29
பால் நிலவு காயும் ரம்மியமான இரவு, எங்கும் நிசப்தமாக வண்டுகளின் ரீங்காரம் மட்டுமே, தோட்டத்தில் பூக்களுடன் கூடிய அந்த நறுமணம், மெல்ல வீசும் இளம் தென்றல் , காதலர்களுக்கு ஆன தனிமை என்று அந்த ஏகாந்த இரவில் விஷ்ணுவும் சௌமினியும் தங்கள் உலகில் காதலில் கட்டுண்டு இருக்க, விஷ்ணுவின் விசமமான பேச்சில், ரோஹிணியின் பதிலில் அவர்கள் அரண்டு புரண்டு எழுந்தனர்.
அவர்கள் எழுந்த சத்தத்தில் தான் அவர் மாடி ஏறி வந்தார். அசடு வழிய விஷ்ணு நிற்க, அவன் பின் மறைந்த வண்ணம் சௌமினி..
" பொண்ணை நம்மை நம்பி அனுப்பி இருக்காங்க… சரியா" என்று அழுத்தமான பார்வை ரோஹிணியிடம்..
" ம்ம்மா … சும்மா சொன்னேன் மா.. எனக்கும் தெரியும் தானே…"
அவர் அர்த்த புஷ்டியுடன் அவனை பார்க்க.. " நம்பு மா… நம்பு … நம்பிக்கை அதானே எல்லாம்."
" போடா... வர வர ரொம்ப பேசுற.. இரண்டு வார்த்தை பேச இரண்டு நாளைக்கு யோசிப்ப.. இப்போ விட்டா இரண்டு நாள் தொடர்ந்து பேசுவ போல.."
" என்னமா செய்ய.. கல்யாணத்துக்கு அப்புறம் பேச முடியுமோ.. என்னவோ அதான்.. இப்போவே பேசி தீர்த்துக்கிறேன்" என்று பெரு மூச்சு விட்டவனை..இருபுறமும் நின்று இரு பெண்களும் முறைக்க ..
" அச்சோ… டங் சிலிப்பிங்… மன்னிச்சு" என்றான் பாவமாக.. வாழ்க்கை என்னும் வண்டி ஓட, ஆண் பெண் என்ற இரு எருதுகளை விட, அன்னை மனைவி என்ற இரு சக்கரமும் சுமூகமாக இருப்பது ரொம்ப அவசியம் .
ஒன்றை பகைத்தாலே வண்டி சரியாக ஓடாது.. இரண்டையும் பகைத்தால்… அம்புடுதேன்.. " அம்மா.. நீங்களும் எனக்கு இன்னும் இரண்டு அட் லிஸ்ட் ஒரு தங்கச்சியாவது பெத்து கொடுத்திருக்கலாம்…"
" காலம் போன கடைசியில ஏன்டா உனக்கு இந்த ஆசை.."
" அவர்களை என் மச்சானுகளுக்கே கொடுத்து, அவங்களையும் போல்ட் ஆக்கியிருக்கலாம்.."
இருவரும் ஆங் என்று பார்க்க, அவனோ எப்படி என் ஐடியா என்ற லுக்கில்…
" அடி வெளுக்குறதுத்துக்குள்ள போய்டு" என்று அவன் ஐடியாவில், ரோஹிணி கடுப்பாகி உறும..
" ம்மா.. எல்லாம் சேர்வார் தோசம்.. உங்க வாயிலேயே அடி தடி தான் வருது"
சௌமினி கல கல வென்று சிரிக்க.. ரோஹிணி கூட மென்னகையில்..
மின்னல் வேகத்தில் சௌமினி கன்னத்தில் ஒரு இச் பதித்து விட்டு , குட் நைட் உடன் அவன் மாடி இறங்க போக.. அதுவரை பெண் இன்னும் அறைக்கு வரவில்லையே என்று பார்க்க வந்த மல்லியும் சரசுவும் வேகமாக தாங்கள் இருந்த அறை நோக்கி விரைந்தனர் .
ரோஹிணி நடவடிக்கையில் ஏற்கனவே திருப்தி தான் அவர்களுக்கு, இப்போதோ பரம திருப்தி..
