பிடலுக்கு வந்ததற்கு ரொம்ப மகிழ்ச்சி டாக்டரே!!" என்று கிண்டல் செய்த நண்பரின் முதுகில் தட்டிய பாஸ்கரன்,
"ஏண்டா.. இது சின்ன ஹாஸ்பிட்டல்லா? அதுவும் சென்னையில் இப்படி ஹாஸ்பிட்டல் ரன் பண்றது எவ்வளவு பெரிய சாகசம் தெரியுமா? கோயம்புத்தூரில் இந்த அளவுக்கு காம்பெடிஷன் எல்லாம் இல்லை!!" என்று ஒவ்வொன்றாய் பார்த்துக் கொண்டே வந்தவர், மனதில் நண்பனை மெச்சிக்கொண்டு அதை வாய் வார்த்தைகளாலும் கூறினார். சிலவற்றில் சில கருத்துக்களையும் கூற அதனையும் கேட்டுக் கொண்டார்.
"பரவால்லடா… உன் பொண்ணையும் டாக்டருக்கே படிக்க வைத்திருக்க!! உன் பொண்ணும் நம்ம பீல்டிலேயே இருக்கிறது நல்லது!! நீ கார்டியாலஜிஸ்ட், உன் வைஃப் கைனகாலஜிஸ்ட், உன் பொண்ணு பீடியாட்ரீசன்… மொத்தமா பேஷண்ட்ஸ வளச்சி போட்டுடீங்க டா.. உனக்கு அப்புறம் உன் பொண்ணு இந்த ஹாஸ்பிடலை பார்த்துப்பா…" என்றவர் பேச பேச.. பெருமூச்சு வேகமாக வெளிவந்தது மகாதேவனுக்கு!!
"அந்த கூத்தை நீயே வந்து பாரு… வா!!" என்று அம்மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவுக்கு அழைத்துச் சென்றார் மகாதேவன்!!
குழந்தைகள் நலப் பிரிவுக்கு என்று தனித்தளம் இருக்க.. உள்ளே போகும் முன் சுத்தத்திற்கு அத்தனை முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டே பாஸ்கரன் மகாதேவனை பின்பற்றி நடந்தார். அத்தளம் முழுவதிலும் பிள்ளைகளின் விருப்பமான கார்ட்டூன்கள்.. சூப்பர் ஹீரோக்களும் அங்கங்கே இடம் பெற்றிருந்தனர். மெல்ல சிரித்துக் கொண்டார் பாஸ்கரன்.
"பாருடா...ஹாஸ்பிடல் மாதிரியா இருக்கு.. நல்லா பாரு!! ஏதோ கிட்ஸ் பார்க்குக்கு வந்த மாதிரி இருக்கு!!" என்று நண்பன் சொல்வதின் காரணம் தளத்தில் ஆங்காங்கே பிள்ளைகள் விளையாடுவதற்கு சீசா ஸ்லைடு போன்ற விளையாட்டு பொருட்களும் இருந்தது தான்!!
நியோநாட்டல் பிரிவு கொஞ்சம் உள்ளடங்கி இருக்கும். அதற்கு அடுத்து உள்நோயாளி பிரிவும்.. அதற்கு முன்னால் வெளி நோயாளி பிரிவும் இருந்தது.
நண்பர்கள் இருவரும் பேசிக் கொண்டே நடந்து வர திடீரென்று கூச்சலும் குழப்பமாக ஒரே சத்தம்!! "என்னது திடீரென ஹாஸ்பிட்டல இவ்வளவு சத்தம்? யாருக்கு எதுவும் ஆயிடுச்சா… இல்லை எதுவும் ப்ராளமா? குயிக்கா வா மேன்!!" என்று பாஸ்கரன் வேகமாக முன்னே சென்றார் மகாதேவனை அழைத்துக் கொண்டே…
அங்கே ஒரு குழந்தை ஊசி போடுவதற்குள் அத்தனை ஆர்ப்பாட்டம் செய்ய… அக்குழந்தை அழுவதை பார்த்து மற்ற குழந்தைகளும் தங்களுக்கும் அதே போல ஊசி போடுவார்களோ என்று பயந்து தான் அத்தனை சத்தம்!! அத்தனை கலவரம் அங்கே!!
