அசுரன் 1

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 6 months ago
Messages: 207
Thread starter  

அசுரன் 1

 

சென்னையின் விவிஐபிஸ் மட்டுமே பணத்தை வெகு தாரளமாக செலவழித்து மருத்துவம் பார்க்கும் மீனாட்சி மருத்துவமனை, அன்று மிக பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

 

மருத்துவமனை என்றாலே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. அதுவும் பிரசவம் மற்றும் ஐவிஎஃப் க்கு பெயர் போன மருத்துவமனை அது..! 

 

“குழந்தை வரம் வாங்க.. மீனாட்சி வாங்க” என்று விளம்பர போர்டு வைத்து கோடி கோடியாய் சம்பாதித்து கொட்டிக் கொள்ளும் தன்வந்திரிகள் அங்கே ஜாஸ்தி.

 

மருத்துவத்தை மருத்துவமாய் பார்க்காமல் வியாபாரமாய் பார்க்கும் காலம் என்று வந்துவிட்ட நிலையிலும், மக்களும் தங்களுக்கே தங்களுக்கென்று வாரிசு வேண்டும் என்று அம்மருத்துவமனையை படை எடுத்த வண்ணம் தான் உள்ளனர்.

 

அங்கே வேலை பார்க்கும் ஊழியர்கள் எப்பொழுதுமே சிறு பரபரப்போடு இயங்கிக் கொண்டிருந்தாலும், அன்றைய தினம் சற்று அதீத பரபரப்போடு தான் காணப்பட்டார்கள்.

 

“இன்னைக்கு தேதியில மட்டும் ஐஞ்சு டெலிவிரிக்கு நம்ம டாக்டர் டைம் கொடுத்து இருக்காங்க… அதை நினைக்க எனக்கு இப்பவே கண்ண கட்டுது” என்று தலைமை செவிலியர் (ஹெட் நர்ஸ்) அருகில் இருக்கும் மற்றொரு செவிலியரிடம் கூறிக் கொண்டிருந்தாள்.

 

“நீங்க மேடம்க்கு ஸ்பெஷல் தானே சிஸ்டர்?” என்று அந்த பெண்ணும் கூற,

 

“என்ன ஸ்பெஷலா இருந்து என்ன? ஓய்வு எடுக்க முடியாமல் ஓடிக்கிட்டே இருந்து காலம்தான் போச்சு” என்று கூறிக் கொண்டிருக்கும் போதே, 

 

“மேட்ரன்‌.. டெலிவரி ரூம்ல எல்லாம் ரெடி. டாக்டர் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாங்க நீங்களும் வாங்க..” என்று மற்றொரு செவிலியர் பெண் அழைக்க, குடித்துக் கொண்டிருந்த காஃபியை முழுவதும் குடிக்க முடியாத ஏக்கம் அந்த ஹெட் நர்ஸ் கண்களில் அப்பட்டமாக தெரிய, அந்த காஃபி பேப்பர் கப்பை அப்படியே குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு வேகமாக ஓடினார்.

 

அடுத்த அரை மணி நேரம் போராடியும் அந்த பெண்ணால் சுகபிரசவத்தால் குழந்தையை பிரசவிக்க முடியவில்லை.

 

“என்னம்மா நீ ஒரு குழந்தையை கூட முக்கி பெக்க முடியலன்னா எப்படி மா? ம்ம்ம்.. நல்லா.. இன்னும்.. முக்குமா. என்ன பொண்ணுமா நீ?” என்று‌ அவர்‌ கடிய, அந்த 2கே கிட் பெண்ணோ “சிஸ்டர்.. என்னால் முடியல.. சிஸ்டர் ப்ளீஸ்.. ஆப்ரேஷன்… பண்ணிடுங்க” என்று திணறி திணறி ஒரு கட்டத்தில் மயக்கத்தில் ஆழ்ந்து போனாள்.

