நேசம் : 5
கண்கள் சிவக்க முன்னாள் வேக நடையுடன் கிருஷ்ணா செல்ல, “கிருஷ்ணா நில்லு” என்று அவனை அழைத்தபடி வேக எட்டுக்களுடன் அவன் பின்னால் வந்துக் கொண்டிருந்தாள் மீரா.
அவள் அழைப்பிற்கு செவி சாய்க்காது முன்னேறி சென்றவனோ,
லிஃப்டிற்க்குள் ஏறி கீழ் தளத்தின் எண்ணை அழுத்தியிருக்க, லிஃப்ட் மூடும் முன்னமே மீராவும் அவனுடன் லிஃப்டிற்க்குள் நுழைந்திருந்தாள்.
லிஃப்ட்டும் கீழ் தளம் நோக்கி சென்றது.
முழுதாக அவன் நிதானத்தில் இல்லை தான். மதுவின் தாக்கம் அவன் உடலில் இன்னமும் இருக்க தான் செய்கிறது. ஆனால் அந்த தடுமாற்ற நிலையில் கூட செவ்வென சிவந்திருந்த விழிகளை சுருக்கி அவளை தான் முறைத்தான்.
“இப்ப எதுக்கு டி என் பின்னாடி வந்து சீன் கிரியேட் பண்ணிட்டு இருக்க?” என்று அவள் மீது எரிந்து விழ,
“நீ நிதானமா இல்ல. இப்படியே வெளிய போறது உனக்கு நல்லது இல்ல. டிரைவர் கீழ இருந்தா கால் பண்ணு. அவரை வந்து கூட்டிட்டு போக சொல்லு” என்று அவள் சொல்லவும்,
ஏகத்துக்கும் கடுப்பாகி விட்டான்.
அவனை பற்றி என்ன நினைத்து கொண்டிருக்கிறாள்? மூக்கு முட்ட குடித்து விட்டு கண் மண் தெரியாது வீதியில் விழுந்து கிடைக்கும் உல்லாச குடிமகன்கள் ரேஞ்சில் அல்லவா சொல்கிறாள்.
“என்ன? டிரைவர வர சொல்லனுமா? நான் என்ன மொடா குடிக்காரனாடி. கையை பிடிச்சி தூக்கிட்டு போறதுக்கு. எவ்வளவு குடிச்சாலும் ஸ்டெடியா தான் இருப்பேன்” என்றவனை அழுத்தமாக பார்த்தவள் விழிகளே சொன்னது உன் ஸ்டெடி எந்த அளவுக்கு இருக்கும் என்று எனக்கு தெரியும் என்ற சங்கதியை.
அவள் பார்வையின் அர்த்தம் புரிந்து கொண்டவனுக்கு தான் சற்று அவமானமாகி போனது.
நெஞ்சை நிமிர்த்தி அவளிடம் எகிறி கொண்டிருந்தவன் சற்று அடங்கி தான் போனான் அவள் பார்வைக்கு.
“சரி… எதோ ஒருமுறை கொஞ்சம் கண்ட்ரோல் மீறி போயிடிச்சு. அதுக்கு தான் இப்ப வரைக்கும் வச்சி செய்றியே” என்று அவன் வெறுப்பாக சொல்ல,
“மறுபடியும் வேற எதுவும் அசம்பாவிதம் நடந்துட கூடாதுனு தான் இங்க நின்னு பேசிட்டு இருக்கேன்” என்றவளை துளைத்தெடுக்கும் பார்வை பார்த்தவன்,
“என்னை என்ன தேர்ட் கிரேட் வுமனைசர்னு நினைச்சியா? பார்க்கிற பொண்ணு மேல எல்லாம் பாயுற போல பேசுற” என்று சீறி கொண்டு வந்தவனை,
அலட்டல் இல்லாது நிதானமாக பார்த்தவள், “நான் அப்படி சொல்லல” என்றாள்.
“வேற எப்படி டி சொன்ன?” என்று கோபமாக கேட்டுக் கொண்டே அவளை நெருங்கி நின்றவனை தலையை உயர்த்தி அண்ணார்ந்து தான் பார்த்தாள் மீரா.
சிறிதும் பயம் இல்லை அவள் விழிகளில். குற்றப்பார்வையும் பார்க்கவில்லை. அவன் அறியா அவன் மீதான அக்கறை பார்வை தான் அது.