மறுநாள் காலை நம் பிக் பாஸ் வீடு…
காலை கடன் முடித்து அனைவரும் ஆஜராக, காஃபி சுமாராக போட்டு, அதை மூன்று தடவை ருசி பார்த்து, ரிஷி அனைவரிடமும் கொடுத்தான்.
குடிக்கும் படி இல்லாவிட்டாலும், கீழே கொட்டும் படி இல்லாமல் இருப்பதே போதுமான தகுதியாய் இருக்க, அனைவரும் ஒரே மடக்கில் குடித்து முடித்தனர்.
சமயலறையில் நம் செஃப் தாமு சாரி.. தரணியின் கை வண்ணத்தில் தயாராகி கொண்டிருந்தது வெண் பொங்கல்..
அருணோ பயங்கர பயத்தில், இன்றைக்கு எந்த பதார்த்தை செய்து என்ன பெயர் வைக்க போறானுங்களோ இவனுக.. விஷ்ணு நூறு பேரை அனுப்பி இவனை அடிக்க வைத்திருந்தால் கூட இந்த அளவு பயந்து இருக்க மாட்டான். ஆனால் ஒரே நாளில் தன்னை இப்படி ஆக்கிய விஷ்ணு மீது கடும் கோபத்தில்..
ஒரு வழியாக சமைத்து முடித்து, டின்னிங் டேபிளில் வைத்து விட்டு, … ஒரு வேளைக்கே அழுத்து, வேர்த்து ஸ்ஸ்ப்பா முடியல தரணிக்கு..
அனைவரும் புது வித அவஸ்தையுடன் டின்னிங் டேபிள் நெருங்கி வந்து, ஒருவர் முகத்தை பார்த்து விட்டு, தங்களுக்கு தைரியம் கொடுத்து கொண்டு, சாப்பிட அமர்ந்தார்கள்.
சிவா பரிமாற, வெண் பொங்கல் உடன் ஊறுகாய், நல்ல வேளையாக சட்னி, சாம்பார் செய்யல.. என்று நினைத்து கொண்டான் ரிஷி, நேற்று சட்னி சாப்பிட்ட எஃபெக்ட்..
அருண் சாப்பிட்டவுடன் அனைவரும் அவனை பார்க்க, அவன் துப்ப வில்லை.. அப்போ ஓகே என்று சாப்பிட போனார்கள்.. அந்தோ பாவம், அவனால் துப்ப வாய் திறக்க முடிந்தால் அல்லவா துப்புவதற்கு… அவன் திரு திரு என்று விழிக்க, அனைவருக்கும் பரிமாறிய சிவா, ஆர்வமாய் வந்து அமர்ந்து கையில் எடுத்து ஒரு வாய் வைத்தவன், பதறி போய் தரணியை நோக்கி , " டேய் அண்ணா… ஜெயில் கூட களி போடுறது இல்லையாம் டா… ஆனா நீ…"
பின் அருணை நோக்கி, " தம்பி யா டா.. நீ துரோகி, நல்லா இல்லனு சொல்ல வேண்டியது தானே.. முதல நீ தானே தின்ன…எரும.. எரும.."
ஏற்கனவே விஷ்ணு மீது கடுப்பு, பொங்கல் மீதான வெறுப்பு, வாய் திறக்க முடியாத சலிப்பு எல்லாம் சேர வேகமாய் எழுந்தவன், அண்ணன் என்று பாராமல் சிவாவின் முதுகில் ஒன்று வைத்து செய்கையில் ஏதோ சொல்லிவிட்டு வாஷ் பேசின் நோக்கி சென்று அனைத்தையும் நோண்டி நோண்டி வாந்தி எடுத்தான்.
அதற்குள் ரிஷி தரணி செய்த களியை இல்லையில்லை பொங்கலை குப்பையில் கொட்ட எடுத்து சென்றான். அனைவரும் அருண் நிலைமை
பார்த்து சிரிக்க, அவர்களை முறைத்தவன் முடியாமல் அவனும் சேர்ந்து சிரித்தான். பின் முட்டை பிரட்டை வைத்து சாப்பிட முடிந்த அளவு செய்து , அனைவரும் ஒன்றும் பேசாமல் சாப்பிட, வல்லபர் மட்டும் பொருமலோடு..