 

“இப்ப இருக்கிற பொண்ணுங்க எல்லாம் என்ன பொண்ணுங்களோ போ? சத்தா சாப்பிடுவதும் கிடையாது. உடம்ப பாத்துக்குறதும் கிடையாது.. ரீல்ஸ், ஜங்க் ஃபுட் அது இதுன்னு உடம்பை பாதிக்க விட்டுட்டு இப்ப வந்து முக்க முடியாமல் மூர்ச்சையாகி போகுது..” என்று புலம்பிய ஹெட் நர்ஸ் காயத்ரி, அந்த பெண்ணின் பல்ஸை செக் செய்தாள்.

 

“நர்ஸ் அந்த பொண்ணோட எஸ்பிஓ2, பிபி எல்லாம் பாருங்க.. நீங்க போய் ஆபரேஷன் தியேட்டர் ரெடி பண்ணுங்க.. அப்படியே ஆனஸ்தடிக்ஸ் டாக்டருக்கும் இன்பார்ம் பண்ணிடுங்க..” என்று அடுத்தடுத்து கட்டளைகளை வேகமாக இட்ட ஹெட் நர்ஸ் உள்ளே நுழைந்த டாக்டர் சாருபாலாவிடம் நடந்தவற்றை கூற,

 

அவரோ பெருமூச்சுடன் “நான் அப்பவே சொன்னேன்ல காயத்ரி உனக்கு.. நீ தான் கேட்கவே இல்லை.! இம்மாதிரி கேஸ் எல்லாம் சிசேரியன் தான். சரி சரி சீக்கிரம் ஆபரேஷன் தியேட்டர் ரெடி பண்ணிட்டு என்கிட்ட இன்பார்ம் பண்ணு” என்று சென்றுவிட்டார். 

 

சுகப் பிரசவத்தை விட சிசேரியனில் அதிக பணம் பார்க்க முடியும். ஆனாலும் பெரும்பாலும் சுகபிரசவத்துக்கு தான் முயற்சி செய்வார்கள் சாருபாலாவும் காயத்ரியும்.

 

ஆனால் எங்கே முடிகிறது இப்போது உள்ள பெண்களால்? இப் பெண்கள் ஒரு பக்கம் முக்கி முக்கி முயன்று முடியாமல் மயக்கம் அடைந்து போக அடுத்தது சிசேரியன் என்ற ஆப்ஷனை கொண்டு வந்து விடுவார்கள்.

 

அதிலும் மருத்துவமனை நிர்வாகமும் ஒரு மாதத்திற்கு இத்தனை சிசேரியன் கண்டிப்பாக செய்தே ஆக வேண்டும் என்று ஏக கட்டுப்பாடுகள்.. அனேக விதிகள் அங்கு பணிபுரியும் மருத்துவர்களிடம்..!

 

அதை தாண்டியும் காயத்ரி மற்றும் சாருபாலா போல சிறு மனிதநேயமிக்க மனிதர்கள் முயன்று பார்க்க முடிந்தாலும் முடிவதில்லை. 

 

அடுத்த இரண்டு மணி நேர அறுவை சிகிச்சை முடிவில் அழகான ஆண் குழந்தை அப்பெண்ணுக்கு பிறந்தது. 

 

கூடியிருந்த அப்பெண்ணின் உறவினர் கூட்டம் “மொதலேயே சிசேரியன் பண்ணி இருக்கலாம். எதுக்கு பொண்ண போட்டு இவ்ளோ கஷ்டப்படுத்தினாங்கனே தெரியல..” என்று குறை சொல்லியபடி குழந்தையையும் பிரசவித்த பெண்ணையும் பார்த்தனர். காயத்ரி ஒரு பெரிய மூச்சோடு வெளியே வந்துவிட்டார். 

 

சிறு இடைவெளி அவருக்கு..! அடுத்தது இன்னும் இரண்டு சிசேரியன் இருக்கிறது மதியத்திற்கு மேல்.. 