"என்னடா மகாதேவா ஓபி பார்க்கிற கிளினிக்னா இது? தனியா டாக்டர் செக் பண்ற ஒரு ரூம் இருக்கனும்ல.. அங்க தானே ஒவ்வொரு பேஷண்டா பார்ப்பாங்க.. இது என்ன இப்படி பிள்ளைகள் பேக்ரவுண்ட் மாதிரி இருக்கேடா.. அதுவும் ஒவ்வொரு சேரும் கூட ஒவ்வொரு டாய்ஸ் மாதிரி இருக்கே? நிஜமாகவே இது ஓபி பார்க்கிற இடமா? இல்ல கிண்டர் கார்டனாடா?" என்று வாயில் பிளந்தவர் நண்பரை பார்க்க.. "இது என்ன அதிசயம்? இன்னும் கொஞ்சம் பாரு!!" என்று அங்கே காண்பிக்க…
"அச்சச்சோ… பாப்பு குட்டி இந்த ஊசி எல்லாம் வலிக்கவே வலிக்காது தெரியுமா? இங்க பாரேன் நான் போட்டுகிறேன்" என்றாள் அழகிய யுவதி ஒருத்தி!! தமிழே அழகுதான் அந்த யுவதியின் வாயிலிருந்து வெளிவரும் கொஞ்சும் வார்த்தைகள் அவ்வளவு அழகாகவும் கேட்க இனிமையாகவும் இருந்தது.
வார்த்தைக்கு வார்த்தை அவள் கண்களை உருட்டி பேசும்போது அவள் இதழ்களுக்கு போட்டி போட்டு அந்த கோலி குண்டு கண்களும் அங்கும் இங்கும் உருளுமே.. அதுவே தனி அழகு தான்!!
அவளை போல் அடங்காத சுருள் சுருளான கூந்தல்... அலைபாய்ந்தது அவளது வதனத்தில்!! நீள் வட்ட முகத்தில் கனிந்த சிவந்த கன்னக்கதுப்புகளும்.. துருதுரு விழிகளும் அவ்விழிகளுக்கு மேலே தாங்கி நிற்கும் தனஞ்செயனின் காண்டீப வில்லென புருவங்களும்...
சற்று நீண்டு எடுப்பான மூக்கும்.. கொஞ்ச செல்லும் பன்னீர் ரோஸ் நிறத்தில் உதடுகளும்.. அம்மேல் உதட்டில் கடுகளவு மச்சமும்... மேல் வரிசையில் ஒரு தெத்து பல்லும்.. அவள் முகத்தின் அழகிலே பாஸ்கரன் "டேய்.. யாருடா இந்த பொண்ணு? சிஸ்டரா? ஆனா சிஸ்டர் ஏன் யூனிபார்ம் போடல?" என்று கேள்வி கேட்க..
"இன்ஜக்சன் போடுறதுனால அவளை சிஸ்டர்னு நினைக்காத.. அவ தான் டாக்டரே!! பெயர் மகதி ஸ்ரீ மகாதேவன்…" என்று இழுத்துக் கூறினார் அந்த மகாதேவனில்… அதுவே கூறியது அந்த அழகிய யுவதி தான் மகாதேவனின் லிட்டில் பிரின்சஸ் என்று!!
"உனக்கு இப்படிப்பட்ட அழகான பொண்ணா டா?" என்று வியந்தே விட்டார் பாஸ்கரன்.
"அழகு மட்டுமா கூடவே அறுந்த வாலு.. இவளை எல்லாம் டாக்டர் என்று சொன்னா எவனும் நம்ப மாட்டான் தெரியுமா?" என்றார் சற்று வருத்தம் கலந்து குரலில் மகாதேவன்.
அதற்குள் அந்த குழந்தையும் சமர்த்தாக ஊசி போட்டுக் கொண்டு லேசாக சிரிக்க.. இவளும் சிரித்துக் கொண்டே அக்குழந்தையின் தாயிடம் குழந்தையின் நலத்தை பற்றி விவரித்து மருந்து கொடுக்கும் முறையையும் அறிவுறுத்தி அடுத்த குழந்தைக்கு தாவினாள்.
