நேசம் 6

 

Sunitha Bharathi
(@sunitha-bharathi)
Member Moderator
Joined: 4 months ago
Messages: 26
Thread starter  

நேசம் : 6

 

சிடு சிடுவென மீராவை முறைத்துக் கொண்டே காரில் ஏறிய கிருஷ்ணாவுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. இப்போது வரை அவள் அவனை கட்டுப்படுத்தி கொண்டிருப்பதை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

 

கடுகடுவென முகத்தை வைத்துக் கொண்டே அமர்ந்திருந்தான். மிதமான வேகத்தில் காரை ஓட்டிக் கொண்டே பக்கவாட்டாக அவனை பார்த்த மீராவுக்கு இப்போதும் அவன் சிறு குழந்தையாக தான் தெரிந்தான்.

 

உருவத்திலும், சமூகத்திலும் பெரிதாக வளர்ந்து விட்டான் தான். ஆனால் அவளிடம்… இன்னும் அதே பிடிவாதம், அதே கோபத்தை தான் காட்டுகிறான். ஆனாலும் இறுதியில் அவள் பார்வைக்கு அடிபணிந்து விடுகிறானே.

 

பிள்ளை வயதிலேயே அவன் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டவள் அவள். என்றும் அவள் முதல் குழந்தை அவன் தானே.

 

இதழ்கள் அவளையும் மீறி இறுக்கம் தளர்ந்து மெதுவாக விரிந்து கொண்டது. 

 

இப்போது மட்டுமல்ல எப்போதும் வாய்நிறைய சிரித்து, எளிதாக எல்லாரோடும் பழகும் பெண் அவள் இல்லை தான். 

 

ஆனால் அவன் அருகே அவள் இயல்பையும் மீறி அகம் மலர்வது அவ்வப்போது முகத்திலும் தெரிந்து விடுகிறதே.

 

மனதில் இதம் பரவ முகம் மலர காரை ஓட்டியவளை கண்டுக் கொண்டான் அவன்.

 

அவ்வளவு தான். 

 

தன்னை அடக்கிவிட்ட ஆணவத்தில் தான் நகைக்கிறாள் என்று எண்ணியவனோ, மூக்கு விடைக்க புசு புசுவென மூச்சு விட்டுக் கொண்டே அவளுடன் சண்டைக்கு வந்து விட்டான்.

 

“ஏய்… எதுக்கு டி சிரிக்கிற?” என்று அடக்க முடியா கோபத்தில் கேட்டவனை நிதானமாக திரும்பி பார்த்தவள் இதழ்களில் புன்னகை மறைந்திருந்தாலும், விழிகளில் அதன் தேக்கம் நிறைந்திருந்தது.

 

“இல்லையே…” என்றாள் இயல்பான குரலில்.

 

“பொய்… பொய் சொல்ற… நீ சிரிச்ச நான் பார்த்தேன்” விடாப்பிடியாக அவளுடன் மல்லுக்கு நின்றான்.

 

“ஆமா… இவர் பெரிய மன்மதரு பார்த்து சிரிக்கிறாங்க” என்றவள் இந்த அளவுக்கு பேசுவாள் என்று கூட இதுவரை யாருக்கும் தெரியாது.

 

ஆனால் பேசுகிறாளே. அதுவும் அவனுடன் இருக்கும் போது மட்டும் எங்கிருந்து தான் அவளுக்கு இந்த நக்கல் தொனி வருகிறது என்று அவளுக்கே தெரியவில்லை. 

 

அவனை சீண்டி, அவனிடம் வம்பு வளர்க்க பிடிக்கும். எப்போதும் பிடிக்கும். இப்போதும் பிடிக்கிறது.

 

“என்ன? நக்கலா? நீ சொன்னாலும் இல்லைனாலும் நான் மன்மதன் தான். எத்தனை பொண்ணுங்க என் பின்னாடி சுத்துது தெரியுமா? ஒரு காலத்துல எப்படி இருந்தேன். இப்படி ஆக்கிட்டியே. எரியுது…” என்று அவன் கோபத்தில் உதிர்த்த வார்த்தைகள் கூட,

 

‘எரியுது மாலா எரியுது’ என்ற மாடுலேஷனில் தான் அவளுக்கு விளங்கியது.

 

சட்டென்று சிரிப்பும் வந்து விட்டது. சிரித்து வைத்தால் அதற்கும் திட்டுவானே என்று எண்ணிக் கொண்டே, இதழ்களை அழுந்த மூடி அடக்கிக் கொண்டாள்.