சாப்பிட்டு முடிந்ததும் அவர்கள் பொதுவான அறைக்கு முன்னே இருந்த அந்த சோஃபாவில் நரசிம்மர் அமர்ந்து இருக்க, அருகில் வல்லபர்.. பிள்ளைகளை அருகே வர சொல்லி அமர வைத்தவர்..
" அந்த பையன் பத்தின உங்க அபிப்ராயம் சொல்லுங்க " என்றார். வல்லவர் பொங்க, அவரை அமர்த்தியவர், "இதுக்கும் மேலே நம்ம பொண்ணை வேற இடத்தில கட்டி கொடுக்க முடியாது, அப்படியே சௌமி நம்ம பேச்சை கேட்டு ஒரு வேளை கட்டிகிட்டாலும், நிம்மதியா வாழாது."
" ம்ஹூம்ம்.. உயிரை விட்டாலும் விடுவா.. வேற ஒருத்தரை கல்யாணம் எல்லாம் பண்ணிக்க மாட்ட" ரிஷி கூற, அனைவரும் அவனின் தங்கையின் மீதான புரிதலில் வாஞ்சையோடு பார்த்தனர்.
" அப்படி தூக்கி கொடுக்க தான்.. கோயிலு கோயிலா அலைஞ்சு வரம் வாங்கி பெத்தமா அண்ணே.." என்றார் வல்லபர் குரல் கமற..
" வல்லபா... ஒன்னை நல்லா புரிஞ்சுக்க, அப்போ உள்ள காலம் இல்ல, இப்போ அவங்கங்களே எல்லாம் முடிவு பண்ணிக்குறாங்க.. இந்த மட்டில் நம்மை கல்யாணத்துக்கு சம்மதம் கேட்குறாங்கன்னு சந்தோசப்படு "
" தரணி.. நீ சொல்லு.. இவங்க விட.. பொறுமையில ஆளுங்க குணத்தை எடா போடுறதுல நீ அண்ணன் மாதிரி, அருண் அப்படியே என்ன போல, கோபம் வீம்பு கொஞ்சம் ஜாஸ்தி, இவனுக இரண்டு பேரும் இரண்டுக்கும் நடுவுல…நீ சொன்ன சரியா இருக்கும்" அண்ணன் பிள்ளைகள், தன் பிள்ளைகள் என்கிற பேதம் எல்லாம் தாண்டிய நிலையில் தான் எப்போதும் அந்த குடும்பம்.. இன்றும் அதே நிலைநாட்டி பேசினார் வல்லபர்…
மெதுவாக நிமர்ந்து அப்பாவை பார்த்தவன், " நம் சமூகம், மொழி, இனம் இப்படி எல்லாத்தையும் தாண்டி ஒரு மனுசனா அவனை பார்த்தால், நம் சௌமிக்கு அவனை விட நல்ல மாப்பிள்ளையை நாம கொண்டு வந்திட முடியாது. " என்றவனை எல்லோரும் ஆச்சரியமாக பார்க்க..
" நம்மை, தூக்கிட்டான்… இங்கன வச்சிட்டான் எங்கிரத்துக்காக நானு சொல்லல, நாம அவனை என்ன செய்ய நினைச்சோமோ அதை தான் அவன் நமக்கு செஞ்சி இருக்கான்.. என்ன நமக்கு எப்போதும் தூக்கி தானே பழக்கம்.. என்று மெல்லிய ஒரு புன்னகை சிந்தியவன், தன் தலையை ஆட்டி கொண்டு.. " நாம வீரத்தை பெயரில் தேடினோம், அவன் செய்யல காட்டிட்டான்.. அத்தன பேரு முன்னாலையும் தனியா நம்மை தைரியமா பொண்ணை கொடுங்கனு கேட்காம, என் பொண்டாட்டிய கொடுங்கன்னு கேட்டு… அப்போவே எனக்கு பாதி சம்மதம் தான்.. நம்மை இங்கே வைச்சாலும், நம்ம வீட்டு பெண்டுகள, பத்திரமா நம்ம ஊருல கூட வைக்காம, அவன் வீட்டுல அம்மா கூட வைச்சு இருக்கான்.. நாம அடி தடி ஆள் தூக்கி செஞ்சி நம்மை வேலையை நடத்திக்கிறோம்.. இவன் அவனுக்கு தேவை எனும் போது, அதே தான் செஞ்சியிருக்கான்.. நாம ஊர்பக்கம் முரட்டு ஆளுங்க.. இவன் மாடர்ன் முரட்டு பீஸ்…" என்று சொல்லி சிரிக்க… தரணியின் இந்த நீண்ட விளக்கத்தில், அனைவரும் முகமும் சற்று தெளிந்தார் போன்று…
" அப்போ.. டேய் அண்ணன் உனக்கு ஓகே வா" அருண் இன்னும் அதே கடுப்பில்..