"ஹாய் டார்லிங்… இப்போ உடம்பு எப்படி இருக்கு?" என்றபடி அந்த குழந்தையை இவள் பரிசோதனை செய்ய..
"போ டார்லிங்.. உன் கூட நான் பேசமாட்டேன்!! போன தடவை இப்படி ஏமாத்தி தான் எனக்கு நீ ரெண்டு ஊசி போட்டுட்ட இங்க.. வீட்டுக்கு போனதுக்கு அப்புறம் வலிச்சது தெரியுமா?" என்று அந்த குழந்தை உதட்டை பிதுக்கி அழுக முனைய..
"அச்சச்சோ ரொம்ப வலிச்சுதா டார்லிங்? அப்ப இந்த முறை டேப்லெட்டா எடுத்துப்போம் நாம!" என்று சொல்லவும் அந்த குழந்தை முகம் சுளிக்க.. "டேப்லெட் ரொம்ப நல்லா இருக்கும் தெரியுமா?" என்று அருகில் இருந்த ஒரு டேப்லட்டை எடுத்து அனாசையமாக வாயில் போட்டுக்கொண்டு அந்த குழந்தையிடம் சூப்பர் என்று செய்கை செய்ய… அக்குழந்தையும் செவ்வனே மருந்துகளை சாப்பிட்டது.
இப்படி குழந்தைகளோடு குழந்தைகளாக.. கொஞ்சி விளையாண்டு.. கதை சொல்லி அவள் மருத்துவம் பார்க்க உண்மையிலேயே மகாதேவன் சொன்னது போல இவள் மருத்துவரா இல்லை கிண்டர் கார்டன் ஆசிரியரா என்று சந்தேகம்
இப்போது பாஸ்கரனுக்கும் வந்தது.
"வா போகலாம்.." என்று பாஸ்கரனை அழைத்து வந்து விட்டார் மகாதேவன். துர்கா இருக்கும் தளத்தையும் பார்க்க அங்கே க்யூ கட்டி நிற்கும் மேடிட்ட வயிற்று பெண்களையும்.. அந்த மேடிட்ட வயிறுக்காக ஏங்கி இவரை காண வந்த பெண்களையும் பார்த்த அவருக்கு மனதில் பல கணக்குகள்!!
சென்னையில் ஒரு கான்ஃபரன்ஸ்காக வந்தவர் வந்த இடத்தில் மகாதேவனை பார்த்துவிட்டு ஜஸ்ட் ஒரு ஹாய் பாய் சொல்லிவிட்டு செல்லலாம் என்று நினைத்தவருக்கு, இங்கே வந்தவுடன் அதுவும் சென்னை முக்கிய இடத்தில் இருக்கும் இந்த மருத்துவமனையையும் அவரின் மகளையும் பார்த்தவருக்கு ஒரே யோசனை!! எல்லாம் அவரது மகனை பற்றி தான்!! மூன்று வருடங்களாக அமெரிக்காவிலேயே குடியிருக்கும் அவனை இழுத்துக்கொண்டு வர இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள நினைத்தார்.
அதன் பின் இவர்களோடு லஞ்சில் வந்து கலந்து கொள்வதாக சொல்லி இருந்த துர்காவும் வந்து சேர…
"டேய் மகாதேவா உன் பொண்ணு இவ்வளவு அழகா எப்படி பொறந்தானு இப்பதாண்டா தெரியுது!!" என்று துர்காவை பார்த்து அவர் பாராட்ட… அவரும் சன்ன சிரிப்புடன் அவர்களோடு கலந்து கொண்டார்.
"நான் டைரக்டாக கேட்கிறேன் என் பையனுக்கு உன் பொண்ண பார்க்கலாம்னு நினைக்கிறேன்..!!" என்றவுடன் சற்று அதிர்ச்சி கலந்த ஆனந்தத்தோடு மனைவியை பார்த்தார் மகாதேவன்.