 

“சர்வாதிகாரி… ராட்சசி… உனக்கு என்ன டி பாவம் பண்ணேன்? குட்டிப் போட்ட பூனை மாதிரி உன் பின்னாடியே தானே சுத்திட்டு இருந்தேன். என்னை வச்சி செஞ்சிட்டல்ல…”

 

கோபமாக ஆரம்பித்தவன் வார்த்தைகள் போதையின் தாக்கத்தில் சிறிது சிறிதாக வலுவிழந்து புலம்பலாக மாறிக் கொண்டிருந்தது.

 

“சதிகாரி… எந்த நேரத்துல உன்மேல கையை வச்சேன்னு தெரியல. இப்போ வரைக்கும் எந்த பொண்ணையும் நெருங்க முடியல” என்று அவன் கண்கள் சொருக புலம்பிக் கொண்டிருக்க,

 

“ஏன்? நீ தான் கல்யாணம் பண்ணிக்க போறியே. அந்த பொண்ண கூடவா நெருங்க முடியல?” என்று மெதுவாக கேட்டுப் பார்த்தாள் மீரா.

 

இது அவளுக்கு தேவையில்லாத பேச்சு தான். இருந்தாலும் இருவருக்கும் இடையில் இருக்கும் உறவு பற்றி தெரிந்து கொள்ள சிறு உந்தல்.

 

“யாரு? ஷ்ரதாவா… ஷி இஸ் அன் ஏஞ்சல். அவளை மாதிரி ஒரு பொண்ணு கிடைக்க தவம் செஞ்சியிருக்கணும். உன்ன மாதிரி அதிகாரம் பண்ண மாட்டா. அன்பா, அமைதியா எனக்கு அடங்கி போற பொண்ணு. நான் என்ன சொன்னாலும் மறுப்பு சொல்ல மாட்டா. என் மனசுல அவ எங்க இருக்கா தெரியுமா?” என்று இதயத்தில் கை வைத்து சுட்டிக் காட்டியவன் கையை உயரமாக தூக்குகிறேன் என்று பட்டென்று மீரா முகத்தில் அடித்து காரின் மேல்பாகத்தில் முட்டி கொண்டு நின்றிருந்த கையால் காரை பொத்துக் கொண்டு வெளியே செல்லும் முயற்சியில் குத்திக் கொண்டிருந்தான்.

 

அவளை பற்றிய அவன் உதாரணத்தில் சட்டென்று மீராவின் முகம் சுருங்கி விட்டது. 

 

‘நான் ராட்சசி… அவ ஏஞ்சலா?’ சிறு கோபம் கூட வந்தது.

 

ஆனால் வெளிப்படுத்தும் உரிமை தான் அவன் மீது இல்லையே.

 

“அப்புறம் என்னவாம்?” 

 

‘அவகிட்ட உன் மன்மத லீலையை காட்ட வேண்டியது தானே’ என்ற தொனியில் அவளின் அப்புறம் என்னவாம் இருந்தது.

 

“அவகிட்டேயும் முடியலையே…” என்று நொந்து போன குரலில் சொன்னவன், சட்டென்று தன் ஒருகையால் மீராவின் தாடையை பற்றி தன்னை நோக்கி திரும்பி,

 

“இந்த மூஞ்ச கிஸ் பண்ண முடிஞ்ச என்னால ஏன்? ஏன்? வேற எந்த பொண்ணையும் கிஸ் பண்ண முடியல” என்று கோபமும், இயலாமையுமாக கேட்டான்.

 

‘இதற்கு என்ன பதில் சொல்வாள்?’

 

அவன் தீண்டலும், முத்தம் பற்றிய பேச்சும் அவளுக்கு புதிதல்ல தான். ஆனால் ஒருநொடி மீரா உடலை சிலிர்க்க வைத்தது.

 

சட்டென்று தன் தாடையில் இருந்த அவன் கையை தட்டி விட்டவள்,

 

“அது என் பிரச்சனை இல்ல” என்றாள் கடுமையான குரலில்.

 

“உனக்கு என்ன பிரச்சனை? எல்லா பிரச்சனையும் எனக்கு தானே. இன்னும் ரெண்டு மாசத்துல கல்யாணம். அந்த பொண்ணு கண்ண தாண்டி பேச முடியல.” என்று இருக்கையில் சாய்ந்து கிடந்து கண்களை மூடிக் கொண்டே புலம்பி கொண்டிருந்தான்.