“சொல்லு? வேற என்ன அர்த்தத்துல அப்படி சொன்ன?” என்று அடிக்குரலில் அவன் கேட்க,
ஆழமாக மூச்சு ஒன்றை இழுத்து விட்டுக் கொண்டவள், தன்னை நெருங்கி நின்றிருந்தவனை பிடித்து தள்ளி விட்டு, லிப்ட் தற்போது கடக்கும் தளத்தில் இறங்க எண்ணி, அதன் எண்ணை அழுத்த போக, அவள் கையை பிடித்து தடுத்த கிருஷ்ணாவோ அப்படியே அவள் கைகள் இரண்டையும் அவள் பின்னால் வளைத்து பிடித்தபடி தன்னோடு நெருக்கியிருந்தான்.
அவன் செயலில் திடுக்கிட்ட மீராவோ,
“என்ன பண்ற கிருஷ்ணா? கையை விடு” என்று அவன் பிடியிலிருந்து கைகளை விடுவிக்க போராட,
“பேசிட்டு இருக்கேன் ல. நீ பாட்டுக்கு போனா எனக்கு என்ன டி மரியாதை?” என்று கேட்டவன்,
“அப்படி என்ன டி என்மேல உனக்கு காண்டு? போற இடமெல்லாம் பின்னாடியே வந்து நிற்கிற. என்ன வந்து ஒட்டிக்கலாம்னு நினைக்கிறியா?” என்று அவன் அவளை கேவலமாக பார்த்து வார்த்தைகளை உமிழ,
அவனை தான் முழுதாக வெறுக்க முடியா நிலையில் பார்த்து வைத்தாள் மீரா.
“நான் இத பத்தி பேச விரும்பல. கையை விடு” என்றவளுக்கு அவன் பிடித்திருந்த கைகளின் அழுத்தத்தை விட, அத்தனை நெருக்கத்தில் அவள் நெற்றியில் மோதி சென்ற அவன் மூச்சுக் காற்றும், மதுவின் வாடையும் தான் அவளுக்கு உடல் உபாதைகளை கொடுத்து அவனை விட்டு விலகி நிற்க தூண்டியது.
“இதான் டி நீ. எப்பவும் நீ சொல்றத தான் மத்தவங்க கேட்கணும். மத்தவங்க சொல்ற எதையும் நீ கேட்க மாட்ட. உங்கிட்ட எந்த கேள்வியும் கேட்டிட கூடாது. சரியான ஆதிக்கவாதி டி நீ. நான் உனக்கு என்ன டி பாவம் பண்ணேன். எதுக்கு என் வாழ்க்கைக்குள்ள வந்த? எங்கிட்ட இருந்து எல்லாத்தையும் பறிச்சி என்னை அனாதையாக்கிட்டியே. வலிக்குது டி” என்று இதயத்தில் கை வைத்து சொன்னவன், கோபம் கலந்த அந்த வெறுப்பு அவளை தான் ஏதோ செய்தது.
இவ்வளவு தூரம் அவளை அவன் வெறுக்க அப்படி அவள் என்ன செய்து விட்டால்?
அவளுக்கும் தெரியவில்லை.
அவன் தவறிற்கு அவள் தண்டனை அனுபவித்தாள்.
அவன் ஆசைக்காக அவள் தலை குனிந்தாள்.
அவன் லட்சியத்திற்காக அவள் அவமானம் சுமந்து நின்றாள்.
இதில் அவள் தவறு என்ன இருக்கிறது?
தவறு தானோ.
அவன் தவறிற்கு தண்டனை கொடுக்காமல் விட்டது அவள் தவறு தானோ.
அவன் ஆசைகளுக்கு அவள் வலிகளை சுமந்து நின்றது அவள் தவறு தானோ.
அவன் லட்சியத்திற்கு வழி விட்டு தன் இலக்கை கோட்டை விட்டது அவள் தவறு தானோ.
ஆம்! எல்லாம் அவள் தவறு தான்.
இன்னும் அவன் நல்வாழ்விற்காக அந்த தவறுகளை செய்து கொண்டே இருப்பாள் போல.
எதுவும் பேசாது அவன் விழிகளை உறுத்து விழித்தபடி நின்றிருந்தவளை சட்டென்று தன் பிடியிலிருந்து விடுவித்தவன்,
லிப்ட் நிற்கவும் வெளியேறிட,
கைகளை நீவிக் கொண்டே கண்களை மூடி ஆழமான மூச்சு ஒன்றை எடுத்து கொண்டே மீண்டும் அவன் பின்னால் சென்றாள்.
பார்க்கிங் ஏரியாவில் நின்றிருந்த தன் காரை சற்று தொலைவில் வரும் போதே அன் லாக் செய்துக் கொண்டே காரை நோக்கி சென்றவன் கையிலிருந்து கீயை பறித்திருந்தாள் மீரா.