" டபிள் ஓகே டா…" தரணி மனதில் உள்ளத்தை சொல்லிய நிம்மதியில்..
" இன்னும் கொஞ்சம் யோசிப்போம் டா" ரிஷி உள்ளே சிரித்து கொண்டே…
" நீயி யோசிக்க போறிய்யா.. அடேய் அதுக்கு வேண்டிய மூளை உன்கிட்ட இருக்கா " என்ற நக்கலில் சிவா..
" ஏன் உனக்கு வேணுமா.. யோசிக்க…" ரிஷி திரும்பி தாக்க..
" யோசிச்சா மட்டும் வேற எதுனா, புது மாப்பிள்ளை கொண்டு வந்திட போறோமா" தரணியின் பேச்சில் அனைவரும் யோசனையை கைவிட்டு, வழக்கம் போல தீர்ப்பை எதிர் பார்த்து நரசிம்மர் முகம் பார்க்க..
தன் தாடையை தடவியவாரே இருந்தார் நரசிம்மர், ரைட்டு, நாட்டாமை தீர்ப்பு சொல்லும் மோட்க்கு வந்திட்டார்.
தன் தம்பியை பார்த்தவர், " வல்லபா, ஏற்கனவே நம் குடும்பத்துக்கு பெண் சாபம் உண்டுன்னு ஒரு புரளி, அதுக்கு ஏத்தது போல மூணு தலைமுறையா பொண்ணு கிடையாது நம்ம வம்சத்தில், நாம எவ்வளவு வேண்டுதல், மல்லியும் சரசுவும் எவ்வளவு விரதம் இருந்திருப்பாங்க.. இதுக்கு இடையில உங்க அண்ணிக்கு ஒரு குழந்தை தரிச்சு , களைஞ்சு வேற போய்டுச்சு, ம்ம்… அப்போ நம்ம குடும்பம் மனது அளவுல வேற ரொம்ப கஷ்ட பட்டோம், நம்ம எல்லோருக்கும் சந்தோசத்தையும் நிம்மதியையும் தந்தவ தான் நம்ம பொண்ணு, அவளுக்கு அந்த சந்தோசத்தை நாம திருப்பி தர வேணாம்.. அவ சந்தோசம் அந்த பையன் தான் நம்மகிட்ட சொல்லி இருந்தா கூட, அவனை கட்டி தூக்கி கொண்டு வந்திருப்போம் இல்ல.. இப்போ அவளை கேட்டு அவன் நம்மை தூக்கி இருக்கான்.. அதனால் அவனுக்கே கொடுத்திடலாம்"
" அப்புறம் ஏன் பெரியப்பா, அன்னைக்கு அவனை தூக்கு சொன்னீங்க.." அருண் சந்தேகம் வினவ, மற்றவருக்கும் அதே..
" அப்படி தூக்கி இருந்தா, அவன்கிட்ட நாம விவாகரத்து கேட்டு மிரட்டுனா, தரானா.. இல்லை உறுதியா இருக்கானானு பார்க்க தான் சொன்னேன்.. கேடி பய நம்மை தூக்கி , நம்ம உறுதிய பார்க்கிறான்.." என்று சொல்லி சிரித்தார் நரசிம்மர்.
வல்லபரோ இன்னும் தெளியாத கலங்கிய முகமாகவே இருக்க, அவரின் கை பற்றி, " சௌமிய இன்னும் வரை என் பொண்ணா தான் நான் பாவிச்சுக்கிட்டு இருக்கேன், என் பொண்ணை , அப்படியா போய் கெடுதல் பண்ணிடுவேன்" என்க, அண்ணனின் வார்த்தையில் அவர் ஆடிப்போய் ," என்ன அண்ணே என்னனமோ சொல்லுரீக, அவ உங்க பொண்ணு ண்ணே.. உங்களுக்கு என்ன விருப்பம், யாருக்கு கட்டு கொடுக்க விருப்பமோ செய்யுங்க… நான் எப்போ கேட்டு இருக்கேன் இப்போ கேட்க…" என்று கண்ணே கலங்கி விட்டது வல்லபருக்கு..
தம்பியின் மனது தெரியும் தான் நரசிம்மருக்கு அதை வார்த்தையில் கேட்க, அவருமே உணர்ச்சிவசப்பட்டு, தன் தம்பியை அணைத்து கொண்டார். அப்போ அப்பூ என்ற வார்த்தை அருகில் கேட்க, நிமிர்ந்து பார்க்க, அழுதபடி அவர் மகள் தான் நின்று கொண்டிருந்தாள்.
சோஃபாவில் நரசிம்மர் அமர்ந்து இருக்க, அவர் அருகில் வல்லபர்.. கீழே அருகே ஈஸ்வர் பிரதர்ஸ் உட்கார்ந்து இருக்க, அவள் கண்ணுக்கு யாரும் தெரியவில்லை தன் அப்பூவை தவிர..
அவர்களை எல்லாம் ஒரே தள்ளாக தள்ளியவள், பாய்ந்து சென்று தன் பெரிய தந்தையை அணைத்து கொண்டாள். மகளின் இந்த திடீர் வருகை எல்லாம் மனதில் பதியவில்லை அவருக்கும், தானுமே பெண்ணை அணைத்து உச்சியில் தாடை பதித்து, அவளை ஆசுவாசபடுத்தினார்.. இன்னும் அவள் அழுகையில் தான்.. அவளின் அழுகையும், அவரின் சமாதானமும் தொடர, பொறுத்து பார்த்த விஷ்ணு பொறுமை பறந்தது.
போதும் மினி.. என்ற விஷ்ணுவின் கண்டிப்பு குரலில் தான், அவள் நினைவுக்கு வர, திரும்பி பார்க்க அண்ணன்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பொசிஷனில் விழுந்து கிடந்தனர் அவளை முறைத்தபடியே…
" அச்சோ அண்ணா.. ஏன் இப்படி விழுந்து கிடக்குறீக.. எழுந்திரீங்க…" என்றாள் அவள் தான் அனைவரையும் தள்ளி விட்டாள் என்பதை மறந்து, அவர்கள் சேர்ந்து முறைத்த முறைப்பில் தான், தாம் தான் ஏதோ செய்து விட்டோம் போல என்று நாக்கை கடித்து, கண்கள் சுருக்கி இறஞ்சி, அண்ணன்களை கெஞ்ச, அதற்கு மேல் எங்கே கோபம் அவர்களுக்கு நிற்க…
பின் தான் விஷ்ணுவை பார்த்தனர்.. அனைவருக்கும் ஒரு அவஸ்தை, என்ன பேச என்று.. சௌமினி சூழ்நிலையை தனதாக்கி, " முதல சாப்பிட வாங்க எல்லோரும் " என்றாள்..
அருணுக்கு போன உயிர் திரும்ப வந்த ஃபீல், முதல் ஆளாய் போய் அமர்ந்தான், தான் கொண்டு வந்த பாத்திரங்களை பிரித்து, உணவு பரிமாறினாள் சௌமினி.. சுட சுட இட்லி உடன், நல்லி மட்டன் குழம்பு இருக்க, ஒரே நாளில் இறந்து போன தங்கள் நாக்கை மீட்டு கொண்டிருந்தனர் அவர்கள்..
" சௌமி கண்ணு, உனக்கு எப்படி தெரியும் நாங்க சாப்பிடலைன்னு.."
"அவளுக்கு மட்டும் இல்லை இங்க நடந்தது.. மொத்த குடும்பத்துக்கும் தெரியும்.. நாங்க எல்லோரும் லைவ் ஆ பார்த்திக்கிட்டு தானிருந்தோம்" அருகில் நாற்காலியில் அமர்ந்து தன் போனை நோண்டியவாறு இருந்த விஷ்ணு சொல்ல..
" என்னது... மொத்த குடும்பமுமா " என்ற அதிர்ச்சியில் வாய்க்கு கொண்டு சென்ற நல்லி அந்தரத்தில் நின்றது இவர்களுக்கு…