"என் பையன் கடைசி மூணு வருஷமா அப்ராட்டுல தான் ஒர்க் பண்ணிட்டு இருக்கான். அவன் வாழ்க்கையிலும் பல சம்பவங்கள் நடந்து போச்சு.. அதனால இந்தியாவே வர மாட்டேன்னு சொல்லிட்டு இருக்கான். நான் தான் கம்பெல் பண்ணி வர சொன்னாலும் ம்ஹூம் வரதே இல்லை.. எனக்கு உன் பொண்ண பார்க்கும்போது அவனை மாத்திடுவான்னு தோணுது!! வாலு பிள்ளைகள கூட எவ்வளவு அழகா பேசி ட்ரீட் பண்றாளே.." என்று அவர் ஆகா ஓகோ என்று அவர்களின் மகளை புகழ்ந்து பேச.. தான் வருந்தியத்திற்கு பதிலாக பாஸ்கரனின் இந்த புகழ்ச்சி பெண்ணின் தந்தையாக மகாதேவனுக்கு உச்சி குளிர்ந்து போனது.
"அதிலும் என் பையன் வெளிநாட்டில் கைனகாலஜிஸ்ட்… ஸ்பெஷலிஸ்ட் இன் இன்பெர்டிலிட்டி.. அவனுக்கு எங்க விருப்பமோ அங்கேயே அவன் ப்ராக்டிஸ் பண்ணட்டும். சென்னையில் பார்த்தால் எனக்கும் சந்தோஷம்தான்" என்று அவர்களுக்கு சாதகமாகவே பலவற்றை பாஸ்கரன் சொல்ல சொல்ல இருவருக்குமே இந்த ப்ரொபோசலை பார்த்தால் என்ன என்று தான் தோன்றியது.
உடனே சரி என்று கூறாமல் "நாங்களும் பேசிட்டு சொல்கிறோம் பெண்ணிடம்" என்றதும் பாஸ்கரனும் அவர்களின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியிலேயே நம்பிக்கையோடு கோவையை நோக்கி பயணம் செய்தார்.
"நீ என்ன சொல்ற துர்கா? பாஸ்கரன் எனக்கு ரொம்ப நாளா பிரின்ட் தான். இப்ப கொஞ்ச நாளா டச் விட்டு போச்சு. கோவைலேயும் அவனுக்கு நல்ல பிராக்டீஸ் இருக்கு. சப்போஸ் இந்த பையன் நம்ம கிளினிக் ப்ராக்டிஸ் பண்ணா கூட நமக்கும் பொண்ண பக்கத்துல வச்சிருக்கிற பீல் இருக்கும்" என்றார்.
"எனக்கு ஒன்னும் ஆட்சேபனை இல்லைங்க.. ஆனா உங்க பொண்ணு சம்பாதிக்கணுமே.. அதுதான் பெரிய கஷ்டம்" என்றார் மகளை அறிந்த தாயாக!!
ஏற்கனவே அன்னையும் தந்தையும் ஒரே துறையில் இருப்பதால் தனக்கும் மாப்பிள்ளையை அதே துறையில் தான் பார்ப்பார்கள் என்று எண்ணத்தை தவிடு பொடியாக்கி வைத்திருந்தாள் அவரது மகள்!!
"இங்க பாருங்கம்மா நீங்க ரெண்டு பேரும் டாக்டர்ஸ்னு எனக்கு உங்கள மாதிரி டாக்டரா புடிச்சு போடலாம்னு கனவுல கூட நினைக்காதீங்க!! உங்கள மாதிரி நாங்களும் வீட்டுக்குள்ள குடும்பம் நடத்தாமல் ஹாஸ்பிடல்லே குடும்பம் நடத்த எனக்கு பிடிக்கவே இல்லை.. வேற ஃபீல்டுல உள்ள மாப்பிள்ளை பாருங்க!!" என்று மகள் கட்டளை இட்டு இருந்தாள்.
'எப்படி இந்த ராட்ஷசிய சம்மதம் சொல்ல வைக்க?' என்று இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க..