 

“ஏற்கனவே நல்ல நேரம் பார்த்து குறித்து வைத்த நேரத்தில் தான் பிள்ளையை பெற்று எடுக்க வேண்டும் என்று ஒரு மகராசி இரண்டு நாட்கள் முன்னவே வந்து நேரம் குறித்துவிட்டு சென்று விட்டார். இன்னும் அந்தப் பெண்ணுக்கு வலி கூட வரவில்லை டியூ டேட்டும் நெருங்கவில்லை இவர்களை எல்லாம் என்னதான் செய்வது?” என்று புலம்ப மட்டுமே முடிந்தது காயத்ரியால், அதுவும் அவரின் கணவன் சரவணனிடம்.

 

“விடுமா.. குழந்தை நல்ல நேரத்துல பொறக்கணும்னு அவங்க ஆசைப்படுறாங்க.. இதுல நாம எப்படி குத்தம் சொல்ல முடியும்? அந்த காலத்துல தான் இதெல்லாம் தெரியாமல் இருந்தது.. ஆனா இப்போ முன்னே ஜாதகத்தை கணிச்சு தான் புள்ளையே பெத்துகிறாங்க” என்று தேற்றினார் மனைவியை. 

 

“ஆமாங்க.. முன்னமே இப்படித்தான் இருக்கணும்னு வகுத்து வைக்க பாக்குறாங்க, கடவுளின் கட்டளைகளையை மீற பாக்குறாங்க” என்று மேலும் அவர் புலம்ப..

 

“காயு.. உனக்கு லஞ்ச் டைம் முடிய போது சீக்கிரம் சாப்பிட்டு அடுத்த டியூட்டிக்கு கிளம்பு. புலம்புனா புலம்பிட்டே தான் இருக்க முடியும். அது தவிர்த்து உன்னால அங்க எதுவும் செய்ய முடியாது” என்றதும் சரி என்றபடி வேகமாக உணவை முடித்துக் கொண்டு ஆபரேஷன் தியேட்டரில் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று பார்க்க சென்றாள் காயத்ரி. 

 

இப்படியாகத்தான் அந்த மீனாட்சி மருத்துவமனையில் பணமே பிரதானமாக.. வைத்தியத்தை வியாபாரம் ஆக்கி கொண்டிருந்தார்கள். 

 

“ஹெட் நர்ஸ்.. இன்னைக்கு 11:00 ஓ கிளாக் மீட்டிங்காம். செகண்ட் ப்ளோர்ல இருக்கிற கான்ஃபரன்ஸ் ஹால்ல.. எல்லாரையும் அசெம்பிள் பண்ண சொல்லி நம்ம டைரக்டர் கிரிதரன் சார் சொன்னார். உங்க டிபார்ட்மெண்ட்ல உள்ள நர்ஸ் எல்லார்டேயும் நீங்க இன்ஃபார்ம் பண்ணிடுறீங்களா?” என்று கேட்டாள் சுபா. அட்மினில் வேலை பார்க்கும் பெண். 

 

“சரி சுபா.. நான் சொல்லிடுறேன்.!” என்றாள் காயத்ரி.

 

அதன் பின் மற்றொரு செவிலியரிடம் அந்த விஷயத்தை அவர்கள் டிபார்ட்மெண்ட் அதாவது கைனக்காலேஜ் டிபார்ட்மெண்டில் இருக்கும் அனைத்து செவிலியர்கள் வார்ட் பாய்கள் அனைவரிடமும் கூறும்படி அனுப்பினார். 

 

சரியாக 11 மணி இரண்டாம் தளத்தில் இருக்கும் கான்ஃபரன்ஸ் ஹாலில், மகப்பேறு பிரிவில் உள்ள அனைவரும் ஆஜர்..!

 

காயத்ரி உள்ள நுழையும் பொழுது சாருபாலாவோடு மற்றொரு மருத்தவரான விஜிதாவும் அமர்ந்திருக்க.. அவர்களுக்கு தலையசைத்து வணக்கத்தை தெரிவித்துவிட்டு பின்னால் சென்று அமர்ந்தாள்.

 

காயத்ரிக்கு அருகில் அமர்ந்து அவரது புஜத்தை சுரண்டிய மீராவை திரும்பிப் பார்த்தாள்.

 

“காயு சிஸ்டர்.. என்னவா இருக்கும்? எதுக்கு இந்த மீட்டிங்?” என்று வடிவேல் மாடுலேஷனில்

கேட்டவளை பார்த்து காயத்ரி முறைக்க..

