உன் கணவனாக நான் வரலாமா..
டீசர்:
காதம்பரி தனக்கு முன்னால் உட்கார்ந்திருப்பவனையே நெஞ்சம் படப்படக்க பார்த்துக்கொண்டிருந்தாள்.. அவள் உள்ளங்கை வியர்வையில் நசநசக்க.. அவளின் அகலமான காந்தவிழிகளோ படப்படவென அடித்துக்கொண்டே இருந்தது.. அந்த நாற்காலியில் உட்கார முடியாமல் அவள் நெளிந்துக்கொண்டே இருக்க.. அவளின் இந்நிலையை நினைத்து அவளுக்கு எதிரில் இருப்பவனுக்கு சிரிப்பு தான் வந்தது.
“என்ன மிஸ் நர்வஸா இருக்குற மாதிரி இருக்கு..”என்றவனின் காந்த கண்களோ அவளை தான் வட்டமடித்தது.. அதுவும் அவளின் இதழுக்கு கீழே இருக்கும் அந்த மச்சமோ அவனை ஈர்க்க போதுமானதாக இருந்தது.
அவளோ அவன் தன்னை கேலி செய்வதை பொறுக்க முடியாமல்.. “லுக் சார்..”என்று ஆரம்பிக்க..
அதற்குள் "லுக்கிட்டு தானே மிஸ் இருக்கேன்..”என்றானே பார்க்கலாம்.. அதில் காதம்பரி அவனை கடுப்பாக பார்க்க..
“உங்க வீட்ல கடுகுக்கு சப்ஷிட்டுட் நீங்க தான் போல மிஸ்..”என்று சம்பந்தம் இல்லாமல் பேச.. அதில் பெண்ணவள் தான் முழிக்க வேண்டியதாகி போனது..
தன் அழகான விழிகளை சுருக்கி அவனை விசித்திரமாக பார்த்தவளை பார்த்தவனின் சிரித்த சிவந்த இதழ்கள் இன்னும் சிரிப்பினில் விரிய.. ஏதோ தன்னை கிண்டல் செய்கின்றான் என்பது மட்டும் அவளுக்கு சரியாக புரிந்தது..
“ம்ச் ரொம்ப யோசிக்காதீங்க.. கடுகு இல்லனா உங்க கடுப்பான முகத்த காட்டுனாலே கடுகு மாதிரி பொறியுமே அதான் கேட்டேன்.. நீங்க கடுகுக்கு சப்ஷிட்டுட்னு..”என்றவனின் கண்களோ வஞ்சனை இல்லாமல் அவளை தான் ரசித்துக்கொண்டிருந்தது.
அதனை பார்த்தவளின் முகம் கோவத்தில் சிவந்ததோ இல்லை வெட்கத்தில் சிவந்ததோ தெரியாது.. ஆனால் சிவந்தது.
“லுக்..”என்று மறுபடி ஆரம்பிக்க.. அவனோ அவளை கண்களை விரித்துக்காட்டி பார்க்க.. அவனின் அடுத்தக்கட்ட பேச்சு என்னவாக இருக்கும் என்று அவளுக்கு தெரிந்து போனது.
“கூம்..ம்கூம்..”என்று தன்னை சமன் செய்துக்கொண்டவளோ.. “எனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம் இல்ல ஜனா சார்.. நீங்க உங்க வீட்ல இத எடுத்து சொல்லி புரிய வைங்க..”என்று எங்கோ பார்த்தவாறே கூற.
அவனோ தோளை குலுக்கிக்கொண்டவனின் சிரித்த முகமோ கொஞ்சமும் மாறவில்லை.. அப்படியே புன்னகையுடனே அவளை பார்த்து.. “நானும் அதே தான் சொல்றேனுங்க மிஸ்.. எனக்கு உங்கள ரொம்ப பிடிச்சிருக்கு அதுவும் போன வாரம் உங்கள உங்க வீட்ல, அந்த மஞ்ச சேரில, தலை முழுதும் மல்லியோட பார்த்த போதே ஆள் ஃப்ளாட் ஆகிட்டேன்.. ம்ச் அன்னில இருந்து என் கனவுல முழுதும் நீங்க தான் வறீங்கனா பாருங்களேன்.. அதும் அதே மஞ்ச சேரில மயக்கும் மோகினியாட்டம்..”என்றவனின் முகத்திலோ அவ்வளவு ரசனை வழிந்தோட.. அதனை விழி விரித்து பார்த்துக்கொண்டிருந்த பெண்ணவளுக்கோ அவனுக்கு எப்படி சொல்லி புரிய வைப்பது என்றே தெரியவில்லை.