"எனக்கு ஒரு ஐடியா அந்த பையனை இங்கு வர சொல்லி, கொஞ்ச நாள் நம்ம ஹாஸ்பட்டல ப்ராக்டிஸ் பண்ண சொல்லுவோம். அதுல அவளுக்கு புடிச்சி போய் ஓகே சொன்னா நமக்கும் பிராப்ளம் இல்லை.. எப்படி?" என்ற துர்காவை மகாதேவன் பயந்து போய் "அவ அடிக்கிற லூட்டிய பார்த்து அந்த பையன் பயந்து ஓடிட்டா?" என்று அதிர்ச்சியாய் கேட்க… "வாய்ப்பு இருக்கிறது.. ஆனாலும் பார்த்துக்கலாம்!!" என்றார். அதற்குள் மகாதேவனும் துர்காவும் தங்கள் தொழில் வட்டாரங்களில் அவனைப் பற்றிய தகவல்களை சேகரிக்க அவர்களுக்கும் திருப்தியா இருந்தது. அதனால் பாஸ்கரனிடம் இந்த தகவலை சொல்லிவிட்டார் மகாதேவன்!!
அதன்படி பாஸ்கரன் தன் மகனை
போட்டு படுத்திய பாட்டில்..
அடுத்த இரண்டு மாதங்களில் அவன் இங்கே வருவதாக தகவல் வந்தது.. பய பக்தியோடு கடவுளை வேண்டிக் கொண்டார்கள் பெண்ணைப் பெற்றவர்கள் இருவரும்!!
அச்சச்சோ... பொண்ணுக்காக எல்லாம் இல்லைங்க!! அந்த பையனை தங்கள் மகள் கொஞ்சமாக படுத்த வேண்டும் என்று!!
காரணம் சில நேரங்களில் மட்டும் அல்ல பல நேரங்களில் அவர்களுக்கே ஆப்பு அடிப்பாள் அவர்கள் பெற்ற தவப்புதல்வி!!
அந்த அறுந்த வாலை..
குறும்பு ஏஞ்சலை…
ஆராதிக்க மட்டும் இல்லை அடக்கி ஆள பெற்றோர்களாக ஒருவனை இவர்கள் தேர்ந்தெடுத்து வைக்க…
அப்படி எல்லாம் நீங்கள் போடும் பிளானை எல்லாம் செயல்படுத்த விட்டு விடுவேனா என்ற கடவுள்
வேறு ஒருவனை அனுப்பி வைத்தார். அதுவும் குழந்தையோடு!!
அவன் ருத்ரபிரதாப்…..!!
பெண்களை கண்டால் தவிர்க்கும் நவயுக விஸ்வாமித்திரனும் இல்லை…
கோபத்தில் பொங்கும் துர்வாசரும் இல்லை..
கண்களில் கனலை கக்கும் கொங்கணவரும் இல்லை..
ஏனென்றால்.. இவர்கள் மூவரையும் போட்டு மிக்ஸியில் அடித்து கிடைத்தால் வரும் குளோனிங் உருவமே தான் இவன்!! அதில் கொஞ்சம் சாணக்கியரையும் சேர்த்தால் பர்ஃபெக்ட் காம்பினேஷன் இவன்!!
ஆறரையடி உயரத்தில் ஆஜானுபாகுவான தேகம்.. எதிரிகளை விழிகளாலே மிரண்டோட வைக்கும் கூர் விழிகள்.. நேரான விடைத்த நாசி.. எப்போதும் இறுக மூடிய அதரங்கள்.. மேல் அதரங்களை மறைத்த கருத்தடர்ந்த கற்றை மீசை.. தாடியற்ற வழவழப்பான இறுக்கமான தாடை.. அணிந்திருத்த ஃபார்மல் ஆடையில் பார்க்கும் கன்னிகளை வாவ் சொல்ல வைக்கும் வனப்புடன் அமர்ந்திருந்தான் அந்த உயர்தர ஹோட்டலில்… டீலிங் பேச!!
"சோ மிஸ்டர் குப்தா.. நீங்க செஞ்ச இந்த தப்பை மறைக்க எத்தனை கோடி தருவீங்க?" என்று தன் எதிரே இருப்பவனை பார்த்து கேட்டான், இந்த மாவட்ட கலெக்டர்!!