 

“என்ன காயுக்கா.. நீங்க நம்ம டாக்டர்ஸூக்கு எல்லாம் கிளோஸ் இல்லையா? ரொம்ப எக்ஸ்பீரியன்ஸ் வேற.. உங்களுக்கு சொல்லாமலா..??” என்று அவள் நீட்டி முழக்க..

 

“உதை வாங்குவ மீரா.! அமைதியாக இரு.!” என்று அதட்டினாள் காயத்ரி. 

 

“அதில்ல அக்கா.. நம்ம டிபார்ட்மெண்ட் மட்டும் தான் வர சொல்லி இருக்காங்க. அப்போ நம்ம டிபார்ட்மெண்ட்ல ஏதாவது சேஞ்சஸ்சோ இல்ல ஏதாவது ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் புதுசா வரும்னு நினைக்கிறேன். அதுதான் உங்களுக்கு தெரியாமல் இருக்குமா?” என்று ஆரம்பித்தவள் காயத்ரியின் முறைப்பில் வாயை மூடிக்கொண்டாள்.

 

அடுத்த பத்தாவது நிமிடம் கிரிதரன் மற்றும் அந்த ஹாஸ்பிடலின் முக்கிய 

பதவியில் இருப்பவர்கள் என்று ஐவர் உள்ளே நுழைய.. அனைவரும் எழுந்து நின்று வணக்கம் கூற, அவர்களை பார்த்து கையசைத்து அமரும்படி கூறிய கிரிதரன் தனது நாற்காலியில் அமர்ந்தார். 

 

அருகில் இருக்கும் சீனியர் மேனேஜரை கையை காட்ட..

 

அவரோ கைனக்லாஸிஸ்டின் அருமை பெருமைகள் எல்லாம் உரைத்துவிட்டு.. அவர்களை எவ்விதம் தாங்குகிறது என்று மீனாட்சி மருத்துவமனையின் புகழையும் பாடிவிட்டு.. அதற்கு மேல் தான் விஷயத்திற்கே வந்தார். 

 

அதற்குள் அங்கு இருந்தவர்களுக்கு எல்லாம் சலிப்பு தட்டியது. “இது தானடா ஒவ்வொரு மீட்டிங்கு சொல்றீங்க..” என்றவாறு அவர்களது முகபாவனைகள் இருக்க, அதை எல்லாம் கண்டுகொள்ளவே இல்லை அந்த சீனியர் மேனேஜர். 

 

“நம்ம கைனக்காலஜ் டிபார்ட்மெண்ட்ல புதுசா அல்ட்ரா டெக்னாலஜியோட ivf டிபார்ட்மெண்ட் நாம ஆரம்பிக்க போறோம்” என்றது விஜிதாவுக்கு கண்களில் ஆசை மின்னியது. ஏனென்றால் அவள் அந்த பிரிவில் தனியாக ஆறு மாத கோர்ஸ் ஒன்றை சமீபமாக முடித்து இருந்தாள். ஏற்கனவே செயல்பட்டு வரும் ஐவிஎஃப் பெருமளவில் இருந்தாலுமே அதன் வெற்றி சதவீதம் குறைவு. 

 

இந்த அல்ட்ரா டெக்னாலஜி மூலம் இன்னும் வெற்றியின் சதவீதத்தை சீக்கிரமாக எட்டி பிடிக்கலாம் என்று கிரிதரனின் பேராசையே இந்தப் புதிய முயற்சிக்கு காரணம்.

 

“சோ.. அதுக்கு ஸ்பெஷலா நாங்க ஒரு டாக்டரை வெளிநாட்டிலிருந்து வர வழைச்சிருக்கிறோம்” என்றதும் அவளது முகம் சிறுத்து போய்விட்டது.

 

“ஏன் உள்ளூர்ல உள்ளவங்க எல்லாம் டாக்டரா தெரியலையோ? வெளி ஊர்ல இருந்து தான் ஆளை அழைத்து வரணுமா?” என்று சாருபாலாவுக்கு கேட்டுமாறு சத்தமாகவே முணுமுணுத்தாள் விஜிதா.