“ம்ச் சும்மா கனவு கண்டுட்டு இருக்காதீங்க சார்.. நிஜத்த ஏத்துக்க பழகுங்க.. எனக்கு உங்கள புடிக்கல ஒருத்தருக்கு புடிச்சத வச்சி கல்யாணம் கட்டிக்கிட்டா வாழ்க்க நல்லா போகுனு என்ன கேரென்டி சொல்லுங்க பாப்போம்..”என்று அவளும் கணக்கு ஆசிரியையாக சரியாக கணக்கு போட.. அவனோ இதழ்கள் விரிய புன்னகை முகமாகவே அமர்ந்திருந்தவனை பார்க்கும்போதே அவனின் முடிவு என்ன என்பது அவளுக்கு சரியாக தெரிந்து போனது.. இதற்கு மேல் இங்கே உட்கார்ந்து அவனிடம் கெஞ்ச அவளின் மனம் இடம் கொடுக்காமல்.. “ம்ச் உங்க கிட்ட பேசுனது என் லைஃப்லையே நான் செஞ்ச பெரிய வேஸ்ட் ஆஃப் டைம்.. உங்ககிட்ட பேசுனதுக்கு இந்த ஸ்கூலோட சுவத்துக்கிட்ட போய் பேசிருக்கலாம்..”என்று கோவத்தில் பொறிந்தவள் வேகமாக எழு முற்பட.. ஆனால் அவள் கால் அதற்கு இடம்தராமல் போக பெண்ணவள் கீழே விழுவது போல தடுமாறினாள்..
அவள் பார்வை அதிர்ச்சியில் விரிய சுற்றிமுற்றி ஆராய.. அந்த பள்ளி கேன்டினில் பாதி ஆசிரியர்களும், மாணவர்களும் சுற்றி இருக்க.. அசிங்கப்பட போகின்றோம் என்பதனை நினைத்து கண்களை இறுக்க மூட.. ஆனால் அவளின் மெல்லிடையில் கை வைத்து அவள் விழாமல் பிடித்துக்கொண்டது ஒரு வலிய கரம்.. அதில் அவள் விழாமல் தடுக்கப்பட.. அவளோ படப்படக்கும் விழிகளுடன் அவனை நிமிர்ந்து பார்க்க.. அங்கோ சாந்தமான புன்னகையுடன் நின்றிருந்தான் ஜனரஞ்சன்.
அவனின் மென்மையான முகத்தையே விழியகலாமல் பார்த்த பெண்ணவளுக்கு சகலமும் மறந்து போக.. அவனையே இமைக்காமல் பார்த்தவளை பார்த்தவனின் முகத்திலோ குறும்பு பார்வை வழிய..
“போச்சி இந்த ஸ்கூல்ல இனி ஹாட் டாப்பிக் நாம தான்..”என்று அவளை வம்பிழுக்க.. அப்போது தான் பெண்ணவள் சுயம் பெற்றாள்.. சட்டென்று தன் இடையில் இருந்த அவனின் கையை தட்டிவிட்டவளோ அருகில் இருந்த ஸ்டிக்கை இறுக்க பற்றிக்கொண்டவள்.. அவனை வலியுடன் பார்த்தவாறே தன் வாக்கிங் ஸ்டிக்கை பார்க்க.. அவனோ அவளை புரியாமல் பார்த்தான்.
“நல்லா யோசிங்க ஜனா சார்.. இந்த சுமை உங்களுக்கு காலம் முழுதும் வேணுமான்னு..”என்றவளோ ஸ்டிக்கை ஊன்றி நடக்க ஆரம்பிக்க.. அவளின் வார்த்தை அவனை தான் ஆக்ரோஷமாக தாக்கியது.
“ஹலோ மிஸ்..”என்று அங்கிருந்தே ஜனா கத்த.. அதில் காதம்பரி அவனை திரும்பி பார்க்க.. “உங்க கணவனாக நான் வரலாமா..”என்று முழு காதலையும் குரலில் தேக்கி வைத்து கேட்க.. அதில் பெண்ணவள் தான் மயங்கியே போனாள்.
(டீசர் முற்றும்)