கோபமும் எரிச்சலுமாக அவளை பார்த்தவன்,
“ என்ன டி உன் பிரச்சனை? கண்ணு மண்ணு தெரியாம காரை ஓட்டிட்டு போய் எங்கேயாவது கொண்டு விட்டு செத்தா செத்துட்டு போறேன். நீ கவலை பட வேணாம்” என்றவனை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தவளோ,
“எதிர்ல வர்ற வேற யார் மேலயாவது விட்டா?” என்று கேட்டுக் கொண்டே தன் போனில் ஈஸ்வர் எண்ணுக்கு அழைத்தாள்.
“அதானே பார்த்தேன். என்ன டா என் மேல அக்கறை ஏதும் வந்துடுச்சோன்னு நினைச்சேன்.” என்று சலிப்பாக சொன்னவன்,
அவளிடம் இருந்து கார் கீயை பறிக்க முயல, அவனுக்கு கொடுக்காது கைக்குள் பொத்தி வைத்து கொண்டாள்.
மறுமுனையில் ஈஸ்வர் அழைப்பை ஏற்கவும்,
“ஈஸ்வர்… கொஞ்சம் சீக்கிரமா பார்க்கிங் வாங்க” என்று சொல்ல,
அங்கே ஸ்பீக்கர் சவுண்டில் இவள் குரல் தெளிவாக அவனுக்கு கேட்கவில்லை.
“என்ன?” என்று அவன் கத்திக் கேட்க,
“கொஞ்சம் சீக்கிரமா பார்க்கிங் வாங்க” என்றவளும் சத்தமாக சொல்ல,
அங்கே ஈஸ்வரோ பார்ட்டி ஹாலில் மீராவை தேடியவன், அவள் அங்கு இல்லை என்றதும் அறையை விட்டு வெளியே வந்து பேசினான்.
“என்னாச்சி மீரா? எதாவது பிரச்சனையா?” என்று அவன் கேட்க,
“கிருஷ்ணா வீட்டு கிளம்புறான். ட்ரிங்ஸ் பண்ணியிருக்கான். அவனை தனியா அனுப்ப முடியாது. நீ கொண்டு போய் விடு. இல்ல ட்ரிங்க் பண்ணாத வேற யாரையாவது அனுப்பி வை” என்றால் மீரா.
“நான் எப்படி வர முடியும் சொல்லு. இங்க எல்லாரும் ட்ரங் தான் மீரா. வேணும்னா ஒன்னு பண்ணு. ஹோட்டல்ல ரூம் புக் பண்ணியிருக்கேன் நீ அவனை அங்க தங்க வைக்கிறியா?” என்று கேட்டான் அவன்.
ட்ரிங்ஸ் பார்ட்டி… மூக்கு முட்ட குடித்து விட்டு வெளியே சென்று எவன் எவன் ஏழரையை இழுப்பான் என்று தெரியாது. அது தான் அவன் முன்னமே ஹோட்டலில் சில அறைகளை நண்பர்களுக்காக ஏற்பாடு செய்திருந்தான்.
“சரி நீ கிருஷ்ணாகிட்டயே அத சொல்லிடு” என்று மீரா தன் போனை கிருஷ்ணா புறம் நீட்டியவளை பார்த்து முறைத்தவன் ‘அவள் போனை கூட உபயோகப்படுத்த மாட்டேன்’ என்று முகத்தை திருப்பிக் கொண்டு நின்று விட்டான்.
அவன் செயலில் இடவலமாக தலையை ஆட்டிக் கொண்ட மீராவோ போனை ஸ்பீக்கரில் போட, அந்த பக்கம் “கிருஷ்ணா… டேய்…” என்று ஈஸ்வர் அழைத்து அழைத்து ஓய்ந்து போனான்.
வீண் வீராப்பில் காது கேளாது போல் அலட்சியமாக நின்றிருந்தவனை பார்த்த மீராவுக்கு தான் கடுப்பாகி போனது.
“என் போன்ல இருந்து அவன் பேச மாட்டானாம். நீ அவன் நம்பருக்கு கூப்பிட்டு சொல்லு” என்று விட்டு அழைப்பை அவள் துண்டித்ததும், கிருஷ்ணாவின் போன் ஒலித்தது.
ஈஸ்வர் தான் அழைக்கிறான் என்று அவனுக்கும் தெரியும். சலிப்பாக விழிகளை உருட்டி கொண்டே போனை எடுத்து காதில் வைத்த கிருஷ்ணாவிடம் ஈஸ்வர் ஹோட்டல் அறையில் தங்க சொல்ல,
அவனோ, “நான் எதுக்கு ஹோட்டல்ல தங்கணும்? எனக்கு வீடு இருக்கு. நான் வீட்டுக்கே போறேன்” என்று சிறுபிள்ளை போல் அடம் பிடிக்கும் அந்த முரட்டு குழைந்தையை அவனாலும் சமாளிக்க முடியவில்லை.