 

சாருபாலாவோ அவளை விட சீனியர். கடந்த 10 வருடமாக இந்த மருத்துவமனையில் வேலை பார்க்கிறார். ஆனால் விஜிதாவோ அண்மையில் தான் வேலைக்கு சேர்ந்து இருக்கிறாள். அவளுக்கு இங்கு உள்ள பாலிடிக்ஸ் எல்லாம் சரியாக புரியாது. அதில் பழம் தின்று கொட்டை போட்ட சாருபாலா அமைதியாக நடப்பவற்றை வேடிக்கை பார்த்தார். 

 

“வெல்கம் அவர் ஹானரபில் டாக்டர் ராவண் திரேந்திரன் மாறவேல்..!” என்ற அழைப்பில் அனைவருமே ஒரு வினாடி திகைத்தனர்.

 

‘வெளிநாட்டு மருத்துவர் என்றால் ஏதேனும் தசுபுசு என்று வாயில் நுழையாத பெயராக இருக்குமோ நம்ம இங்கிலீஷ் அவர் இங்கிலீஷ்சும் எண்ணெயும் தண்ணீரும் மாதிரி ஒட்டவே ஒட்டாதே..! எப்படி அவரை சமாளிக்க போகிறோம்?’ என்று ஆளாளுக்கு முகத்தில் குழப்ப ரேகைகளோடு இருந்தவர்கள் சீனியர் மேனேஜர் அழைத்து பெயரை கேட்டது தான் சற்று ஆசுவாசம்.. 

 

“அப்பாடி.. வருகிறவன் தமிழன் தான்..!” என்று ஆசுவாசமாக இருந்தது அவர்களுக்கு.

 

ஆனால் அவர்களுக்கு தெரியவில்லை. அவனும் அந்த யட்சனின் தலைவன் ராவணனின் அரக்க குணத்தையும், சூரனை வதைத்த சிவ நந்தனின் வீரத்தையும், சிவகாமி தேவியின்‌ விவேகத்தையும் ஒருங்கே பெற்றவன் இனி அவர்களை எல்லாம் ஆட்டிப்படைக்க போகிறான் என்று..!!

 

அவர் கூறி முடிப்பதற்காகவே காத்திருந்தவன் போல ஒரு பாக்கெட்டில் கையை விட்டுக் கொண்டு அழுத்தமான காலடிகளோடு அந்த ஹால் உள்ளே நுழைந்தவனை தான் அங்கிருந்து அனைவருமே பார்த்தனர். அதுவரை அவர்களுக்கு இடையே இருந்த ஒரு சலசலப்பு அடங்கியது அவனது அழுத்தமான கூர் பார்வையால்‌‌..!

 

அனைவரும் பார்வையும் அவன் முகத்தில் தான்..! 

 

அவன் உடலை கவ்வி பிடித்திருந்த வெள்ளை நிற சட்டையும், அதற்கு தோதான க்ரீம் நிற பேண்டிலும் மருத்துவன் என்பதை தான்டி பாலிவுட் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் இருந்தன அவனது உடல் அமைப்பும் புஜங்களின் திரட்சியும்.. 

அவனின் கவர்ச்சியும்..!!

 

அதிலும் அந்த ஹாலில் இருந்த இளம் பெண்கள் அனைவரும் ஆஆவென்று பார்த்தனர்.

 

அவனது முகத்தில்..

கற்ற கல்வியினால் வந்த மிடுக்கும்.. பிரத்யேக திறமையினால் வந்த திமிரும்..

பிறப்பு கொடுத்த ஆளுமையும்..

வெளிநாட்டு சீதோஷ்ண நிலை கொடுத்த கலரும்.. சரி விகிதத்தில் கலந்து நிற்க..

 

அவனது கூர் விழிகளால் அங்கிருந்தவர்களை ஆராய்ந்து பார்த்தான்.

 

அதில் வெளிப்பட்டது என்னவோ “ஸ்டே அவே..!” என்ற பாவம் தான்.

 

விட்டில் பூச்சிகளாய் புறத்தோற்றத்தை மட்டும் பார்த்து வெறி உலகத்தை சரியாக தெரிந்து கொள்ளாமல் இருக்கும் பெண்களால், அவன் கண்ணில் சொன்ன செய்தியை படிக்காமல் அவனைப் பார்த்து மூச்சிறைத்து இருந்தனர் ஏக்கமாக.. 

 

அதன் பிறகு அவன் வந்து அமரவும் அவனை பற்றிய ஒரு சிறிய லட்சார்ச்சனையை முடித்தார் சீனியர் மேனேஜர். கிரிதரனும் அவனுக்கு வாழ்த்து கூறி கௌரவித்து அவர் பங்குக்கு அவரும் அவனைப் பற்றி சிறிது பேசினார்.

 

அந்த மேடை போன்ற முகப்பில் இரு விரல்களையும் பாக்கெட்டில் விட்டபடி நிமிர்ந்து நின்றவனின் அந்த தோற்றம் அத்தனை கவர்ச்சியாய் இருக்க.. விஜிதாவே தான் மருத்துவர் என்பதை மறந்து கன்னத்தில் கை வைத்து அவனை பார்த்தபடி இருந்தாள்.

 

“ஏய் விஜி.. கன்ட்ரோல்..!” என்று அவளது கையை லேசாக தட்டினார் சாருபாலா. அவள் தான் இந்த லோகத்திலேயே இல்லையே..!

 

“ஹாய் ஐ அம் டாக்டர் ராவண் திரேந்திரன் மாறவேல்..! ஃப்ரம் யுஎஸ்..! லெட்ஸ் ஸ்டார்ட் அவர் வொர்க்..! இட்ஸ் அல்ரெடி லேட்.!” என்று குறிப்பாக தன் வாட்ச்சையும் அருகில் இருந்த கிரிதரனையும் பார்த்தான்.

 

கிரிதரனின்‌ முகம் போன போக்கை கண்டு காயத்ரிக்கும் அருகில் இருந்த மீராவுக்குமே முட்டி வந்த புன்னகையை அடக்கிக் கொண்டனர். 

 

ராவண் ஏற்கனவே இம்மாதிரியான சம்பிரதாயங்கள் எல்லாம் வேண்டாம் என்றுதான் சொல்லி இருந்தான்.  

 

ஆனால்.. “எங்க ஹாஸ்பிடல்ல இதுதான் ஃபார்மாலிட்டி அண்ட் ரூல்ஸ்..!” என்று கிரிதரன் அழுத்தி சொல்லி இருக்க,

 

‘ப்ரேக் தட் ப்ளடி ரூல்ஸ்..!’ என்று இவனது பதில் அடி இப்படியாக இருந்தது. 

 

அதன் பின் கிரிதரன் பொதுவாக தலையாட்டி சென்று விட, சீனியர் மேனேஜர் தான் அவனது அறை அவனது டிபார்ட்மெண்ட் லேப் என்று அனைத்தையும் சுற்றி காட்டினார். 

 

ஒரு மாதத்திற்கு முன்பாகவே இவன் இந்த மருத்துவமனையில் வேலை புரிய சம்மதம் தெரிவித்து விட்டான். அதற்குப் பின் தனக்கான அறை தன்னுடைய லேப் என்று அவன் கேட்ட விதத்திலேயே அனைத்தையும் ஒரு இம்மி பிசக்காமல் ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார் கிரிதரன். 

 

அனைத்தையும் சுற்றி பார்த்தவன் கண்களில் அத்தனை மெச்சுதல் “எவர்திங் இஸ் குட்..!” என்றான் சீனியர் மேனேஜரை பார்த்து…

 

“எங்க கிரி சாரை இதுல எல்லாம் அடிச்சுக்கவே முடியாது டாக்டர். எங்க ஹாஸ்பிடல் டாக்டர்ஸ் கேக்குற அத்தனை பேஸிலிட்டியையும் ஒரு குறை இல்லாம செஞ்சு கொடுத்திடுவார். அதேபோலத்தான் அவர் எதிர்ப்பார்ப்பையும் அவங்களிடம் இருந்து கண்டிப்பாக வாங்கி விடுவார்” என்று அவன் குரல் சாதாரணமாக இருந்தாலும் அதிலுள்ள சூட்சமக் கருத்தை உள்வாங்கிக் கொண்டவனின் நெற்றியோ முடிச்சியோடு இருந்தது. 

 

“இன்னைக்கு எனக்கு பேஷண்ட்ஸ் ஏதும் செட்டியூல் பண்ண வேண்டாம். நாளையிலிருந்து செட்டியூல் பண்ணுங்க‌‌.. நான் இங்க முதல்ல இந்த அட்மாஸ்பியருக்கு என்னை பொருத்துகிறேன்” என்றவன் அந்த மகப்பேறு பகுதியை அன்று முழுவதும் சுற்றி வந்து அவற்றையெல்லாம் அனுமானித்து கொண்டான். 

 

அங்கிருந்த செவிலியர்களிடமும் பொதுவாக அவன் பேச சிலர் அவன் பாவணையில் கிறங்கினாலும் அவனது கூர் விழியில் சற்று பயந்தே தள்ளி நின்றனர். 

 

கடைசியாக மீராவை தனது செவிலியராக அவன் நியமித்துக் கொள்ள..

 

“சார் ஒரு 5 மினிட்ஸ் என்னோட திங்ஸ் எடுத்துட்டு வந்துடுறேன்..” என்ற பவ்யமாக கேட்டவள், வேகமாக செவிலியர் ஓய்வு அறைக்குள் நின்று ஒரு குத்தாட்டம் போட்டே வெளியில் வந்தாள், தன் முக மலர்ச்சியை காட்டாதபடி..!

 

மறுநாள் காலை ஒவ்வொருத்தராக அவன் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் தான் உள்ளே நுழைந்தாள் அவள்.

 

அந்நேரத்தில் நோயாளிகள் யாரும் இல்லை என்றாலுமே அவனிடம் அனுமதி இன்றி உள்ளே நுழைந்தவளை நெற்றிக்கண் இல்லாமல் பொசிக்கினான் ராவண். 

 

அவனது நெற்றிக்கண் அனலுக்கு கொஞ்சமும் பயப்படாமல் அவன் முன்னே கைகட்டி “சோ.‌.. யூ ஆர் டாக்டர் ராவண் திரேந்திரன் மாறவேல்..!” என்று கண்களில் அத்தனை கடுமையோடு கேட்டு நின்றிருந்தவளை பார்த்தவன் அருகில் இருந்த பெல்லை அழுத்த வேகமாக உள்ளே ஓடி வந்தாள் மீரா.

 

எதிரே இருந்தவளை சற்றும் கண்டு கொள்ளாமல் “சிஸ்டர்.. க்ளியர் தட்.‌!” என்று அவளை நோக்கி கையை காட்டி விட்டு தன் கையில் இருந்த கோப்பில் ஆழ்ந்து கொண்டான் ராவண்.

 

“வாட் கிளியர் இட் டா? டூ யூ நோ ஹூ அம் ஐ? ஐ அம் த பாஸ் ஆஃப் திஸ் ஹாஸ்பிடல்.. ஆல்ஸோ யூ..!!” என்று ஆளுமையான மிடுக்கோடும் சற்றே நளினத்தோடும் சொன்னாள் அவள்.

 

அவள் ஆருஷி வள்ளியம்மை..!

 

அவளை அலட்சியமாக எதிர்கொண்டன ராவணின் ஹாசல் விழிகள்.

 

வருவான்.. அசுரன்..


   
Quote
(@gowri)
Member
Joined: 6 months ago
Messages: 48
 

வாவ் வந்துட்டான் ராவன் 🤩🤩🤩🤩🤩

ஆருஷி தான் ஹீரோயினா????


   
Jiya Janavi reacted
ReplyQuote
Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 6 months ago
Messages: 207
Thread starter  

@gowri Yes.. Yes..  🥰😍🤩


   
ReplyQuote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top