 

“பேச தானே முடியல. நீ தான் செயல் புலியாச்சே… அதெல்லாம் நல்லாவே சமாளிப்ப” என்றால் ஏகத்துக்கும் நக்கல் குரலில்.

 

“என்னத்த சமாளிக்க? முடியும்னு தோணல” என்று விரக்தியாக அவன் சொல்ல,

 

“முன்னால முடிஞ்சதே… ஒருவேளை துருபிடிச்சி போச்சோ? வேணா டாக்டர்கிட்ட போலாமா?” என்று அவள் சிரிக்காமல் அவனை கேலி செய்ய,

 

“அடிங்க…” என்று சோர்ந்து கிடந்தவன், விரைப்பாக கையை ஓங்கி கொண்டு வர, அவனை பார்த்து சிரிப்பு தான் வந்தது அவளுக்கு.

 

இப்போதும் இதழ்களுக்குள் அடக்கி கொண்டாள்.

 

“நான் என்ன நரம்பு செத்தவனாடி? டாக்டர்கிட்ட போறதுக்கு” 

 

“நீ தானே சொன்ன… முடியும்னு தோணலைன்னு.” 

 

“அது மத்த பொண்ணுங்ககிட்ட முடியும்னு தோணல சொன்னேன். நீ தானே கல்யாணத்துக்கு முன்னாடி எந்த பொண்ணையும் கிஸ் பண்ண கூடாதுனு சத்தியம் வாங்கின” என்று அவன் கடந்த காலத்தில் அவள் இட்ட கட்டளைகளை இப்போது அடிக்கோடிட்டு சொல்ல,

 

“ஆமா இவர் பெரிய கர்ணன் குடுத்த வாக்க மீற மாட்டார். கிஸ் பண்ணலையாமாம். அதான் மொத்தமா பண்ணியே” என்றால் கோபமும், சலிப்புமாக.

 

“வேற யார்கிட்டயாவது தப்பா நடந்துக்கிட்டேனா? என் மீராகிட்ட தானே” என்றவனின் ‘என் மீரா’ என்ற வார்த்தை அவள் இதயத்தில் நொடியில் ஆயிரம் பட்டாம்பூச்சிகளை பறந்தது என்னவோ உண்மை தான்.

 

இதழ்கள் இதமான புன்னகையில் விரிய, “உன் மீராவா? என்னை காதலிக்கிறியா?” என்று சட்டென்று கேட்டு விட்டாள்.

 

கும்… என்று வாயை பொத்திக் கொண்டு வெடித்து சிரித்தான் அவன்.

 

“செம ஜோக்கு. நான்… உன்னை காதலிக்கிறேனா?” என்று கேட்டுக் கொண்டே மீண்டும் சிரிக்க, 

 

ஏகத்துக்கும் கடுப்பாகி விட்டாள் மீரா.

 

அவள் மேல் காதலே இல்லையாம். ஆனால் அவன் காதலி மேல் தோன்றாத இச்சைகளை கூட அவள் மேல் தீர்த்து கொண்டவனை எந்த உறவில் வைப்பது என்று அவளுக்கும் இப்போது வரை தெரியவில்லை.

 

“அப்புறம் என்ன உன் மீரா? போ டா…” என்று அவனை தள்ளி விட, போதையில் நிலை இல்லாது இருந்தவன் ‘எம்மே…’ என்று கார் கதவின் பக்கம் போய் விழுந்தான். 

 

“ஆ… ஏன் டி? கார்ல இருந்து தள்ளிவிட்டு சாகடிக்கப் பார்க்கிறியா?” என்று கேட்டுக் கொண்டே நேராக எழுந்து அமர்ந்தவன், 

 

சிவந்த விழிகளால் அவளை உற்று பார்த்தபடி,

 

“நீ என்னை காதலிக்கிறியா?” என்று திருப்பி கேட்க,

 

“தெரியல” என்று தான் சொன்னால் அவளும்.

 

“அப்புறம் எதுக்கு டி கோபப்படுற? மூடிட்டு போ டி” என்றான் அவனும் அவளை போலவே.

 

அவளும் எதுவும் பேசாமல் அமைதியாகி விட, சில நிமிட மௌனம் தான் காருக்குள்.

 

மீண்டும் ஆரம்பித்தான் அவன்.

 

“நான் நல்லவன் டி. ஆனா நீ தான் யார்கிட்டேயும் எதுவும் சொல்ல மாட்டேன் சொல்லி என்னை நம்ப வச்சி ஏமாத்தி என் அப்பா, அம்மா முன்னாடி கெட்டவனாக்கிட்ட. நீ தான் பொய்க்காரி… என்னை ஏமாத்திட்ட… என் வாழ்க்கையை சிதைச்ச சதிகாரி. 

 

நான் அப்படி உனக்கு என்ன பாவம் பண்ணேன். எதுக்கு டி என் அப்பா முன்னாடி என்னை கெட்டவனாக்குன? உன்னால சின்ன வயசுல இருந்தே என்னை திட்டிட்டே இருந்தவர், இப்போ முழுசா என்னை வெறுத்து ஒத்துகிட்டார். எல்லாத்துக்கும் நீ தான்… நீ தான் காரணம். 

 

நான் ஒரு விஷயம் கத்துக்க நினைச்சா… எனக்கு முன்னாடி நீ அதுல ப்ரோ ரேஞ்சிக்கு கத்துட்டு வந்து நிற்ப. நாலு வயசுல ஏ, பி, சி, டி, எழுத ஆரம்பிச்சதுல இருந்து எல்லாத்துலயும் என்னை விட உனக்கு பெஸ்ட்டா இருக்கணும்ல. 

 

மீரா பார்த்து கத்துக்க… மீரா பார்த்து கத்துக்கனு நான் எதுக்கும் லாயக்கு இல்லாதவன் மாதிரி என் அப்பா என்னை திட்டுவார். 

 

அப்போல்லாம்… அவர் மேல தான் கோபம் வரும். உன்மேல துளிக் கூட கோபப்பட்டிருப்பேனா சொல்லு. உன்ன என் பிரண்டா தானே டி பார்த்தேன். உனக்கு ஒன்னுனா உயிரை கூட குடுக்க ரெடியா இருந்தேனேடி… இப்படி மொத்தமா என்னை உயிரோட கொன்னுட்டியே. உன் சதி திட்டம் எதுவும் புரியாம முட்டாள் மாதிரி இருந்திருக்கேன்” என்று உளறிக் கொண்டே அவன் மெதுவாக கண்களை மூடிட, 

 

அமைதியாக அவன் புலம்பல்களை கேட்டு கொண்டிருந்தவள் இதயம் தான் கனத்து போனது.

 

என்ன பேசுகிறான்? அவனுக்கு எதிராக என்ன சதி செய்து விட்டாள்? இவ்வளவு காலம் இப்படி நினைத்து கொண்டு தான் அவள் மீது வன்மத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறானா? 

 

அவன் எண்ணம் தவறு என்று அவனுக்கு புரியவைக்க அவள் முயலவில்லை. அவன் இருக்கும் நிலையில் இப்போது எதையும் புரியவைக்கவும் முடியாது என்று எண்ணியவள் எதுவும் பேசாது அமைதியாகவே அவன் வீட்டை அடைந்திருந்தாள்.

 

அவன் காரை பார்த்ததும் கேட் அருகே நின்றிருந்த செக்யூரிட்டி வேகமாக வந்து கேட்டை திறந்து விட்டவர், ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த மீராவை ஒரு நொடி யோசனையாக கண்களை சுருக்கி பார்த்துக் கொண்டார்.

 

பெரும்பாலும் அவன் டிரைவருடன் வருவான். இல்லையேல் அவனே காரை ஓட்டிக் கொண்டு வருவான்.

 

இன்று ஒரு பெண்ணுடன் வந்திருக்கிறான் என்ற யோசனையில் பார்த்தவர் கார் உள்ளே வந்து நிற்கவும், பின்னாலே ஓடி வந்து “வேலைக்கார அம்மா சாயங்காலம் போகும் போது கொடுத்துச்சு” என்று சொல்லி மீராவிடம் வீட்டு சாவியை கொடுத்தார்.

 

இரவு, அறுபது வயதை நெருங்கிய அந்த செக்கியூரிட்டியும், அவனும் மட்டும் தான் அந்த பெரிய வீட்டில் இருப்பார்கள். 

 

வீட்டு வேலைக்கு என்று நாற்பதை கடந்த ஒரு பெண்மணி வருவார். காலையில் வருபவர் வேலைகளை எல்லாம் முடித்து விட்டு மாலை 3 மணிக்குள்ளாகவே கிளம்பி விடுவார்.

 

பெரிதாக கிருஷ்ணா வீட்டில் இருப்பது இல்லை. அவன் இருக்கும் போது சமைத்து கொடுப்பார். அதனால் அவருக்கு அந்த வீட்டில் வேலைகளும் குறைவு தான். இரவு உணவு எப்போதும் அவன் வெளியிலேயே முடித்து விட்டு வந்து விடுவான்.

 

எதற்கு வீடு என்று ஒன்று இருக்கிறது? என்று வெறுக்கும் அளவுக்கு தான் தனிமை நடுவே கடந்த எட்டரை வருடங்கள் ஓடி விட்டது.

 

மீரா கையில் சாவியை கொடுத்த செக்யூரிட்டியோ, காருக்குள் போதையில் கண்மூடி கிடந்த கிருஷ்ணாவை பார்த்தவர்,

 

“என்னாச்சு மா? சார் எப்பவும் குடிக்க மாட்டாரே” என்று இத்தனை நாட்கள் அவனிடம் வேலை பார்க்கும் அக்கறையில் கேட்டார்.

 

என்ன பதில் சொல்வாள் அவள்? அவள் மீதிருந்த கோபத்தில் தான் குடித்தான் என்றா மூன்றாம் மனிதரிடம் சொல்ல முடியும்.

 

“இன்னைக்கு எதோ குடிச்சிருக்கார்” என்று மட்டும் சொன்னவள், அவன் பக்க கார் கதவை திறக்க முற்பட, 

 

“நான் கூட்டிட்டு வரேன் மா… நீங்க போய் வீட்டுக் கதவை திறங்க” என்று சொல்லிக் கொண்டே கார் கதவை திறந்து அவனை எழுப்ப முயன்றார்.

 

“சார்… வீடு வந்துருச்சி வாங்க” என்று அவன் மீது கை தான் வைத்திருப்பார்.

 

‘“ச்ச… பே…” என்று அருவருத்து அவர் கைகளை தட்டிவிட்டவனை பார்த்து சற்று பயந்து தான் போனார் அவர்.

 

முதலாளி, தொழிலாளி என்ற பேதமெல்லாம் இதுநாள் வரை அவரிடம் அவன் காட்டியதே கிடையாது. 

 

மிகவும் மனச்சோர்வாக இருந்தால் அவனாக சென்று பேசுவது அவர் ஒருவரிடம் மட்டும் தான்.

 

அந்த வகையில் அவருக்கும் அவன் மீது முதலாளி என்ற எல்லை தாண்டி பாசம் இருக்கிறது. இன்று கை மேலே பட்டதுக்கே அருவருத்து கத்தியவனை குழப்பமாக பார்த்து கொண்டே அவர் நின்றிருக்க,

 

எதிரே நிற்பது ஆணா? பெண்ணா? என்று கூட அடையாளம் அறியாது போதையில் கிடந்தவன், 

 

“என்ன? அவளை மாதிரி உன்னையும் ரேப் பண்ணிட்டேன் சொல்ல போறியா?” என்று கேட்டானே பார்க்கலாம், 

 

‘எதெய்?’ என்று அவரே ஒருநொடி அரண்டு பின்னால் விலகி நின்றுக் கொண்டார்.

 

இங்கே வீட்டுக் கதவை திறந்துக் கொண்டிருந்த மீராவோ, கிருஷ்ணாவின் பேச்சில் தலையில் அடித்துக் கொண்டாள்.

 

“என்னை யாரும் இனி மிஸ் யூஸ் பண்ண முடியாது. நான் ஸ்டெடியா இருக்கேன்” என்று குளறலாக சொல்லிக் கொண்டே காரிலிருந்து இறங்கியவனுக்கு வழி விட்டு நின்ற செக்யூரிட்டியோ, இன்று அவனை திகைப்புடன் தான் பார்த்துக் கொண்டிருந்தார்.

 

இத்தனை நாட்கள் அவனிடம் இருந்த ஆளுமையும், முதிர்ச்சியும் எங்கோ காணாமல் போன உணர்வு அவருக்கு.

 

போதையில் நிலையில்லாது தள்ளாடி கால்கள் இடறி விழ போனவனை பதறி சென்று அவர் பிடிக்கும் முன்னமே மீராவின் கைகள் அவனை தாங்கியிருந்தது. 

 

அவனும் அவள் ஸ்பரிசத்தில் “மீரா…” என்று முனங்கியபடி அவள் மீது சாய்ந்து கிடக்க, இருவரையும் தான் திகைத்து பார்த்துக் கொண்டிருந்தார் அந்த பெரியவர்.

 

‘தன்னை தொட அனுமதிக்காதவன், அந்த பெண் தொட்டால் எதுவும் சொல்லவில்லையே’ என்று நினைத்தபடி, அவர் அங்கேயே நின்றிருக்க,

 

“நீங்க போங்க… நான் பார்த்துகிறேன்” என்று சொல்லி அவரை அனுப்பி வைத்திருந்தாள் மீரா.

 

இருவரையும் தவறாக நினைக்க தோன்றவில்லை அவருக்கு. 

 

எட்டு வருடங்களாக அவனிடம் வேலை பார்க்கிறார். அவன் நடத்தையில் அவருக்கு மிகுந்த மரியாதை எப்போதும் உண்டு. பெண்கள் பக்கம் சாய்பவன் கிடையாது என்று ஆணித்தனமாக நம்பிக் கொண்டிருந்தார்.

 

மீராவை முன்னமே தெரியும். அவரை அவனிடம் வேலைக்கு தேர்வு செய்து அனுப்பி விட்டதே அவள் தான். அடிக்கடி அவரின் வேலையை பற்றியும், மறைமுகமாக கிருஷ்ணாவை பற்றியும் விசாரித்து கொள்வாள். 

 

கிருஷ்ணாவின் பெற்றோர்கள் அவளுடன் தான் இருக்கிறார்கள் என்றும் தெரியும். ஆனால் ஏன் எதற்கு என்று காரணம் தான் தெரியாது.

 

‘இப்படி ஒரு தங்கமான புள்ளையை ஏன் ஒதுக்கி வச்சிருக்காங்க?’ என்று பல நாட்கள் அவனுக்காக அவரும் கவலைப்பட்டிருக்கிறார்.

 

அந்த வகையில் மீராவை பற்றியும் அவரால் தவறாக என்ன முடியவில்லை. 

 

பெரும் குழப்பம் நடுவே தான் இருவரையும் ஆராய்ந்த படி அங்கிருந்து சென்றிருந்தார்.

 

இங்கே கிருஷ்ணாவோடு வீட்டுக்குள் வந்த மீராவோ, ஹாலில் கிடந்த சோபாவில் அவனை அமர வைத்தவள், “நான் கிளம்புறேன்” என்று சொல்லி விட்டு கிளம்ப எத்தனிக்க,

 

ஆ… என்று வயிற்றை பிடித்து கொண்டு கத்தியிருந்தான் கிருஷ்ணா.

 

“என்னாச்சு?” என்று நின்று நிதானமாக மீரா அவனை பார்க்க,

 

“வயிறு வலிக்குது” என்று சிறுப் பிள்ளைபோல் முகத்தை வைத்துக் கொண்டு சொன்னான்.

 

“கணக்கே இல்லாம கிடைச்சி போச்சினு குடிச்சா இப்படி தான் வலிக்கும்” என்று அப்போதும் அவனை திட்ட தான் செய்தால் மீரா.

 

“ஏய்… பசிக்குது டி… என் போன் எங்க?” என்று தன் போனை அவன் தேட,

 

“போனை சாப்பிட போறியா?” என்று தான் கேட்டிருந்தால் மீரா.

 

“உன் மூஞ்சி… ஆர்டர் போடா போறேன் டி” என்று சொல்லிக் கொண்டே அவள் கையிலிருந்த அவள் போனை பறித்து ஸ்வய்ப் செய்தவன் கண்களுக்கு மங்கலாக தான் அந்த திரை தெரிந்து கொண்டிருந்தது.

 

“எனக்கு தெரியல… நீயே எதாவது ஆர்டர் பண்ணு” என்று சொல்லி அவளிடமே மீண்டும் போனை நீட்டினான்.

 

நீட்டிய அவன் கையிலிருந்து தன் போனை வாங்கி கொண்டவள்,

 

“அளவு இல்லாம குடிக்க மட்டும் தெரிஞ்சது. அதுக்கு முன்னாடி சாப்பிடணும்னு தெரியாத?” என்று திட்டியவள், 

 

அந்த வீட்டை சுற்றி விழிகளை அலையவிட்டபடி, கிச்சன் நோக்கி சென்றிருந்தாள்.

 

“எங்க டி போற?” என்று கேட்டுக் கொண்டே கிருஷ்ணாவும் அவள் பின்னால் வந்திருந்தான்.

 

 

 

 

 

 

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top