அவனை சமாளிக்கும் ஒரே ஆள் மீரா தான்.
மீண்டும் மீராவுக்கே அழைத்து, “அவன் கேட்க மாட்டேங்கிறான் மீரா. நான் இங்க பார்த்துகிறேன். நீயே கொஞ்சம் அவனை ட்ராப் பண்ணிடேன்” என்று கோரிக்கையாக கேட்டான்.
எப்படியோ அவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க நினைத்து தான் இருவரையும் இங்கே வரவழைத்திருந்தான். இடையில் அவன் நண்பர்களால் தன் முயற்சி வீணாகி விடுமோ என்ற கவலைக்கு முற்றுப் புள்ளி வைத்திருந்தான் கிருஷ்ணா தன் வெட்டி வீராப்பால்.
“இதுக்கு அவன் சம்மதிக்க மாட்டான் ஈஸ்வர்” என்ற மீராவிடம்,
“ப்ளீஸ்… ப்ளீஸ்… நீயே அவனை கொஞ்சம் பார்த்துக்கோயேன் எனக்காக” என்று கெஞ்சியவன், அவள் மறுத்து பதில் சொல்ல கூட அவளுக்கு அவகாசம் கொடுக்காது போனை அணைத்திருந்தான்.
“கடவுளே! எப்படியாவது ரெண்டு பேர் சண்டையையும் முடிவுக்கு கொண்டு வந்திடு” என்று கடவுளிடம் கோரிக்கை வைத்து விட்டு பார்ட்டி ஹாலுக்கு திரும்பினான்.
“என்ன?” என்று கடுப்பாக கேட்ட கிருஷ்ணாவோ, “கீயை குடு” என்று கையை நீட்டிட,
நீட்டியிருந்த அவன் கையையும், அவனையும் ஒரு நொடி பார்த்தவள், சாவியோடு அவன் காரை நோக்கி சென்றாள்.
“ஏய்… நில்லுடி. சாவிய குடு டி” என்று இப்போது கத்திக் கொண்டு அவள் பின்னால் வந்தது என்னவோ அவன் தான்.
காருக்குள் ட்ரைவர் இருக்கையில் அமர்ந்து கொண்டு ‘ஏறு’ என்று விழிகளால் அவனுக்கு கட்டளையிட்டவளை, ஏகத்துக்கும் முறைத்தான் அவன்.
“என்ன விளையாடுறியா? இறங்கு டி முதல்ல. என் கார்ர தொடுற தகுதி கூட உனக்கு கிடைத்து. இறங்கு” என்று பல்லை கடித்தவனை,
நிதானமாக விழிகளை திருப்பி பார்த்தாலே தவிர, ஒரு வார்த்தை பேசவில்லை.
அந்த பார்வையே சொன்னது ‘நான் முடிவெடுத்து விட்டேன். நீ கேட்டு தான் ஆக வேண்டும்’ என்று.
“சர்வாதிகாரி” என்று அவளை திட்டியவன், பொது வெளியில் அவளோடு மல்லு கட்டி காட்சி பொருளாக மாற விருப்பமில்லாது அடுத்த பக்கம் வந்து ஏறிக் கொண்டான்.
இதழ்களை கிடைக்காத சிறு கீற்றுப் புன்னகை மீரா இதழ்களில்.
அரை டிரவுசர் போட்டு நெற்றியில் திருநீர் கீற்றோடு தன்னை முறைத்து கொண்டிருந்த பொடியன் கரங்களை பற்றி அஞ்சம்மாள் குட்டி மீராவிடம் ‘இனி இவன் உன் பொறுப்பு. நீ தான் பார்த்துக்கணும்’ என்று சொல்லி ஒப்படைத்த போது ஆரம்பித்த நேசம் இது.
அவன் வெறுத்தாலும், விலகி ஓடினாலும் ஏன் அவள் மண்ணுக்குள் புதைந்தாலும் மாறாது இந்த நேசம்.
அவன் வெறுக்கும் அதிகாரம் தான் அவளுடையது. ஆனாலும் ஏன் அதற்கு கட்டுப்படுகிறோம் என்று அவனுக்கும் தெரியவில்லை.
அவளால் என் வாழ்க்கையே போய் விட்டது என்று அவளை குற்றம் சொல்பவன், என் வாழ்க்கையே அவள் தான் என்று உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை.